தமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி

தமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி

சென்ற இதழின் தொடர்ச்சி…

தமிழகத்தில் தவ்ஹீது ஜமாஅத் மார்க்க அடிப்படையில் ஏற்படுத்திய மாற்றங்களைப் பார்த்து வருகிறோம்.

ஸஹர் பாங்கு அறிமுகம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் சஹர் உணவு உண்பதி-ருந்து பிலா-ன் பாங்கு உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில் அவர் இரவிலேயே பாங்கு சொல்வது உங்களில் (இரவுத்) தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருப்போர் திரும்பி வருவதற்காகவும், உங்களில் தூங்கிக் கொண்டிருப்போரை உணர்த்துவதற் காகவும் தான். ஃபஜ்ர் அல்லது சுப்ஹு நேரம் வந்து விட்டது என்பதை அறிவிப்பதற்காக அல்ல.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி 621

இது ஷரீஅத் வரைபடத்தில் உள்ள வணக்க வழிபாடாகும். ஆனால் இந்த வழிபாடு சமுதாயத்தில் இல்லை. தவ்ஹீத் ஜமாஅத் தான் தமிழக இஸ்லாமிய வரலாற்றிலேயே பள்ளிவாசல்களில் ஸஹர் பாங்கை அறிமுகப்படுத்தி, ரமளான் மாதத்தை நபி (ஸல்) அவர்கள் காலத்தில் உள்ளது போன்று உயிர்ப்பித்துக் கொண்டு இருக்கிறது.

எட்டுத் திக்கும் எட்டு ரக்அத் இரவுத் தொழுகை

நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியர் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “ரமளான் மாதத்தி(ன் இரவுகளி)ல் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ரமளானிலும் ரமலான் அல்லாத மற்ற காலங்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழ மாட்டார்கள். (முதலில்) நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பிறகு நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூசலமா பின் அப்திர் ரஹ்மான்

நூல்: புகாரி 1147

இது தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுத இரவுத் தொழுகை. ரமளானிலும், ரமளான் அல்லாத காலங்களிலும் நபி (ஸல்) அவர்கள் 8+3 ரக்அத் இரவுத் தொழுகை தொழுதுள்ளார்கள். சில ஹதீஸ்களில் வித்ருடன் சேர்த்து 13 ரக்அத் தொழுததாகவும் இடம் பெற்றுள்ளது.

இது தான் ஷரீஅத் வரைபடத்தின் சரியான வடிவம். ஆனால் இது தலைகீழாக மாற்றப்பட்டு 20+3 ரக்அத்துகள் தொழும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகின்றது.

தராவீஹ் என்ற பெயரில் நடைபெற்று வரும் இந்த பித்அத்தை மாற்றி நபிவழியை நடைமுறைப் படுத்த தவ்ஹீது ஜமாஅத் முயன்ற போது சந்தித்த எதிர்ப்பைப் போன்று வேறு எதற்கும் எதிர்ப்பைச் சந்தித்திருக்காது. அந்த அளவுக்கு, எட்டு ரக்அத் இரவுத் தொழுகை என்று அறிவித்ததும் தமிழகமே அமர்க்களப்பட்டது; ஆர்ப்பாட்டம் அடைந்தது. இந்த அமர்க்களம், ஆர்ப்பாட்டம் எப்போது அடங்கியது? 8+3 ரக்அத்களை தவ்ஹீத் ஜமாஅத் செயல்படுத்திக் காட்டிய பிறகு தான் அடங்கியது.

இருபது ரக்அத் தொழுவோரிடம் காணப்படுகின்ற அவசரம், எட்டு ரக்அத் தொழுவோரிடம் இல்லை. இருபது  ரக்அத்களும் அரை மணி நேரத்தில் முடிகின்றது என்றால் எட்டு ரக்அத் தொழுவதற்கு ஒரு மணி நேரத்தைத் தாண்டுகிறது. அவ்வளவு அமைதி! அந்த அளவுக்கு நிதானம்!

அவசர கதியில் குர்ஆனை ஓதி முடிக்காமல் நிறுத்தி, நிதானமாக கிராஅத் ஓதப்படுகின்றது. நிலையில், ருகூவில், ஸஜ்தாவில் நிறுத்தி நிதானமாகத் தொழும் இந்த இரவுத் தொழுகையில் கலந்து கொள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். அப்படியொரு மாற்றத்தை, மறுமலர்ச்சியை, வணக்க வழிபாட்டுப் புரட்சியை தவ்ஹீத் ஜமாஅத் தமிழகத்தில் ஏற்படுத்தியது.

பத்து இரவுகளும் பட்டப்பகலான அதிசயம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2017

அல்லாஹ்வின் தூதரின் இந்த உத்தரவு ஷரீஅத் வரைபடத்தின் சட்ட வடிவமாகும். ஆனால் இதற்கு மாற்றமாக 27ம் இரவில் மட்டும் அதுவும் முன்னேரத்தில் மக்கள் கூடி விட்டு, புரோட்டா கறி, பிரியாணிப் பொட்டலம், சேமியா பாயாசம் சகிதத்துடன் கலைந்து விடும் வழக்கம் இருந்து வந்தது. ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த லைலத்துல் கத்ரை அடையும் விஷயத்தில் மக்களிடம் இருந்த அலட்சியப் போக்கை மாற்றி, ஒரு சரித்திர மாற்றத்தைக் கொண்டு வந்தது தவ்ஹீது ஜமாஅத்!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உத்தரவுக்கு உரிய மதிப்பையும் மரியாதையையும் கொடுக்கும் விதமாக, ரமளானின் பிந்திய பத்து இரவுகளும் பட்டப் பகலானது. தவ்ஹீத் ஜமாஅத்தின் பள்ளிவாசல்களில் இந்த நாட்களில் பின்னிரவு நேரத்தில் இரவுத் தொழுகை நிறைவேற்றப்படுகின்றது. மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மானில் நள்ளிரவில் நடைபெறும் இரவுத் தொழுகையில் கலந்து கொள்வதற்கு இரவு 12 மணிக்கே பெண்கள் பள்ளிக்கு வந்து காத்துக் கிடக்கின்றனர். பிந்திய பத்தில் நடைபெறும் இந்த இரவுத் தொழுகையில் ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொள்கின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்கள் திரண்டு வருகின்றனர். ஏன்? லைலத்துல் கத்ரை, அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமான நேரத்தில் தேடுகின்ற புரட்சியை தமிழகத்தில் தவ்ஹீத் ஜமாஅத் கொண்டு வந்தது.

தவ்ஹீது பள்ளிகளில் உள்ள ரம்மியமிகு ரமளானின் பிந்திய இரவுகளின் சிறப்புகளைப் பார்த்து விட்டு, சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிகளிலும் அந்த நேரத்தில் தஹஜ்ஜத் என்று கூறி மேலதிகமாக 8 ரக்அத்கள் தொழ ஆரம்பித்துள்ளனர். அந்த அளவுக்கு மாற்றத்தை, தவ்ஹீத் ஜமாஅத் ஏற்படுத்தியது.

மக்ரிபுக்கு முன் சுன்னத்

நபி (ஸல்) அவர்கள் “மஃக்ரிப் தொழுகைக்கு முன் தொழுங்கள்‘ (மூன்று முறை) கூறினார்கள். மூன்றாம் முறை கூறும் போது அதை (எங்கே) மக்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய ஒரு சுன்னத்தாக எடுத்துக் கொள்வார்களோ என்று அஞ்சி, “இது விரும்பியவர்களுக்கு மட்டும் தான்என்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் அல்முஸ்னீ (ரலி)

நூல்: புகாரி 1183

ஷரீஅத்தின் வரைபடத்திலுள்ள இந்த வணக்க வழிபாடு இன்று நடைமுறையில் இல்லை. ஷாஃபி மத்ஹபிலாவது ஒரு சில இடங்களில் மக்ரிபுக்கு முன் சுன்னத் தொழுவதைப் பார்க்க முடியும். ஆனால் ஹனபி மத்ஹபில் மருந்துக்குக் கூட இதைப் பார்க்க முடியாது. மக்ரிப் பாங்கு முடிந்தவுடன் இகாமத் சொல்லி தொழுகையை ஆரம்பித்து விடுவர். தொழுகை நேர அட்டவணையில் கூட “மக்ரிப் இகாமத்’ என்ற இடத்தில், “உடன்” என்று தான் போட்டிருப்பார்கள்.

