தவறான வாதங்களும் தக்க பதில்களும்

தவறான வாதங்களும் தக்க பதில்களும்

அல்லாஹ்வின் கட்டளை என்ன?

உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்!

அல்குர்ஆன் (33 : 33)

இந்த வசனத்தில் பெண்கள் வீடுகளில் மட்டுமே தொழ வேண்டும் என்ற கருத்து நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்லப்படவில்லை. ஆனால் போலி சுன்னத் வல்ஜமாத்தினர் தாங்கள் வெளியிட்ட நோட்டீஸில் மேற்கண்ட வசனத்துக்குப் பின்வருமாறு மொழிபெயர்த்திருந்தனர்.

வீட்டிலிருந்தபடியே தொழுகையையும் கடைப்பிடியுங்கள் என்று மொழிபெயர்த்திருந்தனர். வீட்டிலிருந்தபடியே என்ற வாசகம் குர்ஆனில் இடம் பெறவில்லை. தொழுகையைக் கடைப்பிடியுங்கள் என்று மட்டுமே அல்லாஹ் கூறுகிறான்.

தங்கள் கருத்தை நிலைநாட்டுவதற்காக அல்லாஹ்வின் மீதே இட்டுக்கட்டத் துணிந்துவிட்ட இந்த வழிகேடர்களை இஸ்லாமிய சமுதாயம் இனம்காண வேண்டும்.

பெண்கள் தேவையில்லாமல் வெளியிடங்களுக்கு சுற்றித் திரியக் கூடாது என்று தான் இந்த வசனத்தில் இறைவன் கூறுகிறான். பள்ளிவாசலுக்குச் சென்று இறைவனை வணங்குவது போன்ற நல்ல காரியங்களில் பெண்கள் ஈடுபடுவது தேவையற்ற காரியம் அல்ல. நன்மையான காரியமாகும். எனவே தான் நபி (ஸல்) அவர்கள் பெண்கள் பள்ளிக்கு வருவதை அனுமதியளித்துள்ளார்கள்.

பெண்கள் வீடுகளில் இருக்க வேண்டும் என்றால் மார்க்கெட், மருத்துவமனை போன்ற தேவையான இடங்களுக்கு பெண்கள் செல்லக்கூடாது என்று இவர்கள் கூற மாட்டார்கள். தேவையான காரியங்களுக்கு வெளியே செல்லலாம் என்பதை புரிந்து வைத்திருக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்களும் இதைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

சவ்தா (ரலி) அவர்கள் வீட்டினுள் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் என் தேவை ஒன்றிற்காக வெüயே சென்றேன். உமர் (ரலி) அவர்கள் என்னிடம் இவ்வாறெல்லாம் சொன்னார்கள்என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு “வஹீ‘ (வேதவெளிப்பாடு) அறிவித்தான். பிறகு அந்நிலை அவர்களை விட்டு நீக்கப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் “நீங்கள் உங்கள் தேவைக்காக வெளியே செல்லலாம் என்று உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதுஎன்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி (4795)

உலகத் தேவைகளுக்கே வெளியே செல்லலாம் என்றால் மார்க்கத்தைப் படிப்பதற்கும் நன்மைகளைச் சம்பாதிப்பதற்கும் பெண்கள் வெளியே செல்வது அதிக தகுதி வாய்ந்ததாகும்.

பெண்கள் பள்ளிக்கு வருவதை ஹராம் என்று கூறும் இவர்கள் இன்றைக்கு இஸ்லாமியப் பெண்கள் மார்க்கம் தடைசெய்துள்ள பல இடங்களுக்குச் செல்வதை கண்கூடாகப் பார்த்தும் அதைப் பற்றி வாய் திறப்பதில்லை.

தர்ஹா உரூஸ் போன்ற இணை வைப்புக் காரியங்களில் பெண்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று அனாச்சாரங்களில் மூழ்கிக் கிடக்கின்றனர். இதை எதிர்த்து இந்த போலி சுன்னத் வல்ஜமாஅத்தினர் என்றைக்காவது நோட்டீஸ் வெளியிட்டிருப்பார்களா?

