குர்ஆன் வழிகெடுக்குமாம்! குருடர்கள் கூறுகின்றனர்!

குர்ஆன் வழிகெடுக்குமாம்!

குருடர்கள் கூறுகின்றனர்!

ஏகத்துவப் பிரச்சாரம் துளிர் விடத் துவங்கிய மாத்திரத்தில் அதன் போதனையாளர்கள் சொன்னது ஒன்றே ஒன்று தான். “குர்ஆனைப் படியுங்கள்’ என்ற குரல் முழக்கம் தான் அது! அன்று அதற்கு ஆலிம் வர்க்கம் வரிந்து கட்டிக் கொண்டு, வாரியடித்துக் கொண்டு மக்களிடம் சொன்னது, “குர்ஆனைப் படிக்காதீர்கள்; அதை எல்லோரும் நேரடியாக விளங்க முடியாது’ என்று தான்.

ஆனால் காலப்போக்கில் மக்களிடம் குர்ஆன் தர்ஜுமா வாங்கும் பண்பு வளர்ந்தது. குர்ஆன் மொழியாக்கங்களுக்காக மக்களிடம் அதிகமான தேட்டமும் தணியாத தாகமும் கூடியிருந்தது.

புரட்டிப் பார்க்காமல் பரணில் பரக்கத்துக்காக மட்டும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த புனிதக் குர்ஆனின் மொழியாக்கம் புத்தகச் சந்தையில் புதிய விற்பனைப் பரிமாணத்தைக் கண்டிருந்ததால், “பாமரர்களுக்குப் புரியாது; படித்தவர்களுக்கு மட்டும் புரியும்’ என்று பாடம் நடத்திய ஆலிம் (?) வர்க்கம் குர்ஆனை மொழியாக்கம் செய்யப் புறப்பட்டது.

தங்களின் குர்ஆன் மொழியாக்கப் புத்தகங்களை சந்தையில் கொண்டு வந்து போட்டது. பணம் என்றதும், புரியாத குர்ஆன் புரிய ஆரம்பித்து விட்டது. இதிலிருந்து இவர்களின் நோக்கம் என்ன என்பது வெளிப்படையாகத் தெரிந்து விட்டது.

இதில் வேதனை என்னவென்றால், “குர்ஆன் வழிகெடுக்கும்’ என்று நமக்கு எதிராகக் கொழுப்பெடுத்த பிரச்சாரம் செய்தனர். அதற்கு அல்குர்ஆன் வசனத்தையே ஆதாரமாகக் காட்டினர்.

கொசுவையோ, அதை விட அற்பமானதையோ உதாரணமாகக் கூற அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். நம்பிக்கை கொண்டோர் “இது தமது இறைவனிடமிருந்து வந்த உண்மைஎன்பதை அறிந்து கொள்கின்றனர். ஆனால் (ஏக இறைவனை) மறுப்போர் “இதன் மூலம் அல்லாஹ் என்ன உவமையை நாடுகிறான்?” என்று கேட்கின்றனர். இ(வ்வுதாரணத்)தின் மூலம் அல்லாஹ் பலரை வழி கேட்டில் விடுகிறான். இதன் மூலம் பலரை நேர் வழியில் செலுத்துகிறான். இதன் மூலம் குற்றம் புரிவோரைத் தவிர (மற்றவர்களை) அவன் வழி கேட்டில் விடுவதில்லை.

அல்குர்ஆன் 2:26

அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். குர்ஆன் வழிகெடுக்கும் என்று இவர்கள் கூறக் கூற, மக்கள் கூட்டம் கூட்டமாக தவ்ஹீதுக் கொள்கையின் பக்கம் குவிய ஆரம்பித்தனர்.

இங்கே அல்குர்ஆன், மக்களிடம் வெறுமனே வாழ்கின்ற வேதமாக அல்ல, ஆளுகின்ற வேதமாகப் பரிணமித்தது. குர்ஆன் விளங்காது என்று இவர்கள் சொல்லச் சொல்ல மக்கள் இதை விட்டு விலகி, இந்தப் பக்கம் வராமல் அல்லவா இருந்திருக்க வேண்டும்? மாறாக, அலை அலையாக தவ்ஹீது நோக்கி மக்கள் படையெடுக்க ஆரம்பித்து விட்டனர்.

இதிலிருந்து குறை, கோளாறு குர்ஆனில் இல்லை. இந்தக் குருடர்களிடம் தான் இருக்கின்றது என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

(இவர்கள்) செவிடர்கள்; ஊமைகள்; குருடர்கள். எனவே இவர்கள் (நல் வழிக்கு) திரும்ப மாட்டார்கள்.

அல்குர்ஆன் 2:18

அல்லாஹ் சொல்வது போன்று காதிருந்தும் செவிடர்கள்; வாயிருந்தும் ஊமைகள்; கண்ணிருந்தும் குருடர்கள்.

