தொற்று நோய்கள் பார்வையும் பாதுகாப்பும்

தொற்று நோய்கள் பார்வையும் பாதுகாப்பும்

காட்டுத் தீயை விட, அதைப் பரப்பும் காற்றை விட மிக வேகமாகப் பரவி வருகின்ற காய்ச்சல்கள் தான் பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல்கள். இதற்குப் பலர் பலியாகி வருகின்றனர். தமிழகத்தில் சிக்குன் குனியா, டெங்கு, ஃபுளு போன்ற காய்ச்சல்களும் ஒரு விதமான மர்மக் காய்ச்சலும் பரவி வருகின்றது.

தொற்று நோய் – இஸ்லாமியப் பார்வை

தொற்று நோயில் ஒரு முஸ்லிமின் பார்வை எப்படியிருக்க வேண்டும்?

பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் மட்டுமல்லாது பல்வேறு நோய்களுக்குக் காரணமான வைரஸ்கள் காற்றிலோ, தண்ணீர் மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் வகையிலோ பரவுவது அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தொற்று நோய் கிடையாது. ஸஃபர் பீடை கிடையாது. ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாதுஎன்று கூறினார்கள். அப்போது கிராமவாசி ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித்) திரியும் என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றுக்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கி விடுகின்றனவே! அவற்றின் நிலை என்ன?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால் முதல் ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச் செய்தது யார்?” என்று திருப்பிக் கேட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 5717

இந்த ஹதீஸில் தொற்று நோய் கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் ஒரு ஒட்டகத்திலிருந்து மற்றொரு ஒட்டகத்திற்கு சிரங்கு தொற்றிக் கொள்வதை அனுபவப்பூர்வமாக உணர்ந்த ஒரு கிராமவாசி அது குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கேள்வி எழுப்புகின்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அளிக்கும் பதில் இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

முதல் ஒட்டகத்திற்கு அந்த நோயைத் தந்தவன் யார்? என்ற வாதத்தை நபி (ஸல்) அவர்கள் முன் வைக்கின்றார்கள்.

இதன் மூலம் தொற்று நோய் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் ஒரேயடியாக மறுக்காமல், தொற்று நோயைக் காரணம் காட்டி, இறைவனுடைய விதியை மறுத்து விடக் கூடாது என்பதை உணர்த்துகின்றார்கள்.

ஒருவருக்கு நோய் ஏற்படுகின்றது என்றால் அது இறைவனின் நாட்டப்படியே ஏற்படுகின்றது என்ற நம்பிக்கை வேண்டும். இவருடைய கண்ணைப் பார்த்ததால் தான் எனக்குக் கண் வலி வந்து விட்டது என்று கூறுவது இறைவனின் விதியை மறுப்பதைப் போன்றதாகும். இதைத் தான் மேற்கண்ட ஹதீஸ் உணர்த்துகின்றதே தவிர தொற்று நோய் அறவே கிடையாது என்று கூறவில்லை.

தொற்று நோய் உண்டு என்ற கருத்தில் அமைந்த பல்வேறு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் இதை வலியுறுத்துகின்றன.

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் ஷாம் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். சர்க் எனும் இடத்தை அடைந்த போது, படைத் தளபதிகளான அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களும் அவர்களின் நண்பர்களும் உமர் (ரலி)யைச் சந்தித்து, ஷாம் நாட்டில் கொள்ளை நோய் பரவியுள்ளது என்று தெரிவித்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள், “ஷாம் நாட்டிற்குப் போகலாமா?” என்று ஆரம்ப கால முஹாஜிர்களை அழைத்து, கருத்துக் கேட்ட போது முஹாஜிர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சிலர் போகலாம் என்றும் சிலர் வேண்டாம் என்றும் பதிலளித்தார்கள். பிறகு அன்சாரிகளை அழைத்து கருத்துக் கேட்டார்கள். அவர்களிடமும் இது விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பிறகு மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் ஹிஜ்ரத் செய்து வந்த குறைஷிப் பெரியவர்களை அழைத்து கருத்துக் கேட்டார்கள். அவர்கள் அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கருத்து வேறுபாடின்றி தெரிவித்தனர். ஆகவே உமர் (ரலி) அவர்கள் திரும்பிச் செல்வதென முடிவு எடுத்தார்கள்.

அப்போது தமது தேவை ஒன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அங்கு வந்தார்கள். அவர்கள், “இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும் போது அங்கு கொள்ளை நோய் ஏற்பட்டால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்என்று சொல்ல நான் கேட்டேன்என்று கூறினார்கள். (சுருக்கம்)

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி  5279

கொள்ளை நோய் ஏற்பட்டுள்ள ஊருக்குச் செல்ல வேண்டாம் என்றும், அந்த ஊரில் இருப்பவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டாம் என்றும் இந்த ஹதீஸ் கூறுகின்றது. தொற்று நோய் இல்லை என்றால் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கட்டளையிடத் தேவையில்லை. எனவே தொற்று நோய் உண்டு என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது.

