பெண்கள் தங்க நகைகள் அணிவதை மார்க்கம் தடை செய்கிறதா?

பெண்கள் தங்க நகைகள் அணிவதை மார்க்கம் தடை செய்கிறதா?

ஆண்கள் தங்க ஆபரணங்களை அணியக் கூடாது. பெண்கள் அணிந்து கொள்ளலாம் என்பதே மார்க்கச் சட்டம் என்று பரவலாக மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் இந்தக் கருத்தையே கொண்டிருக்கிறார்கள். பல வருடங்களாக நாமும் இதே கருத்தையே சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

இந்த நமது நிலைப்பாட்டிற்கு எதிராகச் சில அறிஞர்கள், பெண்களும் தங்க ஆபரணங்களை அணியக் கூடாது என்று கூறியுள்ளனர். இந்தக் கருத்து வேறுபாடு, நமக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த அறிஞர்களிடமும் இருந்துள்ளது.

தற்காலத்தில் இமாம் அல்பானீ அவர்கள் இந்தக் கருத்தை வாதப் பிரதிவாதங்களோடு அழுத்தமாகக் கூறியுள்ளார். இவரது கருத்தை ஆமோதித்து, பெண்கள் தங்க ஆபரணங்களை அணியக் கூடாது என்று சிலர் கூறி வருகின்றனர்.

குறிப்பாக இலங்கையில் சில அறிஞர்களால் இப்பிரச்சனை கிளப்பப்பட்டு இது தொடர்பாக அறிஞர்களுக்கிடையில் விவாதம் நடைபெறுகின்ற அளவிற்கு பிரச்சனை பெரிதாகி இருக்கிறது. முரண்பட்ட இரு வேறு கருத்துக்கள் வந்துள்ளதால் மக்களுக்கு இது தொடர்பான தெளிவு கட்டாயம் தேவைப்படுகிறது.

இது ஹலால் ஹராம் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான சட்டப் பிரச்சனை என்பதால் இதில் சரியான நிலைபாடு எது என்பதை எல்லோரும் ஆதாரங்களோடு அறிந்து கொள்வது அவசியம்.

இந்த ஆய்வில் இறங்கி அனைத்து ஆதாரங்களையும் அலசிப் பார்க்கும் போது தங்கம் அணிவது ஆண்களுக்கு மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது; பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்தே சரியானது என்ற முடிவுக்கு நாம் வரலாம்.

இமாம் அல்பானீ அவர்களைப் பொறுத்த வரை அவர் சிறந்த அறிஞர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. மார்க்க  விஷயங்களில் சிறப்பான முறையில் ஆய்வு செய்யக் கூடியவர். என்றாலும் இந்தக் குறிப்பிட்ட விஷயத்தில் அவர் தவறான முடிவை எடுத்துள்ளார்.

தங்க ஆபரணங்களை பெண்களும் அணியக் கூடாது என்று கூறுபவர்கள் தங்கள் கூற்றுக்கு மூன்று ஹதீஸ்களை ஆதாரங்களாக குறிப்பிடுகிறார்கள்.

பெண்கள் தங்கம் அணியக் கூடாது என்ற கருத்தில் பலவீனமான பல ஹதீஸ்கள் வருகின்றன. ஆனால் இவற்றில் மூன்று ஹதீஸ்களைத் தவிர்த்து மற்றவை அனைத்தும் பலவீனமானவை என்று இக்கருத்துடையவர்கள் ஒத்துக் கொண்டுள்ளனர். மூன்று ஹதீஸ்கள் சரியானவை என்று இவர்கள் நம்புவதால் தங்கள் கூற்றிற்குரிய ஆதாரங்களாக இவற்றைக் குறிப்பிடுகிறார்கள்.

இவர்கள் எடுத்துக் காட்டும் மூன்று ஹதீஸ்களும் இவர்களின் வாதத்தை நிறுவும் வகையில் அமைந்திருக்கவில்லை. மேலும் அவற்றில் இரண்டு ஹதீஸ்கள் பலவீனமானவை.

