இணை கற்பித்தல் தொடர்: 13
அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!
எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.
நபிமார்களிலேயே அல்லாஹ் அதிகமாகப் புகழ்ந்து சொல்கின்ற ஒரு நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தான். ஒட்டுமொத்த மக்களிலேயே அவர்களை தான் அல்லாஹ் மிக உயர்ந்த இடத்தில் வைத்து தன்னுடைய நண்பர் எனவும் புகழ்ந்து கூறுகின்றான்.
தன் முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறம் செய்து, உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றி நடந்தவரை விட அழகிய மார்க்கத்திற்குரியவர் யார்? அல்லாஹ் இப்ராஹீமை உற்ற தோழராக்கிக் கொண்டான். (அல்குர்ஆன். 4:125)
இத்தகைய சிறப்புகளைப் பெற்ற இப்ராஹீம் நபியவர்கள் சில விஷயங்களை விரும்பினார்கள். ஆனால் அவர்கள் விரும்பியதையெல்லாம் அல்லாஹ் அவர்களுக்கு நிறைவேற்றி வைக்கவில்லை.
இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். “உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்” என்று அவன் கூறினான்
அல்குர்ஆன். 2:124
அல்லாஹ் அவருக்குப் பல சோதனைகளைக் கொடுத்தான். அதிலும் குறிப்பாக தான் பெற்ற மகனையே அறுத்துப் பலியிடச் சொன்னது தான் உச்சகட்ட சோதனை. அத்தனை சோதனைகளையும் அவர் வென்றதால் அவரை ஒட்டு மொத்த மனித குலத்துக்கே தலைவராகவும் நியமிக்கிறான். நமக்கெல்லாம் ஏகத்துவ இமாமாக நபி இப்ராஹீம் தான் திகழ்கிறார்கள்.
ஏகத்துவத்திற்கு, தவ்ஹீத் கொள்கைக்கு முன்மாதிரியாகவும் அவர்களைத் தான் அல்லாஹ் தேர்வு செய்துள்ளான். இன்றைய முஸ்லிம்கள் நான்கு பிரிவுகளாக பிரிந்து கொண்டு எனக்கு ஷாபி இமாம், எங்களுக்கு ஹனபி இமாம், எங்களுக்கு மாலிக் இமாம், எனக்கு ஹன்பலி இமாம் என ஒவ்வொருவரையும் தலைவர்களாக ஆக்கிக்கொண்டு அவர்களைப் பின்பற்றி வருகிறார்கள்.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே இப்ராஹீமைப் பின்பற்றுமாறு தான் அல்லாஹ் கூறுகிறான். இத்தகைய சிறப்பைப் பெற்ற இப்ராஹீம் அவர்கள், தன்னை அனைத்து மக்களுக்கும் தலைவராக ஆக்கியதைப் போல், தன்னுடைய மகனையும் தலைவராக ஆக்குமாறு இறைவனிடம் முறையிட்டார்கள். ஆனால் அவர்களுடைய ஆசையை அல்லாஹ் நிறைவேற்றவில்லை. இதைப்பற்றி திருக்குர்ஆனில் கூறுவதைப் பாருங்கள்.
“எனது வழித் தோன்றல்களிலும் (தலைவர்களை ஆக்குவாயாக)” என்று அவர் கேட்டார். “என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது” என்று அவன் கூறினான். (அல்குர்ஆன்2:124)
அதேபோல ஏகத்துவத்தை உறுதியான முறையில் சொல்லியும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத தமது தந்தைக்காக இப்ராஹீம் நபி பிரார்த்தனை செய்ததை அல்லாஹ் கண்டிக்கிறான். “நீ என்னுடைய உற்ற நண்பனாக இருக்கலாம். அதை வைத்துக் கொண்டு உன்னுடைய பிள்ளைகளையெல்லாம் தலைவனாக ஆக்க முடியாது. உன்னுடைய தந்தையை மன்னிக்கவும் முடியாது. என்னை ஏற்றுக் கொள்ளாதவனை மன்னிக்குமாறு என்னிடம் நீ எவ்வாறு கேட்கலாம்? நான் போட்ட எல்லையைத் தாண்டி நீ எவ்வாறு அவருக்காக மன்னிப்பு கேட்கலாம்?’ என்று அல்லாஹ் கேட்டவுடன், இப்ராஹீம் நபியவர்கள் பயந்து போய், “யா அல்லாஹ் நான் தெரியாமல் கேட்டு விட்டேன்” என்று பின்வாங்கி விடுகின்றார்கள்.
