வஹீயில் முரண்பாடு வரலாமா?

விதி ஓரு வரையாவிலக்கணம்       தொடர்: 2

வஹீயில் முரண்பாடு வரலாமா?

வஹீயில் முரண்பாடு வரலாமா?

இந்தக் கேள்வி நியாயமானது தான்.

இஸ்லாத்தைப் பொறுத்த வரை அதன் கொள்கைகளாகட்டும்! அதன் சட்ட திட்டங்களாகட்டும்! அவை அனைத்தும் அறிவுப் பூர்வமானவையே! தர்க்க ரீதியாக சரியென்று நிரூபிக்கத் தக்கவைகளே! இஸ்லாத்தின் எந்தவொரு அம்சத்தைப் பற்றியும் எந்தவொரு கேள்வியைக் கேட்டாலும் அதற்குத் தர்க்க ரீதியான பதில் உண்டு.

ஆனால் விதி பற்றிய முரண்பாட்டிற்கு இஸ்லாம் தர்க்க ரீதியான பதிலைத் தரவில்லை.

ஏனெனில் அதை விளங்கும் அளவிற்கு அறிவை அல்லாஹ் மனித சமுதாயத்திற்குத் தரவில்லை. இதை நானாகச் சொல்லவில்லை. எந்த அல்லாஹ் இதைக் குர்ஆனில் சொன்னானோ அதே அல்லாஹ் தான் அதே குர்ஆனில் இதை விளங்குமளவிற்கு நமக்கு ஞானமில்லை என்பதையும் கூறுகிறான்.

அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும், எங்கள் முன்னோர்களும் இணை கற்பித்திருக்க மாட்டோம். எதையும் விலக்கப்பட்டதாக ஆக்கியிருக்கவும் மாட்டோம்என்று இணை கற்பிப்போர் கூறுகின்றனர். இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரும் பொய்யெனக் கருதினர். முடிவில் நமது வேதனையை அனுபவித்தார்கள். “உங்களிடம் (இது பற்றிய) விபரம் உண்டா? (இருந்தால்) அதை எங்களுக்குக் காட்டுங்கள்! ஊகத்தையே பின்பற்றுகிறீர்கள்! நீங்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறில்லைஎன்று கேட்பீராக!

அல்குர்ஆன் 6:148

“உங்களிடம் (இது பற்றிய) விபரம் உண்டா?” என்று கூறுவதன் மூலம் அல்லாஹ் இது பற்றிய அறிவு நம்மிடம் இல்லை என்பதை தெளிவாக அறிவித்து விட்டான்.

எது பற்றிய அறிவு நம்மிடம் இல்லை என்பதை அல்லாஹ்வே அறிவித்து விட்டானோ அது பற்றி தீர்வு சொல்லி அல்லாஹ்வுக்கே ஆசானாகும் பாவத்தைச் செய்ய ஒரு போதும் நாம் தலைப்படக் கூடாது. மக்கள் நம்மை மடையர்களாகச் சித்தரித்தாலும் சரியே! மடையர்களும் விதியில் கேள்வி கேட்டு, தாம் அறிவாளிகளென தம்பட்டம் அடிப்பதும் இதனால் தான்.

இந்தக் கேள்வியைக் கேட்கும் ஒவ்வொருவரும் தானே முதலில் இதைக் கண்டுபிடித்தது போல நினைக்கிறார்கள்

இது 1400 ஆண்டுக்கு முன்னதாகவே கேட்கப்பட்ட கேள்வி.

நாங்கள் விதியைப் பற்றி சர்ச்சை செய்து கொண்டிருந்த போது எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அவர்களின் முகம் சிவக்குமளவுக்கு  அவர்களின் கன்னங்களில் மாதுளை பிழிந்தது போல் கோபமடைந்தார்கள். “இப்படித் தான் நீங்கள் கட்டளையிடப் பட்டுள்ளீர்களா? இதைத் தான் நான் உங்களிடம் தூதுச் செய்தியாகக் கொண்டு வந்திருக்கிறேனா? இந்த விஷயத்தில் சர்ச்சை செய்ததன் காரணமாகத் தான் உங்களுக்கு முன்னிருந்தோர் அழிந்தனர். நீங்கள் இது விஷயத்தில் சர்ச்சை செய்யக் கூடாது என்று நான் வலியுறுத்துகிறேன்என்று அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்கள்: அஹ்மது 6381,

