உள் வாங்கும் பூமி உயிர் வாங்கும் சுனாமி

உள் வாங்கும் பூமி உயிர் வாங்கும் சுனாமி

ஜப்பானிய மொழியில் பள்ன் (சு) என்றால் துறைமுகம்! சஹம்ண் (நாமி) என்றால் அலை!

தீவுகள் அடங்கிய ஜப்பான், அடிக்கடி சுனாமியின் தாக்குதலுக்கு உள்ளாவதால் அம்மொழியின் பெயரே அனைத்து மொழிகளிலும் இடம் பிடித்துக் கொண்டது. அதற்கேற்றாற்போல் மார்ச் 11, 2011 அன்று ஜப்பானின் கடற்கரை நகரமான சென்டாய் நகரிலிருந்து 130 கி.மீ. தூரத்தில் நில நடுக்கம் ஏற்படுகின்றது. நில நடுக்கத்தின் அளவு 8.9 ரிக்டர் ஆகும். கி.பி. 1900 ஆண்டுக்குப் பிறகு உலகம் சந்தித்த ஐந்தாவது மிகப் பெரிய நில நடுக்கமாகும்.

உலகை அதிர வைத்த இந்த நில நடுக்கம் ஏற்பட்ட ஜப்பானின் நேரம் மதியம் 2.46 ஆகும். இந்திய நேரம் காலை 11.16. கடலின் 25 கி.மீ. ஆழத்தில் இந்த நில நடுக்கம் நிகழ்ந்தது. இதனால் கடலில் ஏற்பட்ட வெடிப்பின் நீளம் சுமார் 500 கி.மீ.!

நில நடுக்கம் ஏன் ஏற்படுகின்றது?

இரு கண்டங்கள் சந்திக்கும் இடத்தில் நிலத்தின் ஒரு தட்டு, மற்றொரு தட்டுடன் உரசிக் கொண்டு நிற்கின்றது. இவ்வாறு உரசுகின்ற ஒரு தட்டு மேலே ஏறி, மற்றொரு தட்டு கீழே இறங்குகின்றது. அப்போது பூமி உள்வாங்கும். அவ்வளவு தான்! நிலத்தின் மீது அமைந்திருக்கும் மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் அனைத்தும் உள்வாங்கி விடுகின்றன.

இதே நில நடுக்கம் கடலுக்கு அடியிலும் நிகழும். அப்படி நிகழும் போது கடல் நீர் உள்வாங்கி விடுகின்றது. உள்வாங்கிய அந்த நீர் பிறகு பல மதில் சுவர்களின் உயரத்திற்கு, பல மலையளவுக்கு வெளியேறுகின்றது. தன்னை உள்ளே இழுத்த கோபத்தில் கோபுரமாகக் கொப்பளித்து, கொந்தளித்து மிகக் கடுமையான வேகத்தில் புறப்பட்டு, கரை தாண்டி நிலத்திற்குள் நுழைந்து பழி தீர்க்கின்றது.

தான் பயணிக்கின்ற பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் பேருந்துகள், கார்கள், ரயில்கள், கப்பல்கள் அனைத்தையும் பலி கொண்டு விடுகின்றது. பல மாடிக் கட்டடங்களையும் ஒரு பலப் பரீட்சை பார்த்து விடுகின்றது. பாரபட்சமில்லாமல் பல லட்சம் உயிர்களைத் தன் பசிக்கு இரையாக்குகின்றது. தாவர வர்க்கத்தைத் தாரை வார்த்து விடுகின்றது. ஜப்பானில் இது தான் நடந்தேறியது.

இப்போது நில நடுக்கம் நடந்த இடம், வட அமெரிக்கக் கண்டத்தின் நிலத் தட்டும், பசிபிக் நிலத் தட்டும் சந்தித்து சங்கமிக்கும் இடமாகும். பசிபிக் நிலத்தட்டு பெரிய நிலத் தட்டாகும். இதன் ஓரம் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளைத் தொட்டு நிற்கின்றது. இதன் ஓரங்களில் எரிமலை சீற்றங்களும் நில நடுக்கங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

இங்கு வட அமெரிக்காவின் நிலத்தட்டை மேலே தூக்கியவாறு பசிபிக் நிலத்தட்டு அதன் கீழே இறங்கியது. அதன் விளைவாகத் தான் ஜப்பான் ஆழிப் பேரலையின் அபாயத்தைச் சந்தித்தது.

இதன் பின்னர் நடப்பது என்ன? சப்தம் போட்டு முத்தமிட்டு முட்டிக் கொண்ட இரு தட்டுகளும் இனி ஒன்றன் மீது ஒன்றாய் உட்கார்ந்து நிலை கொள்ள வேண்டும். அமைதியாகக் குடியமர வேண்டும். அதற்குப் பெயர் தான் ஆச்ற்ங்ழ் ள்ட்ர்ஸ்ரீந்ள் – பின்னதிர்வுகள்.

ஏற்கனவே பிரளயத்தில் புரண்டு கிடக்கும் சமுதாயத்தை இந்தப் பின்னதிர்வுகள் மீண்டும் பின்னி எடுத்து விடுகின்றது.

