பெண்களுக்குத் தேவை ஆளும் உரிமையா? வாழும் உரிமையா?

பெண்களுக்குத் தேவை ஆளும் உரிமையா? வாழும் உரிமையா?

மார்ச் 8 அன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதையொட்டியும், உலக மகளிர் இயக்கம் துவங்கி 150 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டியும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வந்தது. கடுமையான, காரசாரமான விவாதத்திற்குப் பிறகு அதற்கு ஆதரவாக 186 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் பெற்று ராஜ்யசபையில் இந்த மசோதா, கடந்த மார்ச் 9 அன்று நிறைவேறியது. ஆனால் இது நாடாளுமன்றத்தில் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அதற்குரிய கருத்தொற்றுமை இன்னும் ஏற்படவில்லை.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மம்தா பானர்ஜி இந்த வாக்கெடுப்பைப் புறக்கணித்தார். முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி, லல்லு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம், சரத் யாதவ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆக மூன்று யாதவ்களும் இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பெண்ணினத்தைத் தலைவியாகக் கொண்ட மற்றொரு கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியும் வாக்கெடுப்பைப் புறக்கணித்தது.

சட்டத்தின் சாதனை என்ன?

இது நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் 33 சதவிகிதம் இட ஒதுக்கீட்டைப் பெண்களுக்கு அளிக்கின்றது. இதன்படி 543 இடங்களில் 181 இடங்கள் பெண்களுக்குக் கிடைக்கும். நாட்டில் இருக்கும் 28 சட்டமன்றங்களில் 4109 இடங்களில் 1370 இடங்கள் பெண்களுக்குக் கிடைக்கும்.

பெண்களுக்கான இந்த இடங்கள் சுழற்சி முறையில் அமையும். இதன்படி ஒரு தொகுதி மூன்று தேர்தலுக்கு ஒருமுறை பெண்களுக்கு ஒதுக்கப்படும். இதுதான் இந்தச் சட்டத்தின் மூலம் கிடைக்கும் சாதனை.

இதைத் தான் இந்த அறிவுஜீவிகள் பெண்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வாகக் கருதுகிறார்கள். அதனால் தான் இந்தச் சட்டத்தை ஒரு வரலாற்றுச் சாதனை, பெண்களின் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சி, பெண்களின் அரசியல் முன்னேற்றம் என்றெல்லாம் பீற்றிக் கொள்கின்றனர்.

ஏற்கனவே இந்த இட ஒதுக்கீடு உள்ளாட்சி அமைப்புகளில் அறிமுகமாகி நடைமுறைக்கு வந்து விட்டது. அதனால் பெண்களின் வாழ்வில் ஒரு புது அத்தியாயம் உதயமானதா? புதிய புரட்சி படைக்கப்பட்டு விட்டதா? என்று பார்த்தால் ஒன்றுமில்லை. இவர்களின் இந்தக் கூக்குரல்களால் ஒருபோதும் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.

கருவறையா? கல்லறையா?

இப்போது பெண்களுக்கு மிக மிக இன்றியமையாத தேவை உயிர் வாழும் உரிமை தான். தாயின் கரு என்பது கருணையின் மறு பெயர். இப்போது அந்தக் கருவறையே கல்லறையாக மாற்றப்பட்டு விட்டது.

கருவறையில் நவீன கருவிகளின் நாசகாரக் கதிரலைகள் பாய்ந்து பெண் சிசு என்று கண்டறியப்படுகின்றது. அங்கே அந்தத் திடப் பொருள் (கரு) திரவப் பொருளாக மாற்றப்பட்டு, கழுவி, கழிவு நீராக வெளியேற்றப்பட்டு விடுகின்றது. கருவறை காலி செய்யப்படுகின்றது.

உள்ளத்தை உருக வைக்கும் இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை, அக்கிரமத்தை அண்மையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலிருந்து பட்ங் கஹய்ஸ்ரீங்ற் என்ற இதழ் படம்பிடித்துக் காட்டுகின்றது. அந்த ஆய்வை இப்போது பார்ப்போம்.

பஸ்பமாக்கப்பட்ட 12 மில்லியன் பெண் சிசுக்கள்

4.2 மில்லியன் முதல் 12.1 மில்லியன் வரையிலான பெண் குழந்தைகள் 1980க்கும் 2010க்கும் இடைப்பட்ட காலத்தில், குறி வைத்துக் கருவிலேயே பஸ்பமாக்கப்பட்டுள்ளனர். இதில் அதிக எண்ணிக்கையிலான பெண் குழந்தைகள் 1990ல் அழிக்கப்பட்டுள்ளனர்.

கருவில் உருவாகும் பெண் குழந்தை, தலைக் குழந்தையாக இருந்தால், அதாவது தாய்க்கு முதல் குழந்தையாக இருந்தால் அது இந்தக் கொலையை விட்டுத் தப்பி விடுகிறது. இரண்டாவது பெண் குழந்தையாக இருந்தால் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டு விடும்.