இணை வைப்பையும் அனாச்சாரங்களையும் கண்டிக்காமல் நபிவழிக்கு எதிராகக் களமிறங்கும் இவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ள வேண்டும்.

இன்னும் சொல்வதாக இருந்தால் இவர்கள் எடுத்துக் காட்டும் வசனத்துக்கு இது தான் அர்த்தம் என்றாலும் அதனால் பெண்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்று ஆகாது. இவர்கள் எடுத்துக் காட்டிய வசனத்துக்கு முன்னால் உள்ள வசனத்தையும் சேர்த்து வாசித்தால் இது நபியின் மனைவியருக்கு மட்டும் உள்ள சிறப்புச் சட்டம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள். உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான்.

அல்குர்ஆன் 33:32, 33

நீங்கள் மற்ற பெண்களைப் போல் அல்ல என்று தான் இவ்வசனம் துவங்குகிறது, வெளியே செல்வது மற்றவர்களூக்கு அனுமதிக்கப்பட்டதாக இருந்தாலும் நபியின் மனைவியர் அதையும் தவிர்க்க வேண்டும் என்ற கருத்து இதனுள் அடங்கியுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்களா?

பெண்கள் பள்ளிக்கு வருவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்பதற்கு அஹ்மதில் இடம்பெற்றுள்ள ஒரு நபிமொழியை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

அந்த நபிமொழியை இவர்கள் முழுமையாக வெளியிடாமல் இதிலும் இருட்டடிப்பு வேலையைச் செய்துள்ளனர். அந்த நபிமொழியை இவர்கள் முழுமையாக மொழிபெயர்த்தால் அந்தச் செய்தியும் பெண்கள் பள்ளிக்கு வரலாம் என்று கூறுகிறது என்பதை பொதுமக்கள் சந்தேகமின்றி அறிந்து கொள்வார்கள்.

உம்மு ஹுமைத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களுடன் (ஜமாஅத்தில்) சேர்ந்து தொழ விரும்புகிறேன்என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ என்னுடன் சேர்ந்து தொழுவதை விரும்புகிறாய் என்பது எனக்குத் தெரியும். நீ உன் வீட்டில் தொழுவதை விட வீட்டின் உள் அறையில் தொழுவது உனக்குச் சிறந்ததாகும். நீ உன் சமுதாயத்தின் பள்ளிவாசலில் தொழுவதை விட உன் வீட்டில் தொழுவது சிறந்ததாகும். நீ என்னுடைய பள்ளியில் தொழுவதை விட உன் சமுதாயத்தாரின் பள்ளியில் நீ தொழுவது உனக்குச் சிறந்ததாகும்என்று கூறினார்கள்.

நூல்: அஹ்மது (25842)

இந்தச் செய்தியில் நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்குச் செல்லக்கூடாது என்று எந்த ஒரு தடையும் போடவில்லை. மாறாக பள்ளியில் தொழுவதை விட வீட்டில் தொழுவது சிறந்தது என்றே கூறியுள்ளார்கள்.

இதை நாம் மறுக்கவில்லை. இன்றைக்கும் நாம் பெண்கள் பள்ளியில் தொழுவதை விட வீடுகளில் தொழுவது சிறந்தது என்று தான் கூறுகிறோம். பள்ளிக்கு அவசியம் வர வேண்டும் என்று கூறுவதில்லை. பள்ளிக்கு வராமல் வீட்டில் தொழும் பெண்களைக் குறை கூறுவதுமில்லை.

பெண்கள் பள்ளிக்கு வருவதும் வராமல் இருப்பதும் அவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது. இரண்டும் அனுமதிக்கப்பட்ட விஷயமாகும். இதில் ஒன்றை காரணமாகக் காட்டி இன்னொன்றை மறுக்கக்கூடாது.

