தவறான வாதங்களும் தக்க பதில்களும்    தொடர்: 2

தவறான வாதங்களும் தக்க பதில்களும்    தொடர்: 2

பிரிவினைகள் ஏன்?

மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும், நற்செய்தி கூறவும் நபிமார்களை அல்லாஹ் அனுப்பினான். மக்கள் முரண்பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அவர்களுடன் அருளினான். தெளிவான சான்றுகள் அவர்களிடம் வந்த பின்பும் வேதம் வழங்கப்பட்டவர்களே அதற்கு முரண்பட்டனர். அவர்களுக்கிடையே இருந்த பொறாமையே (இதற்குக்) காரணம். அவர்கள் முரண்பட்டதில் எது உண்மை என நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் தனது விருப்பப்படி வழி காட்டினான். அல்லாஹ் நாடியோரை நேரான வழியில் செலுத்துவான்.

அல்குர்ஆன் 2:213

இந்த வசனத்தில் மார்க்கம் வழங்கப்படுவதற்கு முன்னால் மக்கள் அனைவரும் பிரிவினை இல்லாமல் ஒரே சமுதாயமாக இருந்தார்கள் என்றும் வேதம் வழங்கப்பட்டதற்குப் பின்னால் தான் பல பிரிவுகளாகப் பிரிந்தார்கள் என்றும் கூறுகின்றான்.

இன்றைக்கும் இதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். பலவாறாகப் பிரிந்து கிடப்பவர்கள் அனைவருமே வேதம் வழங்கப்பட்டு, தெளிவான ஆதாரங்கள் உள்ளவர்கள் தான். மற்றவர்கள் அனைவருமே பிரிவினை இல்லாமல் ஒற்றுமையாக இருப்பதற்குக் காரணம், தெளிவான சான்றுகள் இல்லாதது தான்.

மார்க்கம் இல்லாதவர்கள் எதையும் கடவுளாக எடுத்துக் கொள்ளலாம். வழிபடலாம் என்று இருப்பதின் காரணத்தால் அவர்களுககுள் பிரிவினனை என்பதே இல்லை. வணக்க வழிபாடுகள், விழாக்கள், ஆடம்பரங்கள், சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பதால்  அவர்களுக்குள் சண்டையும் வருவது கிடையாது.

ஆனால் வேதம் வழங்கப்பட்டு, தெளிவான சான்றுகள் வழங்கப்பட்ட  நாம் எல்லா விஷயங்களிலும் பிரிந்து கிடக்கிறோம். நமக்குள் இருந்த கருத்து வேறுபாட்டை நீக்குவதற்காகத் தான் வேதத்தை இறைவன் இறக்கினான். ஆனால் அவன் இறக்கிய அந்த வேதத்திலேயே நாம் கருத்து வேறுபாடு கொள்கின்றோம். இன்றைக்கு அனைத்து முஸ்லிம்களிடமும் குர்ஆன் இருக்கிறது. நபிகளாரின் போதனைகள் இருக்கின்றது. ஆனால்  நாம் தான் 72 கூட்டமாகப் பிரிந்து கிடக்கின்றோம்.

மேலும் இறைவன் தன்னுடைய வேதத்தில் கூறுகிறான்.

அல்லாஹ்விடம் மார்க்கம் என்பது இஸ்லாமே. வேதம் கொடுக்கப்பட்டோர் தம்மிடம் விளக்கம் வந்த பின் தமக்கிடையே ஏற்பட்ட பொறாமையின் காரணமாகவே முரண்பட்டனர். அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுப்போரை அல்லாஹ் விரைந்து விசாரிப்பவன்.

அல்குர்ஆன் 3:19

இந்த வசனத்தில் அல்லாஹ், என்னிடம் மார்க்கம் என்பது ஒரே மார்க்கமாகிய இஸ்லாம் மட்டும் தான். ஆனால் வேதம் வந்த பிறகு, வேதம் கொடுக்கப்பட்டவர்கள் பிறர் மேல் உள்ள பொறாமை, ஆணவம், அகம்பாவத்தின் காரணமாகத் தமக்குள் முரண்பட்டு விட்டனர். தங்களுடைய முன்னோர்களுடைய மார்க்கம் தான் சிறந்தது; அதை ஒருபோதும் நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று அவரவர்களாகவே தங்களுடைய மார்க்கம் தான் உண்மையானதாகக் கருதி பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனர் என்று கூறுகிறான்.

முன்னோர்களைப் பின்பற்றுதல்

அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!என்று அவர்களிடம் கூறப்பட்டால் “எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும், நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?

