தேவை நிவாரணமல்ல! நியாயம்!

தேவை நிவாரணமல்ல! நியாயம்!

ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ் ஆகியவை ஹஜ் மாதங்களாகும். அதன் முதல் மாதமான ஷவ்வால் மாதம் துவங்கி விட்டது. ஹஜ்ஜுக்கான முஸ்லிம்களின் பயணங்களும் துவங்கி விட்டன. மனிதர்களின் ஒற்றுமையை உணர்த்துவதற்காக, ஓங்கச் செய்வதற்காக மக்காவில் எல்லாம் வல்ல அல்லாஹ்வால் நடத்தப்படுகின்ற ஓர் ஒற்றுமை மாநாடு தான் ஹஜ் என்று சொல்லலாம்.

நிறம், நாடு, மொழி, இனம், குலம், கோத்திரம் ஆகியவை மனித சமுதாயத்தை அடையாளம் காட்டுகின்ற அளவுகோல் தானே தவிர அவை மனித சமுதாயத்தைக் கூறு போடுகின்ற பிரிவினைக் கோடுகள் அல்ல என்று திருக்குர்ஆன் தெளிவுபடக் கூறுகின்றது.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

அல்குர்ஆன் 49:13

இதனுடைய செயல்திட்டம் தான் ஹஜ் எனும் மாநாடாகும்.

கருப்பினத்தைச் சார்ந்த ஆப்பிரிக்கரையும், வெள்ளை இனத்தைச் சார்ந்த ஐரோப்பியரையும், வெவ்வேறு மொழிகள் பேசுகின்ற பல்வேறு இனத்தவர்களையும், தலைவர்களையும், குடிமக்களையும் ஒரே வெள்ளை ஆடை உடுத்தச் செய்து, உங்களில் நிறம், நாடு, மொழி, இனம், குலம், கோத்திரம், ஆண்டான், அடிமை என்ற பேதம் இல்லை. நீங்கள் எல்லோரும் ஆதமுடைய மக்கள் என்று அல்லாஹ் இந்த மாநாடு மூலம் மனித சமுதாயத்திற்கு உரைக்கவும் உணர்த்தவும் செய்கின்றான்.

உலகத்தில் எந்த ஒரு முனையிலும், எந்த ஒரு மதத்திடமும், சித்தாந்தத்திடமும் உலக மக்களை ஒன்றிணைக்கின்ற செயல்திட்டம் அறவே இல்லை. இஸ்லாத்தில் மட்டுமே அது இருக்கின்றது. மனித குலத்தை ஒரு கயிற்றில் இணைக்கின்ற சக்தி இஸ்லாத்தில் மட்டும் தான் இருக்கின்றது.

உலக மக்களுக்கு இந்த உண்மையை ஹஜ் மாநாடு உணர்த்துகின்ற அதே வேளையில், முஸ்லிம்களுக்குக் குறிப்பாக ஒரு உண்மையை உணரச் செய்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவருக்கொருவர் கருணைபுரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டு விடுகிறது.

அறிவிப்பவர்: நுஅமான் பின் பஷீர் (ரலி)

நூல்: புகாரி 6011

இந்த சகோதர பாச உணர்வையும், ஒற்றுமையையும் இறுகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று முஸ்லிம்களுக்கு ஹஜ் உணர்த்துகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஃமின்கள் ஒருவருக்கொருவர் (துணை நிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகின்றது.

(இப்படிக் கூறும்போது) நபி (ஸல்) அவர்கள் தமது கைவிரல்களை ஒன்றோடொன்று கோர்த்துக் காண்பித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)

நூல்: புகாரி 2446

ஈமானிய கட்டமைப்பு என்பது இறுகப் பிணைந்த ஒரு கட்டட அமைப்பை ஒத்திருக்க வேண்டும் என்பதையும் இந்த ஹஜ் மாநாடு கோடிட்டுக் காட்டுகின்றது.

இதைத் தான் அல்லாஹ் திருக்குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

மக்களுக்கு ஹஜ்ஜைப் பற்றி அறிவிப்பீராக! அவர்கள் உம்மிடம் நடந்தும், ஒவ்வொரு மெலிந்த ஒட்டகத்தின் மீதும் வருவார்கள். அவை அவர்களைத் தொலைவிலுள்ள ஒவ்வொரு பாதையிலிருந்தும் கொண்டு வந்து சேர்க்கும்” (என்றும் கூறினோம்.)

அல்குர்ஆன் 22:26, 27

இந்த ஒற்றுமை உணர்த்துதலும் ஹஜ்ஜின் பலன்களில் உள்ளது தான். ஆனால் ஹஜ்ஜின் மூலம் இந்த விளைவுகளை இஸ்லாமிய உலகம் கண்டிருக்கின்றதா என்றால் இல்லை.