இந்தியாவில் அதிகமான மக்கள் தொகையினர் வசிக்கும் மாநிலங்களில் தான் இது போன்று பெண் குழந்தைகளைத் தேர்ந்தெடுத்துக் கருக்கலைப்பு செய்யும் நிகழ்வு நடைபெறுகின்றது.

பிறந்த குழந்தை முதல் 6 வயது வரையிலான மொத்தக் குழந்தைகளில் ஆண் குழந்தைகளை விட 71 லட்சம் பெண் குழந்தைகள் குறைவாக உள்ளனர் என்று 2011ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.

இதே வயதுக் குழந்தைகளில் ஆண்களை விட பெண் குழந்தைகள் 60 லட்சம் குறைவான இருந்தனர் என்று 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.

42 லட்சம் பெண் குழந்தைகள் மட்டுமே குறைவாக இருந்ததாக 1991ஆம் ஆண்டு கணக்கெடுப்பு காட்டுகின்றது.

1990ல் 1000 ஆண் குழந்தைகளுக்கு 906 பெண் குழந்தைகள் என்ற விகிதத்தில் இருந்தது. 2005ஆம் ஆண்டு இந்த விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு 836 பெண் குழந்தைகள் என்று சரிந்து விட்டது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

மொத்தக் குழந்தைகளில் ஆண்களை விட 42 லட்சம் பெண் குழந்தைகள் குறைவாக இருந்தது, தற்போது 71 லட்சமாக உயர்ந்துள்ளது. அதாவது பெண் குழந்தைகள் குறைவதன் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

ஒவ்வொரு பத்தாண்டு கணக்கெடுப்பிலும் கருக்கலைப்பு கூடிக் கொண்டிருப்பதையே இந்தப் புள்ளி விபரம் காட்டுகின்றது.

காட்டுமிராண்டியாக்கும் கல்வியறிவு

படிக்காத, பாமர, பரம ஏழை வர்க்கத்தினரை விட படித்த, பணக்கார வர்க்கமே இந்தப் பெண் சிசுக் கலைப்பில் மிஞ்சி நிற்கின்றனர் என்பதையும் இந்த ஆய்வு விவரிக்கின்றது. அதாவது கற்றவர்கள், கல்வியறிவு மிக்கவர்கள் தான் காட்டுமிராண்டித்தனத்தில் மிஞ்சியுள்ளனர்.

இதன் விளைவாகத் தான் 2001ல் 1000 ஆண் குழந்தைகளுக்கு 927 பெண் என்றிருந்த பிறப்பு விகிதம், 2011ல் 1000க்கு 914 ஆகக் குறைந்தது.

கலைப்பிற்குக் காரணம் என்ன?

இந்தக் கருவழிப்புகள், கருக்கலைப்புகள் மட்டும் நிகழாவிட்டால் இயற்கையாகவே 1000 ஆணுக்கு 952 பெண் என பிறப்பு விகிதம் அமைந்திருக்கும். ஆனால் அந்த அளவை அடைவதை விட்டும் கருக்கலைப்பு தடுத்து விட்டது.

இன்று விலங்கின உரிமைக்குக் குரல் கொடுப்பவர்கள், பெண்ணின உரிமைக்குப் பெரும் கோஷமிடுபவர்கள், பேயாட்டம் போடுபவர்கள் அந்தப் பெண்ணினத்தின் கருவுயிரைக் காக்கும் உரிமைக்கு, மனித உயிரின் புனிதம் காப்பதற்காகப் போர்க் குரல் எழுப்ப வேண்டாம். குறைந்தபட்சம் இதற்காக முணுமுணுப்பதற்குக் கூட மறுப்பது தான் பெரும் வேதனைக்குரிய விஷயம்.

இப்படிக் கருக்கலைப்பிற்கும், அதைக் கண்டு கொள்ளாத மனப்பான்மைக்கும் காரணம் என்ன என்பதைப் பார்ப்போம். இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

 1. பிரசவத்திற்கு முந்திய கண்டுபிடிப்புத் தொழில் நுட்பச் சட்டம் (டழ்ங்ய்ஹற்ஹப் உண்ஹஞ்ய்ர்ள்ற்ண்ஸ்ரீ பங்ஸ்ரீட்ய்ண்வ்ன்ங்ள் ஆஸ்ரீற்) அதாவது பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைக் கருவிலேயே கண்டுபிடிப்பது தொடர்பான இந்தச் சட்டத்தின் செயலிழப்பு மற்றும் முடக்கம். இந்தச் சட்டத்தின்படி கருக்கலைப்பின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
 2. பெரும் பெரும் பண முதலைகள், பேராசை கொண்ட ரேடியாலஜிஸ்ட், பணமே குறியாகக் கொண்ட மகப்பேறு மருத்துவர்கள், சட்டத்திற்குப் புறம்பாகப் பெருகிக் கொண்டிருக்கும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் இயந்திரங்கள்!

