சொட்டு மூத்திரம் ஒரு சோதனை அல்ல!

சொட்டு மூத்திரம் ஒரு சோதனை அல்ல!

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்பதைப் பட்டியலிட்டுக் கொண்டிருக்கும் இந்த இதழில், முஸ்லிம்கள் தங்களுக்குத் தாங்களே சிரமத்தை ஏற்படுத்திக் கொண்ட ஒரு விஷயத்தைப் பற்றி இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அது தான் சொட்டு மூத்திர நோய் பற்றிய சட்டமாகும்.

சிலர் தொழுகைக்காக உளூச் செய்து விட்டு, தொழுகையில் நிற்பர். ருகூவுக்குச் செல்லும் போது ஒரு சொட்டு சிறுநீர் வந்தது போன்று ஓர் உணர்வு ஏற்படும். சிலருக்கு ஒரு சொட்டு வந்து விடவும் செய்யும்.

இத்தகையவர்கள் மார்க்க அறிஞர்களிடம் தீர்ப்பு கேட்கும் போது, சிறுநீர் கழிக்கும் போது நன்றாகக் கனைக்க வேண்டும் என்றும், மண் கட்டியை வைத்துக் கொண்டு நாற்பதடி தூரம் நடக்க வேண்டும் என்றும் தீர்ப்பு சொல்வார்கள். இதனால் தான் பள்ளிவாசல் கழிவறைகளில் அதிகமான கனைப்புச் சத்தத்தை நாம் செவியுற முடிகின்றது. இவர் நாற்பதடி தூரம் நடப்பதற்குள் தொழுகை முடிந்து விடும்.

அப்படி நடந்தாலாவது இந்தப் பிரச்சனை தீர்ந்து விடுமா? என்றால் அதுவும் இல்லை. அதற்குப் பிறகும் சொட்டு வருவது போன்ற உணர்வு தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.

இங்கு தான் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்று இறைவன் திருமறையில் சொல்வதை நாம் நினைத்துப் பார்க்கக் கடமைப் பட்டுள்ளோம்.

நாற்பதடி தூரம் நடக்க வேண்டும் என்று நம்மை நாமே சிரமப்படுத்திக் கொண்ட போதும் நமக்கு இந்தப் பிரச்சனை தீர்ந்தபாடில்லை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இந்த மார்க்கம் எளிதானது. இந்த மார்க்கத்தை எவரேனும் (தம்மீது) சிரமமானதாக ஆக்கிக் கொண்டால் அது அவரை மிகைத்து விடும். எனவே நடுநிலையையே கடைப் பிடியுங்கள்; இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்; (கூடுதல் வணக்கங்களை உற்சாகத்துடனும் நிரந்தரமாகவும் நிறைவேற்றிட) காலையையும் மாலையையும் இரவில் சிறிது நேரத்தையும் ஒத்தாசையாக்கிக் கொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 39

எளிய மார்க்கமான இஸ்லாம் இப்படியெல்லாம் நம்மைக் கஷ்டப்படுத்துமா? என்று சிந்திக்க வேண்டும். நாம் தான் நம்மையே கஷ்டப்படுத்திக் கொள்கிறோம். அதிலும் நாற்பதடி நடப்பவர்கள் பேருந்து நிலையம் போன்ற பெண்கள் நடமாடும் இடங்களிலும் “மார்ச் பாஸ்” செய்வதால் அந்த மக்கள் இஸ்லாத்தையே தவறாகப் பார்க்கும் நிலை ஏற்படுகின்றது.

சிறுநீர் அல்லது மலம் கழித்தால் மார்க்கம் தண்ணீரைப் பயன்படுத்தி சுத்தம் செய்யச் சொல்கிறது.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள்  கழிப்பிடத்திற்குச் செல்லும் போது நானும் ஒரு சிறுவரும் தண்ணீர் நிரம்பிய தோல் பாத்திரத்தையும் ஒரு கைத்தடியையும் எடுத்துச் செல்வோம். (தம் தேவையை முடித்து விட்டு) தண்ணீரால் அவர்கள் துப்புரவு செய்து கொள்வார்கள்.

நூல்: புகாரி 152

தண்ணீர் இல்லாவிட்டால் நீரை உறிஞ்சுகின்ற, அசுத்தத்தைத் துடைக்கின்ற கற்கள் அல்லது அது போன்ற சுத்தப்படுத்தும் பொருட்களைக் கொண்டு அந்த இடத்திலேயே சுத்தம் செய்து விட்டு நகர்ந்து விட வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக வெளியே சென்ற போது அவர்களைப் பின்தொடர்ந்து நானும் சென்றேன். அவர்கள் திரும்பிப் பார்க்காமலேயே சென்றார்கள். அவர்கள் அருகில் நான் சென்ற போது, “நான் (இயற்கைக் கடனை முடித்தபின்) சுத்தம் செய்வதற்காக எனக்காகச் சில கற்களை எடுத்து வா! எலும்புகளையோ கெட்டிச் சாணங்களையோ கொண்டு வந்து விடாதே!” என்று சொன்னார்கள். நான் (கற்களைப் பொறுக்கியெடுத்து) எனது ஆடையின் ஓரத்தில் இட்டுக் கொண்டு வந்து நபி (ஸல்) அவர்கள் பக்கத்தில் வைத்து விட்டு அஙகிருந்து திரும்பி விட்டேன். நபி (ஸல்) அவர்கள் (இயற்கைக் கடனை முடித்து விட்டு) அக்கற்களால் சுத்தம் செய்து கொண்டார்கள். பிறகு அவர்களைப் பின் தொடர்ந்து நானும் சென்றேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 155

