தொடர்: 13 ஸிஹ்ர் – ஒரு விளக்கம்

தொடர்: 13

ஸிஹ்ர் – ஒரு விளக்கம்

சூனியம் பற்றிய ஹதீஸ்களை நாம் விமர்சனம் செய்த போது, அந்த ஹதீஸ்கள் முரண்பட்ட தகவல்களைக் கூறுகின்றன; எனவே அதில் சந்தேகம் அதிகரிக்கிறது என்று கூறி, அந்த அறிவிப்புக்களுக்கு மத்தியில் முரண்பாடுகள் இருப்பதையும் நாம் சுட்டிக் காட்டி இருந்தோம்.

மேலதிக விளக்கத்துக்காக நாம் சுட்டிக் காட்டிய அந்த முரண்பாடுகளுக்கு இஸ்மாயில் ஸலபி எழுதிய விளக்கத்தைக் கடந்த இதழில் பார்த்தோம்.

அறிவிப்பாளர்களின் வார்த்தைகளில் வேறுபாடு வரலாம். ஆனால் கருத்து ஒன்றுக்கொன்று நேர் முரணாக இருக்கக் கூடாது. இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் இஸ்மாயில் ஸலபி எழுதிய விளக்கத்தில் குழப்புகிறார்.

இந்த முரண்பாடுகள் காரணமாக மேற்கண்ட ஹதீஸ்களை மறுப்பதாகவும் இவர் வாதிடுகிறார். குர்ஆனுக்கு முரண்படுவதால் தான் மறுக்கிறோம். அந்த ஹதீஸ்களுக்கிடையே காணப்படும் முரண்பாடுகள், இது சரியான செய்தி அல்ல என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது என்று தான் நாம் கூறுகிறோம்.

சூனியம் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருளைக் கிணற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டதா? இல்லையா என்பதைக் குறித்து அந்த ஹதீஸ்கள் கூறுவது என்ன என்பதை அந்த ஹதீஸ்களின் வாசகத்தை வைத்துத் தான் முடிவு செய்ய வேண்டும்.

ஒரு சொல்லுக்கு நம் இஷ்டத்துக்கு ஏற்ப அர்த்தம் கொடுத்து விட்டு முரண்பாடு இல்லை என்று கூறக் கூடாது. ஆனால் இவர் ஒரு சொல்லுக்கு ஒரு இடத்தில் ஒரு அர்த்தமும் இன்னொரு அறிவிப்பில் உள்ள அதே சொல்லுக்கு வேறு அர்த்தமும் கொடுத்து விட்டு முரண்பாடு இல்லை என்கிறார்.

இது குறித்து புகாரியில் இடம் பெற்ற – நாம் சுட்டிக்காட்டிய – அந்த ஹதீஸ்களைப் பார்ப்போம்.

முதலாவது ஹதீஸ், புஹாரியில் 5765வது ஹதீஸ் ஆகும். இதற்கு நாம் பொருள் செய்தால் அதற்கு சலபி உள்நோக்கம் கற்பித்து விடுவார். எனவே ரஹ்மத் ட்ரஸ்ட் தமிழாக்கத்தையே எடுத்துக் காட்டுகிறோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் தம் துணைவியரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாக நினைக்கலானார்கள்.

-அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அவ்வாறிருந்தால் அது சூனியத்திலேயே கடுமையானதாகும்.-