இப்னுமாஜா 82, திர்மிதி 2216

இந்த ஹதீஸிலிருந்து நாம் என்ன விளங்குகிறோம்? உலகத்திலேயே இஸ்லாத்தைப் பூரணமாக அறிந்து வைத்துள்ள நபிகளாரே இந்த முரன்பாட்டிற்கு விளக்கம் தராத போது நாம் எம்மாத்திரம்? மேலும் விதி பற்றி சர்ச்சை செய்வதை அவர்கள் தடுத்துள்ள போது நாம் அதற்கு விளக்கம் சொல்ல முனைவது அறிவீனம்.

எதைப் பற்றிய ஞானம் நமக்கு இல்லையோ அது சம்பந்தமாக கேள்வி கேட்பதும் மடமை. பதில் கூறுவதும் மடமை என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமையினால் தான் விதி பற்றிக் கேள்வி கேட்கும் மேதாவிகளும் பதில் கூறும் மேதாவிகளும் உருவாகியுள்ளனர்.

உதாரணத்திற்கு எப்பாயிரெவாடிலா என்ற ஒன்று உண்டு. இதைப் பற்றி யாருக்குமே தெரியாது என்று வைத்துக் கொள்ளோம். இதைப் பற்றி எந்தக் கேள்வி கேட்டாலும் அது மடமை. அந்தக் கேள்விக்கு என்ன பதில் சொன்னாலும் அது மடமை.

விதி பற்றிய நம்பிக்கைக்கு இஸ்லாத்தில் தர்க்க ரீதியான விடை இல்லை என்பதால் இஸ்லாமிய மார்க்கம் பொய்யென்றாகி விடுமா?

விதி பற்றிய நம்பிக்கைக்கு இஸ்லாத்தில் தர்க்க ரீதியான விடை இல்லை என்பது தான் உண்மையில் அறிவுப்பூர்வமானது என்பதை நிரூபிப்பது தான் இக்கட்டுரையின் பிரதான நோக்கம்.

இனி விஷயத்திற்கு வருவோம்.

விதி பற்றி சர்ச்சை எழுப்புவோரை இரண்டு பிரிவினராகப் பிரித்து, அவர்களின் வாதங்களுக்குப் பதிலளிக்க முனைவோம்.

  1. முஸ்லிம்களாக இருந்து அல்லாஹ்வை நம்பிக் கொண்டே விதியில் சர்ச்சை செய்பவர்கள்
  2. நாஸ்திகவாதிகளாக இருந்து விதியில் சர்ச்சை செய்பவர்கள்

முஸ்லிம்களாக இருந்து கொண்டே விதியில் சர்ச்சை செய்பவர்கள்

இப்பிரிவினரைப் பொறுத்த வரை எதிர்காலத்தை விதியின் மீது போட்டு அமல் செய்யாமல் இருப்பதற்கே அவர்கள் விதியில் சர்ச்சை செய்கின்றனர். “அல்லாஹ் நாடினால் எனக்குச் சுவர்க்கம் கிடைக்கும். நான் என்ன அமல் செய்தாலும் அல்லாஹ் நாடிய படியே நடக்கும். அல்லாஹ் நாடினால் தான் எனக்கு அமலே செய்ய முடியும்” என்று கூறி விதியின் மீது பழியைப் போட்டு விட்டு அமல் செய்யாமல் இருந்து விடுகின்றனர்.

இவர்களின் இந்தக் கேள்வி கூட ஏற்கெனவே ஸஹாபாக்களினால் கேட்கப்பட்டு நபி (ஸல்) அவர்களால் பதிலளிக்கப்பட்ட பழைய கேள்வி தான்.

எனவே இவர்களின் கேள்விக்கு நபிகளாரின் கூற்றையே பதிலாகத் தருகிறோம்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (பகீஉல் ஃகர்கத் எனும் பொது மைய வாடியில் ஜனாஸா ஒன்றில் கலந்து கொள்வதற்காக) அமர்ந்திருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம்மிடமிருந்த ஒரு குச்சியால் தரையைக் குத்திக் கீறியபடி (ஆழ்ந்த யோசனையில்) இருந்தார்கள். பின்னர் “சொர்க்கம் அல்லது நரகத்திலுள்ள தமது இருப்பிடம் எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லைஎன்று சொன்னார்கள்.

