தூதர் வழியில் தூய ஹஜ்

தூதர் வழியில் தூய ஹஜ்

ஹாஜிகள் மக்காவை நோக்கிப் பயணப்படுகின்ற ஹஜ் காலம். இதையொட்டி ஹாஜிகளுக்காக ஆங்காங்கே ஹஜ் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்தப் பயிற்சி வகுப்புகள் அனைத்தும் மத்ஹபுச் சட்ட அடிப்படையில் அமைந்தவையாகும்.

தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களில் ஷாபி, ஹனபி என்று கூறுபோட்டது போன்று ஹஜ்ஜிலும் ஷாபி, ஹனபி என்று கூறு போட்டு மார்க்கத்தைக் கேலிக்கூத்தாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் நடத்துகின்ற இந்தப் பயிற்சி வகுப்புகளில், தவாஃப் செய்யும் போது, ஷாபி மத்ஹபினர் ஹனபியாக மத்ஹப் மாறிக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர்.

காரணம், ஷாபி மத்ஹபில் சம்சாரம் ஒரு மின்சாரம் என்பதால் தான். ஷாபி மத்ஹபில் மனைவியைத் திரையின்றி தொட்டு விட்டால் உளூ முறிந்து விடும். மில்லியன் கணக்கான முஸ்லிம்கள், பிரம்மாண்டமான அரவை எந்திரத்தில் உருள்கின்ற மாவுத் துளிகளாக வலம் வருவார்கள்.

இந்தக் கூட்டத்தில் அருகில் வரும் மனைவியைத் தொட்டால் உளூ முறிந்து விடும் என்று உதறி விட்டால் அவ்வளவு தான். மனைவியைத் தேடி அலைய வேண்டிய அபாயம் ஏற்படும். இதனால் அடுத்தடுத்துத் தொடர வேண்டிய வணக்கங்கள் தடைப்பட்டு, தடங்கலாகி விடும்.

இந்த இக்கட்டை விட்டுத் தப்பிப்பதற்காகவே ஷாபி மத்ஹபிலிருந்து ஹனபி மத்ஹபுக்கு மதம் மாற்றும் படலத்தை அவலத்தை இந்த ஆலிம்கள் அரங்கேற்றுகின்றனர்.

மத்ஹபு அடிப்படையில் நடத்தப்படும் ஹஜ் வகுப்புகளில் நடைபெறும் கூத்துக்களுக்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.

உங்களது ஹஜ் மற்றும் உம்ரா செய்யும் வழிமுறையை என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் 2286

ஹஜ் என்பது பெரும்பாலானோருக்கு வாழ்நாளில் ஒருமுறை கிடைக்கின்ற வணக்கமாகும். இது ஓர் அருட்கொடை. இந்த அருட்கொடையைப் பெற்றவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியது போன்று, அவர்கள் காட்டிய வழியில் ஹஜ் செய்து அதற்குரிய பாக்கியத்தையும் பலனையும் பெறுவதற்குப் பதிலாக மத்ஹபு என்ற பெயரில் செயல்பட்டுத் தங்கள் வணக்கத்தைப் பாழாக்கிக் கொள்கின்றனர்.

இது மட்டுமின்றி, வழிகாட்டிகளாகச் செல்லும் ஆலிம்கள், அவரவர்கள் மனதிற்குத் தக்கபடி அடித்து விடுகின்ற, அளந்து விடுகின்ற தீர்ப்புகளைக் கேட்டு, அதன்படி செயல்பட்டு வாழ்நாளின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த வணக்கத்தைப் பாழடித்துப் பயனற்றதாக்கி விடுகின்றனர்.

இந்த அறியாமையைப் போக்கும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளைகள் தத்தமது பகுதிகளில், “நபிவழியில் நம் ஹஜ்’ என்ற பெயரில் ஹஜ் விளக்க வகுப்புகள் நடத்தி, ஹஜ் செய்முறையை விளக்கி வருகின்றனர். இதில் சுன்னத் வல்ஜமாஅத்தில் உள்ளவர்களும் பலர் பங்கெடுத்துப் பயனடைகின்றனர்.

நபி (ஸல்) அவர்களின் ஹஜ்ஜை இஸ்லாமிய சமுதாயத்திற்கு அறிமுகம் செய்து, அமுல்படுத்தும் விதமாக ஏகத்துவம் மாத இதழ், நபி (ஸல்) அவர்களின் ஹஜ்ஜை பல்வேறு தலைப்புகளில் வெளியிட்டுள்ளது.

இதில் மற்றொரு மைல் கல்லாக, தூதர் வழியில் தூய ஹஜ் என்ற தலைப்பில், ஹஜ்ஜின் நிரல்கள் மற்றும் நினைவுக் குறிப்புகளை இந்த இதழில் வழங்கியிருக்கின்றோம். இதைப் பயன்படுத்திப் பயன்பெறுமாறு ஹாஜிகளையும், மற்றவர்கள் இதை ஹாஜிகளுக்குப் பரிசளித்துப் பரப்புமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

ஹஜ் நினைவுக் குறிப்பேடு

அல்லாஹ்வின் கிருபையால் ஏகத்துவம் மாத இதழ், ஹஜ் தொடர்பாக மக்களுக்குப் பயன்படுகின்ற பல்வேறு ஆக்கங்களை, பல்வேறு தலைப்புகளில் ஹஜ் மாதங்களையொட்டி அளித்திருக்கின்றது.

நபி (ஸல்) அவர்களின் ஹஜ் நேர்முக வர்ணனை, பெண்கள் ஹஜ் செய்யும் முறை, ஹஜ் விளக்கக் கையேடு ஆகியவை அதில் முக்கியமானவையாகும்.

உங்களது ஹஜ் மற்றும் உம்ரா செய்யும் வழிமுறையை என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2286

நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி, இந்த மாத இதழில் ஹஜ் வணக்கங்கள் அனைத்தையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்தது போன்று வரிசைப்படுத்தி, எண் குறிப்பிட்டுத் தந்துள்ளோம்.

ஹஜ் செய்பவர் ஆரம்பம் முதல் இறுதி வரை அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த நிரல்களைப் பார்த்துப் பார்த்துச் செய்கின்ற வகையில் இந்த நினைவுக் குறிப்பேட்டை ஏகத்துவம் இதழ் தருகின்றது.

இந்நிரல்களில் இடம்பெறுகின்ற வணக்கங்களில் குறிப்பிட்ட சில வணக்கங்களை விட்டு விட்டால் ஹஜ் நிறைவேறாது. அந்த வணக்கங்களை அந்தந்த இடங்களில் அடையாளப்படுத்தியிருக்கிறோம்.

இந்த ஹஜ் நினைவுக் குறிப்பேடு அல்பானி அவர்கள் எழுதிய “ஹஜ், உம்ரா வணக்கங்கள்’ என்ற அரபு நூலைத் தழுவலாகக் கொண்டது என்பதையும் இங்கே தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

அல்பானி அவர்களுக்கும் நமக்கும் பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடு உண்டு. எனவே, இந்த நூலில் ஹதீஸ் அடிப்படையில் எது சரி என்று நாம் கண்டோமோ அவற்றை மட்டுமே இங்கு மொழிபெயர்த்துத் தருகிறோம். உடன்பாடில்லாத விஷயங்களை விட்டு விடுகின்றோம்.

பொதுவாக மத்ஹபு சட்ட நூல்கள் தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற வணக்கங்களில் சட்டங்களைச் சொல்கின்ற போது கட்டளைகளையும் தடைகளையும் மட்டும் சொல்வார்கள். அதற்கான ஆதாரங்களைச் சொல்ல மாட்டார்கள்.

உதாரணமாக, தொழுகையில் தக்பீர் கட்ட வேண்டும்; வஜ்ஜஹ்த்து ஓத வேண்டும்; தொழுகையில் பேசக் கூடாது என்று சொல்வார்கள். ஹஜ்ஜின் போது தவாஃப் செய்ய வேண்டும்; தாம்பத்தியத்தில் ஈடுபடக்கூடாது என்று சட்டங்களையும் தடைகளையும் சொல்வார்கள். இதற்கான ஆதாரங்கள் அந்த மத்ஹபு நூற்களில் இருக்காது.

தவ்ஹீத் ஜமாஅத் மக்கள் மத்தியில் ஒரு சட்டத்தைச் சொல்லும் போதும் சம்பவங்களை, சரித்திரங்களைச் சொல்லும் போதும் அவற்றுக்கான ஆதாரங்களையும் சேர்த்துச் சொல்கின்ற முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இந்த நினைவுக் குறிப்பேட்டைப் பொறுத்த வரை, ஆதாரங்களுடன் சேர்த்துக் குறிப்பிட்டால் அது ஹஜ் வணக்கங்களின் வரிசையைப் பாதிக்கக்கூடாது என்பதற்காக ஆதாரங்களைத் தனியாகக் குறிப்பிட்டுள்ளோம். அதாவது சட்டங்களை வரிசையாகக் குறிப்பிட்டு விட்டு, ஆதாரங்களை அடிக்குறிப்பாக வெளியிட்டுள்ளோம்.

இந்தியாவிலிருந்து, குறிப்பாகத் தமிழ்நாட்டிலிருந்து ஹஜ் செய்யச் செல்வோர் தமத்துஃ என்ற முறையிலேயே செய்கின்றனர்.

அதன்படி முதலில் உம்ரா செய்து, இஹ்ராமைக் களைந்து விட வேண்டும். பின்னர் மீண்டும் ஹஜ்ஜுக்காகத் தனியாக இஹ்ராம் கட்டி ஹஜ் செய்வது தான் தமத்துஃ எனப்படுகின்றது.

தமத்துஃ முறையில் உம்ராவின் வணக்க நிரல்களை வரிசையாகப் பார்ப்போம். இந்த நிரல்களைப் படிக்கும் போது தமத்துஃ ஹஜ் என்றால் என்னவென்பது விளங்கி விடும்.

உம்ரா – நிகழ்ச்சி நிரல்

இஹ்ராம்

  1. மாதவிலக்கு, பிரசவ இரத்தப் போக்கு உள்ள பெண்கள் உட்பட (ஹஜ் மற்றும்) உம்ரா செய்வோர் அனைவரும் இஹ்ராமுக்கு முன் குளிக்க வேண்டும்.
  2. ஆண்கள் அணிய வேண்டியவை: தையல் இல்லாத வேஷ்டி, மேல் துண்டு, காலில் செருப்பு
  3. ஆண்கள் அணியக் கூடாதவை:

அ) தொப்பி

ஆ) தலைப்பாகை மற்றும் தலையுடன் ஒட்டிய மறைப்புகள்

இ) சட்டை

ஈ) கால் சட்டை

எ) வர்ஸ் எனும் சாயம் தோய்க்கப்பட்ட மஞ்சள் ஆடை

ஏ) குங்குமம் சாயமிடப்பட்ட ஆடை.

  1. பெண்கள் அணியக் கூடாதவை:

அ) முகத்தை மறைப்பது கூடாது.

ஆ) கைகளுக்கு உறை அணியக் கூடாது.

