தொடர்: 5 ஸிஹ்ர்  ஒரு விளக்கம்

தொடர்: 5

ஸிஹ்ர்  ஒரு விளக்கம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்படவில்லை என்பதற்குப் பல ஆதாரங்களை நாம் எடுத்துக் காட்டினோம். அவற்றில் ஒரு ஆதாரத்தைப் பின் வருமாறு கூறியிருந்தோம்.

சூனியம் வைக்கப்பட்டவர் அல்ல

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்க மறுத்த மக்கள் முரண்பட்ட இரண்டு விமர்சனங்களைச் செய்தனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டிய அற்புதங்களைக் கண்ட போது இவர் சூனியம் செய்கிறார் என்று சில வேளை விமர்சனம் செய்தனர்.

வேறு சில வேளைகளில் இவருக்கு யாரோ சூனியம் வைத்திருக்க வேண்டும் என்று விமர்சனம் செய்தனர். இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டு அதனால் மன நிலை பாதிக்கப்பட்டு உளறுகிறார் என்பது இந்த விமர்சனத்தின் கருத்தாகும்.

பல நபிமார்கள் இவ்வாறு விமர்சனம் செய்யப்பட்டதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது.

நீர் சூனியம் செய்யப்பட்டவராகவே இருக்கிறீர் என்று அவர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் 26:153

நீர் சூனியம் செய்யப்பட்டவர் என்று அவர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் 26:185

தெளிவான ஒன்பது சான்றுகளை மூஸாவுக்கு வழங்கினோம். அவர்களிடம் அவர் வந்த போது (நடந்ததை) இஸ்ராயீலின் மக்களிடம் கேட்பீராக! மூஸாவே! உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே நான் கருதுகிறேன் என்று அப்போது அவரிடம் ஃபிர்அவ்ன் கூறினான்.

திருக்குர்ஆன் 17:101

மற்ற நபிமார்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக எதிரிகள் விமர்சனம் செய்தது போலவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யாரோ சூனியம் வைத்துள்ளனர் என்று விமர்சனம் செய்ததாகவும் திருக்குர்ஆன் கூறுகிறது.

சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதனையே பின்பற்றுகிறீர்கள் என்று அநீதி இழைத்தோர் இரகசியமாகக் கூறியதையும், (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் செவியேற்ற போது எதைச் செவியேற்றார்களோ அதையும் நாம் நன்கு அறிவோம்.

திருக்குர்ஆன் 17:47

அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருந்து அதிலிருந்து இவர் உண்ணக் கூடாதா? என்றும் சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள் என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர்.

திருக்குர்ஆன் 25:8

நபிகள் நாயகம் (ஸல்) சூனியம் செய்யப்பட்டவர் என விமர்சனம் செய்தவர்களை அநியாயக்காரர்கள் என்று இவ்வசனங்கள் பிரகடனம் செய்கின்றன.

இறைத் தூதர்களுக்கு சூனியம் வைப்பது சாதாரண விசயம்; அதனால் அவரது தூதுப் பணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றிருந்தால் இந்த விமர்சனத்தை இறைவன் மறுக்க மாட்டான்.

இறைத் தூதர் சாப்பிடுகிறார், குடிக்கிறார் என்றெல்லாம் விமர்சனம் செய்யப்பட்ட போது சாப்பிடுவதாலோ குடிப்பதாலோ தூதுப் பணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதால் அதை இறைவன் மறுக்கவில்லை. எல்லாத் தூதர்களும் சாப்பிடத் தான் செய்தார்கள் என்று பதிலளித்தான்.

ஆனால் நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறிய போது அநியாயக்காரர்கள் இப்படியெல்லாம் கூறுகிறார்களே என்று மறுத்துரைக்கிறான். சூனியம் வைக்கப்பட்டு இறைத் தூதர் பாதிக்கப்பட்டால் அது தூதுப் பணியைப் பாதிக்கும் என்பதால் தான் இதை மறுக்கிறான்.

இந்த வசனம் அருளப்படும் போது சூனியம் வைக்கப்படாமல் இருந்து, பின்னர் சூனியம் வைக்கப்பட்டிருக்கலாம் அல்லவா? என்று சிலர் பேசுவார்கள். இது ஏற்க முடியாததாகும்.