அப்போது மக்களில் ஒருவர் “அவ்வாறாயின் (ஏற்கெனவே எழுதப்பட்டு விட்ட விதியை நம்பிக் கொண்டு நல்லறங்கள் ஏதும் புரியாமல்) நாங்கள் இருந்து விடலாமா? அல்லாஹ்வின் தூதரே!என்று கேட்டார்.

நபி (ஸல்) அவர்கள் “இல்லை. நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லவர், கெட்டவர்) அனைவருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளதுஎன்று கூறி விட்டு, பிறகு “எவர் (இறைவழியில்) வழங்கி (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறாரோ, அவர் சுலபமான வழியில் செல்ல நாம் வகை செய்வோம்எனும் (92:5-7) வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்:  அலீ (ரலி)

நூல்:  புகாரி 6605

ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கவாசிகள் யார்? நரகவாசிகள் யார்? என்று (முன்பே அல்லாஹ்வுக்குத்) தெரியுமா?” எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “ஆம் (தெரியும்)என்று சொன்னார்கள். அவர் “அவ்வாறாயின் ஏன் நற்செயல் புரிகின்றவர்கள் நற்செயல் புரிய வேண்டும்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “ஒவ்வொருவரும் “எ(தை அடைவ)தற்காகப் படைக்கப்பட்டார்களோஅல்லது “எ(தை அடைவ)தற்கு வாய்ப்பளிக்கப்பட்டார்களோ அதற்காகச் செயல்படுகிறார்கள்என்று பதிலளித்தார்கள்

அறிவிப்பவர்: இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி)

நூல்: புகாரி 6596

இவ்வாறு கேள்வி கேட்பவர்களிடம் சென்று, அல்லாஹ்வை நீங்கள் நம்புகிறீர்களா? என்று கேட்டுப் பாருங்கள். உடனே ஆம் என்ற பதிலையே தருவார்கள்.

அல்லாஹ்வை நம்ப வேண்டிய விதத்தில் நம்பியிருந்தால் விதி பற்றியும் சேர்த்தே இவர்கள் நம்பியுள்ளார்கள் என்பதை ஏன் தான் விளங்க மறுக்கிறார்களோ?

இறைவனை நம்புவதாக இருந்தால் அவனுக்கு இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் எல்லாம் தெரியும் என்று நம்புவதே சரியானது. அறிவுப்பூர்வமானது.

அப்படித் தெரியாதவன் இறைவனாக இருக்கவே லாயக்கற்றவன்.

உதாரணத்திற்கு, நாளை நீங்கள் வெளி நாடு செல்லவிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

இது இறைவனுக்குத் தெரியுமா? என்று கேட்கும் போது, தெரியாது என்று நீங்கள் சொன்னால் அப்படிப்பட்ட ஒருவனை இறைவனாக ஏற்கத் தேவையில்லை. நமக்கு எவ்வாறு நாளை நடப்பது தெரியாதோ அது போல இறைவனுக்கும் நாளை நடப்பது தெரியாது என்றாகிறது.

நாளை நான் வெளிநாடு செல்வது இறைவனுக்குத் தெரியும் என்பது உங்கள் விடையாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். எது நடக்கும் என்று இறைவன் அறிந்து வைத்திருக்கிறானோ அது நடந்து தீர வேண்டும் என்ற முடிவு அதனுள் அடங்குகிறது. நாளை எது நடக்கும் என்று இறைவன் அறிந்து வைத்துள்ளானோ அதைத் தான் உங்களால் செய்ய முடியுமே தவிர அதை மீற முடியாது என்பதும் இந்த விடைக்குள் அடங்கியுள்ளது.

எனவே அண்ட சராசரங்களின் எதிர்காலம் பற்றிய அறிவு, ஒவ்வொரு மனிதனுக்கும் எதிர் காலத்தில் என்ன நடக்கவிருக்கிறது? அவன் சுவனம் செல்வானா? நரகம்  செல்வானா? என்ற விஷயங்கள் அல்லாஹ்வுக்குத் தெரியும் என்று நம்பினால் விதியையும் சேர்த்து நம்பியவர்களாகிறோம்.

