பிறை ஆலோசனைக் கூட்டம்

பிறை ஆலோசனைக் கூட்டம்

பிறை பார்ப்பதன் அடிப்படையில் தான் நோன்பையும், பெருநாளையும் முடிவு செய்ய வேண்டும் எனவும் ஒவ்வொரு பகுதியினரும் தத்தமது பகுதியில் பிறை பார்த்ததன் அடிப்படையிலேயே முடிவு செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிலைப்பாடு கொண்டுள்ளதை அனைவரும் அறிவோம்.

தத்தமது பகுதி எது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை மக்களிடம் வழங்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு பகுதியில் உள்ளவரும் இந்த எல்லையை வரையறுப்பதில் பவ்வேறு அளவுகோலை வைத்துள்ளனர்.

தத்தமது பகுதி என்பது தமது ஊர் அல்லது தாலுகா அல்லது மாவட்டம் என்ற அளவில் தான் இருக்க வேண்டுமா? தத்தமது பகுதி என்பது நமது மாநிலம் என்று முடிவு செய்தால் தவறாகுமா என்று பல சகோதரர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். பின்வரும் காரணங்களையும் அவர்கள் முன் வைத்தனர்.

  •  தமிழகம் ஒரு மாநிலமாக, தனி அதிகாரம் படைத்ததாகவுள்ளது.
  • மாநிலம் முழுவதற்கும் ஒரே நாளில் தான் பெருநாளுக்காக அரசு விடுமுறை அறிவிக்கிறது.
  • தமிழகத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் பிறை பார்த்ததை ஏற்று தலைமை காஜி அறிவிப்பதை தமிழக அரசு ஏற்று விடுமுறை அளிப்பதால் தமிழக முஸ்லிம்கள் அதை ஏற்று எல்லா ஊர்களிலும் பெருநாளை அறிவிக்கின்றனர்.
  • நமது ஊரில், நமது தாலுகாவில் பிறை பார்க்கவில்லை என்பதால் நாம் பெருநாள் என்று முடிவு செய்யாத நிலையில் நமது ஊர் மக்கள் பெருநாள் என்று முடிவு செய்கின்றனர். ஒரு வீட்டிலேயே தவ்ஹீத் கொள்கையை ஏற்றவர்களும் ஏற்காதவர்களும் பல குடும்பங்களில் உள்ளனர். இதனால் பெருநாள் என்ற மகிழ்ச்சியை அனைவரும் சேர்ந்து அடைய முடியவில்லை.
  • ஒவ்வொரு தமிழக தவ்ஹீத்வாதியும் தனது ஊர் அல்லது தனது மாவட்டம் தான் தனது பகுதி என்று சொன்னாலும் அது பலருக்கும் வாய் வார்த்தையாகத் தான் உள்ளது. தனது ஊரில் பெருநாள் என மற்றவர்கள் அறிவிக்கும் போது அன்றே தனக்கும் பெருநாளாக இருக்க வேண்டும் என உள்ளூர ஆசைப்படுகின்றனர். அதாவது தமிழ்நாடு முழுதும் ஒரு பகுதி தான் என்ற எண்ணம் தான் பலரது ஆழ் மனதில் உள்ளது.
  • நீங்கள் முடிவு செய்யும் நாள் என்பது சிலர் முடிவு செய்வது என்ற பொருளைத் தராது. ஒட்டு மொத்த அல்லது மிகப் பெரும்பான்மையானவர்களின் முடிவு என்பதே பொருளாக இருக்க முடியும். எனவே எந்த முடிவை அதிகமானோர் தம் மனதுக்குள் எடுத்து விட்டு சொல்லத் தயங்குகிறார்களோ அதையே தமது பகுதி என்று முடிவு செய்தால் அது தவறா?

இது போன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் எந்தப் பகுதியிலாவது பிறை காணப்பட்டால் அதை பிறை பார்க்காத மற்ற பகுதியினர் ஏற்றால் அது தவறாகுமா? என்ற அடிப்படையில் அவர்களின் கேள்விகள் அமைந்திருந்தன.

இது பற்றி ஆலோசிப்பதற்காக 14.10.2008 அன்று உலமாக்கள், மாநில நிர்வாகிகள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

தமது மாவட்டம் தான் தமது பகுதி என்று ஒரு பகுதியினர் முடிவு செய்தால் அதற்கு எவ்வாறு அவர்களுக்கு உரிமை உள்ளதோ அது போல தமது மாநிலம் தான் தமது பகுதி என்று முடிவு செய்து தமிழகத்தில் எந்தப் பகுதியிலாவது நோன்பையும், பெருநாளையும் ஒரு ஊரார் முடிவு செய்தால் அதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது.

ஒட்டுமொத்த தமிழகம் சுமார் அரை மணி நேரம் வித்தியாசம் கொண்டதாக உள்ளதாலும், தமிழகத்தை ஒரு வட்டத்துக்குள் கொண்டு வரும் வகையில் மாநிலமாக அமைக்கப்பட்டு ஒரே மாதிரியான சட்டங்களைக் கொண்டதாகவும் உள்ளது என்பது போன்ற காரணங்களால் இப்படி முடிவு செய்பவர்களைத் தடுக்க முடியாது என்று முடிவு செய்யப்பட்டது.

உலகில் எங்கே பிறை பார்த்தாலும் ஏற்க வேண்டும் என்ற கருத்து தவறானது என்பதை இக்கூட்டம் மீண்டும் உறுதி செய்தது.

மேலும் தமது பகுதி என்பது தமது மாவட்டம் அல்லது பக்கத்து மாவட்டம் தான் என்று யாராவது முடிவு செய்து அதனடிப்படையில் செயல்பட்டால் அந்த உரிமை அவர்களுக்கு உண்டு என்றும் முடிவு செய்யப்பட்டது.

பகுதி என்பதற்குக் குறிப்பிட்ட எல்லையை மாநிலத் தலைமை நிர்ணயித்து திணிக்கக் கூடாது என்றும் இந்த முடிவை ஒவ்வொரு கிளையும் சுயமாக எடுக்கலாம் என்றும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.