இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா?

இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா?

(இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா? என்ற கேள்வியைப் பல்வேறு சகோதரர்கள், ஏகத்துவம் கேள்வி பதில் பகுதிக்கு அனுப்புகின்றனர். அந்தச் சகோதரர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலும் இதுதொடர்பாக மாற்றுக் கருத்துள்ளவர்கள் வெளியிட்டுள்ள கட்டுரைக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையிலும் ஜ்ஜ்ஜ்.ர்ய்ப்ண்ய்ங்ல்த்.ஸ்ரீர்ம் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்தக் கட்டுரை இங்கு பிரசுரிக்கப்படுகின்றது.)

இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றுதல் என்பது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்தித்திராத, சந்திக்க முடியாத பிரச்சனையாகும். ஏனெனில் இணை கற்பித்துக் கொண்டிருந்தவர்கள் தான் அதிலிருந்து விடுபட்டு முஸ்லிம்களானார்கள். இதனால் முஸ்லிம் சமுதாயத்துக்குள் இணை வைப்போர் என்று ஒரு சாரார் இருக்கவில்லை. இணை வைக்கும் செயலும் இருக்கவில்லை. அதாவது இணை வைக்காமல் இருந்தால் தான் முஸ்லிம் என்பது நபிகள் நாயகம் (ஸல்) காலத்து நிலைமை.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் சில கிராமவாசிகள் நம்ப வேண்டியவைகளை நம்பாமல் முஸ்லிம்கள் பட்டியலில் இருந்தாலும் அவர்கள் தொழுகைக்குத் தலைமை தாங்கும் பிரச்சனை எழவில்லை. எனவே நபிகள் நாயகம் காலத்தில் இந்தக் கேள்வியே எழவில்லை.

ஆனால் இஸ்லாத்தை விளங்கிப் பின்பற்றாமல் பரம்பரை அடிப்படையில் முஸ்லிம்கள் உருவான பிறகு அடிப்படைக் கொள்கை தெரியாத ஒரு சமுதாயம் பிற்காலத்தில் முஸ்லிம்களுக்குள் கலந்தது. அவர்களிடம் இணை வைப்பும் நுழைந்தது.

எனவே இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாம் என்றோ, பின்பற்றக் கூடாது என்றோ நேரடியாக ஆதாரம் இருக்க முடியாது.

நபிகள் நாயகம் காலத்தில் இல்லாத விஷயங்கள் பிற்காலத்தில் தோன்றினால் அதற்கு நேரடி ஆதாரம் இருக்காதே தவிர எவ்வாறு முடிவு செய்வது என்ற அடிப்படை நிச்சயமாக இருக்கும். ஏனெனில் இது போன்ற நிலை ஏற்படும் என்று இறைவனுக்குத் தெரியும். எனவே பிற்காலத்தவர்கள் அந்தப் பிரச்சனையைச் சந்திக்கும் போது எவ்வாறு முடிவு செய்வது என்பதற்கு அடிப்படை உள்ளதா என்ற வகையில் தான் இதை அணுக வேண்டும்.

இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு இந்தப் பிரச்சனையை நாம் ஆராய்வோம்.

இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

அல்குர்ஆன் 9:17

இணை வைக்கும் இமாமைப் பின்பற்றுவது குறித்து நாம் என்ன நிலை எடுக்க வேண்டும் என்பதற்கு இவ்வசனம் வழிகாட்டுகிறது.

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போர் பள்ளிவாசலை நிர்வகிக்கக் கூடாது என்று இவ்வசனம் கூறுகிறது.

அன்றைய காலத்தில் பள்ளிவாசல்கள் என்பது கீற்றுக் கூரைகள் தான். அதில் நிர்வாகம் என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை. வணக்க வழிபாடுகளுக்குத் தலைமை ஏற்பது மட்டுமே அன்று இருந்த ஒரே நிர்வாகம். இணை கற்பிப்போர் பள்ளியை நிர்வகிக்கக் கூடாது என்றால் அதன் தலைமைப் பொறுப்பு அவர்களிடம் இருக்கக் கூடாது என்பது தான் கருத்தாக இருக்க முடியும். தொழுகையைத் தலைமை தாங்கும் பொறுப்பைத் தான் இது முதன்மையாக எடுத்துக் கொள்ளும்.

எனவே அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் இமாமாக இருக்கக் கூடாது என்பது தெளிவாகத் தெரிகின்றது. அவர்களின் அமல்கள் அழிந்து விட்டன என்று அதைத் தொடர்ந்து கூறப்படுவதிலிருந்து அமல்களில் தலைமை தாங்குவதைத் தான் இது குறிக்கிறது என்பது உறுதியாகும்.

இன்னும் சொல்லப் போனால் வெள்ளை அடித்தல், கட்டுமானப் பணி மேற்கொள்ளுதல், மின் இணைப்பு பணி செய்தல், பராமரித்தல் போன்றவை இரண்டாம் பட்சமானது தான். அதற்கான வசதிகள் இல்லாவிட்டால் அதை விட்டுவிடலாம். ஆனால் வணக்க வழிபாடுகளை பள்ளிவாசல்களில் நிறுத்த முடியாது. எனவே தொழுகை நடத்துவது தான் முதன்மையான முக்கியமான நிர்வாகப் பணியாகும்.

இன்றைய காலத்தில் தான் ஜமாஅத் தொழுகையின் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இமாம் எப்போது வருகிறாரோ அப்போது தான் ஜமாஅத் நடக்கும். தொழுகையின் நேரம் முடிந்து விடும் என்ற நிலையில் மட்டுமே மற்றவர்கள் தொழுகைக்குத் தலைமை தாங்குவார்கள். அதாவது தொழுகையை நடத்தும் இமாமிடம் தான் அதிகாரம் இருந்துள்ளது என்பது இதில் இருந்து தெளிவாகும்.

எனவே தொழுகைக்குத் தலைமை தாங்கும் உரிமை, தகுதி இணை வைப்பவருக்குக் கிடையாது என்பதற்கு இதை விட வேறு ஆதாரம் தேவை இல்லை. அவர்கள் தலைமை தாங்கக் கூடாது என்றால் அந்தத் தலைமையை நாம் ஏற்கக் கூடாது என்பதைப் புரிந்து கொள்வது எளிதானதே.