அல்குர்ஆன் 2:170

தாய், தந்தை, முன்னோர்கள், இமாம்கள் எதை மார்க்கமாகக் கூறினார்களோ அதைப் பின்பற்றாதீர்கள்; அவர்கள் நேர்வழியைச் சொன்னால் பின்பற்று; அறிவுக்குப் பொருந்திய கருத்துக்களைச் சொன்னால் பின்பற்று. நேர்வழிக்கு மாற்றமாகச் சொன்னால் பின்பற்றாதீர்கள். அறிவுக்குப் பொருந்தாத விஷயங்களைச் சொன்னால் பின்பற்றாதீர்கள். உங்களுடைய இறைவன் இறக்கியதை மட்டும் பின்பற்றுங்கள் என்று இறைவன் இந்த வசனத்தில் கூறுகிறான். உஙகள் பெற்றோர் ஐவேளை தொழச் சொல்கிறார் என்றால் அது நேர்வழி,  குர்ஆன், ஹதீஸில் உள்ள செய்தி. அதைப் பின்பற்றலாம். நோன்பு நோற்கச் சொல்கிறார்கள் என்றால் அதைப் பின்பற்றலாம். ஏனென்றால் அதுவும் நேர்வழி.

ஆனால் மார்க்கத்தில் இல்லாத விஷயங்களை யார் சொன்னாலும் அதை கண்மூடித்தனமாகப் பின்பற்றக்கூடாது. முன்னோர்களைப் பின்பற்றுவது என்பது நேர்வழி என்று தெரிந்தால் தான் பின்பற்றவேண்டும். அவர்கள் நேர்வழி பெறாமலும், விளங்காமலும் ஏதேனும் ஒரு விஷயத்தைச் சொன்னால் அவர்களைப் பின்பற்றக்கூடாது என்று இறைவன் எச்சரிக்கிறான்.

இன்றைக்கு நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தில் இருக்கிறோம். இதை நாம் மதரஸாவில் ஏழு வருடம் படித்து, ஆராய்ந்து இது தான்  சரி என்று கருதி அதில் இருக்கவில்லை. மாறாக நம்முடைய ஆலிம்கள் நமக்கு கற்றுத் தந்ததால் அதில் இருக்கிறோம். வாரா வாரம் ஜும்ஆ மேடையில் அதைப் பற்றித் தான் நமக்கு சொல்லித் தந்தார்கள்.

அது மட்டுமில்லாமல் நம்முடைய பெற்றோர்கள், நம்முடைய முன்னோர்கள் அந்த மார்க்கத்தில் இருந்ததால் அதில் இருக்கிறோம். நாமாகச் சென்று உன்னுடைய கருத்து என்ன, உன்னுடைய மார்க்கத்திற்கும், என்னுடைய மார்க்கத்திற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டறிந்து அலசி ஆராய்ந்து பார்த்து, இதுதான் சரியான மார்க்கம் என்று நாம் அதில் இருக்கவில்லை.

இன்றைக்கு நான்கு மத்ஹபுகளில் இருக்கக் கூடியவர்களுக்கே மத்ஹபு என்றால் என்ன என்பது தெரியவில்லை. அவர்கள் ரசூலுல்லாஹ் எந்த மத்ஹபு என்று நம்மிடமே கேட்கிறார்கள். இந்த நான்கு இமாம்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் பிறந்தவர்கள் என்பது கூடத் தெரியவில்லை.

எனவே நாம் ஒரு மார்க்கத்தைக் கண்டறிவதாக இருந்தால் முன்னோர்கள் சொன்னது, மூதாதையர்கள் சொன்னது, இமாம்கள் சொன்னது, ஊர் வழக்கம் என மற்ற எல்லா கொள்கைகளையும் தூக்கி எறிய வேண்டும். இந்தக் கொள்கைகள் தான் உண்மையான மார்க்கம் எது என்பதைக் கண்டறிவதற்குத் தடையாக இருக்கும்.

பெரும்பான்மையைப் பின்பற்றுதல்

அதே போல் பெரும்பான்மையானவர்கள் சொன்னது தான் சரியானதாக இருக்கும். சிறு கூட்டத்தினர் சொல்வது தவறானது என்ற கருத்தும் மக்கள் மத்தியில் நிலவுகிறது. இந்தக் கருத்தும் தவறானது.