  1. இஹ்ராமுக்குரிய எல்லைக்கு வரும் முன்னரே வீட்டில் வைத்து இஹ்ராம் ஆடைகளை அணிந்து கொள்ளலாம். கார் அல்லது விமானம் போன்ற வாகனம் இஹ்ராம் எல்லையை அடைகின்ற போது ஆடைகளை உடனே அணிய இயலாது. ஏற்கனவே இஹ்ராம் ஆடையை அணிந்திருந்தால் எல்லையை அடைந்ததும் “லப்பைக்க உம்ரத்தன்’ (உம்ரா செய்கிறேன்) என்று கூறி இஹ்ராமுக்குள் நுழைந்து விடலாம்.
  2. இஹ்ராமின் போது தடுக்கப்பட்டவை:

அ) திருமணம் முடிக்கவோ, பெண் பேசவோ கூடாது.

ஆ) மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடக்கூடாது. வீண் விவாதங்களிலோ,  குற்றச் செயல்களிலோ ஈடுபடக்கூடாது.

இ) வேட்டையாடக்கூடாது.

ஈ) மயிர்களை நீக்கக்கூடாது.

உ) நறுமணம் பூசக்கூடாது.

  1. இஹ்ராம் கட்டும் போது போது நறுமணம் பூசியிருந்தால் அந்த நறுமணம் தொடர்வதில் தவறில்லை.

எல்லைகள்

  1. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரக்கூடியவர்களுக்குரிய எல்லைகளை நபி (ஸல்) அவர்கள் நிர்ணயித்துள்ளார்கள். இதன்படி இந்தியாவிலிருந்து ஹஜ்ஜுக்குச் செல்பவர்களுக்கு ஸஃதிய்யா என்றழைக்கப்படும் யலம்லம் ஆகும்.
  2. உம்ராவுக்காக இஹ்ராம் கட்ட விரும்பும் போது, “லப்பைக்க உம்ரத்தன்’ என்று வாயால் சொல்லிக் கொள்ள வேண்டும்.
  3. அச்சத்தினால் அல்லது ஏதேனும் நோயினால் ஹஜ் அல்லது உம்ராவுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று கருதுபவர்கள் முன் நிபந்தனையிட்டு, “இறைவா! நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்’ என்று சொல்லி இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம். இவ்வாறு செய்பவர்கள் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால் அவர் பலிப்பிராணி கொடுக்காமல் தனது உம்ரா அல்லது ஹஜ்ஜிலிருந்து உடனே விடுபட்டுக் கொள்ளலாம். வரும் ஆண்டு அவர் ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவர் செய்கின்ற ஹஜ் முதன்முதலில் செய்கின்ற ஹஜ்ஜாக இருந்தால் அந்த ஹஜ்ஜை வரும் ஆண்டு நிறைவேற்றியாக வேண்டும்.
  4. இஹ்ராமுக்காகத் தனித் தொழுகை ஏதுமில்லை. கடமையான தொழுகை நேரத்திற்கு ஏற்ப அவரது இஹ்ராம் அமைந்து விட்டால் தொழுது விட்டு இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம்.
  5. மதீனாவிலிருந்து வருபவர்களுக்கு துல்ஹுலைபா எல்லையாகும். அங்கு வருபவர்கள் மட்டும் இரண்டு ரக்அத்துக்கள் தொழுது கொள்ள வேண்டும். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் தொழுதுள்ளார்கள்.

தல்பியா

  1. இஹ்ராம் கட்டும் போது கிப்லாவை நோக்கி நின்று கொண்டு தல்பியா சொல்ல வேண்டும்.
  2. நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த தல்பியா இது தான்.

லப்பைக், அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல்முல்க, லாஷரீக லக

  1. தல்பியாவை உரத்துச் சொல்ல வேண்டும்.
  2. தல்பியாவை பெண்களும் சப்தமிட்டுச் சொல்லலாம். காரணம் தல்பியாவைப் பற்றிச் சொல்கின்ற ஹதீஸில் ஆண், பெண் என்று பிரிக்காமல் பொதுவாகவே அமைந்திருக்கின்றது.
  3. மக்காவிற்கு வந்ததும் தல்பியாவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மக்காவில் குளிப்பது

  1. மக்காவில் நுழைவதற்கு முன்பு குளிப்பதற்கு வசதியிருந்தால் குளித்துக் கொள்ள வேண்டும்.
  2. மக்காவில் நுழையும் போது வசதிப்பட்டால் பகலில் நுழைய வேண்டும். நபி (ஸல்) அவர்களிடம் இதற்கு முன்மாதிரி இருக்கின்றது.
  3. மக்காவில் நுழையும் போது முஅல்லாத் என்று அழைக்கப்படும் மேற்புறம் வழியாக உள்ளே நுழைய வேண்டும்.
  4. கஅபாவில் நுழையும் போது மற்ற பள்ளிகளைப் போன்றே வலது காலை எடுத்து வைத்து நுழைய வேண்டும். மற்ற பள்ளிகளில் ஓதும் துஆவான, அல்லாஹும்மஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மத்திக்க என்ற துஆவை ஓதிக் கொள்ள வேண்டும்.

தவாஃபுல் குதூம்

  1. புனிதப் பள்ளிக்குள் நுழைந்ததும் ஹஜ்ருல் அஸ்வதைக் கையால் தொட்டு, அந்தக் கையை முத்தமிட்டுக் கொள்ள வேண்டும்.
  2. ஹஜ்ருல் அஸ்வதைக் கையால் தொட முடியவில்லை எனில் தொடுவது போல் சைகை செய்து கொள்ள வேண்டும்.
  3. கஅபாவை தனது இடது புறமாக அமையச் செய்து, ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிட்டுத் துவங்கி, ஹஜ்ருல் அஸ்வத் முடிய ஒரு சுற்று என்ற வீதம் 7 சுற்றுக்கள் சுற்ற வேண்டும்.
  4. தவாஃபின் ஒவ்வொரு சுற்றின் போதும் ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிட வேண்டும்.
  5. ஒவ்வொரு சுற்றின் போதும் ஹஜ்ருல் அஸ்வதிற்கு வந்ததும் தக்பீர் சொல்ல வேண்டும்.
  6. ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிடுவதில் ஏராளமான சிறப்புக்கள் உள்ளன.
  7. தவாஃப் செய்யும் போது வலது புஜத்தைத் திறந்து இடது புஜத்தை மூடிக் கொள்ள வேண்டும். ஆடையின் இரு விளிம்புகளையும் இடது கையின் தோள் புஜத்திற்குக் கொண்டு வர வேண்டும்.
  8. ஏழு சுற்றுக்களில் முதல் 3 சுற்றுக்களை சற்று வேகமாகச் சுற்ற வேண்டும். மீதிச் சுற்றுக்களில் நடந்தே செல்ல வேண்டும்.
  9. கஅபாவின் மூன்றாவது மூலையில் அமைந்திருக்கின்ற ருக்னுல் யமானிக்கு வரும் போது அதைக் கையால் தொட்டு முத்தமிட வேண்டும். கையால் தொட முடியவில்லை என்றால் சைகை செய்யத் தேவையில்லை.
  10. ருக்னுல் யமானிக்கும் ஹஜ்ருல் அஸ்வதுக்கும் இடையே வரும் போது, “ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்” என்ற வசனத்தை ஓதிக் கொள்ள வேண்டும்.
  11. கஅபாவின் மற்ற இரு மூலைகளையும் முத்தமிடக் கூடாது. ஏனெனில் நபி (ஸல்) அவர்களிடமிருந்து இது தொடர்பாக எந்தவொரு ஹதீசும் வரவில்லை.
  12. தவாஃப் செய்வதற்கென்று எந்தவொரு தனிப்பட்ட திக்ரும் கிடையாது.
  13. தவாஃபின் போது பேசுவது தவறில்லை.
  14. மாதவிலக்கான பெண்கள் தவாஃப் செய்வதற்கு அனுமதியில்லை.
  15. ஏழாவது சுற்றை முடித்தவுடன் தன்னுடைய வலது புறத்தை மூடிக் கொண்டு மகாமு இப்ராஹீமுக்குச் சென்று, “வத்தஹிதூ மின் மகாமி இப்ராஹீம முஸல்லா” என்று ஓத வேண்டும்.
  16. மகாமு இப்ராஹீமை தனக்கும் கஅபாவுக்கும் இடையில் இருக்குமாறு அமைத்துக் கொண்டு, அந்த இடத்தில் இரண்டு ரக்அத்துக்கள் தொழ வேண்டும்.
  17. அந்த இரு ரக்அத்துக்களில் குல் யாஅய்யுஹல் காஃபிரூன், குல்ஹுவல்லாஹு அஹத் அத்தியாயங்களை ஓத வேண்டும்.
  18. தொழுது முடித்ததும் ஜம்ஜம் நீரை நோக்கிச் சென்று அதைப் பருகிக் கொள்ள வேண்டும்.
  19. ஜம்ஜம் நீரைத் தனது தலையிலும் சிறிது ஊற்றிக் கொள்ள வேண்டும்.
  20. பிறகு மீண்டும் ஹஜ்ருல் அஸ்வதுக்கு வந்து அதை முத்தமிட வேண்டும்.

ஸஃபா, மர்வாவில் ஸயீ செய்தல்

  1. பிறகு ஸஃபா, மர்வாவிற்கு வர வேண்டும். அங்கு வந்து, “இன்னஸ் ஸஃபா வல்மர்வத்த மின் ஷஆரில்லாஹ்’ என்ற வசனத்தை ஓத வேண்டும்.

“அல்லாஹ் முதலில் ஸஃபாவைச் சொல்லியிருப்பதால் ஸஃபாவைக் கொண்டு துவங்குகின்றேன்’ என்று கூற வேண்டும்.

  1. ஸஃபாவிலிருந்து துவங்கும் விதமாக அதன் மீது ஏறி கஅபாவைப் பார்க்க வேண்டும்.
  2. கஅபாவை நோக்கி லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறவேண்டும். அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கூற வேண்டும்.
  3. லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வ லஹுல் ஹம்து. வ ஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு, அன்ஜஸ வஅதஹு, வ நஸர அப்தஹு. வ ஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹ்

என்ற திக்ரை மூன்று தடவை கூற வேண்டும்.

  1. இந்த திக்ருகளுக்கிடையே துஆவும் செய்து கொள்ள வேண்டும்.
  2. இதன் பின் ஸஃபா, மர்வாவுக்கு இடையே ஓடுவதற்காக இறங்க வேண்டும்.
  3. ஸஃபாவிலும் மர்வாவிலும் பச்சை நிற விளக்கு அடையாளமிடப்பட்ட இடத்தை சற்று வேகமாகக் கடக்க வேண்டும்.
  4. மர்வாவிற்கு வந்து அதில் ஏறி, கிப்லாவை முன்னோக்கி ஸஃபாவில் செய்தது போன்ற திக்ருகள், துஆக்களை இங்கும் அப்படியே செய்ய வேண்டும்.
  5. பிறகு ஸஃபாவை நோக்கித் திரும்ப வர வேண்டும். இது இரண்டாவது சுற்றாகும்.
  6. பின்னர் மீண்டும் மர்வாவுக்குச் செல்ல வேண்டும். இப்படியே கடைசிச் சுற்று மர்வாவில் முடிகின்ற விதமாக ஏழு சுற்றுக்கள் சுற்ற வேண்டும்.
  7. ஏழாவது சுற்று முடிவடைந்ததும் தன்னுடைய தலைமுடியைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

இத்துடன் உம்ரா நிறைவடைகின்றது.

