மருமக்களிடையே பாரபட்சம்

கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள்

மருமக்களிடையே பாரபட்சம்

பின்த் ஜமீலா, மேலப்பாளையம்

கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் மாமியார், மருமகள் பிரச்சனை குறித்து விரிவாக அறிந்து வருகிறோம்.

மாமியார்கள், தங்கள் வீட்டிற்கு வரும் மருமகளுக்கு எப்படியெல்லாம் தொல்லை கொடுக்கின்றார்கள் என்பதை ஒவ்வொன்றாகப் பார்த்து வருகிறோம்.

வெளிநாட்டிலோ, அல்லது வெளியூரிலோ வேலை செய்யும் மகன் தன் மனைவிக்கென்று அனுப்பும் பணத்தையும், பொருட்களையும் அவளுக்குக் கொடுக்காமல் தடுக்கும் காரியத்தை சில மாமியார்கள் செய்கின்றனர்.

இன்னும் சில வீடுகளில் மருமகள் கருத்தரிப்பதற்குத் தாமதமானால் அந்தக் குறை தன் மகனிடம் உள்ளதா? அல்லது மருமகளிடம் உள்ளதா? என்பதை ஆராயாமல் மருமகள் மீதே பழியைப் போடுகின்றனர். இதையே சாக்காக வைத்து அவளிடம் அதிக வேலை வாங்குவதும், ஒவ்வொரு நிமிடமும் அவளைக் குறை காண்பதும், குத்திக் காட்டுவதும், எள்ளும் கொள்ளுமாக வெடிக்கவும் செய்கின்றனர். இதன் காரணமாக நல்ல காரியங்களில் அவளை ஒதுக்கியும் வைக்கின்றனர். இது மார்க்க அடிப்படையில் மாபெரும் தவறாகும்.

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாகவும் ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.

அல்குர்ஆன் 42:49, 50

குழந்தை பாக்கியத்தைத் தருவது அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ள விஷயம் என்பதைப் பற்றிக் கூட சிந்திக்காமல் மருமகளைக் குறை சொல்வது, படைத்தவனுக்கே மாறு செய்யும் செயல் அல்லவா?

பாரபட்சம் காட்டும் மாமியார்கள்

மருமக்கள் இருவர் இருந்தால் அவர்களிடையே பாரபட்சம் காட்டும் பழக்கம் மாமியார்களிடம் உள்ளது. பல்வேறு வகைகளில் பாரபட்சம் காட்டுகின்றனர்.

  1. பணக்கார மருமகளிடம் ஒரு விதமாகவும், ஏழை மருமகளிடம் ஒருவிதமாகவும் நடப்பார்கள்.

பணம் இருப்பதால் ஒருவர் உயர்ந்தவராகவும், பணம் இல்லையென்றால் தாழ்ந்தவராகவும் கருதப்படுவது இஸ்லாத்தில் அறவே கூடாது. ஒருவரின் ஏழ்மை நிலையைக் காரணம் காட்டி அவரை இழிவுபடுத்துவது மார்க்க அடிப்படையில் தவறாகும். மேலும் இஸ்லாம் வறியவர்களைச் சிறப்பித்துக் கூறுகின்றது. இப்படிப்பட்ட உன்னதமான மார்க்கத்தில் இருந்து கொண்டு பணத்தை வைத்து பாரபட்சம் காட்டுவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய காரியமாகும். அல்லாஹ்விடத்தில் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமின்றி இறையச்சமுடையவரே சிறந்தவராவார்.

மனிதர்களே ஒர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே உங்களை நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுபவோரே அல்லாஹ்விடம் சிறந்தவர். அல்லாஹ அறிந்தவன். நன்கறிந்தவன்.

அல்குர்ஆன் 49:13

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஏழைகளை விட்டுவிட்டுசெல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப்படும் வலீமா – மண விருந்து உணவே உணவுகளில் மிகத் தீயதாகும். விருந்து அழைப்பை ஏற்காதவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்தவராவார்.

