டி.வி.யை மூடுங்கள்! திருக்குர்ஆனைத் திறங்கள்!

டி.வி.யை மூடுங்கள்! திருக்குர்ஆனைத் திறங்கள்!

ஒரு அன்னியப் பெண்ணை, அவள் அரைகுறை ஆடையுடன் இருக்கும் நிலையில் நேரில் பார்ப்பது எப்படிக் கூடாதோ அதுபோன்று தான் டி.வி.யில் பார்ப்பதும் கூடாது. ஆனால் இன்று தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு முன்னால் பெட்டிப் பாம்புகளாக அடங்கிக் கிடக்கும் நமது சமுதாய மக்கள், அதில் வரும் அரை நிர்வாணப் பெண்களை அல்ல! முழு நிர்வாணப் பெண்களைப் பார்த்து ரசிக்கின்றனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதைப் போல் கண்களால், காதுகளால் விபச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர். இன உறுப்பு தான் அந்த விபச்சாரத்தை உண்மைப்படுத்துகின்றது; அல்லது பொய்ப்படுத்துகின்றது என்று நபியவர்கள் கூறுவது போன்று இந்த ஆபாசக் காட்சிகள் தான் பலரை விபச்சாரத்தில் செல்வதற்குத் தூண்டுகின்றன. அடுத்தவனுடன் நமது பெண்கள் ஓடுவதற்கும் இது தான் அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது.

சொல்லப் போனால் சின்னத்திரை மற்றும் பெரிய திரைக் காட்சிகளில் வருவது போன்று ஒட்டுத் துணி அணிந்து கொண்டு பெண்கள் யாரும் வெளியில் வருவதில்லை. அப்படியே அணிந்து வந்தாலும் நம் குடும்பத்தினர் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து அதை ரசித்துக் கொண்டிருக்க மாட்டோம்.

ஆனால் டி.வி.யில் வரும் இந்த ஆபாசக் கூத்துக்களை, படுக்கையறைக் காட்சிகளை தாய், மகன், அண்ணன், தங்கை என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இது போன்ற காட்சிகளை நாம் ஒருபோதும் பார்க்கக் கூடாது. அதிலும் குறிப்பாக நம்மைத் திருத்த வந்துள்ள ரமளான் மாதத்தில் இந்தத் தொலைக்காட்சிப் பெட்டிகளை திறக்கக்கூடாது.

நரக வாசல் மூடியிருக்கும் இந்த ரமளான் மாதத்தில், டி.வி. எனும் நரக வாசலைத் திறந்து வைத்து நம்மை நாமே நாசமாக்கிக் கொள்ளக் கூடாது.

சுவனத்திற்கு அழைத்துச் செல்லும் திருக்குர்ஆனைத் திறந்து சுவன வாசல்களில் நுழையுங்கள். இனி டி.வி., சினிமா, சீரியல்களைப் பார்க்க மாட்டோம் என்று இந்தப் புனித ரமளான் மாதத்தில் சபதமிடுங்கள்; சத்தியம் செய்யுங்கள்.