இறைச்செய்திகள் இப்போதும் வருமா?
மனிதன் சீர் பெற்று சிறப்பாக வாழ்வதற்குக் கடவுள் நம்பிக்கை முக்கிய காரணமாக இருக்கின்றது. ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ள எவரும் இந்த உண்மையை மறுக்க மாட்டார்கள்.
ஆனால் இன்றைக்கு எல்லா பித்தலாட்டங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் கடவுள் நம்பிக்கை தான் காரணம் என்று பலர் தவறாக நினைக்கும் அளவுக்கு கடவுளின் பெயரால் போலி ஆன்மீகவாதிகள் பல பித்தலாட்ட வேலைகளைச் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
இஸ்லாம் இறைவனுடைய மார்க்கம் என்பதால் கடவுளை நம்பச் சொல்வதுடன் கடவுள் பெயரால் மற்றவர் எவரும் ஆட்டம் போட முடியாத அளவுக்கு அதற்கான அனைத்து வாசல்களையும் அடைத்து விடுகின்றது. இது இஸ்லாத்திற்கு மட்டும் உரிய தனிச் சிறப்பாகும்.
இன்றைக்கு நாங்கள் தான் உண்மையான முஸ்லிம்கள் என்று கூறிக் கொள்ளும் ஒரு கூட்டம் இஸ்லாத்தின் இந்தத் துôய்மையைப் பாழ்படுத்தி மற்ற மதங்களைப் போல் இஸ்லாத்தையும் மாற்ற முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அதை அல்லாஹ் ஒரு போதும் நடக்க விடமாட்டான்.
நம் சமுதாயத்தில் பலர் வேறு மதங்களிலிருந்து புதிதாக இஸ்லாத்திற்கு வந்த காரணத்தாலும் வேறு சமூக மக்களுடன் கலந்து வாழ்வதாலும் அந்த மதங்களிலுள்ள அனைத்து விஷயங்களும் இஸ்லாத்திலும் இருக்க வேண்டும் என்ற நோய் இவர்களுக்குப் பிடித்திருக்கின்றது.
இதனால் இவர்களின் செயல்களுக்கு சற்றும் சம்பந்தமில்லாத சில குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் சுட்டிக் காட்டி, பாமர மக்களை தங்களின் வழிகெட்ட கொள்கையின்பால் அழைத்துக் கொண்டிருக்கின்றனர்.
சந்தனக் கூடு என்ற பெயரில் தேர் இழுப்பு நிகழ்ச்சி, கப்ரு ஸியாரத் என்ற பெயரில் கல் வழிபாடு, உரூஸ் என்ற பெயரில் திருவிழாக்கள், மவ்லூத் என்ற பெயரில் பஜனைப் பாடல்கள், கத்தம் பாத்திஹா என்ற பெயரில் திதி செய்தல் இப்படி இவர்கள் இஸ்லாத்தில் புகுத்திய அனாச்சாரங்கள் ஏராளம்.
சிலை வழிபாட்டுக்காரர்களை விட இவர்கள் தான் இஸ்லாமிய சமுதாயத்திற்கு மிக ஆபத்தானவர்கள். ஒருவன் சாராயத்தை சாராயம் என்று சொல்லி விற்கிறான். மற்றொருவன் இது சர்பத் என்று சொல்லி சாராயத்தை விற்கிறான். இந்த இரண்டு பேரும் பாவிகள் என்றாலும் சர்பத் என்று சொல்லி விற்பவன் மற்றவனை விட படுமோசமானவன் என்பதை அனைவரும் அறிவோம்.
இது போன்றே இஸ்லாம் மண்ணுக்குள் புதைத்துவிட்ட, வழிகெட்ட கொள்கைகளை இவர்கள் தோண்டி எடுத்து இஸ்லாத்தின் பெயரால் பரப்பும் வேலையில் தற்போது ஈடுபடுகின்றனர். இந்தக் கட்டுரையில் இவர்களின் ஒரு வழிகேடான கருத்து குறித்து விரிவாக அறிந்துகொள்ள இருக்கின்றோம்.
அல்லாஹ் அவ்லியாக்களிடம் பேசுவானா?
அவ்வலியாக்கள் என்று இவர்கள் சிலரை குறிப்பிடுகின்றனர். அவர்கள் உண்மையில் அவ்லியாவா? இல்லையா? என்பதை அல்லாஹ் மட்டுமே அறிந்தவன். இத்தகையவர்களிடம் அல்லாஹ் அசரீரி (சப்தம்) மூலமாக பேசுவான் என்ற வழிகெட்ட கொள்கையைக் கூறுகின்றனர். இதற்குக் குர்ஆனில் ஆதாரம் இருப்பதாக வாதிடுகின்றனர்.
வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 42:51)
இந்த வசனத்தில் மூன்று முறைகளில் அல்லாஹ் மனிதனிடம் பேசுவதாக கூறுகிறான். வஹீ மூலம் என்றால் தான் விரும்பும் கருத்தை உள்ளத்தில் அல்லாஹ் வெளிப்படுத்திவிடுவான். திரைக்கு அப்பால் இருந்து என்றால் அல்லாஹ்வைப் பார்க்காமல் அவனது சப்தத்தை மட்டும் கேட்கும் வகையில் பேசுவான். தூதரை அனுப்பி என்றால் வானவரை அனுப்பி அந்த வானவர் அல்லாஹ்வின் கட்டளைகளைக் கூறுவார்.