இவர்கள் தான் ஆணாதிக்கம் கொண்ட கருக்கலைப்பையும், கருவழிப்பையும் நாடுகின்ற கொலைகார மக்களுக்குக் கொலைக் கருவிகளாகவும் கொலைக் காரணிகளாகவும் ஆகியிருக்கின்றார்கள்.

கருக்கலைப்புக்காக வரக் கூடியவர்கள் சொல்லும் காரணங்கள் சில சமயங்களில் உண்மையாகவும் இருக்கின்றன. சமயங்களில் பொய்யாகவும் ஆகி விடுகின்றன.

 1. கருக்கலைப்பு மருத்துவச் சட்டம் (பட்ங் ஙங்க்ண்ஸ்ரீஹப் பங்ழ்ம்ண்ய்ஹற்ண்ர்ய் ர்ச் டழ்ங்ஞ்ய்ஹய்ஸ்ரீஹ் ஆஸ்ரீற் – 1971) இந்தச் சட்டத்தை டாக்டர்களின் காவல் சக்தி என்றழைக்கலாம்.

கருவில் வளரும் குழந்தை தாயின் நலத்திற்குப் பெரும் ஆபத்து என்று ஒரு டாக்டர் கருதினால் போதும். அந்தக் கருவை அவர் கலைத்து விடலாம்.

சட்டத்திற்குப் புறம்பாக அவர் கருவைக் கலைக்கும் போது கூட இந்தச் சட்டத்தின் காரணமாக அவரைத் தண்டிக்க முடியாது. தாயின் நலத்திற்குப் பேராபத்து என்ற காரணத்தைச் சொல்லி அவர் எளிதில் தப்பித்துக் கொள்ளலாம்.

 1. தடுக்க முடியாத தடுப்பு சாதனங்கள்:

கருவுறாமல் இருப்பதற்காக வேண்டி கருத்தடைச் சாதனங்களை தம்பதியர் பயன்படுத்துகின்றனர். ஆனால் கருத்தடைச் சாதனங்கள் பல கட்டங்களில் காலை வாரி விடுகின்றன. இந்தக் கருத்தடைச் சாதனங்களுக்கு டாக்டர்கள் எந்தவொரு உத்தரவாதமும் கொடுக்க முடிவதில்லை. இறுதியில் இதன் காரணமாகவும் கருக்கலைப்பு தங்குதடையின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

 1. தாய் மரணம்:

தாராளமயமான கருக் கலைப்பின் காரணமாகத் தாயின் உயிர் பாதுகாக்கப்படுகின்றது; இதனால் தாய் மரணம் கணிசமாகக் குறைந்திருக்கின்றது என்ற தவறான நம்பிக்கை மேற்கத்திய நாடுகளில் பரவலாகக் காணப்படுகின்றது. ஆனால் அது முற்றிலும் தவறு என்பதற்கு அயர்லாந்து ஓர் எடுத்துக்காட்டாகும். இங்கு கருக்கலைப்பிற்கு எதிரான கடும் சட்டம் அமலில் இருக்கின்றது. இப்படி இருந்தும் அங்கு தான் தாய் மரணம் மிக மிகக் குறைவாக உள்ளது. அதனால் தாராள கருக்கலைப்பு தான் தாய் மரணத்தைத் தடுக்கின்றது என்ற கருத்து தவறானது என்பது இதன் மூலம் ஊர்ஜிதமாகின்றது.

இவை இந்திய மற்றும் உலக அளவில் கருக்கலைப்பிற்காகச் சொல்லப்படுகின்ற காரணங்கள். மேற்கத்திய நாட்டில் ஆண் பெண் பாகுபாடின்றி கருக்கலைப்பு நடைபெறுகின்றது. ஆனால் இந்தியாவிலோ பெண் இனம் குறி வைத்து அழிக்கப்படுகின்றது.

இப்போது பெண்களுக்கு உடனடியான, அவசியமான, அவசரத் தேவை அவர்களின் உயிர் வாழும் உரிமை தான். அந்த உரிமைக்காக எந்தவொரு ஆக்கப்பூர்வமான வேலையும் செய்யாமல் 33 சதவிகித இடஒதுக்கீட்டில் இந்த அறிவுஜீவிகள், அரசியல்வாதிகள் களமிறங்கியிருக்கிறார்கள்.

உயிரைக் காக்க உரிய வழி

சரி! அப்படியே இவர்கள் ஒட்டுமொத்தமாகத் திரும்பி, கருக்கலைப்பை தடுப்பதற்குச் சட்டம் இயற்றி, கருக்கலைப்பு தடுக்கப்பட்டு விடும் என்று எண்ணினால் அதுவும் முற்றிலும் தவறாகும். காரணம் இப்போதும் கருக்கலைப்பு தடுப்புச் சட்டம் நம் நாட்டில் அமலில் இருக்கத் தான் செய்கின்றது. ஆனாலும் கருக்கலைப்பைத் தடுக்க முடியவில்லையே! ஏன்? எனவே இந்தச் சட்டம் இதற்குத் தீர்வாகவோ திருப்பமாகவோ ஆகாது.

