சாகாதவனே சத்தியக் கடவுள்

சாகாதவனே சத்தியக் கடவுள்

கடவுள் என்றால் யார்? இறை வேதமான திருக்குர்ஆன் தெளிவாகவே எடுத்துரைக்கின்றது.

“அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. (அல்குர்ஆன் 112வது அத்தியாயம்)

இந்த அத்தியாயத்தின்படி கடவுள் என்பவன் யாருடைய பெற்றோராகவோ அல்லது யாருக்கும் பிறந்த பிள்ளையாகவோ இருக்கக் கூடாது. அவனுக்கு மனைவி இருந்தாலோ அல்லது அவன் பிள்ளை பெற்றிருந்தாலோ அவன் ஒரு போதும் கடவுளாக முடியாது. அவன் மனிதன் தான் என்று திருக்குர்ஆன் அடித்துச் சொல்கின்றது.

கடவுளுக்குரிய அடுத்த இலக்கணத்தை இதோ திருக்குர்ஆன் வரையறுக்கின்றது.

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன.  (அல்குர்ஆன் 2:255)

கடவுள் என்றால் என்றென்றும் உயிருடன் இருக்க வேண்டும். உயிருள்ளவன் என்று பொதுவாகச் சொல்லும் போது கொஞ்ச காலம் உயிருடன் இருந்து மரணிப்பவரையும் அது குறிக்கும் அல்லவா? அதனால் திருக்குர்ஆன் அந்தச் சந்தேகத்தையும் களைந்தெறிகின்றது.

மரணிக்காமல், உயிரோடு இருப்பவனையே சார்ந்திருப்பீராக! அவனைப் போற்றிப் புகழ்வீராக! தனது அடியார்களின் பாவங்களை நன்கு அறிந்திட அவன் போதுமானவன். (அல்குர்ஆன் 25:58)

ஆம்! கடவுள் என்றால் “சாவு’ அவனைக் காவு கொள்ளக்கூடாது. மரணம் அவனை அண்டவோ அணுகவோ கூடாது. இவ்வளவு ஏன்? உறக்கம் கூட அவனுக்குத் தவறியும் வந்து விடக் கூடாது. உறக்கம் வந்தால் கூட அவன் கடவுள் அல்லன். அவன் மனிதனோ அல்லது இன்ன பிற பிராணியோ தான்.

உலகில் உறக்கமில்லாத எந்த ஓர் உயிர்ப் பிராணியும் இல்லை. தூங்கா நகரம் என்று சொல்லப்படும் மதுரை அம்மனுக்கு மீனாட்சி என்ற பெயர் கூறப்படுகின்றது. காரணம் மீன் தூங்காமல் இருப்பது போன்று தூங்காமல் இருந்து ஆட்சி செய்வதாகக் கூறி மீனாட்சி என்று அழைக்கின்றனர். ஆனால் நீரில் வாழும் உயிரினமான மீனும் நீரில் மிதந்தே தூக்கம் போட்டுக் கொள்வதாக அறிவியல் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.

எனவே எல்லா உயிரினத்தையும் உறக்கம் ஆட்கொள்கின்றது. உறக்கத்திற்கு ஆட்படாதவன் அல்லாஹ் ஒருவனே! உறக்கம் ஒரு தற்காலிக ஓய்வு என்றால் மரணம் என்பது நிரந்தர ஓய்வு!

எனவே ஒருவன் மரணித்து விட்டால் நிச்சயமாக அவன் மனிதன் தான்; மரணத்தைத் தழுவுபவன் ஒரு போதும் கடவுளாக முடியாது என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

புட்டபர்த்தி சாய்பாபாவை அவரது பக்தர்கள் இதுவரை கடவுள் என்று நம்பியிருந்தனர். ஆனால் அவரோ மரணித்து விட்டார். அழுது புலம்பும் அவரது பக்தர்கள் அவரது மரணத்தை நம்ப மறுக்கின்றனர். சிந்திக்கும் அறிவிருந்தால் அல்குர்ஆன் கூறுகின்ற மேற்கண்ட அளவீட்டின்படி அவரைக் கடவுளாக்கியிருக்க மாட்டார்கள்.

இப்போது அவர் இறந்து விட்டார். அவர் அறவே கடவுள் இல்லை; மனிதர் தான் என்பது உறுதியாகி விட்டது. அறிவை அடகு வைத்த அவரது பக்தர்கள் இதைச் சிந்தித்துப் பார்ப்பார்களா? ஒரு போதும் சிந்திக்க மாட்டார்கள். காரணம், “பாபாவின் உடல் தான் எங்களை விட்டுப் போகும்; ஆன்மா எங்களிடம் இருக்கும்” என்று புலம்புகின்றனர்.