எதிர் கருத்தில் உள்ளவர்கள் வைக்கும் முதல் ஆதாரம்

உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: எனது கழுத்தில் தங்கத்தால் ஆன கழுத்து மாலைகளை நான் அணிந்திருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் (என் அறைக்குள்) வந்தார்கள். என்னைக் கண்டு கொள்ளாமல் இருந்தார்கள். நான் (அவர்களிடம்) “என் அலங்காரத்தை நீங்கள் பார்க்க மாட்டீர்களா?” என்று வினவினேன். அதற்கு அவர்கள், “உனது அலங்காரத்தை நான் புறக்கணிக்கிறேன்என்று கூறினார்கள்.

மேலும் நபி (ஸல்) அவர்கள், “உங்களில் ஒருத்தி வெள்ளியால் ஆபரணத்தைச் செய்து, பிறகு அதனுடன் குங்குமச் சாயத்தை சேர்த்துக் கொள்வதில் என்ன சிரமம் இருக்கிறது?” என்று கூறியதாக இதன் அறிவிப்பாளர்கள் கருதினார்கள்.

நூல்: அஹ்மத் 25460

தங்கத்தை நபி (ஸல்) அவர்கள் புறக்கணித்து விட்டு, வெள்ளியால் செய்து கொண்டால் என்ன? என்று கேள்வி எழுப்புவதால் பெண்களும் தங்கம் அணியக் கூடாது என்று இதிலிருந்து வாதிடுகிறார்கள்.

மேற்கண்ட ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்று வாதிடுவோர் முதலில் இந்த ஹதீஸ் ஆதாரப் பூர்வமானதா என்பதை ஆய்வு செய்திருக்க வேண்டும். இரண்டாவதாக இந்த ஹதீஸுடன் தொடர்புடைய அனைத்து ஹதீஸ்களையும் திரட்டி இந்த ஹதீஸின் கருத்து என்ன என்பதையும் ஆய்வு செய்திருக்க வேண்டும். இவ்வாறு வாதிடுவோர் இரணடையும் கவனிக்கவில்லை.

முதலாவதாக, இந்த ஹதீஸ் பலவீமானதாகும்.

அஹ்மதில் இடம்பெற்றுள்ள இந்த ஹதீஸை உம்மு சலமாவிடமிருந்து அதாஉ என்பவர் அறிவிக்கின்றார். இவர் உம்மு சலமா (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாக ஒரு செய்தியைக் கூட செவியுறவில்லை என்று இமாம்கள் கூறியுள்ளார்கள்.

நூற்கள்: இலலுல் மதீனீ, பாகம்: 1, பக்கம்: 66,

அல்மராசீலு லிஇப்னி அபீ ஹாத்தம், பாகம்: 1, பக்கம்: 155

எனவே உம்மு சலமா (ரலி) அவர்களுக்கும் அதாவிற்கும் இடையே அறிவிப்பாளர்கள் விடுபட்டுள்ளார்கள். அவர்கள் எத்தனை பேர் என்ற விபரம் நமக்குத் தெரியாவிட்டாலும் அறிவிப்பாளர் விடுபட்டிருப்பது உறுதியாகத் தெரிவதால் இது தொடர்பு முறிந்த பலவீனமான செய்தியாகும். இதை ஆதாரமாகக் கொண்டு பெண்கள் தங்கம் அணிவது ஹராம் என்ற கருத்தை நிறுவ முடியாது.

இதை ஆதாரமாகக் காட்டக்கூடிய இமாம் அல்பானீ அவர்களும் இந்த ஹதீஸ் தொடர்பு முறிந்தது என்பதை ஒத்துக் கொள்கிறார். ஆனால் பல பலவீனமான ஹதீஸ்கள் ஒன்று சேர்ந்தால் அவை சரியானதாகி விடும் என்ற தவறான நிலைப்பாட்டின் காரணமாக இந்தப் பலவீனமான ஹதீஸை அவர் சரிகண்டுள்ளார்.

