கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள்

கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள்

பின்த் ஜமீலா, மேலப்பாளையம்

ஒரு ஆண், பெண்ணிலிருந்தே இந்த மனித சமுதாயத்தை இறைவன் படைத்துள்ளான். மனிதன் பிறக்கும் போதே தாய், தந்தை, அண்ணன்,  தம்பி, மாமன், மச்சான் என்ற உறவுகளோடு தான் பிறக்கின்றான். அவன் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இதற்கு உட்பட்டே ஆக வேண்டும்.

தாய்க்குப் பின் தாரம் என்று கூறுவார்கள். திருமண பந்தத்தின் மூலமாகவே இந்த மனித சமுதாயம் பல்கிப் பெருகிவருகின்றது. தனியாக யாரும் வாழ முடியாது. ஒருவரையொருவர் சார்ந்தே வாழவேண்டியுள்ளது.

அவ்வாறு சேர்ந்து வாழும் போது பெற்றோர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும் ஒருவர் செய்ய வேண்டிய கடமைகள் பல உள்ளன. ஒருவொருக்கொருவர் உதவி செய்தல், பொறுமையை மேற்கொள்தல், விட்டுக்கொடுத்தல் போன்ற நற்பண்புகளோடு சேர்ந்து வாழும் போது தான் மனித வாழ்க்கைப் பயணம் நிம்மதியாக இனிமையாகச் செல்லும்.

கூட்டுக் குடும்பம் என்றால் என்ன? கூட்டுக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் எவ்வாறு நடந்து கொள்கின்றனர்? கூட்டுக் குடும்ப வாழ்க்கையினால் ஏற்படும் சாதகங்களும் பாதகங்களும் என்ன? இது மார்க்கத்தின் அடிப்படையில் சரிதானா? என்பதைப் பார்ப்போம்.

(சொத்தைப் பிரிக்காமல்) இணைந்து வாழும் குடும்ப முறைக்கு கூட்டுக் குடும்பம் என்று சொல்லப்படுகின்றது.

கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்கள் மார்க்கத்திற்கு முரணாக நடந்து கொள்ளும் முறைகள் சிலவற்றையும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் இங்கு பார்ப்போம்.

மாமியார் – மருமகள் பிரச்சனை

கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் மிக முக்கியமானது மாமியார், மருமகளுக்கு இடையில் ஏற்படும் பிரச்சனைகளாகும்.

தனது மகனுக்குத் திருமணம் ஆனவுடன் ஒரு தாயாருக்கு ஏற்படும் கவலை, நம்மீது பாசம் காட்டாமல் நம்மைக் கவனிக்காமல் செலவுக்குப் பணம் தராமல் மருமகளோடு தன் மகன் போய்விடுவானோ? என்ற பயம் கலந்த ஏக்கம் ஏற்படுகின்றது. இந்த மனநிலையின் காரணமாகப் பல்வேறு விளைவுகள் ஏற்படுகின்றன.

மகளாகப் பார்க்கப்பட வேண்டிய மருமகள் அந்நியப் பெண்ணாக கருதப்படுகின்றாள். தனது மகனிடம் மருமகளைப் பற்றிக் கோள் மூட்டி, சண்டைகளை (கணவன், மனைவிக்கு மத்தியில்) உருவாக்குகின்றனர். இது மார்க்கத்தில் மிகவும் கண்டிக்கப்பட்ட செயலாகும். இணக்கம் ஏற்படுத்துவதற்காக பொய் சொல்வதைக் கூட மார்க்கம் அனுமதிக்கின்றது என்றால் இணக்கமாக வாழும் கணவன், மனைவியைப் பிரிக்க நினைப்பது எத்தகைய பாவம் என்பதை அறியலாம்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியார் மற்றோர் அடியாரின் குறையை இவ்வுலகில் மறைத்தால், அவருடைய குறையை அல்லாஹ் மறுமை நாளில் மறைக்காமல் இருப்பதில்லை.

நூல்: முஸ்லிம் 5050

உம்மு குல்ஸூம் பின்த் உக்பா பின் அபீமுஐத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(பரஸ்பரம் பிணக்கு கொண்ட இரு தரப்பாரிடம் நல்லதைப் புனைந்து கூறி) மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவர் பொய்யர் அல்லர். அவர் நல்லதையே சொல்கிறார்; நன்மையையே எடுத்துரைக்கிறார்” என்று கூறுவதை நான் கேட்டேன்.