ஏனென்றால்  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏகத்துவத்தை மக்கள் மத்தியில் விதைத்த போது அவர்களுடன் இருந்தவர்கள் மக்கத்து காபிர்களை விட மிகவும் குறைவானவர்கள். அப்படியானால் அவர்கள் சொல்வது தவறு என்று ஆகிவிடுமா? இதில் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். சொல்கிற செய்தி சரியா என்பதைத் தான் பார்க்க வேண்டுமே தவிர எத்தனை பேர் சொல்கிறார்கள் என்பதைப் பார்க்கக் கூடாது. இறைவன் திருமறையில் கூறுகிறான்.

பூமியில் உள்ளவர்களில் அதிக மானோருக்கு (முஹம்மதே!) நீர் கட்டுப் பட்டால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுத்து விடுவார்கள். அவர்கள் ஊகத்தையே பின்பற்றுகின்றனர். அவர்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறு இல்லை.

அல்குர்ஆன் 6:116

இந்த உலகத்தில் முஸ்லிம்களை விட முஸ்லிமல்லாதவர்கள் தான் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். அதனால் அவர்கள் சொல்லும் கருத்து சரியென்று ஆகிவிடுமா? ஒரு ஊரில் உள்ள பள்ளிவாசலுக்குத் தொழ வருபவர்களை விட தொழ வராதவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. பெரும்பான்மையானவர்கள் தொழ வரவில்லை. எனவே இது தான் நேர்வழி என்று சொல்வார்களா?

சினிமா கொட்டகையில் அதிமானவர்கள் சென்று சினிமா பார்க்கிறார்கள். குறைவானவர்கள் தான் பார்க்காமல் இருக்கிறார்கள். எனவே பெரும்பான்மையுடைவர்களுடைய கருத்து மற்றும் நடவடிக்கை தான் சரியாக இருக்கும் என்று இவர்கள் சொல்வார்களா?

எனவே அதிமானவர்கள் சொல்வது தான் சரி, குறைவானவர்கள் சொல்வது தவறு என்ற வாதத்தை விட்டுவிட்டு சொல்லும் செய்தி சரியா என்று தான் நாம் சிந்திக்க வேண்டும். சில நேரங்களில் அதிமானவர்கள் சொல்வதும் சரியாகத் தான் இருக்கும். நெருப்பை கையில் வைத்தால் சுடுமா? என்று கேட்டால் சுடும் என்று பெரும்பான்மையானவர்கள் கூறுவார்கள். பெரும்பான்மை என்ற காரணத்தால் அது தவறு என்றாகி விடாது.

எனவே நாம் எண்ணிக்கையைக் கவனத்தில் கொள்ளாமல் செய்தி சரியானதா என்பதை ஆராய வேண்டும்.

மதகுருமார்களைப் பின்பற்றுதல்

அதேபோல் இமாம்கள், ஆலிம்கள், மதகுருமார்கள் சொல்வதையும் சரி என்று நினைத்து கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது கூடாது என்றும் இறைவன் கூறுகிறான்.

அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறு தான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன்.

அல்குர்ஆன்: 9:31

உலக மக்களுக்கு அல்லாஹ் சொன்ன முதல் செய்தி இதுதான். ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் இந்தப் பூமியில் முதன் முதலாக தன்னுடைய கையால் படைக்கிறான். தன்னுடைய எல்லா ஆற்றல்களையும் அவருக்குக் காட்டுகிறான். அவரையும், அவருடைய மனைவியையும் சொர்க்கச் சோலைகளில் வாழச் செய்கிறான்.

அவர்களுக்கு இத்தனை வசதிகளையும் செய்து கொடுத்து அல்லாஹ் சொன்ன ஒரு செய்தி,  “இந்த மரத்தை மட்டும் நீங்கள் நெருங்காதீர்கள். அவ்வாறு நெருங்கினால் நீங்கள் அநியாயக்காரர்களாகி விடுவீர்கள்’ என்று சொன்னான்.

ஆனால் அவர்கள் இறைவனது கட்டளையை மீறி விட்டார்கள். இதனால் அந்தச் சோலையிலிருந்து அவர்கள் இருவரையும் அல்லாஹ் வெளியேற்றினான். அவ்வாறு வெளியேற்றும் போது அல்லாஹ் அவருக்கு தன்னுடைய ஞானத்தை அவருக்கு கற்றுக் கொடுக்கிறான்.

அதற்கு முன்பு ஆதமைப் படைத்தவுடன் மலக்குமார்கள் அல்லாஹ்விடம் வந்து, “நாங்கள் தான் உனக்குப் பணிவிடை செய்கிறோமே. நீ எதற்காக பூமியில் இரத்தத்தை ஓட்டும் மனித இனத்தை படைக்க வேண்டும்?’ என்று தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினர். அதற்கு இறைவன் உங்களை விட நான் மிகவும் அறிந்தவன் என்று கூறிவிட்டு ஆதமுக்கு சிரம் பணியுங்கள் என்று கூறினான். அவர்களும் ஆதமுக்கு சிரம் பணிந்தனர்.