ஆனால் அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீத் ஜமாஅத் இன்று மக்ரிபுக்கு முன் சுன்னத் தொழுவதை மகிழ்ச்சியுடன் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

பள்ளிவாசலில் நுழைந்தால் ஒரு காணிக்கைத் தொழுகை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரும் பள்ளிவாசலுக்குள் நுழைந்தால் உட்காருவதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழட்டும்.

அறிவிப்பவர்: அபூகத்தாதா (ரலி)

நூல்: புகாரி 444

ஷரீஅத்திலுள்ள இந்த வணக்கம் சமுதாயத்தின் செயல்பாட்டில் இல்லை. இந்த வணக்கத்தை, தவ்ஹீத் ஜமாஅத் மக்களிடம் அறிமுகப்படுத்தி, செயல்பாட்டுக்கும் கொண்டு வந்தது.

ஃபித்ரு ஸதகாவில் ஒரு புரட்சி

பெருநாள் தர்மம் என்ற ஒன்று தமிழகத்தில் அறவே இல்லை என்று சொல்லி விட முடியாது. ஆனால் அந்தந்த ஊர்களில் பள்ளிவாசலில் பணி புரியும் ஆலிம்கள், பணி புரியாத ஆலிம்கள், முஅத்தின்கள், குழி தோண்டும் பக்கீர்கள் ஆகியோருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. கொடுப்போரும் சிலர் தான் இருந்தனர். பெறுவோரும் சிலர் தான். ஃபித்ரு ஸதகா கொடுக்கக் கடமைப்பட்ட ஆலிம்களே அதைப் பெறுபவர்களாக இருந்தது தான் வேதனைக்குரிய விஷயம்.

இப்படி அல்லறை, சில்லறையாக சிதறிச் சிதறி வழங்கப்பட்ட ஃபித்ரு ஸதகா என்ற வணக்கத்தை தமிழக முஸ்லிம்களிடம் முறையாக அறிமுகப்படுத்தி, முழுமையாகச் செயல்படுத்தியது தவ்ஹீத் ஜமாஅத்!

தமிழக முஸ்லிம்களிடம் கோடிக்கு மேல் ஃபித்ரு ஸதகாவைத் திரட்டி, சமுதாயத்தின் கோடியில் கிடக்கும் ஏழை எளியவர்களுக்கு வழங்கும் புரட்சி நடைமுறைக்கு வந்தது தவ்ஹீத் ஜமாஅத்தினால் தான்.

முஸ்லிம்களிடையேயுள்ள ஆண், பெண், சிறியவர், பெரியவர், அடிமை, சுதந்திரமானவர் அனைவருக்காகவும் ஒரு ஸாஉ அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாஉ அளவு தீட்டாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று) நபி (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். அதை(ப் பெருநாள்) தொழுகைக்காக மக்கள் வெளியே செல்வதற்கு முன்னால் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1503

பெருநாள் இரவுகளில் கேலிக் கூத்துகளில் ஈடுபட்டுக் கொண்டு கும்மாளம் அடித்துக் கொண்டிருந்த இளைஞர் பட்டாளம், இன்று இந்த ஹதீஸைச் செயல்படுத்தும் விதமாக அரிசி மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு, ஏழைகளின் வீடு தேடிச் சென்று வழங்கும் தூய பணியில் ஈடுபட்டுள்ள காட்சி, இது வரை தமிழகம் காணாத காட்சியும் மாட்சியுமாகும். புனித மிக்க ஒரு புரட்சியாகும்.

தற்கொலை செய்தவருக்கு தொழுவதற்குத் தடை

ஒரு மனிதர் நோயுற்ற போது அவர் திடுக்கத்துக்குள்ளானார். அவருடைய அண்டை வீட்டுக்காரர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அவர் இறந்து விட்டார்என்று சொன்னார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “அவர் இறந்தது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். “நான் அவரைப் பார்த்தேன் (அவர் இறந்து விட்டார்)என்று அம்மனிதர் கூறினார். நபி (ஸல்) அவர்கள், “அவர் இறக்கவில்லைஎன்று கூறினார்கள். பிறகு அம்மனிதர் (நோயாளியிடம்) வந்த போது, அவர் கூரிய ஈட்டியால் தன்னை அறுத்துக் கொண்டதைக் கண்டார். உடனே நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அவர் இறந்து விட்டார்என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர் இறந்தது உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், “அவர் தன்னிடமிருந்த கூரிய ஈட்டியால் தன்னை அறுத்துக் கொண்டதை நான் பார்த்தேன்என்று கூறினார். “நீ பார்த்தாயா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அம்மனிதர், ஆம் என்றார். நபி (ஸல்) அவர்கள், “அப்படியானால் அவருக்கு நான் தொழுவிக்க மாட்டேன்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி)

நூல்: அபூதாவூத் 2770

இது தான் ஷரீஅத் சட்டம். இந்தச் சட்டத்தில் தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை இல்லை. ஆனால் மத்ஹபுகளில் இதற்கு மாற்றமாக, தொழுகை நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஜனாஸா தொழுகை என்பது முஸ்லிம்களுக்குத் தானே தவிர, நரகம் என்று தெளிவாகி விட்டவருக்கு இல்லை. தற்கொலை செய்தவர் காஃபிராகி விடுகின்றார் என்பதைப் புகாரியில் இடம்பெறும் இந்த ஹதீஸ் விளக்குகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கு முன் இருந்தவர்களிடையே ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார். (ஒரு முறை) அவர் காயமடைந்தார். அவரால் வ- பொறுக்க முடியாமல் ஒரு கத்தியை எடுத்துத் தன் கையைத் துண்டித்துக் கொண்டார். அவர் இறக்கும் வரை இரத்தம் நிற்காமல் கொட்டிக் கொண்டேயிருந்தது. அல்லாஹ், “என் அடியான், தன் விஷயத்தில் (அவசரப் பட்டு) என்னை முந்திக் கொண்டான். அவன் மீது நான் சொர்க்கத்தை ஹராமாக்கி விட்டேன்என்று கூறினான்.

அறிவிப்பவர்: ஜுன்தப் (ரலி)

நூல்: புகாரி 3463

இந்த அடிப்படை விபரம் கூடத் தெரியாமல் மத்ஹபுவாதிகள், தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மேற்கண்ட ஹதீஸ்களின் அடிப்படையில், தற்கொலை செய்து கொண்டவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தத் தடை என்பதை தவ்ஹீத் ஜமாஅத் நடைமுறைக்குக் கொண்டு வந்தது.

பயனுள்ள பயணத் தொழுகை

நீங்கள் பூமியில் பயணம் மேற்கொள்ளும் போது (ஏக இறைவனை) மறுப்போர் உங்களைத் தாக்கக் கூடும் என்று அஞ்சினால் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது. (ஏக இறைவனை) மறுப்போர் உங்களுக்குப் பகிரங்க எதிரிகளாக உள்ளனர்.