நூல்: புகாரி 5177

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (புழுதி படிந்த) பரட்டைத் தலை கொண்ட, வீட்டு வாசல்களில் தடுத்து நிறுத்தப்படக்கூடிய எத்தனையோ பேர், (அல்லாஹ்விடம்  தகுதியால் உயர்ந்தவர்கள் ஆவர்.) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால், அல்லாஹ் அதை மெய்யாக்குவான்.

நூல்: புகாரி 2703

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு (பணக்கார) மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), “இவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?” என்று கேட்டார்கள். தோழர்கள், “இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்கவும், இவர் பரிந்துரைத்தால் அதனை ஏற்கவும், இவர் பேசினால் செவிசாய்க்கப்படவும் தகுதியான மனிதர்என்று கூறினர். பிறகு நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் மௌனமாயிருந்தார்கள். பிறகு, நபி (ஸல்) அவர்கள் அருகில் முஸ்-ம்களில் ஓர் ஏழை மனிதர் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவரைக் குறித்து நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார்கள். தோழர்கள், “இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்காமலும், இவர் பரிந்துரைத்தால் அது ஏற்கப்படாமலும், இவர் பேசினால் செவிதாழ்த்தப்படாமலும் இருக்கத் தகுதியானவர்என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரைப் போன்ற (வசதி படைத்த)வர்கள் இந்தப் பூமி நிரம்ப இருந்தாலும் (அவர்கள் அனைவரையும் விட) இந்த ஏழையே மேலானவர்எனக் கூறினார்கள்.

நூல்: புகாரி 5091

  1. அழகான மருமகளிடம் ஒரு விதமாகவும் அழகில் குறைந்த மருமகளிடம் ஒரு விதமாகவும் நடப்பது என்ற அடிப்படையிலும் பாரபட்சம் காட்டுகின்றனர்.

மனிதனை அழகிய வடிவத்தில் படைத்திருப்பதாக இறைவன் கூறுகின்றான்.

மேலும் அவன் திட்டமிட்ட வடிவத்தில் தான் இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதர்களும் இருக்கின்றனர். ஒருவருடைய நிறத்தையும் அழகையும் வைத்து ஒருவரைக் குற்றம் காண்கிறோம், பாரபட்சம் காட்டுகிறோம் என்றால் படைத்த இறைவனையே குறை காண்பதற்குச் சமம்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் “அல்லாஹ் உங்கள் உடல்களையோ உருவங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்கள் உள்ளங்களையே பார்க்கின்றான்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டுத் தம் விரல்களால் தமது நெஞ்சை நோக்கி சைகை செய்தார்கள்.

நூல்: முஸ்லிம் 5011

மேலும் இஸ்லாம் ஒருவருடைய தகுதியை வைத்தே உயர்வை, உயர் பதவியை ஏற்படுத்தி வைத்திருக்கின்றது; நிறம், அழகை அது பொருட்படுத்தவில்லை என்பதற்கு பிலால் (ரலி)யின் வாழ்வு சிறந்த எடுத்துக்காட்டாகும். அபிசீனிய நாட்டைச் சார்ந்த கருப்பு நிற அடிமையான பிலாலை அவர்களின் குரல் வளத்தைக் கவனத்தில் கொண்டு நபி (ஸல்) அவர்கள் பாங்கு சொல்வதற்கு ஏவினார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஸ்-ம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது ஓரிடத்தில் ஒன்று கூடி தொழுகைக்காக ஒரு நேரத்தை முடிவு செய்வதே வழக்கமாக இருந்தது; அப்போது தொழுகைக்காக பாங்கு சொல்லப்(படும் முறை அறிமுகப்படுத்தப்)படவில்லை. எனவே, இது குறித்து ஒரு நாள் அவர்கள் (கலந்து) பேசினர். அப்போது அவர்களில் சிலர், “கிறிஸ்தவர்களின் (ஆலயங்களில் அடிக்கப்படும்) மணியைப் போன்று ஒரு மணியை நிறுவுங்கள்என்று கூறினர். வேறு சிலர், “யூதர்களிடமுள்ள கொம்பைப் போன்று ஒரு கொம்பை ஏற்படுத்(தி அதில் ஊதி மக்களைத் தொழுகைக்காக அழைத்)திடுங்கள்என்றனர். அப்போது உமர் (ரலி) அவர்கள், “தொழுகைக்காக அழைக்கின்ற ஒரு மனிதரை நீங்கள் அனுப்பக்கூடாதா?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பிலால்! நீங்கள் எழுந்து தொழுகைக்காக அழையுங்கள்!என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 604

