பெண்கள் தங்கம் அணிவதை மார்க்கம் தடை செய்கிறதா?

பெண்கள் தங்கம் அணிவதை மார்க்கம் தடை செய்கிறதா?

பெண்கள் தங்க நகை அணியலாமா? என்ற சர்ச்சை இன்று இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் முன் வைக்கப்பட்டு அது குறித்த வாதங்கள் நடந்து வருகின்றன. இந்தக் கருத்து அவ்வப்போது வரலாற்றில் எடுத்து வைக்கப்படுவதும், இது அபத்தமான வாதம் என்று நிரூபிக்கப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. நவீன தொழில் நுட்ப சாதனங்களின் வசதியால் இலங்கையில் சொல்லப்படும் இக்கருத்து தமிழ் கூறும் அனைவரையும் எளிதில் சென்றடைந்து விடுகிறது. எனவே அதைத் தெளிவுபடுத்தும் அவசியம் நமக்கு ஏற்படுகிறது. பெண்கள் தங்க நகை அணிவது குறித்த விஷயத்தில் இலங்கையைச் சேர்ந்த சிலர் கூறுவது சரிதானா? என்பதை இங்கே தெளிவுபடுத்துகிறோம்.

பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்று இலங்கையில் சிலர் கூறும் கருத்தும் அதை நியாயப்படுத்த எடுத்து வைக்கும் வாதங்களும் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை முன்னரே சிலரால் சொல்லப்பட்டவை தான். அதைத் தான் இலங்கையைச் சேர்ந்த சிலரும் எடுத்து வைக்கின்றனர்.

ஆனால் அவர்கள் இதை நிரூபிக்க எடுத்து வைக்கும் ஆதாரங்களுக்கும் வாதங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதே உண்மையாகும். மேலும் பெண்கள் வளைந்த தங்க நகை அணியக் கூடாது, வளையாத தங்க நகை அணியலாம் என்று வாதிடுவதும் அறியாமையின் உச்ச கட்டமாகும்.

இந்தக் கருத்துடையவர்கள் முஸ்னத் அஹ்மதிலும், நஸயீயிலும் இடம் பெற்ற கீழ்க்காணும் இரண்டு ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு தங்கள் வாதத்தை நிலை நாட்டுகிறார்கள்.

மேற்கண்ட ஹதீஸ்களுக்கு இவர்கள் செய்த தமிழாக்கம் இது தான்.

தவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஹுபைறா என்பவரின் மகள் (ஹிந்த்) அல்லாஹ்வின் தூதரிடத்தில் தங்க மோதிரம் அணிந்தவளாக வந்தாள். அப்பெண்ணின் கையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தட்டி விட்டார்கள். நபிகள் நாயகத்தின் இச்செயலை அப்பெண் பாத்திமா (ரலி) அவர்களிடத்தில் முறையிட்டாள். உடனே பாத்திமா (ரலி) அவர்கள் தான் அணிந்திருந்த தங்க மாலையைக் கழட்டி, “இதனை ஹஸனின் தந்தை (அலீ) அவர்கள் தான் எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்கள்எனக் கூறினார். பாத்திமா (ரலி) அவர்களின் கரத்தில் தங்கமாலை இருக்கும் சமயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். “பாத்திமாவே! முஹம்மதின் மகள் பாத்திமாவின் கரத்தில் நரக நெருப்பினால் ஆன மாலை இருக்கின்றது என மக்கள் பேசிக் கொள்வது உனக்கு மகிழ்ச்சியளிக்கின்றதா?” எனக் கேட்டு விட்டு அங்கு உட்காரமல் திரும்பி விட்டார்கள். உடனே பாத்திமா (ரலி) அவர்கள் அம்மாலையைக் கழட்டி கடையில் விற்று வருமாறு ஆளப்பினார்கள். மாலை விற்றவுடன் அப்பணத்தினால் ஒரு அடிமையை வாங்கிக் கொண்டார்கள். பாத்திமாவின் இச்செயல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்த போது, “நரக நெருப்பை விட்டு பாத்திமாவைக் காப்பாற்றிய அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)

ஆதாரம்: ஸுனனுன் நஸாயீ 5140

ஒரு ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு வாதிடுபவர், தான் கூறுகின்ற அக்கருத்து அந்த ஹதீஸில் உள்ளதா என்பதில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக நடைமுறையில் உள்ளதற்கு மாற்றமாக ஒன்றைச் சொல்லும் போது கூடுதல் கவனம் தேவை. பெண்கள் தங்க நகை அணிவது கூடாது என்று வாதிடும் இலங்கை அறிஞர்களிடம் இந்தப் பொறுப்புணர்வை நாம் காண முடியவில்லை. மேலும் தங்களின் கருத்தை நிலை நாட்டுவதற்கு ஏற்ற வகையில் தமிழாக்கத்திலும் கை வரிசையைக் காட்டியுள்ளனர்.

