தடுமாறும் தலைமுறைப் பட்டியல்

தடுமாறும் தலைமுறைப் பட்டியல்

தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அழிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.

யோவான் 3:16

பைபிளின் இந்த வசனத்தின்படி, ஏசு கடவுள் பெற்ற பிள்ளை! ஒரு பக்கம் ஏசுவைக் கடவுளின் குமாரர் என்று சொல்லி விட்டு, மறுபக்கம் ஜோசப்பின் குமாரர் என்று குறிப்பிடுகின்றனர். ஏசு தான் கடவுளின் ஒரே பிள்ளை ஆயிற்றே! அவருக்கு ஏன் ஜோசப் என்ற தந்தை? தலைமுறை? என்று கேட்டால் அதற்கு அவர்கள் சொல்கின்ற பதில்:

தன்னுடைய மகனுக்கு இது போன்ற தந்தைகளை, தலைமுறைகளைக் கொடுப்பதைக் கூட அவர் ஏளனமாக நினைப்பதில்லை என்ற அளவுக்குப் பாவிகளைக் கர்த்தர் நேசிக்கிறார்.

இது தான் அவர்கள் கூறுகின்ற குருட்டுத்தனமான பதில்!

பைபிள் மனிதக் கை பட்டது தான்; ஆனால் புனிதமானது.

பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய மூவரும் ஒருவர் தான்.

ஏசு கடவுளின் குமாரர்; அதே சமயம் அவர் ஜோசப்பின் குமாரர்.

இப்படி இவர்களது நீதிமன்றத்தில் ஒருவர் பேசினால் பைத்தியம் என்று சம்பந்தப்பட்டவரைத் தள்ளி விடுவார்கள். ஆனால் இவர்களது வேதம் என்று வருகின்ற போது இதைப் புத்திசாலித்தனம் என்று மெச்சிக் கொள்கிறார்கள்.

இவ்விஷயத்தில் இவர்களுக்கு நிகர் இவர்கள் தான்; வேறு யாருமில்லை என்று சொல்லி விடலாம்.

ஜோசப்பின் குமாரர் என்று இவர்கள் கூறும் ஏசுவின் தலைமுறைப் பட்டியலிலாவது முரண்பாடு இல்லாமல் இருக்கின்றதா என்றால் அதிலும் முரண்பாடு தான்.

மத்தேயுக்கு ஒரு தலைமுறைப் பட்டியலை அறிவித்த கடவுள், லூக்காவுக்கு வேறொரு தலைமுறைப் பட்டியலை அளித்திருக்கின்றார். இவ்விருவரில் யார் பொய் சொல்கிறார்? அல்லது இவ்விருவரும் சொல்வது பொய்யா? இருவரும் பொய் கூறுகின்றனர் என்பது தான் முஸ்லிம்களின் நிலைப்பாடு! காரணம் ஏசுவை தந்தையின்றிப் பிறந்தவர் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

“இறைவா! எந்த ஆணும் என்னைத் தொடாத நிலையில் எனக்கு எவ்வாறு குழந்தை ஏற்படும்?” என்று அவர் கேட்டார். “தான் நாடியதை அல்லாஹ் இவ்வாறே படைக்கிறான். ஏதேனும் ஒரு காரியம் பற்றி அவன் முடிவு செய்து விட்டால் “ஆகு’ என்பான். உடனே அது ஆகி விடும்” என்று (இறைவன்) கூறினான்.

அல்குர்ஆன் 3:47

ஆனால் இவர்களோ, ஏசுவை கடவுளின் குமாரர் என்று கூறிக் கொண்டு இன்னொரு பக்கம் ஜோசப்பின் குமாரர் என்று சொல்கின்றனர். அதன் அடிப்படையில் வம்சாவழிப் பட்டியலையும் தருகின்றனர். அந்தப் பட்டியல் இது தான்.

தாவீது

 1. சாலமோன்
 2. ரெகொபெயாம்
 3. அபியா
 4. ஆஸா
 5. யோசபாத்
 6. யோராம்
 7. உசியா
 8. யோதாம்
 9. ஆகாஸ்
 10. எசேக்கியா
 11. மனாசே
 12. ஆமோன்
 13. யோசிய
 14. எகோனியா
 15. சலாத்தியேல்
 16. சொரொபாபேல்
 17. அபியூத்
 18. எலியாக்கீம்
 19. ஆஸோர்
 20. சாதோக்கு
 21. ஆகீம்
 22. எலியூத்
 23. எலெயாஸார்
 24. மாத்தான்
 25. யாக்கோபு
 26. யோசேப்பு

ஏசு

இது தான் மத்தேயு தரும் ஏசுவின் தலைமுறைப் பட்டியல். மத்தேயு 1:6-16 வசனங்களில் இந்தப் பட்டியல் இடம்பெறுகின்றது.

இப்போது லூக்கா தரும் பட்டியலைப் பார்ப்போம்..