இதற்கு ஒரே வழி, உரிய வழி இஸ்லாமிய மார்க்கம் தான். அது எப்படி இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கூறுகின்றது என்பதை நாம் தனித் தலைப்பில் பார்க்கவுள்ளோம்.

உறையச் செய்யும் உ.பி. கற்பழிப்புக்கள்

உத்தர பிரதேச மாநில மனித உரிமை ஆணையம், பெருகி வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மாயாவதி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கும் வேளையில் உ.பி.யில் கடந்த ஐந்தாறு நாட்களில் மட்டும் ஆறு கற்பழிப்புக்கள் அரங்கேறியுள்ளன.

 1. ஜூன் 13: லக்கிப்பூர்கேரி மாவட்டத்தில் நிதாஷான் காவல் நிலையத்தில் 14 வயதுப் பெண் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.
 2. ஜூன் 19: உ.பி. கன்னாவுஜ் மாவட்டத்தில் 14 வயது இளம் பெண், ஒரு காமவெறிக் கும்பலின் கற்பழிப்புக்கு இணங்க மறுத்து, எதிர்த்துப் போரிட்டதில் ஒரு கண்ணில் கத்தியால் குத்தி குருடாக்கி விட்டு, மறு கண்ணையும் தாக்கி காயப்படுத்தி விட்டுத் தப்பி விட்டனர். கற்பையும் கண்ணையும் இழந்த அந்தப் பெண்ணை கிராம மக்கள் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அந்தப் பெண்ணுக்கு ஒரு கண் முழுமையாகப் பறி போய் விட்டதாகவும் மறு கண் 80 சதவிகிதம் சேதமடைந்து விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 3. ஜூன் 20: எடா மாவட்டம் பிரபாப்பூர் கிராமத்தில் 5 பேர் கொண்ட ஒரு கும்பல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பின் ஒரு வீட்டில் நுழைந்து தனது குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்த அனார்கலி என்ற 35 வயதுப் பெண்ணைக் கற்பழித்தனர். பின்னர் அந்தப் பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தினர். அந்தப் பெண்ணை அக்கம் பக்கத்தார் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அப்பெண்மணி இறந்து விட்டார். இறப்பதற்கு முன்னால் அப்பெண்ணிடம் மாவட்ட கூடுதல் நீதிபதி மரண வாக்குமூலம் பெற்றுக் கொண்டார். பிள்ளைகள் அடையாளம் காட்டியும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இப்பெண்ணின் கணவர் சம்பவத்தன்று ஊரில் இல்லை. அவர் டெல்லியில் பணி புரிகின்றார்.
 4. ஜூன் 21: லக்னோ, சீதாப்பூரில் ஸாலிஹா என்ற 12 வயதுப் பெண், தனது சகோதரனுடன் மதரஸாவுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த போது கடுமையான மழையில் மாட்டிக் கொள்கிறாள். அதனால் ஒரு மரத்திற்கு அருகே ஒதுங்குகின்றாள். ஆனால் உடன் வந்த சகோதரனோ மழையில் ஓட்டம் பிடித்து வீட்டுக்குச் சென்று விடுகின்றான். அவனது சகோதரி வீட்டுக்குத் திரும்பவே இல்லை. பெற்றோர் வலைவீசித் தேடியதில் ஒரு கரும்புத் தோட்டத்தில் ஸாலிஹாவைப் பிணமாகத் தான் கண்டெடுக்கின்றார்கள். உடலில் கோரக் காயத்துடன்.
 5. ஜூன் 24: பைசாபாத் மாவட்டத்தில் அன்ஜ்ராலி கிராமத்தில் ஒரு பருவ வயதுப் பெண், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒரு மத விழாவுக்குச் சென்ற போது 20 வயது வாலிபர்களான ரமேஷ் யாதவ், மகேஷ் யாதவ் ஆகியோரால் கடத்தப்பட்டு கற்பழிக்கப்படுகின்றாள்.
 6. ஜூன் 25: முஸஃப்பர் நகரில் தனது இயற்கைத் தேவையை நிறைவேற்றச் சென்ற 14 வயது இளம் பெண்ணை லால் என்ற இளைஞன் துப்பாக்கி முனையில் அருகிலுள்ள வயல் வெளிக்குக் கடத்திச் சென்று கற்பழித்தான்.
 7. ஜூன் 25: பக்ருபூர் நகரில் 17 வயது இளம் பெண் ஒரு போட்டோ ஸ்டூடியோ உரிமையாளரால் கற்பழிக்கப்பட்டாள்.

இந்தக் கற்பழிப்புக்கள் அனைத்தும் உ.பி.யில் மட்டும் கடந்த ஐந்தாறு நாட்களில் நடந்தவை. நாடெங்கும் நடந்த கற்பழிப்புக்களைக் கொண்டு வந்தால் இந்த ஏடு தாங்காது.