அதைப் பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்,
இப்ராஹீம் தம் தந்தைக்காக பாவ மன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத்தன்மை உள்ளவர். (அல்குர்ஆன். 9:114)
அதே போல் நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு இப்ராஹீம். இஸ்ஹாக் என்ற இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தனர். இந்த இரண்டு மகன்களையும் அவருடைய தள்ளாத வயதில், இனிமேல் நமக்கு குழந்தை பிறக்காது என்று நினைக்கக்கூடிய சந்தர்ப்பத்தில் தான் அல்லாஹ் கொடுத்தான்.
அவர் அல்லாஹ்வின் உற்ற நண்பராக இருந்தார். எல்லா சோதனைகளிலும் வெற்றி பெற்றவராக இருந்தார். அவருடைய வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு செயலையும், சம்பவங்களையும் மார்க்கத்தில் நமக்கு வணக்கமாக்கி வைத்திருக்கிறான். அவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தாலும் கூட குழந்தை பாக்கியத்தையும் ஒரு சோதனையாக ஆக்கினான்.
ஒவ்வொரு மனிதனும் தனது இளமைப் பருவத்தில் அல்லது நடுத்தர வயதில் தனக்கு ஒரு சந்ததி வேண்டும் என்று ஆசைப்படுவான். இது போன்ற ஆசை இப்ராஹீம் நபியவர்களுக்கும் இருந்தது. அல்லாஹ்வின் நண்பர் என்பதால் அவர்களது ஆசையை அவர்களாகவும் நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. அல்லாஹ்வும் நிறைவேற்றவில்லை. தள்ளாத வயதில் தான் அவர்களுக்கு இஸ்மாயில், இஸ்ஹாக் ஆகிய புதல்வர்களை அல்லாஹ் வழங்கினான்.
லூத் நபியவர்களுடைய சமுதாயம் ஓரினச் சேர்க்கையில் மூழ்கிக் கிடந்த போது அவர்களிடம் சென்று, “நீங்கள் பெண்களிடம் செல்வதற்குப் பதிலாக ஆண்களிடம் உங்களுடைய இச்சையை தீர்த்துக் கொள்கிறீர்களே’ என்று லூத் நபி பிரச்சாரம் செய்கிறார்கள். அம்மக்கள் அதைப் பொருட்படுத்தாமல் இருந்ததால் இறைவனிடத்தில் அவர்களை அழித்து விடுமாறு லூத் நபி கோரிக்கை வைத்தார்கள். அப்போது இறைவன் லூத் நபியுடைய கோரிக்கையை ஏற்று அம்மக்களை அழிப்பதற்காக மலக்குமார்களை அனுப்பினான். அப்போது தான் அத்துடன் நபி இப்ராஹீம் அவர்களுக்கு குழந்தை பிறக்கும் நற்செய்தியைக் கூறுவதற்காகவும் அம்மலக்குமார்களை அனுப்பினான். இதைப் பற்றி குர்ஆன் கூறுவதைக் கேளுங்கள்,
அவரது மனைவியும் நின்று கொண்டிருந்தார். அவர் சிரித்தார். அவருக்கு இஸ்ஹாக் பற்றியும், இஸ்ஹாக்குக்குப் பின் யஃகூப் பற்றியும் நற்செய்தி கூறினோம். “இது என்ன அதிசயம்! நான் கிழவியாகவும், இதோ எனது கணவர் கிழவராகவும் இருக்கும் போது பிள்ளை பெறுவேனா? இது வியப்பான செய்தி தான்” என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 11:71, 72)
