மறைவான ஞானம்

இணை கற்பித்தல்   தொடர்: 22

மறைவான ஞானம்

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

இறுதித்தூதர், அகிலத்தார் அனைவருக்கும் அனுப்பப்பட்டவர் என பல்வேறு சிறப்புகளைப் பெற்ற நபி (ஸல்) அவர்கள் அவ்லியாக்களுக்கெல்லாம் மிகப் பெரிய அவ்லியா; மகான்களுக்கெல்லாம் மிகப்பெரிய மகான்; இறைநேசர்களுக்கெல்லாம் மிகப்பெரிய இறைநேசர் என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இருக்காது. இருக்கவும் கூடாது. அத்தகைய இறைநேசரிடம் அல்லாஹ் பின்வருமாறு மக்களிடத்தில் சொல்லச் சொல்கிறான்.

வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 27:65)

மறைவான விஷயம் மலக்குமார்கள், ஜின்கள், நபிமார்கள் உட்பட வேறு யாருக்கும் தெரியாது என்பதை மிகத் தெளிவாக இறைவன் விளக்குகின்றான். ஜோசியம் பார்ப்பது, அருள்வாக்கு சொல்வது, பால் கிதாபு பார்ப்பது ஆகிய அனைத்திற்கும் இந்த ஒரு வசனமே மரண அடியாக இருக்கிறது.

அல்லாஹ்வைத் தவிர வானங்களிலும், பூமியிலும் உள்ள எவரும் மறைவானவற்றை அறிய முடியாது என்று மக்களைப் பார்த்துக் கூறுமாறு அல்லாஹ் தனது தூதருக்குக் கட்டளையிடுகின்ற போது, எவன் தனக்கு மறைவான ஞானம் இருப்பதாக வாதிடுகின்றானோ அவன் அல்லாஹ்வைப் பொய்ப்பித்தவனாக ஆகின்றான்.

“அல்லாஹ்வின் தூதருக்கே மறைவானவற்றை அறிய முடியாது என்று குர்ஆன் கூறுகின்ற போது நீங்கள் எவ்வாறு உங்களுக்கு மறைவான ஞானம் இருப்பதாக வாதிடுவீர்கள்? அப்படியானால் நீங்கள் அல்லாஹ்வின் தூதரைவிட சிறந்தவர் எனக் கூறுகின்றீர்களா?’ என்று பால்கிதாபுப் பேர்வழிகளிடம் கேளுங்கள்.

நாங்கள் அல்லாஹ்வின் தூதரை விட மேலானவர்கள் என்பது அவர்களது பதிலாக இருக்குமானால் அவர்கள் இந்த வார்த்தையின் மூலம் நிராகரிப்பைத் தேடிக் கொண்டவர்கள். அவர்களது பதில், “இல்லை; நம்மை விட அல்லாஹ்வின் தூதர் தான் மேலானவர்’ என இருக்குமானால், நாம் அவர்களிடம் கேட்பது, “உங்களை விட மேலானவருக்கு கிடைக்காத மறைவான ஞானம் உங்களுக்கு எவ்வாறு கிடைத்தது?’ என்பது தான்.

அல்லாஹ் தனது திருமறையில் தன்னைப் பற்றிக் கூறுகின்ற போது:

அவன் மறைவானதை அறிபவன். தனது மறைவான விஷயங்களை அவன் பொருந்திக் கொண்ட தூதரைத் தவிர யாருக்கும் வெளிப்படுத்த மாட்டான். அவர்கள் தமது இறைவனின் தூதுச் செய்திகளை எடுத்துச் சொன்னார்களா என்பதை அறிவிப்பதற்காக அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் கண்காணிப்பாளரை ஏற்படுத்துகிறான். அவர்களிடம் உள்ளதை அவன் முழுமையாக அறிவான். ஒவ்வொரு பொருளையும் அவன் எண்ணிக்கையால் அறிவான்.  (அல்குர்ஆன் 72:26, 27)

எவன் தனக்கு மறைவான ஞானம் இருப்பதாக வாதிடுகின்றானோ அவன் தன்னை நிராகரிப்பாளனாக ஆக்குகின்ற இரண்டாவது ஆதாரம் இதோ! அல்லாஹ் தனது தூதருக்கு மக்களைப் பார்த்து இவ்வாறு கூறுமாறு கட்டளையிடுகின்றான்.

அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறிவேன்என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லைஎன்று (முஹம்மதே!) கூறுவீராக! குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா?” என்று கேட்பீராக!  (அல்குர்ஆன் 6:50)

தனக்கு மட்டும்தான் மறைவான ஞானம் இருக்கிறது என்று இன்னும் பல்வேறு இடங்களில் இறைவன் கூறுகிறான்.

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை.   (அல்குர்ஆன் 6:59)

யுகமுடிவு நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.  (அல்குர்ஆன் 31:34)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறைவானவற்றின் திறவு கோல்(கள்) ஐந்தாகும். அவற்றை இறைவனைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள்.

நாளை என்ன நடக்கும் என்பதை யாரும் அறியமாட்டார்கள்.