பின்னர் சூனியம் வைக்கப்படும் என்றால் அது நிச்சயம் இறைவனுக்குத் தெரிந்திருக்கும். நாளைக்கு சூனியம் வைக்கப்படுவதை அறிந்துள்ள இறைவன் இன்றைக்கு அதை மறுப்பதால் எந்த நன்மையும் இல்லை.

மேற்கண்ட இரண்டு வசனங்களையும் அடுத்த வசனங்களையும் இவர்கள் கவனித்தால் இத்தகைய தத்துவங்களைக் கூற மாட்டார்கள்.

(முஹம்மதே!) அவர்கள் உம்மைப் பற்றி எவ்வாறு உதாரணங்களைக் கூறுகின்றனர் என்பதைக் கவனிப்பீராக! அவர்கள் வழி கெட்டு விட்டனர். அவர்கள் (நேர்) வழி அடைய இயலாது.

திருக்குர்ஆன் 25:9

உமக்கு எவ்வாறு அவர்கள் உதாரணம் காட்டுகிறார்கள் என்று கவனிப்பீராக! எனவே அவர்கள் வழி கெட்டனர். அவர்கள் வழியை அடைய இயலாது.

திருக்குர்ஆன் 17:48

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டவர் என்று விமர்சனம் செய்தவர்களை வழி கெட்டவர்கள் என்று இங்கே இறைவன் பிரகடனம் செய்கிறான். சூனியம் செய்யப்பட முடியாத ஒருவரை சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறுகிறார்களே என்பதால் தான் உம்மை எப்படி விமர்சிக்கிறார்கள் என்பதைக் கவனியும் என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

திருக்குர்ஆனின் தெளிவான தீர்ப்பின் படி நபிகள் நாயகத்துக்கோ, வேறு எந்த இறைத் தூதருக்கோ எவரும் சூனியம் செய்யவோ, முடக்கவோ இயலாது இதன் மூலம் உறுதியாகிறது.

நாம் இவ்வாறு கூறியதற்குப் பல விதமான மறுப்புக்களை இஸ்மாயீல் ஸல்ஃபி கூறுகிறார்.

அவை அனைத்துமே தவறாக அமைந்துள்ளன.

இந்த வாதம் தவறானதாகும். இந்த வாதத்தை முன்வைப்பதன் மூலம் சகோதரர் தனக்குத் தானே முரண்படுகின்றார்.

சூனியம் என்றால் வெறும் சூழ்ச்சி, தந்திர வித்தை, மாயாஜாலம், மெஜிக் என்று விளக்கம் கூறி விட்டு இந்த இடத்தில் மஸ்ஹூர் என்பதற்கு விளக்கமளிக்கும் போது அவருக்கு மாற்றுக் கருத்துடையவர்கள் கூறும் விளக்கத்தையே ஏற்றுக்கொண்டு வாதிப்பதன் மூலம் தனக்குத் தானே முரண்படுகின்றார்.

மஸ்ஹூர் – சூனியம் செய்யப்பட்டவர் என்ற மொழிபெயர்ப்புக்கு அவரது விளக்கப்படி சூழ்ச்சிக்குள்ளானவர், மாயாஜால வித்தைக்குள்ளானவர், மெஜிக்குக்குள்ளானவர் என்றல்லவா அர்த்தமும் விளக்கமும் எடுத்திருக்க வேண்டும்? இந்த வாதத்தை முன்வைத்ததன் மூலம் அவர் சூனியம் என்ற ஒன்று இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறார்.

எனவே, இந்த வாதத்தை முன்வைத்ததன் மூலம் அவர் தனக்குத் தானே முரண்படுவதுடன் சூனியத்திற்கு வெறும் தந்திர வித்தை, மெஜிக், மாயாஜாலம் என்று இது வரை அவர் அளித்த அர்த்தமற்ற வாதத்தை அவரே தவறு என ஒப்புக்கொண்டவராகின்றார்.

