தொடர்: 11 ஸிஹ்ர் ஒரு விளக்கம்

தொடர்: 11

ஸிஹ்ர் ஒரு விளக்கம்

சூனியத்தின் மூலம் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்பதை ஒரு வாதத்துக்கு ஒப்புக் கொண்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைத்திருக்க முடியாது. அப்படிக் கூறும் ஹதீஸ்கள் எந்த நூலில் இடம் பெற்றிருந்தாலும் அது பொய்யான செய்தி தான் என்பதற்கு நாம் எடுத்து வைத்த ஆதாரங்களை மீண்டும் ஒருமுறை தொகுத்துப் பார்ப்போம்.

முதல் வாதம்

மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்காக மனிதர்களில் இருந்தே அல்லாஹ் தூதர்களை அனுப்புகிறான். அவர்கள் எல்லா வகையிலும் மனிதர்களாக இருந்ததால் இறைவனின் தூதர்கள் என்று மக்கள் நம்பவில்லை. மக்கள் நம்புவதற்காக மனிதனால் சாத்தியமாகாத சில அற்புதங்களை இறைவனின் தூதர்கள் என்பதற்கு உரிய சான்றுகளாக இறைவன் கொடுத்தனுப்பினான்.

மனிதர்கள் செய்ய முடியாத இந்தக் காரியங்களைச் செய்து காட்டுவதைத் தான் இறைத்தூதர் என்பதற்குச் சான்றாக அல்லாஹ் வழங்கினான் என்று இறைத் தூதர்கள் வாதிட்டனர்.

மனிதனுக்குச் செய்ய முடியாத ஒரு காரியத்தை சூனியக்காரர்களும் செய்தால் இறைத் தூதர்களின் அற்புதம் அர்த்தமற்றுப் போய்விடும். அற்புதம் செய்த உம்மையே அதிசயமான முறையில் மனநோயாளியாக்கி விட்டார்களே என்ற விமர்சனம் நபிமார்களை நோக்கி எழும்.

இந்தக் காரணத்தினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்திருக்க முடியாது.

இரண்டாவது வாதம்

தாம் செய்ததை இல்லை என்று மறுக்கும் அளவுக்கு நபிகள் நாயகத்தின் மனநிலை பாதிப்பு இருந்தது என்று சூனியம் பற்றிய ஹதீஸ்கள் கூறுகின்றன.

இப்படி இருந்தால் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் தன்னை இறைத் தூதர் என்று கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். மன நிலை பாதிப்பின் காரணமாக தன்னை இறைத் தூதர் என்கிறார்; இவராக எதையோ சொல்லி விட்டு இறை வேதம் என்கிறார் என்ற எண்ணம் தான் மக்களிடம் ஏற்படும்.

இதனால் இஸ்லாத்தின் வளர்ச்சி அப்போதே தடைப்பட்டிருக்கும். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை என்பதிலிருந்தே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எல்லா நேரத்திலும் மிகத் தெளிவான சிந்தனையுடன் இருந்துள்ளனர் என்பது உறுதியாகிறது.

இறைத் தூதர் என்று நிரூபிப்பதற்காக அற்புதங்களை வழங்கி அருள் புரிந்த இறைவன் இறைத் தூதரின் மனநிலையைப் பாதிக்கச் செய்து இஸ்லாத்தின் பால் வராமல் மக்களை விரட்டியடிக்க மாட்டான்.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டிருக்க முடியாது என்பது உறுதி.

மூன்றாவது வாதம்

திருக்குர்ஆனை இறை வேதம் என்று மக்கள் நம்புவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக்கி அவர்கள் மூலம் மிக உயர்ந்த இலக்கியத் தரத்தில் வேதத்தை வழங்கினான். (பார்க்க திருக்குர்ஆன் 29:48) அப்படி இருக்கும் போது வேதத்தில் சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் அவர்களின் மன நலம் பாதிக்கும் எந்த நிலையையும் ஏற்படுத்த மாட்டான் என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதை நாம் மறுக்கிறோம்.

நான்காவது வாதம்

நபிகள் நாயகத்தின் உள்ளத்தைப் பலப்படுத்திடவே குர்ஆனை சிறிது சிறிதாக அருளினோம் என்று அல்லாஹ் கூறுகிறான் (திருக்குர்ஆன் 25:32)

ஒட்டு மொத்தமாகக் குர்ஆன் அருளப்பட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்த போதும் அதை இறைவன் நிராகரிக்கிறான். ஒட்டு மொத்தமாக அருளினால் உள்ளத்தில் பலமாகப் பதியாது என்பதையே காரணமாகக் கூறுகிறான்.

