மாசுபடும் ஆறுகள் மனம் மாறும் சாதுக்கள்

மாசுபடும் ஆறுகள் மனம் மாறும் சாதுக்கள்

தாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்கலாமேஎன்று சில நேரங்களில் (ஏக இறைவனை) மறுப்போர் விரும்புவார்கள். (அல்குர்ஆன் 15:2)

அண்மையில் இந்தியாவில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள் அல்லாஹ் இந்த வசனத்தில் சொல்வதைப் போன்று பிற மதத்தவர்களை நினைக்கத் தூண்டுகின்றன.

டெல்லி மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டதும் ஒரு பெருங்கூட்டம், கற்பழிப்புக் குற்றங்களுக்கு இஸ்லாம் கூறுகின்ற மரண தண்டனை வேண்டும் என்று கோரினர். முஸ்லிம்களைப் போன்று பெண்கள் புர்கா அணிந்து செல்ல வேண்டும் என்று மதுரை ஆதீனம் போன்றோர் உண்மையை மறைக்காமல் ஊரறிய, உலகறியச் சொன்னார்கள்.

அரபு நாட்டுச் சட்டங்கள் வேண்டும் என்றும், பெண்கள் கண்ணியமான உடை அணிய வேண்டும் என்று குரல் எழுப்பியவர்கள் இஸ்லாத்தைக் கடுமையாக விமர்சிக்கும் சங்பரிவார்கள் என்பது தான் இதில் ஆச்சரியம்.

பெண்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும் என்று சொல்லும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் இஸ்லாம் கூறும் திருமண ஒப்பந்தத்தை பற்றிப் பேசுகின்றார். இப்போது இந்த வரிசையில் சன்னியாசிகள் எனும் சாதுக்களும் இணைந்துள்ளனர். இவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்பதை இப்போது பார்ப்போம்.

“ஜல சமாதியின் மூலம் ஆறுகள் மாசுபடுகின்றன. அதனால் சாதுக்களை அடக்கம் செய்வதற்கு நில சமாதி வேண்டும்” என்று உ.பி. அரசாங்கத்திடம் சாதுக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஜல சமாதி

ஜல சமாதி என்றால் என்ன? இறந்த பின் பிணத்தை நீரில் வீசியெறிவது தான் ஜல சமாதியாகும். இதற்கு இரண்டு விதமான காரணங்களைக் கூறுகின்றார்கள்.

  1. ராமர் சரயூ நதியில் தன்னை மூழ்கச் செய்து மரணித்தார், அதாவது தற்கொலை செய்து கொண்டார். இதுபோல் யாரும் செய்தால் அவருக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பது இந்துக்களின் புராண நம்பிக்கையாகும்.

இதன்படி ராம நவமியின் போது, வயதானவர்கள் அயோத்யாவில் தற்கொலை செய்ய முனைவார்கள். இதன் காரணமாகவே காவல்துறை கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

பாதுகாப்பு வளையங்கள் போட்டு, கயிறுகளைக் கட்டி, மின்னொளி விளக்குகளை நிறுவி இதுபோன்று தற்கொலை செய்ய முனைவோரைத் தடுக்கின்றது. இந்த வயதான சாதுக்கள் சொர்க்கத்தைத் தேடி நீர் சமாதி ஆகிவிடுவார்கள். ஆனால் காவல்துறையோ விசாரணை என்ற நரகத்தில் சிக்கிக் கொள்ளும். இதற்காகத் தான் காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, 24 மணி நேரமும் விழிப்பாகக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றது. ஆக, நேரடியாக ராமரைப் போன்று நதியில் இறங்கி தற்கொலை செய்து கொள்வதற்கு ஜல சமாதி அல்லது நீர் சமாதி என்று பெயர். உடலில் கல்லைக் கட்டி, நீரில் தன்னை ஆழ்த்திக் கொள்வதற்கும் நீர் சமாதி என்றே பெயர்.

  1. இந்தியாவில் ஓடுகின்ற நதிகளின் கரையோரங்கள் அனைத்திலும் தகன மையங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இறந்தவர்களின் உடலைக் கொண்டு போய் எரித்துச் சாம்பலாக்கி விடுவர். இது அக்னி சமாதி என்று பெயர். இதன் பின்னர் அந்தச் சாம்பலை ஆற்று நீரில் கரைத்து விடுவர். இதையும் நீர் சமாதி என்கின்றனர்.

சாதுக்களின் உடலை எரிப்பதில்லை. அவர்களின் உடலை அப்படியே அந்த நதியில் தூக்கி வீசி விடுகின்றனர். இதுவும் நீர் சமாதி எனப்படுகின்றது. இப்போது சாதுக்கள் கோருவது என்ன?

சாதுக்கள் இருக்கும் போது மனித மற்றும் பிற இனங்களுக்குப் பயனளிப்பவர்களாம். இறந்த பிறகும் அதுபோன்று பயனளிக்க வேண்டுமாம். இதனால் தாங்கள் இறந்த பிறகு நீர் சமாதி செய்கின்ற போது, நீர்வாழ் பிராணிகள் அவர்களது உடலை உண்டு பயனடைகின்றன. ஆனால் இப்போது ஆறுகள் மாசுபட்டு விட்டதால் நீர்வாழ் பிராணிகளே அழிந்து விட்டன. அவை உயிருடன் இருந்தால் தானே, “தானமே பிரதானம்’ என்று தண்ணீரில் சமாதியான பிரேதத்தை அவை உண்டு உயிர் வாழும்.

