தொடர்: 7 ஸிஹ்ர் ஒரு விளக்கம்

தொடர்: 7

ஸிஹ்ர் ஒரு விளக்கம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டவர்கள் என்று அன்றைய எதிரிகள் விமர்சனம் செய்த போது அதை அல்லாஹ் மறுக்கிறான். இவ்வாறு கூறுவோர் அநியாயக்காரர்கள் என்று அல்லாஹ் கூறுவதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ்கள் குர்ஆனுடன் நேரடியாக மோதுவதால் அந்த ஹதீஸ்கள் கட்டுக்கதைகள் என்று தான் கருத வேண்டும் என்று நாம் குறிப்பிட்டிருந்தோம்.

இதை மறுக்கப் புகுந்த இஸ்மாயீல் ஸலபி சூனியம் செய்யப்பட்டவர் என்று எதிரிகள் விமர்சனம் செய்ததாக குர்ஆன் கூறினாலும் சூனியம் செய்யப்பட்டவர் என்ற சொல்லுக்கு சூனியம் செய்பவர் என்று பொருள் கொள்ள வேண்டும் எனக் கூறி குர்ஆனுடன் விளையாடுகிறார். இது குறித்து அவர் எடுத்துக் காட்டிய ஆதாரங்கள் தவறானவை என்பதை சென்ற தொடரில் நாம் விளக்கியுள்ளோம்.

சூனியம் செய்யப்பட்டவர் என்பதற்கு, சூனியக்காரர் என்று அர்த்தம் செய்ய வேண்டும் என்பதைப் பின்வருமாறு எழுதி நியாயப்படுத்துகிறார்.

அல்குர்ஆனின் இலக்கிய நடை

இவ்வாறு கூறும் போது ஏன் அல்குர்ஆன் இந்த மொழி நடையைக் கடைப்பிடிக்க வேண்டும். வெறுமனே ஸாஹிர் என்றே கூறி விட்டுப் போகலாமே! என்ற ஐயம் பலருக்கு ஏற்படலாம். இது குறித்த சிறு விளக்கத்தைப் பெறுவது நல்லது.

அல்குர்ஆன் பொருளை மட்டுமன்றி அழகிய இலக்கிய நயம் கலந்த சொற்பயன்பாட்டிலும் கவனம் செலுத்துகின்றது. இந்த மஸ்ஹூர்-சூனியம் செய்யப்பட்டவர் என்ற பதம் பயன்படுத்தப்பட்ட ஆயத்துக்கு முந்தைய வசனங்கள் மஸ்ஹூரா என்ற சொல்லை ஒத்த ஓசை நயமுடையதாக அமைந்திருப்பதை அவதானிக்கலாம்.

நபி(ஸல்) அவர்களைக் குறித்து மஸ்ஹூரா என அவர்கள் கூறிய வசனத்திற்கு முந்தைய-பிந்திய வசனங்களின் முடிவை அவதானித்தால் இந்த உண்மையை அறியலாம். 17 ஆம் அத்தியாயத்தின் 33 ஆம் வசனம் மன்ஸூரா என்றும், 34ஆம் வசனம் மஸ்ஊலா என்றும், 35ஆம் வசனம் தஃவீலா என்றும், 36ஆம் வசனம் மஸ்ஊலா என்றும், 37ஆம் வசனம் தூலா என்றும், 38ஆம் வசனம் மக்ரூஹா என்றும், 39ஆம் வசனம் மத்ஹூரா என்றும், 40ஆம் வசனம் அழீமா என்றும், 41ஆம் வசனம் நுபூரா என்றும், 42ஆம் வசனம் ஸபீலா என்றும், 43 ம் வசனம் கபீரா என்றும், 44ஆம் வசனம் கபூரா என்றும், 45 ஆம் வசனம் மஸ்தூரா என்றும், 46ஆம் வசனம் நுபூரா என்றும், 47ஆம் வசனம் மஸ்ஹூரா, இவ்வாறு இலக்கிய நயத்துடனும் ஒத்த ஓசை நயத்துடனும் அமைந்திருப்பதை அவதானிக்கலாம். இவ்வாறே 25:8 வசனத்திற்கு முந்திய-பிந்திய வசனங்களும் மஸ்ஹூரா என்ற ஓசை நயத்துடன் ஒன்றித்திருப்பதை அறியலாம். எனவே, அறபு இலக்கண விதிகளில் இடமிருப்பதாலும், அல்குர்ஆன் பயன்படுத்தியிருப்பதாலும், இந்த இடத்தில் மஸ்ஹூரா என்ற பதம் பயன்படுத்தப்பட்டாலும் அது ஸாஹிரா என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி சூனியக்கார மனிதனைத் தான் இவர்கள் பின்பற்றுகின்றனர் என்று அநியாயக்காரர்கள் கூறுகின்றனர் என்பது அந்த வசனத்தின் விளக்கமாகும்.