மக்காவிலிருந்த இறை நிராகரிப்பாளர்கள் இதே வேலையைத் தான் செய்தார்கள்.

இக்குர்ஆனைக் கேளாதீர்கள்! நீங்கள் மிகைப்பதற்காக அதில் (குழப்புவதற்காக) வீணான காரியம் செய்யுங்கள்!என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறுகின்றனர்.

அல்குர்ஆன் 41:26

எனினும் இவர்களது பிரச்சாரம் எடுபடவில்லை. அல்குர்ஆன் மிகைத்து மேலோங்கி விட்டது. இப்போதும் அது தான் நடக்கின்றது. ஆனால் இதை இந்த ஆலிம்கள் புரியவில்லை. பதினைந்து வருடங்களுக்கு முன்னால் பேசிய அதே வசனத்தைத் தான் இப்போதும் பேசுகின்றார்கள்.

இறுதி நபித்துவம் தலைப்பில் பேசிய பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த ஸைபுத்தீன் ரஷாதி, அல்குர்ஆனின் 2:26 வசனத்தைக் கூறி, குர்ஆன் விளங்காது என்று பேசினார். இந்த வசனத்தை ஓதி விட்டு அதற்குப் பொருள் செய்யாமல் நழுவினார்.

அன்று இதே கருத்தை அவர்கள் பேசும் போது தவ்ஹீத் ஜமாஅத்தில் ஒரு நூறு பேர் தான். ஆனால் இன்று பல நூறாயிரம் பேர். இவர்களுடைய பேச்சு எடுபடவில்லை என்பதற்கு இதை விட வேறு எடுத்துக்காட்டு எதுவும் இருக்க முடியாது. இதற்குப் பின்னும் மானம் கெட்டுப் போய் பேசுகின்றோமே என்ற உணர்வு கூட அற்றுப் போய் விட்டது.

உண்மையில் இந்த வசனம் குறிப்பிடுவது குர்ஆனைப் பற்றி அல்ல! அது கூறும் உதாரணத்தைத் தான்.

இவ்வசனத்தில் “இதன் மூலம் வழி கெடுப்பான்” என்று கூறப்பட்டுள்ளது. “இவ்வேதத்தின் மூலம்” என்று இதற்குப் பொருள் கொண்டுள்ளனர். இது அறியாமையாகும்.

ஏனெனில் இவ்வசனத்தில் ஒரு உதாரணத்தைக் கூறிவிட்டு அதன் பிறகு தான் “இதன் மூலம் வழி கெடுப்பான்’ என்று அல்லாஹ் கூறுகிறான். எனவே “இதன் மூலம்’ என்ற சொற்றொடருக்கு “இவ்வுதாரணத்தின் மூலம்’ என்று பொருள் கொள்வதே சரியாகும்.

“இதன் மூலம்’ என்ற சொற்றொடருக்கு “வேதத்தின் மூலம்’ என்று பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் இவ்வசனத்தில் வேதத்தைக் குறிக்கும் எந்தச் சொல்லும் இடம் பெறவில்லை.

மேலும் வழி காட்டுவதற்காகத் தான் அல்லாஹ் குர்ஆனை அருளினான்; வழி கெடுப்பதற்காக அல்ல. எனவே அவ்வாறு பொருள் கொள்வது கடும் குற்றமும், குர்ஆனுக்குக் களங்கம் கற்பிப்பதுமாகும்.

இதைத் தான் குர்ஆனுடன் பொருத்திப் பார்த்து, குர்ஆன் வழிகெடுக்கும் என்று கூறுகின்றனர். ஆனால் குர்ஆன், மக்களை நேர்வழியில் பால் இழுத்துக் கொண்டிருக்கின்றது. குர்ஆனுடைய வேலையும் அது தான்.

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும்.

அல்குர்ஆன் 2:185

இதற்கு மாற்றமாகத் தான் இந்த ஆலிம்கள் விஷமப் பிரச்சாரத்தைச் செய்கின்றார்கள். நிச்சயமாக இவர்கள் அதில் தோற்றுப் போவதுடன், இந்த வாதம் இவர்களை நாளை நரகத்திற்குத் தான் அழைத்துச் செல்லும்.

குர்ஆன் மீது இவர்கள் வெறுப்பூட்டிய குற்றத்திற்கு ஆளாகின்றார்கள். இத்தகையவர்களுக்கு எதிராக நபி (ஸல்) அவர்கள் மறுமையில் இறைவனிடம் புகார் கொடுக்கின்றார்கள்.

என் இறைவா! எனது சமுதாயத்தினர் இந்தக் குர்ஆனைப் புறக்கணிக்கப்பட்டதாக ஆக்கி விட்டனர்என்று இத்தூதர் கூறுவார்.

அல்குர்ஆன் 25:30

இதன் விளைவு என்ன? நரகம் தான். அல்லாஹ் காப்பாற்றுவானாக!