குற்றங்களுக்குத் தீர்வு குர்ஆனிய சட்டமே!

குற்றங்களுக்குத் தீர்வு குர்ஆனிய சட்டமே!

கடந்த டிசம்பர் 16, 2012 அன்று இரவு 8.30 மணியளவில் 23 வயது நிரம்பிய மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் தன்னுடைய பயிற்சிப் பணியை முடித்து விட்டு, தனது ஆண் நண்பருடன் டேராடூனிலிருந்து டெல்லிக்குத் திரும்புகிறார். பயிற்சிப் பணி முடித்து விட்டு வருவதால் அவர் மருத்துவப் படிப்புடன் சம்பந்தமில்லாத ஆண் நண்பருடன் வந்திருக்க முடியாது. இருவரும் இரவுக் காட்சி சினிமா பார்த்து விட்டு, முனிர்கா என்ற இடத்தில் பேருந்துக்காகக் காத்துக் கொண்டு நிற்கின்றனர். அப்போது ஒரு பேருந்து வந்து நின்றது. “பேருந்து துவாரகா செல்கிறது’ என்று உள்ளே இருந்தவர்கள் குரல் கொடுத்ததும் இருவரும் அதில் ஏறுகின்றனர்.

“நீங்கள் இருவரும் இரவில் ஏன் பயணம் செய்கிறீர்கள்?’ என்று உள்ளே இருந்தவர்கள் கேட்கின்றனர். “இதைக் கேட்க உங்களுக்கு என்ன அவசியம்?’ என்று பதிலுக்கு ஆண் நண்பர் கேட்கின்றார். உடனே அவர் தாக்கப்படுகின்றார். அவரைக் காப்பாற்ற அந்தப் பெண் குறுக்கிடவும் அந்தப் பெண்ணைத் தரதரவென்று பின்னிருக்கைக்கு இழுத்துச் செல்கின்றனர். ஆறு பேர் அவளை மாறி மாறிக் கற்பழிக்கின்றனர். கற்பழித்ததுடன் நில்லாமல் அவளது அடிவயிற்றில் கடுமையாக அடித்து விட்டு, இரும்புக் கம்பியால் அந்த இருவரையும் தாக்கி ஆடைகளை உருவி ஒரு பாலத்தின் அருகே இருவரையும் அரைகுறை நிர்வாணத்தில் வீசி எறிந்து விட்டனர்.

சாலையில் இருந்தவர்கள் காவல்துறைக்குத் தகவல் கொடுக்கின்றனர். இதன் பின்னர் காவல்துறையினர் அவர்களை சப்தர்ஜிங் மருத்துவமனையில் சேர்க்கின்றனர். இப்போது அந்தப் பெண் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள்.

இந்தியாவை உலுக்கிய இந்தக் கோரக் கற்பழிப்புச் சம்பவம் கடந்த டிசம்பர் 18ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்தக் காரசார விவாதத்தில் கலந்து கொண்ட பிஜேபி தலைவர்களில் ஒருவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சுஷ்மா சுவராஜ், பெண்களைக் கற்பழிப்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் ஜெயா பச்சன், “ஒரு பெண் அநியாயமாக தலைநகரில் கற்பழிக்கப்படும் போது நான் இந்த அவையில் இருந்து என்ன பயன்?’ என்று கூறி அழுது விடுகின்றார். அமைச்சர் புரந்தேஸ்வரி “இந்தக் கற்பழிப்பை மற்றொரு புள்ளிவிபரமாக ஆக்காமல் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என்று கூறுகின்றார். டி.வி. சேனல்கள் இந்தச் செய்தியை மாறி மாறி வெளியிட்டு விவாதப் பிரதிவாதங்களை நடத்திக் கொண்டிருந்தன. நாளேடுகளில் இந்தக் கொடூரச் சம்பவம் தலைப்புச் செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்தச் சம்பவம் நடந்து ஓரிரு நாட்களில், டிசம்பர் 20 அன்று தூத்துக்குடியைச் சேர்ந்த புனிதா என்ற 7ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு, கொல்லப்படுகின்றாள்.

பொதுவாக, இந்தியாவில் 20 நிமிடத்திற்கு ஒரு பெண் கற்பழிக்கப்படுகின்றாள் என்று குற்றப் புள்ளிவிபரம் குறிப்பிடுகின்றது. இவையெல்லாம் வெளிச்சத்திற்கு வராமல் இருட்டோடு இருட்டாகக் கலந்து விடுகின்றன. இதுபோன்று தலைநகரில் நடந்து வெளிச்சத்திற்கு வருபவை மட்டுமே விவாதப் பொருளாக ஆகின்றன. இது இன்னும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும். அப்புறம் அத்தனையும் மறந்து போய் விடும். அப்புறம் வேறொரு விவகாரம் வரும்; அதுவும் மறந்து போகும். இதற்கு நிரந்தரத் தீர்வு என்ன என்று யாரும் உருப்படியாகச் சொல்லவில்லை. அவர்களால் சொல்ல முடியாது.