(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? நான் எந்த விஷயத்தில் அல்லாஹ்விடம் தெளிவைத் தரும்படி கேட்டுக் கொண்டிருந்தேனோ, அந்த விஷயத்தில் அல்லாஹ் எனக்குத் தெளிவை வழங்கி விட்டான். (கனவில் வானவர்கள்) இரண்டு பேர் என்னிடம் வந்து, ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். என் தலைமாட்டில் இருந்தவர் மற்றொருவரிடம், இந்த மனிதரின் நிலையென்ன? என்று கேட்டார். மற்றவர் சூனியம் செய்யப்பட்டுள்ளார் என்று சொன்னார். அதற்கு அவர், யார் அவருக்குச் சூனியம் வைத்தார்? என்று கேட்டார். மற்றவர், யூதர்களின் நட்புக் குலமான பனூ ஸுரைக்’ குலத்தைச் சேர்ந்த லபீத் பின் அஃஸம் என்பவர். இவர் நயவஞ்சகராக இருந்தார் என்று பதிலளித்தார். அவர், எதில் (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)? என்று கேட்க, மற்றவர், சீப்பிலும் சிக்கு முடியிலும் என்று பதிலளித்தார். அவர், எங்கே (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)? என்று கேட்க, மற்றவர், ஆண் பேரீச்சம் பாளையின் உறையில் “தர்வான்’ குலத்தாரின் கிணற்றிலுள்ள கல் ஒன்றின் அடியில் வைக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்தார். பிறகு நபி (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்குச் சென்று அ(ந்தப் பாளை உறை)தனை வெளியே எடுத்தார்கள். பிறகு (என்னிடம் திரும்பி வந்த) நபி (ஸல்) அவர்கள், “இது தான் எனக்குக் (கனவில்) காட்டப்பட்ட கிணறு. இதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்று (கலங்கலாக) உள்ளது. இதன் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்று உள்ளன” என்று சொல்லி விட்டுப் பிறகு “அந்தப் பேரீச்சம் பாளை உறை வெளியே எடுக்கப்பட்டது” என்றும் கூறினார்கள். நான், “தாங்கள் (பாளை உறையை) ஏன் உடைத்துக் காட்டக் கூடாது?” எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் எனக்கு (இந்தச் சூனியத்திலிருந்து) நிவாரணம் அளித்து விட்டான். (சூனியப் பொருளைத் திறந்து காட்டி) மக்களில் எவரையும் குழப்பத்தில் ஆழ்த்த நான் விரும்பவில்லை” என்று சொல்லி விட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 5765

மேற்கண்ட ஹதீஸின் அரபு மூலத்தில் இஸ்தக்ரஜ என்ற சொல் இரண்டு இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் நேரடிப் பொருள் வெளியேற்றுதல் என்பதாகும். இந்த இரண்டு இடங்களிலும் சூனியம் வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்தார்கள் என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

அதாவது சூனியம் வைக்கப்பட்ட பொருள் கிணற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது என்றும் ஆனால் அதைத் திறந்து காட்டவில்லை என்றும் இந்த அறிவிப்பு கூறுகிறது. திறந்து காட்டவில்லை என்பதற்கு தனஷ்ஷர்த்த என்ற சொல் மூலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு பின்வரும் ஹதீஸைப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது. எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்தது போன்று அவர்களுக்குப் பிரமையூட்டப்பட்டது. இறுதியில் ஒரு நாள், அவர்கள் பிரார்த்தனை செய்த வண்ணமிருந்தார்கள். பிறகு சொன்னார்கள்: என் (மீது செய்யப்பட்டுள்ள சூனியத்திற்கான) நிவாரணம் எதில் உள்ளதோ அதை எனக்கு அல்லாஹ் அறிவித்து விட்டதை நீ அறிவாயா? என்னிடம் (கனவில்) இரண்டு பேர் (இரு வானவர்களான ஜிப்ரீலும், மீக்காயிலும்) வந்தனர். அவர்களில் ஒருவர் (ஜிப்ரீல்) என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் (மீக்காயீல்) எனது கால்மாட்டில் அமர்ந்தார். ஒருவர் மற்றொருவரிடம் (மீக்காயீல் ஜிப்ரீலிடம்), இந்த மனிதரைப் பீடித்துள்ள நோய் என்ன? என்று கேட்டார். மற்றொருவர் (ஜிப்ரீல்), இவருக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்தார். அதற்கு அவர், இவருக்கு சூனியம் வைத்தது யார்? என்று கேட்க, (ஜிப்ரீல்) அவர்கள், லபீத் பின் அஃஸம் (என்னும் யூதன்) என்று பதிலளித்தார். (அவன் சூனியம் வைத்தது) எதில்? என்று அவர் (மீக்காயீல்) கேட்க அதற்கு, சீப்பிலும், (இவரது) முடியிலும், ஆண் (பேரீச்சம்) பாளையின் உறையிலும் என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். அதற்கு அவர், அது எங்கே இருக்கிறது என்று கேட்க, (பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) “தர்வான்’ எனும் கிணற்றில் என்று பதிலளித்தார்.