இன்று சுத்தம் செய்வதற்குரிய பேப்பர்கள் கூட வந்து விட்டன. அவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இது தான் மலஜலம் கழித்தால் நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறை! அவ்வாறு நாம் சுத்தம் செய்த பிறகு ஒரு சொட்டு வெளியானால் அதற்கு நாம் பொறுப்பாளியாக மாட்டோம். அதாவது அதற்குப் பின் வெளியாகும் சொட்டு நீருக்காக அல்லாஹ் நம்மைத் தண்டிக்க மாட்டான். இதைத் தான் பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகின்றது.

எவரையும் அவரது சக்திக்கு உட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.

அல்குர்ஆன் 2:286

இதற்குப் பின்னும் ஒரு மனிதனின் உள்ளத்தில் சொட்டு வந்து கொண்டிருப்பது போன்ற எண்ணம் ஏற்பட்டால் அது ஷைத்தானின் ஊசலாட்டம். இதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. இடம் கொடுத்தால் ஷைத்தான் நம்மை ஸைக்கோவாக, மன நோயாளியாக மாற்றி விடுவான். இந்த ஊசலாட்டத்திற்கு அரபியில் “வஸ்வாஸ்’ என்று கூறுவர். இதை நாம் உதாசீனம் செய்து விட வேண்டும். அப்போது தான் ஷைத்தான் நம்மிடம் வாலாட்ட மாட்டான்.

சொட்டு மூத்திரம் வருவது போன்ற உணர்வு ஏற்பட்டால் இதெல்லாம் சரி தான். உதாசீனம் செய்து விடலாம். ஆனால் உண்மையிலேயே ஒரு சொட்டு சிறுநீர் வந்தே விடுகின்றது. ஈரம் தென்படுகின்றது. இப்போது என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டால் இதற்கும் நாம் கவலைப்படத் தேவையில்லை.

அப்படிப்பட்டவர்கள் அது ஒரு நோய் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நோய் உள்ளவர்கள் ஒரு தொழுகைக்குச் செய்யும் உளூவைக் கொண்டு அடுத்த தொழுகையைத் தொழக் கூடாது என்பது தான் மார்க்கம் வழங்கும் தீர்ப்பாகும். உதாரணமாக மக்ரிப் தொழுகைக்கு உளூச் செய்தால் அதைக் கொண்டு இஷா தொழக் கூடாது. இஷா தொழுகைக்குத் தனியாக உளூச் செய்ய வேண்டும்.

ஃபாத்திமா பின்த் அபூ ஹுபைஷ் என்ற பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் அதிகமாக இரத்தப் போக்கு ஏற்படும் ஒரு பெண்.  நான் சுத்தமாவதில்லை. எனவே நான் தொழுகையை விட்டுவிடலாமா?” என்று கேட்டார். அதற்கு, “இல்லை! அது ஒரு வித நோயால் ஏற்படுவதாகும். அது மாதவிடாய் இரத்தமன்று. உனக்கு மாதவிடாய் வரும்போது தொழுகையை விட்டு விடு! அது நின்றுவிட்டால் இரத்தம் பட்ட இடத்தைக் கழுவி விட்டுத் தொழுகையை நிறைவேற்று! பின்னர் அடுத்த மாதவிடாய் வரும் வரை ஒவ்வொரு தொழுகைக்கும் நீ உளூச் செய்து கொள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 228

இந்த ஹதீஸில் தொடர் உதிரப் போக்குக்கு நபி (ஸல்) அவர்கள் கூறும் இந்தத் தீர்வு சொட்டு மூத்திரத்திற்கும் பொருந்தும். வழக்கமாகச் சுத்தம் செய்வது போல் சுத்தம் செய்ய வேண்டும். அதற்குப் பிறகு சிறுநீர் வெளியே வந்தாலும் அது நோய் என்ற அடிப்படையில் ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்து கொள்ள வேண்டியது தான். எனவே இதற்காகத் தொழுகையைப் பாழாக்கி விடக் கூடாது.

எளிமையான இந்த மார்க்கத்தில் இனியும் கடினத்தைக் கடைப் பிடிக்காமல் உண்மையான, எளிமையான சட்டங்களைக் கடைப்பிடிப்போமாக!