அல்லாஹ் திரைக்கு அப்பால் இருந்து மனிதனிடம் பேசுவதாகக் கூறுகிறான். இது அசரீரி முறையில் பேசுவதாகும். எனவே அல்லாஹ்வின் அசரீரியை அவ்லியாக்கள் கேட்பார்கள் என்று கூறுகின்றனர்.
இந்த வசனத்தைச் சரியான அடிப்படையில் சிந்தித்தால் இவர்கள் இஸ்லாத்தின் ஆணிவேரையே பிடுங்கி எரியும் முயற்சியில் ஈடுபட்டுவிட்டனர் என்பதை அறியலாம். அவ்லியாக்களுக்கு (?) வக்காலத்து வாங்கி அல்லாஹ்வின் வசனத்தை திரித்துக் கூறும் யூத வேலையைச் செய்கின்றனர்.
இந்த வசனத்தில் அல்லாஹ் அசரீரி மூலம் பேசுவதை மட்டும் சொல்லவில்லை. இதனுடன் தான் விரும்பும் நபரின் உள்ளத்தில் தான் நாடியதைத் தோன்ற வைப்பது, வானவரை அனுப்பி அவர் மூலம் தெரிவிப்பது என்ற மேலும் இரண்டு விஷயங்களையும் சேர்த்துக் கூறுகிறான்.
எனவே இந்த அசத்தியவாதிகள் நபிமார்களிடத்தில் ஜிப்ரீல் போன்ற வானவர்கள் வந்தது போல் அவ்லியாக்களிடத்திலும் (?) வானவர்கள் வருவார்கள் என்று சொல்வார்களா?
நபிமார்களின் உள்ளத்தில் அல்லாஹ் தான் விரும்பிய கருத்தை ஏற்படுத்தியது போல் அவ்லியாக்களின் (?) உள்ளத்திலும் தான் விரும்பியதை ஏற்படுத்துவான் என்று சொல்வார்களா?
அவ்லியாக்களை (?) அல்லாஹ்வுடைய இடத்திலும் நபிமார்களின் இடத்திலும் உயர்த்துவது ஒன்றே இவர்களின் ஒரே கொள்கையாக இருப்பதால் இவ்வாறு இவர்கள் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இவர்கள் கூறும் இந்த கருத்தை இந்த வசனத்தின் ஆரம்பமே நிராகரித்து விடுகின்றது.
“எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை”
அல்லாஹ் மனிதர்கள் யாரிடமும் பேசமாட்டான் என்று தெள்ளத் தெளிவாக அல்லாஹ் முதலில் கூறுகிறான். இது தான் அல்லாஹ்வுக்கும் மனிதர்களுக்கும் இடையில் உள்ள பொதுவான விதியாகும். இதனடிப்படையில் அவ்லியாவாக இருந்தாலும் வேறு யாராக இருந்தாலும் அல்லாஹ் பேசமாட்டான் என்பது தெளிவாகின்றது.
பொதுவான இந்த விதியிலிருந்து நபிமார்களுக்கு மட்டும் அல்லாஹ் விதிவிலக்குத் தருகிறான். அல்லாஹ் மனிதரிடம் பேசுவதற்குரிய மூன்று முறைகளை இதன் பின் குறிப்பிடுகிறான். இந்த மூன்று முறைகளிலும் நபிமார்கள் அல்லாமல் வேறு யாரிடமும் அல்லாஹ் பேசமாட்டான்.
இந்த வசனத்தைத் தொடர்ந்து அல்லாஹ் இந்த மூன்று முறைகளில் நபிக்கு வஹீ அறிவித்ததாகக் கூறுகிறான்.
இவ்வாறே நமது கட்டளையில் உயிரோட்டமானதை உமக்கு (வஹீயாக) அறிவித்தோம். வேதம் என்றால் என்ன? நம்பிக்கை என்பது என்ன என்பதை (முஹம்மதே!) நீர் அறிந்தவராக இருக்கவில்லை. மாறாக நமது அடியார்களில் நாம் நாடியோருக்கு நேர் வழி காட்டும் ஒளியாக இதை ஆக்கினோம். நீர் நேரான பாதைக்கு அழைக்கிறீர்.
அல்குர்ஆன் (42:52)
நபிமார்களுக்கு அறிவிக்கும் வஹீயைப் பற்றியே அல்லாஹ் இங்கே குறிப்பிடுகிறான் என்பதை அல்லாஹ் அடுத்த வசனத்தில் தெளிவுபடுத்திவிட்டான். “இவ்வாறே நபியே உமக்கு அறிவித்தோம்’ என்ற இறைவனின் கூற்று இதை உறுதிப்படுத்துகின்றது.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூட இந்த வசனத்தை சுட்டிக்காட்டியே நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் பார்க்கவில்லை. திரைக்கு அப்பால் இருந்தே அல்லாஹ்வுடன் உரையாடினார்கள் என்று கூறினார்கள்.
அல்லாஹ் யாரிடத்திலும் தேவையில்லாமல் பேசமாட்டான். மனித குலத்திற்கு எந்த வழிகளைக் காட்ட வேண்டும் என்று அவன் விரும்புகின்றானோ அந்தச் செய்திகளை ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே நபிமார்களிடம் அல்லாஹ் பேசினான். நபிமார்களிடம் அல்லாஹ் பேசுவதற்கு இதுவல்லாத வேறு எந்தக் காரணமும் இல்லை.
தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பான் என்றால் அவன் அறிவித்ததை ஒன்றுவிடாமல் உடனே மக்களுக்கு எத்தி வைக்கும் கடமை அறிவிக்கப்பட்டவருக்கு உள்ளது. இதைச் சரியாக செய்யாவிட்டால் இறைவனுடைய தண்டனை உடனே வந்துவிடும். இந்தக் கடமை நபி அல்லாத வேறு யாருக்கும் இல்லை. அவ்வாறு இறைவனிடமிருந்து மக்களுக்கு எத்தி வைப்பதால் தான் அவரை ரசூல் (தூதர்) என்றும் நபி (அறிவிப்பவர்) என்றும் அல்லாஹ் கூறுகிறான்.
இந்தக் கருத்தை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் தெளிவாகக் கூறுகிறான்.
அவன் மறைவானதை அறிபவன். தனது மறைவான விஷயங்களை அவன் பொருந்திக் கொண்ட தூதரைத் தவிர யாருக்கும் வெளிப்படுத்த மாட்டான். அவர்கள் தமது இறைவனின் தூதுச் செய்திகளை எடுத்துச் சொன்னார்களா என்பதை அறிவிப்பதற்காக அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் கண்காணிப்பாளரை ஏற்படுத்துகிறான். அவர்களிடம் உள்ளதை அவன் முழுமையாக அறிவான். ஒவ்வொரு பொருளையும் அவன் எண்ணிக்கையால் அறிவான். (அல்குர்ஆன் 72:26)
எனவே மேற்கண்ட வசனம் நபிமார்களிடத்தில் அல்லாஹ் பேசும் வஹீயை பற்றியே கூறுகின்றது. பொதுவாக இறைநேசர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் அல்லாஹ் இம்முறைப்படி பேசுவான் என்று இந்த வசனம் கூறவில்லை.
நபி அல்லாதவருக்கு வந்த வஹீ
மர்யம் (அலை), மூசா நபியவர்களின் தாயார் மற்றும் ஹாஜர் (அலை) ஆகிய மூன்று பெண்களிடம் அல்லாஹ் பேசியுள்ளான். அவ்லியாக்களிடம் அல்லாஹ் பேசுவான் என்போர்கள் இதைத் தங்களுக்குரிய ஆதாரமாகக் கூறுகிறார்கள்.
மர்யம் (அலை) அவர்களிடம் அல்லாஹ் ஜிப்ரீல் (அலை) அவர்களை அனுப்பி பேசியுள்ளான்.
அவர்களை விட்டும் ஒரு திரையை அவர் போட்டுக் கொண்டார். அவரிடம் நமது ரூஹை அனுப்பினோம். அவர் முழுமையான மனிதராக அவருக்குத் தோற்றமளித்தார். “நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று (மர்யம்) கூறினார். “நான், உமக்குப் பரிசுத்தமான புதல்வனை அன்பளிப்புத் தருவதற்காக (வந்த) உமது இறைவனின் தூதன்” என்று அவர் கூறினார். “எந்த ஆணும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை கெட்டவளாக இல்லாமலும் இருக்க எனக்கு எப்படிப் புதல்வன் உருவாக முடியும்?” என்று (மர்யம்) கேட்டார்.
“அப்படித் தான்” என்று (இறைவன்) கூறினான். “இது எனக்கு எளிதானது. அவரை மக்களுக்குச் சான்றாகவும், நம் அருளாகவும் ஆக்குவோம். இது நிறைவேற்றப்பட வேண்டிய கட்டளை எனவும் உமது இறைவன் கூறினான்” (என்று ஜிப்ரீல் கூறினார்.)
பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. “நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந் திருக்கக் கூடாதா?” என்று அவர் கூறினார். “கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தி யுள்ளான்” என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார். “பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தை உலுக்குவீராக! அது உம் மீது பசுமையான பழங்களைச் சொரியும்” (என்றார்)
அல்குர்ஆன் (19:23)
இது போல் மூசா (அலை) அவர்களின் தாயாரிடமும் அல்லாஹ் பேசியுள்ளான்.
அறிவிக்கப்பட வேண்டியதை உமது தாயாருக்கு நாம் அறிவித்ததை எண்ணிப் பார்ப்பீராக! “இவரை (இக்குழந்தையை) பெட்டிக்குள் வைத்து அதைக் கடலில் போடுவாயாக! கடல் அவரைக் கரையில் சேர்க்கும். எனக்கும், இவருக்கும் எதிரியானவன் இவரை எடுத்துக் கொள்வான்” (என்று உமது தாயாருக்கு அறிவித்தோம்). எனது கண்காணிப்பில் நீர் வளர்க்கப்படுவதற்காக உம் மீது என் அன்பையும் செலுத்தினேன்.
அல்குர்ஆன் (20:38)
அல்லாஹ் வானவரை அனுப்பி அன்னை ஹாஜர் (அலை) அவர்களிடமும் பேசியுள்ளான்.
பிறகு அவர்கள் மர்வாவின் மீது ஏறி நின்று கொண்ட போது ஒரு குரலைக் கேட்டார்கள். உடனே, “சும்மாயிரு” என்று தமக்கே கூறிக் கொண்டார்கள். பிறகு, காதைத் தீட்டிக் கொண்டு கேட்டார்கள். அப்போதும் (அதே போன்ற குரலைச்) செவியுற்றார்கள். உடனே அவர்கள், “நீ என்னை கேட்கச் செய்துவிட்டாய். உன்னிடம் உதவியாளர் எவரேனும் இருந்தால் (என்னிடம் அனுப்பி என்னைக் காப்பாற்று)” என்று சொன்னார்கள். அப்போது அங்கே தம் முன் வானவர் ஒருவரை (இப்போதுள்ள) ஸம்ஸம் (கிணற்றின்) அருகே கண்டார்கள்……..
