இணை கற்பித்தல் தொடர்: 30
அனைவருக்கும் நிகழும் அற்புதங்கள்
எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.
இறைநேசர்கள் குறிப்பாக நபிமார்கள் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கின்ற காரணத்தினால், அவர்களுக்கு சுயமாகவே அற்புதம் செய்யக்கூடிய ஆற்றல், சக்தி இருக்கின்றது என்று நாம் புரிந்து கொள்ளக் கூடாது என்பதையும் அதற்கான காரணங்களையும், ஆதாரங்களையும் இதுவரை நாம் பார்த்தோம்.
அற்புதங்களைப் பொறுத்தவரை, நபிமார்கள் பல அற்புதங்களைச் செய்தது போல நபிமார்களாக இல்லாத நல்லவர்கள் அற்புதங்கள் செய்ய முடியுமா? நபிமார்கள் அற்புதங்கள் செய்திருக்கிறார்கள். அப்படியானால் நபிமார்களால் மட்டும்தான் அற்புதங்கள் செய்ய முடியுமா? நபிமார்கள் அல்லாதவர்களுக்கும் அற்புதங்கள் ஏற்படுமா? என்பது இரண்டாவதாக நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும்.
நபிமார்களுக்கு மட்டுமில்லாமல் யாருக்கு வேண்டுமானாலும் அற்புதம் நிகழலாம் என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு. ஒருவருக்கு அற்புதம் நிகழ்ந்தது என்றால் அவர் பெரிய மகானாக இருக்க வேண்டும். அவ்லியாவாக இருக்க வேண்டும். அல்லாஹ்வால் பொருந்திக் கொள்ளப்பட்ட அடியாராகத்தான் இருக்க வேண்டும் என்பதற்கு அது அடையாளம் கிடையாது.
எந்த ஒரு முஃமினாக இருந்தாலும் அவருக்கு அல்லாஹ் உதவி செய்ய நாடிவிட்டால் அற்புதமான முறையில் அந்த உதவியை கிடைக்கச் செய்வான். இந்த வகையான ஒரு அற்புதமும் மார்க்கத்தில் இருக்கிறது.
நபிமார்களுடைய அற்புதத்திற்கும், இந்த அற்புதத்திற்கும் என்ன வேறுபாடு என்றால், நபிமார்கள் ஒரு அற்புதத்தைச் செய்வதற்கு முன்னால் அல்லாஹ்விடம் அனுமதி கேட்பார்கள். அதன் பின்னர் நபிமார்கள் வழியாக அந்த அற்புதம் நிகழ்த்தப்படும். இதுபற்றிச் சென்ற இதழில் நாம் பார்த்தோம்.
அல்லாஹ், நபிமார்கள் வழியாக அவர்களுக்குத் தெரிய வைத்து இப்போது செய் என்று சொல்லி கட்டளையிட்டபின் அற்புதங்களைச் செய்வார்கள்.
இதல்லாமல் மற்றவர்களுக்கு நடக்கக்கூடிய அற்புதங்கள் என்னவென்றால், அவர்களுக்கு எந்த ஒரு செய்தியும் இறைவனிடமிருந்து வராது. இப்போது, இவ்வாறு நடக்கும் என்று நமக்கே தெரியாது. அல்லாஹ் நமக்கு உதவி செய்ய வேண்டும் என்று நாடி விட்டால் நாம் அறியாத விதத்தில் நமக்கு அந்த உதவியைச் செய்வான். இதோ அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.
அவர் எண்ணிப் பார்த்திராத வகையில் அவருக்கு உணவளிப்பான். அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன்.
(அல்குர்ஆன் 65.3)
இந்த வசனத்தில், அல்லாஹ் மனிதன் அறியாத விதத்தில் அவர்களுக்கு உணவளிப்பான் என்று மட்டும்தான் வந்துள்ளது. இதையே உணவளிப்பது மட்டுமல்லாமல் மற்ற எல்லா விஷயத்திற்கும் எடுத்துக் கொள்ளலாம். அவனே அறிந்து பார்க்காத அளவுக்கு எத்தனையோ விஷயங்களை அல்லாஹ் செய்வான்.