இவ்வாறு இஸ்மாயில் ஸலபி வாதிடுகிறார். ஸிஹ்ர் என்பதற்கு அல்லாஹ்வும் அவனது தூதரிடமும் ஒரு அர்த்தம் உள்ளது. சூனியம் செய்பவர்களிடம் அதற்கு ஒரு அர்த்தம் இருக்கும். அறிவற்ற பாமர மக்களிடம் ஒரு அர்த்தம் இருக்கும். ஸிஹ்ர் என்பதை யார் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து அவர்கள் எந்த அர்த்தத்தில் பயன்படுத்துகிறார்கள் என்று முடிவு செய்ய வேண்டும்.

கல்லைக் கடவுளாகக் கருதும் மக்களிடம் கடவுள் என்பதன் அர்த்தம் வேறு. முஸ்லிம்களிடம் கடவுள் என்பதன் அர்த்தம் வேறு.

கடவுள் சிலை ஒன்று திருடு போய்விடும் போது, “உங்கள் கடவுள் என்னவானார்?’ என்று நாம் கேட்கிறோம். இதைப் பார்க்கும் ஒருவர் கல்லை கடவுள் என்று நாம் ஒப்புக் கொண்டதாகக் கூறினால் அதன் நிலை என்னவோ அந்த நிலையில் தான் இஸ்மாயீல் ஸலபியின் இந்த வாதம் அமைந்துள்ளது.

ஸிஹ்ர் என்பது ஏமாற்றும் தந்திர வித்தை என்பது மார்க்கத்தின் நிலை. நபிகள் நாயகத்துக்கு சூனியம் செய்யப்பட்டது என்று கருதிய காபிர்களிடமும் இஸ்மாயீல் ஸலபியிடமும் இதன் அர்த்தம் வேறு.

ஒரு மனிதனுக்கு ஸிஹ்ர் செய்து அவனை மன நோயாளியாக ஆக்க முடியும் என்று காபிர்கள் நம்பினார்கள். இஸ்மாயீல் ஸலபியும் அப்படித் தான் நம்புகிறார். எனவே கிறுக்கனை சூனியம் செய்யப்பட்டவன் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

மறுமை, சொர்க்கம் உள்ளிட்ட மறைவான விஷயங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும் போது அதில் காபிர்களுக்கு நம்பிக்கை வராததால் நபிகள் நாயகத்தைப் பைத்தியக்காரர் என்று கூறினார்கள். யாரோ சூனியம் வைத்து இவரைப் பைத்தியமாக்கி விட்டனர் என்று அவர்கள் நம்பிக்கைப் படி கூறினார்கள்.

அவர்கள் எந்த அர்த்தத்தில் கூறினார்களோ அதற்கேற்பவே மறுப்பு அளிக்க வேண்டும்.

நீங்கள் நினைக்கிற படி முஹம்மது நபி பைத்தியக்காரர் அல்லர். யாரோ சூனியம் வைக்கவும் இல்லை. இவ்வாறு கூறுவது அநீதி என்ற கருத்துப்பட அல்லாஹ் பதிலளிக்கிறான்.

தராவீஹ் 20 ரக் அத் இல்லை என்று நாம் கூறும் போது குராபிகள் இவரைப் போலவே எதிர்க் கேள்வி கேட்டனர். தராவீஹ் தொழுகை இல்லை என்று கூறியவர்கள் இப்போது தராவீஹ் தொழுகை உள்ளது என்பதை ஒப்புக் கொண்டு விட்டனர் என்பது தான் அவர்களின் கேள்வி.

நாம் தராவீஹ் என்று ஒரு தொழுகை இருப்பதை ஒப்புக் கொள்ளவில்லை. உங்கள் வாதப்படி தராவீஹ் தொழுகை என்று எதை நினைக்கிறீர்களோ அது இருபது ரக்அத் இல்லை என்பதற்காக அவ்வாறு குறிப்பிட்டோம் என்று விளக்கம் அளித்தோம்.

அது போன்ற நிலையில் தான் இஸ்மாயீல் ஸலபியும் இருக்கிறார்.