நம்பிக்கை கொண்டோர், நம்பிக்கை கொண்டோரை விட்டு விட்டு (ஏக இறைவனை) மறுப்போரைப் பொறுப்பாளர்களாக ஆக்கக் கூடாது. அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தவிர. இவ்வாறு செய்பவருக்கு அல்லாஹ்விடமிருந்து (பாதுகாப்பு) எதுவுமில்லை. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான். திரும்புதல் அல்லாஹ்விடமே உள்ளது.

அல்குர்ஆன் 3:28

மூமின்களைத் தான் (அதாவது இணை கற்பிக்காதவர்களைத் தான்) தலைவர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்றுக் கொள்ளாமல் தவிர்க்க முடியாது என்ற அச்சுறுத்தல் இருந்தால் அவர்களைத் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளலாம் என்று இவ்வசனம் கூறுகிறது. அது ஆட்சித் தலைமைக்கு உரியது என்றாலும் அதை விட மேலான வணக்க வழிபாடுகளுக்கு இன்னும் சிறப்பாகப் பொருந்தும்.

பின்வரும் வசனங்களும் இதே கருத்தைக் கூறுகின்றன.

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் பெற்றோரும், உங்கள் சகோதரர்களும் நம்பிக்கையை விட (இறை) மறுப்பை விரும்புவார்களானால் அவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்! உங்களில் அவர்களை உற்ற நண்பர்களாக்குவோரே அநீதி இழைத்தவர்கள்.

அல்குர்ஆன் 9:23

நம்பிக்கை கொண்டோரை விடுத்து (ஏக இறைவனை) மறுப்போரை அவர்கள் உற்ற நண்பர்களாக்கிக் கொண்டனர். கண்ணியத்தை அவர்களிடம் தேடுகிறார்களா? கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது.

அல்குர்ஆன் 4:139

நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்டோரை விடுத்து (ஏக இறைவனை) மறுப்போரை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! உங்களுக்கு எதிராக தெளிவான சான்றை அல்லாஹ்வுக்கு ஏற்படுத்திக் கொடுக்க விரும்புகிறீர்களா?

அல்குர்ஆன் 4:144

தொழுகையில் நமக்காகவும் அனைவருக்காகவும் பாவ மன்னிப்புக் கோரும் துஆக்கள் உள்ளன. அந்த துஆவில் இமாமும் அடங்குவார். இணை கற்பிப்பவர்களுக்காகப் பாவமன்னிப்பு கோருவதைப் பின்வரும் வசனம் தடை செய்யும் வகையில் உள்ளது.

இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.

அல்குர்ஆன் 9:113

இணை கற்பிப்பவரை இமாமாக ஏற்றுப் பின்பற்றுவதன் மூலம் அல்லாஹ்வின் இந்தக் கட்டளை – நபிகள் நாயகத்துக்கும் இப்ராஹீம் நபிக்கும் கூட தளர்த்தப்படாத இந்தக் கட்டளை – மீறப்படும் நிலை ஏற்படும்.

எனவே இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்ற அறவே அனுமதி இல்லை என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த இடத்தில் ஒரு சந்தேகத்தைச் சிலர் எழுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் அனைத்து முஸ்லிம்களுக்கான பல போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். அவர்களில் இணை கற்பிப்பவர்களும் உள்ளனர். அவர்களையும் ஒரு பக்கம் முஸ்லிம்கள் என்று ஒப்புக் கொண்டு இன்னொரு பக்கம் இணை கற்பிப்பவர்கள் என்று முத்திரை குத்துவது ஏன்? அவர்கள் பின்னே தொழக் கூடாது என்று கூறுவது ஏன்?

இது தான் அந்தக் கேள்வி. தவ்ஹீத் ஜமாஅத் அனைத்து முஸ்லிம்களுக்காகவும் போராடக் கூடாது என்பதற்காக இப்படி கேட்கிறார்களா? அல்லது அவர்கள் பின்னால் தொழலாம் என்று ஃபத்வாவை மாற்ற வேண்டும் என்பதற்காக இவ்வாறு கூறுகிறார்களா? என்பது நமக்குப் புரியவில்லை.

ஆனாலும் இதற்குப் பதில் சொல்லும் கடமை நமக்கு உண்டு.

இணை வைக்கும் இமாமைப் பின்பற்றி தொழக் கூடாது என்று நாம் ஆதாரத்தின் அடிப்படையில் கூறுவது போலவே அவர்களை முஸ்லிம்கள் பட்டியலில் சேர்ப்பதும் ஆதாரத்தின் அடிப்படையில் தான்.

ஒருவர் அல்லாஹ்வின் பதிவேட்டில் முஸ்லிமாக இருப்பது வேறு. உலகக் கணக்கில் முஸ்லிம்கள் பட்டியலில் சேர்க்கப்படுவது வேறு. ஒருவர் உலகில் முஸ்லிம்கள் கணக்கில் சேர்க்கப்பட்டால் முஸ்லிம் என்ற உலக நன்மையை அவரும் பெற்றுக் கொள்வார் என்பதும் இஸ்லாத்தின் நிலைபாடு தான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் கிராமவாசிகள் இஸ்லாத்தின் கொள்கையை நம்பாமல் தங்களை மூமின்கள் நம்பிக்கையாளர்கள் என்ற பட்டியலில் சேர்த்துக் கொண்டனர். இதை அல்லாஹ் கண்டித்து, அவ்வாறு கூறக் கூடாது; ஆனால் முஸ்லிம்கள் என்று கூறிக் கொள்ளலாம் என்று அனுமதிக்கிறான்.

நம்பிக்கை கொண்டோம்என்று கிராமவாசிகள் கூறுகின்றனர். “நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. நம்பிக்கை உங்கள் உள்ளங்களில் நுழையவில்லை. மாறாக, “கட்டுப்பட்டோம்என்று கூறுங்கள்என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் நீங்கள் கட்டுப்பட்டால் உங்கள் செயல்களில் எதையும் அவன் குறைத்து விட மாட்டான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 49:14

தமிழாக்கத்தை மட்டும் பார்த்தால் நாம் கூறுவதைப் புரிந்து கொள்ள முடியாது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள அரபு மூலத்தையும் கவனித்தால் தான் முழுமையாகப் புரியும்.