உதாரணமாக, ஒரு பேருந்து ஒன்று விபத்திற்குள்ளாகின்றது என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பேருந்தில் பயணம் செய்த அனைவரும் இறந்து விடுகின்றார்கள். ஆனால் அதில் அதிசயமான முறையில் ஒருவன் மட்டும் மயிரிழையில் உயிர் பிழைத்திருப்பான். விமானம் நொறுங்கி விழுந்தது. ஆனால் அதில் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்தார்; கார் விபத்துக்குள்ளானது, ஒரு குழந்தை மட்டும் உயிர் பிழைத்தது. இதுபோன்ற ஏராளமான சம்வங்களை நாம் அன்றாடம் பார்த்தும் கேட்டும் வருகின்றோம்.
இந்த உயிர் பிழைத்த மனிதனுக்கு, நாம் மட்டும் சாகாமல் தப்பி விடுவோம் என்று தெரியுமா? அல்லது அல்லாஹ் இந்த விபத்தில் நீ மட்டும் உயிர் பிழைத்துக் கொள்வாய்? மற்ற அனைவரும் இறந்து விடுவார்கள் என்று வஹீ அறிவித்தானா? இல்லை. அவனுக்கே தெரியாத, அறியாத விதத்தில் நடக்கின்ற இந்த நிகழ்வும் ஒரு அற்புதம்தான். ஆனால் அந்த மனிதன் அதைச் செய்யவில்லை.
ஆனால், நபிமார்கள் செய்த அற்புதங்களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்களை நபிமார்கள் என்று நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாலும், தான் நபி என்பதற்கு ஆதாரமாக, அத்தாட்சியாகக் காட்ட வேண்டியிருப்பதாலும் அல்லாஹ் அவர்களுக்குச் சொல்லி அவர்கள் வழியாகவே அந்த அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவான்.
ஆனால் மற்ற மனிதர்களுக்கும் அற்புதங்கள் நிகழுமா என்றால், பணக்காரன், பாமரன், ஏழை உட்பட யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும். ஒரு பணக்காரனுக்கு நடக்காத அதிசயம் ஏழைக்கு நடக்கும். அல்லாஹ் ஒருவனுக்கு சிறப்பு கவனம் எடுத்து உதவி செய்ய நினைத்து விட்டால் இது நடந்து விடும். ஆனால், நபிமார்களுக்கு நடந்தது போன்று அவர்கள் அறிகின்ற விதத்தில் நடக்காது. மற்ற மனிதர்களுக்கு அவர்கள் அறியாத வித்தில் நடக்கும். இதுதான் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்.
நபிமார்களுக்கு அல்லாஹ் தள்ளாத வயதில் குழந்தையைக் கொடுத்த சம்பவத்தை எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு எப்படி குழந்தையைக் கொடுத்தான்? அந்த நபிமார்களிடம் அல்லாஹ் ஒரு வானவரை அனுப்பி நற்செய்தி சொல்லிய பிறகு குழந்தையைக் கொடுத்தான். இவ்வாறு அல்லாஹ் திருமறையில் நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு தள்ளாத வயதில் குழந்தை கொடுத்ததைப் பற்றிக் கூறுவதைப் பாருங்கள்.
அவரது மனைவியும் நின்று கொண்டிருந்தார். அவர் சிரித்தார். அவருக்கு இஸ்ஹாக் பற்றியும், இஸ்ஹாக்குக்குப் பின் யஃகூப் பற்றியும் நற்செய்தி கூறினோம். “இது என்ன அதிசயம்! நான் கிழவியாகவும், இதோ எனது கணவர் கிழவராகவும் இருக்கும் போது பிள்ளை பெறுவேனா? இது வியப்பான செய்தி தான்” என்று அவர் கூறினார். “அல்லாஹ்வின் கட்டளை குறித்தா ஆச்சரியப்படுகிறீர்? அல்லாஹ்வின் அருளும், பாக்கியங்களும் (இப்ராஹீமின்) இக் குடும்பத்தாராகிய உங்களுக்கு ஏற்படட்டும். அவன் புகழுக்குரியவன்; மகத்துவமிக்கவன்” என்று அவர்கள் கூறினர்.
(அல்குர்ஆன் 11: 71,72,73)
இந்த சம்பவம் 51:29,30, 15:53-55, 14:39 ஆகிய வசனங்களிலும் இடம் பெற்றுள்ளது.
மேலும் ஸக்கரிய்யா (அலை) அவர்களுக்கும் தள்ளாத வயதில் தான் குழந்தையைக் கொடுத்ததாக இறைவன் குறிப்பிடுகிறான்.