இந்தத் தடை நபியவர்களின் மனைவிமார்களுக்கு மட்டும் உரியது

ஒரு வாதத்திற்கு இந்தச் செய்தியைச் சரியானது என்று ஏற்றுக் கொண்டாலும் இதை வைத்து எல்லாப் பெண்களும் தங்க ஆபரணங்களை அணியக் கூடாது என்று கூற முடியாது. ஏனென்றால் தங்க ஆபரணங்களை அணியக் கூடாது என்ற சட்டம் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களுக்கு மட்டும் உரிய பிரத்யேகமான சட்டமாகும். இதைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது குடும்பத்தாருக்கு ஆபரணங்களையும் பட்டையும் தடை செய்தார்கள். மேலும், “சொர்க்கத்தின் ஆபரணங்களையும் பட்டையும் நீங்கள் விரும்பினால் இவ்வுலகில் இவற்றை அணியாதீர்கள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி), நூல்: நஸாயீ 5046

நஸாயீயில் இடம்பெற்றுள்ள மேலுள்ள செய்தி ஆதாரப்பூர்வமானதாகும். இந்த ஹதீஸில் பொதுவாக ஆபரணங்களைத் தடுத்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் பின்னால் வரும் ஹதீஸைப் பார்க்கும் போது தங்க ஆபரணம் மட்டுமே அவர்களுக்குத் தடை செய்யப்பட்டது; வெள்ளி ஆபரணங்கள் அனுமதிக்கப்பட்டது என்பதை அறியலாம்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: தங்க முலாம் பூசப்பபட்ட இரண்டு வளையல்கள் எனது கையில் இருப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். அப்போது அவர்கள், “இவ்விரண்டையும் கழற்றிவிடு. வெள்ளியால் இரு வளையங்களைச் செய்து அதில் குங்குமச் சாயத்தைச் சேர்த்து மஞ்சள் நிறமாக மாற்றிக் கொள்” என்று கூறினார்கள்.

இந்த செய்தியில் நபி (ஸல்) அவர்கள் தங்க ஆபரணத்தை மட்டுமே தனது மனைவி ஆயிஷா (ரலி) அவர்களுக்குத் தடை செய்கிறார்கள். வெள்ளி நகைகளை அவர்களுக்கு அனுமதிக்கிறார்கள்.

மேலுள்ள இவ்விரண்டு ஹதீஸ்களையும் இணைத்துப் பார்க்கும் போது தங்க ஆபரணங்களை அணியக் கூடாது என்ற சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் உரியதல்ல. நபியவர்களின் மனைவிமார்களுக்கு மட்டும் உரிய பிரத்யேகமான சட்டம் என்பதை அறியலாம்.

தமது மனைவிமார் அல்லாத மற்ற பெண்களுக்கு தங்கம் அணிவதை நபி (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளார்கள். இதைப் பின்வரும் ஆதாரங்களிலிருந்து அறியலாம்.

மற்ற பெண்களுக்கு நபியவர்கள் வழங்கிய அனுமதி

ஆதாரம்: 1

அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் பட்டைத் தமது வலக்கரத்திலும், தங்கத்தைத் தமது இடக்கரத்திலும் பிடித்து, “இவ்விரண்டும் எனது சமுதாயத்தில் ஆண்களுக்குத்  தடை செய்யப்பட்டதாகும்என்று கூறினார்கள்.  (நூல்: நஸாயீ 5055)

இந்தச் செய்தி, தங்கமும் பட்டும் ஆண்களுக்கு மட்டுமே ஹராம்; பெண்களுக்கு ஹலால் என்ற கருத்தைத் தருகின்றது. இது ஆதாரப்பூர்வமான ஹதீஸாகும்.

இமாம் அல்பானீ அவர்கள் உட்பட, “பெண்கள் தங்கம் அணிவது கூடாது’ என்று கூறுபவர்கள் யாரும் இந்த ஹதீஸை மறுக்கவில்லை. மாறாக இதை ஏற்றுக் கொண்டு இதற்குத் தவறான விளக்கத்தைத் தருகிறார்கள். அந்தத் தவறான விளக்கம் என்ன என்பது பின்னர் விளக்கப்படும்.