ஒரு காரியம் இன்னொரு காரியத்தை விடச் சிறந்தது என்று சொல்லப்பட்டால் இரண்டும் அனுமதிக்கப்பட்ட விஷயம் என்று அர்த்தம். 100 ரூபாய் தர்மம் செய்வதை விட 200 ரூபாய் தர்மம் செய்வது சிறந்தது என்று சொன்னால் 100 ரூபாய் தர்மம் செய்வது ஹராம் என்று புரிந்து கொள்ள மாட்டோம்.

ஆண்கள் கரண்டை வரை ஆடையைக் கீழே இறக்கி அணிவதற்கு அனுமதியுள்ளது. கரண்டை வரை அணிவதை விடவும் கெண்டைக்காலின் பாதி வரை கீழாடையை அணிவது சிறந்தது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதனால் கரண்டை வரை ஆடை அணிவது ஹராம் என்று இந்த போலி சுன்னத் வல்ஜமாத்தினர் கூறுவார்களா?

வெள்ளை நிற ஆடைகளை அணிவது சிறந்தது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதனால் மற்ற நிற ஆடைகளை அணிவது ஹராம் என்று இவர்கள் கூறுவார்களா?

பாதிக்கப்பட்டவர் பழிக்குபழி வாங்குவதை அல்லாஹ் குர்ஆனில் அனுமதிக்கின்றான். அத்துடன் மன்னிப்பது சிறந்தது என்று கூறுகிறான்.  எனவே கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்று தீர்ப்பளிப்பதும் இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதும் ஹராம் என்று இவர்கள் கூறுவார்களா?

இந்த அடிப்படையில் தான் பெண்கள் வீட்டில் தொழுவது சிறந்தது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதே ஹதீஸின் இறுதியில் நீ என்னுடைய பள்ளியில் தொழுவதை விட உன் சமுதாயத்தாரின் பள்ளியில் நீ தொழுவது உனக்குச் சிறந்ததாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதை போலி சுன்னத் வல்ஜமாஅத்தினர் இருட்டடிப்பு செய்து விட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், பெண்கள் வீட்டில் தொழுவது சிறந்தது என்பதைக் கூறுவதுடன் அவர்கள் பள்ளிக்கு வருவதை தடை செய்யக்கூடாது என்றும் சேர்த்துக் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் மனைவிமார்கள் பள்ளிவாசல்களுக்குச் செல்வதை நீங்கள் தடை செய்யாதீர்கள். அவர்களின் வீடுகள் அவர்களுக்குச் சிறந்தது.

நூல்: அபூதாவுத் (480)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வளவு தெளிவாக பெண்கள் பள்ளிக்கு வரலாம் என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கும் போது எதை நபியவர்கள் செய்யக்கூடாது என்று சொன்னார்களோ அந்தக் காரியத்தை போலி சுன்னத் வல்ஜமாஅத்தினர் இந்த நோட்டீஸில் செய்துள்ளனர்.

பெண்களுக்கு ஜும்ஆ கடமையில்லை

பெண்கள், அடிமைகள், நோயாளிகள், சிறுவர்கள் இவர்களைத் தவிர மற்றவர்கள் கட்டாயம் ஜும்ஆத் தொழுகையில் கலந்து கொள்ள வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலி)

நூல்: அபூதாவுத் (901)

பெண்கள் ஜும்ஆ தொழுகைக்குப் பள்ளிக்கு வரக்கூடாது என்பதற்கு மேற்கண்ட ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். ஆனால் இந்த நபிமொழியில் பெண்கள் பள்ளிக்குச் செல்லக்கூடாது என்று சொல்லப்படவில்லை. அவர்களுக்கு ஜும்ஆ கடமையில்லை என்றே கூறப்பட்டுள்ளது.

ளுஹாத் தொழுகை, இரவுத் தொழுகை, சுன்னத்தான தொழுகைகள், நஃபிலான தொழுகைகள், சுன்னத்தான நோன்புகள், உபரியான தான தர்மங்கள் ஆகியவை கடமை இல்லை என மார்க்கம் கூறுகிறது. இதனால் இவை அனைத்தும் ஹராமான செயல்கள் என்று இவர்கள் கூறுவார்களா?