கிருமிகள் மூலமாக நோய் தொற்றிக் கொள்வதை இஸ்லாம் மறுக்கவில்லை. அதே சமயம், இறைவனின் நாட்டப்படியே அந்த நோய் பரவியது என்பதையும் மறுக்கக் கூடாது.

இப்போது பரவுகின்ற இந்தக் காய்ச்சல்கள் காற்றின் மூலம் பரவுகின்றது; கொசுக்கள் மூலம் பரவுகின்றது. அம்மை நோய்க்குத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்த மருத்துவ உலகம், கொசுக்களின் மூலம் பரவுகின்ற மலேரியாவுக்கும் மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. ஆனால் தற்போது பரவி வருகின்ற காய்ச்சல்களுக்குச் சரியான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்காமல் தட்டழிகின்றது; தடுமாறுகின்றது. இதுபோன்ற கட்டங்களில் நாம் சில பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

இந்த நோய்கள் ஏற்பட்டவுடன் மாந்திரீகத்தை நாடக் கூடாது, மருத்துவத்தை நாட வேண்டும் என்று ஏற்கனவே விளக்கியுள்ளோம். மருத்துவத் துறையிலும் சாதாரண மருத்துவர்கள், நோயை ஆராய்ந்து அதற்குரிய மருந்தைக் கொடுக்காமல் சக்தி வாய்ந்த மருந்துகளைக் கொடுத்து விடுகிறார்கள். இது கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது. அதனால் இதற்கு சிறப்பு மருத்துவர்களை நாடுவது நல்லது.

பத்தும் ஒரு குத்தும்

பத்து ரூபாய் கொடுத்தால் மருத்துவர் ஊசி எடுத்து ஒரு குத்து குத்தியதும் நோய் செத்து விட்டது என்று நாம் திரும்பி விடுகின்றோம். தற்போதுள்ள இந்த சீசனில், இது என்ன காய்ச்சல் என்று கவனத்தைச் செலுத்த அவர்கள் தயாராக இல்லை. காசில் மட்டுமே குறியாகவும் வெறியாகவும் உள்ள மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துகள் உடனடியாகப் பக்க விளைவை ஏற்படுத்தி விடுகின்றன.

அண்மையில் நமது ஜமாஅத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவரிடம் காட்டிய போது அவர் வழக்கம் போல் ஊசி போட்டு அனுப்பி விட்டார். ஆனால் ஓரிரு நாளில் அந்தப் பெண்ணுக்குப் பார்வை மங்க ஆரம்பித்து விட்டது. பார்வை பறி போய் விட்டது என்று அவரும் அவரது குடும்பத்தாரும் முடிவு செய்து கலங்க ஆரம்பித்தனர். பெரிய கண் மருத்துவமனை ஒன்றை நாடிய போது கண் விழித் திரையில் பாதிப்பில்லை என்ற விபரம் தெரிந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

ஆன்டி பயாடிக் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்தில் ஏதோ ஒன்று தான் இந்தப் பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்று கண் மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே கண்ட கண்ட டாக்டர்களிடம் சென்று ஏமாந்து விடாமல் ஸ்பெஷலிஸ்ட்டுகளிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

மூளைக் காய்ச்சல்

குழந்தைகளுக்குக் காய்ச்சல் ஏற்பட்டால் அதுவும் திரும்பத் திரும்ப வந்தால் அப்போது மெத்தனமாக இருக்கக் கூடாது. காரணம், அது மூளைக் காய்ச்சலாக இருக்கலாம். எனவே இந்தச் சந்தர்ப்பங்களில் நாம் உரிய சிறப்பு மருத்துவரை நாட வேண்டும்.

சிக்குன் குனியா

இந்தக் காய்ச்சல் ஏற்பட்டவர்கள் மிகக் கடுமையான மூட்டு வலியால் பாதிக்கப்படுகின்றனர். மாதக் கணக்கில் நடக்க முடியாமல் அவதிப்படுபவர்களும் உண்டு. இதற்குச் சித்த மருத்துவம் சிறந்த முறையில் கைகொடுக்கின்றது என்று அனுபவமுள்ள மருத்துவர்கள் (ஆங்கில மருத்துவர்களும்) கூறுகின்றனர். நிலவேம்புக் குடிநீர் என்ற கசாயப் பொடி மருந்துக் கடைகளில் கிடைக்கின்றது. இது சிக்குன்குனியாவுக்குச் சிறந்த நிவாரணியாக உள்ளது. பக்க விளைவுகள் இல்லாதது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தப் பொடியைக் கசாயமாகக் காய்ச்சிக் குடித்தால் அது நோயின் கடுமையான தாக்குதலிலிருந்து காக்கின்றது.