“நீர் பயப்படாதீர்! அறிவுடைய ஆண் குழந்தை பற்றி உமக்கு நாங்கள் நற்செய்தி கூறுகிறோம்” என்று அவர்கள் கூறினர். “எனக்கு முதுமை ஏற்பட்ட நிலையில் எனக்கு நற்செய்தி கூறுகிறீர்களா? எதனடிப்படையில் நற்செய்தி கூறுகிறீர்கள்?” என்று அவர் கேட்டார். (அல்குர்ஆன் 15:53, 54)
“அவர்களைப் பற்றிப் பயந்தார். பயப்படாதீர்!” என்று அவர்கள் கூறினர். அறிவாளியான ஆண் குழந்தை பற்றி அவருக்கு நற்செய்தி கூறினர். உடனே அவரது மனைவி சப்தமிட்டவராக வந்து முகத்தில் அடித்துக் கொண்டு, “நான் மலட்டுக் கிழவியாயிற்றே” என்றார். (அல்குர்ஆன் 51:29)
இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் முதுமையில் எனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். என் இறைவன் பிரார்த்தனையை ஏற்பவன். (அல்குர்ஆன் 14:39)
ஒவ்வொரு மனிதனும் ஆசைப்படக் கூடிய வயதில் ஏன் ஒரு குழந்தையை அல்லாஹ் கொடுக்கவில்லை. எதை விரும்புகிறானோ, எப்போது விரும்புகிறானோ அப்போது செய்யும் அதிகாரம் படைத்த ரப்புல் ஆலமீன் என்பது தான் காரணம்.
இதிலிருந்து நாம் சிந்திக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், அவ்லியாக்களுக்கும், மகான்களுக்கும் குழந்தை தரக்கூடிய பாக்கியம் இருக்குமென்றால் அவர்களை விட உயர்ந்த அந்தஸ்தைப் பெற்ற நபிமார்களுக்கு இருக்குமல்லாவா? அதிலும் குறிப்பாக இறைவனின் உற்ற தோழரான இப்ராஹீம் நபிக்கு இருக்குமா? இல்லையா? அவருக்கு அந்த சக்தி இருந்தால் அவர்கள் ஏன் தள்ளாத வயதில் குழந்தையைப் பெற்றெடுத்தார்கள். அவர்கள் ஆசைப்பட்ட நேரத்தில் குழந்தை பாக்கியத்தைத் தானாகவே உருவாக்கியிருக்கலாமல்லவா? அந்த அதிகாரம் இல்லாததால் தான் இறைவனிடத்தில் முறையிடுகிறார்கள்.
ஆக மொத்தத்தில் எல்லா நபிமார்களுமே மனிதர்களாகத் தான் இருந்தார்கள். மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கவில்லை என்பது விளங்குகின்றது.
அதே போன்று இந்த உலகத்தில் அதிக காலம் வாழ்ந்த மனிதர் யாரென்றால் நபி நூஹ் (அலை) கூறலாம். இதற்குக் குர்ஆனிலேயே ஆதாரம் இருக்கிறது.
நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். அவர்களுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐம்பது ஆண்டுகள் குறைவாக வசித்தார். அவர்கள் அநீதி இழைத்த நிலையில் அவர்களைப் பெருவெள்ளம் பிடித்துக் கொண்டது.
அல்குர்ஆன் 29:14
இவ்வாறு பல ஆண்டுகள் பிரச்சாரம் செய்த நூஹ் நபியவர்களுக்கு அவர்களுடைய மனைவியும், மகனும் எதிரிகளாக இருந்தனர். எந்த அளவுக்கென்றால் நூஹ் நபியைக் கேலி செய்வது, தொந்தரவு கொடுப்பது, அவருடைய பிரச்சாரத்திற்கு முட்டுக்கட்டை போடுவது இது போன்ற செயல்களில் ஈடுபட்டவர்களில் அவருடைய மகனும் ஒருவனாக இருந்தான்.