இதே செய்தியில் பெண்களுடன் சிறுவர்கள், அடிமைகள், நோயாளிகள் ஆகியோருக்கும் ஜும்ஆ கடமையில்லை என்று கூறப்பட்டுள்ளது. எனவே சிறுவர்கள், அடிமைகள், நோயாளிகள் ஆகியோர் ஜும்ஆவை நிறைவேற்ற பள்ளிவாசலுக்குச் செல்வது ஹராம் என்று இவர்கள் நோட்டீஸ் போடாதது ஏன்?

மாறாக இது சலுகை என்றும், விரும்பினால் பள்ளிக்கு வரலாம் என்றும் அறிவுள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். ஆனால் சுன்னத் வல்ஜமாஅத் ஐக்கிய பேரவைக்கு இந்த அறிவு இல்லாமல் போய்விட்டது.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் ஜும்ஆத் தொழுகைக்கு பள்ளிக்கு வந்து ஜமாஅத்துடன் நிறைவேற்றியுள்ளார்கள். உம்மு அதிய்யா (ரலி) அவர்கள் இதைத் தெளிவுபடுத்துகிறார்கள்.

நான் வெள்ளிக்கிழமை அன்று “காஃப் வல்குர்ஆனில் மஜீத்எனும் (50ஆவது) அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாயிலிலிருந்து செவியுற்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆ (சொற்பொழி)விலும் இந்த அத்தியாயத்தை ஓதுவார்கள்.

அறிவிப்பவர்: அம்ரா பின்த் (ரலி) அவர்களின் சகோதரி

நூல்: முஸ்லிம் (1580)

நபித்தோழர்கள் தடை செய்தார்களா?

பள்ளிக்கு ஜும்ஆத் தொழ வந்த பெண்களை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கற்களை எறிந்து விரட்டினார்கள் என்ற கருத்தில் ஒரு செய்தி முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.

பெண்கள் பள்ளிக்குச் செல்லக் கூடாது என்று கூறுபவர்கள் இதை ஆதாரமாகக் கூறுகிறார்கள்.  தெளிவான நபிவழிக்கு எதிராக நபித்தோழரே தீர்ப்பளித்தாலும் அதை எந்த ஒரு முஃமினும் ஏற்கக்கூடாது.

நபித்தோழரைப் பின்பற்றினாயா? என்று அல்லாஹ் நம்மிடம் கேள்வி கேட்க மாட்டான். நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றினாயா? என்று கட்டாயம் நம்மிடம் கேட்பான். நபியின் வழியைப் புறக்கணித்து நபித்தோழரைப் பின்பற்றினால் இறைவனுடைய கோபத்துக்கு ஆளாக நேரிடும்.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் மட்டுமே இந்தத் தவறான தீர்ப்பு அளித்துள்ளார்கள். ஆனால் மற்ற நபித்தோழர்கள் இந்த நபிவழியை அனுமதிக்கக் கூடியவர்களாகவே இருந்தனர். இதைப் பின்வரும் சம்பவங்கள் தெளிவுபடுத்துகின்றது.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி (900)

முஜாஹித் அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “பெண்கள் இரவில் பள்ளிவாசல்களுக்குச் செல்வதை நீங்கள் தடுக்காதீர்கள்” என்று கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடைய புதல்வர்களில் ஒருவர், “பெண்களை வெளியே செல்ல நாங்கள் விடமாட்டோம். (அவர்கள் வெளியே செல்ல) இதையே ஒரு சாக்காக ஆக்கிவிடுவார்கள்” என்று கூறினார். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று கூறுகிறேன். ஆனால், நீ “அவர்களை நாங்கள் விடமாட்டோம்’ என்று கூறுகிறாயா?” என்று கூறி, தம் புதல்வரைக் கண்டித்தார்கள்.