இதன் பிறகு துல்ஹஜ் பிறை 8ல் ஹஜ்ஜுக்குரிய இஹ்ராம் கட்ட வேண்டும். அதுவரை இஹ்ராமின் போது தடுக்கப்பட்ட அனைத்தும் இப்போது அனுமதிக்கப்படுகின்றது. மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடுவது உட்பட அனைத்தும் இருவருக்கும் அனுமதிக்கப்படுகின்றது. இந்த அனுமதி துல்ஹஜ் பிறை 8ல் இஹ்ராம் கட்டுகின்ற வரை நீடிக்கும்.

ஹஜ் தமத்துஃ

மேற்கண்டவாறு உம்ராவை முடித்து விட்டு, இஹ்ராமின் போது தடுக்கப்பட்ட காரியங்களை, ஹஜ்ஜுக்குரிய இஹ்ராம் கட்டுகின்ற வரை அனுபவிக்கும் முறைக்குப் பெயர் தான் ஹஜ் தமத்துஃ (சுகம் அனுபவிக்கும் ஹஜ்) ஆகும்.

ஹஜ் கிரான்

ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் எந்தவொரு இடைவெளியும் இல்லாமல் அப்படியே அதே இஹ்ராமிலேயே ஹஜ் முடிகின்ற வரை தொடர்ந்து நீடிப்பதற்கு ஹஜ் கிரான் என்று பெயர். கிரான் என்றால் சேர்த்தல் என்று பொருள். ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்துச் செய்வதால் இந்தப் பெயர் வழங்கப்படுகின்றது.

கிரான் முறையில் ஹஜ் செய்பவர்கள் உம்ரா செய்யும் போது ஸஃபா, மர்வாவுக்கு இடையில் ஸயீ செய்திருந்தால் ஹஜ்ஜின் போது ஸயீ செய்யத் தேவையில்லை. அல்லது உம்ராவின் போது ஸயீ செய்யாமல் ஹஜ்ஜின் போது மட்டும் செய்து கொள்ளலாம்.

தமத்துஃ, கிரான் ஆகிய முறைகளில் எந்த முறையில் ஹஜ் செய்தாலும் அவர்கள் குர்பானி கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்க இயலாதவர்கள் மக்காவில் 3 நோன்புகளும், ஊருக்குத் திரும்பிய பின் 7 நோன்புகளும் நோற்க வேண்டும்.

ஹஜ் இஃப்ராத்

ஹஜ்ஜை மட்டும் தனித்துச் செய்வதற்குப் பெயர் இஃப்ராத் ஆகும். இவ்வகை ஹஜ் செய்பவர்கள் உம்ரா செய்ய மாட்டார்கள். அதனால் அவர் குர்பானி கொடுக்கவும் தேவையில்லை. இஃப்ராதுக்கும் கிரானுக்கும் உள்ள வித்தியாசம் நிய்யத் மற்றும் குர்பானி ஆகியவற்றைத் தவிர வேறு வித்தியாசமில்லை.

உம்ரா ஆதாரங்கள்

  1. நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டோம். “துல்ஹுலைஃபா’ எனும் இடத்திற்கு நாங்கள் வந்து சேர்ந்த போது, (அபூபக்ர் (ரலி) அவர்களின் துணைவியார்) அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்களுக்கு முஹம்மத் பின் அபீபக்ர் (ரலி) பிறந்தார். உடனே அஸ்மா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அபூபக்ர் (ரலி) அவர் களை) அனுப்பி “நான் எப்படி (இஹ்ராம்) கட்ட வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ குளித்துவிட்டு, (பிரசவப்போக்கு இருப்பதால்) ஒரு துணியால் கச்சை கட்டிக்கொண்டு, இஹ்ராம் கட்டிக்கொள்” என்று கூறியனுப்பினார்கள். (முஸ்லிம் 2137)
  2. “இஹ்ராம் கட்டியவர் எதை அணியலாம்?” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “இஹ்ராம் கட்டியவர் சட்டையையோ, தலைப்பாகையையோ, தொப்பியையோ, கால்சட்டையையோ அணிய வேண்டாம். குங்குமச்சாயம், வர்ஸ் (எனும் மஞ்சள்) சாயம் தோய்க்கப்பட்ட ஆடைகளையும் அணிய வேண்டாம். செருப்பு கிடைக்காவிட்டால் தவிர காலுறைகளையும் அணிய வேண்டாம். அவ்வாறு காலுறைகளை அணியும் போது கரண்டைக்குக் கீழே இருக்குமாறு மேற்பகுதியை வெட்டி விடுங்கள்” என்று விடையளித்தார்கள். (புகாரி 134)
  3. ஒரு மனிதர் இஹ்ராம் கட்டியிருக்கும் போது அவரது வாகனம் அவரைக் கீழே தள்ளியது. உடனே அவர் இறந்து விட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “தண்ணீராலும் இலந்தை இலையாலும் அவரைக் குளிப்பாட்டுங்கள்! அவரது இரு ஆடைகளில் அவரைக் கபனிடுங்கள். அவரது உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம். அவரது முகத்தையோ, தலை முடியையோ மூட வேண்டாம். ஏனெனில் அவர் கியாமத் நாளில் “தல்பியா’ கூறியவராக எழுப்பப்படுவார்” என்று கூறினார்கள். (நூல்: புகாரி 1265)

“யாருக்குச் செருப்பு கிடைக்கவில்லையோ, அவர் காலுறைகளை அணிந்து கொள்ளட்டும். யாருக்கு வேட்டி கிடைக்கவில்லையோ, அவர் கால் சட்டைகளை அணிந்து கொள்ளட்டும்” (நூல்: புகாரி 1841)

  1. “இஹ்ராம் கட்டிய பெண் தனது முகத்தை மறைக்க வேண்டாம். கையுறைகளையும் அவள் பயன்படுத்த வேண்டாம்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 1838)
  2. அ) “இஹ்ராம் கட்டியவர் திருமணம் செய்யக் கூடாது. பிறருக்குத் திருமணம் செய்து வைக்கவும் கூடாது. பெண் பேசவும் கூடாது” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 2522)
  3. ஆ) ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும். அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன் மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டாவாதம் புரிவதோ கூடாது. (அல்குர்ஆன் 2:197)
  4. இ) உங்களுக்கும், ஏனைய பயணிகளுக்கும் பயன்படும் பொருட்டு கடலில் வேட்டையாடுவதும், அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. இஹ்ராமுடன் இருக்கும் போது நீங்கள் தரையில் வேட்டையாடுதல் தடுக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள். (அல்குர்ஆன் 5:96)
  5. ஈ) ஹுதைபிய்யா சமயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து “உன் தலையில் உள்ள பேன்கள் உனக்குத் தொல்லை தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். “அப்படியானால் தலையை மழித்து விட்டு ஒரு ஆட்டை அறுப்பீராக! அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அல்லது மூன்று “ஸாவு’ பேரிச்சம்பழங்களை ஆறு ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுப்பீராக!” என்றார்கள். (நூல்: புகாரி 1814)
  6. உ) புகாரி 1265வது ஹதீஸில் “அவருக்கு நறுமணம் பூசாதீர்கள். ஏனெனில், அவர் மறுமை நாளில் தல்பியா கூறியவராக எழுப்பப்படுவார்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து இதை நாம் அறியலாம்.
  7. நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டும் போது என்னிடம் உள்ள நறுமணத்தில் மிகச் சிறந்ததைப் பூசி விட்டேன். (நூல்: புகாரி 5928)
  8. மதீனாவாசிகளுக்கு “துல்ஹுலைஃபா’ என்ற இடத்தையும், ஷாம் (சிரியா) வாசிகளுக்கு “ஜுஹ்ஃபா’ என்ற இடத்தையும், “நஜ்து’ வாசிகளுக்கு “கர்னுல் மனாஸில்’ என்ற இடத்தையும், “யமன்’வாசிகளுக்கு “யலம்லம்’ (இப்போதைய ஸஃதியா) என்ற இடத்தையும் இஹ்ராம் கட்டும் இடங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தார்கள். “இந்த எல்லைகள் இந்த இடங்களில் உள்ளவர்களுக்கும், இந்த இடங்களில் வசிக்காமல் இந்த இடங்கள் வழியாக ஹஜ், உம்ராவை நாடி வரக்கூடியவர்களுக்கும் இஹ்ராம் கட்டும் இடங்களாகும். இந்த எல்லைகளுக்கு உட்பட்டு வசிப்பவர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடமே எல்லையாகும். மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்ட வேண்டும்” எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 1524)
  9. நபி (ஸல்) அவர்கள் “லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்” என்று கூறி ஹஜ், உம்ராவுக்காக தல்பியா கூறியதை நான் செவியுற்றுள்ளேன். (நூல்: முஸ்லிம் 2194, 2195)
  10. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தந்தையின் சகோதரர் புதல்வியான) ளுபாஆ பின்த் ஸுபைர் (ரலி) அவர்கüடம் சென்று, “நீ ஹஜ் செய்ய விரும்புகிறாய் போலும்!” என்றார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்னும் நோயாüயாகவே இருக்கிறேன்” என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவரிடம், “நீ முன் நிபந்தனையிட்டு ஹஜ்ஜுக்காக “இஹ்ராம்’ கட்டி, இறைவா! நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்ய முடியாத வாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்” என்று சொல்லிவிடு!” எனக் கூறினார்கள். (நூல்: புகாரி 5089)
  11. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கிருந்த (துல்ஹுலைஃபா) பள்ளிவாசலில் (லுஹர்) தொழுதுவிட்டு, (இஹ்ராம் அணிந்து) “கஸ்வா’ எனும் ஒட்டகத்தில் ஏறினார்கள். (துல்ஹுலைஃபாவிற்கு அருகிலுள்ள) “அல்பைதாஉ’ எனுமிடத்தில் அவர்களது ஒட்டகம் நிலைக்கு வந்து பயணத்திற்குத் தயாரானார்கள். (நூல்: முஸ்லிம் 2137)
  12. எனது இறைவனிடமிருந்து வரக்கூடிய(வான)வர் இன்றிரவு வந்து “இந்த அபிவிருத்தி மிக்க பள்ளத்தாக்கில் தொழுவீராக! இன்னும் ஹஜ்ஜுடன் உம்ராவைச் சேர்த்துவிட்டதாக மொழிவீராக!” எனக் கட்டளையிட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 1534)
  13. இப்னு உமர் (ரலி) அவர்கள் துல்ஹுலைஃபாவில் சுப்ஹு தொழுதவுடன் புறப்படும்படி கட்டளையிடுவார்கள். வாகனக் கூட்டம் புறப்பட்டதும் அன்னாரும் புறப்படுவார்கள். வாகனம் நிலைக்கு வரும்போது கிப்லாவை முன்னோக்கி நின்று கொள்வார்கள். பின்னர் தல்பியா கூறத் தொடங்குவார்கள். ஹரம் – புனித எல்லை வரும் வரை தல்பியா கூறிக்கொண்டேயிருப்பார்கள். பிறது தூத்துவா எனுமிடத்தை அடையும்போது தல்பியாவை நிறுத்தி அங்கேயே விடியும் வரை தங்குவார். சுப்ஹுத் தொழுதுவிட்டு அங்கேயே குளிப்பார்கள். இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்ததாகவும் கூறுவார்கள். (நூற்கள்: புகாரி 1553, பைஹகீ சுனனுல் குப்ரா 9258)
  14. “லப்பைக், அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல்முல்க, லாஷரீக லக” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 1549, 5915)
  15. என்னிடத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து “இஹ்ராமின் போதும், தல்பியாவின் போதும் என் தோழர்கள் சப்தத்தை உயர்த்த வேண்டும்” என்று கட்டளையிட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: ஹாகிம், பைஹகீ 9275, திர்மிதி 759)