இதன் அறிவிப்பாளரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

மக்கள் பொய் என்று சொல்லக்கூடிய எதற்கும் (மார்க்கத்தில்) அனுமதியுள்ளதாக நான் கேள்விப்படவில்லை; மூன்று பொய்களைத் தவிர!

  1. போர் (தந்திரத்திற்காகச் சொல்லப்படும் பொய்).
  2. மக்களிடையே சமாதானத்தை உருவாக்குவதற்காகச் சொல்லப்படும் பொய்.
  3. (குடும்ப ஒற்றுமைக்காக) கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் சொல்லும் பொய்.

நூல்: முஸ்லிம் 5079

சில வீடுகளில் மாமியார்கள் செய்யும் சில நாகரீமற்ற செயல்கள் குடும்ப ஒற்றுமையைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் அமைந்துள்ளன.

வெளியே சென்று வரும் மகன், மருமகள் ஆகிய இருவரும் தின்பண்டங்கள் முதல் ஆடைகள் வரை என்னென்ன பொருட்களை தங்கள் கையில் எடுத்து வருகின்றார்கள் என்பதைக் கவனிப்பது.

மகனும் மருமகளும் வீட்டில் இல்லாத சமயங்களில் அவர்களுடைய அறையைச் சென்று பார்வையிடுவது.

அவர்களின் அறைகளில் நடக்கும் விஷயங்களை ஒட்டுக்கேட்பது.

இதுபோன்ற செயல்கள் நிச்சயமாகக் குடும்பத்தில் பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகின்றன.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தாம் காணாத கனவைக் கண்டதாக வ-ந்து சொல்வாரானால், அவர் (மறுமையில்) இரண்டு வாற்கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து) முடிச்சுப் போடும்படி நிர்ப்பந்திக்கப்படுவார். ஆனால், அவரால் ஒருபோதும் (அப்படிச்) செய்ய முடியாது. (அவருக்கு அளிக்கப்படும் வேதனையும் நிற்காது.) “தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்அல்லது “தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில்யார் அவர்களது உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறாரோ அவரது காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும். எவர் (உயிரினத்தின்) உருவப் படத்தை வரைகிறாரே அவர்அதற்கு உயிர் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார். ஆனால், அவரால் உயிர் கொடுக்க முடியாது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 7042

ஒரு மனிதர் கதவில் ஒரு துவாரத்தின் வழியாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது அறையினுள் எட்டிப் பார்த்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஈர்வலி (பேன் சீப்பு) ஒன்றிருந்தது. அதன் மூலம் அவர்கள் தமது தலையைக் கோதிக்கொண்டிருந்தார்கள். அவரைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீ என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று எனக்கு (முன்பே) தெரிந்திருந்தால், இந்த ஈர்வலியால் உன் கண்ணைக் குத்தியிருப்பேன்என்று கூறி விட்டு, “(வீட்டுக்குள் நுழைய) அனுமதி கேட்கவேண்டும் என்று சட்டமாக்கப்பட்டதே  பார்வை (எல்லை மீறி வீட்டிலிருப்பவர்கள் மீது விழக்கூடும் என்ற) காரணத்தால் தான்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி), நூல்: முஸ்லிம் 4358

சில வீடுகளில் அளவுக்கு மீறிய வேலைகளை மருமகள்களுக்குக் கொடுத்து, கசக்கிப் பிழிகின்றனர். இதனாலும் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு கணவன், மனைவியிடையே பிணக்கு ஏற்பட்டு, விவாகரத்து வரை சென்று விடுவதைப் பார்க்கிறோம்.

மஅரூர் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (மதீனாவுக்கு அருகிலுள்ள) “ரபதாஎனுமிடத்தில் அபூதர் (ரலி) அவர்களைக் கடந்து சென்றோம். அப்போது அவர்கள்மீது ஒரு (புதிய) மேலங்கியும், அவர்களுடைய அடிமையின் மீது அதே போன்ற ஒரு (புதிய) மேலங்கியும் இருந்தன. நாங்கள், “அபூதர் அவர்களே! (அவர் அணிந்திருக்கும் மேலங்கியையும் வாங்கி) இரண்டையும் சேர்த்து நீங்களே அணிந்துகொண்டால் (உங்களுக்கு) ஒரு ஜோடி (புதிய) ஆடையாக இருக்குமே?” என்று கேட்டோம். அதற்கு அபூதர் (ரலி) அவர்கள் பின்வருமாறு விடையளித்தார்கள்:

எனக்கும் என் சகோதரர்களில் ஒருவருக்குமிடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. அம்மனிதரின் தாய் அரபுப் பெண் அல்லர். எனவே, நான் அவருடைய தாயைக் குறிப்பிட்டுத் தரக் குறைவாகப் பேசிவிட்டேன். உடனே அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (சென்று) என்னைப் பற்றி முறையிட்டார். நான் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தபோது, “அபூதர்ரே! நீர் அறியாமைக் காலத்துக் கலாசாரம் உள்ள மனிதராகவே (இன்னும்) இருக்கின்றீர்என்று சொன்னார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் மற்ற மனிதர்களை ஏசும்போது பதிலுக்கு அவர்கள் அவருடைய தந்தையையும் தாயையும் ஏசத்தானே செய்கிறார்கள்?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அபூதர்! நீர் அறியாமைக் காலத்துக் கலாசாரம் உள்ள மனிதராகவே (இன்னும்) இருக்கின்றீர்என்று கூறிவிட்டு, “(பணியாளர்களான) அவர்கள் உங்கள் சகோதரர்கள் ஆவர். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்துள்ளான். ஆகவே, நீங்கள் உண்பதிலிருந்து அவர்களுக்கு உணவளியுங்கள். நீங்கள் அணிவதிலிருந்து அவர்களுக்கு அணியக் கொடுங்கள். அவர்களது சக்திக்கு மீறிய பணியை அவர்களுக்குக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்தாதீர்கள். அவ்வாறு சக்திக்கு மீறிய பணியை அவர்களுக்குக் கொடுத்தால் அவர்களுக்கு நீங்களும் ஒத்துழைப்புத் தாருங்கள்என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 3417, புகாரி 6050

மருமகள் என்றால் அவள் கணவன் வீட்டிற்காக உழைப்பதற்காகவே வந்திருக்கின்றாள் என்பதைப் போன்று நன்றாக வேலை வாங்குகின்றனர். அத்தனை வேலை பார்த்தாலும், அவளுக்குப் பசி எடுக்கும் போது உடனே சாப்பிட்டுவிட முடியாது. பாரம்பரிய கலாச்சாரம் என்ற பெயரில் அனைவருக்கும் இறுதியில் தான் சாப்பிட வேண்டும். அதுவும் அளவாகத் தான் சாப்பிடவேண்டும். அவள் சாப்பிடும் அளவை மற்றவர்களிடம் கூறி சில மாமியார்கள் கேவலப்படுத்துவதுண்டு. சில குடும்பங்களில் காலை உணவே கிடையாது. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் அடிமை முறை இருந்தது. அந்த அடிமைகளுக்குக் கூட இதுபோன்ற உணவு வகையில் இதுபோன்ற ஒரு பாரபட்சம் காட்டப்பட்டதில்லை.

கைஸமா பின் அப்திர் ரஹ்மான் பின் அபீசப்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள்  அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்களுடைய கருவூலக் காப்பாளர் வீட்டுக்குள் வந்தார். அவரிடம் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் “அடிமைகளுக்கு உணவு கொடுத்துவிட்டாயா?” என்று கேட்டார்கள். அவர், “இல்லைஎன்றார். “உடனே சென்று அவர்களுக்கு உணவு கொடுஎன்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறிவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவரது உணவு எவரது அதிகாரத்தில் உள்ளதோ அவர், அவருக்கு உணவளிக்க மறுப்பதே அவர் பாவி என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.

நூல்: முஸ்லிம் 1819

நபி (ஸல்) அவர்கள் வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் பின்வருமாறு கூறியதாக அறிவித்தார்கள்:

என் அடியார்களே! அநீதியிழைப்பதை எனக்கு நானே தடை செய்து கொண்டேன். அதை உங்களிடையேயும் தடை செய்யப்பட்டதாக ஆக்கிவிட்டேன். ஆகவே, நீங்கள் ஒருவருக்கொருவர் அநீதியிழைக்காதீர்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்: முஸ்லிம் 5033

வீட்டிற்கு வந்த மருமகளின் ஏழ்மை நிலையைச் சுட்டிக்காட்டுவதற்காக எவ்வளவு பணம், நகை, பொருட்கள் கொண்டு வந்தாய் என்று அவளையும் அவளது குடும்பத்தாரையும் இழிவாகப் பேசி மட்டம் தட்டும் நிலையையும் குடும்பங்களில் பார்க்கிறோம்.