(பெண்களின்) கருவறைகளில் என்ன உருவாவது (பெண்ணா? ஆணாஅதன் நிலை என்ன? என்பது) பற்றி யாரும் அறியமாட்டார்கள்.

எந்த உயிரும் தாம் நாளை எதைச் சாம்பாதிக்கும் என்பதை அறியாது.

எந்த உயிரும் தாம் எந்த இடத்தில் இறக்கும் என்பதை அறியாது.

மழை எப்போது வரும் என்பதை யாரும் அறியமாட்டார்கள்.

நூல்: புகாரி 1039

எப்படிப்பட்ட வித்வானாக இருந்தாலும், மிகப்பெரிய ஞானியாக இருந்தாலும், ஜோசியக்காரனாக இருந்தாலும், குறிபார்த்து சொல்லக்கூடியவனாக இருந்தாலும் என்றைக்கு உலகம் அழியும் என்பதைச் சொல்லவே முடியாது. அதே போன்று மழை எப்போது வரும்? எவ்வளவு நேரம் பெய்யும்? அது சாரல் மழையாக இருக்குமா? அல்லது பெருமழையாக இருக்குமா? என்பதையும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் சொல்ல முடியாது.

தொலைக்காட்சி செய்திகளில் வானிலை அறிக்கை என்ற ஒரு சிறு நிகழ்ச்சி இடம்பெற்றிருப்பதை நாம் பார்த்திருப்போம். இன்றைக்கு மழை வருமா? வராதா? வெயில் அடிக்குமா? அடிக்காதா? என்பதைக் கணித்துச் சொல்வதாகும். அதில் பேசக்கூடிய வானிலை ஆய்வாளர், இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தான் சொல்வாரே தவிர, இன்று மழை கண்டிப்பாகப் பெய்யும் என்று உறுதியிட்டுச் சொல்வாரா? சொல்ல முடியுமா? அவ்வாறு சொன்னாலும் அது நடக்கும் என்பதற்கு எந்த உறுதியும் கிடையாது.

இன்றைய தினம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் இலேசான (மிதமான) அல்லது கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றுதான் சொல்வார். கண்டிப்பாக இன்று மழை பெய்யும் என்று உறுதியாகச் சொல்ல மாட்டார். இன்றைய தினம் மழை பெய்யும் என்பார். ஆனால் அன்றைய தினம் தான் வெயில் உச்சி மண்டையைப் பிளக்கும். இன்றைய தினம் வெயில் அடிக்கும் என்பார். ஆனால் அன்றைய தினம் குளிர்ந்த காற்றுடன் இலேசான மழையோ அல்லது கன மழையோ பெய்யும்.

என்ன தான் வானம், பூமியை ஆராய்ந்து சொல்பவராக இருந்தாலும், ஆராய்ச்சியாளராக இருந்தாலும் கண்ணுக்குத் தெரிவதைத் தான் சொல்ல முடியுமே தவிர கண்ணுக்குத் தெரியாத அறிவுக்கு எட்டாத விஷயங்களை யாராலும் சொல்ல முடியாது.

அதே போன்று ஒரு தாயின் கருவறையில் உள்ளதையும் இறைவன் மட்டும் தான் அறிய முடியும். கருவில் குழந்தை உண்டாகுமா உண்டாகாதா? அல்லது கருவில் இருப்பது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? அது உயிருடன் பிறக்குமா? அல்லது இறந்த நிலையில் பிறக்குமா? உடல் ஊனமா பிறக்குமா? அல்லது முழு உடம்புடன் பிறக்குமா? எத்தனை குழந்தை பிறக்கும்? பிறக்கின்ற குழந்தை நல்லவனாக இருக்குமா? தீயவனாக இருக்குமா? என்பதையெல்லாம் அவனைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள்.

அதே போன்று, நாளைக்கு நாம் எங்கெங்கு போவோம்? என்னென்ன செய்வோம் என்பதை யாராலும் சொல்ல முடியுமா? நாளை நமக்குப் புகழ் கிடைக்குமா? அல்லது கெட்ட பெயர் கிடைக்குமா? நாளைக்கு நமக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும்? நாளைக்கு நாம் வேலைக்குப் போவோமா? போய்விட்டு மீண்டும் இருப்பிடம் திரும்பி வருவோமா? நாளை நமக்கு என்னென்ன கிடைக்கும்? என்ன சாப்பிடுவோம்? என்ன குடிப்போம்? இதுபோன்று நாளை நடக்கக்கூடிய எந்த ஒரு விஷயத்தையும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் அறிய முடியாது.

உதாரணமாக, நம்முடைய உறவினர்கள், நமது நண்பர்கள் திருமணத்திற்கோ அல்லது ஏதேனும் ஒரு நிகழ்ச்சிக்கோ நம்மை அழைத்திருப்பார்கள். நாளை திருமணம் நடக்க இருக்கிறது, நீங்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்திருப்பார்கள். அதற்கு நாமும், உங்கள் கல்யாணத்திற்கு வராமல் இருப்பேனா? நீங்கள் கூப்பிட்டும் வராமல் இருப்பேனா? இது நம்ம வீட்டு கல்யாணமாச்சே? கண்டிப்பாக வந்து விடுகிறேன் என்று சொல்லியிருப்போம். ஆனால் அந்த நிகழ்ச்சி நடைபெறக்கூடிய நாளில் நாம் அங்கு இருப்போமா? என்றால் சொல்ல முடியாது.