நூல்: முஸ்லிம் (755)

நபியின் மனைவிமார்களில் யாராவது பள்ளியில் தொழுதார்களா?

நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களில் ஒருவர் கூட தொழுகையை நிறைவேற்றுவதற்காகப் பள்ளிக்கு வந்து ஜமாஅத்தில் கலந்து கொள்ளவில்லை. எனவே பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்லக்கூடாது என்று போலி சுன்னத் வல்ஜமாஅத்தினர் வாதிடுகின்றனர்.

பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாம் என்பதற்கு நபி (ஸல்) அவர்களின் நேரடி சொல்லும் அவர்கள் வாழும்போதே பல நபித்தோழியர்கள் பள்ளிவாசலுக்கு வந்து அவர்களோடு தொழுத போது அதை நபியவர்கள் அங்கீகரித்ததும் ஆதாரமாக அமைந்துள்ளன.

இதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் இருந்தும் இதில் ஒன்றைக் கூட கண்டுகொள்ளாமல் நபியின் மனைவிமார்கள் யாராவது பள்ளிவாசலுக்குச் சென்றார்களா என்று இவர்கள் கேட்பதால் இவர்கள் பல நபிமொழிகளை மறுக்கும் நிலைக்குச் சென்றுவிட்டனர். இதை வெளிப்படையாகக் கூறாமல் தேவையற்ற இது போன்ற கேள்விகளைக் கேட்பதன் மூலம் இவர்களின் உண்மை நிலையை வெளிப்படுத்துகின்றனர்.

ஆதாரங்கள் தெளிவாக இருக்கும் போது நபியின் மனைவிமார்கள் பள்ளிவாசலுக்குச் சென்றார்களா? என்ற கேள்வி தேவையற்றது.

மாதவிடாய் பெண்களுக்கான சட்டங்கள் சிலவற்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி உள்ளார்கள். நபியின் மனைவிமார்கள் இப்படி நடந்தார்களா என்று மூளையுள்ள யாரும் கேட்கமாட்டார்கள்.

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு செலவினம் கொடுப்பது பற்றி ஹதீஸ் வந்தால் நபியின் மனைவியருக்கு இப்படி நடந்ததா என்று அறிவுடைய யாராவது கேட்பார்களா?

பெண்கள் சம்மந்தமான எத்தனையோ சட்டங்களில் மற்ற பெண்கள் தான் சம்பந்தப்பட்டுள்ளனர். நபியின் மனைவியர் சம்பந்தப்படவில்லை. இதனால் அந்தச் சட்டங்களை எல்லாம் மறுத்து விடுவார்களா? இது அறிவுள்ளவர்கள் கேட்கும் கேள்வியா?

இன்னும் சொல்லப் போனால் இந்த விஷயத்தில் நபியின் மனைவியருக்கும் மற்ற பெண்களுக்கும் வித்தியாசம் உள்ளது என்று மேற்கண்ட வசனம் சொல்வதை எடுத்துக் காட்டி இருக்கிறோம். எதில் நபியின் மனைவியர் செய்தார்களா என்று பார்க்கத் தேவை இல்லை என்று அல்லாஹ் கூறுகிறானோ அந்த விஷயத்தில் இவர்கள் நபியின் மனைவியர் செய்தார்களா என்று கேட்கிறார்கள். இவர்களின் அறியாமைக்கு ஒரு எல்லையே இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது

பெண்கள் பள்ளிக்கு அவசியம் வர வேண்டும் என மார்க்கம் கூறவில்லை. பள்ளிக்கு வருவதும் வராமல் வீட்டில் தொழுவதும் அவரவருடைய தனிப்பட்ட விருப்பம்.

