அடி வாங்கிய அவ்லியாக்கள்

இணை கற்பித்தல்   தொடர்: 10

அடி வாங்கிய அவ்லியாக்கள்

நபி (ஸல்) அவர்கள், ஸஹாபாக்கள் அல்லாமல் வேறு யாரையாவது சொர்க்கத்திற்குரியவர் என்று நற்சான்று அளித்திருக்கிறார்களா? என்று பார்த்தால் இருவரைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொர்க்கவாசிகள் என்று நற்சான்று அளித்திருக்கிறார்கள். அதில் ஒருவர் உவைஸ் அல்கர்னி என்பவர். இவர் தாபியீன்களில் ஒருவராவார்.

அவரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள், “எனக்குப் பின்னால் தாபியீன்களில் ஒருவர் வருவார். அவருடைய பெயர் உவைஸ் அல்கர்னி. அவரை நீங்கள் பார்த்தீர்களேயானால் உங்களுக்காக வேண்டி அவரை அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள்.

ஆக தன்னுடைய உற்ற தோழர்களையே உவைஸ் அல்கர்னியிடம் பாவமன்னிப்பு தேடச் சொல்கிறார்கள் என்றால் இவரை நாம் நல்லடியார் என்று சந்தேகமே இல்லாமல் உறுதியாக இவர் சொர்க்கவாசி, நல்லடியார், மகான் என்று சொல்லலாம்.

அதேபோல மஹ்தீ என்பரைப் பற்றியும் நபிகளார் சொர்க்கவாசி என்று நற்சான்று அளித்திருக்கிறார்கள். இவ்வுலகில் அவர் நல்லடியாராக இருப்பார் என்று சொல்லியிருக்கிறார்கள். எனவே இதை வைத்து இவர் நல்லவர் என்று நாம் சொல்லிக் கொள்ளலாம்.

அல்லாஹ் இவர்களைப் பற்றி நல்லடியார் என்று அறிவித்துக் கொடுத்ததனால் தான் இவர் நல்லடியார் என்பது நபிகளாருக்கு தெரியும். எனவே இதை ஆதாரமாகக் கொண்டு நபிகளாருக்கு மறைவான ஞானம் இருக்கிறது என்று தவறாக விளங்கி விடக்கூடாது.

ஆக, இதுவரை நாம் பார்த்தவர்களைத் தவிர வேறு யாரையும், (நாம் தேடிப்பார்த்த வரை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நல்லடியார் என்றோ மகான்கள் என்றோ சொர்க்கவாசி என்றோ நற்சான்று அளித்ததே இல்லை.

அபூஹனிபா, ஷாஃபி, அல்லது அப்துல் காதிர் ஜீலானி இவர்களைக் கூட நபிகளார் நல்லவர்கள் என்றோ மகான்கள் என்றோ சொன்னதே இல்லை. அவ்வாறு இருக்கும் போது இவர்களையெல்லாம் நல்லவர் மகான் என்று நாம் எப்படி சொல்ல முடியும்? இவர்கள் நல்லடியார்கள் என்பதற்கு எந்தவித ஆதாரத்தையும் உலகம் அழியும் வரைக்கும் இவர்களால் காட்டவே முடியாது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

நாம் இதுவரை பார்த்த அத்தனை செய்திகளும், எந்த ஒருவரையும் நாமாக  நல்லடியார் என்றோ மகான்கள் என்றோ சொல்லக்கூடாது. நல்லடியார்கள் யார் என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது என்பதையும் தெளிவுபடுத்துகின்றன. அல்லாஹ்வும் அவனது தூதரும் யாரை நல்லடியார்கள் என்று கூறினார்களோ அவர்களை மாத்திரமே நாம் நல்லடியார்கள் என்று சொல்ல வேண்டுமே தவிர, வேறு யாரையாவது நல்லடியார்கள், மகான்கள் எனக் கூறிக்கொண்டு அவர்களுக்காக விழா எடுப்பதும் அவர்களிடம் உதவி தேடுவதும், அவர்களின் காலில் விழுவதும் பெரும் பாவங்களில் ஒன்றாகும். அது நம்மை நிரந்தர நரகத்திற்குக் கொண்டு சேர்க்கும் என்பதையும் விளங்கி இந்தப் பாவத்திலிருந்தும் விலகிக்கொள்ள வேண்டும்.