இந்தியாவின் குற்றவியல் சட்டம் 375 கற்பழிப்புக் குற்றத்தைப் பற்றி விவரிக்கின்றது. விதி 376, கற்பழித்தவனுக்குக் குறைந்தபட்சம் 7 வருடங்கள் தண்டனை விதிக்கலாம்; இருப்பினும் கோர்ட் நினைத்தால் 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கலாம். இவை தான் கற்பழிப்புக் குற்றத்திற்கு இந்தியாவின் குற்றவியல் சட்டம் கூறுகின்ற தண்டனையாகும். இந்தத் தண்டனையால் இதுபோன்ற காமக் கொடூரன்களைத் திருத்திவிட முடியுமா? இதற்குத் தீர்வு இஸ்லாமிய சட்டம் தான்; குர்ஆன் கூறுகின்ற குற்றவியல் சட்டம் தான். இதைத் தான் சுஷ்மா சுவராஜ் வேறு வார்த்தையில் சொல்கின்றார்.

கோவையில் இரண்டு குழந்தைகளைக் கடத்திக் கொன்றவனுக்கு இதுபோன்ற தண்டனையைக் கொடுக்க வேண்டும் என்று மக்கள் குரல்கொடுத்தனர். இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திய காவல்துறை, குற்றவாளிகளில் ஒருவனை என்கவுண்டரில் கொன்றது. இந்த என்கவுண்டருக்கு, எதிர்ப்புக்குப் பதிலாக மக்களிடம் ஆதரவே இருந்தது. பாதிக்கப்பட்டவருக்கும், பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து பார்ப்பவர்களுக்கும் இது தான் பரிகாரமாகும். குற்றம் இனி நிகழாமல் தடுக்க வேண்டும், சமுதாயத்தைக் காக்க வேண்டும் என்ற நியாய நோக்கத்துடன் பார்ப்பவருக்குரிய எதிர்பார்ப்பும் இதுதான். இதைத் தான் திருக்குர்ஆன் மிகத் தெளிவாகத் தெரிவிக்கின்றது.

விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவரும் தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும்.  (அல்குர்ஆன் 24:2)

கிராமவாசி ஒருவர் (மற்றொருவருடன்) வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பளியுங்கள்என்று கேட்டார். அவரது எதிரி எழுந்து நின்று, “உண்மை தான் சொன்னார். எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பளியுங்கள்என்று கூறினார். அந்த கிராமவாசி (எதிரியைச் சுட்டிக் காட்டி), “என் மகன் இவரிடம் கூலியாளாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். (அப்போது) இவரது மனைவியுடன் விபசாரம் செய்து விட்டான். மக்கள் என்னிடம், “உன் மகனுக்குக் கல்லெறி தண்டனை கொடுக்கப்பட வேண்டும்என்று கூறினர். நான் என் மகனை அதிலிருந்து காப்பாற்ற ஈட்டுத் தொகையாக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் தந்தேன். பின்னர் (சட்ட) அறிஞர்களிடம் கேட்டேன். அவர்கள், “உன் மகனுக்கு நூறு கசையடிகளும், ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தும் தண்டனையும் தான் கொடுக்கப்பட வேண்டும்என்று தீர்ப்புக் கூறினார்கள்என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டத்தின்படியே தீர்ப்பளிக்கிறேன்: அடிமைப் பெண்ணும், ஆடுகளும் உன்னிடம் திருப்பித் தரப்பட வேண்டும்; உன் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தும் தண்டனையும் தரப்பட வேண்டும்என்று கூறிவிட்டு (அருகிலிருந்த) ஒரு மனிதரைப் பார்த்து, “உனைஸே! இவருடைய (கிராமவாசியின் எதிரியுடைய) மனைவியிடம் சென்று (அவள் குற்றத்தை ஒப்புக் கொண்டால்) அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுப்பீராகஎன்று கூறினார்கள். அவ்வாறே, உனைஸ் (என்னும் அந்தத் தோழர்) அப்பெண்ணிடம் சென்று (அவள் குற்றத்தை ஒப்புக் கொண்டதும்) அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுத்தார்.

அறிவிப்பவர்கள்: அபூஹுரைரா (ரலி), ஸைத் பின் காலித் (ரலி)

நூல்: புகாரி 2896, 2725, 6633, 6828, 6836, 6843, 6860, 7195, 7260

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டிருந்தபோது “அஸ்லம்குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அவர்களிடம் வந்து, “நான் விபசாரம் செய்துவிட்டேன்என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள் அவரைவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். உடனே அவர் நபி (ஸல்) அவர்கள் திரும்பிய திசைக்கே சென்று (தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக) நான்கு தடவை ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்து, “உனக்கு என்ன பைத்தியமா?” என்று கேட்டார்கள். பின்னர், “உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா?’ என்று கேட்டார்கள். அவர் “ஆம்என்றார். எனவே, அவரை (பெருநாள்) தொழுகைத் திடலுக்குக் கொண்டு சென்று அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். (அவ்வாறே அவர் அழைத்துச் செல்லப்பட்டு தண்டனை வழங்கப்பட்டார்.) அவர் மீது கற்கள் விழுந்த போது அவர் (வலி தாங்க முடியாமல்) வெருண்டோட ஆரம்பித்தார். இறுதியில் (மதீனாவின் புறநகர்ப் பகுதியில்) பாறைகள் நிறைந்த (“அல்ஹர்ராஎனும்) இடத்தில் அவர் பிடிக்கப்பட்டு, மரண தண்டனை வழங்கப்பட்டார்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி 5270

இஸ்லாமிய சட்டத்தைக் காட்டுமிராண்டிச் சட்டம் என்பவர்கள் கூட வேறு வார்த்தைகளில், அது மனித குலத்தைக் காப்பதற்குத் தேவையான சட்டம் என்று கூறுகின்றனர். இஸ்லாம் இதை மட்டும் தீர்வாகச் சொல்லவில்லை.