17-19. இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹரம் – புனித எல்லையை நெருங்கிவிட்டால் தல்பியாவை நிறுத்திவிடுவார்கள். பிறகு தூத்துவா எனுமிடத்தில் தங்கி சுப்ஹுத் தொழுதுவிட்டு குளிப்பார்கள். “நபி (ஸல்) அவர்கள் இவ்வாறே செய்தார்கள்’ என்றும் கூறுவார்கள். (நூல்: புகாரி 1573)

துல்ஹஜ் நான்காம் நாள் காலை நபி (ஸல்) அவர்கள் (மக்கா) வந்தார்கள். (நூல்: முஸ்லிம் 2131)

  1. நபி (ஸல்) அவர்கள் பத்ஹா எனும் இடத்திலுள்ள கதா எனும் மேற்புறக் கணவாய் வழியாக மக்காவில் நுழைந்து கீழ்ப்புறக் கணவாய் வழியாக வெளியேறுவார்கள். (நூல்: புகாரி 1576)
  2. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழையும் போது “அல்லாஹும்ம ஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக’ (இறைவா! உன் கருணையின் வாசல்களை எனக்குத் திறந்திடுவாயாக!) என்று கூறட்டும்; பள்ளிவாசலிலிருந்து வெளியேறும்போது “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபள்லிக’ (இறைவா! உன்னிடம் நான் உன் அருள்களிலிருந்து வேண்டுகிறேன்) என்று கூறட்டும். (நூல்: முஸ்லிம் 1165)
  3. இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது கையால் ஹஜருல் அஸ்வதைத் தொட்டு, கையை முத்தமிட்டதை நான் பார்த்தேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததை நான் பார்த்தது முதல் அதை நான் விட்டதில்லை என அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 1606)
  4. நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்து தவாஃப் செய்தார்கள். (ஹஜருல் அஸ்வத் அமைந்த) மூலையை அடைந்தவுடன் அதை நோக்கி சைகை செய்தார்கள். தக்பீரும் கூறினார்கள். (நூல்: புகாரி 1612)
  5. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா(விலுள்ள கஅபா)விற்கு வந்ததும் “ஹஜருல் அஸ்வது’க்குச் சென்று அதைத் தொட்டு முத்தமிட்டார்கள். பின்னர் வலப் புறமாக நடந்துசென்று (கஅபாவைச்) சுற்றலானார்கள். மூன்று சுற்றுகள் (தோள்களைக் குலுக்கியவாறு) வேகமாகவும் நான்கு சுற்றுகள் சாதாரணமாக நடந்தும் சுற்றினார்கள். (நூல்: முஸ்லிம் 2139)

25, 26. நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை தவாஃப் செய்தார்கள். ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும்போதெல்லாம் தம்மிடம் இருந்த ஏதோ ஒரு பொருளைக் கொண்டு ஹஜருல் அஸ்வதை நோக்கிச் சைகை செய்துவிட்டு “அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று கூறினார்கள். (நூல்: புகாரி 1613)

  1. மறுமை நாளில் அல்லாஹ் கல்லை எழுப்புவான். அதற்குப் பார்க்கின்ற கண்கள் இருக்கும். பேசுகின்ற நாவு இருக்கும். உண்மையுடன் அதை முத்தமிட்டவருக்கு அது சாட்சி கூறும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ 884)
  2. தவாஃப் செய்யும் போது (ஆண்கள்) தங்கள் மேலாடையை வலது தோள் புஜம் (மட்டும்) திறந்திருக்கும் வகையில் போட்டுக் கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளார்கள். (நூல்: திர்மிதீ 787, அபூதாவூத் 1607)
  3. நபி (ஸல்) அவர்கள் “தவாஃப் அல்குதூம்’ செய்யும் போது மட்டும் முதல் மூன்று சுற்றுக்கள் ஓடியும் நான்கு சுற்றுக்கள் நடந்தும் தவாஃப் செய்தார்கள். (நூல்: புகாரி 1644, 1617)

30 & 32. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நான்கு மூலைகளில் “யமானி’ எனப்படும் இரண்டு மூலைகளைத் தவிர மற்ற இரண்டு மூலைகளைத் தொட்டு நான் பார்த்ததில்லை. (நூல்: புகாரி 166, 1609)

  1. ருக்னுல் யமானிக்கும், ஹஜருல் அஸ்வதுக்கும் இடையே “ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன். (நூல்கள்: அஹ்மத் 14851, அபூதாவூத் 1616)
  2. ஒரு மனிதர் தனது கையை இன்னொருவருடன் கயிற்றால் பிணைத்துக் கொண்டு தவாஃப் செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டார்கள். உடனே அதைத் துண்டித்தார்கள். “இவரது கையைப் பிடித்துக் கொண்டு செல்வீராக” என்றும் கூறினார்கள். (புகாரி 1620, 6703)
  3. “நீ ஹாஜிகள் செய்யும் அனைத்தையும் செய்! தூய்மையாகும் வரை கஅபாவில் தவாஃப் செய்யாதே!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 305, 1650)

36, 37, 38. மகாமு இப்ராஹீமை முன்னோக்கிச் சென்று, “இப்ராஹீம் நின்ற இடத்தை நீங்கள் தொழுமிடமாக ஆக்கிக்கொள்ளுங்கள்” (2:125) எனும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள். அப்போது மகாமு இப்ராஹீம் தமக்கும் கஅபாவிற்கும் இடையே இருக்குமாறு நின்று, இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். குல் ஹுவல்லாஹு அஹத், குல் யாஅய்யுஹல் காஃபிரூன் ஆகிய இரு அத்தியாயங்களை அவ்விரு ரக்அத்களிலும் ஓதினார்கள். (நூல்: முஸ்லிம் 2137)

39, 40. நபி (ஸல்) அவர்கள் ஜம்ஜம் நீரை நோக்கிச் சென்று அதைப் பருகினார்கள். அதைத் தமது தலையிலும் ஊற்றிக் கொண்டார்கள். (நூல்: அஹ்மத் 14707)

41-49. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஹஜருல் அஸ்வத்’ அமைந்துள்ள மூலைக்குத் திரும்பிச் சென்று, அதில் தமது கையை வைத்து முத்தமிட்டார்கள். பின்னர் (அருகிலிருந்த) அந்த (ஸஃபா) வாசல் வழியாக “ஸஃபா’ மலைக் குன்றை நோக்கிப் புறப்பட்டார்கள். ஸஃபாவை நெருங்கியதும் “ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள்” எனும் (2:158ஆவது) வசனத்தை ஓதிக் காட்டிவிட்டு, “அல்லாஹ் ஆரம்பமாகக் குறிப்பிட்டுள்ள இடத்திலிருந்தே நானும் ஆரம்பிக்கிறேன்” என்று சொன்னார்கள்.

அவ்வாறே, முதலில் “ஸஃபா’ மலைக் குன்றை நோக்கிச் சென்று, அதன் மீது ஏறினார்கள். அப்போது அவர்களுக்கு இறையில்லம் கஅபா தென்பட்டது. உடனே “லாயிலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை), அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என ஓரிறை உறுதிமொழியும் தக்பீரும் சொன்னார்கள்.

மேலும், லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வ லஹுல் ஹம்து. வ ஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு, அன்ஜஸ வஅதஹு, வ நஸர அப்தஹு. வ ஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹ்

(அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையாக எவரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழனைத்தும். அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் படைத் தவன். (அந்த) அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவன் தனது வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தான். தன் அடியாருக்கு உதவி செய்துவிட்டான். தன்னந்தனியாக கூட்டணிக் குலங்கள் அனைத்தையும் தோற்கடித்துவிட்டான்)” என்றும் கூறினார்கள்.

பிறகு ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே (ஓடு பாதையில்) பிரார்த்தித்துவிட்டு, மேற்கண்டவாறு மூன்று முறை கூறினார்கள். பிறகு மர்வாவில் இறங்கி, பள்ளத்தாக்கின் நடுப் பகுதியில் கால் பதித்தபோது, அங்கிருந்து (தோள்களைக் குலுக்கியபடி) ஓடலானார்கள். பள்ளத்தாக்கின் நடுப் பகுதியைத் தாண்டியதும் (சாதாரணமாக) நடக்கலானார்கள். ஸஃபாவில் செய்ததைப் போன்றே மர்வாவிலும் செய்தார்கள். (நூல்: முஸ்லிம் 2137)

  1. “ஸஃபா-மர்வாவுக்கிடையே “ஸயீ’ செய்து விட்டு, தலை முடியைக் குறைத்துக் கொண்டு, இஹ்ராமைக் களைந்துவிட்டு, ஹஜ்ஜுக்காக மீண்டும் இஹ்ராம் கட்டிக்கொள்ளட்டும்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 1691)

ஹஜ் – நிகழ்ச்சி நிரல்

துல்ஹஜ் எட்டாம் நாள் இஹ்ராம்

  1. துல்ஹஜ் பிறை எட்டாம் நாள், “லப்பைக் ஹஜ்ஜன்’ என்று கூறி ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி தல்பியா கூற வேண்டும். குளித்தல், நறுமணம் பூசுதல், தையல் இல்லாத மேலாடை, கீழாடை அணிதல் போன்ற உம்ராவுக்கு இஹ்ராம் கட்டும் போது செய்த அனைத்துக் காரியங்களையும் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டும் போது பேணிக் கொள்ள வேண்டும்.
  2. தங்கியிருக்கும் இடத்திலேயே இஹ்ராம் கட்டி, தல்பியா கூற வேண்டும்.
  3. பத்தாம் நாளன்று ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிகின்ற வரை தல்பியாவை நிறுத்தாமல் சொல்ல வேண்டும்.
  4. பிறகு மினாவுக்குச் சென்று அங்கு மறுநாள் காலை (பிறை 9) வரை தங்க வேண்டும். மினாவில் லுஹர், அஸர், மக்ரிப், இஷா, சுப்ஹ் ஆகிய தொழுகைகளை அந்தந்த நேரங்களில் தொழ வேண்டும். லுஹர், அஸர், இஷா ஆகிய நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத்துகளாகச் சுருக்கித் தொழ வேண்டும்.

ஒன்பதாம் நாள் அரஃபாவுக்குச் செல்லுதல்

  1. சூரியன் உதயமானதும் மினாவிலிருந்து அரஃபாவுக்குச் செல்ல வேண்டும்.
  2. அவ்வாறு செல்லும் போது தல்பியாவும் சொல்லலாம். தக்பீரும் சொல்லலாம்.
  3. நமிராவில் தங்க வேண்டும். நமிரா என்பது அரஃபாவுக்கு அருகில் உள்ள இடம். இது அரஃபாவைச் சார்ந்தது அல்ல. இங்கு உச்சி சாயும் வரை இருக்க வேண்டும்.
  4. சூரியன் உச்சி சாய்ந்ததும் பத்னுல்வாதி (அல்லது உர்னா) எனுமிடத்திற்கு வர வேண்டும். இது அரஃபாவுக்குச் சற்று முன்பாக அமைந்திருக்கின்றது. அங்கு அந்த இடத்திற்கு ஏற்றவாறு இமாம் சொற்பொழிவு நிகழ்த்த வேண்டும்.