அன்னை ஹாஜர் அவர்கள் (ஸம்ஸம் தண்ணீரை) தாமும் அருந்தி தம் குழந்தைக்கும் ஊட்டினார்கள். அப்போது அந்த வானவர் அவர்களிடம், “நீங்கள் (கேட்பாரற்று) வீணாக அழிந்து போய் விடுவீர்கள் என்று அஞ்ச வேண்டாம். ஏனெனில், இங்கு இந்தக் குழந்தையும் இவருடைய தந்தையும் சேர்ந்து (புதுப்பித்துக்) கட்டவிருக்கின்ற அல்லாஹ்வின் இல்லம் உள்ளது. அல்லாஹ் தன்னைச் சார்ந்தோரைக் கைவிடமாட்டான்” என்று சொன்னார்.
நூல்: புகாரி (3364)
அல்லாஹ் நபித்துவத்திற்காகவும் நபிமார்களுக்காகவும் பிரத்யேகமாகச் செய்த ஏற்பாட்டை இவர்கள் அனைத்து நல்லடியார்களுக்கும் பொதுவாக்க முயல்கிறார்கள்.
மர்யம் (அலை), மூசா நபியின் தாயார், ஹாஜர் (அலை) ஆகிய மூவரும் நபிமார்களின் தாயார் ஆவார்கள்.
ஈசா (அலை) அவர்களின் பிறப்பை அல்லாஹ் அற்புதமாக்க விரும்புகிறான். இந்த விஷயத்தில் மர்யம் (அலை) அவர்களின் பங்களிப்பு அவசியம் என்பதால் அவர்களிடம் வானவரை அனுப்பி தன் கட்டளையைக் கூறுகிறான்.
இது போன்று மூசா (அலை) அவர்கள் பிறந்தவுடன் அவரை ஃபிர்அவ்ன் கொலை செய்துவிடலாம் என்பதால் அந்த நபியைப் பாதுகாக்கும் ஏற்பாட்டைச் செய்யுமாறு அவர்களின் தாயாருக்கு அல்லாஹ் கூறினான்.
இது போன்று அன்னை ஹாஜர் (அலை) அவர்கள் இஸ்மாயீல் (அலை) அவர்களுடன் ஆளில்லாத பாலைவனமாக இருந்த மக்காவில் அல்லாஹ்வின் உத்தரவுப்படி தனியே விடப்பட்டார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் நபி என்பதாலும் அவர்களின் மூலம் இறைவன் மக்காவில் மனித குலத்தைப் பெருக்க நாடியதாலும் அவர்களை பாதுகாக்கும் ஏற்பாட்டை இறைவன் செய்தான். இதற்காக இஸ்மாயீல் (அலை) அவர்களின் தாயாரிடம் அல்லாஹ் பேசினான்.
ஆக இந்த மூன்று நிகழ்வுகளிலும் இவர்கள் இறைநேசர்கள் என்ற காரணத்திற்காக அல்லாஹ் பேசவில்லை. நபிமார்களின் வருகைக்கு இவர்கள் முக்கிய காரணமாக இருப்பதால் தான் நபித்துவ ஏற்பாட்டிற்காக அல்லாஹ் பேசினான்.
நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு யாரும் நபியாக வரமாட்டார்கள். நபியவர்களுடன் நபித்துவம் முற்றுப்பெற்றுவிட்டது. இதற்குப் பிறகு நபியிடமோ நபியை பெற்றெடுக்கும் தாயாரிடமோ அல்லாஹ் பேச வேண்டிய தேவையில்லை.
இந்த மூன்று பெண்மணிகளிடம் அல்லாஹ் பேசினான் என்பதை அல்லாஹ்வே திருக்குர்ஆனில் கூறிவிட்டான் என்பதால் தான் அதை நாம் நம்புகிறோம்.
ஃபிர்அவ்னின் மனைவி ஆசியா (அலை) அவர்கள் இறைநேசர் தான் என்றாலும் அவர்களிடம் அல்லாஹ் பேசினானா? என்று கேட்டால் பேசவில்லை என்றே நாம் கூற வேண்டும். ஏனென்றால் அவர்களிடம் அல்லாஹ் பேசியதாகத் திருக்குர்ஆன் கூறவில்லை.
ஆசியா (அலை) அவர்கள் விஷயத்திலேயே இவ்வாறு தான் கூற வேண்டும் என்றால் இந்தக் கப்ரு வணங்கிகள் அவ்லியாக்கள் (?) என்று யாரைக் கூறுகிறார்களோ அவர்களிடம் அல்லாஹ் பேசுவான் என்று எப்படிக் கூற முடியும்?
எனவே மேற்கண்ட நிகழ்வுகளைக் காட்டி தற்போதும் அல்லாஹ் இறைநேசர்களிடம் பேசுவான் என்று கூறுவது இறைவனின் அதிகாரத்தைக் கையில் எடுப்பதாகும். நபிமார்களுக்கு மாத்திரம் அல்லாஹ் ஏற்படுத்திய பிரத்யேகமான ஏற்பாட்டை மற்றவர்களுக்கும் உண்டு என்று கூறுவதால் இவர்கள் அவ்லியாக்களை (?) நபிமார்களாக ஆக்கிவிடுகின்றனர் என்பதே உண்மை. எனக்குப் பிறகு எந்த நபியும் இல்லை என்ற நபிகளாரின் கூற்றுக்கு முரணாகவும் இக்கருத்து அமைந்துள்ளது.