வெளியே செல்கின்ற ஒரு பெண், தனது மார்பகங்கள் தெரிகின்ற வகையில் இறுக்கமான ஆடை அணிந்து செல்கின்றனர். கிஸ் மீ – என்னை முத்தமிடு என்ற வார்த்தைகளை தங்கள் மேலாடைகளில் பதித்து, ஆண்களை பலவந்தமாக, பலாத்காரமாக அழைக்கவே செய்கின்றனர். பின்பாகங்கள் பிதுங்கித் தெரிகின்ற பிடிப்பான ஜீன்ஸ் அணிந்து கொண்டு செல்வார்களாம். ஆனால் இவர்களிடம் யாரும் சேட்டை செய்யக் கூடாதாம். என்ன எதிர்பார்ப்பு?

இந்தக் கற்பழிப்புக்கு எதிராகப் பெண்ணுரிமை இயக்கங்கள் நடத்துகின்ற ஆர்ப்பாட்டங்களில் கூட, “ஙஹ் இர்க்ஹ், ஙஹ் தண்ஞ்ட்ற் – என் உடல், என் உரிமை” என்ற திமிரான வார்த்தைகள் அடங்கிய பதாகைகளைக் காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் ஆண்களைச் சீண்டி இழுப்பார்களாம். பதிலுக்கு ஆண்கள் எதுவும் செய்யக்கூடாதாம். இந்தத் திமிர்த்தனத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இஸ்லாம் பெண்களை பர்தா அணியச் சொல்கின்றது. இரு பாலர்களையும் பார்வைகளைத் தாழ்த்தச் சொல்கின்றது.

(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.  (அல்குர்ஆன் 24:30, 31)

ஒரு பெண்ணை நேரில் ஆடையின்றி, ஆபாசமாகப் பார்ப்பது எப்படித் தடையோ அதுபோன்றே திரைப்படங்களிலும், இதர ஊடகங்களிலும் பார்ப்பது தடையாகும். அந்த அடிப்படையில் இன்றைய திரைப்படங்கள் அத்தனையும் தடை செய்யப்பட வேண்டும். அந்தப் படக்காட்சிகளில் பள்ளியறை படுக்கைக் காட்சிகளைக் காட்டி விட்டு, இதைப் பார்க்கும் ஆண்கள் பெட்டையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது வேடிக்கையாகும்.

சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்கிறார்களே! அவர்கள் என்ன ஆபாச ஆடையா அணிகிறார்கள்? என்ற கேள்வியை பெண்ணுரிமை இயக்கத்தினர் முன்வைக்கிறார்கள். பெண்களின் ஆபாச ஆடைகளும், திரைப்படங்களில் பெண்களை ஆபாசமாகக் காட்டுவதும் தான் இந்தக் காட்டுமிராண்டித்தனத்திற்குக் காரணமாக அமைகின்றது. வெறி தலைக்கேறி ஏதுமறியாத சிறுமிகளையும் சீரழிக்கத் துணிந்து விடுகின்றான்.

இதனால் திரைப்படங்களைத் தடை செய்ய வேண்டும். ஆபாசப் புகைப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகள், பத்திரிகைகள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும். குட்டைப் பாவாடை சானியா மிர்ஸா விளையாடும் டென்னிஸ் போன்ற கூறுகெட்ட ஆட்டங்களையும் தடை செய்ய வேண்டும்.

தூத்துக்குடி மாணவி புனிதா கொலையில் கைது செய்யப்பட்டுள்ள சுப்பையா என்பவன், போதையில் தான் இந்தக் காரியத்தைச் செய்தேன் என்று கூறியுள்ளான். ஆக, மதுவை விற்பனை செய்யும் அரசாங்கமே இந்த மாணவியின் கொலைக்கு ஒருவகையில் காரணமாக அமைந்துள்ளது. எனவே மனிதனுடைய மதியை மறக்கடிக்கச் செய்கின்ற மதுவையும் தடை செய்ய வேண்டும்.

இன்னும் இதுபோன்ற, ஆண்களைச் சுண்டியிழுக்கின்ற, கிளப்பி விடுகின்ற அத்தனை காரியங்களையும் தடை செய்வது தான் இதற்குத் தீர்வும் திருப்பமும் ஆகும். இல்லையேல் இது அடுத்த மாதம் அல்ல! அடுத்த நாளே மீண்டும் நடக்கத் தான் செய்யும். இதற்கு ஒரு முடிவும் விடிவும் இல்லை.