(இதைச் சொல்லி முடித்த) பிறகு, நபி (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்த போது என்னிடம், அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ளன என்று கூறினார்கள். நான், “அதைத் தாங்கள் வெளியே எடுத்தீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், இல்லை. என்னை அல்லாஹ் குணப்படுத்தி விட்டான். (அதை வெளியே எடுத்தால்) அது மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாகி) குழப்பத்தைக் கிளப்பி விடும் என்று நான் அஞ்சினேன் என்று பதிலளித்தார்கள். பிறகு, அந்தக் கிணறு தூர்க்கப்பட்டு விட்டது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 3268

இந்த ஹதீஸிலும் அதே இஸ்தக்ரஜ என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இங்கே எதிர்மறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது அதை வெளியே எடுத்தீர்களா என்று கேட்ட போது இல்லை என்று நபிகள் நாயகள் (ஸல்) அவர்கள் கூறியதாக உள்ளது. மேலும் வெளியே எடுக்காமலே கிணறு தூர்க்கப்பட்டு விட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

அதாவது முதல் ஹதீஸ் அப்பொருளை வெளியே எடுத்தார்கள் என்று சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் கூறுகிறது. அதைத் திறந்து மக்களுக்குக் காட்டவில்லையே தவிர பொருளை வெளியே எடுத்தது உறுதி என்பது முதல் ஹதீஸிலிருந்து தெரிகிறது.

ஆனால் இரண்டாம் ஹதீஸில் அப்பொருளை வெளியே எடுக்காமலே கிணறு தூர்க்கப்பட்டு விட்டது என்று கூறப்படுகிறது.

இது இரண்டும் முரணா இல்லையா என்பதை மேற்கண்ட ஹதீஸின் வாசகத்தை வைத்துக் கூற வேண்டும். ஆனால் வெளியேற்றுதல் என்ற அர்த்தம் உடைய இஸ்தக்ரஜ என்ற சொல்லுக்கு ஒரு இடத்தில் செய்தியை மக்களிடம் பரப்புதல் என்றும் இன்னொரு இடத்தில் வெளியேற்றுதல் என்றும் தன் இஷ்டத்துக்கு அர்த்தம் செய்து விட்டு முரண்பாடு இல்லை என்கிறார் சலபி.

மேலும் இந்த இரண்டாவது ஹதீஸில் கிணறைத் தூர்த்தார்கள் என்று கூறப்பட்டு இஸ்மாயீல் சலபி பொய் சொல்கிறார் என்பதைக் காட்டிக் கொடுத்து விடுகிறது.

பொருளை வெளியே எடுத்து விட்டால் கிணறைத் தூர்க்க வேண்டியதில்லை.

அப்பொருளை கிணற்றில் வைத்து கிணறு மூடப்பட்டது என்ற கருத்தும்

அப்பொருள் வெளியே எடுக்கப்பட்டது ஆனால் உடைத்துக் காட்டவில்லை என்ற கருத்தும் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளதா இல்லையா?

இது வார்த்தையில் ஏற்பட்ட வித்தியாசமா? கருத்தில் உள்ள முரண்பாடா?

கிணற்றில் என்று நாம் இடைச் செருகல் செய்ததால் தான் குழப்பமாகத் தெரிகிறதாம். இல்லாவிட்டால் குழப்பமே இல்லையாம். இப்படி உளறுகிறார்.

வெளியேற்றுவது என்று கூறப்பட்டால் எதை வெளியேற்ற முடியுமோ எதில் இருந்து வெளியேற்ற முடியுமோ அதைத் தான் கூறுகிறது என்பது சாதாரணமாக எவருக்கும் தெரியும் உண்மை தான். கிணற்றில் இருந்து அப்பொருளை வெளியேற்றுவதைப் பற்றி தான் அது கூறுகிறது என்பது கூட விளங்காமல் இப்படி வார்த்தை ஜாலம் காட்டுகிறார். கிணற்றில் இருந்து என்ற வார்த்தை இல்லாமலே விளக்கட்டுமே?

வெளியேற்றினார்கள் என்பதற்கு, பரப்பினார்கள் என்று இல்லாத அர்த்தம் செய்யாமல் வெளியேற்றினார்கள் என்று சரியான அர்த்தம் செய்யட்டும். அதன் பின் எதில் இருந்து வெளியேற்றினார்கள் என்பதை சலபி விளக்கட்டுமே?

ரஹ்மத் ட்ரஸ்ட் செய்தது போல் சரியாக அர்த்தம் செய்தால் அதில் கிணற்றில் இருந்து என்ற கருத்தைத் தவிர வேறு கருத்து வராது.

அவர் விருப்பப்படி கிணற்றில் என்று குறிப்பிடாமல் பார்த்தாலும் முரண்பாடு இருப்பது உறுதியாகிறது.