சுகாதாரமான சூழல்

சிக்குன்குனியா போன்றவை கொசு மூலம் பரவுவதால் நமது வீட்டில் கொசுக்கள் தங்குவதற்கு வழிவகுக்கக் கூடாது. கொட்டாங்கச்சி, நல்ல தண்ணீர் போன்றவை சிக்குன்குனியாவைப் பரப்பும் கொசுக்களின் குடியிருப்புக்கள். இவற்றில் கொசுக்கள் தங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். படுக்கும் போது நல்ல கனமான ஆடை அணிந்து கொள்ள வேண்டும். கால்களில் காலுறை அணிந்து கொள்ள வேண்டும். கொசு வலை போட்டுக் கொண்டு படுக்க வேண்டும்.

கழிவு நீர், குப்பைகள் போன்றவை தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில், திறந்த வெளியில் மலஜலம் கழிக்கக் கூடாது. குழந்தைகளைக் கண்ட இடத்தில் அசுத்தம் செய்ய அனுமதிக்கக் கூடாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சாபத்திற்குரிய இரு செயல்களைத் தவிர்த்து விடுங்கள்என்று கூறினார்கள். மக்கள், “சாபத்திற்குரிய அவ்விரு செயல்கள் என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள்.

அதற்கு, “மக்களின் நடை பாதையில், அல்லது அவர்களின் (ஓய்விடங்களான) நிழல்களில் மலம் கழிப்பது தான்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (தமிழாக்கம் எண்: 448)

சாபத்திற்குரிய இந்தக் காரியத்தை ஒரு முஸ்லிம் கண்டிப்பாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

இவை தனி நபர்கள் தங்களை இந்தக் கொசுக் கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் சூழலும் பாதுகாப்பு ஏற்பாடுகளுமாகும். அரசாங்கமும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

  1. திறந்த வெளியில் மல, ஜலம் கழிக்கும் அவல நிலையை உடனே தடை செய்ய வேண்டும். பேருந்து நிலையங்களில் அமைந்துள்ள கழிப்பிடங்களில் கட்டணம் வசூலித்தும் சரியான முறையில் அவற்றைப் பராமரிக்காததால் மக்கள் திறந்த வெளியில் மலஜலம் கழித்து அசுத்தப்படுத்துகின்றனர். பேருந்து நிலையத்திற்குள் நுழைவதற்கு முன் அங்குள்ள துர்நாற்றம் நமது மூக்கில் நுழைந்து அவஸ்தைப்படுத்துகின்றது. இதற்குச் சரியான நடவடிக்கை எடுத்து சுகாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.
  2. தேங்கிக் கிடக்கும் சாக்கடைகளுக்குப் போக்கிடம் ஏற்படுத்த வேண்டும்.
  3. மலையளவு குவிந்து, குடலைக் குமட்டும் குப்பை மேட்டுக் கோபுரங்களைக் களைய வேண்டும்.
  4. இவற்றில் உறைந்து வாழ்கின்ற பன்றிகளை ஒழிக்க வேண்டும்.

இதுபோன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்றால் உயிர்ப்பலிகள் ஒரு தொடர்கதையாகவே ஆகி விடும்.

தேங்கி நிற்கும் சாக்கடைகள், குவிந்து கிடக்கும் குப்பை மேடுகள் போன்றவை தான் கொசுக்களை உரம் போட்டு வளர்க்கின்ற பண்ணைகளாகத் திகழ்கின்றன. இவற்றில் மேயும் பன்றிகளின் மேல் உட்கார்ந்து உறிஞ்சுகின்ற இரத்தத்தைப் பச்சிளம் குழந்தைகளுக்குப் பாய்ச்சுகின்ற போது அந்தக் குழந்தைகளுக்கு மூளைக் காய்ச்சல் ஏற்படுகின்றது. அந்த மூளைக் காய்ச்சலுக்குக் குழந்தைகள் அதிகம் பலியாகி விடுகின்றனர்.

இந்த உண்மை அரசாங்கத்திற்குத் தெரிந்திருந்தும் பன்றிகளை ஒழிக்காமல் அது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது. இந்த அலட்சியத்தால் தான் சுகாதாரக் கேடு ஏற்படுகின்றது.

இதுபோன்ற சுகாதார விஷயங்களில் சமரசம் செய்து கொள்ளும் பஞ்சாயத்துக்கள், ஒன்றியங்கள், நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள் போர்க்கொடி தூக்கி இந்தச் சுகாதாரக் கேட்டை ஒழிக்கப் பாடுபட வேண்டும். இப்படித் தனி மனிதர்களும் அரசாங்கமும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நோய்கள் பரவாமல் காப்போமாக!