இவ்வாறு இஸ்மாயில் ஸலபி கூறியுள்ளார்.

இவரைப் போல் திருக்குர்ஆனை வேறு எவரும் இழிவு படுத்தி இருக்க முடியாது என்று கருதும் வகையில் இவரது இந்த வாதம் அமைந்துள்ளது.

இவரது வாதம் எவ்வளவு அபத்தமானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இஸ்மாயீல் ஸலபி அழகிய முறையில் தோளில் துண்டு போடும் வழக்கமுடையவர் என்று வைத்துக் கொள்வோம். தோளில் போட துண்டு கிடைக்காத போது வேட்டியை அவிழ்த்து அதைத் தோளில் போட்டுக் கொண்டார் என்று கூறினால் அது எந்த அளவுக்கு இஸ்மாயீல் ஸலபியைக் கேவலப்படுத்துமோ அந்த அளவுக்கு இவர் குர்ஆனைக் கேவலப்ப்டுத்துகிறார்.

திருக்குர்ஆன் மொழி நடைக்கு முக்கியத்துவம் கொடுப்பது உண்மை தான். அதை விட கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும். கருத்தைப் புறம் தள்ளி விட்டு வார்த்தைகளை அழகுபடுத்துவது குர்ஆனின் தன்மை இல்லை.

தமிழ் அரசியல்வாதிகளும் மேடைப் பேச்சாளர்களும் வார்த்தை ஜாலம் காட்டுவார்கள். அதில் உருப்படியாக கருத்து எதுவும் இருக்காது. அது போல் தான் குர்ஆன் அமைந்துள்ளது என்று இவர் வாதிடுகிறார். சூனியம் செய்பவர் என்பது தான் இந்த இடத்தில் பொருத்தமான வார்த்தை; நடையழகுக்காக சூனியம் செய்யப்பட்டவர் என்று அல்லாஹ் கூறி விட்டான் என்று கூறியதன் மூலம் பொருத்தமற்ற சொற்களைப் போட்டு மொழி நடையை குர்ஆன் அழகுபடுத்தியுள்ளது என்ற இந்த வாதம் எவ்வளவு கடுமையானது என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும். நபிகள் நாயகத்தை மன நோயாளியாக ஆக்கியே தீருவது என்பதற்காக அல்லாஹ்வின் வசனத்திலும் கை வரிசையக் காட்டி விட்டார்.

சூனியம் செய்யப்பட்டவர் என்ற சொல்லுக்கு சூனியம் செய்யப்பட்டவர் என்று சரியான அர்த்தம் செய்தால் மொழி நடையும் கருத்துச் செறிவும் திருக்குர்ஆனில் இருப்பது உறுதியாகும். சூனியம் செய்யப்பட்டவர் என்ற சொல்லுக்கு சூனியம் செய்பவர் என்று பொருள் கொண்டால் வார்த்தை அலங்காரம் தான் இருக்கும். மொழியில் தவறு ஏற்பட்டுவிடும். அதாவது பொருத்தமற்ற சொல்லைப் பயன்படுத்தி குர்ஆன் மொழி நடையைப் பேணியுள்ளது என்ற நிலை ஏற்படும். அதாவது வேட்டியைக் களைந்து விட்டு தோளில் துண்டு போடும் செயலுக்கு ஒப்ப இது அமையும் என்பதை நாம் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

அனைத்து இறைத் தூதர்களும் சூனியக்காரர்கள் என எதிரிகளால் விமர்சிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறே, இவர்களுக்கு முன்பிருந்தோரிடம் எந்தத் தூதர் வந்த போதும், (இவர்) சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர் என அவர்கள் கூறாமல் இருந்ததில்லை. (51:52)

எனக் குர்ஆனும் கூறுகின்றது. இந்த அடிப்படையில் அர்த்தம் செய்யும் போது அந்த அர்த்தத்திற்கும், ஹதீஸிற்குமிடையில் எந்த முரண்பாடும் இல்லை என்பது தெளிவு. முன்னைய அர்த்தத்தின்படி சூனியம் செய்யப்பட்ட மனிதர் என்று அர்த்தம் செய்தாலும், காஃபிர்கள் கூறிய நோக்கத்திற்கும் இந்த ஹதீஸ் கூறும் அர்த்தத்திற்குமிடையில் பாரிய வேறுபாடு உள்ளது என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டோம்.