நம்பிக்கை கொண்டோரே ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக்கூடும். எந்தப் பெண்ணும் இன்னொரு பெண்ணை கேலி செய்யவேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக்கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூறவேண்டாம்.

அல்குர்ஆன் 49:11

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரது நாவு மற்றும் கையி(ன் தொல்லைகளி)லிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே (உண்மையான) முஸ்லிம் ஆவார். எவர் அல்லாஹ் தடை விதித்தவற்றிலிருந்து விலகிக்கொண்டாரோ அவரே முஹாஜிர் (துறந்தவர்) ஆவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி 10

நபி (ஸல்) அவர்கள் “தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்என்று கூறினார்கள். அப்போது “(தர்மம் செய்ய ஏதும்) அவருக்குக் கிடைக்கவில்லையானால் (என்ன செய்வது), சொல்லுங்கள்?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “அவர் தம் கைகளால் உழைத்துத் தாமும் பயனடைவார்; பிறருக்கும் தர்மம் செய்வார்என்று சொன்னார்கள். “அவருக்கு (உழைக்க உடலில்) தெம்பு இல்லையானால் (என்ன செய்வார்), சொல்லுங்கள்?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் “பாதிக்கப்பட்ட தேவையாளிக்கு அவர் உதவட்டும்என்றார்கள். “(இதற்கும் அவர்) சக்தி பெறாவிட்டால் (என்ன செய்வது), சொல்லுங்கள்?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் “அவர் “நல்லதைஅல்லது “நற்செயலை‘(ச் செய்யும்படி பிறரை) ஏவட்டும்என்றார்கள். “(இயலாமையால் இதையும்) அவர் செய்யாவிட்டால் (என்ன செய்வது), சொல்லுங்கள்?” என்று கேட்டதற்கு, நபி (ஸல்) அவர்கள், “அவர் தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே தர்மம்தான்என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி), நூல்: முஸ்லிம் 1834

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு ஜனாஸா (பிரேதம்) கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவர்கள் “(இவர்) ஓய்வு பெற்றவராவார்; அல்லது (பிறருக்கு) ஓய்வு அளித்தவராவார்என்று சொன்னார்கள். மக்கள் “அல்லாஹ்வின் தூதரே! ஓய்வு பெற்றவர்; அல்லது ஓய்வு அளித்தவர் என்றால் என்ன?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் “இறை நம்பிக்கை கொண்ட அடியார் (இறக்கும் போது) இவ்வுலகத்தின் துன்பத்தி-ருந்தும் தொல்லையி-ருந்தும் ஓய்வுபெற்று இறையருளை நோக்கிச் செல்கிறார். பாவியான அடியான் (இறக்கும்போது) அவனி(ன் தொல்லைகளி)டமிருந்து மற்ற அடியார்கள், (நாடு)நகரங்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன ஓய்வு(பெற்று நிம்மதி)பெறுகின்றனஎன்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூகத்தாதா பின் ரிப்ஈ அல்அன்சாரி (ரலி), நூல்: புகாரி 6512

ஒரு பெண்ணை, அவளது மாமியார் தனது பேரக்குழந்தைகள் முதல் மச்சான், கொழுந்தன், உறவுக்காரர்கள் உட்பட இவர்கள் அனைவரின் முன்னிலையிலும் அவளைக் கண்டித்து, கேவலப்படுத்தி, அவளின் கண்ணியத்தைச் சீர்குலைக்கும் நிலை பல குடும்பங்களில் உள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். அவர் தம் சகோதரருக்கு அநீதியிழைக்கவோ, அவருக்குத் துரோகமிழைக்கவோ, அவரைக் கேவலப்படுத்தவோ வேண்டாம். இறையச்சம் (தக்வா) இங்கே இருக்கிறது. (இதைக் கூறியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது நெஞ்சை நோக்கி மூன்று முறை சைகை செய்தார்கள். ஒருவர் தம் சகோதர முஸ்லிமைக் கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக்குப் போதிய சான்றாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்ற முஸ்லிம்களின் உயிர், பொருள், மானம் ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும். (ஹதீஸின் சுருக்கம்)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 5010

மாமியார் மருமகளிடையே ஏற்படும் இன்னும் பல பிரச்சனைகளையும் அது குறித்த மார்க்கத்தின் நிலைபாட்டையும் இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் காண்போம்.