பிறை பார்க்காமலே பெருநாள்

பிறை பார்க்காமலே பெருநாள்

தனது தவறான பிறை அறிவிப்பின் மூலம் டவுண் காஜி தமிழக மக்களைத் தடம் புரளச் செய்த மாத்திரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனது கிளைகள் மூலம் 18ஆம் தேதி தான் பெருநாள் என்ற செய்தியை பரவச் செய்தது.

துண்டுப் பிரசுரங்கள், டிஜிட்டல் பேனர்கள், சுவரொட்டிகள் மூலம் தமிழக முஸ்லிம்களிடம் பிறை நிலைப்பாடு பற்றிய சிந்தனைக் கதிர்களை பளிச்சிடச் செய்தது. இமயம் டி.வி. வாயிலாகவும் செய்திகளை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தது. அதன் எதிரொலியாக மக்கள் எழுப்பிய கேள்வி இது தான்.

நோன்புக்கும் நோன்புப் பெருநாளுக்கும் பிறை பார்க்கின்றோம். ஆனால் இதுவரை ஹஜ் பெருநாளுக்கு பிறை பார்ப்பதைக் கேள்விப்பட்டதே இல்லையே! இது என்ன அதிசயமாக இருக்கின்றது?

இவ்வாறு அவர்கள் கேள்வி எழுப்பிய பிறகு தான், ஹஜ் பெருநாளையும் பிறை பார்த்து தான் தீர்மானிக்க வேண்டும் என்ற விளக்கம் பாமர மக்களுக்கு மட்டுமல்ல, உலமாக்களுக்கும் தெரியவில்லை எனும் உண்மை நமக்குப் புரிய வந்தது.

மக்கள் இப்படி இருந்தால் டவுண் காஜி ஏன் காதில் பூச்சுற்ற மாட்டார்? இருப்பினும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சளைக்காமல் பல்வேறு பரிமாணங்களில் மக்களிடம் பிறை விஷயத்தைக் கொண்டு சென்றது.

இதன் விளைவாக ஜமாஅத்துல் உலமா சபை 17ஆம் தேதி தான் பெருநாள் என்று பத்திரிகை அறிக்கை விட்டது. தவ்ஹீத் ஜமாஅத்தும் மறுப்பு அறிக்கை வெளியிட்டு, 18ஆம் தேதி தான் பெருநாள் என்று அறிவித்தது பத்திரிகைகளில் அதிக இடத்தைப் பிடித்தது.

இறுதியில் இறைவன் அருளால் 18ஆம் தேதியன்று மக்கள் திடல்களில் நிரம்பி வழிந்தனர். மழை பெய்த இடங்களில் பள்ளிவாசல்களில் மக்கள் அலை மோதினர். அல்ஹம்துலில்லாஹ்!

ஹஜ் பெருநாளையும் பிறை பார்த்து தான் தீர்மானிக்க வேண்டும் என்ற மார்க்க விளக்கத்தை இந்தப் பெருநாளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மக்களிடம் பதிவு செய்தது.