இஸ்லாமிய, ஈமானிய உடலின் கை, கால்கள் உடைக்கப்படுகின்றன; கண்கள் குத்தப்படுகின்றன; காதுகள் அறுக்கப்படுகின்றன. இஸ்லாமிய கட்டமைப்பு எதிரிகளால் உடைக்கப்படுகின்றது. அதில் ஓட்டைகளும் உடைசல்களும் விழுந்து ஒட்டுமொத்த கட்டடத்தையும் பாதிக்கச் செய்கின்றன. இதற்கு நிதர்சனமான, நேரடியான எடுத்துக்காட்டு தான் பாலஸ்தீனம்.

மூன்று இஸ்ரேலிய இளைஞர்களை ஹமாஸ் இயக்கத்தினர் கடத்திவிட்டனர் என்று குற்றம் சாட்டி, அதைச் சாக்காக வைத்துக் கொண்டு பாலஸ்தீனத்தில் மீது இஸ்ரேல் வான்வெளித் தாக்குதல், தரைவழித் தாக்குதல் நடத்தி, பெண்கள், பச்சிளம் குழந்தைகள், முதியவர்கள் என்று பாராமல் அழித்து வருகின்றது. மக்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளையும் மனிதநேயமற்ற யூத வெறியர்கள் குண்டு வீசித் தகர்த்து வருகின்றனர். இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு விட்டனர்.

சிறுநீரகம் இழந்து டயாலிஸிஸ் செய்து கொள்கின்ற, இதயநோய்க்காக சிகிச்சை எடுத்துக் கொள்கின்ற, கை கால்களை இழந்து சிகிச்சை பெறுகின்ற நோயாளிகளையும் இஸ்ரேல் கொன்று குவிக்கின்றது. இதுவரை வான்வெளித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் இப்போது தரைவழித் தாக்குதல் தொடுத்து தனது அராஜகத்தை அரங்கேற்றி வருகின்றது.

கொத்துக் கொத்தாக குழந்தைகளின் பிணங்கள், அவர்களை மடியில் கிடத்திக் கொண்டு கதறும் தாய்மார்கள், தாய் தந்தையரின் பிணத்தின் அருகே என்ன நடக்கின்றது என்று அறியாமல் அனாதையாக நிற்கும் மழலைகள் என பார்ப்போரின் நெஞ்சைப் பதற வைக்கும் காட்சிகள் அன்றாடம் பாலஸ்தீனத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

மேற்கத்திய நாடுகளும் அயோக்கிய நாட்டு சபையும் இதைக் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.

இராக்கில் பேரழிவு ஆயுதங்களை சதாம் வைத்திருக்கிறார் என்று பொய்யான குற்றச்சாட்டைச் சுமத்தி, இராக்கின் மீது போர் தொடுத்து, அதுவரை ஷியா, சன்னி, குர்து இன மக்கள் அனைவரையும் ஒரே ஆளுமையின் கீழ் வைத்திருந்த சதாமைத் தூக்கில் போட்டு, அந்த நாட்டையே இரத்தக் களறியாக்கிய அமெரிக்க வெறிநாய் இன்று பாதிக்கப்படும் பாலஸ்தீன மக்களுக்காகக் களமிறங்கவில்லை. காரணம், தன்னை வளப்படுத்துகின்ற எண்ணை வளம் பாலஸ்தீனத்தில் இல்லை. அது இருந்திருந்தால் மனித குலத்தைப் பாதுகாக்கின்றேன் என்ற பெயரில் படையெடுத்து ஊடுருவல் நடத்தியிருக்கும்.

வளமும் வலிமையும் உள்ள இஸ்லாமிய நாடுகள் வழக்கம் போல் சில நிவாரணங்களை விமானங்கள் மூலம் அனுப்பிவிட்டு, இஸ்ரேலின் இந்தக் கோரத் தாக்குதலைக் கண்டிக்கத் திராணியற்று மரணத்திற்கு நிகரான மவுனத்தை அனுஷ்டித்துக் கொண்டிருக்கின்றன. பாலஸ்தீன மக்களுக்கு இப்போதைய தேவை நிவாரணம் அல்ல. நியாயம்.

எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! உன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!என்று கூறிக் கொண்டிருக்கின்ற பலவீனமான ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும், சிறுவர்களுக்காகவும் அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?

அல்குர்ஆன் 4:75

இந்த வசனம் கூறும் அந்தப் பரிகாரத்தைத் தான் பாலஸ்தீன மக்கள் இறைவனிடம் கோருகின்றார்கள். இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேல் மீது போர் தொடுக்க நியாயமான காரணம் இருந்தும் போர் தொடுக்காமல் இவ்வுலக வாழ்க்கை வசதிகளை அனுபவித்துக் கொண்டு வாளாவிருக்கின்றனர்.

இவர்கள் மீது இறைவன் இதுபோன்ற நிலையை ஏவி விட எவ்வளவு நேரம் ஆகும் என்பதை மறந்து வாழ்கின்றனர். ஒருக்கால் இவர்களை இம்மையில் இறைவன் தண்டிக்காமல் விட்டாலும் மறுமையில் அவன் விடப்போவதில்லை.

எனவே ஹஜ் மாநாடு முஸ்லிம் சமுதாயத்திற்குத் தருகின்ற ஒற்றுமைப் பாடத்தை அரபு நாடுகள் உணர்ந்து நடக்க வேண்டும்.