மக்கா நகரம் வெற்றி கொள்ளப்பட்டு, நபியவர்களின் கட்டுப்பாட்டில் கஅபா வந்த போது நபியவர்கள் தம்முடன் அந்த கஅபாவிற்குள் அழைத்துச்சென்ற சொற்ப நபர்களில் ஒருவராக பிலால் (ரலி)யும் இருந்தார்கள்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நாளில் தம் வாகனத்தின் மீது உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களை அமர வைத்துக் கொண்டு மக்காவின் மேற்பகுதியி-ருந்து முன்னேறிச் சென்றார்கள். அப்போது அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் கஅபாவின் பொறுப்பாளர்களில் ஒருவரான உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களும் இருந்தனர். நபி (ஸல்) அவர்களது வாகனம் இறுதியில் பள்ளிவாசலில் சென்று மண்டியிட்டு அமர்ந்தது. நபி (ஸல்) அவர்கள், இறையில்லம் கஅபாவின் சாவியைக் கொண்டு வரும்படி உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். (சாவி கொண்டுவரப்பட்டதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கஅபாவைத் திறந்து கொண்டு) உஸாமா (ரலி), பிலால் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடன் உள்ளே நுழைந்தார்கள். அங்கே நீண்ட ஒரு பகல் நேரத்திற்குத் தங்கியிருந்தார்கள்; பிறகு வெளியே வந்தார்கள். மக்கள் கஅபாவினுள் நுழைய ஒருவரோடொருவர் போட்டியிட்டனர். நான் தான் (அதனுள்) முத-ல் நுழைந்தவன். அப்போது பிலால் (ரலி) அவர்கள் (கஅபாவின்) வாசலுக்குப் பின்னே நின்று கொண்டிருக்கக் கண்டேன். உடனே அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கே தொழுதார்கள்?” என்று கேட்டேன். பிலால் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் தொழுத இடத்தைச் சைகையால் சுட்டிக் காட்டினார்கள். நான் அவர்களிடம், “எத்தனை ரக்அத்துகள் நபி (ஸல்) அவர்கள் தொழுதார்கள்?” என்று கேட்க, “மறந்துவிட்டேன்என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 4289

எத்தனையோ விருப்பத்திற்குரிய நபித்தோழர்கள் இருந்த போதும் நபியவர்கள் இந்த கருப்பு நிற அடிமையை ஏன் அழைத்துச் செல்ல வேண்டும். நபிமொழிகளை அதிகம் அறிவித்த நபித்தோழரான இப்னு உமர் (ரலி) அவர்களே, நபியவர்கள் எங்கே நின்று தொழுதார்கள் என்பதை பிலால் (ரலி)யிடம் கேட்டுத் தெரிந்துள்ளார்கள்.

மேலும் மூத்த நபித்தோழர்களில் ஒருவரான உமர் (ரலி) அவர்கள் கூட, பிலால் (ரலி) அவர்களை, “தலைவரே’ என்று அழைத்து சிறப்பித்திருக்கின்றார்கள்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள், “அபூபக்ர் எங்கள் தலைவராவார். அவர்கள், எங்கள் தலைவர் பிலாலை (விலைக்கு வாங்கி) விடுதலை செய்தார்கள்என்று சொல்வார்கள்.