பல்லாண்டு காலமாக வாழ்ந்த மலக்குமார்களுக்குத் தெரியாத விஷயங்கள், அப்போது படைக்கப்பட்ட ஆதமுக்கு தெரிந்தது. அந்த அளவுக்கு மிகப் பெரிய அறிவாளியாக இருந்தார். இன்றைக்கும் யாரெல்லாம் அறிவாளியாக இருக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் ஆதமிடருந்து தான் அறிவு வந்தது. எல்லாமே அவருடைய ஜீன்களிலிருந்து கடத்தப்பட்டது தான்.

அவ்வாறு ஆதமை அவன் வெளியேற்றும்போது, உனக்கு நான் எல்லாவற்றையும் கற்றுத் தந்திருக்கிறேன். நீ தான் மிகப் பெரிய அறிவாளி. எனவே உலகத்திற்குச் சென்று எது சரி, எது தவறு என்பதை நீ தீர்மானித்து அதன்படி உன்னுடைய செயலை அமைத்துக் கொள் என்று இறைவன் கூறவில்லை. மாறாக இறைவன் கூறுகிறான்:

இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப் படவும் மாட்டார்கள்என்று கூறினோம்.

அல்குர்ஆன்: 2:38

அதாவது, நேர்வழி என்பது என்னிடமிருந்து தான் வரும். வேறு எதையும் நீர் மார்க்கமாகப் பின்பற்றக்கூடாது. நீர் முதல் மனிதராக இருக்கலாம். அறிவில் மிகுந்தவராக இருக்கலாம். ஆனால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? எப்படிச் செய்ய வேண்டும் என்பதைச் சொல்வது நான் தான். இது தான் ஆதமை அல்லாஹ் படைத்த போது மனித சமுதாயத்திற்குச் சொன்ன முதல் செய்தியாகும். மேலும் இறைவன் கூறுகிறான்.

உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்று கூறுவீராக!

அல்குர்ஆன்: 49:16

இன்றைக்குப் பெரும்பாலான முஸ்லிம்கள் மார்க்கத்தில் இல்லாததை புதிது புதிதாக உருவாக்கி வைத்துக் கொண்டு இது மார்க்கத்தில் உள்ள செயல் என்று செய்து கொண்டிருக்கிறார்கள்.

இறைவனுக்கு ஒன்றும் தெரியாதது போன்று, இவர்கள் புதிதாகக் கண்டுபிடித்து அவனுக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கிறார்கள். அதனால் தான் இறைவன், நான் உங்களுக்கு மார்க்கத்தைப் பூர்த்தியாக்கி விட்டேன். இந்த மார்க்கத்திற்குச் சொந்தக்காரன் நான். உங்களுக்குத் தேவையான எல்லா சட்டங்களையும் நான் கூறியிருக்கிறேன். ஆனால் நீங்கள் எனக்கே மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கிறீர்களா? என்று கேட்கிறான்.

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!

அல்குர்ஆன் 7:3

எனவே எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் இதை அல்லாஹ் சொல்லியிருக்கின்றானா என்று பார்க்க வேண்டும். மேலும் இறைவன் முஃமீன்களுடைய பண்பைப் பற்றிச் சொல்லும் போது,

அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது “செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அல்குர்ஆன் 24:51

அவ்வாறு அல்லாஹ் சொல்வதைக் கேட்காமல் அவனது தூதர் காட்டிய அடிப்படையில் வாழாமல் முன்னோர்கள், இமாம்கள், இவர்களுடைய வழிகாட்டுதலின் அடிப்படையில் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களைப் பற்றி இறைவன் கூறும்போது,

அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில்”நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப் பட்டிருக்கக் கூடாதா?” எனக் கூறுவார்கள்.

எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர்எனவும் கூறுவார்கள்.

அல்குர்ஆன்: 33:66,67

நரகத்தில் அவர்களின் புலம்பலைப் பற்றி இறைவன் சுட்டிக் காட்டுகிறான். ஆகவே, இறைவன் அங்கீகரித்த மார்க்கம் இஸ்லாம் மட்டும் தான். அதில் எந்தப் பிரிவினையும் இல்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

வளரும் இன்ஷா அல்லாஹ்