அல்குர்ஆன் 4:101

கஸ்ர் தொழுகையைப் பற்றி அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, “நபி (ஸல்) அவர்கள் மூன்று மைலோ, அல்லது மூன்று பர்ஸக் அளவோ பயணம் செய்தால் (நான்கு ரக்அத்களை) இரண்டு ரக்அத்களாக (சுருக்கித்) தொழுவார்கள்என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: யஹ்யா பின் யஸீத்

நூல்: முஸ்லிம் 1230

பயணத்தின் போது தொழுகையைச் சுருக்கிக் கொள்ளும் வழிமுறையை அல்குர்ஆனும், ஹதீசும் நமக்குக் கற்றுத் தந்துள்ளது. ஆனால் மத்ஹபு ஆலிம்களோ, பொருத்தமில்லாத காரணங்களைக் கூறி இந்த உரிமையைத் தட்டிப் பறித்து விட்டனர். தவ்ஹீத் ஜமாஅத் தலையெடுத்த பின்னர் தான் இந்தச் சலுகை மக்களிடம் சென்றடைந்தது.

சூரியன் சாய்வதற்கு முன் நபி (ஸல்) அவர்கள் பிரயாணம் மேற்கொண்டால் லுஹரை அஸர் நேரம் வரும் வரை தாமதப்படுத்தி பின்னர் இரண்டு நேரத் தொழுகைகளையும் சேர்த்துத் தொழுவார்கள். (பிரயாணத்தைத் துவங்கும் முன்) சூரியன் சாய்ந்து விட்டால் லுஹரைத் தொழுது விட்டுப் புறப்படுவார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரீ 1111

பயணத்தின் போது தொழுகையின் ரக்அத்களைக் குறைத்துக் கொள்வதற்குச் சலுகை வழங்கிய மார்க்கம் தான் சேர்த்துத் தொழுவதற்கும் அனுமதி அளித்திருக்கின்றது. ஆனால் இந்த ஆலிம் வர்க்கம் இந்த உரிமையை அநியாயமாகப் பறித்து விட்டது. பறிக்கப்பட்ட இந்த உரிமையை மீட்டு, ஷரீஅத் வரைபடத்தைச் சரியாக்கி சாதனை படைத்துள்ளது தவ்ஹீத் ஜமாஅத்!

களாத் தொழுகை

ஒருவர் பருவ வயதை அடைந்ததும் அவருக்குத் தொழுகை கடமையாகின்றது. அவர் ஐம்பது வயது வரை தொழாமல் இருந்து விட்டு, பிறகு திருந்தி தொழத் துவங்குகின்றார். இப்போது இந்த மத்ஹபுவாதிகள், இவ்வளவு காலம் தொழாமல் இருந்ததையும் சேர்த்து களாவாகத் தொழ வேண்டும் என்று கூறுகின்றனர்.

இதற்குப் பயந்து அவர் தொழுவதையே விட்டு விடுகின்றார். இப்படி மார்க்கத்தில் இல்லாத களா தொழுகையை மக்களிடம் திணித்துக் கொண்டிருந்தார்கள்.

யார் தொழுகையை மறந்து விடுவாரோ அல்லது தொழாமல் தூங்கி விடுவாரோ அவர் நினைவு வந்ததும் அதைத் தொழுவதே அதற்குரிய பரிகாரமாகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 1217

தூக்கம், மறதி ஆகிய இரண்டிற்கு மட்டும் தான் களா உண்டு. மற்றபடி, தொழுகை என்பது நேரம் குறிக்கப்பட்ட கடமை என்று திருக்குர்ஆன் (4:103) கூறுவதை மக்களிடம் விளக்கி, களாத் தொழுகை என்ற சுமையை சமுதாயத்திலிருந்து தவ்ஹீது ஜமாஅத் அகற்றியது. வாழ் நாள் களாவுக்குப் பயந்து தொழாமலே இருந்த பலரைத் தொழுகையாளிகள் ஆக்கியது.

மாற்றப்பட்ட ஸஹர் நேரம்

வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்! (அல்குர்ஆன்2:187)

சுப்ஹ் நேரம் வரும் வரை சாப்பிடலாம் என்பதை இந்த வசனம் கூறுகின்றது. இதற்கு விளக்கமாக வரும் ஹதீஸ்களும் சுப்ஹ் நேரம் வரை ஸஹர் உணவு உண்ணலாம் என்பதை வலியுறுத்துகின்றன.

பிலால் (ரலி) அவர்கள் (ஃபஜ்ருக்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இப்னு உம்மி மக்தூம் (ரலி) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள். பருகுங்கள். ஏனெனில் அவர் தாம் ஃபஜ்ரு நேரம் வந்ததும் பாங்கு சொல்கின்றார்என்று கூறினார்கள்.

அறிவிப்போர்: ஆயிஷா (ரலி)இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1918, 1919

திருமறைக் குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளும் இவ்வளவு தெளிவாக இருந்தும், ஃபஜ்ரு நேரத்திலிருந்து அரை மணி நேரத்திற்கு முன்பே ஸஹர் நேரம் முடிந்து விடுவதாக பரவலான நம்பிக்கை மக்களிடம் உள்ளது.  நோன்புக் கால அட்டவணைகளை அச்சிட்டு மக்களிடம் விநியோகிப்பவர்களும் ஸஹர் முடிவு நேரம் என்று காலை 4 மணியிலிருந்து 4.30க்குள் குறிப்பிடுகின்றார்கள்.

இந்த நிலையை மாற்றி, ஃபஜ்ருடைய பாங்கு சொல்லப்படும் வரை ஸஹர் செய்யலாம் என்ற நிலையை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்படுத்தியது. அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித் தந்த ஸஹர் நேரத்தை மக்களிடம் அறிமுகப்படுத்தி, அமல்படுத்தவும் செய்தது.

நோன்பு துறப்பதில் கால தாமதம்

சூரியன் மறைந்து இந்தத் திசையிலிருந்து இரவு முன்னோக்கி வந்து, அந்தத் திசையிலிருந்து பகல் பின்னோக்கிப் போனால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்: புகாரி 1954

நோன்பை நிறைவு செய்வதை விரைவு படுத்தும் வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாக இருப்பார்கள்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது(ரலி)

நூல்: புகாரி 1957

சூரியன் மறைந்தவுடன் நோன்பை நிறைவு செய்ய வேண்டும் என்பதைக் கூறும் ஹதீஸ்கள் ஏராளமாக இடம் பெற்றுள்ளன. ஆனால் இன்று நடைமுறையில் பேணுதல் என்ற பெயரில் சூரிய மறைவு நேரத்திலிருந்து ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் வரை தாமதமாக நோன்பு துறக்கின்றனர்.

ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் இதை மாற்றியமைத்து, சூரியன் மறைந்தவுடன் நோன்பு துறக்கும் நடைமுறையை ஏற்படுத்தியது.

உச்சி வெயிலில் பெருநாள் தொழுகை

பெருநாளன்று திடலில் தொழும் போது மக்களை வெயில் தாக்கும். இதனால் அதிகாலையிலேயே பெருநாள் தொழுகையை முடித்து விட வேண்டும் என்று மார்க்கம் வழிகாட்டியுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) முஸல்லா என்ற திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்களது காரியங்களில் முதல் காரியமாக தொழுகையைத் துவக்குவார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி)

நூல்கள்: புகாரீ 956, முஸ்லிம் 1612

இந்த ஹதீஸிலும், இது போன்ற பல்வேறு ஹதீஸ்களிலும் பெருநாள் தொழுகையை காலையில் முதல் காரியமாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறிக் கொள்வோர், பெருநாள் தொழுகையை காலை பத்து மணி வரை தாமதமாகத் தொழுது கொண்டிருந்தனர்.

இறைவனின் அருளால் தவ்ஹீத் ஜமாஅத், பெருநாள் தொழுகையை அதிகாலை நேரத்தில், சூரியன் உதயமான சிறிது நேரத்திலேயே தொழுது வழிகாட்டியது. குறிப்பாக ஹஜ்ஜுப் பெருநாளன்று தொழுகை முடித்து விட்டு அறுத்துப் பலியிட வேண்டும் என்பதால் அனைத்து தரப்பு மக்களும் இந்த நபிவழியைப் பின்பற்றுவதில் ஆர்வம் காட்டத் தொடங்கினர்.