(குறிப்பு: நமிரா, பத்னுல்வாதி அல்லது உர்னாவில் தங்க வாய்ப்பு இல்லையெனில் நேராக அரஃபாவுக்குச் சென்று விடலாம் என்று இப்னு தைமிய்யா அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.)

  1. அரஃபாவில் லுஹரையும் அஸரையும் சேர்த்தும், நான்கு ரக்அத்துக்களை இரண்டு ரக்அத்துக்களாகச் சுருக்கியும் தொழ வேண்டும்.
  2. இவ்விரு தொழுகைகளுக்கும் ஒரு பாங்கு, இரண்டு இகாமத் சொல்ல வேண்டும்.
  3. லுஹருக்கும் அஸருக்கும் இடையில் நபி (ஸல்) அவர்கள் வேறெதையும் தொழவில்லை.
  4. அரஃபாவில் எந்த இடத்திலும் தங்கிக் கொள்ளலாம்.
  5. அரஃபா இல்லையேல் ஹஜ் இல்லை.

ஜபலுர்ரஹ்மாவில் துஆச் செய்தல்

  1. ஜபலுர்ரஹ்மத் மலை அடிவாரத்தில் வந்து நிற்க வேண்டும். இல்லையேல் அரஃபாவில் எங்கும் நின்று கொள்ளலாம்.
  2. அங்கு கிப்லாவை முன்னோக்கி, தனது கைகளை உயர்த்தி துஆச் செய்ய வேண்டும். தல்பியாவும் சொல்ல வேண்டும்.
  3. நகரத்திலிருந்து விடுதலையை ஆதரவு வைத்து, நாம் நாடியதை அல்லாஹ்விடம் கேட்டுப் பிரார்த்தித்துக் கொண்டும் தல்பியா சொல்லிக் கொண்டும் சூரியன் மறைகின்ற வரை இருக்க வேண்டும்.
  4. அரஃபா நாளில் ஹாஜிகளுக்கு நோன்பு இல்லை.

முஸ்தலிபாவுக்குச் செல்லுதல்

  1. சூரியன் மறைந்ததும் அரஃபாவிலிருந்து முஸ்தலிபாவுக்கு அமைதியாகவும் நிம்மதியாகவும் செல்ல வேண்டும்.
  2. முஸ்தலிபாவுக்கு வந்து சேர்ந்ததும் ஒரு பாங்கு, ஒரு இகாமத் சொல்லி முதலில் மக்ரிப் தொழுகையையும், பின்னர் இகாமத் மட்டும் சொல்லி இஷாவை இரண்டு ரக்அத்களாச் சுருக்கித் தொழ வேண்டும்.
  3. இவ்விரு தொழுகைகளுக்கு இடையேயும், இஷாவிற்குப் பிறகும் எந்தத் தொழுகையும் தொழ வேண்டாம்.
  4. பிறகு சுப்ஹ் வரை தூங்க வேண்டும்.
  5. ஃபஜ்ர் நேரம் உதயமானதும் ஒரு பாங்கு, ஒரு இகாமத் சொல்லி ஃபஜ்ர் தொழ வேண்டும்.
  6. பலவீனமானவர்கள், பெண்களைத் தவிர உள்ள ஹாஜிகள் அனைவரும் முஸ்தலிபாவிலேயே ஃபஜ்ர் தொழ வேண்டும். பெண்கள் மற்றும் பலவீனமானவர்கள் நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக நடு இரவுக்குப் பின் செல்லலாம்.

பத்தாம் நாள் மஷ்அருல் ஹராமில் துஆச் செய்தல்

  1. பிறகு மஷ்அருல் ஹராமுக்குச் சென்று கிப்லாவை முன்னோக்கியவாறு, அல்லாஹ்வைப் புகழ்ந்து தக்பீர் கூறி, லாயிலாஹ இல்லல்லாஹ் போன்ற திக்ருகளைச் செய்ய வேண்டும். பிரார்த்தனையும் செய்ய வேண்டும்.
  2. வானம் வெளுக்கின்ற வரை (அதே சமயம் சூரியன் உதிப்பதற்கு முன்பு) மஷ்அருல் ஹராமில் துஆச் செய்ய வேண்டும்.
  3. முஸ்தலிபாவில் எங்கு வேண்டுமானாலும் தங்கலாம்.

மீண்டும் மினாவுக்குச் செல்லுதல்

  1. பிறகு பிறை 10 அன்று காலை சூரியன் உதிப்பதற்கு முன்னால் மினாவுக்குத் திரும்ப வேண்டும்.
  2. பத்னுல் முஹஸ்ஸர் என்ற இடத்தை அடைந்ததும் சற்று வேகமாகச் செல்ல வேண்டும்.
  3. ஜம்ரத்துல் அகபாவுக்கு மையப் பாதையில் செல்ல வேண்டும்.

கல்லெறிதல்

  1. கல்லெறிவதற்காக முஹஸ்ஸரில் அதாவது மினாவில் கற்களைப் பொறுக்கிக் கொள்ள வேண்டும்.
  2. ஜம்ரத்துல் அகபா என்பது (முஸ்தலிபாவிலிருந்து திரும்பும் போது) கடைசியில் அமைந்திருக்கும் அகபாவாகும். மக்காவிற்கு மிக அருகில் அமைந்ததாகும்.
  3. மினா நமது வலது புறத்திலும், மக்கா நமது இடது புறத்திலும் அமைந்திருக்கும் நிலையில் ஜம்ரத்துல் அகபாவை முன்னோக்கி நிற்க வேண்டும்.
  4. சுண்டி விளையாடக்கூடிய அளவிலுள்ள ஏழு சிறிய கற்களை ஜம்ராவில் எறிய வேண்டும்.
  5. ஒவ்வொரு கல்லை எறியும் போதும் அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கூற வேண்டும்.
  6. அதுவரை கூறி வந்த தல்பியாவை கல்லெறிதல் முடிந்தவுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
  7. சூரியன் உதித்த பிறகு தான் கல்லெறிய வேண்டும்.
  8. முஸ்தலிபாவிலிருந்து இரவிலேயே பலவீனர்கள் மினாவுக்கு வந்திருந்தாலும் அவர்களும் சூரியன் உதித்த பிறகே கல்லெறிய வேண்டும்.
  9. முஸ்தலிபாவிலிருந்து இரவிலேயே புறப்பட்டு வந்த பெண்களுக்கு, சூரியன் உதிக்கும் முன் கல்லெறிவதற்கு அனுமதி உள்ளது.
  10. சூரியன் உதித்ததிலிருந்து, உச்சி சாய்வதற்கு முன்பு வரை கல்லெறிந்து கொள்ளலாம்.
  11. சூரியன் உச்சி சாய்வதற்கு முன்பு கல்லெறிய முடியவில்லையெனில் சூரியன் உச்சி சாய்ந்த பின் அல்லது இரவு வரை கல்லெறிந்து கொள்ளலாம்.
  12. கல்லெறிந்து முடிந்ததும் மினாவில் அறுக்குமிடத்திற்கு வந்து தமது குர்பானிப் பிராணியை அறுக்க வேண்டும்.
  13. மினாவில் மற்ற இடங்களிலும் அறுக்கலாம். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், மினா அனைத்துமே அறுக்குமிடம் தான் என்று கூறியுள்ளார்கள்.
  14. குர்பானியை தானே அறுப்பது நபிவழியாகும். அடுத்தவரையும் நியமித்து அறுக்கலாம்.
  15. குர்பானி இறைச்சியை சாப்பிடலாம்; சேமிக்கலாம்.
  16. ஒட்டகம், மாடு ஆகியவற்றில் ஏழு பேர் கூட்டாகச் சேர்ந்து கொள்ளலாம்.
  17. தமத்துஃ அல்லது கிரான் முறையில் ஹஜ் செய்பவர் குர்பானி கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்க இயலாதவர் அங்கு இருக்கும் போது மூன்று நோன்புகள், ஊருக்குத் திரும்பியதும் ஏழு நோன்புகள் ஆக மொத்தம் பத்து நோன்புகள் நோற்க வேண்டும்.
  18. அய்யாமுத் தஷ்ரீக் என அழைக்கப்படும் 11, 12, 13 ஆகிய நாட்களில் அந்த மூன்று நோன்புகளை நோற்றுக் கொள்ளலாம்.

தலை முடியை மழித்தல்

  1. குர்பானி முடிந்ததும் தலையை மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும். அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும். மொட்டையடிப்பதே சிறந்தது.
  2. மழித்துக் கொள்பவர் தனது வலது புறத்திலிருந்து மழிக்க அல்லது முடியை குறைக்கத் துவங்க வேண்டும்.
  3. தலையை மழிப்பது ஆண்களுக்கு மட்டும் தான் பெண்கள் தலைமுடியை சிறிது குறைத்துக் கொள்ள வேண்டும்.
  4. இவ்வாறு முடியை மழித்ததும் அல்லது குறைத்ததும் அதுவரை இஹ்ராமின் போது தடுக்கப்பட்ட காரியங்களில் மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடுவதைத் தவிர மற்ற அனைத்தும் இப்போது அனுமதிக்கப்படுகின்றன. இதன்படி ஹாஜி தையல் சட்டை அணிந்து கொள்ளலாம்; நறுமணம் பூசிக் கொள்ளலாம். (இது முதல் விடுதலை எனப்படுகின்றது.)
  5. பலியிடுகின்ற நாளான பத்தாம் நாள், மினாவில் லுஹர் நேரத்தில் ஜம்ராக்களுக்கு இடையில், மக்களுக்கு ஹஜ்ஜின் சட்டதிட்டங்களைக் கற்றுக் கொடுக்கும் வகையில் இமாம் சொற்பொழிவாற்றுவது நபிவழியாகும்.

தவாஃபுல் இஃபாளா

  1. பத்தாம் நாளன்று புனித ஆலயத்திற்குச் சென்று (ஹஜ்ஜுக்குரிய) தவாஃப் செய்ய வேண்டும்.
  2. இந்தத் தவாஃபின் போது முதல் மூன்று சுற்றுக்கள் சற்று வேகமாக ஓடுவதும், வலது புஜத்தைத் திறந்த நிலையில் ஆடை அணிவதும் இல்லை.
  3. ஏழாவது சுற்று முடிந்ததும் மகாமு இப்ராஹீமில் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும்.
  4. பிறகு ஸஃபா, மர்வாவுக்கு இடையில் ஸயீ செய்ய வேண்டும். கிரான் முறையில் ஹஜ் செய்வோருக்கு ஏற்கனவே ஸஃபா, மர்வாவுக்கு இடையில் ஸயீ செய்திருந்தால் இப்போது செய்ய வேண்டிய அவசியமில்லை.
  5. இந்தத் தவாஃப் முடித்தவுடன் மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட அனைத்தும் அனுமதிக்கப்படுகின்றது. (இது இரண்டாவது விடுதலை எனப்படுகின்றது.)

குறிப்பு: கல்லெறிதல், குர்பானி கொடுத்தல், முடி களைதல் ஆகியவை முடிந்ததும் முதல் விடுதலை என்று பார்த்தோம். இந்தச் சலுகையைப் பெற வேண்டுமானால் அன்றைய தினம் (பத்தாம் நாள்) சூரியன் மறைவதற்கு முன்பு தவாஃபுல் இஃபாளா செய்தாக வேண்டும். முதல் விடுதலை பெற்றவர் தவாஃபுல் இஃபாளா செய்யாமல் சூரியன் மறைந்து விட்டால் அவருக்கு அந்தச் சலுகை ரத்தாகி விடும். அதாவது இஹ்ராமுடைய நிலைக்கு வந்து விடுவார். அதனால் அவர் தையல் ஆடை அணியவோ, நறுமணம் பூசவோ கூடாது. இந்த நிலையை அடைந்தவர் தவாஃபுல் இஃபாளா முடித்த பின்னர் தான் தையல் ஆடை அணிதல், நறுமணம் பூசுதல் போன்ற சலுகையைப் பெற முடியும்.