கிராமவாசிகள் “ஆமன்னா’ எனக் கூறினார்கள். இது ஈமான் என்ற சொல்லில் இருந்து பிறந்தது. அதாவது தம்மை மூமின்கள் என்று அவர்கள் வாதிட்டனர். நம்பிக்கை உங்கள் உள்ளங்களில் நுழையவில்லை என்று கூறி அவர்களிடம் ஈமான் இல்லை என்று அல்லாஹ் தெளிவுபடுத்தி விட்டு “அஸ்லம்னா’ என்று கூற அனுமதிக்கிறான். “அஸ்லம்னா’ என்பது இஸ்லாம் என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும். அதாவது வெளிப்படையான செயல்களில் கட்டுப்பட்டோம் என்ற பொருள் தரும் வகையில் “அஸ்லம்னா’ (முஸ்லிம்களாக இருக்கிறோம்) என்று அல்லாஹ் கூறச் சொல்கிறான்.

அவர்களிடம் ஈமான் இல்லாவிட்டாலும் வெளிப்படையாக முஸ்லிம்கள் என்று சொல்லலாம் என்று அல்லாஹ் அனுமதிப்பதை இதிலிருந்து அறியலாம்.

இதே கருத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் தெளிவுபடுத்துகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் அமர்ந்திருந்த போது, அவர்கள் மக்களில் ஒரு குழுவினருக்கு மட்டும் (தர்மப் பொருட்களை) கொடுத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு வேண்டிய ஒருவரை (அவருக்கு கொடுக்காமல்) விட்டுவிட்டார்கள். ஆகவே நான், “அல்லாஹ்வின் தூதரே! (அவரை ஏன் விட்டுவிட்டீர்கள்?) அவர் மீது உங்களுக்கு என்ன அதிருப்தி? அல்லாஹ்வின் மீதாணையாக! அவரை நான் நம்பிக்கையாளர் (மூமின்) என்றே கருதுகின்றேன்என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரை முஸ்லிம் என்று சொல்என்றார்கள். சிறிது நேரம் நான் அமைதியாக இருந்தேன். தொடர்ந்து நான் அவரைப் பற்றி அறிந்திருந்த விஷயங்கள் என்னையும் அறியாமல் (என் நாவில்) வந்த போது முன்பு சொன்னதையே திரும்பவும் சொன்னேன். “அவர் மீது உங்களுக்கு என்ன அதிருப்தி? அல்லாஹ்வின் மீதாணையாக! நிச்சயமாக நான் அவரை ஒரு நம்பிக்கையாளர் (மூமின்) என்றே கருதுகிறேன்என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரை முஸ்லிம் என்று சொல்என்றார்கள். அவரைப் பற்றி நான் அறிந்திருந்த விஷயத்தை என்னையும் மீறி மீண்டும் மீண்டும் கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பழைய பதிலையே கூறி விட்டு, “ஸஅதே! (அன்பளிப்புகள் எதுவாகட்டும்) நான் ஒருவருக்குக் கொடுக்கிறேன்; ஆனால் நான் யாருக்குக் கொடுக்கவில்லையோ அவர் என் அன்புக்குப் பாத்திரமானவராய் இருக்கிறார். (அவருக்கு நான் கொடுக்காதிருந்தால் இல்லாமையால் அவர் குற்றங்கள் எதும் இழைத்து அதனால்) அவரை இறைவன் நரகில் முகம் குப்புறத் தள்ளி விடுவானோ எனும் அச்சம் தான்என்றார்கள்.

அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

நூல்: புகாரி 27

உலகில் முஸ்லிமாகக் கருதப்படுவது வேறு அல்லாஹ்விடம் முஸ்லிமாகக் கருதப்படுவது வேறு என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் நாம் தொழுவது போன்று தொழுது, நமது (தொழும் திசையான) கிப்லாவை முன்னோக்கி, நம்மால் அறுக்கப்பட்டதைப் புசிக்கின்றாரோ அவர் தாம் முஸ்லிம். அத்தகையவருக்கு அல்லாஹ்வின் பொறுப்பும் (காப்புறுதியும்) அவனுடைய தூதரின் பொறுப்பும் (காப்புறுதியும்) உண்டு. எனவே (இப்படிப்பட்டவர் மீது) அல்லாஹ் ஏற்றுக் கொண்டிருக்கும் பொறுப்பில் அல்லாஹ்வுக்கு வஞ்சனை செய்து விடாதீர்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: புகாரி 391

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என இம்மக்கள் (உறுதி) கூறும் வரை அவர்களோடு போரிட வேண்டுமென நான் பணிக்கப்பட்டுள்ளேன். எனவே இதை அவர்கள் கூறி, நாம் தொழுவது போன்று தொழுது, நமது (தொழும் திசையான) கிப்லாவை முன்னோக்கி, நம்மால் அறுக்கப்பட்டதை அவர்கள் புசிப்பார்களேயானால் தக்க காரணமின்றி அவர்களுடைய உயிர் உடைமைகள் (மீது கை வைப்பது) நம்மீது விலக்கப்பட்டதாக ஆகிவிடும்; மேலும் அவர்களின் விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ளது.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 392

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், அபூஹம்ஸா! ஓர் அடியாரின் உயிரையும் பொருளையும் தடை செய்வது எது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், யார் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என உறுதி மொழிந்து, நமது (தொழும் திசையான) கிப்லாவை முன்னோக்கி நாம் தொழுவது போன்றே தொழுது, நம்மால் அறுக்கப்பட்டதைப் புசிக்கின்றாரோ அவர் தாம் முஸ்லிம். மற்ற முஸ்லிம்களுக்கு கிட்டும் லாபமும் அவருக்கு உண்டு; மற்ற முஸ்லிம்களுக்கு ஏற்படும் நட்டமும் அவருக்கு உண்டு என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: மைமூன் பின் சியாஹ்

நூல்: புகாரி 393

ஒருவர் வெளிப்படையான காரியங்களைச் செய்தால் இஸ்லாமிய அரசில் அவர் முஸ்லிமாகக் கருதப்பட்டுவார். அனைத்து முஸ்லிம்களுக்கு உள்ள உரிமையைப் பெறுவார். ஆனால் அவர் உண்மையில் மூமினாக இல்லாவிட்டால் அவரைப் பற்றிய விசாரணை அல்லாஹ்விடம் உள்ளது என்று தெளிவுபடுத்துகிறார்கள். இஸ்லாமிய அரசாங்கம் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் ஈமான் இல்லாத கிராமவாசிகள் முஸ்லிம்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதை அடிப்படையாக வைத்து, தன்னை முஸ்லிம் என்று சொல்பவரை உலகக் கணக்கில் முஸ்லிம்கள் பட்டியலில் நாமும் சேர்க்க வேண்டும்.