பெண்களுக்கு எதிராக நடந்த இந்தக் கற்பழிப்புகளுக்கும் கொடூரமான கொலைகளுக்கும் தீர்வு என்ன?

இன்று பெண்ணியம் பேசுபவர்கள், பெண் விடுதலைக்காகப் போராடுபவர்கள், அரசியல்வாதிகள் நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கினால் பெண்களின் வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சி, மாபெரும் புரட்சி ஏற்பட்டு விடும் என்றெல்லாம் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்; பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெண்களுக்கு இப்போது உண்மையான, உடனடியான, அதிரடியான, அவசியமான தேவை ஆளும் உரிமை அல்ல, வாழும் உரிமை! காரணம் ஒரு பெண் கருவில் உருவெடுத்தாலே அதைக் கருவியின் கழுகுப் பார்வையில் கதிர் வீச்சு அலைப் பாய்ச்சலில் கண்டுபிடித்து, தாயின் கருவறையையே கல்லறையாக்கி விடுகின்றனர். ஒரு கருப் பொருள் கருக்கலைப்பு என்ற பெயரில் கழிவுப் பொருளாகக் கழுவப்படுகின்றது.

இப்படிக் கழுவப்பட்ட, கலைக்கப்பட்ட, கழிவு நீராக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 1980 முதல் 2010 வரையிலான முப்பது ஆண்டுகளில் மட்டும் 12 மில்லியன் (ஒரு கோடியே இருபது லட்சம்) ஆகும்.

அப்படியே கருவறையில் தப்பி உருவெடுத்து உயிரெடுத்து உலகத்தில் உதயமாகி விட்டால் இருக்கவே இருக்கின்றது கள்ளிப்பால், எருக்கம்பால்! இந்தக் கைப்பக்குவ மருந்துகளில் அந்தப் பெண் குழந்தைகளின் உயிர்களைப் பறித்து விடுகின்றனர்.

பெண் சிசுக் கொலை செய்வதில் இந்தப் பழைய முறைகள் நமக்குத் தெரியும். ஆனால் “புதிய கலைகள்’ என்ற தலைப்பில் இந்து நாளேடு வெளியிட்ட செய்தி, நம்மை மலைப்பில் அல்ல. மயக்கத்திலேயே ஆழ்த்தி விடும். பெண் குழந்தைகளை எருக்கஞ்செடி அல்லது கள்ளிப் பாலை வைத்துக் கொலை செய்வது பழைய முறை. இப்போது புதிய கொலை முறைகளைப் பாருங்கள்.

(1) புகையிலைச் சாற்றை குழந்தை வாயில் புகட்டி சாகடித்தல்

(2) காரம் நிறைந்த கோழி சூப்பை கொடுத்தல். இதன் விளைவால் கொஞ்ச நேரத்தில் அந்தப் பெண் குருத்து, குய்யோ முறையோ என்று கீச் குரலில் கத்தி விட்டு இறந்து குளிர்ந்து போதல்.

(3) குழந்தைக்கு அளவுக்கு அதிகம் பால் புகட்டி விட்டு ஈவு இரக்கமின்றி ஒரு ஈரத்துணியால் பொதிந்து அதிலேயே உயிர் துடிப்பு நிற்கும் வரை உறையச் செய்தல்.

(4) பிறந்த அந்த இளங்கொழுந்தின் அறுக்கப்பட்ட தொப்புள் கொடியிலிருந்து வழிகின்ற இரத்தத்தை நிறுத்தாது அப்படியே ஓட விட்டு உயிரிழக்கச் செய்தல்.

(5) குழந்தையை கைக் காற்றாடியின் முன்னால் படுக்க வைத்து அந்தக் காற்றாடியின் விசிறிகளை அறுந்து போகும் வேகத்தில் சுழலச் செய்தல். புயலென வீசும் இந்தச் சுழல் காற்று வீச்சில் இந்த அரும்பின் சுவாசக் காற்றை நிறுத்தி விடுதல்.

என இந்த மாபாதகங்களை சேலம் பகுதியில் வசிக்கும் பெண்கள் செய்கின்றனர். “எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. ஆண் குழந்தை ஒன்று, பெண் குழந்தைகள் இரண்டு. நான்காவது ஒரு பெண் என்றால் அக்குழந்தையை விட்டு வைக்க மாட்டேன்’ என்று இந்தப் பகுதியில் வசிக்கும் பெண் ஒருத்தி குறிப்பிடுகின்றாள். பெண் குழந்தை எனில் பெரும் செலவு, கல்யாணம் முடிக்கக் காசு பணம் அதிகம் தேவை.  இதுதான் பெண் குழந்தைகளை கொல்லக் காரணம் என்று அந்தப் பெண் சொல்கின்றாள்.

