ராணித் தேனீயின் ராணுவ ஆட்சி

அறிவியல் அற்புதங்கள்                          தொடர்: 3

ராணித் தேனீயின் ராணுவ ஆட்சி

எம். ஷம்சுல்லுஹா

ஆட்சித் தலைவர் வரும் போது அவருடன் முப்படைகளும், அதிகாரிகளும் அலுலவர்களும் உடன் வருவர். சமூகப் பிராணியான மனித சமுதாயத்தில் மட்டும் தான் இது உள்ளது என்று நினைக்காதீர்கள். பூச்சியினத்தில் சமூகப் பூச்சி என்றழைக்கப்படும் தேனீக்களிடமும் இது உள்ளது.

கூட்டில் வலம் வந்து ஆட்சி செலுத்தும் இந்த ராணித் தேனீயுடன் சதாவும் காவலாளி, எடுபிடித் தேனீக்கள், பாட்டாளித் தேனீக்கள் மொய்த்துக் கொண்டு நிற்கின்றன. ராணித் தேனீயின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிக் கொடுக்கின்றன. இதற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது டட்ங்ழ்ர்ம்ர்ய்ங் என்ற வேதியியல் திரவம் அல்லது ஆவி தான்.

மனிதனுக்கு உயிர் எப்படி அவசியமோ அது போன்று ஓர் அரசாங்கத்திற்கு, அதை ஆள்கின்ற ஆட்சித் தலைவனுக்கு அதிகாரம் மிக மிக அவசியமாகும். அந்த அதிகாரம் இல்லையெனில் ஆட்சித் தலைவன் பிணத்திற்குச் சமம். உடனே குடிமக்கள் புதியதொரு அரசாங்கத்தை நிறுவி, புதிய ஆட்சித் தலைவரைத் தேர்வு செய்கின்றனர்.

இந்தப் புத்திசாலித்தனம் மனித இனத்திற்குத் தான் சொந்தம்      என்று மனிதன் பெருமைப்பட்டுக் கொள்வானானால் அது பைத்தியக்காரத் தனமாகும். காரணம், இந்தப் புத்திசாலித்தனம் சமூகப் பூச்சியான தேனீக்களிடம் மிகச் சிறப்பான முறையில் செயல்படுகின்றது.

அரியணை ஏறும் இளைய ராணி

ராணித் தேனீயிடம் டட்ங்ழ்ர்ம்ர்ய்ங் என்ற வேதிப்பொருள் வெளிப்பட வில்லையாயின் அது ராணியாக நீடிப்பதற்குரிய தகுதியை இழந்து விடுகின்றது; அது ஆள்வதற்கான அதிகாரத்தை இழந்து விடுகின்றது. காரணம், இந்த வேதியியல் சுரப்பி தான் கூட்டின் மொத்த நிர்வாகத்தையும் கட்டுப்படுத்தும் மையமாகும். அது பாதிக்கப்பட்டு விட்டால் கூட்டின் நிர்வாகம், உள்நாட்டு விவகாரம், வெளி விவகாரம் எல்லாம் ஸ்தம்பித்து விடும். இது போன்ற நிர்வாகச் செயலின்மை தொடரலாகாது என்று பாட்டாளி வர்க்கத் தேனீக்கள் அதிரடி நடவடிக்கையில் இறங்குகின்றன.

உள்நாட்டு நிர்வாகம் எனும் போது ராணித் தேனீயின் முக்கியப் பணியே பாட்டாளித் தேனீக்கள் முட்டை பொரிக்காமல் தடுப்பது தான். இந்தப் பாட்டாளித் தேனீக்கள், ராணித் தேனீயை நக்குகின்ற போது ராணித் தேனீயிடமிருந்து வெளியாகும் வேதிப் பொருள், பாட்டாளித் தேனீக்கள் முட்டை பொரிப்பதைத் தடுத்து நிறுத்துகின்றது. அந்த வேதிப் பொருள் ராணித் தேனீயிடம் சுரக்கவில்லை எனில், பாட்டாளித் தேனீக்கள் முட்டையிட்டு, அதனால் தேன் கூட்டின் நிர்வாகம் நிர்மூலமாக நேரிடும். இது தேன்கூட்டின் உள்நாட்டு விவகாரமாகும்.

வெளி விவகாரம் எனும் போது, மலர்களிலிருந்து தேன் கொண்டு வரும் பணியைக் குறிப்பிடலாம். இதையெல்லாம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது எல்லாமே ராணித் தேனீயிடமிருந்து சுரக்கும் வேதிப் பொருள் தான்.

இப்படி ஒரு நிர்வாகச் சீர்குலைவு ஏற்படுவதைப் பாட்டாளித் தேனீக்கள் பார்த்துக் கொண்டிருப்பதில்லை. அடுத்த கட்ட ஆட்சித் தலைவியை, ராணித் தேனீயை உருவாக்கும் பணியில் அவசரமாக ஈடுபடுகின்றன. நிர்வாகம் ஸ்தம்பித்து விடாமல் இருக்க, பாட்டாளித் தேனீக்கள் அதிரடி நடவடிக்கையில் இறங்குகின்றன.

ஏற்கனவே ராணித் தேனீ இட்டிருக்கும் முட்டைகளிலிருந்து ராணிக்களை உருவாக்குகின்றன. இந்த முட்டைகளிலிருந்து வெளிவரும் கன்னி ராணி அடுத்த கட்ட ராணியாக அரியணை ஏறுகின்றது. எப்படி?

ஒரே சமுதாயம்! ஒரே தலைமை!