ஆதாரம்: 2

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்: யமன் நாட்டைச் சார்ந்த ஒரு பெண்மனி தனது மகளுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அவரது மகளின் கையில் தங்கத்தால் ஆன தடிமனான இரு காப்புகள் இருந்தன. நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், “இதற்குரிய ஸகாத்தை நீ கொடுத்துவிட்டாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண் இல்லை என்று கூறினார். “இவ்விரண்டு காப்புகளுக்குப் பதிலாக மறுமை நாளில் நெருப்பால் ஆன இரு காப்புகளை அல்லாஹ் உனக்கு அணிவிப்பது உனக்கு மகிழ்ச்சியூட்டுமா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். உடனே அப்பெண் அவ்விரண்டு காப்புகளையும் கழற்றி நபி (ஸல்) அவர்களிடம் கொடுத்துவிட்டு “இவ்விரண்டும் சங்கையும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்விற்கு உரியதாகும். மேலும் அவனது தூதருக்கும் உரியதாகும்என்று கூறினார்.  (நூல்: நஸயீ 2434)

இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானதாகும். இமாம் அல்பானீ அவர்களும் தங்கம் விஷயத்தில் இவரது கருத்தை ஏற்றவர்களும் இந்த ஹதீஸைக் குறை காணவில்லை. மாறாக ஏற்றுக் கொள்கின்றனர்.

பெண்கள் தங்கம் அணிவது கூடாதென்றால் அச்செயலை நபி (ஸல்) அவர்கள் தம் கண் முன்னே காணும் வேளையில் அதைக் கண்டிக்காமல் விட்டுவிட்டு “ஸகாத் கொடுத்து விட்டாயா?’ என்று கேட்க மாட்டார்கள்.

பெண்கள் தங்கம் அணிவதில் அவர்களுக்கு ஆட்சேபணை இல்லாத காரணத்தால் அதைப் பற்றிக் கண்டிக்காமல் அதை ஆமோதித்து விட்டு, ஸகாத் கொடுத்து விட்டாயா? என்ற கேள்வியைக் கேட்கிறார்கள்.

பெண்கள் தங்கத்தை அணியக் கூடாதென்றால் அதையே நபி (ஸல்) அவர்கள் கண்டித்திருப்பார்கள். எனவே பெண்கள் தங்களது ஆபரணங்களுக்குரிய ஸகாத்தைக் கொடுத்து விட்டால் அவற்றை அணிவதில் தவறில்லை என்பதற்கு இந்தச் செய்தி ஆதாரமாகத் திகழ்கிறது.

ஆதாரம்: 3

நஜ்ஜாஷி அவர்களிடமிருந்து நபி (ஸல்) அவர்களுக்குச் சில ஆபரணங்கள் வந்தன. அவற்றை நஜ்ஜாஷி நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தார். அவற்றில் அபிசீனிய நாட்டுக் கல் பதிக்கப்பட்ட தங்க மோதிரம் ஒன்று இருந்தது. அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வெறுத்து) புறக்கணித்த நிலையில் ஒரு குச்சியால் அல்லது தமது விரலால் அதை எடுத்தார்கள். பிறகு தமது பேத்தியும் அபுல் ஆஸ் அவர்களின் மகளுமான உமாமா (ரலி) அவர்களை அழைத்து, “என்னருமை மகளே, இதை நீ அணிந்து கொள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: அபூதாவூத் 3697

தங்க மோதிரத்தை நபி (ஸல்) அவர்கள் வெறுத்துள்ளார்கள். அதே நேரத்தில் தமது பேத்தி உமாமாவுக்கு அவர்களே அதை எடுத்துக் கொடுத்து அதை அணிந்து கொள்ளுமாறு கூறியிருக்கிறார்கள்.

தங்க ஆபரணங்களைப் பெண்கள் அணிவது கூடாதென்றால் தமது பேத்திக்கு இதை நபி (ஸல்) அவர்கள் அனுமதித்திருக்க மாட்டார்கள்.  அதே நேரத்தில் அந்த மோதிரத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வெறுத்து) புறக்கணித்தார்கள் என்று ஹதீஸில் கூறப்பட்டிருப்பதால் ஆண்கள் தங்க மோதிரம் அணிவது புறக்கணிக்கப்பட வேண்டியது என்பதை அறியலாம்.

இன்ஷா அல்லாஹ், அடுத்த இதழில்…