மேலும் இவர்கள் உலக விஷயங்களைப் பொறுத்த வரை விவரமானவர்களாக இருக்கின்றனர். அல்லாஹ் நாடியது தான் கிடைக்கும் என்று தொழில் செய்யாமல் இருப்பதில்லை. நோய் வந்தால் அல்லாஹ் நாடியபடி நடக்கும் என்று வீட்டில் இருப்பதில்லை.

அல்லாஹ் எழுதியிருந்தால் சுவர்க்கமோ, நரகமோ கிடைக்கும் என்று அமல் செய்யாமல் இருந்தது போன்று தொழில் செய்யாமல், வைத்தியரிடம் செல்லாமல் இருங்களேன். அல்லாஹ் எழுதி வைத்தது தானே கிடைக்கும் என்று இவர்களிடம் கேட்டுப் பாருங்கள். திரு திரு என்று முழிப்பார்கள்.

நமக்கு எது அளக்கப்பட்டுள்ளது என்று யாருக்கும் தெரியாது. எனவே தான் நாம் முயற்சி செய்கிறோம் என்பதைத் தவிர வேறு பதில் இதற்கு இல்லை.

உலக நடப்பைப் போன்றே ஆகிரத்திலும் என்ன நடக்கப் போகிறது என்று யாருக்கும் தெரியாது.

எனவே நமது வேலை, எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காமல் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுவது தான் என்று செயல்பட்டால் சரியாகி விடும்.

உலக பாக்கியங்களைப் பொறுத்த வரை அல்லாஹ் எல்லாம் விதிப்படியே என்று கூறி விட்டான். இதில் மாற்றுக் கருத்து குர்ஆனில் இல்லை. ஆனால் மறுமையில் நமது நிலை என்ன என்பது பற்றிக் குர்ஆன் இரு வேறுபட்ட கருத்துக்களைக் கூறியுள்ளது. இதை இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் தெளிவுபடுத்தி உள்ளோம்.

இதில் வேடிக்கை என்னவென்றால் (இவ்வுலகைப் பொறுத்த வரை) எல்லாம் விதிப்படியே நடக்கும் என்ற தெளிவான விஷயத்தில் இவர்கள் விதி இல்லாதது போல் செயல்படுவார்களாம். இரு விதமாகக் கூறப்பட்டுள்ள மறுமை சம்பந்தப்பட்ட விஷயத்தில் இவர்கள் தமக்குத் தாமே முரண்பட்டு, குர்ஆனின் ஒரு பகுதியை மறுத்து எல்லாம் விதிப்படியே என்று வணக்கம் புரிய மாட்டார்களாம். என்னே இவர்களின் ஞானம்?

ஒரு வாதத்திற்காக, ஒவ்வொருவரின் விதியும் அவரவருக்குத் தெரியும் என்று வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த மாதம் இறக்கப் போகும் ஒரு மனிதனுக்குத் தனது விதி தெரியும் என்றால் என்ன நடக்கும்? நாளை விபத்தொன்றில் சிக்கப் போகும் ஒருவனது விதி அவனுக்குத் தெரியும் என்றால் அவனது நிலையைச் சிந்தித்துப் பாருங்கள். விதி தெரிந்த எந்தவொரு மனிதனாலும் நிம்மதியாக வாழ முடியாது. உலகம் சீராக இயங்க வேண்டும் என்பதற்காகக் கூட விதியை அல்லாஹ் மறைத்து வைத்திருக்கலாம். (அல்லாஹ் மிக அறிந்தவன்)

இஸ்லாமிய வரலாற்றில் விதியில் சர்ச்சை செய்து இரண்டு சாரார் வழிகெட்டனர்.

  1. கத்ரியாக்கள்
  2. ஜபரிய்யாக்கள்

இந்தக் கூட்டங்கள் வழிகெட்டுச் செல்ல அடிப்படைக் காரணமே விதியில் சர்ச்சை செய்தது தான்.

அல்லாஹ்வை ஏக இறைவனாக ஏற்றுள்ள நாம் உலகின் அனைத்து அம்சங்களும் விதிப்படியே நடக்கிறது என்று நம்புவதன் மூலமே நமது ஈமான் பூர்த்தியடையும்.

முஸ்லிம்களாகிய நாம் விதியைப் பொருந்திக் கொண்டு அதில் சர்ச்சை செய்வதிலிருந்து விலகிக் கொள்வோமாக!

வளரும் இன்ஷா அல்லாஹ்