சக்திக்கு ஏற்ப கடமை

சக்திக்கு ஏற்ப கடமை

இஸ்லாம் மார்க்கம் மக்களுக்கு ஒரு வாழ்க்கை நெறியாக அமைந்துள்ளது. இந்த மார்க்கத்தின் கடமைகள் அனைத்தும், “சக்திக்கு அப்பாற்பட்ட சிரமம் இல்லை’   என்ற அடிப்படையிலேயே அமைந்துள்ளன.

அதாவது இஸ்லாம் கூறும் ஒரு கடமையை, செயலைச் செய்வதற்குப் போதிய சக்தி இல்லாத நிலையில் ஒருவர் அந்தக் கடமையைச் செய்யாவிட்டால் அவர் மீது குற்றம் ஏற்படாது. இதைத் திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் சுட்டிக் காட்டுகின்றது.

எவரையும் அவரது சக்திக்கு உட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.

அல்குர்ஆன் 2:286

திருக்குர்ஆனின் 2:233, 2:236, 5:6, 6:152, 7:42, 23:62, 65:7 ஆகிய வசனங்களிலும் இதே கருத்து கூறப்பட்டுள்ளது.

பின்வரும் ஹதீஸ் இது தொடர்பாக மேலும் விளக்கத்தைத் தருகின்றது.

“வானங்களில் உள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. உங்களுக்குள் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலோ, மறைத்துக் கொண்டாலோ அல்லாஹ் அது பற்றி உங்களை விசாரிப்பான்” எனும் (2:284) வசனம் அருளப்பட்ட போது மக்களின் உள்ளத்தில் முன்பு ஏற்பட்டிராத (கலக்கம்) ஒன்று ஏற்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள், “செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்; எங்களை ஒப்படைத்தோம் என்று நீங்கள் சொல்லுங்கள்” என்று கூறினார்கள்.

உடனே (மக்கள் அவ்வாறு செய்யவே) அவர்களது உள்ளத்தில் அல்லாஹ் நம்பிக்கையை ஊட்டினான். மேலும், “எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். அவர் செய்த நன்மை அவருக்குரியது. அவர் செய்த தீமையும் அவருக்குரியதே! “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே!” (என்று பிரார்த்தியுங்கள்) எனும் (2:286) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 179

நாம் வாழ்கின்ற காலம், நாடு, பிரதேசம் ஆகியவற்றைப் பொறுத்து இஸ்லாத்தின் சில கட்டளைகளை நிறைவேற்ற முடியாமல் போகலாம். உண்மையிலேயே இயலாத போது அதைச் செய்யாவிட்டால் அல்லாஹ் கேள்வி ஏதும் கேட்க மாட்டான்.

அல்லது ஒருவரது உடல் நிலை, நோய், முதுமை போன்றவை காரணமாக சில கட்டளைகளைச் செயல்படுத்த முடியாமல் போகும். உண்மையாகவே அவருக்கு இயலவில்லை என்ற நிலையில் செயல்படுத்தாதிருந்தால் அவரை அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டான்.

இஸ்லாம் கூறும் அனைத்துச் சட்டங்களுக்கும், வணக்க வழிபாடுகளுக்கும் இது பொருந்தக் கூடியது என்பதால், இந்த மார்க்கத்திலுள்ள அனைத்துச் சட்டங்களும் எளிமையானவை என்பதற்கு இதுவே சிறந்த ஆதாரமாகும்.