அவர்களையே நூஹ் நபியவர்களால் நேர்வழிக்குக் கொண்டு வர முடியவில்லை. இந்தக் கால கட்டத்தில் தான் தன்னுடைய பிரச்சாரத்தை யாரும் ஏற்றுக் கொள்ளாததாலும், தனக்கு மிகப் பெரிய அளவில் தொல்லை கொடுத்ததாலும் அவர்களை அழித்து விடுமாறு இறைவனிடம் முறையிடுகிறார்கள். உடனே இறைவன், “நீ ஒரு கப்பலைத் தயார் செய்து, அதில் நீயும் உன்னை ஈமான் கொண்டவர்களையும், உனது ஊரில் உள்ள அனைத்து ஜீவராசிகளிலும் ஒவ்வொரு ஜோடியை ஏற்றுவீராக!’ என்று இறைவன் கட்டளையிட்டான்.
அவரும் அதன்படி ஒரு மிகப் பிரமாண்டமான கப்பலைத் தயார் செய்தார். பிறகு அல்லாஹ் வானத்திலிருந்து தொடர்ச்சியாக மழையை இறக்குகிறான். பூமியிலிருந்தும் தண்ணிர் பீறிட்டு அடிக்கிறது. கொஞ்சம் வெள்ளம் வந்தவுடன் தன்னுடைய மகனை நோக்கி, “நீயும் இந்தக் கப்பலில் ஏறிக் கொள்’ என்று சொல்கிறார். இந்தச் சம்பவத்தை அல்லாஹ் திருக்குர்ஆனில் விரிவாகக் கூறுகிறான்,
“(ஏற்கனவே) நம்பிக்கை கொண்டோரைத் தவிர வேறு யாரும் உமது சமுதாயத்தில் (இனிமேல்) நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். எனவே அவர்கள் செய்து கொண்டிருப்பதற்காக நீர் கவலைப்படாதீர்! நமது கண்காணிப்பிலும் நமது கட்டளைப்படியும் கப்பலைச் செய்வீராக! அநீதி இழைத்தோர் பற்றி என்னிடம் பேசாதீர்! அவர்கள் மூழ்கடிக்கப்படுவார்கள்” என்று நூஹுக்கு அறிவிக்கப்பட்டது.
அவர் கப்பலைச் செய்யலானார். அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் அவரைக் கடக்கும் போது அவரைக் கேலி செய்தனர். “நீங்கள் எங்களைக் கேலி செய்தால் நீங்கள் கேலி செய்தது போல் உங்களை நாங்களும் கேலி செய்வோம்” என்று அவர் கூறினார்.
“இழிவு தரும் வேதனை யாருக்கு வரும்? நிலையான வேதனை யாருக்கு இறங்கும் என்பதை அறிந்து கொள்வீர்கள்!” (என்றும் கூறினார்)
நமது கட்டளை வந்து, தண்ணீர் பொங்கிய போது “ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியையும், உமது குடும்பத்தாரில் நமது விதி முந்தி விட்டவர்களைத் தவிர மற்றவர்களையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏற்றிக் கொள்வீராக!” என்று கூறினோம். அவருடன் மிகச் சிலரே நம்பிக்கை கொண்டனர்.
“இதில் ஏறிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் பெயராலேயே இது ஓடுவதும், நிற்பதும் உள்ளது. என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறினார்.
மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி “அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள்! (ஏக இறைவனை) மறுப்போருடன் ஆகி விடாதே!” என்று நூஹ் கூறினார்.
“ஒரு மலையில் ஏறிக் கொள்வேன்; அது என்னைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றும்” என்று அவன் கூறினான். “அல்லாஹ் அருள் புரிந்தோரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றுபவன் எவனும் இன்று இல்லை” என்று அவர் கூறினார். அவ்விருவருக்கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகி விட்டான்.
“பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து!” என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது. அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமானோர் எனவும் கூறப்பட்டது.
நூஹ், தம் இறைவனை அழைத்தார். “என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன். உனது வாக்குறுதியும் உண்மையே. நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன்” என்றார்.
“நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல் அல்ல. உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்! அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன்” என்று அவன் கூறினான்.
“இறைவா! எனக்கு அறிவு இல்லாதது பற்றி உன்னிடம் கேட்பதை விட்டும் உன்னிடமே நான் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ என்னை மன்னித்து அருள் புரியாவிட்டால் நஷ்டமடைந்தவனாக ஆகி விடுவேன்” என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன். 11. 37-47
ஒரு நபி தன்னுடைய மகனுக்காகக் கூட இறைவனிடம் பரிந்து பேச முடியவில்லை. அவ்வாறு பரிந்து பேசினால் அது அல்லாஹ்விற்குக் கோபத்தைத் தான் ஏற்படுத்துகிறது. அவன் எல்லாவற்றிற்கும் ஒரு அளவுகோல் வைத்திருக்கிறான். அதை மீறிச் செய்தால் அவன் பொறுத்துக் கொள்ள மாட்டான் என்பதற்கு இவை ஆதாரமாக இருக்கின்றன.
அதே போன்று நூஹ் நபியுடைய மனைவியையும், லூத் நபியுடைய மனைவியையும் அல்லாஹ், கெட்ட பெண்களுக்கு உதாரணமாகக் கூறுகிறான்.
நிராகரிப்பவர்களுக்கு, நூஹுடைய மனைவியையும் லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கிறான். இவ்விருவரும் ஸாலிஹான நம் நல்லடியார்களில், இரு நல்லடியார்களின் மனைவிகளாகவே இருந்தனர், எனினும் இவ்விருவரும் தம் கணவர்களை மோசம் செய்தனர், எனவே, அவ்விருவரும் (தம் மனைவியரான) அவ்விருவரைவிட்டும் அல்லாஹ்விலிருந்து (வேதனையைத்) தடுக்க இயலவில்லை, இன்னும், “நீங்களிருவரும் (நரக) நெருப்பில் நுழைபவர்களுடனே நுழையுங்கள்” என்று (இவ்விருவருக்கும்) கூறப்பட்டது.
அல்குர்ஆன் 60:10
எந்த மனிதனாக இருந்தாலும் தன்னைக் காப்பாற்றுவதற்குப் பாடுபடுவான். தன்னுடைய மனைவி மக்களைக் காப்பாற்றுவதற்காகப் பாடுபடுவான். ஆனால் இந்த வசனத்தில் நூஹ் நபியால் தன்னுடைய மகனுக்காகவும். தன்னுடைய மனைவிக்காகவும் சிபாரிசு செய்ய முடியாத நிலையில் இருப்பதைப் பார்க்கிறோம்.
அப்படியானால் நாம் எப்படி யாரென்றே தெரியாத அவ்லியாக்களிடம் சென்று அவர் சிபாரிசு செய்தால் நாம் சொர்க்கத்திற்குச் சென்று விடலாம் என்று எவ்வாறு சொல்ல முடியும்? அவரும் நம்மைப் பார்த்தது கிடையாது; நாமும் அவரைப் பார்த்தது கிடையாது. அவருக்கும் நமக்கும் எந்த நட்பும் கிடையாது. இந்த நிலையில் அவரிடம் எப்படி நாம் நமக்காக அல்லாஹ்விடம் சிபாரிசு செய்யச் சொல்ல முடியும்? அப்படியே அவர்கள் அவ்லியாக்களாக இருந்தாலும், எவ்வளவு பெரிய நல்லடியார்களாக இருந்தாலும் அவர்களும் மனிதர்கள் தானே தவிர அல்லாஹ்வின் அதிகாரம் பெற்றவர்கள் அல்லர் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
அதே போன்று நமக்கெல்லாம் முன்மாதிரியாகவும், வழிகாட்டியாகவும் அனுப்பப்பட்டவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான். மனிதகுலம் அனைவருக்கும் மறுமை நாள் வரைக்கும் அனைத்து மொழி பேசக்கூடியவர்களுக்கும், நபியாக அனுப்பப்பட்டார்கள்.