இதனால் தவ்ஹீத் ஜமாஅத்தினர் திடலில் நடத்தும் பெருநாள் தொழுகைகளில் கூட்டம் அலை மோதத் தொடங்கியது. இதைக் கண்டு சுன்னத் வல் ஜமாஅத்தினரும் கூட்டத்தைத் தக்க வைப்பதற்காக அதிகாலையில் தொழ ஆரம்பித்துள்ளனர்.

இப்படி ஷரீஅத் என்ற வரைபடத்தில் உள்ள அத்தனை வழிபாடுகளையும் உள்ளதை உள்ளபடி செயல்பாட்டிற்குக் கொண்டு வந்து மாபெரும் சாதனை படைத்துள்ளது தவ்ஹீத் ஜமாஅத்! எல்லாப் புகழும் இறைவனுக்கே!

மார்க்கப் பிரச்சாரத்தில் ஒரு மறுமலர்ச்சி

நாம் இது வரை கண்டது, வணக்க வழிபாடுகளை குர்ஆன், ஹதீஸ்  அடிப்படையில் மாற்றியமைத்து தவ்ஹீது ஜமாஅத் கொண்டு வந்த மறுமலர்ச்சி ஆகும். தலைகீழாகக் கிடந்த ஷரீஅத் வரைபடத்தை நேராக்கிக் காட்டிய சாதனைகளில் சிலவற்றைத் தான் நாம் கண்டோம்.

இவையல்லாமல் மார்க்கச் சொற்பொழிவு ரீதியிலும் தவ்ஹீது ஜமாஅத், வல்ல இறைவனின் அருளால் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது.

நாதியற்றுப் போன பேச்சாளர்கள்

தமிழகத்தைச் சார்ந்த ஒவ்வொரு தவ்ஹீதுவாதியும் ஒரு வரலாற்று மாற்றத்தைக் கண்கூடாகக் காணலாம். கடந்த காலங்களில் ஒவ்வொரு ஊரிலும் மார்க்கக் கூட்டம் நடைபெறும்.

அதிலும் குறிப்பாக நபி (ஸல்) அவர்கள் பிறந்த மாதமென்றால் போதும்! மவ்லிதுப் பாடல்களுக்கும் மீலாது மேடைகளுக்கும் மவுசு உண்டாகி விடும். ஊருக்கு ஊர் போட்டி போட்டுக் கொண்டு மீலாது சொற்பொழிவுகளை நடத்துவார்கள்.

இம்மேடைகளில் இரண்டு ரகமான பேச்சாளர்கள் விளாசித் தள்ளுவார்கள்.

ஒரு ரகம் உலமாக்கள்! மற்றொரு ரகம், இந்த உலமாக்களின் கொச்சைப் பேச்சைக் கிண்டல் செய்து பேசும் உலகக் கல்வி கற்ற பட்டதாரிகள்; பண்டிதர்கள்! இவர்களில் அரசியல்வாதிகளும் உண்டு. அரசியலில் கலக்காதவர்களும் உண்டு.

இவ்விரு பேச்சாளர்களுமே பொய்யான ஹதீஸ்களை வைத்துப் பின்னியெடுத்து விடுவார்கள். இவ்விரு ரகத்தினருமே போட்டி போட்டுக் கொண்டு நபி (ஸல்) அவர்களைப் பற்றிப் பொய்யான செய்திகளை அவிழ்த்து விடுவார்கள்.

உலமாக்களிலும் மூன்று சாரார் உள்ளனர். ஒரு சாரார் கப்ரு வணக்கத்தை ஆதரிப்பவர்கள்; தரீக்கா மற்றும் தர்ஹாவாதிகள். ஷப்பீர் அலீ பாகவி, கலந்தர் மஸ்தான் ரஹ்மானி போன்றவர்கள் இந்தத் தரப்பில் உள்ளவர்கள்.

மற்றொரு சாரார் தப்லீக்வாதிகள். காயல்பட்டிணம் ஹைதுரூஸ் ஆலிம், நிஜாமுத்தீன் மன்பஈ, கலீல் அஹ்மது கீரனூரி போன்றவர்கள் இதில் அடக்கம்.

இந்த இரு சாராரும் ஒருவரையொருவர் காஃபிர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எதிர்க் கருத்து கொண்டவர்கள். ஒருவரின் கொள்கையை மற்றவர் குஃப்ரு என்று விமர்சனம் செய்வார்கள்.

மூன்றாவது சாரார் இரண்டும் கெட்டான்கள். மறைந்த ஷம்சுல்ஹுதா, தற்போதுள்ள டி.ஜே.எம். ஸலாஹுத்தீன், கான் பாகவி போன்றவர்கள். இவர்கள் எந்தப் பக்கம் என்று சொல்ல முடியாது. தடுமாற்றத்திலும், தத்தளிப்பிலும் உள்ளவர்கள்.

ஆனால் ஓர் உண்மை! தமிழகத்தில் தவ்ஹீது கருத்து உருவானவுடன் இச்சாரார் அனைவருமே தவ்ஹீதுக்கு எதிராகக் கைகோர்த்துக் கொண்டு நம்மை எதிர்த்தனர். இப்போதும் எதிர்த்துக் கொண்டிருக்கின்றனர். காரணம் அவர்கள் அனைவரும் மத்ஹபுவாதிகள். அந்த அடிப்படையில் ஒன்று சேர்ந்து கொண்டு நம்மை எதிர்க்கத் துவங்கினர். விதிவிலக்காக அவர்களில் நம்மை எதிர்க்காதவர்களும் உண்டு.

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! ஒரு காலத்தில் நட்சத்திரப் பேச்சாளர்களாக, நாவலர்களாக, உலமாக்களின் நாயகர்களாக வலம் வந்தவர்களில் பலர் தற்போது பேர் மட்டுமல்ல, வேரும் அறுந்து போனார்கள்.

கவ்ஸர் அத்தியாயத்தில் அல்லாஹ் கூறுவது போன்று சத்தியத்திற்கு எதிராகக் கிளம்பிய அவர்கள் சந்ததியற்றுப் போனார்கள்.

இன்று இவர்கள் போடும் கூட்டத்திற்குப் பொதுமக்கள் வருவதில்லை. ஒப்பு சப்புக்காகச் சிலர் வருகின்றனர். அல்லது மதரஸா மாணவர்களைக் கொண்டு இருக்கைகளை நிரப்புகின்றனர்.

மார்க்கப் பிரச்சாரத்திற்குக் கூட்டம் வரவில்லை என்பதால் சமுதாயப் பிரச்சனையைக் கையில் எடுத்துக் கொண்டு அதற்காகக் கூட்டம் போட்டுப் பார்த்தனர். அதற்கும் மக்கள் வருவதில்லை.

இன்று மக்கள் அலையலையாக வருவது தவ்ஹீதுக் கூட்டத்திற்கு மட்டும் தான். இந்த அற்புதத்தை நமது வாழ்நாளிலேயே அல்லாஹ் நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருக்கிறான்.

அது மட்டுமல்ல! ஏகத்துவப் பிரச்சார உரைகள் ஆடியோ, வீடியோ கேஸட்டுகளாகவும், குறுந்தகடுளாகவும் வெளியிடப்பட்டு, அவையும் மக்களிடம் பிரச்சாரமாகச் சென்று கொண்டிருக்கின்றன.

சினிமாப் படங்களையும், பாடல்களையும் வாங்கிப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், இன்று மார்க்கப் பிரச்சாரங்களைக் கேட்டு, பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதுவும் தவ்ஹீது ஜமாஅத் சொற்பொழிவு ரீதியில் ஏற்படுத்திய பெரும் புரட்சியாகும்.