இலங்கையில் இன வாதத்திற்காகப் போராடி வரும் விடுதலைப் புலிகள் அமைப்பை உலகம் மறக்காது. அன்றிலிருந்து இன்று வரை அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரன் தான். தனக்கு எதிராக யார் கிளம்பினாலும் அவரைத் தீர்த்துக் கட்டி விடுவார். அதனால் தான் இப்போதும் அந்த அமைப்பின் தலைவராக நீடித்துக் கொண்டிருக்கிறார். இந்த அமைப்பு இன வாதத்தை அடிப்படையாகக் கொண்டது என்றாலும், ஒரே உறைக்குள் இரண்டு வாள்கள் இருக்க முடியாது என்ற நிலைபாட்டிற்காக அவரை இங்கு உதாரணம் காட்டியுள்ளோம்.

இந்த நிலைபாடு பிரபாகரன் கண்டுபிடித்ததல்ல! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலகிற்குக் கற்றுத் தந்த அரசியல் வழிகாட்டல் ஆகும்.

யார் ஓர் ஆட்சியாளரிடம் பைஅத் செய்து, அவரிடம் கைப்பிடித்து உளமாற உறுதி வழங்கி விடுகிறாரோ அவர் இயன்ற வரை அந்த ஆட்சியாளருக்குக் கட்டுப்படுவாராக! அவருக்குப் போட்டியாக இன்னொருவர் கிளம்பி விட்டால் அந்தப் போட்டியாளரின் கழுத்தைத் துண்டித்து விடுங்கள்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 3431

சீர்மிகு சமுதாயத்தை வழி நடத்திச் செல்வோருக்கு, சமுதாயத்தைக் கட்டுக்கோப்பாக நடத்துவதற்கு இந்த வழிகாட்டல் துணை புரியும். இப்படியொரு வழிகாட்டலை இறைவன் சின்னஞ்சிறு தேனீக்கும் வழங்கி உள்ளான். அந்த வழிகாட்டலைப் பெற்ற தேனீக்கள் அதைத் திறம்படவே செயல்படுத்துகின்றன.

முட்டையிலிருந்து வெளிவந்த கன்னி ராணி, முதன்முதலில் செய்கின்ற வேலை, குழந்தையாக உள்ள அதாவது முட்டைக்குள் உள்ள மற்ற ராணித் தேனீக்களைக் கொல்வது தான். இது தான் அதன் முதல்கட்டப் பணி! அதற்கு அடுத்த கட்டப் பணி, தனது தாய் ராணியின் பக்கம் திரும்புகின்றது. ஒன்று, அந்தத் தாய் ராணி தானாகச் சாக வேண்டும். அல்லது புதுக் கூட்டைக் கட்டுவதற்கு வேறு இடத்தை நோக்கிப் புறப்பட வேண்டும். இல்லையெனில் தாய் என்றும் பார்க்காமல் அதை இந்தக் கன்னி ராணி கொன்று விடும்.

அடுத்து, முட்டைகளிலிருந்து ராணிக்களாக வெளிவந்த தேனீக்களைக் கொல்லும் பணியில் கன்னி ராணி ஈடுபடுகின்றது.

இவ்வாறு தனக்கு எதிராகக் கிளம்பவிருக்கும் அத்தனை சக்திகளையும் அழித்து விட்டு, தனியொரு ராஜாங்கத்தை நடத்துகின்றது.

மனித இனத்தில் ராணுவத் தளபதிகள் நடத்துகின்ற, ராணுவ ஆட்சியை மிஞ்சுகின்ற வகையில் ராணித் தேனீயின் ராணுவ ஆட்சி அமைந்திருக்கின்றது.

இப்படி ஒரு புத்திசாலித்தனத்தை இந்தச் சின்னஞ்சிறு பூச்சியினத்திற்குக் கொடுத்தவன் யார்? எல்லாம் வல்ல அல்லாஹ் அல்லவா? இந்த அருளைத் தான் வல்ல அல்லாஹ் தன் திருமறையில் கூறிக் காட்டுகின்றான்.

மிக உயர்ந்த உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக! அவனே படைத்தான். ஒழுங்குற அமைத்தான். அவனே நிர்ணயித்தான். வழி காட்டினான்.

அல்குர்ஆன் 87:1, 2, 3

தனது படைப்பாற்றலைக் கூறி தன்னை துதிபாடச் சொல்கிறான். அல்லாஹ்வின் இந்தப் படைப்பாற்றலை உணர்த்தும் விதமாக, நபி (ஸல்) அவர்கள் தம்முடைய தொழுகையில் ஸஜ்தாவின் போது, “மிக உயர்ந்த எனது இறைவன் தூய்மையானவன்” என்று பணிந்து போற்றுகின்றார்கள்.

மனிதன் நாட்டுக்குள் ஆட்சி செலுத்தும் தன் திறமைகளைக் கண்டு வியந்து கொண்டிருக்கிறான். ஆனால் இவனது கண்களால் காண முடியாத ஒரு பேராட்சி இந்தத் தேன் கூட்டுக்குள் நடந்து கொண்டிருக்கின்றது.

இப்படிப்பட்ட ஓர் ஆட்சியை நடத்துபவன் யார்? மாபெரும் அரசனான அந்த அல்லாஹ் தான். அதனால் தான் அவன் தனக்குப் பங்காளன் இல்லை என்று கூறுகின்றான்.

அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான்.

அல்குர்ஆன் 25:2

ஒவ்வொரு பொருளையும் படைத்து, அதைத் திட்டமிட்டு அமைத்த அந்த அல்லாஹ், அவனுடைய படைப்பின் அற்புதத்தை, தேன் கூட்டுக்குள் நடக்கும் ஆட்சியின் அதிசயங்களை தேனீ என்ற அத்தியாயத்தின் மூலம் ஆராய்ந்து பார்க்கச் செய்கிறான்.

இன்னும் பார்ப்போம்

இன்ஷா அல்லாஹ்