எனவே நபியின் மனைவிமார்கள் பள்ளிக்கு வராவிட்டால் இது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்று தான் கூற முடியும். இதனடிப்படையில் பள்ளிவாசலுக்குச் செல்வது அனைத்து பெண்களுக்கும் ஹராம் என்று கூறக்கூடாது.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரே ஒரு நபித்தோழியர் பள்ளிவாசலுக்கு வந்து நபியவர்களோடு ஜமாஅத் தொழுகையில் கலந்து கொண்டார் என்று ஒரு ஆதாரப்பூர்வமான செய்தி இருந்தாலும் இதை அடிப்படையாகக் கொண்டு பெண்கள் பள்ளிவாலுக்குச் செல்வதை அனுமதிப்பதே இறை நம்பிக்கையாளர்களின் பண்பாகும்.

நபியின் மனைவிமார்கள் செய்தால் தான் மார்க்கம். நபியின் முன்னிலையில் மற்ற நபித்தோழியர்கள் செய்திருந்தால் அவற்றை வழிகேடு என்று இந்த அறிவிலிகள் கூற வருகின்றார்கள்.

அப்படியானால் நபி (ஸல்) அவர்கள் வழிகேடான விஷயத்தைப் பெண்களுக்கு அனுமதித்தார்கள். நபித்தோழியர்கள் மார்க்கத்தில் ஹராமான செயலைச் செய்தார்களா?

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் முஃமினான பெண்கள் பள்ளிவாசலுக்கு வந்து நபியவர்களுடன் கூட்டுத் தொழுகையில் கலந்து கொண்டார்கள் என நபியின் மனைவிமார்களில் ஒருவரான அன்னை ஆயிஷா (ரலி) அவர்களே தெளிவான வாக்கு மூலம் தந்திருக்கும் போது ஆயிஷா (ரலி) தொழுதார்களா? என்று கேட்பது அதிகப்பிரசங்கித்தனமாகும்.

நம்பிக்கையுள்ள (மூமினான) பெண்கள் தங்களது கம்பளி ஆடைகளால் போர்த்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ர் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகையை முடித்துக் கொண்டு தமது இல்லங்களுக்கு திரும்பிச் செல்வார்கள் .இருட்டின் காரணமாக அவர்களை யாரும் (ஆணா பெண்ணா என்று) அறிந்து கொள்ள முடியாது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி (578)

நபியின் மனைவிமார்கள் செய்தால் நாங்கள் செய்வோம் என்று கூறும் போலி சுன்னத் வல்ஜமாத்தினர்கள் இதில் கூட உண்மையாளர்களாக இல்லை.

பெண்கள் பள்ளிவாசலுக்கு தொழப்போவதே ஹராம் என்று கூறுகிறார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவரான ஸைனப் (ரலி) அவர்கள் உபரியான வணக்கங்களை பள்ளிவாசலில் சென்று தொழுதுள்ளார்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குள் வந்தபோது இரு தூண்களுக்கிடையில் நீண்ட கயிறு ஒன்று காணப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் “ஸைனப் (ரலி) அவர்களுக்கு உரியதாகும்; அவர் தொழும்போது சோர்வடைந்தால் இந்தக் கயிற்றைப் பிடித்துக் கொள்வார்என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இதை அவிழ்த்து விடுங்கள். உங்களில் ஒருவர் உற்சாகமாக இருக்கும்போது தொழட்டும்; சோர்வடைந்தால் உட்கார்ந்து கொள்ளட்டும்என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் (1437)

நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களும் பள்ளிவாசலுக்கு வந்து தொழுதுள்ளார்கள் என்று இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுகின்றது. எனவே போலி சுன்னத் வல்ஜமாஅத்தினர் பெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று உபரியான வணக்கங்களில் ஈடுபடலாம் என்று கூறுவார்களா?

மேலும் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் நபி (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருந்துள்ளனர். இஃதிகாஃபில் இருப்பவர் தொழுகை குர்ஆன் ஓதுதல் ஆகிய காரியங்களில் ஈடுபடுவார். நபியின் மனைவி இது போன்ற வணக்கங்களை பள்ளியில் நிறைவேற்றியுள்ளார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

(மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில்) நபி (ஸல்) அவர்களுடன் அவர்களின் துணைவியரில் ஒருவர் இஃதிகாஃப்- தங்கியிருந்தார்.