மேலும் இந்த மார்க்கச் சொற்பொழிவுகள் தனியார் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு உலகம் முழுவதும் சென்று கொண்டிருக்கின்றது.

தொலைக்காட்சி என்றாலே அது கேளிக்கை தான் என்ற நிலையை மாற்றி, இஸ்லாமியப் பிரச்சாரத்திற்கும் அதைப் பயன்படுத்த முடியும் என்று நிரூபித்தது தவ்ஹீது ஜமாஅத்தின் சாதனையாகும்.

எடுபடாமல் போன இலக்கியப் பேச்சு

உலமாக்கள் அல்லாத சாராரில் ஆ.கா. அப்துஸ்ஸமது, அப்துல் லத்தீப், மறுமலர்ச்சி ஆசிரியர் யூசுப் ஆகியோர் அடங்குவர். ஒரு காலத்தில் இவர்களது பேச்சுக்களைக் கேட்பதற்கென்று ஒரு கூட்டம் கூடும்.

ஆனால் ஏகத்துவம் வந்த பிறகு இவர்களின் பேச்சுக்கள் எடுபடாமல் போனது. அதுவும் இவர்களது இலக்கியப் பேச்சுக்கள் மதிப்பிழந்து போனது.

காரணம் என்ன? இவர்களும் உலமாக்களுடன் சேர்ந்து கொண்டு சத்தியத்தை எதிர்த்தது தான்.

ஆதாரம் கேட்கும் அற்புதக் காலம்

எந்தப் பேச்சாளரும் எந்த மேடையிலும் எதையும் பேசி விட்டுப் போகலாம்; பொய்யான ஹதீஸ்களை மேடையில் புளுகி விட்டுப் போகலாம் என்று அந்தக் காலம் அமைந்திருந்தது.

நூர் மஸாலா என்ற பெயரில் பக்கீர்ஷாக்கள், நபிமார்கள் வரலாறு என்று கூறி ஆயிரக்கணக்கான பொய்களை அள்ளி வீசிய காலம் அது!

அந்தக் காலத்தை அப்படியே புரட்டியெடுத்து, சரியான ஹதீஸை மட்டும் பேச வைக்கும் காலத்தை உருவாக்கியது தவ்ஹீது ஜமாஅத்!

பேச்சாளர்கள் பேசி முடித்ததும், நீங்கள் பேசியதற்குக் குர்ஆன், ஹதீஸில் ஆதாரம் உள்ளதா? என்று ஆண்கள் மட்டுமல்ல! பெண்களும் பேச்சாளர்களைக் கடித்துக் குதறும் புரட்சியை தமிழகம் கண்டது.

மகளிர் பெற்ற மறுவாழ்வு

தமிழகத்தில் தவ்ஹீது என்ற பாக்கியம் ஆரத் தழுவிய பிறகு முஸ்லிம்கள் கண்ட பயன்கள் ஏராளம். இதில் பெண்கள் கண்ட பயன்கள் அளவிட முடியாது என்று கூறலாம். ஒரே அமர்வில் மூன்று தலாக் சொன்னால் அதை மீட்ட முடியாது என்ற மத்ஹபு வெறியைத் தகர்த்தெறிந்து, அது ஒரு தலாக் தான், அதை மீட்டிக் கொள்ள முடியும் என்று தவ்ஹீது ஜமாஅத் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. இதைக் கடந்த இதழில் கண்டோம்.

முத்தலாக் விஷயத்தில் பெண்களுக்கு மறு வாழ்வு வழங்கியது போன்று மற்றொரு விஷயத்திலும் பெண்களுக்கு மிகப் பெரிய நிம்மதியை வழங்கியது. அது தான் குல்உ சட்டமாகும்.

பிடிக்காத கணவனை விட்டும் பிரிந்து கொள்வதற்காக இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய ஓர் உரிமை தான் “குல்உ’ ஆகும். இது ஷாபி மத்ஹபுச் சட்டத்தில் அனுமதிக்கப் பட்டிருந்தாலும் நடைமுறைக்கு வராத வறட்டுத் தத்துவமாகவே நீடிக்கின்றது. ஹனபீ மத்ஹபில் இது அறவே கிடையாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஸாபித் பின் கைஸ்(ரலி)யின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ நற்குணத்தையோ நான் குறை கூற மாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறு செய்வதை நான் வெறுக்கிறேன்என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்கிறார்) உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி “சரிஎன்றார். உடனே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் “தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடுஎன்றார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்கள்: புகாரி 5273, நஸயீ 3409

இந்த ஹதீஸின் அடிப்படையில் காட்டுமிராண்டித்தனமான கணவன்களிடமிருந்து பிரிந்து, தனக்கு விருப்பமான வேறு வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை மக்களிடம் நடைமுறைக்குக் கொண்டு வந்தது. இதன் மூலம், பிடிக்காத கணவனிடம் அல்லது கொடுமைக்காரக் கணவனிடம் இருந்து கொண்டு கசங்கி, உருகி, கருகிப் போகும் கோர நிலையிலிருந்து பெண்களைக் காத்து, அவர்களுக்கு மறுவாழ்வு வழங்கியது தவ்ஹீது ஜமாஅத்!

சுன்னத் வல்ஜமாஅத்தின் முக்கியப் பிரமுகர்கள் கூட, தங்களுடைய குடும்பப் பெண்களுக்கு இது போன்ற சோதனைகள் ஏற்பட்டால் மத்ஹபுச் சட்டங்களையோ அல்லது மத்ஹபு ஆலிம்களையோ நாடுவதில்லை. ஏனென்றால் தங்கள் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுமையிலிருந்து அவர்களால் காப்பாற்ற முடியாது என்பதை அறிந்து, தவ்ஹீது ஜமாஅத்தைத் தான் நாடுகிறார்கள் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

புர்கா போடும் புரட்சி

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் வாழும் பெண்கள் குறிப்பாக நெல்லை, குமரி மாவட்டங்களில் பிற மதத்தினரைப் போலவே சேலை, தாவணி, துப்பட்டா போன்ற ஆடைகளை அணிந்து கொண்டு தான் காட்சியளிப்பார்கள். மதுரை, ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் ஒரு விதமான கோஷா! தஞ்சையில் ஒரு விதமான கோஷா என்றாலும் அதில் கவர்ச்சிகரமான கோஷா!

மார்க்கம் கூறியபடி தங்கள் உடல் அழகை மறைக்காத நிலை தான் பெரும்பாலான முஸ்லிம் பெண்களிடம் இருந்தது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! ஏகத்துவப் பிரச்சாரம் வீரியமடைந்த பிறகு, பெண்கள் தங்கள் முகம், முன் கைகளைத் தவிர ஏனைய பகுதிகளை மறைக்கும் புர்கா அணியத் துவங்கினர். தவ்ஹீது ஜமாஅத் பெண்கள் மட்டுமல்லாது தற்போது பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் புர்கா அணிகின்றனர். இது உண்மையில் ஒரு புரட்சியாகும்.

புரட்சி என்றால் ஏற்கனவே இருக்கும் ஒரு நிலையைத் தலைகீழாகப் புரட்டிப் போடும் மாற்றத்தையே குறிக்கும். அப்படித் தான் தவ்ஹீத் ஜமாஅத் இந்தச் சமுதாயத்தைப் புரட்டிப் போட்டது. ஒரு சில ஊர்களைத் தவிர மற்ற பகுதிகளில் ஹிஜாப் முறை நடைமுறைக்கு வராமல் இருந்தது. அதைத் தவ்ஹீது ஜமாஅத், ஷரீஅத் வரைபடத்தில் உள்ளது போன்று வாழ்க்கைப் பாடத்தில் கொண்டு வந்தது.

வரதட்சணைக் கொடுமை

பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை, கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்!