.அப்போது தான் ஸக்கரிய்யா “இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன்” என்று தம் இறைவனிடம் வேண்டினார். அவர் தொழுமிடத்தில் நின்று தொழுது கொண்டிருந்த போது “யஹ்யாவைப் பற்றி அல்லாஹ் உமக்கு நற்செய்தி கூறுகிறான். அல்லாஹ்வின் வார்த்தையை அவர் உண்மைப்படுத்துவார். தலைவராகவும், ஒழுக்கக் கட்டுப்பாடுமிக்கவராகவும், நபியாகவும், நல்லவராகவும் இருப்பார்” என்று வானவர்கள் அவரை அழைத்துக் கூறினர். “என் இறைவா! எனக்கு முதுமை வந்து விட்ட நிலையிலும், என் மனைவி மலடியாகவுள்ள நிலையிலும் எனக்கு எவ்வாறு குழந்தை உருவாகும்?” என்று அவர் கேட்டார். “தான் நாடியதை அல்லாஹ் இப்படித் தான் செய்வான்” என்று (இறைவன்) கூறினான்.
(அல்குர்ஆன் 3.38,)
இந்தச் சம்பவம் மேலும் 21:89,90, 19:3-10 ஆகிய வசனங்களில் இடம் பெற்றுள்ளது.
இதுபோன்று இப்போதும் கூட யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். இப்ராஹீம் நபி மற்றும் ஸக்கரியா நபிக்குக் கிடைத்த மாதிரி, தள்ளாத வயதுடையவர்களில் யாரோ ஒருவருக்குக் கிடைத்து விடும்.
நாம் செய்தித் தாள்களில் கூடப் படித்திருப்போம். 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி குழந்தையைப் பெற்றெடுத்தாள் என்று. இது ஒரு அதிசயமான, ஆச்சரியமான விஷயம் தான். ஏனென்றால், அந்த வயதில் மாதவிடாய் நின்று விடும். எந்த மருத்துவரிடம் சென்று மாத்திரை மருந்துகள் எடுத்தாலும் குழந்தை பெறுவதற்கான வாய்ப்பே இல்லாத வயது. மருத்துவர்கள் கூட, நீங்கள் குழந்தை பெறும் தகுதியை இழந்து விட்டீர்கள். அல்லது, உங்கள் கணவன் ஆண்மைத் தன்மையை இழந்து விட்டார். இனிமேல் உங்களுக்குக் குழந்தையே பிறக்காது என்று சொல்லி விடுவார்கள்.
ஆனால் அதையும் தாண்டி இறைவன் குழந்தை பெறுவதற்கான வாய்ப்பே இல்லாத பெண்ணுக்கு குழந்தை பாக்கியத்தை வழங்கியிருக்கிறான். அந்தப் பெண், நமக்கு இந்த வயதில் குழந்தை பிறக்கும் என்று அறிந்திருப்பாளா? என்றால் அறிந்திருக்க மாட்டாள். அல்லது, அல்லாஹ் ஒரு வானவரை அனுப்பி நற்செய்தி சொல்லியிருப்பானா என்றால் அதுவும் இல்லை. அவளே அறியாத விதத்தில், நம்பிக்கையற்று இருந்த நேரத்தில் தான் இந்த அற்புதம் நடந்திருக்கிறது. இவ்வாறு சில அற்புதங்களை வழங்குவான்.
அத்தகைய அற்புதங்களை இப்போதும் அல்லாஹ் நிகழ்த்துவான். அந்த அற்புதங்கள் அவரிடம் நிகழ்ந்தவுடன் அவரை அவ்லியா என்று சொல்வதற்கோ, நல்லடியார்கள் என்பதற்கு அடையாளம் என்று சொல்வதற்கோ, அவர் இறைவனால் பொருந்திக் கொள்ளப்பட்ட நல்லடியார் என்று சொல்வதற்கோ எந்த ஆதாரமும் கிடையாது. பொருந்திக் கொள்ளப்பட்டவர்களுக்கும் அவன் அற்புதங்களைச் செய்வான். சாதாரண மனிதர்களுக்கும் அற்புதங்களைச் செய்வான்.