நூல்: புகாரி (309)

பெண்கள் பெருநாள் திடலில்

பெருநாட்களில் பெண்கள் திடலுக்குச் சென்று ஆண்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொள்வது நபிவழியாகும். தொழுகை கடமையில்லாத நிலையில் உள்ள, மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களும் கண்டிப்பாகத் திடலுக்கு வர வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

ஆனால் போலி சுன்னத் வல்ஜமாஅத்தினர் இந்த நபிவழிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்கின்றனர். பின்வரும் நபிமொழிகள் இவர்களின் முகத்திரையைக் கிழித்து இவர்கள் நபிவழிக்கு எதிரானவர்கள் என்பதைத் தெரிவிக்கின்றது.

இரு பெருநாட்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கின்ற கன்னிப் பெண்களையும் (தொழும் திடலுக்குப்) போகச் சொல்லுமாறு நாங்கள் கட்டளையிடப்பட்டோம். அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியேறி முஸ்லிம்கள் தொழுகின்ற இடத்திற்குச் சென்று அவர்களுடைய பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வேண்டும். தொழும் இடத்தை விட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்களின் இக்கட்டளையைக் கேட்டுக் கொண்டிருந்த பெண்களில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே, எங்களில் எவருக்கேனும் தலையில் அணியும் முக்காடு இல்லையானால் என்ன செய்வது?” என்றார். அதற்கு, “அவளுடைய தோழி தனது (உபரியான) முக்காட்டை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்என பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி)

நூல்: புகாரி (351)

பெருநாளில் (தொழும் திடலுக்கு) நாங்கள் புறப்பட வேண்டும் எனவும் கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் நாங்கள் கட்டளையிடப்பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் தஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.

அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி)

நூல்: புகாரி (971)

ஆர்ப்பாட்டம் மாநாடுகளுக்குப் பெண்கள் வரலாமா?

பெண்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிவதைத் தான் இஸ்லாம் கண்டிக்கின்றது. பெண்கள் பயனுள்ள தேவையான விஷயங்களுக்கு வெளியே செல்வதை மார்க்கம் தாராளமாக அனுமதிக்கின்றது.

பெண்கள் வெளியே செல்லலாமா என்ற பிரச்சனை நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே ஏற்பட்டது. அப்போது தேவையிருந்தால் பெண்கள் வெளியே செல்லலாம் என்று கூறி நபி (ஸல்) அவர்கள் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வந்தார்கள்.

பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின்னால், தம் தேவைக்காக வேண்டி நபி (ஸல்) அவர்கüன் துணைவியாரானன சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) அவர்கள் வெளியே சென்றார்கள். அவர்கள், (உயரமான) கனத்த சரீரமுடைய பெண்மணியாக இருந்தார்கள். அவர்களை அறிந்தவர்களுக்கு அவர்கள் யார் என்று (அடையாளம்) தெரியாமலிருக்காது. அவர்களை அப்போது, உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் பார்த்துவிட்டு “சவ்தாவே, அல்லாஹ்வின் மீதாணையாக, நீஙகள் யார் என்று எங்களுக்குத் தெரியாமலில்லை. நீங்கள் (யார் என்று அடையாளம் தெரிகின்ற வகையில்) எப்படி வெளியே வந்திருக்கிறீர்கள் பாருங்கள்!என்று சொன்னார்கள். சவ்தா (ரலி) அவர்கள் உடனே அங்கிருந்து திரும்பி விட்டார்கள். சவ்தா (ரலி) அவர்கள் வீட்டினுள் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் என் தேவை ஒன்றிற்காக வெளியே சென்றேன். உமர் (ரலி) அவர்கள் என்னிடம் இவ்வாறெல்லாம் சொன்னார்கள்என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு “வஹீ‘ (வேதவெüப்பாடு) அறிவித்தான். பிறகு அந்நிலை அவர்களை விட்டு நீக்கப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் “நீங்கள் உங்கள் தேவைக்காக வெளியே செல்லலாம் என்று உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதுஎன்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி (4795)

விவாகரத்துக்குப் பிறகு இத்தா கடைப்பிடிக்கும் பெண் வெளியே செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டால் அதையும் மார்க்கம் அனுமதிக்கின்றது.