அல்குர்ஆன் 4:4

இது அல்லாஹ்வின் கட்டளை. இது தான் ஷரீஅத் வரைபடத்தில் உள்ளது. ஆனால் இவர்களோ பெண்களிடம் வாங்குகின்றனர். இலட்சக்கணக்கில் பணமாகவும், நகையாகவும், பொருட்களாகவும் வாங்கும் இந்தக் கொடுமையை எதிர்க்கக் கடமைப்பட்ட ஆலிம்கள், அதற்குப் போய் அல்ஃபாத்திஹா சொல்லி ஆசி வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத் ஒரு பெரும் யுத்தத்தையே அன்றிலிருந்து இன்று வரை நடத்திக் கொண்டிருக்கின்றது. அதன் பலனாக, அல்லாஹ் சொல்வது போன்று லட்சக்கணக்கில் மஹர் கொடுத்து மணம் முடிக்கும் இளைஞர்களை தவ்ஹீத் ஜமாஅத் உருவாக்கியுள்ளது. இந்தக் கருத்தை ஏற்பதற்கு முன் ஏற்கனவே வரதட்சணை வாங்கியவர்கள் கூட திருப்பிக் கொடுத்த வரலாறும் உண்டு.

தமிழகத்தில் பெரும்பான்மையான ஊர்களில் தலைப் பிரசவத்தைப் பெண் வீட்டுக்காரர்கள் தான் பார்க்க வேண்டும் என்று எழுதப்படாத சட்டம் அமலில் உள்ளது. பிள்ளைக்கும் தாய்க்கும் செலவளிப்பது ஆண்களின் கடமை என்ற (2:233) வசனத்தின் அடிப்படையில் தலைப் பிரசவம் மட்டுமல்லாமல் எல்லா பிரசவச் செலவையும் ஆண்களே செய்யும் நிலையை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்படுத்தியது.

கூலி வேலை செய்யும் மாப்பிள்ளைக்கு ஒரு விலை, அரசு உத்தியோகம் பார்க்கும் மாப்பிள்ளைக்கு ஒரு விலை என்று மாட்டுச் சந்தையில் விற்பது போல் மணமகனை விற்கும் நிலை தமிழகத்தில் உள்ளது. இதையெல்லாம் உடைத்தெறிந்து, பெண்களுக்கு மனமுவந்து கொடுக்கும் மாபெரும் வரலாற்றுப் புரட்சியை தவ்ஹீத் ஜமாஅத் படைத்துள்ளது.

ஒரு காலத்தில் மார்க்கத்தின் இந்த நடைமுறைகளை வெறும் தத்துவார்த்தமாகப் பேசிய போது மக்கள் வெகுண்டு எழுந்தனர். சிலர், “இதெல்லாம் பேசுவதற்கு நல்லாயிருக்கும், நடைமுறைக்கு சாத்தியமா?’ என்று கேட்டனர். ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் அவற்றைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்த போது மக்களும் பின்பற்ற முன்வருகின்றனர். உண்மையில் அல்லாஹ்வின் பேரருளால் இது தமிழகம் காண்கின்ற வரலாற்றுப் புரட்சியாகும்.

இது போன்ற இன்னபிற வணக்கங்களையும் குர்ஆன், ஹதீஸ் என்ற ஷரீஅத் வரைபடத்தில் காட்டியிருக்கும் அடிப்படையில் நிறைவேற்றிட அழைப்பதற்காகத் தான் இன்ஷா அல்லாஹ் மே 10, 11 ஆகிய தேதிகளில் தஞ்சையில் மாநாடு நடத்தவுள்ளோம். அந்த மாநாடு மூலம் இன்னும் அதிகமான மக்களை சத்தியத்தின் பக்கம், சரியான ஷரீஅத்தின் பக்கம் வென்றெடுப்போமாக! அல்லாஹ் அந்த இலக்கை இந்த மாநாட்டின் மூலம் அடையச் செய்வானாக!

தமிழகம் கண்ட தர்ஜுமா புரட்சி

தமிழகத்தில் நம்முடைய தவ்ஹீது பிரச்சாரம் தோன்றிய மாத்திரத்தில் தவ்ஹீது ஜமாஅத் ஆலிம்கள் மக்களிடம் வைத்த அன்பான வேண்டுகோள், “திருக்குர்ஆனைப் படியுங்கள்’ என்பது தான். திருக்குர்ஆனின் தமிழாக்கத்தைப் படியுங்கள் என்று மக்களிடம் திரும்பத் திரும்பக் கூறினோம்.

திருக்குர்ஆனைப் படியுங்கள் என்ற வேண்டுகோளைத் தாங்கிய ஸ்டிக்கர்களை தங்கள் வீட்டுக் கதவுகளிலும், வாகனங்களிலும் கொள்கைவாதிகள் ஒட்டினர்.

திருக்குர்ஆனைப் படியுங்கள் என்ற நம்முடைய வேண்டுகோள் மக்களிடம் தீயாய் பரவியது. மக்கள் சாரை சாரையாக திருக்குர்ஆன் தர்ஜுமாக்களை வாங்க ஆரம்பித்தனர்.

உடனே இந்த ஆலிம்கள், குர்ஆன் விளங்காது என்று கோரஸ் பாட ஆரம்பித்தனர்; கூப்பாடு போட்டனர்; குருட்டுச் சிந்தனையைப் பரப்பினர்; கூக்குரல் எழுப்பினர்.

குர்ஆனைப் படிக்க வேண்டும் என்ற மக்களின் ஆர்வ வெள்ளம், இந்த உலமாக்களின் குறுக்குச் சுவர்களைத் தகர்த்தெறிந்தது. புத்தகச் சந்தையில் ஒரு புது சகாப்தம் பூத்தது. தர்ஜுமா விற்பனை சாதனை படைத்து, விண்ணைத் தொட்டது.

இதற்கு ஓர் எடுத்துக்காட்டைக் கூறலாம். திருக்குர்ஆன் தர்ஜுமா வெளியீட்டுக்கு முன்பு தவ்ஹீது ஜமாஅத் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட தர்ஜுமா, ஜான் டிரஸ்ட் வெளியீடாகும். அதனால் மக்கள் ஜான் டிரஸ்ட் தர்ஜுமாக்களைப் போட்டி போட்டுக் கொண்டு வாங்கினர். அதன் விற்பனையில், பதிப்புகளில் ஏற்பட்ட மாற்றத்தைப் பார்ப்போம்.

1983ம் ஆண்டு 5000 பதிப்புகள் அச்சிட்டு, தனது பணியைத் துவக்கிய ஜான் டிரஸ்ட் நிறுவனம்,

இரண்டாவது பதிப்பு  5,000

மூன்றாவது பதிப்பு   10,000

நான்காம் பதிப்பு      10,000

ஐந்தாம் பதிப்பு       10,000

ஆறாம் பதிப்பு 13,000

ஏழாம் பதிப்பு 10,000

எட்டாம் பதிப்பு       20,000

ஒன்பதாம் பதிப்பு     20,000

பத்தாம் பதிப்பு       20,000

பதினோறாம் பதிப்பு 10,000

12ம் பதிப்பு          10,000

13ம் பதிப்பு          10,000

14ம் பதிப்பு          10,000

என 25 ஆண்டுகளில் லட்சக்கணக்கான பிரதிகளை அச்சிட்டு விற்பனை செய்தது.

இப்படிப் புனிதக் குர்ஆனைப் புரட்டிப் பார்க்கும் ஒரு புரட்சிக் கூட்டம் புறப்பட்டது. இப்போது தான் ஆலிம்கள் சுதாரித்துக் கொண்டு ஒரு தர்ஜுமாவை சந்தையில் இறக்கினார்கள்.

கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பஈ அவர்களின் தமிழாக்கத்தில் 1992ல் ஒரு தர்ஜுமா வெளியிடப்பட்டது.