நபிகள் நாயகத்துக்குப் பின் இன்னொருவரை நபி என்று ஏற்றுக் கொண்டவர்கள் இதில் அடங்க மாட்டார்கள். அவர்கள் தனி மதத்தவர்களாவர். காதியானி, 19 கூட்டத்தினர் இதில் அடங்க மாட்டார்கள்.

அதே சமயம் இணை கற்பிப்பவர்களை இமாமாக ஏற்கக் கூடாது; இணை கற்பிப்பவர்களைத் திருமணம் செய்யக் கூடாது; இணை கற்பிப்பவருக்குப் பாவ மன்னிப்பு கேட்கக் கூடாது போன்ற கட்டளைகளையும் பேணிக் கொள்ள வேண்டும். உலக விஷயங்களில் உலக உரிமைகளில் முஸ்லிம் என்று ஒருவர் சொல்லிக் கொண்டால் அவரை முஸ்லிம்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும். இரண்டுமே ஆதாரங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு தான்.

மாற்றுக் கருத்துக்கு மறுப்பு

இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாம் என்று வாதிட்டு ஒரு இணைய தளம் சில வாதங்களை எடுத்து வைத்தது. அவர்கள் இது குறித்து எடுத்து வைக்கும் வாதங்கள் சரிதானா? என்பதைப் பார்ப்போம்.

அவர்களின் முதல் வாதம்

இணை வைக்கும் (ஷிர்க்) இமாமைப் பின்பற்றலாமா?

(நபியே!) எவன் நிராகரிப்பானோ அவனுடைய குஃப்ரு – நிராகரிப்பு உம்மை விசனப்படுத்த வேண்டாம். அவர்களின் மீளுதல் நம்மிடத்தில் தான் இருக்கிறது. அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை அப்போது நாம் அவர்களுக்கு அறிவிப்போம். நிச்சயமாக அல்லாஹ்வே இருதயங்களில் உள்ளவற்றை அறிபவன். (31:23)

தோல்வியுற்று ஓடும் எதிரிப் படையில் ஒருவனை நபித்தோழர் ஒருவர் பாய்ந்து அவரைத் தாக்க முற்பட்டபோது அவர் “லா இலாஹ இல்லல்லாஹுஎன்று கூறினார். அப்போது நபித்தோழர் அதைப் பொருட்படுத்தாமல் அவரை வெட்டி வீழ்த்தி விட்டார். பிறகு அவரை வெட்டியது பற்றி வருந்தி நபி (ஸல்) அவர்களிடம் இது விஷயத்தை எடுத்து கூறினார். அப்போது அவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே கலிமாவைக் கூறினான் என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நீர் அவனது உள்ளத்தைப் பிளந்து பார்த்தீரோ? உள்ளக் கிடக்கியை நாவின் மூலமே வெளியிட முடியும்என்றார்கள்.

அறிவிப்பாளர்: கபீஸா பின் துவைபு (ரழி)

நூல்: முஸ்னத் அப்திர் ரஜ்ஜாக், இப்னு அஸாக்கீர்

இந்த குர்ஆன் ஹதீஸ் இரண்டிலுமிருந்து ஒருவனுடைய உள்ளத்தின் நிலை பற்றிய திட்டமான அறிவு அல்லாஹ்விடம் மட்டுமே இருக்கிறது. அது விஷயத்தில் நாம் தலையிடுதல் கூடாது என்பதை சுட்டிக் காட்டுகின்றன.

ஒருவனுடைய உள்ளத்தில் உள்ளதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது என்பது யாராலும் மறுக்க முடியாத இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. அதே சமயம் வெளிப்படையாகத் தெரிவதை வைத்து முடிவு எடுக்க வேண்டும் என்பதும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. ஒரு கொள்கையைப் பேசும் இவர்களுக்கு இன்னொரு பக்கம் அது தொடர்பான மார்க்க அறிவு இல்லாததே இந்த வாதத்தின் அடிப்படை.

இணை கற்பிக்கும் இமாம் என்று நாம் எப்படி முடிவு செய்கிறோம்? அவரது உள்ளத்தில் ஊடுறுவிப் பார்த்துத் தான் முடிவு செய்கிறோமா? நிச்சயமாக இல்லை. வெளிப்படையான அவரது செயலைப் பார்க்கிறோம். அது அப்பட்டமான இணை வைப்பாக இருக்கிறது. இதை வைத்து அவர் இணை கற்பிக்கிறார் என்று நாம் முடிவு செய்கிறோம்.

இவர்கள் எடுத்துக் காட்டும் ஹதீஸும் அதைத் தான் சொல்கிறது. ஒருவர் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறி விட்டார். இது வெளிப்படையாகத் தெரிகிறது. இதை வைத்து முடிவு செய் என்று நபிகள் நாயகம் (ஸல்) வழிகாட்டுகிறார்கள். அது போல் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறியவர் ஒரு கல்லை வணங்குகிறார். இதுவும் வெளிப்படையானது தான். லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதை இவர் நம்பவில்லை என்பதை இவரே வெளிப்படுத்தி விட்டார். ஆனால் இப்போது வெளிப்படையானதை வைத்து முடிவு செய்யக் கூடாது என்பது இவர்களின் ஆராய்ச்சி.

“உள்ளத்தைப் பிளந்து பார்த்து முடிவு எடுக்க முடியாது’ என்று கூறப்படுவதை, “வெளிப்படையாகத் தெரிந்தாலும் முடிவு எடுக்கக் கூடாது’ என்று விளங்கும் இவர்கள் எவ்வளவு அறிவாளிகள் என்று தெரிகிறது.

இவர்கள் முதன் முதலில் எடுத்துக் காட்டிய குர்ஆன் வசனத்தை இவர்கள் புரிந்து கொண்டது போல் புரிந்து கொண்டால் ராமகோபாலனையும் இமாமாக ஏற்றுப் பின்பற்றலாம் என்று கூற வேண்டும். (நம்மை எதிர்ப்பதற்காக அவ்வாறு கூறினாலும் ஆச்சர்யம் இல்லை.)

ஏனெனில் காஃபிர்களைப் பற்றித் தான் அவ்வசனம் கூறுகிறது. அவர்களின் உள்ளங்களில் உள்ளதையும் அறிய முடியாது என்பதால் அத்வானி இமாமத் செய்தாலும் அவரைப் பின்பற்றலாம் என்பது தான் இவர்களது ஆய்வின் முடிவு.

திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் இணை கற்பிப்பவர்களுடன் எப்படி நடக்க வேண்டும்; கெட்டவர்களுடன் எப்படி நடக்க வேண்டும் என்றெல்லாம் வழி காட்டப்பட்டுள்ளது. இவர்களின் வாதப்படி அவை யாவும் வீணானவையாகி விடும்.

“ஒருவன் இணை கற்பிப்பவன் என்பதும் ஒருவன் கெட்டவன் என்பதும் அல்லாஹ்வுக்குத் தெரிந்த விஷயம்; நாங்கள் யாரையும் அப்படி நினைக்க மாட்டோம்’ என்றால் இவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைக் கேலி செய்கிறார்கள் என்பது தெரிகிறது.

“உங்கள் புதல்விகளை நல்ல ஒழுக்கமானவனுக்குத் திருமணம் செய்து கொடுங்கள்; கெட்டவனுக்கு திருமணம் செய்து கொடுக்காதீர்கள்’ என்று கூறினால், வெளிப்படையான செயல்களை வைத்து முடிவு எடுக்க முடியும் என்றால் தான் அவ்வாறு கூற முடியும்.

எனவே இவர்கள் வாதத்துக்கும் இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றுவதற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. இணை கற்பிப்பவர் என்ற முடிவு வெளிப்படையான செயல்களை வைத்துத் தான் முடிவு செய்யப்படுகிறது.

இரண்டாவது ஆதாரம்

மறுமை நாளின் போது முறையே புனிதப் போரில் ஷஹீதானவரில் ஒருவரையும், தானும் கற்று பிறருக்குத் கற்பித்துக் கொடுத்த ஆலிம் – அறிஞரில் ஒருவரையும், நிறைய செல்வங்கள் அளிக்கப்பட்ட செல்வந்தரில் ஒருவரையும் கொண்டு வரப்பட்டு முதன் முதலாக இவர்களுக்கு தீர்ப்பளிக்கப்படும். இவர்களில் ஒவ்வொருவருக்கும் தான் செய்துள்ள அருட் கொடைகளை அல்லாஹ் அவர்களுக்கு எடுத்து உணர்த்துவான். அப்போது அவர்களும் அதை உணர்ந்து கொள்வார்கள். அப்போது அவர்களை நோக்கி நீங்கள் இவற்றிற்காக என்ன கைமாறு செய்தீர்கள் என்று கேட்பான். அதற்கு ஒருவர் (யா அல்லாஹ்) நான் உனக்காக குர்ஆனை ஓதினேன். இல்மை நானும் கற்று பிறருக்கு கற்பித்தும் கொடுத்தேன் என்பார். மூன்றாம் நபர் நீ விரும்பும் அத்துனை விஷயங்களுக்கும் நான் உனக்காக அனைத்துப் பொருள்களையும் செலவு செய்தேன் என்பார்.

அப்போது அல்லாஹ் முதலாம் நபரை நோக்கி நீர் பொய் சொல்கிறீர். உண்மையில் நீ ஒரு மாவீரன் என்று அழைக்கப்படுவதற்காக வெட்டப்பட்டு ஷஹீதாகியுள்ளீர். அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது என்று கூறி முகம் கவிழ இழுக்கப்பட்டு நரகத்தில் தள்ளப்படுவார். மற்றொருவரை நோக்கி நீர் பொய் சொல்கிறீர் உண்மையில் நீ ஓர் ஆலிம் – அறிஞர் அழகாக ஓதுபவர் என்று அழைக்கப்படுவதற்காக செயல்பட்டுள்ளீர். அவ்வாறு கூறப்பட்டு விட்டது என்று கூறி இவரும் முகம் கவிழ இழுக்கப்பட்டு நரகத்தில் தள்ளப்படுவார். மூன்றாமவரை நோக்கி, நீரும் பொய் சொல்கிறீர். உண்மையில் நீர் ஒரு கொடை வள்ளல் என்று அழைக்கப்படுவதற்காகவே செலவு செய்துள்ளீர். அவ்வாறு அழைக்கப்பட்டு விட்டது என்று கூறி முகம் கவிழ இவரும் இழுக்கப்பட்டு நரகில் தள்ளப்படுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(ஹதீஸ் சுருக்கம்: அபூஹுரைரா (ரழி), முஸ்லிம்)

சத்தியத்தை நிலை நாட்டுவதற்காக ஒருவர் அந்த சத்தியத்தை எதிர்த்து போராடுபவர்களை எதிர்த்து சண்டையிட்டு மரணிக்கிறார். அதனை நாம் கண்ணால் காணுகிறோம். அந்த சண்டையில் வெட்டுப்பட்டு மரணிப்பதும் நமக்கு தெரிகிறது. நம் காணும் அறிவின் படி அவர் வெட்டுப்பட்டு ஷஹீதாகியுள்ளார். ஆனால் அப்படிப்பட்ட ஷஹீதை முதன் முதலில் அல்லாஹ் நரகில் எறிகிறான் என்பதை இந்த ஹதீஸ் கூறுகிறது.

அடுத்து ஆலிம் ஒருவர் தனது அறிவைக் கொண்டு மக்களை அல்லாஹ்வின்பால் அழைக்கிறார். அவரது உபதேசங்களைக் கேட்டு ஆயிரக்கணக்கானோர் உண்மையை உணர்ந்து தங்களின் தவறுகளை விட்டு தௌபா செய்து நேர்வழிக்கு வந்து விடுகின்றனர். அவரைப் பெரும் சீர்த்திருத்தவாதி என உலகமே போற்றுகிறது. அப்படிப்பட்ட ஒரு ஆலிமையும் அல்லாஹ் நரகில் எறிவதாகவும் இந்த ஹதீஸ் கூறுகிறது.

அதே போல் மிகப் பெரிய செல்வந்தர் தமது செல்வங்களில் பெரும் பகுதியை அல்லாஹ்வுடைய பாதையில் அள்ளித் தருவதை நமது கண்களாலேயே பார்க்கிறோம். அவர் பெரும் கொடை வள்ளல் என்று அனைவரும் கூறுகின்றனர். ஆனால் அல்லாஹ் அவரையும் நரகில் எறிவதாக இந்த ஹதீஸ் கூறுகிறது.

இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? நாம் நமது கண்களால் திட்டமாகப் பார்ப்பதை வைத்தோ, அல்லது நமது அறிவு ஆராய்ச்சியால் திட்டமாக விளங்கியோ ஒருவனுடைய உள்ளத்தில் இருப்பது ஈமானா – இறை விசுவாசமா, குஃப்ரா – இறைநிராகரிப்பா என்று முடிவு கட்டிவிட முடியாது. அந்த இரகசியம் அல்லாஹ்வுக்கே வெளிச்சம். கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் பார்ப்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று நம் நாட்டு பழமொழி. ஆயினும் இங்கு ஒருவனுடைய உள்ளத்திலிருப்பதை தீர விசாரித்தும் நம்மால் அறிந்து கொள்ள முடியாது. இந்த நிலையில் தொழ வைக்கும் ஒரு இமாமின் குப்ரை பற்றித் திட்டமாகத் தெரிந்து கொள்வது எப்படி சாத்தியம்?

மீண்டும் அதே அறியாமை தான் இங்கும் வெளிப்படுகிறது. இவ்வுலகில் நாம் நல்லவன் என்று நினைத்தவன் மறுமையில் கெட்டவனாக இருக்கலாம். நாம் கெட்டவன் என்று நினைத்தவன் மறுமையில் நல்லவனாக இருக்கலாம் என்பது வேறு. இவ்வுலகில் வெளிப்படையானதை வைத்து நல்லவன் கெட்டவன் என்று முடிவு எடுக்கலாமா என்பது வேறு. இந்த அடிப்படையும் இவர்களுக்குத் தெரியவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே சிலரை நல்லவர்கள் என்று முடிவு செய்திருப்பார்கள்; ஆனால் அவர்கள் மறுமை நாளில் ஹவ்லுல் கவ்ஸருக்குச் செல்ல முடியாமல் தடுக்கப்படுவார்கள் என்று உள்ளது. நாம் வெளிப்படையானதை வைத்து முடிவு எடுக்க வேண்டும்; ஆனால் அல்லாஹ்வின் முடிவும் இப்படித் தான் இருக்கும் என்று கூற முடியாது.

இவர்கள் எடுத்துக் காட்டும் ஹதீஸின் படி மூன்று பேர் தண்டிக்கப்பட்டனர். ஆனால் அந்த மூன்று பேரையும் வெளிப்படையான செயல்களை வைத்து நல்லவர்கள் என்று கூறியவர்கள் கண்டிக்கவோ தண்டிக்கவோ படவில்லையே?

சரி! இவர்கள் உலக வாழ்க்கையில் அப்படித் தான் நடக்கிறார்களா? வெளிப்படையாக இவர்களுக்கு எதிராக நடப்பவர்களை இவர்கள் ஏன் எதிரிகளாக நினைக்கின்றனர்? அவர்களின் உள்ளத்தில் உள்ளது எங்களுக்குத் தெரியாது என்று கூறக் காணோமே?

மார்க்கத்தை வளைப்பதற்கு மட்டும் இந்தத் தவறான வாதத்தை எடுத்து வைப்பவர்கள், சொந்த விஷயம் என்று வரும் போது ஒருவனை கெட்டவன் என்று முடிவு செய்வது ஏன்?

இதிலிருந்து இவர்கள் செய்வது சந்தர்ப்பவாதம் என்பது தெரிகிறது.

எந்த மனிதனையும் நாங்கள் வெளிப்படையான செயல்களை வைத்து கண்டிக்க மாட்டோம் என்று அறிவித்து, அதன் படி நடக்கத் தயாரா? இல்லை என்றால் அவர்கள் ஏதோ புதிதாக எதையாவது கூறி, பேர் எடுக்க வேண்டும் என்பதற்காகக் கூறுகிறார்கள் என்பது உறுதியாகிறது.

மனிதர்கள் இவ்வுலகில் வாழும் போது வெளிப்படையான செயல்கள் அடிப்படையில் முடிவு செய்யும் நிலையில் தான் படைக்கப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில் ஒருவரைப் பற்றி முடிவு செய்தால் அதன் பொருள் என்ன? எங்களுடைய சக்திக்கு உட்பட்டு வெளிப்படையானதைத் தான் பார்க்க முடியும். அதன்படி தான் முடிவு செய்ய முடியும். அவ்வாறு முடிவு செய்வதை அல்லாஹ் அனுமதித்துள்ளான். ஆனால் நாங்கள் செய்த முடிவுக்கு மாற்றமாக அல்லாஹ்வின் முடிவு இருக்கலாம். இவ்வளவு அர்த்தத்தையும் உள்ளடக்கியே ஒருவனை நல்லவன் என்றோ கெட்டவன் என்றோ ஒரு முஸ்லிம் கூறுகிறான். இதைக் கூட விளங்காதவர்கள் ஆய்வு செய்யக் கிளம்பி விட்டனர்.

என்னிடம் வழக்கு கொண்டு வருவார்கள். வெளிப்படையான வாதத்தை வைத்து நான் ஒருவருக்கு சார்பாகத் தீர்ப்பளித்து விடுவேன். ஆனால் மறுமையில் வேறுவிதமாக தீர்ப்பு இருக்கலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதைக் கவனித்தால் இன்னும் இது தெளிவாகும்.

மேற்படி கருத்துடையவர்கள் நீதிபதி பொறுப்பில் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒரு பொருள் யாருக்குச் சொந்தம் என்று இரண்டு பேர் வழக்கு கொண்டு வருகின்றனர். இந்த நீதிபதி, “இது யாருக்கு உரியது என்று அல்லாஹ்வுக்குத் தான் தெரியும். நான் தீர்ப்பளிக்க மாட்டேன்” என்று தீர்ப்பளிப்பார்.

ஒருவர் விபச்சாரம் செய்ததாக வழக்கு வருகிறது. தக்க சாட்சிகள் உள்ளனர். இருந்தாலும் இவர் விபச்சாரம் செய்தாரா இல்லையா என்று அல்லாஹ்வுக்குத் தான் தெரியும். நான் தீர்ப்பு அளிக்க மாட்டேன் என்று இந்த நீதிபதி கூறுவார்.

இஸ்லாத்தைக் கேலிக் கூத்தாக்கும் எவ்வளவு ஆபத்தான வாதத்தை எடுத்து வைக்கின்றனர் என்பதை விளக்குவதற்காகவே இவ்வாறு தெளிவுபடுத்துகிறோம்.

இணை கற்பிப்பவரை இமாமாக ஏற்கலாம் என்ற கருத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்லாத ஆதாரங்களை பொருத்தமில்லாத இடத்தில் பொருத்தமில்லாத வகையில் பயன்படுத்தியுள்ளனர்.