ஸிஹ்ர் என்பது குறித்து நாம் கொண்ட நிலைப்பாட்டுக்கும் காபிர்கள் ஸிஹ்ர் குறித்து கொண்ட நிலைப்பாட்டை எடுத்துக் காட்டியதற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. இவரது வாதம் முழுவதும் அறிவு சார்ந்ததாக இல்லாமல் மேம்போக்காகவே உள்ளது. எனவே எப்படிச் சிந்திப்பது என்ற அடிப்படை அறிவை இவர் வளர்த்துக் கொள்வது நல்லது.

இந்த வசனம் நேரடியாக நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்ய முடியாது என்பதைத் தான் கூறுகின்றது என்பதை அவர் தெளிவாகத் தெரிந்திருந்தால், இதையே முதல் வாதமாக வைத்து வெட்டு ஒன்று துண்டு இரண்டு எனப் பிரச்சினையை முடித்திருப்பார். பல்வேறு வாதங்களை முன்வைத்து மக்கள் மனதில் குறித்த ஹதீஸ் குறித்து சந்தேகங்களை ஏற்படுத்தி, அதன் பின்னர் இந்த வாதத்தை முன்வைப்பதன் மூலம் இந்த வாதம் வலுவற்றது என்பதைப் புரிந்து கொண்டே இந்த வாதத்தை முன்வைத்துள்ளார் என யூகிக்கலாம். (இந்த யூகத்திற்கு வலுவூட்டுவதாக அவரது எழுத்து அமைந்துள்ளதைப் பின்னர் குறிப்பிடுவோம்.)

என்று அடுத்த வாதத்தை எடுத்து வைக்கிறார். எதற்கெடுத்தாலும் யூகம் என்று ஓலமிட்டவர் தானே யூகம் செய்வதை ஒப்புக் கொள்கிறார்.

எது வலிமையானதோ அதைத் தான் முதலில் வைக்க வேண்டும் என்று சட்டமோ, தர்மமோ இல்லை. அப்படி எந்த மரபும் இல்லை. முதலில் சாதாரணமானதை வைத்து விட்டு கடைசியில் வலிமையானதை வைப்பதும் உண்டு. எவ்வித வரிசைக் கிரமத்தையும் ஏற்படுத்திக் கொள்ளாமல் நினைவுக்கு வரும் வரிசைப்படி வாதங்கள் வைக்கப்படுவதும் உண்டு.

திருக்குர்ஆனின் பல்வேறு வசனங்களில் அடிப்படையில் எழுப்பப்பட்டுள்ள இந்த வாதம் வலுவானது என்பதை இஸ்மாயில் ஸலபி உணர்ந்திருக்கிறார். இதற்கு ஏற்கத்தக்க எந்தப் பதிலும் இவரிடம் இல்லை. எனவே தான் இந்த வாதத்தை முதலில் வைக்க வேண்டும்; இதை இரண்டாவது வைக்க வேண்டும் என்று பக்கத்தை நிரப்புவதற்காக எதையாவது எழுதுகிறார் என்பது இதிலிருந்து தெரிகிறது.

அடுத்து இஸ்மாயில் ஸலபி எடுத்து வைக்கும் ஆதாரம் இதை விடக் கேலிக் கூத்தாக அமைந்துள்ளது.

முரண்பாடு இல்லையே!

அல்குர்ஆனில் மஸ்ஹூரா – சூனியம் செய்யப்பட்டவர் என்ற வார்த்தை நபி(ஸல்) அவர்களைக் குறித்து காஃபிர்களால் இரு இடங்களிலும், மூஸா நபியைக் குறித்து பிர்அவ்னால் ஒரு இடத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பிர்அவ்னும் மூஸா நபியும்:

நிச்சயமாக நாம் மூஸாவுக்குத் தெளிவான ஒன்பது அத்தாட்சிகளை வழங்கினோம். (தமது சமூகமாகிய) அவர்களிடம் அவர் வந்தபோது (என்ன நிகழ்ந்தது? என நபியே!) நீர் இஸ்ராஈலின் சந்ததியினரிடம் கேட்டுப்பாரும். மூஸாவே! நிச்சயமாக சூனியம் செய்யப்பட்டவராக உம்மை நான் எண்ணுகிறேன் என்று பிர்அவ்ன் அவரிடம் கூறினான். (17:101)

பிர்அவ்ன் மூஸா நபியை சூனியம் செய்யப்பட்டவர் எனக் கூறியதைக் குர்ஆனோ, மூஸா நபியோ ஏற்றுக்கொள்ளவில்லை.

