கொடிய நரகிலிருந்து குழந்தைகளைக் காப்போம்

கொடிய நரகிலிருந்து குழந்தைகளைக் காப்போம்

கொளுத்தும் வெயிலுடன் கோடைகாலம் துவங்கி விட்டது. இதை முன்னிட்டு பள்ளிக்கூடங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டு, பின்னர் ஓரிரு மாதங்கள் கோடை விடுமுறை அளிக்கப்படும்.

விடுமுறை அளிக்கப்பட்ட மாத்திரத்தில் மாணவர்கள் கிரிக்கெட் மட்டையும் பந்துமாகத் தான் அலைவார்கள்.

உச்சி மண்டையைப் பிளக்கின்ற உச்சி வெயிலின் கோரப் பிடியிலிருந்தும் கொடூர வெப்பத்திலிருந்தும் தப்பிப்பதற்காகத் தான் கோடை விடுமுறை!

கோடை விடுமுறையின் இந்த நோக்கத்தையே இவர்களின் வெயில் விளையாட்டு தகர்த்தெறிந்து விடுகின்றது; தவிடுபொடியாக்கி விடுகின்றது.

இதற்கு மாணவர்கள் பள்ளிக்கூடத்திலேயே இருந்து விடலாம். அதன் காரணமாகக் கோடை வெயிலின் கொடூரத்தை விட்டும் அவர்கள் தப்பலாம்.

கிரிக்கெட் விளையாடுவது மட்டுமின்றி, கண்ட கண்ட நபர்களுடன் சேர்ந்து கொண்டு ஊர் சுற்றுவது, பெண்களைக் கேலி செய்வது, சினிமா பார்ப்பது, அரட்டை அடிப்பது, ஊதாரித்தனமாகச் செலவு செய்வது போன்ற வீணான, பாவமான காரியங்களிலும் ஈடுபடுகின்றனர்.

புகை பிடிப்பதிலிருந்து போதைப் பொருளுக்கு அடிமையாவது போன்ற பாவச் செயல்களிலும் பலியாகி விடுகின்றனர்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மாணவ, மாணவியரை நல்வழிப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீண்ட காலமாக, கோடை காலப் பயிற்சி முகாம்களை நடத்தி வருகின்றது.

அந்தந்த மாவட்டப் பகுதிகளில் நடத்தப்படுகின்ற இந்த முகாம்களில் தங்கள் குழந்தைகளை அனுப்பி அவர்களது கோடை கால விடுமுறையை மார்க்கக் கல்வி, ஒழுக்க வாழ்க்கை போன்றவற்றைப் பெறுகின்ற வாய்ப்பாக ஆக்கிக் கொள்ளுமாறு மக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இன்று கல்வி என்பது உலகக் கல்வி, மார்க்கக் கல்வி என இரு கூறாகப் பிரிக்கப்பட்டு விட்டது. உலகக் கல்வி ஒரு குழந்தையின் நாள் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்கின்றது. மார்க்கக் கல்வியைப் பொறுத்த வரை காலையில் ஒரு மணி நேரம் அல்லது மாலையில் ஒரு மணி நேரம் என்ற ஓரக் கல்வியாக ஆகி விட்டது. பலருக்கு அதற்குக் கூட நேரமில்லை.

மக்தப் மதரஸாக்களில் இந்த ஓர நேரங்களில் ஓத வருகின்ற குழந்தைகளின் எண்ணிக்கை இருநூறு அல்லது முன்னூறு இருக்கும். இவர்கள் அத்தனை பேருக்கும் ஒரேயொரு ஆசிரியர் தான் இருப்பார். அலிப் சபர் ஆ, பே சபர் பா என்று கூட்டாக ராகம் போட்டு ஒரு பாட்டு பாடி விட்டுக் கலைந்து விடுகின்றனர்.

இந்தக் கூட்டுக் கல்வியில் குழந்தைகள் என்ன கற்று விடப் போகின்றார்கள்? சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எதுவுமில்லை. இந்தக் குறைகளை நிவர்த்தி செய்கின்ற வகையில் தான் கோடைகாலப் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகின்றது.

குறைந்த நாட்களில் இஸ்லாமியக் கொள்கை விளக்கம், தொழுகைப் பயிற்சி, தொழுகையில் ஓத வேண்டிய துஆக்கள், அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள், மனனம் செய்தல் போன்ற ஒரு குறைந்தபட்ச பாடத் திட்டத்தின் கீழ் நடத்தப்படுகின்ற இந்தக் கோடைகாலப் பயிற்சி முகாமுக்கு உங்கள் குழந்தைகளை அனுப்பி மார்க்கக் கல்வி பயிலச் செய்யுங்கள். கொடிய நரகத்திலிருந்து அந்தக் குழந்தைகளைக் காத்துக் கொள்ளுங்கள்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.

அல்குர்ஆன் 66:6