நூல்: புகாரி 3754

மேலும் சொர்க்கம் என்ற நற்செய்தியை நபியவர்களின் நாவால் பிலால் நற்செய்தியாகப் பெற்றார்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அதிகாலைத் தொழுகையின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம், “பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பிறகு பயனுள்ளதாக நீர் கருதிச் செய்துவரும் நற்செயல் ஒன்றைப் பற்றிக் கூறுவீராக. ஏனெனில், சொர்க்கத்தில் உமது காலணி ஓசையை எனக்கு முன்னால் நான் செவியுற்றேன்என்று சொன்னார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், “நான் இஸ்லாத்தில் இணைந்த பிறகு பயனுள்ளதாகக் கருதி அப்படி (பிரமாதமாக) எந்த நற்செயலையும் செய்யவில்லை. ஆயினும், நான் இரவிலோ பகலிலோ எந்த நேரத்தில் முழுமையாக உளூ செய்தாலும், அந்த உளூ மூலம் நான் தொழ வேண்டும் என அல்லாஹ் என் விஷயத்தில் விதித்துள்ள அளவுக்கு (கூடுதல் தொழுகையை)த் தொழாமல் இருந்ததில்லை. (இதுவே இஸ்லாத்தில் நான் செய்த பயனுள்ள நற்செயலாகக் கருதுகிறேன்)என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 4854

கருப்பு நிற அடிமையாக இருந்த பிலால் (ரலி) அவர்களுக்கு, நபி (ஸல்) அவர்களிடமும் ஏனைய நபித்தோழர்களிடமும் இருந்த மதிப்பு, மரியாதையைப் பார்த்தோம். எனவே அழகின் அடிப்படையிலோ, செல்வத்தில் அடிப்படையிலோ ஒருபோதும் ஏற்றத்தாழ்வு காட்டக்கூடாது.

  1. அதிகமாகச் சம்பாதிக்கும் மகனின் மனைவியிடம் ஒருவிதமாகவும், சம்பளம் குறைவாக வாங்கும் மகனின் மனைவியிடம் ஒருவிதமாகவும் நடந்து கொள்கிறார்கள். இன்னும் சிலர் சொந்தத்தில் பெண் எடுத்திருந்தால் அவளிடம் ஒரு மாதிரியாகவும், அந்நியத்தில் பெண் எடுத்திருந்தால் அவளிடம் ஒரு மாதிரியாகவும் நடக்கின்றார்கள்.

நம்பிக்கை கொண்டோரே உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ, பாதகமாக இருந்தாலும் நீங்கள் நிதியை நிலை நாட்டுவோராகவும், அல்லாஹ்வுக்காக சாட்சிகூறுவோராகவும் ஆகிவிடுங்கள். (வாதியோ பிரதிவாதியோ) செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்குமே அல்லாஹ்வே பொறுப்பாளான். நீதி வழங்குவதில் மனோ இச்சையைப் பின்பற்றாதீர்கள். நீங்கள் சாட்சியத்தைப் புரட்டினாலோ, புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:135

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: பனூ மக்ஸூம் குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி திருடிவிட்டாள். மக்கள், “அவள் விஷயத்தில் நபி (ஸல்) அவர்களிடம் (தண்டனையைத் தளர்த்தும்படிக் கூறி  பரிந்து) பேசுவது யார்?” என்று (தமக்குள்) விசாரித்துக் கொண்டனர். எவரும் நபி (ஸல்) அவர்களிடம் பேசத் துணியவில்லை. உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (அது குறித்துப் பரிந்து) பேசினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “பனூ இஸ்ராயீல் குலத்தார் தம்மிடையேயுள்ள வ-யவர் (உயர் குலத்தவர்) எவரேனும் திருடிவிட்டால் அவரை தண்டிக்காமல் விட்டுவிடுவார்கள்; தம்மிடையேயுள்ள பலவீனர் எவரேனும் திருடிவிட்டால் அவரது கையைத் துண்டித்துவிடுவார்கள். திருடியவர் (என் மகள்) ஃபாத்திமாவாகவே இருந்தாலும் கூட அவரது கையை நான் துண்டித்திருப்பேன்என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 3733

நீதியாக நடப்பதை இஸ்லாம் மிகவும் வலியுறுத்தியுள்ளது. எனவே அற்பக் காரணங்களுக்காக மருமக்களிடையே இதுபோன்ற பாரபட்சம் காட்டுவதை மாமியார்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

  1. மருமகள் அப்பாவியாக இருந்தால் அவள் மீது அடக்குமுறை செய்வதும், அகங்காரமாக நடக்கும் மருமகளிடம் அடங்கிப் போவதும் சில மாமியார்களின் வழக்கம்.