இல்ஹாம் என்றால் என்ன?
குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் இல்ஹாம் என்ற சொல் இடம்பெற்றுள்ளது. இயல்பாக ஏற்படும் உள்ளுணர்வு என்பது இதன் பொருளாகும்.
அல்லாஹ் அவ்லியாக்களிடம் பேசுவான் என்று கூறுபவர்கள் இல்ஹாம் பற்றிப் பேசும் பின்வரும் செய்தியை தங்களுக்கு ஆதாரமாகக் கூறுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன் சென்ற சமுதாயங்களில், (பல்வேறு பிரச்சினைகளில் சரியான தீர்வை) அறிவிக்கப்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள். அத்தகையவர்களில் எவராவது எனது இந்தச் சமுதாயத்தில் இருப்பாராயின் அது உமர் பின் கத்தாப் அவர்கள் தாம்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (3469)
இந்த நபிமொழியை அடிப்படையாகக் கொண்டு அல்லாஹ் அவ்லியாக்களிடம் பேசுவான் என்று கூறுகிறார்கள்.
இல்ஹாம் பற்றிய சரியான தெளிவு இல்லாத காரணத்தால் தங்களுக்கு எதிரான செய்தியை தங்களுக்கு ஆதாரமாகக் காட்டியுள்ளனர்.
இல்ஹாம் என்றால் தானாக உணர்தல் என்று பொருள். அந்த உணர்தல் இயல்பானதாக இருக்க வேண்டும்.
மனிதன் பாவமான விஷயங்களையும், தீமையான விஷயங்களையும் யாரும் கற்றுக் கொடுக்காமலேயே உணர்ந்திருக்கின்றான். இதனை இல்ஹாம் என்று அல்லாஹ் கூறுகிறான்.
அல்லாஹ் உள்ளத்திற்கு அதன் நன்மையையும், தீமையையும் அறிவித்தான். (அல்குர்ஆன் 91:7)
மறுமை நாளில் மக்கள் திரண்டிருக்கும் போது அந்நாளின் சிரமத்திலிருந்து விடுபடுவதற்காக அவர்கள் நபிமார்களிடத்தில் வந்து எங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யுங்கள் என்று கூறுவார்கள். இவ்வாறு கோரினால் தான் தீர்வு கிடைக்கும் என்று யாரும் அவர்களுக்குக் கூறவில்லை. ஆனால் இது தான் தீர்வு என்பதை அவர்கள் தாங்களாகவே உணர்ந்து செயல்படுவார்கள். இதற்கு இல்ஹாம் என்று சொல்லப்படுகின்றது.
அல்லாஹ் மறுமை நாளில் இறை நம்பிக்கையாளர்களை ஒன்று திரட்டுவான். (நபிமார்களிடத்தில் சென்று தங்களுக்காக பரிந்துரை செய்யக் கோரும்) உணர்வை அவர்கள் பெறுவார்கள்.
நூல்: முஸ்லிம் (322)
சொôக்கவாசிகள் சொர்க்கத்தில் இறைவனை போற்றிப் புகழ்ந்துகொண்டே இருப்பார்கள். மனிதன் மூச்சு விடுவதைப் போன்று இந்தச் செயலை அவர்கள் செய்துகொண்டிருப்பார்கள். இதுவே அங்கு அவர்களின் இயல்பான எண்ணமாக இருக்கும். இதைக் குறிக்க நபியவர்கள் இல்ஹாம் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் உண்பார்கள்; பருகுவார்கள். மலம் கழிக்க மாட்டார்கள். மூக்குச் சிந்தவும் மாட்டார்கள். சிறுநீர் கழிக்கவும் மாட்டார்கள். அவர்கள் உண்ணும் உணவு கஸ்தூரி மணம் கமழும் வியர்வை போன்று ஏப்பமாக வெளியேறும். மூச்சு விடுமாறு அகத் தூண்டல் ஏற்படுவதைப் போன்று இயல்பாகவே இறைவனைத் துதித்துக் கொண்டும் போற்றிக் கொண்டும் இருக்குமாறு அவர்களுக்கு அகத் தூண்டல் ஏற்படும்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் (5454)
அல்லாஹ் தேனீக்களுக்கு வஹீ அறிவித்தான் என்பதும் இந்த இல்ஹாம் அடிப்படையில் உள்ளதாகும்.
“மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!” என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான்.
அல்குர்ஆன் (16:68)
தேனை எவ்வாறு சேகரிப்பது என்ற வழிமுறைகளை தேனீக்கள் இயல்பாகவே உணர்ந்துகொள்கின்றன. இந்த இயல்புணர்வை ஏற்படுத்தியவன் அல்லாஹ்.
எனவே இயல்பாக மனதில் தோன்றும் எண்ணத்திற்கே இல்ஹாம் என்று சொல்லப்படுகின்றது. இதைத் தான் நபி (ஸல்) அவர்கள் முன்பு நாம் சுட்டிக்காட்டிய நபிமொழியில் குறிப்பிடுகிறார்கள்.