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தைப் பலப்படுத்துவதன் மூலமே குர்ஆன் பாதுகாக்கப்பட்டதாக அல்லாஹ் கூறுவதற்கு முரணாக மேற்கண்ட ஹதீஸ்கள் அமைந்துள்ளன. எங்கோ ஒருவன் இருந்து கொண்டு ஆட்டிப் படைத்து இல்லாததை இருப்பதாகக் கருதும் அளவுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளம் பலவீனமாக இருந்தது என்று இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்படவே முடியாது.

ஐந்தாவது வாதம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத் தூதர் அல்ல என்று விமர்சனம் செய்த எதிரிகள் அவர்களைப் பைத்தியம் என்றும் சூனியம் வைக்கப்பட்டவர் என்றும் கூறினார்கள். ஆனால் இவ்வாறு கூறுவோர் அநியாயக்காரர்கள் என்று அல்லாஹ் மறுக்கிறான்.

சூனியம் செய்யப்பட்டவர் என்று எதிரிகள் விமர்சனம் செய்த போது அல்லாஹ் அதைக் கண்டித்திருக்கிறான் என்றால் அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட முடியாது என்பது விளங்கவில்லையா? குர்ஆனுடன் நேரடியாக மோதுவதால் நபிகள் நாயகத்துக்குச் சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸ்கள் பொய்யானவை என்பது உறுதி.

ஆறாவது வாதம்

திருக்குர்ஆனை அல்லாஹ் பாதுகாப்பதாகக் கூறுகிறான். எதிரிகள் சந்தேகம் கொள்ள இடமில்லாத வகையில் பல ஏற்பாடுகளையும் அல்லாஹ் செய்திருக்கிறான்.

இந்த நிலையில் நபிகள் நாயகத்துக்கு மன நோய் ஏற்பட்டால் அந்தப் பாதுகாப்பு உடைந்து விடுகிறது. அவர்களின் உள்ளம் தெளிவற்றதாக ஆகிவிடுகிறது. பாத்திரம் ஓட்டையாகி விட்டால் ஒழுகத் தான் செய்யும் என்று தான் மக்கள் கருதுவார்கள். அந்த நிலையை இறைவன் ஏற்படுத்த மாட்டான் என்பதால் இது பொய்யான செய்தியாகும்

இப்படி ஆதாரங்களை எடுத்துக் காட்டியே சூனியம் பற்றிய ஹதீஸ்களை நாம் மறுத்துள்ளோம்.

இந்த வாதங்கள் சிலவற்றுக்கு மறுப்பு என்ற பெயரில் இஸ்மாயீல் சலபி தெரிவித்த அனைத்துமே அபத்தமாக அமைந்துள்ளதையும் இத்தொடரில் நாம் நிரூபித்துள்ளோம்.

சூனியம் பற்றிய ஹதீஸ்களை நாம் விமர்சனம் செய்த போது, அந்த ஹதீஸ்கள் முரண்பட்ட தகவல்களைக் கூறுகின்றன; எனவே அதில் சந்தேகம் அதிகரிக்கிறது என்று கூறி, அந்த அறிவிப்புக்களுக்கு மத்தியில் முரண்பாடுகள் இருப்பதையும் நாம் சுட்டிக் காட்டி இருந்தோம்.

அந்த அறிவிப்புக்களில் எந்த முரண்பாடும் இல்லாவிட்டாலும் அந்த ஹதீஸ்கள் குர்ஆனுடன் நேரடியாக மோதுவதால் அவற்றை ஏற்க முடியாது. சுற்றி வளைத்து சமாளித்தாலும், அவற்றுக்கிடையே எந்த முரண்பாடும் இல்லாவிட்டாலும் அவை ஏற்கத்தக்கதாக ஆகாது. மேலே நாம் சுட்டிக் காட்டிய அனைத்து ஆதாரங்களுடனும் இவை மோதுவது தான் முக்கியக் காரணம்.

மேலதிக விளக்கத்துக்காக நாம் சுட்டிக் காட்டிய அந்த முரண்பாடுகளுக்கும் இஸ்மாயில் ஸலபி பதிலளிக்கின்றார். அதை இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் பார்ப்போம்.