இந்தப் பாரபட்சங்களின் அடிப்படையில் தான் பேரக் குழந்தைகளிடம் கூட சில மாமியார்கள் நடந்துகொள்கிறார்கள்.

இதுபோன்ற பாரபட்சங்களை பெரியவர்களே தாங்கிக் கொள்ள முடியாத போது, குழந்தைகளிடம் இவ்வாறு நடந்துகொள்வது மிகப்பெரும் அநீதியாகும்.

நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தாயார் (அம்ரா) பின்த் ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம் அவரது செல்வத்திலிருந்து சில அன்பளிப்புகளை எனக்கு வழங்குமாறு கேட்டார். என் தந்தை ஒரு வருடம் இழுத்தடித்தார். பிறகு (எனக்கு அன்பளிப்பு வழங்க வேண்டும் என்று) அவருக்குத் தோன்றியது. (ஓர் அடிமையை அன்பளிப்பாக வழங்கினார்.) அப்போது என் தாயார் “என் மகனுக்கு அன்பளிப்பாக (இந்த அடிமையை) வழங்கியதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நீங்கள் சாட்சியாக்காத வரை இதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்என்று கூறினார். ஆகவே, என் தந்தை சிறுவனாயிருந்த எனது கையைப் பிடித்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! இவனுடைய தாயாரான (அம்ரா) பின்த் ரவாஹா, தன் மகனுக்கு நான் அன்பளிப்பாக வழங்கிய ஒன்றுக்குத் தங்களைச் சாட்சியாக்க வேண்டும் என விரும்புகிறார்என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பஷீர்! இவரைத் தவிர வேறு குழந்தை உமக்கு உண்டா?” என்று கேட்டார்கள். என் தந்தை “ஆம்என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர்கள் அனைவருக்கும் இதைப் போன்ற அன்பளிப்பை வழங்கினீரா?” என்று கேட்டார்கள். என் தந்தை “இல்லைஎன்று சொன்னார்கள். “அப்படியானால் என்னை (இதற்குச்) சாட்சியாக்காதீர். ஏனெனில், நான் அநீதிக்குச் சாட்சியாக இருக்கமாட்டேன்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 3326

செயல்களை திருத்திக்கொள்ளுங்கள்

மகனுக்கு வாழ்க்கைப்பட்டதால் மட்டுமே ஒரு பெண் நமக்கு அடிமையாகி விடமாட்டாள். அவளும் ஒரு பெண் என்பதையும் அவளுக்கென்று ஆசாபாசங்கள் இருக்கும் என்பதையும் மாமியாராக இருக்கும் பெண்கள் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். மார்க்கம் காட்டிய வழிமுறைப்படி நடந்தால் கூட்டுக் குடும்பத்தில் குழப்பம் இல்லாமல் நிம்மதியான வாழ்வைப் பெற முடியும். இல்லையேல் மகனுடைய வாழ்க்கையிலும் நிம்மதியில்லாமல் அதனால் தங்களுடைய வாழ்விலும் நிம்மதியில்லாத நிலை ஏற்படும்.

மார்க்கம் அறியாத நிலையில் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபட்டிருந்தால் அத்தகையவர்கள் இதன் மூலம் திருந்திக் கொள்ள வேண்டும்.

உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதை சோதிப்பதற்காக மரணத்தையும் வாழ்வையும் அவன் படைத்தான்.

அல்குர்ஆன் 67:2

அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறந்துபோனவரை மூன்று பொருட்கள் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) இரண்டு திரும்பிவிடுகின்றன. ஒன்று மட்டுமே அவருடன் தங்கிவிடுகிறது. அவரை அவருடைய குடும்பமும் செல்வமும் அவர் செய்த செயல்களும் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) அவருடைய குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவருடைய செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்.

நூல்: புகாரி 6514

எனவே செயல்களைத் திருத்தி, புண்படும் படி நடந்த செயல்களுக்கு மன்னிப்பு கேட்டு, பெரியவர்கள் தங்களது வயதிற்கேற்ப பக்குவத்துடனும், பெருந்தன்மையுடனும், மன்னித்தும், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் முன்மாதிரியாக நடக்க முயற்சி எடுக்கவேண்டும். அல்லாஹ் உதவி செய்வானாக!