இதையும் தாண்டி அந்தப் பெண் குழந்தை வளருமானால் பருவமடைவதற்கு முன்போ, அல்லது பருவமடைந்த பின்போ கற்பழித்து, கழுத்தை நெறித்து அல்லது கொளுத்தி சாகடித்து விடுகின்றனர்.

திருமணம் முடித்த பின்பு ஒரு பெண், தான் பெற்ற பிள்ளைகளுக்கு முன்னாலேயே கதறக் கதற காமுகர்களின் கும்பலால் கற்பழித்துக் கொல்லப்படுவது இதயம் உள்ள எவராலும் எண்ணிப் பார்க்க முடியாத ஒரு கோர, கொடூரச் சம்பவமாகும்.

இப்படிக் கற்பழிப்புகளிலிருந்து தப்பி விட்டால் வரதட்சணை என்ற கொடுமையால் மாப்பிள்ளை வீட்டுக் கோடரியால் ஒரு பெண் கொல்லப்படுகின்றாள். மாப்பிள்ளை வீட்டில் ஸ்டவ் வெடித்து, மண்ணெண்ணை ஊற்றிக் கொளுத்தி, அல்லது அடித்தே கொல்லப்படுகின்றாள்.

கண்ணைப் பறித்த காட்டுமிராண்டித்தனம்

ஆந்திர மாநிலம் நிஜாமாபாத்தில் 1995ஆம் ஆண்டு முஹம்மது யூசுஃப் என்பவர் 24 வயது நிரம்பிய நஜ்மாவை திருமணம் முடிக்கின்றார்.

வீட்டிற்கு வந்திருக்கும் மருமகள் நம்முடைய கொத்தடிமை என்ற எகத்தாளத்தில் மாமியார் வீட்டு ஆதிக்க வர்க்கம் அத்துமீறி நடத்திய மூர்க்கத்தனமான தாக்குதல்களுக்கும் – மிருகத் தனமான அடி உதைகளுக்கும் நஜ்மாவின் உடல் மத்தளமானது. அணுதினமும் அவளது வாழ்க்கை அவள் வடிக்கும் கண்ணீரிலேயே கரைந்தது.

கொண்டு வா! இல்லையேல் கொன்று விடுவேன் என அவளின் கொண்டையைப் பிடித்து மாமியார் வெட்டினார். அவளது மேனியில் நடத்திய கோர நடனத்தை, இந்தப் பெண் தன்னைப் பெற்றவர்களின் குடும்பத்திற்குக் கொண்டு செல்லவில்லை! ஒருநாள் கூட இந்தக் கொடுமைகளை விட்டும் நஜ்மா தப்பவில்லை!

மாமி வீட்டு அரசாங்கம் கப்பம் கட்டச் சொல்லும் போதெல்லாம் பெண் வீட்டுக்காரர்கள் எதுவும் கட்ட முடியாத கையறு நிலையில் கை பிசைந்து நின்றனர். அவ்வப்போது நஜ்மாவின் சகோதரர்கள் வாய்க்கரிசியாக மாப்பிள்ளை வீட்டாருக்குப் போடாமலில்லை. ஆனால் அது யானைப் பசிக்கு சோளப்பொரி என்ற கதையானது.  ஏற்கனவே மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த நஜ்மாவுக்கு நான்காவதாக ஒரு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த ஐந்தாவது நாள் நஜ்மாவின் கண்ணுக்கு மை போடும் குடும்ப நிகழ்ச்சி. இது குழந்தை பிறந்ததும் அந்தப் பகுதியில் நடக்கும் சடங்கு! இதற்கு கஜல் என்று கூறுகின்றனர்.

இந்த நிகழ்ச்சியை முன்வைத்து காட்டரக்கியான மாமி, நஜ்மாவிடம் சென்று கண்ணில் “மை’ வைக்கின்றாள். கண்ணில் வைத்தது வெறும் கரு”மை’ அல்ல!  நஜ்மாவின் கண்களில் நாசக்கார மாமி வைத்தது என்ன தெரியுமா? “ஆசிட்’டில் தோய்க்கப்ட்ட விஷ”மை’. நஜ்மாவின் விழிகளுக்கு வேட்டு வைக்கும் வெடிமருந்து. கைக்குழந்தையைக் கையில் வைத்திருக்கும் “நஜ்மா’ கண்ணைக் கசக்கி மாளவில்லை! கதறி அழுகின்றாள்!

அவளை கட்டாகத் தூக்கிக் கொண்டு ஓர் அறையில் போட்டு அடைக்கின்றனர் கணவன் வீட்டு காட்டுமிராண்டிகள். எரிகின்ற விழிகளுடன் 24 மணித்துளிகள் அந்த அறையிலேயே எரிந்து போனது! இதை உன் அப்பன் வீட்டுக்குத் தெரிவித்தால் இதய நோயாளியான உன் தாய் இறந்து போவாள் என்று இதயமற்றவர்கள் நஜ்மாவை எச்சரித்தனர்.  இதுவரை அடங்கிக் கிடந்த அந்த அபலைப் பெண், நான்கு குழந்தைகளின் தாய், நான்காவது குழந்தை பிறந்து நான்கு நாட்கள் முடிந்து நரக வேதனையை அனுபவித்த “நஜ்மா’ ஒருவாறாக துணிவைப் பெற்று பிறந்த வீட்டிற்குச் செய்தி அனுப்பி விடுகிறாள்.