நம் இஷ்டத்துக்கு இல்லாத அர்த்தம் செய்தால் எதையும் முரண்பாடு இல்லை என்று ஆக்கிவிடலாம்.

இஸ்மாயீல் ஸலபி ஒருவரை அடிக்கும் போது, “இஸ்மாயீல் ஸலபி அடிக்கப்பட்டார்’ என்று நாம் கூறலாம். “அவர் அடிக்கத் தான் செய்தார் அடிக்கப்படவில்லையே’ என்று யாராவது கேட்டால், “அடித்தார் என்ற அர்த்தத்தில் தான் அப்படிக் கூறினேன்’ எனச் சொல்லி தப்பித்துக் கொள்ளலாம்.

“இஸ்மாயீல் ஸலபிக்கு மூளை இல்லை’ என்று ஒருவர் கூறுகிறார். ஏன் இப்படி கூறினாய் என்று இஸ்மாயீல் ஸலபி கேட்கும் போது “மூளை இருக்கிறது என்பதைத் தான் மூளை இல்லை என்ற வார்த்தையால் குறிப்பிட்டேன்’ என்று கூறினால் இஸ்மாயீல் ஸலபி திருப்திப்பட்டுக் கொள்வார்.

திருடலாம்; விபச்சாரம் செய்யலாம் என்று கூட ஒருவர் பேசி விட்டு திருடக் கூடாது; விபச்சாரம் செய்யக் கூடாது என்பது தான் இதன் அர்த்தம் என்று கூறலாம்.

நாம் சொல்லும் வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பது பிரச்சனை இல்லை. நான் நினைப்பது தான் அதற்கு அர்த்தம் என்று கொள்கை வகுத்துக் கொண்டால் எதையும் பேசலாம். வேறு அர்த்தம் கற்பித்துக் கொள்ளலாம் என்று ஆகிவிடும். சொந்த வாழ்க்கையில் இதை ஜீரணிக்காத இவர் அல்லாஹ்வின் வார்த்தைகளை மட்டும் இப்படி கேலிப் பொருளாக ஆக்குகிறார்.

அதாவது சூனியம் செய்யப்பட்டவர் என்று காபிர்கள் விமர்சனம் செய்தார்கள் என்பதற்கு சூனியம் செய்பவர் என்று இல்லாத அர்த்தம் செய்தால் நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்ட ஹதீஸுக்கு முரண்படாமல் பொருந்திப் போய்விடுமாம்.

இதைவிட, நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டது என்ற ஹதீஸுக்கு சூனியம் வைக்கப்படவில்லை என்று பொருள் கொண்டால் பொருந்திப் போகாதோ? இதெல்லாம் ஒரு ஆய்வா?

மஸ்ஹூர் என்பதற்கு என்ன அர்த்தமோ அந்த அர்த்தத்தைச் செய்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

முந்தைய நபிமார்களைப் பற்றி சூனியக்காரர்கள் என்று சொன்னதால் நபிகள் நாயகத்தைப் பற்றியும் அப்படித் தான் சொல்லி இருப்பார்கள் என்று ஆதாரமற்ற ஊகத்தை திணிக்கிறார். முந்தைய நபிமார்களை சூனியம் செய்பவர்கள் என்று எதிரிகள் கூறியதாக திருக்குர்ஆன் கூறும் போது ஸாஹிர் (சூனியம் செய்பவர்) என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. எனவே அந்தச் சொல்லுக்கான அர்த்தத்தை அங்கே கொடுக்க வேண்டும்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஸாஹிர் (சூனியக்காரர்) என்று கூறியதாகவும் குர்ஆன் கூறுகிறது. மஸ்ஹூர் (சூனியம் செய்யப்பட்டவர்) என்று கூறியதாகவும் குர்ஆன் கூறுகிறது. இரண்டு விதமாகவும் விமர்சனம் செய்தனர் என்று தான் அறிவுடைய ஒவ்வொருவரும் புரிந்து கொள்வார்கள். சூனியம் செய்யப்பட்டவர் என்று சொல்லி இருந்தாலும் அதை நான் கருத்தில் கொள்ள மாட்டேன். சூனியம் செய்பவர் என்று என் இஷ்டத்துக்கு அர்த்தம் செய்வேன் என்று கூறி குர்ஆனுடன் விளையாடுகிறார்.

வளரும் இன்ஷா அல்லாஹ்