இதற்குப் பதில் கூறும் போது மூஸா(அலை) அவர்கள்,

வானங்கள் மற்றும் பூமியின் இரட்சகனே இவைகளைத் தெளிவான சான்றுகளாக இறக்கி இருக்கிறான் என்பதை நிச்சயமாக நீ அறிவாய். பிர்அவ்னே! நிச்சயமாக நான் உன்னை அழிவுக்குள்ளாக்கப் படுபவனாகவே எண்ணுகிறேன் என (மூஸா) கூறினார். (17:102)

மேற்படி வசனத்தின் மூலம் அவன் கூறியதை மறுத்ததுடன் அவன் அழிவுக்குள்ளாகக்கூடியவன் என்றும் மூஸா நபி கூறினார் என்பது தெளிவாகின்றது. எனினும் மூஸா நபி பின்னர் சூனியத்திற்குள்ளானார்கள் எனக் குர்ஆன் கூறுகின்றது. சூனியக்காரர்கள் கயிறுகளையும் தடிகளையும் போட்ட போது அவர்களது சூனியத்தின் காரணமாக அவை பாம்புகள் போன்று போலித் தோற்றத்தை ஏற்படுத்தின. மக்களுக்கு மட்டுமன்றி மூஸா நபிக்குக் கூட அவை பாம்பாகத் தென்பட்டன. அவர் அச்சமுற்றார். இதைக் குர்ஆன் உறுதி செய்கின்றது. (20:65-68)

பிர்அவ்ன் மூஸா நபியை சூனியம் செய்யப்பட்டவர் என்கின்றான்! அவன் சொன்னபடியே அவர் சூனியம் செய்யப்பட்டார். அதன் பாதிப்புக்குள்ளானார். இப்போது பிர்அவ்ன் சொன்னது சொன்னபடி நடந்தது என்று யாரும் கூறுவார்களா? மூஸா நபிக்கு சூனியத்தால் கயிறும், தடியும் பாம்பாகத் தென்பட்டது என்று கூறுவது பிர்அவ்னை உண்மைப்படுத்துவதாகுமா? குர்ஆனைப் பொய்ப்படுத்துவதாகுமா? குர்ஆன் குர்ஆனுக்கே முரண்படுகின்றதா?

இப்படி இருக்க அநியாயக்காரர்கள் நபியை சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறினர். நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்ற ஹதீஸை ஏற்றுக்கொண்டால் அது குறைஷிகளின் கூற்றை உண்மைப்படுத்துவதாகி விடும் என விவாதிப்பது எப்படி நியாயமாகும்?

இவ்வாறு இஸ்மாயில் ஸலபி கூறியுள்ளார்.

எவ்வளவு கூர்மையான ஆராய்ச்சி என்று பாருங்கள்!

ஒரு மனிதருக்கு சூனியம் செய்து அவர் பைத்தியமானார் என்பது வேறு. அவர் முன்னிலையில் சில பொருட்களின் மூலம் வித்தை செய்து காட்டுவது என்பது வேறு.

மூஸா நபியவர்களுக்கு யாரும் ஸிஹ்ர் செய்யவுமில்லை. அப்படி குர்ஆன் சொல்லவும் இல்லை. அவர்கள் முன்னிலையில் கயிறுகள் மூலமும் கைத்தடிகள் மூலமும் வித்தைகள் செய்யப்பட்டன என்று தான் குர்ஆன் கூறுகிறது.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸிஹ்ர் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸ்களில் அவர்கள் முன்னிலையில் யாரோ வித்தை செய்து காட்டினார்கள் என்று கூறப்படவில்லை. அவர்களே மன நோயாளியாக ஆனார்கள் என்று தான் கூறப்படுகிறது. இதற்கும் இவர் எடுத்து வைக்கும் ஆதாரத்துக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.