மூன்றாவது வாதம்

மக்கத்து காபிர்களின் அதே கொள்கையைத் தங்களின் கொள்கையாகக் கொண்டிருப்பதை இணை வைத்தலை ஆதரிப்பதை நம்மால் திட்டவட்டமாக ஊர்ஜிதம் செய்ய முடியாது. இந்த நிலையில் தன்னை முஸ்லிம் என்று சொல்வதோடு இந்த உம்மத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ள ஒருவர் அல்லாஹ்வின் கட்டளையின்படியும் நபி(ஸல்) அவர்களின் நடைமுறைப்படியும் ஒருவர் தொழும் போது அதனைப் பின்பற்றித் தொழமாட்டேன் என்று எவ்வாறு ஒரு முஸ்லிம் சொல்ல முடியும்? அப்படிச் செய்தால் அல்லாஹ்வின் கட்டளையையே நிராகரித்த குற்றத்திற்கல்லவா ஆளாக நேரிடும். மேலும் அப்படிப்பட்ட ஒருவரைப் பின்பற்றித் தொழுவதால் அவரின் தவறான கொள்கைகளுக்கும் நாம் துணை போவதாகப் பொருளாகாது.

அவர்களைப் பின்பற்றித் தொழுதால் தான் அல்லாஹ்வின் கட்டளையை நிராகரித்ததாக ஆகுமென்பதை அல்லாஹ்வின் வசனங்களை எடுத்துக் காட்டி நமது கட்டுரையில் முன்னரே விளக்கி விட்டோம்.

நான்காவது ஆதாரம்

ஒரு முறை ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்களிடம் பித்அத்தையுடைய இமாமுக்குப் பின்னால் நின்று தொழுவது பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அத்தகையவருக்குப் பின்னால் அவருடைய “பித்அத்’ அவரிடமே இருக்கும் நிலையில் தொழுவீராக! என்றார்கள்.

ஹிஷாமும் பின் ஹஸ்ஸான் (ரஹ்), முஸ்னத் ஸயீது பின் மன்சூர்

அதிய்யு பின் கியார் என்பவர் உஸ்மான் (ரழி) அவர்களிடம் வந்து, நீங்கள் அனைவருக்கும் பொது இமாமாக இருந்து கொண்டிருந்தீர்கள். இப்போது நாங்கள் காணும் நிலையில் உங்களுக்குத் துன்பம் வந்து சம்பவித்துள்ளது. (இப்போது) எங்களுக்குக் குழப்பவாதியான இமாம் தொழுகை நடத்துகிறார். அவரைப் பின்பற்றித் தொழுதால் நாமும் பாவிகளாகி விடுவோமோ என்று கருதி சங்கடப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்றார்கள். அதற்கு அவர்கள் “தொழுகை தான் மக்களுடைய அமல்களில் மிக்க அழகானதாகும். மக்கள் அதை அழகுறச் செய்யும் போது, அவர்களுடன் சேர்ந்து நீரும் அதை அழகுறச் செய்து கொள்வீராக! அவர்கள் தீமை விளைவிப்பவர்களாய் இருப்பின் அவர்களின் அத்தீமையை நீர் செய்யாமல் உம்மை தற்காத்துக் கொள்வீராக’ என்றார்கள்.

அதிய்யு பின் கியார் (ரஹ்), புகாரி

மேற்காணும் உஸ்மான் (ரழி) அவர்களின் கூற்றிலிருந்து தொழ வைப்பவர், அவர் “பித்அத்’காரராக அல்லது வேறு தவறுகள் செய்பவராக இருப்பினும், நாம் ஜமாஅத்துடைய பலன் இழந்து நஷ்டம் அடைவதை விட அவர்களுடன் சேர்ந்து ஜமாஅத் தொழுவதே மேல் என்பதை அறிய முடிகிறது.

பின்பற்றி தொழுவோர் முறையாகத் தொழுதிருக்கும் போது, இமாம் முறைகேடாகத் தொழுது இமாமுடைய தொழுகை முறிந்து விடுவதால், அவரை பின்பற்றித் தொழுதவரின் தொழுகைக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது.

“உங்களுக்கு சில இமாம்கள் தொழுகை நடத்துவார்கள். அவர்கள் முறையாகத் தொழ வைப்பார்களானால் உங்களுக்கு நல்லது தான். அவர்கள் தவறிழைப்பார்களானால் உங்களுக்கு நல்லது தான். அன்றி அவர்களுக்குத் தான் கேடு என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அபூஹுரைரா (ரழி), புகாரி

இப்னு உமர் (ரழி) அவர்கள் ஹஜ்ஜாஜு பின் யூசுப் எனும் மிகக் கொடிய அநியாயம் செய்தவனுக்குப் பின்னால் தொழுதுள்ளார்கள் என்று இமாம் புகாரி (ரஹ்) அவர்களும், அபூஸயீதில் குத்ரி (ரழி) அவர்கள் பெரும் குழப்பவாதியாக இருந்த “மர்வான்’ என்பவருக்குப் பின்னால் பெருநாள் தொழுகை தொழுதுள்ளார்கள் என்பதாக இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்களும், மற்றும் திர்மிதீ, அபூதாவூத், நஸயீ முதலியோரும் தமது நூல்களில் வெளியிட்டுள்ளார்கள்.

அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரழி) அவர்கள் காலத்தில் இப்னு உமர் (ரழி) அவர்கள் கஷ்பிய்யா, காரிஜிய்யா ஆகிய பெரும் குழப்பவாதிகளுக்குப் பின்னால், அவர்கள் தமக்குள் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தொழுதார்கள்.

அது சமயம் அவர்களை நோக்கி, தமக்குள் சண்டை செய்து கொண்டும் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்தாருக்கு பின்னால் நின்று தொழுகிறீர்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், யார் “ஹய்ய அலஸ்ஸலாஹ்’ (தொழுகைக்கு வாருங்கள்) என்று அழைப்பு விடுகிறாரோ, அவருக்குப் பதில் அளிப்பேன். யார் “ஹய்ய அலல் ஃபலாஹ்’ (வெற்றியடைவதற்கு வாருங்கள்) என்று அழைப்பு விடுகிறாரோ, அவருக்கும் பதில் அளிப்பேன். ஆனால் யார் “ஹய்ய அலா கத்லி அக்கீல் முஸ்லிமி வ அக்தி மாலிஹீ’ (உமது சகோதர முஸ்லிமை வெட்டி அவருடைய பொருளை அபகரிப்பதற்காக வாருங்கள்) என்று அழைப்பு விடுகிறாரோ, அதற்கு மாட்டேன் என்று கூறிவிடுவேன் என்றார்கள்.