மீட்புப் பணியைச் செய்யவிடாத அளவுக்கு மூடுபனி முட்டுக்கட்டையாக நிற்கின்றது.

வெள்ளிக்கிழமையன்று உள்ளே புகுந்த சுனாமிப் பேரலை, புகுஷிமாவில் உள்ள அணுமின் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த மின்சாரத்தைத் தடை செய்து விட்டது. இது அணு உலையைக் குளிர்விக்கின்ற குளிர்விப்பான்களைச் செயலிழக்கச் செய்து விட்டன. இதனால் கதிர்வீச்சு கசிகின்ற ஆபத்தும், அணு உலைகள் வெடித்துச் சிதறுகின்ற அபாயமும் ஜப்பான் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது.

ஜப்பான் கண்ட இந்தச் சோதனை மூலம் அணு உலையின் அபாயத்தைப் பற்றியும் உலகிற்கு ஓர் எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் தேவை தான். அதற்காகக் கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குவது போல், மனித சமுதாயம் தன்னையே அழித்துக் கொண்டு அணு உலை அமைக்க வேண்டுமா? என்ற கேள்வியும் இங்கே எழுந்துள்ளது.

இது மட்டுமில்லாமல் இந்த நில நடுக்கத்தால் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீப்பற்றிக் கொண்டது.

இப்படிப் பல்வேறு சோதனைகளால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் ஜப்பான், உலகத்திற்கு உணர்த்துகின்ற பாடம் என்ன? உரைக்கின்ற படிப்பினை என்ன?

மனிதன் என்ன தான் வாழ்க்கை வசதிகளைப் பெற்றிருந்தாலும் அவை ஒரு நொடியில் அழிந்து போகக் கூடியவை.

ஜப்பான் பொருட்கள் தரத்திற்குப் பெயர் போனவை. பொருள் வாங்குவோரின் வாயிலிருந்து வரும் கேள்வியே “இது ஜப்பான் தயாரிப்பா?” என்பது தான். ஆனால் அந்த ஜப்பானின் தரம் நிரந்தரம் இல்லை என்பதே இந்தச் சோதனை தரும் படிப்பினையாகும்.

“விளையாட்டும், வீணும், கவர்ச்சியும், உங்களுக்கிடையே பெருமையடித்தலும், பொருட் செல்வத்தையும், மக்கட் செல்வத்தையும்  அதிகமாக்கிக் கொள்வதும் ஆகியவையே இவ்வுலக வாழ்க்கை” என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (இவ்வுலகின் நிலை) மழையைப் போன்றது. அதன் (காரணமாக முளைத்த) பயிர்கள் (ஏக இறைவனை) மறுப்போருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. பின்னர் அது காய்ந்து விடுகிறது. அது மஞ்சள் நிறமாக மாறுவதைக் காண்பீர். பின்னர் கூளமாக ஆகிறது. மறுமையில் (தீயோருக்குக்) கடும் வேதனையும், (நல்லோருக்கு) அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும், திருப்தியும் உண்டு. இவ்வுலக வாழ்வு ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை.

அல்குர்ஆன் 57:20

இன்றைய ஜப்பானின் சோதனை, அதைத் தான் படம் பிடித்துக் காட்டுகின்றது. இதன் மூலம் அல்குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் விடுக்கும் அழைப்பு, “தரமற்ற, நிரந்தரமற்ற இந்த உலக வாழ்க்கையை விட்டு விட்டு மறு உலக வாழ்க்கைக்கு வாருங்கள்’ என்பது தான்.

இந்த சுனாமி, பூகம்பம் ஆகிய நிகழ்வுகள் திடீரென்று தான் ஏற்படுகின்றன. ஒரு வகையில் இது இறுதி நாளை நினைவூட்டுகின்றது. ஏனெனில் இறுதி நாளைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகையில், அது திடீரென்று தான் ஏற்படும் என்று குறிப்பிடுகின்றான்.

“அந்த நேரம் எப்போது வரும்?” என்று (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். “இது பற்றிய ஞானம் என் இறைவனிடமே உள்ளது. அதற்குரிய நேரத்தில் அவனைத் தவிர யாரும் அதை வெளிப்படுத்த முடியாது. வானங்களிலும், பூமியிலும் அது மகத்தானதாக அமையும். அது உங்களிடம் திடீரென்று தான் வரும்” என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 7:187

படைத்த ஓரிறைவனை மறந்து விட்டு, அவனது கட்டளைகளைப் புறக்கணித்து விட்டு வீண் விளையாட்டுக்களிலும், கேளிக்கைகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு இறைவன் விடுக்கின்ற ஓர் எச்சரிக்கை ஆகும். இதோ அல்லாஹ் கேட்கிறான்.

வானத்தில் உள்ளவன் பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) நடுங்கும்.

அல்குர்ஆன் 67:16

இந்தச் சோதனையில் பாடம் பெற்று, மனித சமுதாயம் படிப்பினை பெற்றுத் திருந்துமா? இறைப் பாதைக்குத் திரும்புமா?