இந்த தர்ஜுமாவைத் தந்தவர்கள், பாமரனுக்குக் குர்ஆன் விளங்காது என்று பகிரங்கமாகப் பேசியவர்கள்; பேசுபவர்கள். குர்ஆன் மொழியாக்கத்திற்கு மக்களிடத்தில் பலத்த வரவேற்பு என்றவுடன் தற்போது புத்தகச் சந்தையில் இந்த தர்ஜுமாவைக் களமிறக்கியுள்ளனர். 2004ம் ஆண்டு திருத்தப்பட்ட இரண்டாம் பதிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

அப்போது மக்களுக்கு விளங்காமல் இருந்த குர்ஆன், தற்போது வியாபாரம் என்று வந்ததும் விளங்க ஆரம்பித்து விட்டது என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

தவ்ஹீது ஜமாஅத் தடம் பதிப்பதற்கு முன்பு தமிழகத்தில் ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி (முஸ்லிம் லீக் தலைவர் அப்துஸ்ஸமது அவர்களின் தந்தை) மொழியாக்கத்தில், தர்ஜுமத்துல் குர்ஆன் ஃபி அதபில் பயான் என்ற பெயரில் வெளியிடப்பட்டது. முதலில் அரபு மூலத்துடன் வெளிவந்தது. பிறகு அரபு மூலமின்றி இது வெளியிடப்பட்டது. பிறகு மீண்டும் அரபு மூலத்துடன் வெளிவந்தது. இதற்கு ஓர் அடிப்படைக் காரணம் உண்டு.

குர்ஆனின் அரபி மூலத்துடன் உள்ள தர்ஜுமாவை, முஸ்லிமல்லாத மக்களிடம் கொடுக்கக் கூடாது என்ற தவறான நம்பிக்கை தான்.

இருப்பினும், குர்ஆனை மூலத்துடன் வெளியிட வேண்டுமா? மூலமில்லாமல் வெளியிட வேண்டுமா? முஸ்லிமல்லாதவர் களுக்குக் கொடுக்கலாமா? கொடுக்கக் கூடாதா? என்று மயிர் பிளக்கும் சர்ச்சைகளையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஒரு நல்ல தமிழ் நடையில் இந்தத் தமிழாக்கம் வெளிவந்தது.

இது வெளியாவதற்காக மறைந்த அப்துஸ்ஸமது ஸாஹிப் அவர்கள் சவூதியிலிருந்து நிதி பெற்றார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் தான் ஜான் டிரஸ்ட் சார்பில் அப்துல் வஹ்ஹாப் அவர்களால் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டது.

ஜான் டிரஸ்ட் நிர்வாகம் இந்த தர்ஜுமாவில் திருத்தம் செய்வதற்காக அப்துல் காதர் மதனீ ஆகியோரை நியமித்தது. அப்போது, திருக்குர்ஆனின் 3:7 வசனத்திற்குச் செய்யப்பட்ட மொழி பெயர்ப்பு கடும் ஆட்சேபணைக்கு உள்ளானது. பின்னர் மீண்டும் பழைய மொழி பெயர்ப்பின்படியே அந்த வசனம் வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, அந்த வசனத்திற்கு விளக்கமளிக்கும் விதமாக “முதஷாபிஹாத்’ என்ற தொடரை அல்ஜன்னத்தில் எழுதினோம்.

அல்குர்ஆன் மனிதர்களுக்காக அருளப்பட்டது; அதில் மனிதர்கள் யாருக்குமே விளங்காத வசனங்கள் எதுவும் இல்லை என்பதே அந்தத் தொடரின் சாராம்சம். இது தற்போது புதிய வடிவில் ஏகத்துவத்திலும் வெளியிடப்பட்டு வருகின்றது.

சங்கை மிக்க குர்ஆன்

இது ஒரு சவூதிய வெளியீடு. இலவசம் என்பது இதன் தனிச் சிறப்பு. எல்லோருக்கும் புரியும் வகையில் எளிய நடையைக் கொண்டிருக்கவில்லை என்பது இதன் குறைபாடு. முஸ்லிம்களுக்கே புரியாது எனும் போது முஸ்லிமல்லாதவர்களுக்குச் சொல்லவே வேண்டியதில்லை. அதிலும் குறிப்பாக கிறித்தவர்களிடம் கொடுப்பதற்குத் துளியும் தகுதியில்லை. காரணம், இந்த தர்ஜுமாவின் தோற்றுவாயை எடுத்துப் படிக்கும் மாத்திரத்திலேயே அதை மூடி வைத்து விடுவர்.

எவர்களின் மீது நீ அருள் புரிந்தாயோ அத்தகையோரின் வழி(யில் நடத்துவாயாக)

(அது உன்) கோபத்திற் குள்ளானவர்கள(யூதர்களின் வழிய)ல்ல.

அன்றியும் வழிகேடர்கள(ôன கிறிஸ்தவர்களின் வழியும)ல்ல.

இவ்வாறு மொழிபெயர்க்கப் பட்டிருக்கும். இதைப் படிக்கும் ஒரு கிறித்தவர் எப்படி இஸ்லாத்திற்கு வருவார் என்று நாம் முடிவு செய்து கொள்ளலாம்.

இவை அனைத்தும் தர்ஜுமாக்கள். தவ்ஹீது ஜமாஅத் தனது பயணத்தைத் தொடங்கும் போது தப்ஸீர்களும் வெளியாகியிருந்தன.

 1. தப்ஸீருல் ஹமீது ஃபீ தஃப்ஸீரில் குர்ஆனில் மஜீத்

இது 1958ல் வெளியானது. உத்தமபாளையத்தைச் சேர்ந்த எஸ்.எஸ். முஹம்மது அப்துல் காதர் பாகவி ஆலிம் அவர்கள் இதை எழுதினார்கள்.

ஆதாரமற்ற ஹதீஸ்கள், வரலாறுகள், அறிவுக்குப் பொருந்தாத கற்பனைகளின் தொகுப்பாகவே இந்த தப்ஸீர் அமைந்திருந்தது. அந்தக் காலத்தில் நிலவிய தமிழ் நடைக்கொப்ப இது வெளியானது. இப்போது அந்த நடை மக்களுக்குப் புரியாது.

 1. அன்வாருல் குர்ஆன்

இந்த தப்ஸீரும் எஸ்.எஸ். அப்துல் காதர் அவர்களின் தப்ஸீரைப் போன்றது தான். எனினும் உள்ளடக்கத்தில் இது ஓரளவுக்கு வேறுபட்டுள்ளது. அந்த தப்ஸீரைப் போன்று பெருமளவில் கதைகள் இதில் இடம் பெறவில்லை. இதன் ஆசிரியர் ஈ.எம். அப்துர்ரஹ்மான் அவர்கள் தான் இன்றைய தவ்ஹீது ஆலிம்கள் களத்தில் இறங்குவதற்குத் தூண்டுகோலாகவும் துணையாகவும் இருந்தவர்கள்.

தமிழகத்தில் உலமாக்கள் பொதுக் கூட்டங்களில் பேசிய ஹதீஸ்களில், மக்களை மவ்ட்டீகத்திற்கு இழுத்துச் செல்லும் படுபாதகமான, படுமோசமான ஹதீஸ்களை அப்துர்ரஹ்மான் அவர்களிடம் எடுத்துக் கூறிய போது, “அந்த ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான ஹதீஸ்கள்’ என்று ஆணித்தரமாக அடையாளம் காட்டினார்கள்.

இப்படிப்பட்ட அறிவு ஞானம் கொண்ட அவாகள், தமது தப்ஸீரிலும் ஹதீஸ் கலையின் தர வரிசைக்கு மாற்றமான ஹதீஸ்கள் இடம் பெற்றிருப்பதைப் பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்கள்.