நல்லடியார்களுக்கு மறுமையில் கிடைக்கக்கூடிய பரிசுகளை, அந்தஸ்துகளை, கூலியைப் பற்றி இஸ்லாம் சொல்கிறது. ஆனால் அவர்களைக் கொண்டாடுவதற்குச் சொல்லவில்லை. நல்லடியார்களைக் கண்டுபிடிக்க முடியும் என்றால் தான் அவர்களுக்குப் பாராட்டு விழா நடத்தலாமா என்ற கேள்வியே வரும். அவர்களைக் கண்டுபிடிக்க முடிந்தாலும் அந்த நல்லடியார்களுக்கு உருஸ் எடுக்கவோ, சந்தனக்கூடு எடுக்கவோ, பாராட்டு விழா நடத்தவோ அல்லாஹ் சொல்லவில்லை. அவர்களைப் போன்று நீயும் நல்லடியானாக ஆக வேண்டும் என்பதற்குத் தான் சொல்கிறான். அவர்களுக்கு உரூஸ் எடுக்க வேண்டும், பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று சொல்லியிருந்தால் அவர்களைக் கண்டுபிடிக்கக்கூடிய வழிமுறையையும் சேர்த்தே சொல்லியிருப்பான்.

ஆனால் அவர்களைப் பற்றி எந்த அடையாளத்தையும் அவன் சொல்லவில்லை. நீங்கள் நல்லடியார்களாக இருந்தால் இந்த அந்தஸ்தை அடைந்து கொள்வீர்கள். நீங்கள் இறைநேசர்களாக இருந்தீர்களென்றால் இந்த பரிசுகளைப் பெற்றுக் கொள்வீர்கள் என்று நம்மையும் இறைநேசர்களாக ஆக்குவதற்காக சொன்ன வாக்குறுதியே தவிர யாரையும் இறைநேசர் என்று முடிவு செய்து கொண்டாடுவதற்காக அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இதிலிருந்து அல்லாஹ்வின் அறிவிப்பின் படியும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அறிவிப்பின் படியும் நல்லடியார்கள் யார் என்பதை நாம் அறிந்து கொண்டோம். ஆனால் அவர்களுக்குரிய எல்லை என்ன? நல்லடியாராக, அவ்லியாவாக ஆனவுடன் எல்லாவிதமான ஆற்றல்களும், சக்தியும் அவர்களுக்கு வந்துவிடுமா? அல்லது அல்லாஹ்விடம் நாம் கேட்பதை அவர்களிடமும் கேட்கலாமா? அல்லாஹ் செய்வதையெல்லாம் அவர் வந்து செய்து முடித்திடுவாரா? அல்லது அவர் மனிதத் தன்மையிலிருந்து அப்பாற்பட்டவராக ஆகிவிடுவாரா? என்பதை நாம் சற்று ஆராய்ந்து பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.

எந்த நல்லடியாராக இருந்தாலும் அவருக்கு மறுமையில் நல்ல அந்தஸ்து கிடைக்குமே தவிர இந்த உலகத்தில் அவர் மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்டவராக ஆகமாட்டார். மனிதனுக்கு முடியாத விஷயங்களைச் செய்பவராக ஆகமாட்டார். எல்லா நிலையிலும் அவர் மனிதராகத் தான் இருந்திருப்பார். இருந்திருக்க முடியும்.

முதலில் அவ்லியாக்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவ்லியாக்கள் என்று கண்டுபிடித்தால் கூட அவ்லியாக்கள் அதைச் செய்திருக்கிறார்கள், இதைச் செய்திருக்கிறார்கள் என்று அவிழ்த்து விட்டிருக்கிறார்களே அந்தக் கதைகள் பொய் என்பதற்கு நிறைய சான்றுகள் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறுகளிலிருந்தும் குர்ஆனுடைய போதனைகளிலிருந்தும் நமக்குத் தெரிய வருகின்றது.

அல்லாஹ்வுடைய நேசர்களில் நபிமார்கள் சிறந்தவர்கள். அதில் நம்மில் யாருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. அவ்லியாக்களெல்லாம் நபிமார்களுடைய அந்தஸ்துக்குக் கீழ் தான் வருவார்கள். நபிமார்கள் ஒவ்வொரு காலத்திலேயும் அந்தந்த மக்களிடம் பிரச்சாரம் செய்தார்கள். அவ்வாறு பிரச்சாரம் மேற்கொள்ளும் போது, இன்றைக்கு நாம் ஒருவரை அவ்லியா என்று நினைத்து வைத்துள்ள மாதிரி அன்றைக்கு நபிகளாரை அம்மக்கள் நினைத்திருந்தால், அந்த நபிமார்கள் அடி வாங்கியிருப்பார்களா? கேலி, கிண்டல் செய்யயப்பட்டிருப்பார்களா? நாட்டை விட்டு துரத்தப்பட்டிருப்பார்களா? என்பதை சற்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