தாவீது

 1. நாத்தான்
 2. மாத்தாத்தா
 3. மயினான்
 4. மெலெயா
 5. எலியாக்கீம்
 6. யோனான்
 7. யோசேப்பு
 8. யூதா
 9. சிமியோன்
 10. லேவி
 11. மாத்தாத்
 12. யோரீம்
 13. எலியேசர்
 14. யோசே
 15. ஏர்
 16. எல்மோதாம்
 17. கோசாம்
 18. அத்தி
 19. மெல்கி
 20. நேரி
 21. சலாத்தியேல்
 22. சொரொபாபேல்
 23. ரேஸா
 24. யோவன்னா
 25. யூதா
 26. யோசேப்பு
 27. சேமேய்
 28. மத்தாத்தியா
 29. மாகாத்
 30. நங்காய்
 31. எஸ்லி
 32. நாகூம்
 33. ஆமோஸ்
 34. மத்தாத்தியா
 35. யோசேப்பு
 36. யன்னா
 37. மெல்கி
 38. லேவி
 39. மாத்தாத்
 40. ஏலி
 41. யோசேப்பு

ஏசு

இது லூக்கா தரும் ஏசுவின் தலைமுறைப் பட்டியல். லூக்கா 3:23-31 வசனங்களில் இந்தப் பட்டியல் கூறப்பட்டுள்ளது.

தாவூத் மூலம் சுலைமான் வழியாகத் தோன்றியவர் ஏசு என்று மத்தேயு சொல்கின்றார்.

ஆனால் லூக்காவோ, தாவூத் மூலம் நாத்தான் வழியாகத் தோன்றியவர் ஈஸா என்று சொல்கின்றார். இவர்களில் யார் சொல்வது உண்மை? யார் சொல்வது பொய்?

கிறித்தவ நற்செய்தியாளர்கள் தான் இதற்கு முடிவு சொல்ல வேண்டும்.

தாவூதிலிருந்து 27வது தலைமுறையில் ஏசு தோன்றியதாக மத்தேயு கூறுகின்றார்.

தாவூதிலிருந்து 42வது தலைமுறையில் ஏசு தோன்றியதாக லூக்கா சொல்கின்றார். இவ்விரு பட்டியலில் பொதுவாக இடம்பெற்றவர் ஜோசப் தான். இதைத் தவிர இவ்விரண்டில் எந்த ஒற்றுமையும் இல்லை.

இந்தத் தலைமுறைப் பட்டியலில் தாவூதில் துவங்கி ஏசு வரை குறிப்பிட்டுள்ளோம். மத்தேயு தனது பட்டியலை தாவூதுக்கு முன்னால் ஆபிரஹாமிலிருந்து துவக்குகின்றார்.

ஆபிரஹாமிலிருந்து தாவூத் வரையுள்ள தலைமுறைப் பட்டியலில் யூதாவும் ஒருவர். இவர் ஒரு விபச்சார ஆசாமி என்று பைபிள் கூறுகின்றது.

(பார்க்க: ஆதியாகமம் 38வது அத்தியாயம் – இது குறித்து “இறை வேதத்தின் நோக்கங்கள்” என்ற தனித் தலைப்பில் விளக்கப்பட்டுள்ளது.)

யூதாவும், அவர் தமது மருமகள் தாமாரிடம் விபச்சாரம் செய்து பெற்ற பாரேசும் இந்தத் தலைமுறைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

வேசித்தனத்தால் பிறந்தவன், அவனது பத்தாம் தலைமுறை வரைக்கும் ஆண்டவரின் திருப்பேரவைக்குள் நுழையலாகாது.

அம்மோனியரும் மோவாபியரும், அவர்களது பத்தாம் தலைமுறைவரைக்கும், அவர்களைச் சார்ந்த எவரும் எக்காலத்திலும் ஆண்டவரின் திருப்பேரவைக்குள் நுழையக்கூடாது.

உபகாமம் 23:2, 3

விபச்சார சந்ததியில் தோன்றியவர்கள் கர்த்தரின் சபைக்கு வரக் கூடாது என்று பைபிளின் இந்த வசனம் கூறுகின்றது. ஆனால் ஏசுவின் தலைமுறையிலேயே விபச்சார சந்ததியான பாரேஸ் இருப்பதாக பைபிளின் மற்றொரு பகுதியில் மத்தேயுவும் லூக்காவும் கூறுகின்றனர்.

இப்படித் தனக்குத் தானே பைபிள் முரண்படலாமா?

முரண்படத் தான் செய்யும். காரணம், அது இறை வார்த்தையல்ல! மனித வார்த்தை! அதனால் அதில் கண்டிப்பாக முரண்பாடு இருந்தே தீரும். அவ்வாறு முரண்பாடு இருப்பது தான் பைபிளின் சிறப்பம்சமே! அதைத் தான் நீங்கள் இங்கே பார்க்கின்றீர்கள். இது எப்படி இறை வேதமாக இருக்க முடியும் என்று சிந்தியுங்கள்.