அலறியடித்து ஓடிவந்த அண்ணன் தம்பிகள் அவசரமாக அருமைச் சகோதரியை மருத்துவமனைக்குக் கொண்டு போகின்றார்கள். அங்கு மருத்துவர் ஓர் அதிர்ச்சி செய்தியை அறிவிக்கின்றார். அந்த அதிர்ச்சி செய்தி, இனிமேல் நஜ்மா நிரந்தரமாக இந்த உலகத்தைக் காண முடியாது என்பது தான்.

இப்படிப் பெண்ணினம் கருக்கலைப்பு, சிசுக் கொலை, கற்பழிப்புக் கொலை மற்றும் வரதட்சணைக் கொலை போன்ற பல கொலைக் களங்களைக் காணுகின்றது. இந்தப் பெண்ணினத்திற்கு ஆளும் உரிமையை அதாவது 33 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்கி விட்டால், சட்டமன்ற, நாடாளுமன்றங்களில் பிரதிநிதித்துவம் தந்து விட்டால் பெண்கள் எதிர் கொள்ளும் இந்தப் பிரச்சனைகள் தீர்ந்து விடுமா? ஒரு போதும் தீராது.

இதற்கு நிதர்சனமான எடுத்துக்காட்டுத் தான் ஒரு பெண் முதலமைச்சராக இருக்கும் உ.பி. மாநிலத்தில் சமீபத்தில் நிகழும் கற்பழிப்புக் கொலைகள்.

எனவே பெண்களுக்கு இப்போதைய தேவை ஆளும் உரிமை அல்ல! வாழும் உரிமை தான். அந்த வாழும் உரிமையையும் சட்டத்தின் மூலம் நிலைநாட்ட முடியுமா? அதுவும் ஒருபோதும் முடியாது. அதற்கு ஒரே ஒரு தீர்வு, இஸ்லாமிய ஷரீஅத்தும், இறை நம்பிக்கையும் தான்.

அன்று அரபுலகில் இந்தப் போக்கு தான் நிலவியது, நீடித்தது. அதைத் தான் இஸ்லாமிய மார்க்கம் தலைகீழாக மாற்றி ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கியது. அதைத் தான் இந்த இதழ் சற்று உற்றுப் பார்த்திருக்கின்றது.

காரணங்கள் – தீர்வுகள்

 1. சினிமா

இன்று பெண்கள் இந்தக் காட்டுமிராண்டிகளின் தாக்குதலுக்கு, கண்மூடித்தனமான காமப் பசிக்கு இரையாவதற்குப் பல்வேறு காரணங்களை நாம் கூறலாம். அவற்றில் மிகவும் முதன்மை மற்றும் தலையாயது சினிமா என்று அடித்துச் சொல்லலாம்.

ஒரு பெண்ணை ஈவு இரக்கமற்ற முறையில் எப்படிக் கற்பழிக்கலாம்? கற்பழித்து விட்டு எப்படியெல்லாம் கொலை செய்யலாம்? கொலை செய்து விட்டு எப்படியெல்லாம் தப்பிக்கலாம்? என்பதைப் பற்றி சினிமா நன்கு விவரிக்கின்றது.

35 வயதுப் பெண்ணை வீடு புகுந்து பெற்ற பிள்ளைகள் முன்னிலையில் கற்பழிப்பதும் தீ வைத்து எரித்துக் கொலை செய்வதும் சினிமா பட பாணி தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இரவு நேரத்தில் இக்கட்டான நிலையில் ஏடாகூடமாக ஒரு பெண் மாட்டிக் கொண்டால் அந்தச் சூழ்நிலையை சமூக விரோதிகள் சாதகமாக்கிக் கொள்வது சினிமா தரும் பலான பாடம் தான்.

துப்பாக்கி முனையில் பெண்களைக் கடத்திக் கற்பழிப்பதும் பின்னர் கொலை செய்வதும் சினிமா படத்தின் சாகசம் தான்.

அரைகுறை ஆடையுடன் பெண்கள் ஆடுவது, நீர் வீழ்ச்சிகளில் அரை நிர்வாணத்துடன் காட்சியளித்து ஆண்களை நிலை குலையச் செய்வது, பாலியல் உணர்வுகளைத் தூண்டி விடுகின்ற படுக்கையறைக் காட்சிகள் என பற்பல ஆபாச, அந்தரங்கக் காட்சிகள், வேட்டை நாய்களைப் போன்று வெறியேற வைக்கும் நீலப் படங்கள் எல்லாமே ஒரு மனிதனிடம் உள்ளடங்கி உறைந்து கிடக்கும் பாலியல் உணர்வை உசுப்பி விட்டு, கொதி நிலைக்குக் கொண்டு வந்து, வெடித்துச் சிதற வைக்கும் வெடி மருந்தாக இயங்குகின்றன. எனவே இந்த சினிமாக்களை, ஆபாசப் படங்களை முதலில் தடை செய்ய வேண்டும். இவற்றைத் தடை செய்யாத வரை இந்தத் தீமைகளுக்கு விடை காண முடியாது.