ஆனால் நாம் இன்றைக்கு அவ்லியாக்கள் என்றால், அவர் கடவுள் மாதிரியும் நாம் அவர் முன்னால் பணிந்து நிற்க வேண்டும் எனவும், அவர் நடந்து வந்தால் எல்லோரும் அவருக்கு எழுந்து மரியாதை செலுத்த வேண்டும் எனவும் எண்ணி வைத்திருக்கிறார்கள்.

எந்த மனிதனும் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவனாக ஆக முடியாது. உதாரணத்திற்கு, எனக்குக் கடவுள் தன்மை இருக்கிறது, மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்ட சக்தி இருக்கிறது என்று ஒருவன்  சொல்லி, வாயில் இருந்து லிங்கத்தை எடுக்கிறேன், இரும்பைத் தங்கமாக மாற்றுகிறேன் என்றால் யாராவது அவன் மேல் கை வைப்பார்களா? அவனை அடிப்பார்களா? அவனைத் திட்டுவார்களா? எதுவும் செய்யமாட்டார்கள்.

இந்த மாதிரி நபிமார்களைப் பற்றிய பயம் அந்த மக்களுக்கு உண்டாகியிருக்குமானால் யாராவது அவர்களை விரட்டியிருப்பார்களா? கொலை செய்திருப்பார்களா?

ஆக நபிமார்கள் என்ற மிகச் சிறந்த நல்லடியார்கள் வாழ்ந்த போது அச்சமுதாய மக்களால் கிள்ளுக் கீரையாகக் கருதப்பட்டார்கள்; எள்ளி நகையாடப்பட்டார்கள்; கேலி கிண்டல் செய்யப்பட்டார்கள். பைத்தியக்காரன் என்று சொன்னார்கள். கிறுக்கன் என்று சொன்னார்கள். பலவிதமான துன்பங்களுக்கும் தொல்லைகளுக்கும் உள்ளாக்கினார்கள். இந்தச் சோதனைகளின் போது அவர்கள் எப்படி இருந்தார்கள்? நம்மைப் போல சாதாரண மனிதராகத் தான் இருந்தார்கள். மந்திரவாதியாக இருக்கவில்லை. ஜோசியக்காரனாகவும் இருக்கவில்லை.

ஆனால் அவர்கள் மந்திரம் தந்திரம் தெரிந்தவராக இருந்திருந்தால் யாரும் அவர்களை நெருங்கியிருக்க மாட்டார்கள். அதிலும் குறிப்பாக கல்லுக்குக் கூட சக்தி இருக்கின்றது என்று நினைக்கக்கூடியவர்கள், அந்தக் கல்லைத் திட்டினால் அது நம்மை குற்றம் பிடித்துவிடும் என்று நினைத்தவர்கள், நபிமார்களுக்கு சக்தி இருக்கிறது என்று நினைத்தால் அவர்களிடம் நெருங்கியிருப்பார்களா?

அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளாத அனைத்து சமுதாய மக்களுமே கல்லுக்கு சக்தி இருக்கிறது என்று நினைத்துத் தான் அதனை வழிபட்டார்கள். ஆனால் அந்த சக்தி மூஸா நபிக்கு, ஈஸா நபிக்கு, இப்ராஹீம் நபிக்கு இருக்கிறது என்று நினைத்திருந்தால் அனைவரும் அந்தந்த நபிமார்களிடம் கையைக் கட்டிக் கொண்டு சரணடைந்திருப்பார்கள். அனைவரும் அவர்களை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக மாறியிருப்பார்கள். ஆனால் அந்த மாதிரி யாரும் இருந்ததாக வரலாறு இல்லை. நபிமார்கள் வாழ்ந்த ஒவ்வொரு சமுதாயத்திலும் எந்த மாதிரி மாற்றங்கள் நிகழ்ந்தன என்பதைப் பற்றி இறைவன் கூறுகிறான்.