அதனால் இப்போது சாதுக்களுக்குத் திடீர் ஞானோதயம் வந்து, “எங்களை நிலத்தில் அடக்கம் செய்வதற்கு நிலம் தாருங்கள்” என்று அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கின்றனர்.

மற்றவர்களைப் போன்று உங்களையும் எரித்து விட்டால் என்ன? என்று கேட்டதற்கு, “புனிதமானவர்களை எரிப்பதற்கு மரபு தடை செய்கின்றது; அதனால் தான் நீர் சமாதி செய்கின்றோம். இப்போது உயிரினங்களுக்கு இரையாகாமல் அந்தப் பூதவுடல்கள் அழுகி விடுகின்றன. இதுவும் அவர்களை அவமானப்படுத்துவதாகும். அதனால் தான் இப்போது நில சமாதி கேட்கின்றோம்” என்று பதிலளிக்கின்றனர்.

நிறம் மாறிய நீராதாரம்

ஏற்கனவே கும்பமேளா என்ற பெயரில் லட்சக்கணக்கானோர் கங்கை நதிக் கரையில் கூடுகின்றனர். இத்தனை பேரும் கழிக்கும் மலம், ஜலம் கங்கையில் தான் சங்கமமாகின்றது.

அத்தனை பேரும் ஒரே நேரத்தில் புனித நீராடல் என்ற பெயரில் ஆற்றில் இறங்கி, குளித்துக் கழித்தால் கங்கை மாசுபடாமல் இருக்குமா? கூவமாக மாறி விடுகின்றது. இத்துடன் நிற்பதில்லை. இவர்கள் கொண்டு வருகின்ற பூமாலைகள், பூஜைப் பொருட்கள், பைகள் அனைத்தும் கங்கையில் தான் விடப்படுகின்றன.

நீறு பூக்கும் நீர்வளம்

இதில் மில்லியன் கணக்கில் இறக்கும் மக்களின் அஸ்தியும், அதாவது அவர்களின் உடலை எரித்த சாம்பலும் இந்த ஆறுகளில் கரைக்கப்படுகின்றன. மங்கைக்கு சூதகம் ஏற்பட்டால் கங்கையில் சுத்தம் செய்வாள்; அந்தக் கங்கையே சூதகமானால் எங்கே சுத்தம் செய்யும் என்று கேட்பார்களே! அதுபோன்று கங்கை முழுமையாக சூதகப்பட்டுவிட்டது.

இந்தக் குடிநீரைக் குடிக்கும் இந்தியக் குடிமகன் எப்படி சுகாதாரமாக வாழ்வான்? வெகு சீக்கிரத்தில் சூதகமாகி அவனும் சாவான். இது தான் இன்று நடக்கின்றது. ஒரு நோய் அல்ல! பல புதுப்புது நோய்கள் புற்றீசல்களாக இந்தியாவில் முளைப்பதற்கு இதுதான் காரணம்.

இவர்கள் கங்கையை மட்டுமல்ல! வடபுலத்தில் ஓடுகின்ற மிக முக்கியமான யமுனை, ஷிப்ரா, கோதாவரி, சட்லஜ், நர்மதா, சரயூ போன்ற நதிக் கரைகளையும் நாசப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் தாமிரபரணி, காவிரி போன்ற நதிகளும் இப்படித் தான் நாசமாகிக் கொண்டிருக்கின்றன.

இதற்கிடையே கழிவுநீர் சாக்கடைகளும் இந்த நதிகளில் தான் மடை திறக்கப்படுகின்றன. இந்நிலையில் பிணங்களின் திசுக்கள் கலந்து தண்ணீர் மேலும் மாசாகி விடுகின்றது. இந்தச் சூழலில் தான் சாதுக்கள் தங்களுக்கொரு அடக்கத்தலம் வேண்டும் என்று கேட்கின்றனர்.

இறந்தவர்களின் உடல்களைப் பூமியில் புதைப்பது தான் சுற்றுப்புறச் சூழலுக்கும் சுகாதாரத்திற்கும் உகந்தது. அதனால் தான் இஸ்லாம், உடலைப் புதைக்கச் சொல்கின்றது. உலகில் மரணித்த முதல் மனித உடல் மண்ணில் தான் புதைக்கப்பட்டது. இதைத் திருக்குர்ஆன் அழகாக எடுத்துரைக்கின்றது.

தனது சகோதரரின் உடலை எவ்வாறு மறைப்பது என்று அவனுக்குக் காட்ட அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான். அது பூமியைத் தோண்டியது. “அந்தோ! இந்தக் காகத்தைப் போல் இருப்பதற்குக் கூட என்னால் இயலவில்லையே! அவ்வாறு இருந்திருந்தால் என் சகோதரரின் உடலை மறைத்திருப்பேனேஎனக் கூறினான். கவலைப்பட்டவனாக ஆனான்.

(அல்குர்ஆன் 5:31)

இந்த அடிப்படையில் சாதுக்கள் மட்டுமல்ல! முஸ்லிம்களைப் போன்று அனைத்து சமுதாயத்தவரும் இறந்தவர்களை மண்ணில் அடக்கம் செய்ய முன்வரவேண்டும். இறந்தவர்களை அடக்கம் செய்வதில் மட்டுமல்ல, அனைத்துத் துறைகளிலும் இஸ்லாமிய மார்க்கம் அழகிய, அற்புத வழியை – வாழ்க்கை நெறியைக் காட்டுகின்றது. எனவே உலக மக்கள் அனைவரும் கவுரவம் பார்க்காமல் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என அன்பாய் அழைக்கிறோம்.