தன்னுடைய உயிர் தன்னுடன் இருக்க வேண்டும் என்று தான் கடந்த மார்ச் 28ஆம் தேதியிலிருந்து கிட்டத்தட்ட 27 நாட்கள் போராடினார். கடவுளான (?) அவரால் தன்னுடைய ஆத்மாவைத் தக்க வைக்க முடியவில்லை. அவருடைய ஆத்மா அவரிடமே இல்லாத போது இந்தக் குருட்டு பக்தர்களிடம் எப்படி இருக்கும் என்பதைச் சிந்திக்கத் தவறி விட்டனர்.

அதனால் தான் அவருடைய பக்தர்கள் – பித்தர்கள், இறந்து போய் விட்டார் என்று சொல்வதற்குப் பதிலாக, “முக்தி அடைந்து விட்டார்’, “சித்தி அடைந்து விட்டார்’ என்று உளறிக் கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் இவ்வாறு உளறுவதற்குக் காரணம் ஷைத்தான் அவர்களுடைய செயல்களை அழகாக்கிக் காட்டுகின்றான்.

அவர்களின் செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டி, அவர்களை (நல்) வழியை விட்டும் தடுத்துள்ளான். எனவே அவர்கள் நேர் வழி பெற மாட்டார்கள்.  (அல்குர்ஆன் 27:24)

அவர்களது செயல்கள் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டப்பட்டுள்ளன என்ற கருத்தில் பல வசனங்கள் திருக்குர்ஆனில் இடம்பெறுகின்றன. இந்த வசனங்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுக்கள் தான் சாய்பாபா பக்தர்கள்.

இதே பக்தக் கூட்டங்கள் முஸ்லிம்கள் என்ற பெயரிலும் இருக்கிறார்கள். அவர்கள் தான் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி என்ற கோமாளிக் கூட்டம். இறந்தவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று இவர்களும் நம்புகிறார்கள். ஆனால் அல்லாஹ் கூறுகின்றான்:

குருடனும், பார்வையுள்ளவனும் இருள்களும், ஒளியும் நிழலும், வெப்பமும் சமமாகாது. உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை. (அல்குர்ஆன் 35:19-22)

அப்படியிருந்தும் இந்தக் கோமாளிகள் இப்படிக் கூறுகிறார்கள் என்றால் ஷைத்தான் இவர்களது அமல்களை அலங்கரித்துக் காட்டியிருப்பதால் தான்.

இறந்தவனை உயிர்ப்பித்து, மக்களிடையே நடந்து செல்வதற்காக அவனுக்கு ஒளியையும் ஏற்படுத்தினோமே அவன், இருள்களில் கிடந்து அதிலிருந்து வெளியேற முடியாமல் உள்ளவனைப் போல் ஆவானா? இவ்வாறே (நம்மை) மறுப்போருக்கு அவர்கள் செய்து வருபவை அழகாக்கப்பட்டுள்ளன. (அல்குர்ஆன் 6:122)

யாருக்கு தனது தீய செயல் அழகாகக் காட்டப்பட்டு, அதை அழகானதாகக் கருதினானோ அவனா (சொர்க்க வாசி)? தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். (முஹம்மதே!) அவர்களுக்காகக் கவலைப்பட்டு உமது உயிர் போய்விட வேண்டாம். அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன். (அல்குர்ஆன் 35:8)

ஃபிர்அவ்ன் தன்னைக் கடவுள் என்று வாதித்தான். அது அவனுக்குச் சரியெனத் தோன்றியது. இதற்குக் காரணம் என்ன? ஷைத்தான் அவனது அமலை, செயல்பாட்டை, சிந்தனையை அழகாக்கிக் காட்டியது தான்.

“ஹாமானே! எனக்காக உயர்ந்த கோபுரத்தை எழுப்பு! வழிகளை, வானங்களின் வழிகளை அடைந்து மூஸாவின் இறைவனை நான் பார்க்க வேண்டும். அவரைப் பொய் சொல்பவராகவே நான் கருதுகிறேன்” என்று ஃபிர்அவ்ன் கூறினான். இவ்வாறே ஃபிர்அவ்னுக்கு அவனது தீய செயல் அழகாக்கிக் காட்டப்பட்டது. (நேர்) வழியை விட்டும் அவன் தடுக்கப்பட்டான். ஃபிர்அவ்னின் சூழ்ச்சி அழிவில் தான் முடிந்தது. (அல்குர்ஆன் 40:36, 37)

அவனது குடிமக்களும் அவனைக் கடவுள் என்று நம்பினர். அது அவர்களுக்கு சரியெனத் தோன்றியது. இதற்குக் காரணம் என்ன?

உண்மை இறைவனை மறுப்போருக்கு அவர்களது செயல்களை ஷைத்தான் அழகாக்கிக் காட்டுவது தான்.

அல்லாஹ் கண்டிக்கின்ற இந்தப் பட்டியலில் இடம் பெறாமல் நம்மைக் காப்பானாக!