  1. மக்காவில் லுஹர் தொழ வேண்டும். திரும்ப வந்து மினாவிலும் லுஹர் தொழுது கொள்ளலாம்.
  2. ஜம்ஜம் நீருக்கு அருகில் வந்து அதைப் பருக வேண்டும்.
  3. பத்தாம் நாளன்று 1. கல்லெறிதல், 2. பலியிடுதல், 3. தலைமுடி களைதல், 4. தவாஃபுல் இஃபாளா ஆகிய வரிசைப்படி நபி (ஸல்) அவர்கள் செய்துள்ளார்கள். அதன்படி நாமும் செய்ய வேண்டும். எனினும் இந்த வணக்கங்களை முன், பின் மாற்றிச் செய்து விட்டால் குற்றமில்லை.

மினாவில் தங்குதல்

  1. பிறகு மினாவுக்கு வந்து 11, 12, 13 ஆகிய நாட்களில் தங்க வேண்டும்.
  2. இந்த நாட்களில் சூரியன் உச்சி சாய்ந்த பிறகு மூன்று ஜம்ராக்களிலும் 7 கற்களை எறிய வேண்டும்.
  3. மஸ்ஜிதுல் கைப் அருகில் உள்ள முதல் ஜம்ராவிலிருந்து கல்லெறியத் துவங்க வேண்டும். அதில் எறிந்து முடித்தவுடன் சற்று வலது பக்கமாகச் சென்று, கிப்லாவை முன்னோக்கி கைகளை உயர்த்தி நீண்ட நேரம் துஆச் செய்ய வேண்டும்.
  4. இரண்டாவது ஜம்ராவுக்கு வந்து அதுபோன்று கல்லெறிய வேண்டும். பிறகு இடது பக்கமாகச் சென்று கைகளை உயர்த்தி, கிப்லாவை நோக்கி நீண்ட நேரம் துஆச் செய்ய வேண்டும்.
  5. பிறகு மூன்றாவது ஜம்ராவுக்கு வந்து, மக்கா நமது இடது புறமாகவும் மினா நமது வலது புறமாகவும் அமையுமாறு நின்று கல்லெறிய வேண்டும். இங்கு கல்லெறிந்த பிறகு அங்கு நிற்கக் கூடாது.
  6. பிறை 12, 13 ஆகிய நாட்களிலும் இவ்வாறே கல்லெறிய வேண்டும்.
  7. பிறை 13 அன்று தங்காமல் 12வது நாளிலேயே ஊர் திரும்புவதற்கு அனுமதி உண்டு. 13ஆம் நாள் தங்குவதாக இருந்தாலும் தங்கலாம். அல்லாஹ் இந்தச் சலுகையை அளிக்கின்றான். எனினும் 13 அன்று தங்கிச் செல்வது நபிவழியாகும்.
  8. தக்க காரணம் உள்ளவர்கள் மக்காவில் தங்கிக் கொண்டு மினாவில் வந்து கல்லெறியலாம்.
  9. தக்க காரணம் உள்ளவர்கள் இரண்டு நாட்கள் எறிய வேண்டிய கற்களை ஒரே நாளில் எறியலாம்.
  10. 12ஆம் நாள் அல்லது 13ஆம் நாள் கல்லெறியும் வணக்கம் முடிந்ததும் மஸ்ஜிதுல் ஹராமில் அதிகமதிகம் தொழ வேண்டும்.
  11. அதிகமதிகம் தவாஃப் செய்ய வேண்டும்.

விடை பெறும் தவாஃப்

  1. தேவைகள் முடிந்து பயணத்தை உறுதி செய்ததும் கஅபாவிற்குச் சென்று தவாஃபுல் விதா (விடை பெறும் தவாஃப்) செய்ய வேண்டும்.
  2. மாதவிலக்கான பெண்கள் தவாஃபுல் விதா செய்யாமல் புறப்பட்டுக் கொள்ளலாம்.
  3. ஜம்ஜம் நீரை எடுத்துச் செல்வது விரும்பத்தக்கதாகும்.

ஹஜ் ஆதாரங்கள்

1, 2. துல்ஹஜ் எட்டாவது நாள் வந்தபோது, மக்கள் மினாவை நோக்கிச் சென்றனர். அப்போது ஹஜ்ஜுக்காக (இஹ்ராம் கட்டி) “தல்பியா’ கூறினர். (நூல்: முஸ்லிம் 2137)

  1. நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒட்டகத்தில் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து அரஃபாவிலிருந்து மினா வரை சென்றேன். “ஜம்ரதுல் அகபா’வில் கல்லெறியும் வரை அவர்கள் தல்பியா கூறிக் கொண்டே இருந்தார்கள். (நூல்: புகாரி 1544, 1683, 1687)
  2. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் ஏறிச் சென்று (மினாவில்) லுஹ்ர், அஸ்ர், மஃக்ரிப், இஷா, ஃபஜ்ர் ஆகிய (ஐவேளைத்) தொழுகைகளைத் தொழுதார்கள். ஃபஜ்ர் தொழுதுவிட்டுச் சூரியன் உதயமாகும் வரை சிறிது நேரம் அங்கேயே தங்கினார்கள். (நூல்: முஸ்லிம் 2137)

மினாவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வைத்தார்கள். (நூல்: புகாரி 1082, 1083, 1655, 1656)

5 & 7. ஃபஜ்ர் தொழுதுவிட்டுச் சூரியன் உதயமாகும் வரை சிறிது நேரம் அங்கேயே தங்கினார்கள். பிறகு (அரஃபா அருகிலுள்ள) “நமிரா’ எனுமிடத்தில் தமக்காக முடியினாலான கூடாரம் ஒன்று அமைக்குமாறு உத்தரவிட்டார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள். (நூல்: முஸ்லிம் 2137)

  1. நானும் அனஸ் (ரலி) அவர்களும் மினாவிலிருந்து அரஃபாவுக்குச் சென்று கொண்டிருக்கும் போது தல்பியா பற்றி அவர்களிடம் கேட்டேன். “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் செல்லும் போது நீங்கள் எவ்வாறு செய்து வந்தீர்கள்?” எனக் கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் “தல்பியா கூற விரும்பியவர் தல்பியா கூறுவார். அது ஆட்சேபிக்கப்படவில்லை. தக்பீர் கூறுபவர் தக்பீர் கூறுவார். அதுவும் ஆட்சேபிக்கப்படவில்லை” என்று விடையளித்தார்கள். (நூல்: புகாரி 970)
  2. சூரியன் உச்சி சாய்ந்ததும் “கஸ்வா’ எனும் தமது ஒட்டகத்தில் (சேணம் பூட்டுமாறு) உத்தரவிட்டார்கள். சேணம் பூட்டப்பெற்றதும் (“உரனா’) பள்ளத்தாக்கின் மத்திய பகுதிக்கு வந்து மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (நூல்: முஸ்லிம் 2137)

9-11, பிறகு தொழுகை அறிவிப்பும் இகாமத்தும் சொல்லச் செய்து, லுஹ்ர் தொழுகை தொழுவித்தார்கள். பிறகு இகாமத் மட்டும் சொல்லச் செய்து, அஸ்ர் தொழுகையும் தொழுவித்தார்கள். அவ்விரண்டுக்குமிடையே (கூடுதலாக) வேறெதுவும் அவர்கள் தொழவில்லை. (நூல்: முஸ்லிம் 2137)

  1. “அரஃபா மைதானம் முழுவதும் தங்குவதற்கு ஏற்ற இடமாகும்” என்பது நபி மொழி. (நூல்: முஸ்லிம் 2138)
  2. “ஹஜ் என்பதே அரஃபா(வில் தங்குவது) தான். பத்தாம் இரவில் பஜ்ருக்கு முன் ஒருவர் (அரஃபாவுக்கு) வந்து விட்டால் அவர் ஹஜ்ஜை அடைந்து கொள்வார்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். (நூல்கள்: நஸயீ 2966, 2994 திர்மிதீ 814)
  3. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தில் ஏறி, அரஃபாவிற்கு வந்து, அங்கிருந்த (“ஜபலுர் ரஹ்மத்’ மலை அடிவாரத்தில்) பாறைகள்மீது தமது “கஸ்வா’ எனும் ஒட்டகத்தை நிறுத்தினார்கள். கால்நடையாக நடந்துவந்த மக்கள் திரளை தம் முன்னிறுத்தி, கிப்லாவை முன்னோக்கி, சூரியன் மறையத் தொடங்கும்வரை அப்படியே வாகனத்தில் அமர்ந்திருந்தார்கள்.
  4. நான் அரஃபாவில் நபி (ஸல்) அவர்களின் பின்னே (ஒட்டகத்தில்) அமர்ந்திருந்தேன். அவர்கள் தமது கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்தார்கள். ஒட்டகம் அவர்களைக் குலுக்கியது. அதனால் அதன் கடிவாளம் கீழே விழுந்து விட்டது. ஒரு கையை உயர்த்திய நிலையிலேயே இன்னொரு கையால் அதை எடுத்தார்கள். (நூல்: நஸயீ 2961)
  5. அரஃபா தினத்தைக் காட்டிலும் வேறெந்த நாளிலும் அல்லாஹ் அடியார்களை மிக அதிகமாக நரகத்திலிருந்து விடுதலை செய்வதில்லை. அல்லாஹ் இந்நாளில் மலக்குகளிடம் மிக நெருக்கமாக வந்து, “இவர்கள் எதை விரும்புகிறார்கள்?” என்று கேட்கின்றான். (நூல்: முஸ்லிம் 2402)
  6. அரஃபா நாளில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைத்திருக்கின்றார்களோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டது. எனவே, நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பானம் அனுப்பி வைத்தேன். அதையவர்கள் குடித்தார்கள். (நூல்: புகாரி 1658)

18-22. சூரியனின் பொன்னிறம் சற்று மறைந்து சூரியனின் தலைப் பகுதி மறைந்துவிட்ட பிறகு உசாமா (ரலி) அவர்களைத் தமக்குப் பின்னால் (தமது வாகனத்தில்) அமர்த்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். “கஸ்வா’ எனும் தமது ஒட்டகத்தின் கடிவாளத்தை அவர்கள் இறுக்க, அதன் தலை, (பயணி களைப்படையும்போது) கால் வைக்கும் வளையத்தில் பட்டது. அப்போது தமது வலக் கையால் சைகை செய்து, “மக்களே! நிதானம்! நிதானம்! (மெதுவாகச் செல்லுங்கள்)” என்றார்கள். ஒவ்வொரு மணல் மேட்டையும் அடையும் போது, ஒட்டகம் மேட்டில் ஏறும்வரை கடிவாளத்தைச் சற்றுத் தளர்த்தினார்கள். இவ்வாறு முஸ்தலிஃபாவிற்கு வந்ததும் அங்கு ஒரேயொரு “தொழுகை அறிவிப்பு’ம் இரு இகாமத்களும் சொல்லி மஃக்ரிபையும் இஷாவையும் (சேர்த்துத்) தொழுவித்தார்கள். அவ்விரண்டுக்குமிடையே (கூடுதலாக) வேறெதுவும் தொழவில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருக்களித்துப் படுத்திருந்துவிட்டு, ஃபஜ்ர் உதயமானதும் தொழுகை அறிவிப்பும் இகாமத்தும் சொல்லி ஃபஜ்ர் தொழுவித்தார்கள். அப்போது அதிகாலை வெளிச்சம் நன்கு புலப்பட்டது. (நூல்: முஸ்லிம் 2137)