மேலும் மூஸா நபி முன்னிலையில் கயிறுகளை பாம்புகள் காட்டினாலும் அது உடனடியாக முறியடிக்கப்பட்டு வித்தை தோற்கடிக்கப்பட்டது. மூஸா நபி தான் ஸிஹ்ரை வென்றார்களே தவிர அவர்களை ஸிஹ்ர் வெல்லவில்லை. ஆனால் நபிகள் நாயகத்துக்கு ஸிஹ்ர் செய்யப்பட்ட கட்டுக் கதையில் அப்படிக் கூறப்படவில்லை.

கயிறுகளும் கைத்தடிகளும் ஸிஹ்ர் செய்யப் பயன்பட்ட பொருளாக இருந்தது போல் இங்கே நபிகள் நாயகத்தின் உடல் ஸிஹ்ர் செய்யும் களமாக, பொருளாக ஆக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. எனவே இவ்வாறு கூறுவது நிச்சயம் குர்ஆனுக்கு முரணானது தான் என்பதில் ஐயம் இல்லை.

எனவே நபிகள் நாயகத்துக்கு ஸிஹ்ர் செய்யப்பட்டதாக யார் கூறினாலும் அவர் குர்ஆன் தீர்ப்புப்படி அநியாயக்காரர் தான்.

அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இலிருந்து அதிலிருந்து இவர் உண்ணக் கூடாதா? என்றும் சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள் என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர்.

திருக்குர்ஆன் 25:8

நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டது என்று நம்பி இஸ்மாயீல் ஸலபியுடன் சேர்ந்து அநியாயக்காரர்கள் பட்டியலில் சேர வேண்டாம் என்று பொது மக்களை எச்சரிக்கிறோம்.

இந்த வாதத்தை மறுப்பதற்காக இன்னொரு வாதத்தையும் எடுத்துக் காட்டுகிறார்.

சூனியம் செய்யப்பட்டவர்:

அல்லது ஒரு புதையல் இவருக்குக் கொடுக்கப் பட்டிருக்க வேண்டாமா? அல்லது அவருக்கு ஒரு தோட்டம் இருந்து, அதிலிருந்து அவர் உண்ண வேண்டாமா? (என்றும் கூறுகின்றனர்.) நீங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்றுகின்றீர்கள் என்று அநியாயக்காரர்கள் கூறுகின்றனர். (25:08)

அவர்கள் உம்மிடம் செவியேற்கும் போது எதை செவியேற்கின்றார்கள் என்பதையும், சூனியம் செய்யப்பட்ட மனிதரை அன்றி வேறு எவரையும் நீங்கள் பின்பற்றவில்லை என்று அநியாயம் செய்தோர் இரகசியம் பேசிக் கொள்வதையும் நாம் நன்கறிவோம். (17:47)

இந்த இரு வசனங்களிலும் நபி(ஸல்) அவர்களையும் (17:101), மூஸா நபியையும் (26:153), ஷுஐப் நபியையும் (26:185) இதன் பன்மைப் பதம் ஸாலிஹ் நபியையும், குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இடங்களில் இவர்களின் ஒட்டு மொத்தப் போதனைகளையும் சூனியத்தின் உளறல் என்ற அடிப்படையிலேயே இவ்வாறு கூறினர் என்பதை இந்த வசனங்களின் முன்-பின் வசனங்களை அவதானிக்கும் போது அறிந்துகொள்ளலாம்.

17:47 ஆம் வசனத்தில் அநியாயக்காரர்கள் நபியை சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறியதாக வருகின்றது. அதற்கு அடுத்து வரும் வசனங்களில்

எலும்புகளாகவும், உக்கிப்போனவர்களாகவும் நாம் ஆகிய பின்னர் நிச்சயமாக நாம் புதியதொரு படைப்பாக எழுப்பப்படுவோமா? என அவர்கள் கேட்கின்றனர். (17:49)

எனவே, நபி(ஸல்) அவர்களது போதனை சூனியத்திற்குள்ளானவனின் உளறல் என்ற அர்த்தத்திலேயே காஃபிர்கள் இப்படிக் கூறியுள்ளனர் என்பதை அறியலாம்.

25:8ஆம் வசனத்திலும் நபி(ஸல்) அவர்களை மஸ்ஹூர் – சூனியத்திற்குள்ளானவர் எனக் கூறியதாக குர்ஆன் குறிப்பிடுகின்றது. அதற்கு முந்தைய வசனங்களைப் பார்த்தால் தூதுத்துவத்தை முழுமையாக மறுப்பதற்காகத் தான் இப்படிக் கூறினர் என்பதைப் புரியலாம்.