அதாவது மூஸா, மற்றும் ஹாரூண் நபி இருவரும் ஏகத்துவப் பிரச்சாரம் செய்கிறார்கள். அவ்வாறு செய்யும் போது பத்து அற்புதங்களை அல்லாஹ் கொடுத்து அனுப்புகிறான். மற்ற நேரத்தில் சாதாரண மனிதராகத் தான் இருப்பார்கள். கைத்தடியை போட்டால் பாம்பாக மாறுவது, சட்டைப்பைக்குள் கையை நுழைத்து வெளியே எடுத்தால் வெண்மையாக, பிரகாசமாக இருப்பது உட்பட 10 அத்தாட்சிகளை அவர்களுக்கு வழங்கியதாக அல்லாஹ் கூறுகிறான். அந்த 10 அற்புதங்களையும் ஃபிர்அவ்னிடமும் அந்த சமுதாய மக்களிடமும் காட்டியபோது, அதைக் கண்ணால் பார்த்துக் கொண்டே…

இவ்விருவரின் சமுதாயத்தினர் நமக்கு அடிமைகளாக இருக்கும் நிலையில் நம்மைப் போன்ற இரு மனிதர்களை நாம் நம்புவோமா?” என்றனர்.

அல்குர்ஆன். 23:47

மேலும் அவ்விருவரைப் பற்றியும் அந்த மக்கள், “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களே. எங்கள் முன்னோர் வணங்கிக் கொண்டிருந்தவைகளை விட்டும் எங்களைத் தடுக்க விரும்புகிறீர்கள். எனவே எங்களிடம் தெளிவான அற்புதத்தைக் கொண்டு வாருங்கள்!என்று அவர்கள் கேட்டனர்.

அல்குர்ஆன். 14:10

அதேபோன்று நூஹ் நபியைப் பார்த்து,

எங்களைப் போன்ற ஒரு மனிதராகவே உம்மைக் காண்கிறோம். எங்களில் சிந்தனைக் குறைவுடைய தாழ்ந்தவர்களே உம்மைப் பின்பற்றுவதைக் காண்கிறோம். உங்களுக்கு எங்களை விட எந்தச் சிறப்பும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. மாறாக உங்களைப் பொய்யர்களாகவே கருதுகிறோம்என்று அவரது சமுதாயத்தில் (ஏக இறைவனை) மறுத்த பிரமுகர்கள் கூறினர்.

அல்குர்ஆன் 11:27

மேலும், 23:24-33, 7:131 ஆகிய வசனங்களிலும் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

ஆக அத்தனை நபிமார்களும் அம்மக்களிடத்தில் பிரச்சாரம் செய்யும் போது அவர்கள் சொல்லக்கூடிய செய்தி சரியா? தவறா? என்பதை பார்க்காமால், இவர் யார்? இவருக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என்பதைத் தான் பார்த்தார்கள். நாம் அடித்தால் அவர் கீழே விழுந்து விடுகிறார். நாம் கவலைப்படுவதைப் போன்று அவரும் கவலைப்படுகிறார். நம்மைப் போன்று அவரும் முதுமையை அடைகின்றார். இவரை நாம் எவ்வாறு தூதராக ஏற்றுக் கொள்வது என்று எண்ணினார்கள். அதனால் அவர்கள் தூதர்களை ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த இருவரும் 10 அற்புதங்களைக் காட்டியும் கூட அவர்களுடைய கண்களுக்கு சாதாரண மனிதர்களாகத் தான் தென்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்கள் இருவரும் மந்திரவாதியாகத் தென்பட்டு இருப்பார்களேயானால் அந்த மக்கள் அனைவரும் அவ்விருவரிடம் சரணாகதி அடைந்திருப்பார்கள்.

அதேபோன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைப்புப் பணி செய்யும் போது அவர்களுடைய ஒழுக்கம், பண்பாடு, நேர்மை, வாய்மை இதை வைத்து அவர்களை மறுக்கவில்லை. இதை அவர்கள் கண்கூடாக பார்த்தார்கள். மக்களிடத்தில் நபியவர்களுக்கு நல்ல மதிப்பும், மரியாதையும் இருந்தது. அதனால் தான் அவர்களை அம்மக்கள் சாதிக் (உண்மையாளர்), அமீன்  (நம்பிக்கைக்குரியவர்) என்றும் அழைத்து வந்தனர்.

இவ்வாறு இருக்க அந்த மக்கள் எதை வைத்து நபி (ஸல்) அவர்களை மறுத்தார்கள்? இவர் அல்லாஹ்வின் தூதர் என்று சொல்கிறார். ஆனால் நம்மைப் போலத்தானே இருக்கிறார். வேறு எந்த வித்தியாசமும் இல்லையே! என்று கூறியே மறுத்தார்கள். இதைப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் தெரிவிக்கிறான்.

இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா?” என்று கேட்கின்றனர்.