(முஹம்மதே!) அகிலத்தாருக்கு அருளாகவே உம்மை அனுப்பியுள்ளோம்.
அல்குர்ஆன் 21:107
(முஹம்மதே!) நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்குமே உம்மை அனுப்பியுள்ளோம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.
அல்குர்ஆன் 34:28
அதுமட்டுமல்லாமல் மறுமை நாளில் மற்ற எல்லோரையும் விட புகழப்பட்ட இடத்தில் உன்னை நான் எழுப்புவேன் என்றும் இறைவன் கூறுகிறான். இப்படிப்பட்ட சிறந்த அந்தஸ்தைப் பெற்றவர்கள் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
(முஹம்மதே!) உமக்கு உபரியாக இருக்கும் நிலையில் இரவில் இதன் மூலம் (குர்ஆன் மூலம்) தஹஜ்ஜுத் தொழுவீராக! புகழப்பட்ட இடத்தில் உமது இறைவன் உம்மை எழுப்பக் கூடும்.
அல்குர்ஆன் 17. 79
மறுமை நாளில் அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யக் கூடிய சிறப்பை அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் தான் வழங்கியிருக்கிறான். இப்படிப்பட்ட சிறப்பைப் பெற்ற நபியவர்களுக்கு இவ்வுலகத்தில் உள்ள மக்களின் வறுமையைப் போக்குவதற்கோ, கவலை மற்றும் நோயைத் தீர்ப்பதற்கோ குழந்தை பாக்கியத்தை அளிப்பதற்கோ எந்த ஒரு அதிகாரத்தையும் வழங்கவில்லை என்பதை குர்ஆனிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.
“என்னிடம் அல்லாஹ்வின் கருவூலங்கள் உள்ளன என்று உங்களிடம் கூற மாட்டேன். மறைவானவற்றையும் அறிய மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். உங்கள் கண்கள் இழிவாகக் காண்போருக்கு அல்லாஹ் எந்த நன்மையும் அளிக்கவே மாட்டான் எனவும் கூற மாட்டேன். அவர்களின் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் மிக அறிபவன். (அவ்வாறு கூறினால்) நான் அநீதி இழைத்தவனாகி விடுவேன்”
அல்குர்ஆன். 11:31
நான் அல்லாஹ்வால் நபியாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன் என்று மக்களிடம் சொல்லும் போது இந்தக் கருத்தையும் சேர்த்தே சொல்லுங்கள் என்று நபியவர்களிடம் இறைவன் கூறுகின்றான். ஏனென்றால் உம்மைக் கடவுள் என்றோ, அல்லது அல்லாஹ்வின் அதிகாரம் படைத்தவர் என்றோ அந்த மக்கள் நினைத்துவிடக் கூடாது என்பதற்காக இவ்வாறு சொல்லச் சொல்கிறான்.
“நான் உங்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்றும் கூறுவீராக!
அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்ற மாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன்” என்றும் கூறுவீராக!
அல்குர்ஆன் 72:21, 22
என்னையும், என்னுடன் உள்ளவர்களையும் அல்லாஹ் அழித்தால் அல்லது எங்களுக்கு அருள் புரிந்தால் துன்புறுத்தும் வேதனையிலிருந்து (ஏக இறைவனை) மறுப்போரைக் காப்பவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! என்றும் கூறுவீராக!