பின்வரும் ஹதீஸும் இதே கருத்தில் அமைந்திருப்பதைக் காணலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பனூஸுரைக்‘ குலத்தைச் சேர்ந்த லபீத் பின் அஃஸம் என்பான் சூனியம் செய்தான். இதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் செய்திராத ஒன்றைத் தாம் செய்து கொண்டிருந்ததாகப் பிரமையூட்டப்பட்டார்கள். இறுதியில், அவர்கள் ஒரு நாள்’ அல்லது ஓரிரவு’ என்னிடம் வந்தார்கள். ஆயினும், அவர்கள் (என் மீது கவனம் செலுத்தாமல்) தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டேயிருந்தார்கள்.

பிறகு (என்னிடம் கூறினார்கள்:) ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? எந்த(ச் சூனியம்) விஷயத்தில் தெளிவைத் தரும்படி இறைவனிடம் நான் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்து விட்டான். (கனவில்) என்னிடம் (வானவர்கள்) இரண்டு பேர் வந்தனர். அவ்விருவரில் ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவ்விருவரில் ஒருவர் தம் தோழரிடம், இந்த மனிதரின் நோய் என்ன? என்று கேட்டார். அத்தோழர், இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று சொல்ல, முதலாமவர் இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்? என்று கேட்டார். தோழர், லபீத் பின் அஃஸம் (எனும் யூதன்) என்று பதிலளித்தார். அவர், எதில் வைத்திருக்கிறான்? என்று கேட்க, சீப்பிலும், சிக்கு முடியிலும், ஆண் பேரீச்சம் பாளையின் உறையிலும் என்று பதிலளித்தார். அவர், அது எங்கே இருக்கிறது? என்று கேட்க, மற்றவர், (பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) “தர்வான்’ எனும் கிணற்றில் என்று பதிலளித்தார். இதைச் சொல்லி முடித்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்குச் சென்று (பாளை உறையை வெளியே எடுத்துவிட்டுத் திரும்பி) வந்து, ஆயிஷா! அதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போல் உள்ளது; அதன் பேரீச்ச மரங்களின் தலைகள் ஷைத்தானின் தலைகளைப் போன்று உள்ளன என்று சொன்னார்கள்.

நான், அல்லாஹ்வின் தூதரே! அ(ந்தப் பாளை உறைக்குள் இருப்ப)தைத் தாங்கள் வெளியே எடுக்கவில்லையா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹ் எனக்கு (அதன் பாதிப்பிலிருந்து) குணமளித்துக் காப்பாற்றி விட்டான். அதை வெளியே எடுப்பதன் மூலம் மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாகி) குழப்பத்தைக் கிளப்பி விடுவதை நான் வெறுத்தேன் (எனவே தான் அதை நான் வெளியே எடுக்கவில்லை) என்று சொன்னார்கள். பிறகு அந்தக் கிணற்றைத் தூர்த்துவிடும்படி அவர்கள் கட்டளையிட அவ்வாறே அது தூர்க்கப் பட்டது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 5763

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

அறிவிப்பாளர் ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்களின் ஓர் அறிவிப்பில், (சீப்பிலும் சிக்கு முடியிலும் என்பதற்கு பதிலாக) சீப்பிலும் சணல் நாரிலும்’ என்று காணப்படுகிறது. தலையை வாரும் போது கழியும் முடிக்கே “முஷாதத்’ (சிக்கு முடி) எனப்படும். சணலை நூற்கும் போது வெளிவரும் நாருக்கே “முஷாகத்’ (சணல் நார்) எனப்படும்.

இதோடு முரளண்பாடு முடியவில்லை.

இஸ்தக்ரஜ என்ற சொல் இல்லாமல் அக்ரஜ என்ற சொல்லமைப்பைப் பயன்படுத்தியும் சில அறிவிப்புக்கள் உள்ளன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைத் தாம் செய்துவிட்டதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிரமையூட்டப்பட்டது.