நாபிவு (ரழி), ஸூனனு ஸயீதுபின் மன்சூர்

ஒரு முறை அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்களிடம் ஒளூவில்லாமல் ஒருவர் மக்களுக்கு தொழ வைத்து விட்டால் என்ன செய்ய வேண்டும்? என்பதாக கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், அவர் மட்டும் தொழுகையை மீட்ட வேண்டும்; அவரைப் பின்பற்றி தொழுதவர்கள் மீட்ட வேண்டியதில்லை என்றார்கள்.

ஸாலிம் (ரழி),  தாரகுத்னீ

ஒரு முறை உமர் (ரழி) அவர்கள் தாம் ஜுனுபாளி – குளிப்புக் கடமை உள்ளவர்களாயிருக்கும் போது (விஷயம் தெரியாமல்) மக்களுக்குத் தொழ வைத்து விட்டார்கள். பின்னர் (விஷயம் தெரிந்ததும்) மீட்டித் தொழுதார்கள். ஆனால் தொழுகையை மீட்டும்படி மற்றவர்களுக்கு அவர்கள் ஏவவில்லை.

அஷ்ஷரீதுஸ்ஸகஃபி, தாரகுத்னீ

மேற்காணும் ஹதீஸ்கள் அஃதர்- ஸஹாபாக்களின் சொற்செயல்கள் வாயிலாக தொழ வைக்கும் ஓர் இமாம் அவர் தொழுகையிலோ அல்லது வெளியிலோ என்ன கோளாறுகள் செய்திருந்தாலும் அவற்றால் அவருடைய தொழுகைக்கு மட்டும் தான் பாதிப்பு ஏற்படுமே தவிர, அவரைப் பின்பற்றித் தொழுவோர் முறையாக தொழுதிருக்கும் போது, அவற்றால் இவர்களின் தொழுகைக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது என்பதை அறிகிறோம். தொழுகையில் இமாம் செய்யும் தவறுகளே மற்றவர்களின் தொழுகையைப் பாதிக்காது எனும் போது, தொழுகைக்கு வெளியில் அவர் செய்யும் தவறு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்த முடியும்?

இங்கே இவர்கள் எடுத்துக் காட்டியுள்ள சம்பவங்களுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. எத்தனையோ பேர் எத்தனையோ கருத்துக்களைக் கூறி இருப்பார்கள். தமது கூற்றுக்கு குர்ஆன் வசனத்தையோ நபிமொழியையோ ஆதாரமாகக் காட்டி இருந்தால் மட்டுமே அதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் இவர்கள் எடுத்துக் காட்டும் சம்பவங்களில் கூட இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாம் என்று கூறப்படவில்லை. எதையாவது போட்டு பக்கத்தை நிரப்புவதற்காக எழுதியுள்ளனர்.

ஒரு வேளை இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாம் என்ற கருத்தை இந்தச் சம்பவங்கள் தெரிவிக்குமானால் திருக்குர்ஆனுக்கு முரணாக அமைந்திருப்பதால் இதை நாம் நிராகரித்து விட வேண்டும்.

இஸ்லாத்தின் மூல ஆதாரங்கள் திருக்குர்ஆனும் நபி வழியும் தான். இணை கற்பிப்பவரை இமாமாக ஆக்க முடியாது என்பது அல்லாஹ்வின் வசனத்தில் இருந்து தெரியும் போது அதற்கு முரணாக அமைந்த எவருடைய சொல்லும் ஆதாரமாகாது என்ற அடிப்படையை விட்டு விலகி நின்று வாதிடுகிறார்கள். மேலும் இவர்கள் எடுத்துக் காட்டிய தனி நபர் தொடர்பான சம்பவங்களில் கூட இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாம் என்பதற்கு ஆதாரம் இல்லை. பாவம் செய்தவர்களைப் பின்பற்றலாமா என்பதற்குத் தான் ஆதாரமாக உள்ளது.

எவர் நமது தொழுகையைத் தொழுகிறாரோ, நமது கிப்லாவை முன்னோக்குகிறாரோ, நாம் அறுத்ததைச் சாப்பிடுகிறாரோ அவர் முஸ்லிம். அவர் அல்லாஹ்வினதும், அல்லாஹ்வின் தூதரினதும் பாதுகாப்பில் உள்ளார். எனவே இந்த பாதுகாப்பில் இருப்பவருக்கு நம்பிக்கை துரோகம் செய்யாதீர்.

அனஸ் (ரழி), புகாரி, அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா, தாரமி, அஹ்மத்

அப்படியானால் அவர் ஒரு முஸ்லிம், மற்ற முஸ்லிம்களுக்கிருக்கும் அதே உரிமைகளும், கடமைகளும் அவருக்கும் உண்டு. (புகாரி) என்று இன்னொரு அறிவிப்பில் இவ்வாறு நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்களிலிருந்து ஷிர்க், பித்அத் சடங்குகளைச் செய்கிறவர்கள் பின்னால் தொழுதாலும், தொழுபவரின் தொழுகை கூடாமல் போகாது; மேலும் இக்காரணங்களைக் கூறி ஒருவர் பின்னால் தொழுவதை ஒருவர் தவிர்த்துக் கொண்டால், அந்த இமாம் முஸ்லிம் இல்லை; காஃபிர் அல்லது முஷ்ரிக் என்று இவர் முடிவு செய்தே பின்பற்றாமல் இருக்கிறார். ஒருவரது உள்ளத்தில் இருப்பதை அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் அறிய முடியாது. அவர்களின் வெளிரங்கமான செயல்களை வைத்து ஒருவரை காஃபிர் என்றோ, முஷ்ரிக் என்றோ ஃபத்வா கொடுக்கும் அதிகாரம் பெற மாட்டார். இதற்குப் பல குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் ஆதாரங்களாக இருக்கின்றன.

இங்கே எடுத்துக் காட்டியுள்ள ஹதீஸ்கள் ஷிர்க், பித்அத்கள் செய்யும் இமாம்களைப் பின்பற்றலாம் என்ற கருத்தைக் கூறுவதாக எழுதி அல்லாஹ்வின் தூதர் மீது பொய்யை இட்டுக்கட்டியுள்ளனர். இந்த ஹதீஸ்களின் கருத்து என்ன என்பதையும், இவர்கள் கூறும் கருத்தை இந்த ஹதீஸ் தரவில்லை என்பதையும் இக்கட்டுரையின் துவக்கத்தில் நாம் விளக்கியுள்ளோம்.