திடீரென அன்றைய நாள் பார்த்து நமக்கு வயிற்று வலி ஏற்பட்டிருக்கும். அல்லது பேருந்தைப் பிடிக்காமல் விட்டிருப்போம். அல்லது பேருந்தே ரத்தாகியிருக்கும். அந்த நிகழ்ச்சிக்கு பைக்கில் செல்வதாக முடிவு செய்திருப்போம். ஆனால் அன்றைய தினம் பைக் பஞ்சராக ஆகியிருக்கும். கடைசியில் அந்த நிகழ்ச்சிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படும். பிறகு நம்முடைய உறவினர்களை அல்லது நண்பர்களை தொடர்பு கொண்டு நாம் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத நிலையை எடுத்துச் சொல்லி அவர்களைச் சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். இதுதான் நிலை.

அது போன்று, ஒரு மனிதன், தான் எங்கே மரணிப்பான்? வீட்டில் மரணிப்பானா? அல்லது வேறு இடத்தில் வைத்து மரணிப்பானா? அவனுக்கு மரணம் எந்த வகையில் வரும்? தூங்கும் போது மரணம் வருமா? அல்லது நெஞ்சுவலி வந்து மரணிப்பானா? என்பதை இறைவனைத் தவிர வேறு எவராலும் அறிய முடியாது.

ஆக மேற்கூறப்பட்ட அனைத்தும் அல்லாஹ்வின் கைவசத்தில் உள்ள விஷயங்களாகும்.

கியாமத் நாளைப் பற்றியும் இறைவன் கடுமையாக சொல்லிக் காட்டுகிறான்.

யுகமுடிவு நேரம் எப்போது வரும்?” என்று (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். “இது பற்றிய ஞானம் என் இறைவனிடமே உள்ளது. அதற்குரிய நேரத்தில் அவனைத் தவிர யாரும் அதை வெளிப்படுத்த முடியாது. வானங்களிலும், பூமியிலும் அது மகத்தானதாக அமையும். அது உங்களிடம் திடீரென்று தான் வரும்என்று கூறுவீராக! இது பற்றி நீர் நன்கு அறிந்தவர் போல் அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “இது பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளதுஎன்று கூறுவீராக! எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிந்து கொள்வதில்லை.  (அல்குர்ஆன் 7:187)

மேற்கண்ட வசனத்தில், “நபியே! இந்த மக்கள் உமக்கு மறைவான ஞானம் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு மறைவான ஞானம் தெரியாது. அல்லாஹ்வுக்கு மட்டும்தான் மறைவான ஞானத்தை அறியும் ஆற்றல் இருக்கிறது என்று  அவர்களிடம் சொல்லி விடுங்கள்’ என்று கட்டளையிடுகிறான்.

ஆனால் இன்றைக்கு இதற்கு நேர் மாற்றமான காரியங்களில் நாம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். திருமணத்திற்காக ஹஸரத்திடம் (ஆலிம்சாக்களிடம்) நல்ல நாள் பார்த்துத் தருமாறு கேட்கின்றோம். நமக்கெல்லாம் தெரியாத விஷயம் இந்த ஆலிம்சாவுக்குத் தெரியும் என்று நினைக்கின்றோமா இல்லையா?

நாம் என்றைக்குத் திருமணம் செய்தால் எதிர்காலத்தில் நல்லபடியாக வாழ்வோம்? என்ற விஷயம் அவருக்குத் தெரியும் என்று நாம் கருதுவதால் தானே அவரிடம் கேட்கின்றோம். குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் நல்லது நடக்கும் என்றால் அது எப்படி அவருக்குத் தெரியும்? இவையெல்லாம் மறைவான செய்திகள்.

ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமா? வேண்டாமா? என்பதற்கு சீட்டுக் குலுக்கிப் பார்ப்பார்கள். அதை வைத்து எப்படி அந்த காரியத்தைச் செய்ய வேண்டுமா? வேண்டாமா என்று தீர்மானிக்க முடியும்? ஆனால் மக்களில் பலர் இப்படியெல்லாம் செய்கின்ற காட்சியைப் பார்க்கிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய வாழ்நாளில் பல சந்தர்ப்பங்களை உண்டாக்கி, மறைவான விஷயம் எதுவும் நபியவர்களுக்குத் தெரியாது என்பதை அல்லாஹ் நிருபிக்கிறான்.

அதில் மிக முக்கியமான ஒரு சம்பவம் ஆயிஷா (ரலி) அவர்கள் மீது சொல்லப்பட்ட அவதூறு சம்பவமாகும். நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் அறவே கிடையாது என்பதற்கு மிகப் பெரிய சான்றாக அமைந்துள்ள இந்தச் சம்பவத்தை வரும் இதழில் காண்போம், இன்ஷா அல்லாஹ்.