கஸ்ர் தொழுகையைப் பற்றி அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, “நபி (ஸல்) அவர்கள் மூன்று மைலோ அல்லது மூன்று பர்ஸக் அளவோ பயணம் செய்தால் (நான்கு ரக்அத் தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாக (சுருக்கித்) தொழுவார்கள்” என்று பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம் 1230)

  1. தன் குடும்பத்தின் பலவீனர்களுக்கு முஸ்தலிஃபாவிலிருந்து இரவே புறப்பட அனுமதி வழங்கப்பட்டது. அவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். (நூல்: புகாரி 1678, 1677, 1856)

24, 25. பிறகு “கஸ்வா’ ஒட்டகத்தில் ஏறி, மஷ்அருல் ஹராமிற்கு (“குஸஹ்’ மலைக்கு) வந்து, கிப்லாவை முன்னோக்கி இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். அல்லாஹ் மிகப் பெரியவன் என்று (தக்பீரு)ம், லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று (தஹ்லீலு)ம், “அவன் தனித்தவன்’ என்று (ஓரிறை உறுதிமொழியு)ம் கூறினார்கள். நன்கு விடியும் வரை அங்கேயே தங்கியிருந்தார்கள். (நூல்: முஸ்லிம் 2137)

  1. முஸ்தலிபா முழுவதும் தங்குமிடம் தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 2138)
  2. பிறகு சூரியன் உதயமாவதற்கு முன் அங்கிருந்து (மினாவுக்குப்) புறப்பட்டார்கள். (நூல்: முஸ்லிம் 2137)

28, 29. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஸ்தலிஃபாவிற்கும் மினாவிற்கும் இடையிலுள்ள) “பத்னு முஹஸ்ஸிர்’ எனும் இடத்துக்கு வந்தபோது, தமது ஒட்டகத்தைச் சிறிது விரைவாகச் செலுத்தினார்கள். பின்னர் “ஜம்ரத்துல் அகபா’ செல்லும் சாலையின் நடுவில் பயணம் செய்தார்கள். (நூல்: முஸ்லிம் 2137)

  1. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஹஸ்ஸருக்கு வந்ததும், “ஜம்ராவில் எறிவதற்கு பொடிக் கற்களை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். முஹஸ்ஸர் என்பது மினாவாகும். (நூல்: முஸ்லிம் 2248)
  2. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஜம்ரத்துல் அகபாவுக்கு வந்ததும், தமது இடப் பக்கத்தில் இறையில்லம் கஅபாவும் வலப் பக்கத்தில் மினாவும் இருக்கும்படி நின்று கொண்டு, ஏழு சிறுகற்களை எறிந்தார்கள். பிறகு “இவ்வாறு தான், அல்பகரா அத்தியாயம் யாருக்கு அருளப்பட்டதோ அந்த நபி (ஸல்) அவர்களும் எறிந்தார்கள்!” என்று கூறினார்கள். (நூல்: புகாரி 1748)

33, 34. “ஜம்ரத்துல் அகபா’விற்குச் சென்று, சுண்டி எறியும் அளவிற்கு ஏழு சிறு கற்களை ஜம்ராவின் மீது எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லையும் எறியும்போது தக்பீர் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 2137, 2248)

  1. “ஜம்ரதுல் அகபா’வில் கல்லெறியும் வரை நபி (ஸல்) அவர்கள் தல்பியா கூறிக் கொண்டே இருந்தார்கள். (நூல்: புகாரி 1544, 1683, 1687)

நபி (ஸல்) அவர்கள் “ஜம்ரதுல் அகபா’வில் கல்லெறியும் வரை தல்பியா கூறிக் கொண்டே இருந்தார்கள். ஒவ்வொரு கல்லை எறியும் போதும் தல்பியா கூறினார்கள். கடைசிக் கல்லுடன் தல்பியாவை நிறுத்திக் கொண்டார்கள். (நூல்: இப்னு குஸைமா)

36, 37. நபி (ஸல்) அவர்கள் தம் குடும்பத்தின் பலவீனர்களை முன் கூட்டியே அனுப்பிய போது, “ஜம்ரதுல் அகபாவில் சூரியன் உதயமாகும் முன் கல்லெறிய வேண்டாம்” என்று கூறினார்கள். (நூல்: திர்மிதீ 817)

  1. அஸ்மா (ரலி) அவர்கள் முஸ்தலிஃபாவில் இரவில் தங்கினார்கள். அப்போது தொழலானார்கள். சிறிது நேரம் தொழுததும், “மகனே! சந்திரன் மறைந்து விட்டதா? என்று கேட்டார்கள். நான் “இல்லை’ என்றேன். மீண்டும் சிறிது நேரம் தொழுது விட்டு “மகனே சந்திரன் மறைந்து விட்டதா? என்றார்கள். நான் “ஆம்’ என்றேன். அப்போது அவர்கள், “புறப்படுங்கள்” என்றார்கள். நாங்கள் புறப்பட்டோம். ஜம்ரதுல் அகபாவை அடைந்தவுடன் கல்லெறிந்தார்கள். பிறகு திரும்பிச் சென்று தமது தங்குமிடத்தில் சுபுஹ் தொழுதார்கள். “இருட்டிலேயே நீங்கள் கல்லெறிந்து விட்டீர்களே” என்று கேட்டேன். அதற்கவர்கள் “நபி (ஸல்)அவர்கள் பெண்களுக்கு (இவ்வாறு செய்ய) அனுமதி வழங்கியுள்ளனர்” என விடையளித்தார்கள். (நூல்: புகாரி 1679)

39, 40. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “நான் மாலை நேரம் வந்த பின் கல்லெறிந்தேன்!” என்று கேட்டதும். அவர்கள் “குற்றமில்லை!” என்று கூறினார்கள். (நூல்: புகாரி 1723)

  1. பின்னர் மினாவிலுள்ள பலியிடும் இடத்திற்குச் சென்று, அறுபத்து மூன்று ஒட்டகங்களைத் தமது கையால் அறுத்துப் பலியிட்டார்கள். (நூல்: முஸ்லிம் 2137)
  2. மினா முழுவதுமே அறுக்குமிடம் தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 2138)
  3. பிறகு எஞ்சிய (முப்பத்தேழு) ஒட்டகங்களை அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்(துப் பலியிடச் செய்)தார்கள். (நூல்: முஸ்லிம் 2137)
  4. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட, அறுக்கப்பட்ட ஒவ்வோர் ஒட்டகத்திலிருந்தும் ஓர் இறைச்சித் துண்டு கொண்டுவரப்பட்டு, ஒரு பாத்திரத்திலிட்டுச் சமைக்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அலீ (ரலி) அவர்களும் அதன் இறைச்சியை உண்டார்கள்; குழம்பைப் பருகினார்கள். (நூல்: முஸ்லிம் 2137)
  5. நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்தோம். ஏழு நபர்கள் கூட்டாக ஒரு ஒட்டகத்தை அறுத்தோம். மாட்டையும் ஏழு நபர்கள் கூட்டாக அறுத்தோம். (நூல்: முஸ்லிம் 2128, 2323)
  6. உங்களில் அச்சமற்ற நிலையை அடைந்து ஹஜ்ஜையும், உம்ராவையும் தமத்துவ் முறையில் செய்பவர், இயன்ற ப-லிப் பிராணியை (பலி-யிட வேண்டும்.) அது கிடைக்காதவர் ஹஜ்ஜின் போது மூன்று நோன்புகளும் (ஊர்) திரும்பிய பின் ஏழு நோன்புகளும் நோற்க வேண்டும். இதனால் பத்து முழுமை பெறும். இ(ச் சலுகையான)து மஸ்ஜிதுல் ஹராமில் யாருடைய குடும்பம் வசிக்கவில்லையோ அவருக்குரியது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! “அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்’ என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 2:196)
  7. குர்பானிப் பிராணி கிடைக்காதவர் தவிர மற்றவர்கள் தஷ்ரீக்குடைய நாட்களில் நோன்பு நோற்க அனுமதிக்கப்படவில்லை! (நூல்: புகாரி 1998)
  8. “இறைவா! மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாக” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித் தோழர்கள் “முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்” (மன்னிப்பாயாக என்று கூறுமாறு) கேட்டுக் கொண்டார்கள். “இறைவா! மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாக” என்றே (மீண்டும்) கூறினார்கள். (மீண்டும்) நபித்தோழர்கள் “முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்” என்று கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “குறைத்துக் கொள்பவர்களையும் (மன்னிப்பாயாக)” என்று கூறினார்கள். (நூல்: புகாரி 1727)
  9. நபி (ஸல்) அவர்கள் நாவிதரை நோக்கித் தமது வலது பக்கத்தையும், பிறகு தமது இடது பக்கத்தையும் சுட்டிக்காட்டி, “முடியை எடு” என்று சொன்னார்கள். (நூல்: முஸ்லிம் 2298)
  10. “தலையை மழித்துக் கொள்வது பெண்களுக்குக் கிடையாது. (சிறிதளவு மயிரைக்) குறைத்துக் கொள்வதே அவர்களுக்கு உண்டு” என்று நபி (ஸல்) கூறினார்கள். (நூல்: அபூதாவூத் 1694)
  11. “நீங்கள் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்து விட்டால் பெண்களைத் தவிர மற்ற அனைத்தும் உங்களுக்கு ஹலாலாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். (நூல்: அபூதாவூத் 1708)
  12. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மினாவில் ஹஜ் பெருநாள் தினத்தில் தமது “அள்பா’ எனும் ஒட்டகத்தின் மீதமர்ந்து (குத்பா) உரை நிகழ்த்தியதை நான் பார்த்திருக்கிறேன். (நூல்கள்: அஹ்மத் 19218, அபூதாவூத் 1669)
  13. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்தில் ஏறி, (“தவாஃபுல் இஃபாளா’ செய்வதற்காக) இறையில்லம் கஅபாவை நோக்கிச் சென்றார்கள். (நூல்: முஸ்லிம் 2137)
  14. நபி (ஸல்) அவர்கள் தவாஃப் அல் இஃபாளா செய்யும் போது ஏழு சுற்றுக்களிலும் அவர்கள் ஓடவில்லை. (நூல்: அபூதாவூத் 1710, இப்னுமாஜா 3051)

“நீங்கள் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்து விட்டால் பெண்களைத் தவிர மற்ற அனைத்தும் உங்களுக்கு ஹலாலாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். (நூல்: அபூதாவூத் 1708)

குறிப்பு: இந்த ஹதீஸின் அடிப்படையில் தையல் ஆடை அணிந்து கொள்ளலாம் என்பதால் வலது புஜம் திறந்த நிலையில் தவாஃப் செய்ய வேண்டிய அவசியமில்லை.