அல்குர்ஆன் 25:7

ஆக, நபிமார்களை அவர்கள் ஏற்றுக் கொள்ளாததற்குக் காரணம், நாம் யாரை அவ்லியாக்கள் என்று நினைத்து, அவர்களுக்கு ஏராளமான ஆற்றல்கள் இருக்கின்றன என்று நம்புகிறோமோ அவர்களைப் போன்று அந்த நபிமார்கள் இல்லை என்பது தான்.

அதேபோன்று ஸாலிஹ் நபியவர்களும் மக்களிடத்தில் பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்களைப் பற்றிய அம்மக்களின் எண்ணம் எவ்வாறு இருந்தது என்பதை இறைவன் சொல்கிறான்.

நீர் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு இல்லை. நீர் உண்மையாளராக இருந்தால் சான்றைக் கொண்டு வருவீராக!” (என்றும் கூறினர்)

அல்குர்ஆன் 26:154

இந்த வசனத்தில் அந்த மக்கள் சாலிஹ் நபியிடத்தில் நீயும் எங்களைப் போல் ஒரு மனிதர் தானே! எங்களைப் போன்று சாப்பிடுகிறாய்; தூங்குகிறாய்; மலம், ஜலம் கழிக்கின்றாய். இவ்வாறு இருக்கும்போது எதை வைத்துக் கொண்டு நீ நபியென வாதிடுகிறாய் என கேட்டார்கள்.

மேலும் அம்மக்கள் சாலிஹ் நபியைப் பார்த்து,

நம்மைச் சேர்ந்த ஒரு மனிதரையா நாம் பின்பற்றுவோம்? அப்படிச் செய்தால் வழி கேட்டிலும் சிரமத்திலும் நாம் ஆகி விடுவோம்

அல்குர்ஆன் 54:24

என்றும் கூறியதாக அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

அதே போன்று ஷூஐப் நபியிடத்தில் அந்தச் சமுதாய மக்கள் என்ன சொன்னார்கள் என்பதையும் இறைவன் கூறுகிறான்.

நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. உம்மைப் பொய்யராகவே கருதுகிறோம்.

அல்குர்ஆன் 26:186

அதே போல யாசீன் என்கிற சூராவில், ஒரே சமுதாயத்திற்குப் பல தூதர்களை அல்லாஹ் அனுப்பியதாகச் சொல்கிறான். முதலில் ஒரு தூதரை அனுப்புகிறான். அவரை நம்ப மறுக்கிறார்கள். இரண்டாவதாக ஒரு தூதரை அனுப்புகிறான். அவரையும் நம்ப மறுக்கிறார்கள். அவ்விருவருடன் மூன்றாவது நபரைக் கொண்டு பலப்படுத்துகிறான். இவ்வாறு மூன்று தூதர்களும் சேர்ந்து வருகிறார்கள். அந்த மூவரையும் பார்த்து,

நீங்கள் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறில்லை. அளவற்ற அருளாளன் எதையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்வோராகவே இருக்கிறீர்கள்என்று கூறினர்.

அல்குர்ஆன் 36:15

நீங்கள் மூன்று பேர் வந்தாலும் சரி, முப்பது பேர் வந்தாலும் சரி நீங்கள் எங்களைப் போல மனிதர்கள் தான், உங்களிடம் மனிதர்களுக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்றுமே இல்லையே! நாங்கள் செய்வதைத் தானே நீங்களும் செய்கிறீர்கள். பிறகு எப்படி நீங்கள் இறைத்தூதர்களாக ஆக முடியும். எங்களுடைய கண்களுக்கு நீங்கள் மந்திரவாதிகளாகவோ, தந்திரவாதிகளாகவோ தென்பட்டதே இல்லையே! பிறகு எப்படி நாங்கள் உங்களை இறைத்தூதர்கள் என நம்புவது? என்று கேட்டனர்.

அதேபோல பிரச்சாரம் செய்ய வந்த அத்தனை நபிமார்களையும் பைத்தியக்காரன், கிறுக்கன் என்றுறெல்லாம் அம்மக்கள் எள்ளி நகையாடினார்கள்.

நீயும் எங்களைப் போல ஒரு மனிதன் தான் என்பது கூட அந்த நபிமார்களுக்குக் கவலையை ஏற்படுத்தவில்லை. இது பரவாயில்லை. நாகரீகமான வார்த்தை என்று சொல்லலாம். ஆனால் அதையும் மீறி பைத்தியக்காரன், கிறுக்கன் போன்ற அநாகரீகமான வார்த்தைகளையும் பயன்படுத்தி இந்தப் பிரச்சாரத்திற்குப் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தினர். அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள் என்று நபிமார்கள் சொல்லும்போது, அந்த நபிமார்களைப் பார்த்து, “இவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது’ என்று கூற ஆரம்பித்துவிட்டனர். இதை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் கூறுகிறான்.