அல்லாஹ் சிலருக்குச் சரியான முடிவை எடுக்கும் திறனை வழங்குகிறான். அவர்கள் பெரும்பாலான பிரச்சனைகளில் சரியான தீர்வை எடுத்துவிடுவர்.
இவ்வாறு நல்ல தீர்வுகளை எடுக்க வேண்டும் என்று யாரும் அவர்களுக்கு வழிகாட்டாமல் இந்த முடிவுகள் அவர்களின் உள்ளங்களில் இயல்பாகவே தோன்றும். இவர்களைத் தான் நபியவர்கள் முஹத்தசூன்கள் (முல்ஹமூன்கள்) என்று குறிப்பிடுகின்றார்கள்.
இல்ஹாம் எவ்விஷயங்களில் ஏற்படும்?
அல்லாஹ் மார்க்க விஷயங்களை இம்முறைப்படி யாருக்கும் அறிவிக்க மாட்டான். ஏனென்றால் யூகமாக மனதில் தோன்றும் எண்ணங்களை வைத்து மார்க்கத்தை முடிவு செய்ய முடியாது. இந்த வழியில் மார்க்கம் போதிக்கப்பட்டால் எது மார்க்கம்? எது மனோ இச்சை என்பதை பிரித்தறிய முடியாத அளவுக்குக் குழப்பம் ஏற்படும். பலர் தங்களுடைய மனோ இச்சைகளை மார்க்கமாகப் போதிக்கும் நிலை ஏற்படும். நுபுவ்வத்திற்குப் பிறகு நபித்துவம் யாருக்கும் இல்லை என்று இஸ்லாம் அடைத்த வாசலை திறந்து வைக்கும் நிலை ஏற்படும்.
எனவே அல்லாஹ் மனித சமுதாயத்திற்கு மார்க்கத்தை போதிக்க இல்ஹாம் என்ற முறையை எந்தக் காலத்திலும் தேர்வு செய்யவில்லை. மாறாக இறைவனுடைய கூற்றில் கடுகளவு கூட சந்தேகம் வராமல் இது இறைச்செய்தி என்பதை உறுதியாக உணர்ந்து அதை மக்களுக்கு போதிக்கும் வகையில் தெள்ளத் தெளிவான அறிவிப்பாக நபிமார்களுக்கு அல்லாஹ் வஹீ அறிவித்தான்.
அல்லாஹ்விடமிருந்து வஹீ வரும் போது, இது வஹீ அல்லாமல் வேறில்லை என்று உணர்த்தும் சில அடையாளங்களையும் ஏற்படுத்தினான். மணியோசை போன்ற சப்தம், கடும் குளிர் உள்ள நாளிலும் வியர்வை வெளிப்படுப்பது இது போன்ற அடையாளங்களின் மூலம் அல்லாஹ் உறுதிப்படுத்தாமல் வஹீ அறிவிக்கமாட்டான்.
மார்க்கத்துடன் தொடர்பில்லாத வேறு விஷயங்களில் தான் நமக்கு முன் நபியல்லாத சிலருக்கு அல்லாஹ் உள்ளுணர்வை ஏற்படுத்தினான். இவ்வாறு அவன் ஏற்படுத்திய உள்ளுணர்வுகளைத் தங்களுடைய சுய சிந்தனையாகவே சம்பந்தப்பட்டவர்கள் நினைப்பார்கள்.
பொதுவாக எல்லா மனிதனும் எவ்வாறு யூகிப்பானோ அது போன்று, “இது தான் சரியான தீர்வாக இருக்கும்’ என்ற யூகத்தின் அடிப்படையில் தான் இல்ஹாம் வழங்கப்பட்டவர்களும் செயல்படுவார்கள்.
எல்லா விஷயத்திலும் தவறே செய்யாமல் சரியான முடிவை அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாராலும் எடுக்க முடியாது. இது அடிப்படையான விஷயம்.
சில மனிதர்களுக்கு அல்லாஹ் இந்தத் திறனைத் தந்திருந்தாலும் அவர்கள் அனைத்து விஷயங்களிலும் இவ்வாறு சரியான முடிவை எடுக்க முடியாது. சில விஷயங்களில் தவறிழைத்து, தானும் மனிதன் என்பதை நிரூபித்துவிடுவார்கள்.
எனவே சரியான முடிவை எடுப்பவர்கள் என்றால் தவறே செய்யாதவர்கள் என்று புரிந்துகொள்ளக்கூடாது. பெரும்பாலான விஷயங்களில் சரியான முடிவை எடுப்பவர்கள் என்று புரிந்துகொள்ள வேண்டும்.
நபிக்குப் பிறகு யாருக்கும் இல்ஹாம் இல்லை
இவ்வாறான உள்ளுணர்வு கொண்டவர்கள் நமக்கு முன்னிருந்த சமுதாயத்தில் இருந்துள்ளனர். இதற்கு நபியவர்களின் தெளிவான வாக்கு மூலம் உள்ளது.
ஆனால் இத்தகையவர்கள் நம்முடைய சமுதாயத்திலும் இருக்கிறார்கள் என்றும் அவர்களில் உமர் (ரலி) அவர்களும் ஒருவர் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. அவ்வாறு கூறினால் தான் இத்தகையவர்கள் இன்றும் இருக்க வாய்ப்புள்ளது என்று கூற முடியும்.