அல்குர்ஆன் 67:28
இதையெல்லாம் அல்லாஹ் சொல்லச் சொல்வதன் நோக்கம் அவர்கள் தங்களுக்கென பதவியை உண்டாக்கிக் கொள்வதற்கோ, தன்னை வணங்கக்கூடிய கூட்டத்தை உண்டாக்கிக் கொள்வதற்கோ, தங்களிடம் பிரார்த்தனை செய்யக்கூடிய கூட்டத்தை உண்டாக்கிக் கொள்வதற்கோ, அவர்களுக்கு நேர்ச்சை செய்யக்கூடிய கூட்டத்தை உண்டாக்கிக் கொள்வதற்கோ வரவில்லை. மாறாக இவை அனைத்தையும் அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்ய வேண்டும். அவன் தான் அனைத்து அதிகாரமும் படைத்தவன் என்று சொல்வதற்காகத் தான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த ஏகத்துவக் கொள்கையை மக்களுக்கு மத்தியில் சொன்னார்கள். அவ்வாறு சொல்லும் போது மார்க்கத்தில் வளைந்து கொடுக்கக்கூடிய அளவுக்கு சில பேரங்கள் அவர்களிடத்தில் பேசப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் சில நேரங்களில் மனதில் சிறிது சலனம் ஏற்பட்டிருக்கிறது என்பதாக அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்.
(முஹம்மதே!) நாம் உம்மை நிலைப்படுத்தியிருக்கா விட்டால் அவர்களை நோக்கிச் சிறிதேனும் நீர் சாய்ந்திருப்பீர்! அவ்வாறு நீர் செய்திருந்தால் வாழும் போது உமக்கு இரு மடங்கும், மரணிக்கும் போது இரு மடங்கும் வேதனையை சுவைக்கச் செய்திருப்போம். பின்னர் நம்மிடம் உமக்காக எந்த உதவியாளரையும் காண மாட்டீர்.
அல்குர்ஆன் 17:74, 75
நபிமார்கள் அனைவரும் அவ்லியாக்களுக்கெல்லாம் சிறந்த அவ்லியாக்கள் என்பதில் யாருக்கும் எள்ள்ளவும் சந்தேகம் இல்லை. அவர்களுக்குப் பல படித்தரங்களையும், சிறப்புகளையும் அல்லாஹ் வழங்கியிருக்கிறான். நம்மில் யாருக்கும் கிடைக்காத பல அந்தஸ்துகளை மறுமை நாளில் அவர்களுக்கு வழங்க இருக்கிறான் என்றாலும் எந்தப் பிரச்சனைக்காவது முடிவெடுக்கக்கூடிய அதிகாரத்தை வழங்கியிருக்கிறானா? என்பது தான் இந்த வசனங்களில் சொல்லப்படுகின்றது.
“அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை” என்று (முஹம்மதே!) கூறுவீராக! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக் கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள்.
அல்குர்ஆன் 10. 49
நல்ல விஷயமாக இருந்தாலும், கெட்ட விஷயமாக இருந்தாலும் எனக்கே நான் எதுவும் செய்ய முடியாது எனும் போது எப்படி உங்களுக்குச் செய்ய முடியும்?
என்னுடைய வறுமையை நான் போக்கிக் கொள்ள முடியாது. என்னுடைய நோயை நான் போக்கிக் கொள்ள முடியாது. எனக்குக் குழந்தை பாக்கியம் வேண்டுமென்றால் என்னால் உண்டாக்கிக் கொள்ள முடியாது. என்னுடைய வேலை வாய்ப்பை நான் உருவாக்கிக் கொள்ள முடியாது. என்னுடைய பட்டம். பதவி, புகழ் எதையும் நானாக உருவாக்கிக் கொள்ள முடியாது. இவை அனைத்தையும் எனக்கே நான் செய்ய முடியாது எனும் போது எப்படி பிறருக்குச் செய்ய முடியும் என்று அல்லாஹ் சொல்லச் சொல்கிறான்.
அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்
அல்குர்ஆன் 10:107
அல்லாஹ் உமக்கு துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீது ஆற்றலுடையவன்.
அல்குர்ஆன் 6:17
“அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!
அல்குர்ஆன் 7:188