குர்ஆனைச் செவியுற்றால்…….

ஆய்வுக்கூடம்

குர்ஆனைச் செவியுற்றால்…….

மனாருல் ஹுதா என்ற மாத இதழில் வாசகர்களின் கேள்விகளுக்கு ஹனபி மத்ஹபு அடிப்படையில் குர்ஆன், ஹதீசுக்கு மாற்றமாக அளிக்கப்படும் பதில்களை ஏகத்துவத்தின் ஆய்வுக்கூடத்தில் அலசி வருகின்றோம்.

அந்த அடிப்படையில் பிப்ரவரி 2013 இதழில் வெளியான ஒரு கேள்வியைப் பார்ப்போம்.

? நாங்கள் ஹனபி மஹல்லாவைச் சேர்ந்தவர்கள். வெள்ளிக்கிழமை சுப்ஹுடைய வக்தில் இமாம் ஸஜ்தா சூராவை மைக் மூலம் ஊரெல்லாம் கேட்கும் வண்ணம் தொழ வைக்கிறார். மேலும் சுப்ஹு பாங்கு சொல்வதற்கு 10 நிமிடங்கள் இருக்கும் வரை ஒலி நாடா மூலமும் உரை மற்றும் திருக்குர்ஆன் மூலமும் தமிழ் தர்ஜுமாவும் ஒலிபரப்பப்படுகின்றது. இத்தொடரில் 14 ஸஜ்தா திலாவத்திற்கான வசனங்கள் இடம்பெறுகின்றன. இதுபற்றிய மார்க்க விளக்கம் என்ன?

பதில்: குர்ஆன் ஓதும் போது சில ஒழுக்கங்கள் இருக்கின்றன. அதை ஓதும் போது மற்றவர்கள் மவுனமாக அதைக் காது தாழ்த்திக் கேட்க வேண்டும். அல்லாஹ் குர்ஆனில், “குர்ஆன் ஓதப்பட்டால் அதைச் செவிமடுத்து மவுனமாகக் கேளுங்கள். நீங்கள் கிருபை செய்யப்படுவீர்கள்’ (7:204) எனக் கூறியுள்ளான். எனவே மக்களின் நிலை தத்தமது அலுவல்களில் ஈடுபட்டு குர்ஆனைச் செவிமடுத்து கேட்க இயலாத நிலையாக இருப்பின் அச்சந்தர்ப்பங்களில் குர்ஆனுக்குக் கண்ணியக் குறைவு ஏற்பட்டு விடாமல் இருக்க ஓதுபவர்கள் பிறருக்குக் கேட்காத முறையில் மெதுவாக ஓத வேண்டும். அத்தகைய சந்தர்ப்பங்களில் சப்தமிட்டு ஓதுபவர் பாவியாவார்.

மஹல்லாவின் வீடுகளில் வயோதிகள், நோயாளிகள், பிற மதத்தார் போன்றோர் இருப்பர். ஃபஜ்ருக்கு முன்பாக மைக்கில் பெரும் சப்தத்துடன் குர்ஆன் ஓதுதல், மொழி பெயர்ப்பு செய்தல் போன்றவை ஒலிபரப்பப்பட்டால் மேற்குறிப்பிட்டோர் அதைப் புறக்கணிப்பார்கள். அதனால் இவ்வாறு செய்பவர்களுக்குக் குற்றம் ஏற்படும். மேலும் மேற்குறிப்பிட்டோருக்கு கஷ்டமாக இடையூறாக இருக்கும். பிறருக்கு இடையூறாக இருப்பது முஸ்லிமுக்கு அழகல்ல. உண்மை முஸ்லிம் எவரின் நாவாலும் கரத்தாலும் பிறருக்கு இடையூறு ஏற்படாதோ அவர்தான் எனு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி)

ஸஜ்தா திலாவத் இடம்பெற்றுள்ள வசனத்தை ஒரு மனிதர் ஓதுகின்றார். அப்படியே நேரடியாக அதை மைக் மூலம் ஒலிபரப்பப்பட்டால் அதைச் செவியேற்ற முஸ்லிம் மீது ஸஜ்தா செய்வது கடமையாகும். டேப் ரிக்கார்டரில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஸஜ்தா வசனங்கள் ஓதப்பட்டால் அதைக் கேட்பவர் மீது ஸஜ்தா கடமையில்லை.