  1. நபி (ஸல்) அவர்கள் கஅபாவை ஏழு சுற்று சுற்றியதும் மகாமே இப்ராஹீமில் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். (நூல்: புகாரி: 396)
  2. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: விடைபெறும் ஹஜ்ஜிற்காக நபி (ஸல்) அவர்களுடன் சென்றிருந்தபோது உம்ராவிற்காக இஹ்ராம் கட்டினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், “யாருடன் குர்பானிப் பிராணி உள்ளதோ அவர் உம்ராவோடு ஹஜ்ஜுக்கும் இஹ்ராம் கட்டிக்கொள்ளட்டும். இன்னும் அவர் அவ்விரண்டையும் நிறைவேற்றாதவரை இஹ்ராமிலிருந்து விடுபடக் கூடாது” என்றார்கள். ஆனால் நான் மக்கா வந்த போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. இதனால் கஅபாவைத் தவாஃபும், செய்யவில்லை. இன்னும் ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடவுமில்லை. இதை நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு அவர்கள், “உனது தலைமுடியை அவிழ்த்துவிட்டு தலைவாரிக்கொள். பிறகு ஹஜ்ஜிற்காக மட்டும் இஹ்ராம் (ஆடையை) அணிந்து உம்ராவை விட்டுவிடு!” என்றார்கள். நானும் அவ்வாறே செய்தேன். நாங்கள் ஹஜ்ஜை முடித்தபோது, (என் சகோதரர்) அப்துர்ரஹ்மானுடன் என்னை தன்யீம் எனும் இடத்திற்கு நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். நான் உம்ரா செய்தேன். “இது உனது விடுபட்ட உம்ராவுக்குப் பகரமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியவர்கள் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்து ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடி (ஸயீ செய்து)விட்டு இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்கள். மினாவிலிருந்து திரும்பிய போது மீண்டும் ஒருமுறை கஅபாவைச் சுற்றி தவாஃபும் (ஸஃபா மர்வாவுக்கு இடையில் ஸயீயும்) செய்தார்கள்.

ஹஜ் மற்றும் உம்ரா இரண்டுக்கும் சேர்த்து இஹ்ராம் கட்டியவர்கள் ஒருமுறை (கஅபாவை) மட்டுமே தவாஃப் செய்தார்கள். (நூல்: புகாரி 1556)

  1. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்தோம். துல்ஹஜ் பத்தாம் நாள் நாங்கள் தவாஃபுஸ் ஸியாரத் செய்தபோது ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களிடம் தாம்பத்தியஉறவு கொள்ள நாடினார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! அவருக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே! என்றேன். அதற்கவர்கள், “அவர் (நமது பயணத்தைத்) தடுத்துவிட்டாரா?” எனக் கேட்டார்கள். உடனே தோழர்கள், “அவர் துல்ஹஜ் பத்தாம் நாளே தவாஃபுஸ் ஸியாரத் செய்துவிட்டார்!’ என்றதும் “அப்படியாயின் புறப்படுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 1733)
  2. நபி (ஸல்) அவர்கள் பத்தாம் நாள் அன்று “தவாஃப் அல் இஃபாளா’ செய்து விட்டு, திரும்பி வந்து மினாவில் லுஹர் தொழுதார்கள். (நூல்: முஸ்லிம் 2307)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறுக்குமிடம் சென்று அறுத்துவிட்டு, வாகனத்தில் ஏறி தவாஃபுல் இஃபாளா செய்துவிட்டு மக்காவில் லுஹர் தொழுதார்கள். (நூல்: முஸ்லிம் 2137)

குறிப்பு: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்தாம் நாள் அன்று மினாவில் லுஹர் தொழுததாகவும், மக்காவில் லுஹர் தொழுததாகவும் இரண்டு அறிவிப்புகள் உள்ளன. தவாஃபுல் இஃபாளாவை முடிக்கும் போது மக்காவிலேயே லுஹர் நேரம் வந்து விட்டதால் அங்கே லுஹர் தொழுது விட்டு மினாவுக்கு வந்து மீண்டும் ஒரு முறை மக்களுக்கு இமாமாக லுஹர் தொழுகை நடத்தியிருக்கக் கூடும் என்று நவவி அவர்கள் கூறுகிறார்கள்.

  1. மக்காவிலேயே லுஹ்ர் தொழுதுவிட்டு, அப்துல் முத்தலிப் மக்களிடம் சென்றார்கள். அப்போது அம்மக்கள் “ஸம்ஸம்’ கிணற்றிலிருந்து நீரிறைத்து விநியோகித்துக்கொண்டிருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அப்துல் முத்தலிபின் மக்களே! நீரிறைத்து விநியோகியுங்கள். “ஸம்ஸம்’ கிணற்றில் நீரிறை(த்து விநியோகிக்கும் பொறு)ப்பில் உங்களை மக்கள் மிகைத்து விடுவார்கள் என்று (அச்சம்) இல்லாவிட்டால், உங்களுடன் நானும் நீரிறைப்பேன்” என்று சொன்னார்கள். அப்போது அவர்கள் ஒரு வாளித் தண்ணீரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொடுக்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிலிருந்து சிறிது நீரைப் பருகினார்கள். (நூல்: முஸ்லிம் 2137)
  2. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜம்ரதுல் அகபாவில் நிற்கும் போது ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் கல்லெறிவதற்கு முன்பே (தலையை) மழித்து விட்டேன்” என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இப்போது கல்லெறிவீராக! அதில் தவறேதும் இல்லை” என்றார்கள். இன்னொருவர் வந்து “நான் கல்லெறிவதற்கு முன்பே கஅபாவைத் தவாஃப் செய்து விட்டேன்” என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இப்போது கல்லெறிவீராக! அதில் தவறேதும் இல்லை” என்றார்கள். முன் பின்னாகச் செய்யப்பட்ட எதைக் குறித்து கேட்கப்பட்ட போதும் “செய்து கொள்! தவறேதும் இல்லை” என்றார்கள். (நூல்: புகாரி 124, 1738, 83, 1736)
  3. மினாவில் தங்க வேண்டிய இரவுகளில் (மக்களுக்கு) நீர் புகட்டுவதற்காக மக்காவில் தங்கிக் கொள்ள அப்பாஸ் (ரலி) அனுமதி கேட்டார்கள். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள். (நூல்: புகாரி 1634, 1745)

62-64, இப்னு உமர் (ரலி) அவர்கள் “ஊலா’ எனுமிடத்தில் ஏழு கற்களை எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லுடனும் தக்பீர் கூறினார்கள். பிறகு சற்று முன்னேறி, சம தரையைத் தேர்வு செய்து கொண்டு, கிப்லாவை முன்னோக்கி நீண்ட நேரம் நின்றார்கள். தமது கைகளை உயர்த்தி துஆச் செய்தார்கள். பிறகு “ஜம்ரதுல் உஸ்தா’வில் கல்லெறிந்தார்கள். பிறகு இடது புறமாக நடந்து சென்று சம தரையில் கிப்லாவை நோக்கி நின்றார்கள். பிறகு கைகளை உயர்த்தி துஆச் செய்தார்கள். அங்கே நீண்ட நேரம் நின்றார்கள். பிறகு “பதனுல் வாதி’ என்ற இடத்திலிருந்து “ஜம்ரதுல் அகபா’வில் கல்லெறிந்தார்கள். ஆனால் அங்கே நிற்காமல் திரும்பினார்கள். “நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததை நான் பார்த்திருக்கிறேன்” எனவும் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 1751, 1753)

  1. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஜம்ரத்துல் அகபாவுக்கு வந்ததும், தமது இடப் பக்கத்தில் இறையில்லம் கஅபாவும் வலப் பக்கத்தில் மினாவும் இருக்கும்படி நின்று கொண்டு, ஏழு சிறு கற்களை எறிந்தார்கள். பிறகு “இவ்வாறு தான், அல்பகரா அத்தியாயம் யாருக்கு அருளப்பட்டதோ அந்த நபி (ஸல்) அவர்களும் எறிந்தார்கள்!” என்று கூறினார்கள். (நூல்: புகாரி 1748)
  2. அறுத்துப் பலியிடுகின்ற பத்தாம் நாளன்று லுஹா நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் ஜம்ராவில் கல்லெறிந்தார்கள். தஷ்ரீக்குடைய மற்ற (11, 12, 13) நாட்களில் சூரியன் உச்சி சாய்ந்த பின் கல்லெறிந்தார்கள். (நூல்: அஹ்மத் 14753)
  3. குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை நினையுங்கள்! இரண்டு நாட்களில் விரைபவர் மீதும் எந்தக் குற்றமுமில்லை. தாமதிப்பவர் மீதும் குற்றம் இல்லை. (அல்குர்ஆன் 2:203)
  4. மினாவில் தங்க வேண்டிய இரவுகளில் (மக்களுக்கு) நீர் புகட்டுவதற்காக மக்காவில் தங்கிக் கொள்ள அப்பாஸ் (ரலி) அனுமதி கேட்டார்கள். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள். (நூல்: புகாரி 1634, 1745)
  5. மினாவில் தங்காமல் இருப்பதற்கும், 10ஆம் நாள் கல்லெறிவதற்கும், அதன் பிறகு இரண்டு நாட்களுக்குரிய கல்லெறிதலை ஒரே நாளில் சேர்த்து எறிவதற்கும் ஒட்டகம் மேய்ப்பவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள். (நூல்: திர்மிதீ 878)
  6. “எனது இந்தப் பள்ளியில் (மஸ்ஜிது நபவியில்) தொழுவது “மஸ்ஜிதுல் ஹராம்’ தவிர ஏனைய பள்ளிகளில் ஆயிரம் தொழுகைகள் தொழுவதை விடச் சிறந்ததாகும்.” என்பது நபி மொழி. (நூல்: புகாரி 1190)

“(அதிக நன்மையை நாடி) மூன்று பள்ளிவாசல்கள் தவிர வேறு பள்ளிகளுக்குப் பிரயாணம் மேற்கொள்ளக் கூடாது. அவைகளாவன: மஸ்ஜிதுல் ஹராம், எனது பள்ளி (மஸ்ஜிதுன்னபவீ), மஸ்ஜிதுல் அக்ஸா” என நபி (ஸல்) கூறியுள்ளனர். (நூல்: புகாரி 1189, 1197, 1864, 1996)

  1. “அப்து முனாஃபின் சந்ததிகளே! இந்த ஆலயத்தில் இரவு பகல் எந்நேரமும் தவாஃப் செய்பவரையும், தொழுபவரையும் நீங்கள் தடுக்காதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: திர்மிதீ 795, அபூதாவூத் 1618, நஸயீ 2875)
  2. மக்கள் பல திசைகளிலும் புறப்பட்டுச் செல்லலானார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் “கடைசிக் கிரியையை அல்லாஹ்வின் ஆலயத்தில் (தவாஃப்) செய்து விட்டுப் புறப்படுங்கள்” என்று கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 2350, 2351)
  3. “இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவதை ஹஜ்ஜின் கடைசி வழிபாடாக ஆக்கிக் கொள்ள வேண்டும்’ என மக்கள் கட்டளையிடப்பட்டுள்ளனர். ஆயினும் மாதவிடாய்ப் பெண்களுக்கு மட்டும் அதில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. (கடைசி தவாஃபான தவாஃபுல் வதாவை மட்டும் விட்டுவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது). (நூல்: புகாரி 1755)
  4. ஆயிஷா (ரலி) அவர்கள் “ஸம்ஸம்’ நீரை (மதீனாவுக்கு) எடுத்துச் செல்பவர்களாக இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு எடுத்துச் சென்றதாகவும் கூறியுள்ளனர். (திர்மிதீ 886)