இது பொய்யே அன்றி வேறில்லை. இதனை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார். வேறு ஒரு கூட்டத்தினரும் இதற்காக அவருக்கு உதவி புரிந்துள்ளனர் என நிராகரித்தோர் கூறுகின்றனர். இதனால் அவர்கள் நிச்சயமாக அநியாயத்தையும் பொய்யையுமே கொண்டு வந்துள்ளனர்.

(இவை) முன்னோர்களின் கட்டுக்கதைகளாகும். இவற்றை இவரே எழுதச்செய்துகொண்டார். அது இவருக்குக் காலையிலும் மாலையிலும் படித்துக் காட்டப்படுகின்றது என்றும் கூறுகின்றனர்.

வானங்கள் மற்றும் பூமியின் இரகசியங்களை நன்கறிந்தவனே இதனை இறக்கி வைத்தான் என (நபியே) நீர் கூறுவீராக! நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்.

அல்லது ஒரு புதையல் இவருக்குக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது அவருக்கு ஒரு தோட்டம் இருந்து, அதிலிருந்து அவர் உண்ண வேண்டாமா? (என்றும் கூறுகின்றனர்.) நீங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்றுகின்றீர்கள் என்று அநியாயக்காரர்கள் கூறுகின்றனர். (25:4,5,6,8)

இவ்வாறே ஸாலிஹ்(அலை) அவர்களையும் இப்படி விமர்சித்தனர். அவர்களது சமூகத்திற்குத் தன்னை ஒரு இறைத் தூதர் என அவர் அறிமுகம் செய்து, போதனை செய்த போது அவரது தூதுத்துவத்தை முழுமையாக மறுக்கும் விதமாக,

அ(தற்க)வர்கள், நீர் சூனியம் செய்யப்பட்டவர்களில் உள்ளவர் தாம் என்று கூறினர். (26:153)

இவ்வாறே ஷுஐப்(அலை) அவர்கள் தன்னை இறைத் தூதராக அறிமுகப்படுத்திப் போதனை செய்த போது,

அ(தற்க)வர்கள்,நிச்சயமாக நீர், சூனியம் செய்யப்பட்டவர்களில் உள்ளவர் தாம் என்று கூறினர். நீர் எம்மைப் போன்ற மனிதரேயன்றி வேறில்லை. நிச்சயமாக உம்மை நாம் பொய்யர்களில் உள்ளவராகவே எண்ணுகின்றோம். (26:185-186)

இந்த அடிப்படையில் நோக்கும் போது நபிமார்களது முழுத் தூதுத்துவத்தை மறுப்பதற்காகவே சூனியம் செய்யப்பட்டவர்கள் என அவர்கள் கூறினர் என்பதை அறியலாம். இவர்கள் சூனியம் செய்யப்பட்டதனால் உளறுகின்றனர் என அவர்கள் கூறினர்.

அவர்களின் இந்தக் கூற்றை மறுப்பது நபிக்குச் சூனியமே செய்ய முடியாது என்பதை மறுப்பதாகாது! நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்ட ஹதீஸை நம்புவது காஃபிர்களை உண்மைப்படுத்துவதாகவோ குர்ஆனைப் பொய்ப்படுத்துவதாகவோ ஒருபோதும் அமையாது. எனவே, நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஹதீஸிற்கும் இந்த வசனங்களின் போக்கிற்கும் எந்த முரண்பாடும் இல்லை.