அறிவுரை அருளப்பட்டவரே! நீர் பைத்தியக்காரர் தான்என்று அவர்கள் கூறுகின்றனர்.

அல்குர்ஆன் 15:6

மேலும் 23:25, 26:27, 37:36, 44:14, 51:52, 54:9 ஆகிய வசனங்களில் நபிகளார் உட்பட எல்லா நபிமார்களையும் எவ்வாறு கேலி கிண்டலாகப் பேசினர் என்பதைத் தெளிவுபடுத்துகிறான்.

ஆக, அம்மக்கள் நபிமார்களைப் பைத்தியக்காரன் என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் தைரியமாக இருந்தார்களென்றால் அதற்குக் காரணம் அந்த அளவுக்கு நபிமார்கள் சாதாரண மனிதர்களாக அவர்களுக்குக் காட்சியளித்தனர்.

அவர்கள் தங்களுக்கு தெய்வீக சக்தி இருப்பதாகவோ, தங்களால் எல்லாவற்றையும் செய்து முடித்துவிட முடியும் என்றோ, எங்களைத் திட்டினால் அழிந்துவிடுவீர்கள் என்றோ, எங்களைத் தொட்டாலே நாசமாகி விடுவீர்கள் என்றோ அவர்கள் கூறவில்லை. எல்லோரையும் போல் சாதாரணமான மனிதராக இருந்ததால் தான் அவர்களை அம்மக்கள் திட்ட முடிந்தது; அடிக்க முடிந்தது; கேலி செய்ய முடிந்தது.

இன்று, இறந்து போன ஒரு மனிதரைக் கூட திட்டுவதற்கு மனிதன் பயப்படுவதைப் பார்க்கிறோம். 10 வருடமாக தர்காவிற்குச் சென்று நேர்ச்சை செய்தும் குழந்தை பிறக்கவில்லை. ஆனாலும் அந்த அவ்லியாவைத் திட்டுவதில்லை. திட்டினால் அவரால் நமக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்று பயப்படுகிறான். இப்படித் தான் மனிதனுடைய சுபாவம் இருக்கிறது.

இந்த மாதிரியான செயல்களை நபிமார்கள் தங்களுக்கு ஏற்படுத்தி வைத்திருந்தால் கிறுக்கன் என்று அவர்களைச் சொல்ல முடியுமா? பைத்தியக்காரன் என்று சொல்ல முடியுமா? நீயும் எங்களைப் போல மனிதர் தான் என்று சொல்ல முடியுமா? ஒருபோதும் சொல்ல முடியாது.

இதிலிருந்து என்ன விளங்குகிறது? இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பது போல் எந்த நபியும் இருந்தது கிடையாது. நபிமார்களுக்கே கிடையாது என்றால் மற்ற மனிதர்களுக்கு எவ்வாறு அதுபோன்ற சக்திகள் இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னும் சொல்லப்போனால் நபிமார்களைப் பற்றி மேலும் சில  விஷயங்கள் இருக்கின்றன. அவர்கள் எப்படியெல்லாம் மனிதர்களாக இருந்தார்கள். அவர்களுடைய சக்தி (ஆற்றல்) எந்த அளவுக்கு இருந்தது? அவர்களால் நினைத்ததையெல்லாம் செய்து விட முடியுமா? இது போன்ற விஷயங்களையெல்லாம் நாம் அலசிப் பார்த்தோமென்றால் இறைநேசரை நாம் தீர்மானிக்க முடியும் என்ற கருத்து மொத்தமாக அடிபட்டுப் போய்விடும்.

இறைநேசரைக் கண்டுபிடிக்க முடியாது என்பதிலேயே எல்லாம் அடிபட்டுப் போய்விடுகின்றது. அப்படியே கண்டுபிடித்தாலும் அந்த இறைநேசருக்காவது நாம் நினைத்த மாதிரி சக்தி இருக்குமா? கிடையவே கிடையாது என்பதை அல்லாஹ் தெள்ளத் தெளிவாகச் சொல்லிக் காட்டுகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சொல்லிக் காட்டுகிறார்கள். அந்தச் சான்றுகளை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் காண்போம்