மாறாக இவ்வாறானவர்கள் என்னுடைய சமுதாயத்தில் இருந்தால் அது உமர் (ரலி) அவர்களாக இருக்கும் என்றே கூறுகிறார்கள். எனவே இத்தகையவர்கள் நம்முடைய சமுதாயத்தில் யாரும் இல்லை. உமர் (ரலி) அவர்கள் கூட இத்தகையவர் இல்லை என்பதையே நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த நபிமொழியைப் போன்று பின்வரும் வசனமும் அமைந்துள்ளது.
“அளவற்ற அருளாளனுக்குச் சந்ததி இருந்தால் அவரை நானே முதலில் வணங்குபவன்” என (முஹம்மதே!) கூறுவீராக! (அல்குர்ஆன் 43:81)
அளவற்ற அருளாளனுக்குச் சந்ததி இருந்தால் அவரை நானே முதலில் வணங்குபவன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு கூறியதால் அல்லாஹ்வுக்குச் சந்ததிகள் உண்டு என்றும், நபி (ஸல்) அவர்கள் அந்தச் சந்ததியை வணங்கினார்கள் என்றும் அறிவுள்ள யாரும் கூற மாட்டார்கள். இது போன்று மேற்கண்ட இல்ஹாம் தொடர்பான நபிமொழியையும் விளங்கிக்கொண்டால் வழிகேடுகள் உருவாகாது.
அல்லாஹ் அவ்லியாக்களிடம் (?) பேசுவான் என்பதற்கு எதை அவர்கள் ஆதாரங்களாகக் காட்டுகின்றார்களோ அந்த வசனங்களும் ஹதீஸ்களும் அவர்களுக்கு எதிராகவே அமைந்துள்ளது.
முதலில் இல்ஹாம் என்பது அல்லாஹ் நேரடியாகப் பேசுவதைக் குறிக்காது என்பதால் இவர்களின் வாதம் எடுத்த எடுப்பிலேயே மண்ணைக் கவ்வுகின்றது.
மார்க்க விஷயங்களில் இல்ஹாம் வராது என்பதால் மார்க்கத்தின் பெயரால் புதிது புதிதாக அநாசச்சாரங்களை உருவாக்கும் வாசல் அடைக்கப்படுகின்றது.
இத்தகையவர்கள் நம் காலத்தில் யாருமில்லை. நமக்கு முன்னர் தான் இருந்துள்ளனர் என்பதால் தற்போது இல்ஹாம் என்று கூறிக்கொண்டு யார் கிளம்பினாலும் அவன் பொய்யன் என்பதை இறைத்தூதர் தெளிவுபடுத்திவிட்டார்கள்.
மொத்தத்தில் அவ்லியாக்களிடம் (?) அல்லாஹ் பேசுவான் என்ற வாதம் சிக்கல் நிறைந்த வழிகேடான கருத்தாகும்.
நல்ல கனவு
அல்லாஹ் இறை நம்பிக்கையாளர்களுக்கு நல்ல கனவை ஏற்படுத்துகிறான். நல்ல கனவுகளின் மூலம் சில நற்செய்திகளை அல்லாஹ் முன்கூட்டியே அறிவிக்கின்றான். இந்த அறிவிப்பு மார்க்கம் தொடர்பில்லாத வேறு விஷயங்கள் தொடர்பாக வரும் நற்செய்தியாகும். ஒருவர், தான் கண்ட கனவு உலகில் உண்மையாகும் போது தான் இது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்பதை உணர முடியும்.
நபித்துவத்திற்குப் பிறகு அல்லாஹ்விடமிருந்து மனிதனுக்கு இதைத் தவிர வேறு எந்த அறிவிப்பும் வராது என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்திவிட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நல்ல மனிதர் காணும் நல்ல (உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மா-க் (ரலி), நூல்: புகாரி (6983)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நற்செய்தி கூறுகின்றவை (“முபஷ்ஷிராத்‘) தவிர, நபித்துவத்தில் வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை” என்று கூற நான் கேட்டேன். அப்போது மக்கள் “நற்செய்தி கூறுகின்றவை (முபஷ்ஷிராத்) என்றால் என்ன?” என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள் “நல்ல (உண்மையான) கனவு” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (6990)
நபித்துவத்திற்குப் பிறகு இறை அறிவிப்பு இல்லை
அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) போன்ற நபித்தோழர்கள் இறைநேசர்கள் என்பதில் இஸ்லாமிய சமுதாயத்தில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஏனென்றால் இவர்கள் இறைநேசர்கள் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே தெளிவுபடுத்திவிட்டார்கள்.
அவ்லியாக்களிடம் அல்லாஹ் பேசுவான் என்று கூறுபவர்களும் இதை ஒப்புக் கொள்கின்றனர். அவ்லியாக்களிலேயே இவர்கள் தான் சிறந்தவர்கள் என்றும் பின்வந்த எந்த அவ்லியாவும் (?) இவர்களின் இடத்தை அடையவே முடியாது என்றும் கூறுகின்றனர்.
அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு ஒரு இறைநேசரிடம் பேசுவான் என்றால் முதலில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) போன்ற நபித்தோழர்களிடம் பேசியிருக்க வேண்டும். சிறந்த அவ்லியாக்களான இவர்களுக்கே இந்த வாய்ப்பு இல்லை என்றால் இவர்களுக்குப் பிறகு வரும் எந்த அவ்லியாவுக்கும் (?) அந்த வாய்ப்பு கிடைக்காது.