இதைச் சகோதரர் தெளிவாக விளங்கியிருந்ததனால் தான் இதை முதல் வாதமாகவோ, இறுதி வாதமாகவோ வைக்கவில்லை. அத்துடன் சூனியம் செய்யப்பட்டவர் என்று என்ன எண்ணத்தில் காஃபிர்கள் கூறினர் என்பதை அவரே எழுதும் போது,

வேறு சில வேளைகளில் இவருக்கு யாரோ சூனியம் வைத்திருக்க வேண்டும் என்று விமர்சனம் செய்தனர். இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டு அதனால் மனநிலை பாதிக்கப்பட்டு உளறுகிறார் என்பது இந்த விமர்சனத்தின் கருத்தாகும். (தர்ஜமா பக்: 1302)

காஃபிர்கள் கூறிய அர்த்தம் வேறு. அதைத் தான் குர்ஆனின் போக்கு கண்டிக்கின்றது என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டே தவறான வாதத்தை முன்வைத்துக் குர்ஆனுக்கும் ஆதாரபூர்வமான ஹதீஸுக்கு மிடையில் முரண்பாடு இருப்பதாகச் சித்தரிக்கும் இவரது தவறான போக்கையும் ஹதீஸ் மீதும், ஹதீஸ் நூற்கள் மீதும், கடந்த கால ஹதீஸ் கலை அறிஞர்கள் அனைவர் மீதும் சந்தேகத்தைத் தோற்றுவிக்கும் இவரது ஆபத்தான போக்கு குறித்தும் மக்கள் விழிப்புடனிருக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

இவர் நமது வாதத்தை மறுக்கிறாரா அல்லது சூனியம் செய்யப்பட்டு நம் சார்பில் வாதிக்கிறாரா என்று சந்தேகம் ஏற்படும் வகையில் மேற்கண்டவாறு வாதிடுகிறார்.

இந்த இடங்களில் இவர்களின் ஒட்டுமொத்தப் போதனைகளையும் சூனியத்தின் உளறல் என்ற அடிப்படையிலேயே இவ்வாறு கூறினர் என்பதை இந்த வசனங்களின் முன்-பின் வசனங்களை அவதானிக்கும் போது அறிந்துகொள்ளலாம்.

என்பதன் அர்த்தம் என்ன? சூனியம் செய்யப்பட்ட காரணத்தினால் முஹம்மத் உளறுகிறார் என்பது தான் அர்த்தம் என்று இவர் நமக்கு எடுத்துக் கொடுக்கிறார்.

நாமும் இதைத் தான் சொல்கிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸிஹ்ர் வைக்கப்பட்டு மன நோயாளியாகி உளறுகிறார் என்று தான் காஃபிர்கள் கூறினார்கள் என்பதை நாமும் ஒப்புக் கொள்கிறோம். அதைத் தானே ஸிஹ்ர் சம்பந்தப்பட்ட ஹதீஸும் கூறுகிறது. மனநோய்க்கு ஆளாகி ஒன்று கிடக்க ஒன்று பேசினார்கள் என்று கூறும் ஹதீஸுக்கும் காஃபிர்களின் மேற்கண்ட விமர்சனத்துக்கும் இந்த விஷயத்தில் வேறுபாடு இல்லை.

சூனியம் செய்யப்பட்டதால் இவர் உளறுகிறார் என்று காபிர்கள் கூறினார்கள்.

இவ்வாறு கூறுவோர் அநியாயக்காரர்கள் என்று அல்லாஹ் மறுப்புக் கூறினான்.

நபிகள் நாயகம் அவர்களுக்கு மன நோய் ஏற்பட்டு உளறினார்கள் என்று அந்த ஹதீஸ் கூறுகிறது.

இது காஃபிர்களின் கூற்றுக்கு வலு சேர்த்து குர்ஆனுடன் மோதுவது இவரது இந்த வாதத்தில் இருந்தே தெரிகிறது.

இந்த வசனம் அவரது கருத்துப்படி மிக வலுவானதாக இருப்பதால் இப்படி உளறும் நிலைக்கு ஆளாகி விட்டார். இந்த வசனத்துக்கு மாற்றமாக அந்த ஹதீஸ் அமைந்திருப்பதை அவரால் மறுக்க முடியவில்லை.

இப்போது என்ன செய்வது? சூனியம் செய்யப்பட்டவர் என்பதற்கு சூனியம் செய்தவர் என்று அர்த்தத்தை மாற்றிவிட்டால் பிரச்சனை தீர்ந்து விடும் என்று நினைத்து அப்படியும் வாதிடுகிறார்.

அதற்கு அரபு இலக்கணத்தையும் துணைக்கு அழைக்கிறார். அதை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் பார்ப்போம்.