நபி (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) தம் இறைவனிடம் பிரார்த்தித்த பிறகு (என்னிடம்), (ஆயிஷா!) தெரியுமா? எந்த விஷயத்தில் தெளிவைத் தரும்படி நான் இறைவனிடம் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்து விட்டான் என்று கூறினார்கள். அதற்கு நான், அது என்ன? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டேன். அப்போது (பின்வருமாறு) கூறினார்கள்:

(கனவில்) என்னிடம் (வானவர்கள்) இரண்டு பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் என் தலைமாட்டிலும், மற்றொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவர்களில் ஒருவர் தம் தோழரிடம், இந்த மனிதரின் நோய் என்ன? என்று கேட்டார். அதற்கு அவருடைய தோழர், இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று பதிலளிக்க, முதலாமவர், இவருக்குச் சூனியம் வைத்தது யார்? என்று வினவினார். அதற்கு லபீத் பின் அஃஸம் என்று தோழர் பதிலளித்தார். அவன் எதில் (சூனியம் வைத்தான்)? என்று கேட்க, சீப்பிலும், சிக்கு முடியிலும், பேரீச்சம் பாளையின் உறையிலும் என்று பதிலளித்தார். அவர், அது எங்கே உள்ளது? என்று கேட்க, மற்றவர், தர்வானில் உள்ளது என்றார்.

-தர்வான்’ என்பது பனூஸுரைக் குலத்தாரிடையேயிருந்த ஒரு கிணறாகும்.-

பிறகு அங்கு சென்று (பார்வையிட்டு) விட்டு என்னிடம் வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! அக்கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்றுள்ளது. அதன் பேரீச்சம் மரங்கள் சாத்தானின் தலையைப் போன்று இருந்தன என்று குறிப்பிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து என்னிடம் அக்கிணற்றைப் பற்றித் தெரிவித்த போது நான், அல்லாஹ்வின் தூதரே! அ(ந்தப் பாளை உறைக்குள்ள இருப்ப)தைத் தாங்கள் வெளியில் எடுக்கவில்லையா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், எனக்கோ அல்லாஹ் (அதன் பாதிப்பிலிருந்து) நிவாரணமளித்து விட்டான். (அதை வெளியே எடுப்பதன் மூலம்) மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாகி) குழப்பத்தைக் கிளப்பிவிடுவதை நான் வெறுத்தேன் (ஆகவே தான் அதை வெளியே எடுக்கவில்லை) என்று சொன்னார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் வழியாக வரும் ஓர் அறிவிப்பில், நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது; நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்; பிரார்த்தித்தார்கள். (திரும்பத் திரும்பப் பிரார்த்தித்தார்கள்) என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 6391

அந்தப் பொருளை வெளியே எடுக்கவில்லை என்று தெளிவாக இந்த் அறிவிப்பு கூறுகிறது. வெளியே எடுத்தார்கள் என்ற அறிவிப்பு, அதாவது பொருளை வெளியே எடுத்தார்கள்; ஆனால் அதைத் திறந்து காட்டவில்லை என்ற அறிவிப்புடன் இது நேரடியாக மோதி சந்தேகத்தை அதிகமாக்குகிறதா இல்லையா? வெளியே எடுத்தார்கள் என்பதைத் தெளிவாகக் கூறும் முஸ்லிம் அறிவிப்பில் அதை நீங்கள் தீயில் போட்டு எரிக்கவில்லையா என்று கேட்டதாக உள்ளது.

அறிவிப்புகளுக்கிடையில் முரண்பாடு இருப்பது பற்றி நாம் மேலோட்டமாகவே குறிப்பிட்டோம். முரண்பாடு இல்லாமல் ஒரே விதமாக அறிவிக்கப்பட்டாலும் குர்ஆனுக்கு முரண்படும் ஒரே காரணத்துக்காகவே அந்த ஹதீஸ் நிராகரிக்கப்படும் என்பதை மறந்து விட வேண்டாம்.

ஹதீஸில் கூறப்பட்டுள்ள வார்த்தைகளுக்கு சரியான அர்த்தம் செய்து காட்டி அந்த அர்த்தங்களுக்கு இடையில் முரண்பாடு இல்லை என்று நிரூபிக்காமல் இல்லாத அர்த்தத்தைக் கொடுத்து முரண்பாடு இல்லை என்று கூறுகிறார் என்பது தெளிவாகிறது.

போகிற போக்கில் குர்ஆனில் முரண்பாடு என்று இவர் உளறி இருப்பதற்குப் பதில் சொல்லத் தேவையில்லை. யாரெல்லாம் குர்ஆனுக்கு ஹதீஸ்கள் முரண்பட்டாலும் ஏற்க வேண்டும் என்று மன முரண்டாக வாதிடுகிறார்களோ அவர்கள் அனைவரின் உள்ளத்திலும் குர்ஆனைப் பற்றிய மதிப்பை அல்லாஹ் நீக்கி விடுவதை நாம் காண்கிறோம். அதன் வெளிப்பாடு தான் இது!