 1. ஆண்களைக் கவர்கின்ற ஆபாச ஆடைகள்

பெண்கள் அணிகின்ற ஆடைகளைத் தீர்மானிப்பவையாகத் திகழ்வது சினிமா! அதிலும் இலைமறை காயாக மேனியை வெளிப்படுத்துகின்ற, மினு மினுக்கின்ற கண்ணாடி போன்ற, ஆண்களின் பார்வைகளைச் சுண்டி இழுக்கின்ற, சொக்க வைக்கின்ற சல்லாப ஆடைகளைப் பெண்கள் அணிவதும் அவர்களை இந்தப் பேராபத்தில் வீழச் செய்து விடுகின்றது.

இதற்கு இஸ்லாம் கூறுகின்ற ஆடை தான் பெண்களைக் காக்கின்ற கவசமாக, காவல் அரணாகத் திகழும். காமுகர்களின் காட்டுத்தனமான காமத் தீயிலிருந்து அது காக்கும்.

 1. மது

தங்கு தடையற்ற மதுபானம் மற்றும் போதைப் பொருட்கள் ஆண்களை இந்த மிருக நிலைக்குக் கொண்டு செல்கின்றன.

இந்தத் தீமையும் பெண்களின் கற்பழிப்புக்கும் கொலைக்கும் மிக முக்கியக் காரணமாகின்றது. பெண்கள் ஒரு நாட்டில் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்றால் அந்த நாடு மதுவையும் தடை செய்ய வேண்டும். ஓர் இஸ்லாமிய நாட்டில் மது விற்க, பருக அனைத்திற்கும் தடை தான். இதை ஒரு நாடு அமல்படுத்தாத வரை பெண்களுக்கு இது போன்ற கொடுமைகளிலிருந்து பாதுகாப்பு அறவே கிடையாது.

 1. ஆபாசப் புகைப்படங்கள், ஆபாச நூல்கள்

ஆண்களை மிருகமாக்குவதில் மிக முக்கியப் பங்கு வகிப்பவை பெண்களின் ஆபாசப் புகைப்படங்கள், ஓவியங்கள், நீலப் படங்கள் அடங்கிய புத்தகங்கள், மஞ்சள் பத்திரிகைகள், தினசரி பத்திரிகைகள், வார இதழ்கள், மாத இதழ்கள். இவை அனைத்தும் தாவணியில்லா பெண்களின் படங்களை முதல் பக்கத்தில், அட்டையில் தாங்காமல் வெளிவருவதில்லை.

மார்பில் துணியில்லாமல் நிற்கும் பெண்களை அட்டைப் படத்தில் தாங்கிய இந்த இதழ்களுக்குக் குடும்பப் பத்திரிகை என்ற பெயர் வேறு!

நீலப் படங்களைப் போன்று நீலப் புத்தகங்களும் ஆடவர்களின் காம உணர்வைக் கிண்டிக் கிளறுவதில், அவனை ஒழுக்க ரீதியில் நிர்மூலமாக்குவதில், நீர்த்துப் போகச் செய்வதில் முன்னணி வகிக்கின்றன. இதுபோன்ற புத்தகத்தை ஒருவன் படித்தால் போதும். அவன் தன் காமப் பசிக்கு இரை தேடுவதில் ஒரு காட்டு விலங்காக மாறி விடுகின்றான். எனவே இவை பெண்களின் கற்பழிப்புகளுக்கும் கொலைகளுக்கும் முக்கியக் காரணிகளாக அமைகின்றன. பெண்களை இதுபோன்ற தீமைகளிலிருந்து ஓர் அரசாங்கம் பாதுகாக்க வேண்டுமெனில் இவற்றிற்குத் தடை விதிக்க வேண்டும்.

தூய இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாடுகளில் இந்நூல்கள், படங்கள், ஓவியங்கள் தணிக்கை அல்லது தடையை விட்டு ஒருபோதும் தப்பாது.

இந்தக் காரணங்களைப் போன்று இன்னும் இதர காரணங்களையும் அறிந்து அவற்றிற்குரிய தீர்வுகளைக் கண்டு விட்டால் அப்போது தான் கருவறையிலிருந்து கல்லறை வரை பெண்களுக்குரிய வாழ்வுரிமை கிடைக்கும். இந்த வாழ்வுரிமையைப் பெண்களுக்கு அளித்த ஒரே மார்க்கம் இஸ்லாம். அது எப்படி? தனித் தலைப்பில் பார்ப்போம்.