மனாருல் ஹுதா, பிப்ரவரி 2013, பக்கம் 96

இதற்கான விளக்கத்தைப் பார்ப்பதற்கு முன்னர், இந்தக் கேள்வியில் அடங்கியுள்ள மத்ஹபு வெறியை நாம் பார்க்க வேண்டும். கேள்வி கேட்பவர் ஹனபி மத்ஹபைச் சார்ந்தவர். ஹனபி மத்ஹபில் வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் தொழுகையில் ஸஜ்தா அத்தியாயம் ஓதுவதில்லை. ஷாபி மத்ஹபினர் தான் ஸஜ்தா அத்தியாயம் ஓதுவார்கள். எனவே ஷாபி மத்ஹபைக் குறை சொல்லும் நோக்கிலேயே இந்தக் கேள்வியைக் கேட்கின்றார்.

இதற்குப் பதிலளிக்கும் மவ்லானாவும் ஷாபி மத்ஹபினர் செய்வது தவறு என்று வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும், இவ்வாறு ஓதும் ஷாபி மத்ஹபினர் பாவிகள் என்ற கருத்தைப் பதிவு செய்கின்றார். இதிலிருந்து இவர்களிடம் எந்த அளவுக்கு ஹனபி மத்ஹபின் வெறி குடிகொண்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இப்போது விஷயத்திற்கு வருவோம்.

இந்தக் கேள்விக்கு மவ்லானா அளித்துள்ள பதில் இரண்டு அடிப்படைகளில் அமைகின்றது.

  1. குர்ஆன் ஓதும் போது அதைச் செவியுற வேண்டும்.
  2. ஸஜ்தா வசனம் காதில் விழுகின்ற போது ஸஜ்தா செய்ய வேண்டும்.

அல்லாஹ் திருக்குர்ஆன் 7:204 வசனத்தில் கூறுகின்ற அடிப்படையில் செவிமடுக்க வேண்டும்; வாய்மூடி மவுனமாக இருக்க வேண்டும் என்பது சரி தான். ஆனால் அது எப்போது?

ஒருவர் சுப்ஹ் தொழுகைக்குப் பள்ளிக்கு வருகின்றார். அப்போது பள்ளிவாசலில் சுப்ஹ் தொழுகை ஜமாஅத் நடக்கின்றது. வந்தவருக்கு வயிற்றைக் கலக்குகின்றது. அவர் உடனே கழிவறைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். பள்ளிவாசலில் மைக் இல்லாமலேயே சாதாரணமாக இமாம் ஓதுகின்ற குர்ஆன் வசனங்கள் அவருடைய காதுகளில் விழுகின்றன. இப்போது அவர் என்ன செய்ய வேண்டும்?

குர்ஆன் முடிக்கின்ற வரை வயிற்றைக் கலக்கினாலும் பரவாயில்லை என்று வாய் பொத்தி நின்று கேட்க வேண்டுமா? அல்லது கழிவறைக்குச் செல்ல வேண்டுமா?

இந்த வசனத்தை மவ்லானா விளங்கியது போன்று விளங்கினால் இந்த இக்கட்டான நிலை தான் ஏற்படும். எதையும் யாரும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

இவர்கள் நடத்துகின்ற ஹிப்ளு மதரஸாக்களில் மாணவர்கள் வாய்க்குள் ஓதிக் கொண்டே குர்ஆனை மனனம் செய்வதில்லை. அவ்வாறு செய்யவும் முடியாது. இப்போது அங்கு பணியாற்றுகின்ற ஆசிரியர்கள், ஊழியர்கள் குர்ஆனை மட்டும் தான் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். சமையல்காரர் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் சமையல் செய்யக் கூடாது. குர்ஆனை வாய்பொத்தி, காது தாழ்த்திக் கேட்டுக் கொண்டு மட்டும் தான் இருக்க வேண்டும்.

வீட்டில், வியாபாரக் கடையில் யாராவது குர்ஆனை ஓதினால் வாய் பொத்தி மவுனமாக நிற்க வேண்டும் என்ற இக்கட்டு ஏற்பட்டு பணிகள் அனைத்தும் ஸ்தம்பித்துப் போகும். குர்ஆனின் கட்டளைகளையே புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

மார்க்கத்தில் சிரமத்தைத் தரவில்லை என்று எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.

அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.

அல்குர்ஆன் 5:6

உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமான இம்மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை.

அல்குர்ஆன் 22:78

(முஹம்மதே!) நீர் துர்பாக்கியசாலியாக ஆவதற்காக உமக்கு இக்குர்ஆனை நாம் அருளவில்லை.

அல்குர்ஆன் 20:2

இதையெல்லாம் கவனத்தில் கொண்டு பார்க்கின்ற போது இந்த வசனம் தொழுகையில் ஓதுவதைத் தான் குறிக்கின்றது என்பதை விளங்கிக் கொள்ளலாம். தொழுகைகளில் இமாம் மற்றும் மஃமூமுக்கு கிராஅத் அவசியம் என்று புகாரியில் ஒரு பாடம் இடம்பெறுகின்றது. அந்தப் பாடத்தின் விளக்கத்தில் இப்னுல் பத்தான் அவர்கள், “7:204 வசனத்தின் கருத்து, தொழுகையில் குர்ஆனைச் செவியுறுவதைத் தான் குறிப்பிடுகின்றது; இந்தக் கருத்தில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை’ என்று குறிப்பிடுகின்றார்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இதற்கு நபி (ஸல்) அவர்களே விளக்கம் அளித்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது எங்களுக்கு (நாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய) எங்களது வழிமுறையைக் கற்றுத் தந்தார்கள். எங்களுக்குத் தொழும் முறையை விளக்கினார்கள். “இமாம் தக்பீர் சொன்னால் நீங்கள் தக்பீர் சொல்லுங்கள்; அவர் ஓதினால் நீங்கள் வாய் மூடுங்கள்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரி (ரலி)

நூல்: முஸ்தக்ரஜ் அபீ உவானா

இது சரியான ஹதீஸ் ஆகும் என்று இமாம் முஸ்லிம் அவர்கள், தமது முஸ்லிம் நூலில் தெரிவிக்கின்றார்கள்.

குர்ஆனைச் செவியுற்றால் வாய்மூடி இருக்க வேண்டும் என்ற கட்டளை தொழுகையில் தான் என்பது இதிலிருந்து தெளிவாக விளங்குகின்றது.

எனவே மைக் போட்டு ஓதினாலும், மைக் போடாமல் ஓதினாலும் அது தொழாதவரைப் பாதிக்காது என்பதை விளங்கலாம்.

அடுத்து, ஸஜ்தா வசனங்களைச் செவியுறுகின்ற போது தொழுகையிலும் தொழுகைக்கு வெளியிலும் ஸஜ்தா செய்ய வேண்டும் என்பதும் கட்டாயமில்லை. இதை புகாரியில் இடம் பெறும் ஹதீஸிலிருந்து விளங்கலாம்.

அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம் (அந்நநஜ்ம் அத்தியாயத்தில் சஜ்தா செய்வது பற்றிக்) கேட்டேன். அவர்கள் “நான் நபி (ஸல்) அவர்களிடம் அந்நஜ்ம் அத்தியாயத்தை ஓதிக்காட்டினேன். அப்போது அவர்கள் சஜ்தாச் செய்யவில்லைஎன்று கூறினார்கள்.

நூல்: புகாரி 1072

ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம் அந்நஜ்ம் அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். அப்போது அவர்கள் சஜ்தாச் செய்யவில்லை.

நூல்: புகாரி 1073

மேலும் ஸஜ்தா சூரா ஓதும்போது நபி (ஸல்) ஸஜ்தா திலாவத் செய்ததற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இல்லை. 38:24, 53:62, 84:21, 96:19 ஆகிய நான்கு வசனங்கள் தவிர வேறு வசனங்களின் போது ஸஜ்தாச் செய்ய வேண்டும் என்று கூறுவதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை.

மாநபி வழியில் இந்தப் பிரச்சனைகளுக்கு இவ்வளவு தெளிவான தீர்வு இருக்கையில் மத்ஹபு அடிப்படையில் மார்க்கத்திற்கு மாற்றமாகத் தீர்ப்பு அளிப்பது எவ்வாறு சரியாகும்?