என் தாயின் சகோதரி மணவிலக்குச் செய்யப்பட்டார். அவர் (“இத்தாவில் இருந்தபோது) தமது பேரீச்சை மரத்தின் கனிகளைப் பறிக்க விரும்பினார். (இத்தருணத்தில்) நீ வெளியே செல்லக் கூடாதென அவரை ஒருவர் கண்டித்தார். ஆகவே, என் தாயின் சகோதரி, நபி (ஸல்) அவர்களிடம் வந்(து, அது குறித்துத் தெரிவித்)த போது நபி (ஸல்) அவர்கள், “ஆம்; நீ (சென்று) உமது போரீச்சை மரத்தின் கனிகளைப் பறித்துக்கொள். ஏனெனில், (அதில் கிடைக்கும் வருமானத்தில்) நீ தர்மம் செய்யக் கூடும்; அல்லது ஏதேனும் நல்லறம் புரியக் கூடும்என்றார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்: முஸ்லிம் (2972)

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் போர்க்களத்திற்கு வந்து காயம்பட்ட போர் வீரர்களுக்கு மருத்துவம் செய்யும் பணியைச் செய்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் அந்நிய ஆண்கள் பெண்களைப் பார்க்கும் நிலையும் காயம்பட்ட அந்நிய ஆண்களைப் பெண்கள் தொட்டுத் தூக்கும் நிலையும் இருந்தது. முஸ்லிம்களின் நன்மை கருதி இதை நபி (ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள்.

(பெண்களாகிய) நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நடந்த போர்களில் காயமுற்றவர்களுக்கு மருந்திடுவோம்; நோயாளிகளைக் கவனித்தோம். நான் நபி (ஸல்) அவர்களிடம் “எங்களில் ஒரு பெண்ணுக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெருநாள் தொழுகைக்குச்) செல்லாமல் (வீட்டிலேயே இருப்பது) குற்றமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(ஒரு பெண்ணிடம் மேலங்கி இல்லாவிட்டால்) அவளுடைய தோழி தனது மேலங்கிகளில் ஒன்றை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும்! அவள் நன்மையான காரியங்களிலும் இறைநம்பிக்கையாளர்களின் பிரசாரங்களிலும் கலந்து கொள்ளட்டும்!என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி)

நூல்: புகாரி (324)

இஸ்லாத்தில் ஆண்கள் மட்டுமே ஆயுதம் ஏந்திப் போரிட அனுமதியுள்ளது. இதைப் பெண்கள் மீது இஸ்லாம் விதிக்கவில்லை.

ஆனால் அநியாயம் செய்யும் அரசனிடம் நீதியை எடுத்துச் சொல்வது சிறந்த ஜிஹாத் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்தப் போராட்டம் ஆண்கள் மட்டும் செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. மாறாக இந்தப் போராட்டம் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதாகவே மார்க்கம் கூறுகின்றது.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “எந்த அறப்போர் சிறந்தது?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அக்கிரமம் புரியும் அரசனிடம் சத்தியத்தை எடுத்துரைப்பதுஎன பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலி)

நூல்: நஸாயீ (4138)

எனவே பெண்கள் நன்மையான காரியத்துக்காக வெளியே செல்வதைக் குறை கூறுபவர்கள் மேற்கண்ட நபிமொழிகளுக்கு எதிராகப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் போராட்டங்கள் அனைத்தும் இஸ்லாமிய சமுதாயத்தின் நன்மையை மட்டுமே கவனத்தில் கொண்டு நடத்தப்படுகின்றன. பெண்கள் இது போன்ற நன்மையான காரியங்களில் கலந்து கொள்ளக்கூடாது என தடை செய்யும் உரிமை யாருக்கும் இல்லை.