உமர் (ரலி) அவர்கள் உட்பட அனைத்து நபித்தோழர்களும் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு யாருக்கும் வஹீ வராது என்ற சரியான கொள்கையிலேயே இருந்தனர். நபித்தோழர்களானாலும் தங்களுக்கும் வஹீ வராது என்றே கூறினார். இதைப் பின்வரும் சம்பவங்களில் அறியலாம்.
உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய காலத்தில் மக்கள் வஹீயின் (வேத வெளிப்பாடு அல்லது இறையறிவிப்பின்) வாயிலாக (ரகசியமாகச் செய்த குற்றங்கள் அம்பலமாகி) தண்டிக்கப்பட்டு வந்தார்கள். இப்போது (நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்) வஹீ வருவது நின்று போய் விட்டது. இப்போது நாம் உங்களைப் பிடி(த்து தண்டி)ப்பதெல்லாம் உங்கள் செயல்களில் எமக்கு வெளிப்படையாகத் தெரிபவற்றைக் கொண்டு தான். ஆகவே, எவர் எம்மிடம் நன்மையை வெளிப்படுத்துகின்றாரோ அவரை நம்பிக்கைக்குரியவராக்கி கௌரவித்துக் கொள்வோம். அவரது இரகசியம் எதையும் கணக்கிலெடுக்க மாட்டோம். அவரது அந்தரங்கம் குறித்து இறைவனே கணக்குக் கேட்பான். எவர் நம்மிடம் தீமையை வெளிப்படுத்துகின்றாரோ அவரைக் குறித்து நாம் திருப்தியுடனிருக்க மாட்டோம்; அவரை நம்பவுமாட்டோம். தமது அந்தரங்கம் அழகானது என்று அவர் வாதிட்டாலும் சரியே.
நூல்: புகாரி (2641)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இறப்புக்குப்பின் (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், “நம்மை (அம்மையார்) உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சந்தித்து வந்ததைப் போன்று நாமும் சந்தித்து வருவோம்” என்று கூறினார்கள்.
அவ்வாறே உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றபோது அவர்கள் அழுதார்கள். அப்போது அவர்கள் இருவரும், “ஏன் அழுகிறீர்கள்? (நம்மிடம் இருப்பதைவிட) அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்குச் சிறந்ததாயிற்றே?” என்று கேட்டார்கள்.
அதற்கு உம்மு அய்மன் (ரலி) அவர்கள், “அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்குச் சிறந்ததாகும் என்பதை நான் அறியாமல் அழவில்லை. மாறாக, (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இறப்போடு) வானிலிருந்து இறைச் செய்தி (வஹீ) வருவது நின்றுவிட்டதே! (அதற்காகத் தான் அழுகிறேன்)” என்று கூறி, அவர்கள் இருவரையும் அழச்செய்து விட்டார்கள். அவருடன் சேர்ந்து அவர்கள் இருவருமே அழலாயினர்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்லிம் (4849)
எனவே அவ்லியாக்களிடம் அல்லாஹ் பேசுவான் என்ற கூற்று குர்ஆனுக்கும் நபிமொழிக்கும் நபித்தோழர்களுக்கும் எதிரானதாகும்.
அல்லாஹ்விடமிருந்து வஹீ வராத நிலையில் வஹீ வந்ததாகக் கூறுவது அல்லாஹ்வின் மீது துணிந்து இட்டுக்கட்டும் பாரதூரமான பாவமாகும். இவர்கள் மிகப்பெரிய அநியாயக்காரார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
அல்லாஹ்வின் பெயரால் பொய்யை இட்டுக்கட்டுபவன், தனக்கு (இறைவனிடமிருந்து) எதுவும் அறிவிக்கப்படாதிருந்தும் “எனக்கு அறிவிக்கப் படுகிறது‘ எனக் கூறுபவன், “அல்லாஹ் அருளியதைப் போல் நானும் இறக்குவேன்‘ என்று கூறுபவன் ஆகியோரை விட மிகவும் அநீதி இழைத்தவன் யார்?
அல்குர்ஆன் (6:93)
மக்களை இணை வைப்பிலும் இஸ்லாத்திற்கு மாற்றமான வழிகெட்ட கொள்கையிலும் தள்ளுவதற்காக ஷைத்தான் தன்னுடைய கூட்டாளிகளுக்கு வஹீ அறிவிப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.
உங்களுடன் தர்க்கம் செய்யுமாறு ஷைத்தான்கள் தமது தோழர்களுக்குக் கூறுகின்றனர். நீங்கள் அவர்களுக்குக் கட்டுப்பட்டால் நீங்கள் இணை கற்பிப்பவர்களே.
அல்குர்ஆன் (6:121)
அவ்லியாக்களுக்கு (?) வஹீ வரவில்லை. ஆனால் அவ்லியாக்களிடம் அல்லாஹ் பேசுவான் என்று கூறும் இந்த வழிகேடர்களுக்கு வஹீ வருகின்றது; அந்த வஹீ இவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து வரவில்லை. இவர்களின் தலைவனான ஷைத்தானிடமிருந்து வருகின்றது.
எனவே தான் இவர்கள் நபிக்குப் பிறகு அவ்லியாக்களிடம் (?) அல்லாஹ் பேசுவான் என்ற ஷைத்தானிய கருத்தைப் பரப்பிக் கொண்டு இருக்கின்றனர். இஸ்லாமிய சமுதாயம் இவர்களை இனங்கண்டு புறக்கணிக்க வேண்டும்.