நம் வாழ்க்கையிலும் கூட யாராவது ஒருவருக்கு ஏதாவது ஒரு அற்புதம் – அதிசயம் நிகழ்ந்திருக்கும். உதாரணமாகச் சொல்வதாயிருந்தால், ஒருவருக்கு மிகப் பெரிய நோய் ஒன்று ஏற்பட்டிருக்கும். அல்லது அவர் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பார். மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் அவரை ஸ்கேன் எடுத்து பார்த்து, பரிசோதித்து விட்டு, இவரை இனிமேல் காப்பாற்ற முடியாது. அவர் பிழைப்பது மிகவும் கஷ்டம். அல்லது அவர் பிழைக்கவே மாட்டார். எங்களால் காப்பாற்ற முடியாது. இனிமேல் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லி கைவிரித்து விடுவார்கள். ஆனால், அதற்குப் பிறகு சிறிது நேரத்தில் யாரும் நினைத்துப் பார்க்காத விதத்தில் அவர் உயிர் பிழைத்தார்; அந்த நோயிலிருந்து குணமடைந்தார் செய்தியை நாம் கேள்விப்படுகிறோம்.
இவ்வாறு அவர் உயிர் பிழைத்ததால்- இந்த அதிசயம் நடந்ததால் அவரை அவ்லியா என்று முடிவு செய்ய முடியுமா? இறைவனால் பொருந்திக் கொள்ளப்பட்ட நல்லடியார், அதனால் தான் இவர் உயிர் பிழைத்தார் என்று சொல்ல முடியுமா? முடியாது. அல்லாஹ் அவருக்கு உதவ நாடிவிட்டதால் அவருக்கு உதவி செய்தான். இதனால் அவர் மகான் என்ற முடிவுக்கு வந்து விடக்கூடாது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இன்னும் சொல்லப்போனால், இந்த அற்புதங்கள் முஸ்லிம்களுக்கு மட்டும்தான் நடக்கும் என்பதில்லை. யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும். இறைவனை நம்பாத, இறைவனை மறுக்கின்ற இறைமறுப்பாளர்களுக்கும் சில அற்புதங்களைச் செய்வான். மறுமையில் இவர்களுக்கு எந்தச் சிறப்பும் அந்தஸ்தும் கிடையாது. அவர்களுக்கு நரகம்தான் என்பதில் நமக்குச் சந்தேகமில்லை. ஆனால் இவ்வுலகில் மட்டும் அவர்களுக்கு ஏதேனும் ஒரு சிறப்பை – அந்தஸ்தை வழங்க நினைத்தால், அற்புதத்தைச் செய்து காட்ட நினைத்தால் அதை அல்லாஹ் அவர்களுக்கு நிகழ்த்திக் காட்டுவான்.
மேலும், அற்புதங்களிலேயே மிகப் பெரும் அற்புதத்தை செய்யக்கூடியவன் ஷைத்தானாகத் தான் இருக்கிறான். இவ்வுலகில் இப்லீஸ் செய்த அற்புதங்களுக்கு நிகராக வேறு யாரும் அற்புதங்கள் செய்திருக்கிறார்களா? நம்முடைய உள்ளத்திற்குள் நுழைந்து நம்மைத் திசை திருப்பி விடுகின்றான். நம்முடைய உள்ளத்தில் ஊடுருவுதல் போன்ற விஷயங்கள் அவனிடம் நடக்கின்றது. அற்புதங்கள் என்பது ஷைத்தானிடம் கூட நிகழ்வதனால், அவன் மகான் என்பதற்கு அடையாளமாகுமா? அவனை நல்லடியார் என்று சொல்ல முடியுமா? என்றால் முடியாது.
மேலும், நபிமார்கள் அல்லாமல் நல்லடியார்களுக்கும் அற்புதங்கள் நிகழ்ந்துள்ளதாக அல்லாஹ் குறிப்பிடுகிறான். அவர்களை மாத்திரம் தான் நாம் நல்லடியார்கள் என்று சொல்ல வேண்டுமே தவிர, அவர்களை விடுத்து வேறு யாரையும் நாம் அல்லாஹ்வின் இறைநேசர் என்றோ நல்லடியார் என்றோ சொல்லக் கூடாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் யாரை நல்லடியார்கள் என்று சொல்லியிருக்கின்றார்களோ அவர்களைத் தவிர வேறு யாருக்கும் எப்பேற்பட்ட அற்புதங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், அதிசயங்கள் நிகழ்ந்திருந்தாலும் அவர்களை மகான் என்றோ அவ்லியாக்கள் என்றோ இறைவனால் பொருந்திக் கொள்ளப்பட்டவர்கள் என்றோ சொல்லக்கூடாது.