மவ்லிதுகள், மீலாதுகள், கப்ரு வணக்கங்கள் போன்றவற்றில் மாறுபட்ட, அதாவது நாம் இன்று கொண்டிருக்கும் தவ்ஹீதுக் கருத்தைக் கொண்டதால் வஹ்ஹாபி என்ற முத்திரையை வாங்கிக் கொண்டவர் ஈ.எம். அப்துர்ரஹ்மான் அவர்கள் என்பதை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

 1. தாவூத்ஷாவின் தப்ஸீர்

இதுவும் தமிழகத்தில் தவ்ஹீதுக் கருத்து வருவதற்கு முன் நடமாடிக் கொண்டிருந்த ஒரு தப்ஸீராகும். இவருடைய தப்ஸீரில் காதியானி வாடை வீசும்.

குர்ஆன் முழுவதையும் பொருளுரையும் விரிவுரையும் சேர்த்துத் தமிழில் வெளியிட வேண்டும் என்பது தாவுத் ஷாவின் கனவு. தமது இறுதிக் காலத்துக்குள் திருக்குர்ஆன் முழுவதையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு விட வேண்டும் என்ற ஆர்வம் அவரது நெஞ்சில் முள் போல் உறுத்திக் கொண்டிருந்தது. அவருக்கு 70 வயதான போது தாருல் இஸ்லாமி இதழை நிறுத்தி விட்டு முழுமையாக குர்ஆன் மொழிபெயர்ப்பில் இறங்கினார்.

அன்றைய உலமாக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அதையும் மீறி அவர் அச்சேற்றினார்.

“இது காதியானி மொழிபெயர்ப்பு; காபிர் மொழி பெயர்ப்பு இதனை முஸ்லிம்கள் வாங்கக் கூடாது” என்று அன்றைய உலமாக்கள் பிரச்சாரம் செய்தார்கள். இதனால் தொடர்ந்து தொகுதிகளை வெளியிட முட்டுக் கட்டை விழுந்தது. நான்காம் தொகுதியை வெளியிட தைக்கா சுஐபு ஆலிம் அவர்கள் 13000 கொடுத்தார்கள்.

1967ல் ஐந்தாம் தொகுதி வெளிவந்தது. இதற்குள் உலமாக்களின் தாக்குதல் அதிகமாயிற்று. தாவுத் ஷாவும் நோயில் படுத்துவிட்டார்.

 1. இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்டின் தப்ஸீர்

1996ல் திருக்குர்ஆன் என்ற பெயரில் இந்தத் தப்ஸீர் வெளியிடப்பட்டது. பொதுவாக தமிழில் வெளியான தப்ஸீர்கள், தர்ஜுமாக்கள் பிற மதத்தவர்கள் வாங்கிப் படித்து விளங்கிக் கொள்ளும் வகையில் அமையவில்லை. அந்தக் குறையைப் போக்கும் விதமாக இந்த தப்ஸீர் அமைந்தது என்று சொல்லலாம்.

 1. தற்போது ரஹ்மத் டிரஸ்ட் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் இப்னு கஸீர் தமிழாக்கம்.

தர்ஜுமா

முஸ்லிமல்லாதவர்களிடம் இது போய்ச் சேர வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டது என்பதை இந்த தர்ஜுமாவை எடுத்த மாத்திரத்திலேயே தெரிந்து கொள்ளலாம்.

காரணம், பெரும்பாலும் தர்ஜுமாக்கள் எல்லாமே வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாகப் படிக்கும் வாக்கில் அமைந்துள்ளன. அதாவது அரபி நூல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஆனால் இந்த தர்ஜுமாவோ தமிழ், ஆங்கில நூல்களின் அடிப்படையில் இடது பக்கத்திலிருந்து வலது பக்கமாக அமைந்துள்ளது.

தமிழகத்தில் வெளியான தர்ஜுமாக்கள் பெரும்பாலும் பிற மதத்தவர்களைக் கருத்தில் கொள்ளவே இல்லை. ஆனால் இந்த தர்ஜுமா பிற மதத்தவர்களையும் கவரும் வண்ணம் அதன் தமிழ் நடையில் முழு எளிமை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

பின் குறிப்புகள்

இஸ்லாத்திற்கு எதிரான சக்திகள் இஸ்லாத்தை நோக்கி வீசுகின்ற ஏவுகணைகள் பலதார மணம், விவாகரத்து போன்றவையாகும். எனவே இது தொடர்பான வசனங்களைப் படிப்பவர்களுக்கு ஏற்படும் ஐயங்களுக்குப் பொருத்தமான, எளிதில் புரியம்படியான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அது போல் அறிவியல் சம்பந்தப்பட்ட வசனங்களுக்கும் மன நிறைவைத் தரும் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக ஏகத்துவக் கொள்கை, வணக்கங்கள், சட்டங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தமிழக முஸ்லிம்கள் கொண்டிருக்கும் தவறான கருத்துக்களை தயவு தாட்சண்யம் இன்றி அல்லாஹ்வுக்குப் பயந்து மிகத் தெளிவாக இதன் பின் குறிப்புகளில் போட்டு உடைக்கின்றது.

கலப்படமின்மை

அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீது ஜமாஅத் தமிழகத்தில் தோன்றி, வணக்கங்களில் உள்ள பித்அத்கள், கலப்படங்கள், சேர்மானங்கள் ஆகியவற்றைக் களைந்து, இஸ்லாத்தைத் தூய வடிவில் செயல்படுத்திக் காட்டிக் கொண்டிருக்கிறோம்.

வணக்கங்களில் பித்அத் கூடாது என்று தத்துவார்த்தமாகச் சொன்ன போது, மக்கள் மிகக் கடுமையாக அதை எதிர்த்தனர். இன்று அதே மக்கள் செயல்பாட்டு அடிப்படையில் பார்க்கும் போது அதை ஏற்றுச் செயல்படவும் ஆரம்பிக்கின்றனர். அல்ஹம்துலில்லாஹ்.

இவ்வாறு வணக்கங்களில் கலந்து விட்ட கலப்படங்களைக் களைந்து விட்டோம். ஆனால் குர்ஆனில் உள்ள கலப்படங்களை நாம் இதுவரைக் களையவில்லை. குர்ஆனில் கலப்படமா? என்று கொதிப்புடனும், ஆச்சரியத்துடனும் நீங்கள் இங்கு கேள்வி எழுப்பலாம். அதற்கான விடை கீழே இடம் பெற்றுள்ளது.  தமிழகம் மட்டுமல்ல! சவூதியின் வெளியீடுகளில் கூட இந்தச் சேர்மானங்கள் இடம் பெறத் தவறவில்லை.

இந்தச் சேர்மானங்களைக் களைவதற்கு அல்லாஹ் ஓர் அரிய வாய்ப்பை வழங்கினான். அது தான் இந்தத் தமிழாக்கமாகும்.

 1. மன்ஜில்
 2. ருகூவுக்கள்
 3. ஸஜ்தா அடையாளங்கள்
 4. நிறுத்தல் குறியீடுகள்.
 5. வேண்டாத ஆய்வுகள்
 6. மக்கீ, மதனீ
 7. குர்ஆனை முடிக்கும் துஆ

மேற்கண்ட இந்தச் சேர்மானங்களை நீக்கி வெளியிட்டிருப்பதன் மூலம் இந்த தர்ஜுமா தனிச் சிறப்பைப் பெறுகின்றது. அல்லாஹ்வைப் பயந்து, உலகத்தில் யாருக்கும் பயப்படாமல் ஒரு தூய வடிவைக் கையாண்டதற்காக இது கடுமையான விமர்சனங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது.

குர்ஆன் மொழியாக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெரும் பங்காற்றியதுடன் மட்டுமின்றி, குர்ஆனில் இருந்த இந்தக் கலப்படங்களை மக்களிடம் அடையாளம் காட்டி, அப்புறப்படுத்தியதும் தவ்ஹீது ஜமாஅத் செய்த சாதனைகளில் ஒன்று என்றால் மிகையாகாது.