அடிக்கோடிட்டு நாம் சுட்டிக்காட்டிய இடங்களில் இவர்கள் கைவரிசை காட்டியதால் தான் இவ்வாறு இவர்களால் வாதிட முடிகின்றது.

இந்த ஹதீஸ், தங்க நகை அணிவது பற்றிய ஹதீஸ் அல்ல. ஹுபைராவின் மகளுடைய கையில் மோதிரங்கள் கனமான மோதிரங்கள் இருந்தன என்று தான் மூலத்தில் உள்ளது. இச்சொல் கையில் வைத்திருப்பதையும் குறிக்கும், அணிந்திருப்பதையும் குறிக்கும். “கையில் இருந்தன’ என்று மொழியாக்கம் செய்யாமல் “அணிந்திருந்தனர்’ என்று தமிழாக்கம் செய்து தங்கள் கருத்துக்கு ஏற்ப ஹதீஸை வளைத்துள்ளனர். இந்தச் சொல்லுக்கு இரண்டு விதமான அர்த்தம் செய்ய இடம் இருந்தாலும் இந்த இடத்தில், “கையில் வைத்திருந்தார்கள்’ என்று தான் பொருள் கொள்ள வேண்டும். ஏனெனில் அதைக் கண்டவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தட்டி விட்டனர் என்று கூறப்படுகிறது. கையில் வைத்திருந்தால் தான் தட்டிவிட முடியும். கையில் அணிந்திருந்தால் கழட்ட வேண்டுமே தவிர தட்டி விடுவதில் பயனில்லை. மேலும் பின்னால் நாம் அளிக்கும் விளக்கமும் இந்த அர்த்தம் தான் சரி என்பதைச் சந்தேகமற உறுதிப்படுத்தும்.

அடுத்ததாக இந்தச் செய்தியை ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் ஹுபைராவின் மகள் சொல்கிறார். இதை கேட்ட ஃபாத்திமா (ரலி) அவர்கள் தமது கழுத்தில் இருந்த தங்க மாலையைக் கழட்டி விடுகிறார்கள். அப்போது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வருகிறார்கள். கழுத்தில் தங்க மாலையை அணிந்திருக்கும் போது வரவில்லை. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது என்ன?

“பாத்திமாவே! முஹம்மதின் மகள் பாத்திமாவின் கரத்தில் நரக நெருப்பினால் ஆன மாலை இருக்கின்றது என மக்கள் பேசிக் கொள்வது உனக்கு மகிழ்ச்சியளிக்கின்றதா?” என்று தான் கூறினார்கள். “ஃபாத்திமாவின் கரத்தில்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது மிகவும் கவனிக்கத்தக்கதாகும். மோதிரமாக இருந்தால் கூட கையில் அணிந்திருந்தார்கள் என்று சமாளிக்க முடியும். ஆனால் கழுத்தணியை கையில் அணிய முடியாது. வைத்திருக்கத் தான் முடியும். இந்த ஹதீஸில் இருந்து வாதம் செய்வதாக இருந்தால் தங்க நகையை அறவே வைத்திருக்கவே கூடாது என்று தான் வாதிட முடியும். அதற்குத் தான் இந்த ஹதீஸ் இடம் தருகிறதே தவிர அணியக்கூடாது என்ற கருத்தைத் தரவில்லை.

அடுத்து ஃபாத்திமா (ரலி) அம்மாலையைக் கழற்றி விற்று விடச் சொன்னார்கள் என்பதும் இவர்களின் கைச்சரக்காகும்.

ஏற்கனவே அவர்கள் கழற்றி விட்டார்கள் எனும் போது மீண்டும் ஏன் கழற்ற வேண்டும் என்ற சிந்தனையும் இவர்களுக்கு இல்லை. மூலத்தில் இப்படிக் கூறப்படவே இல்லை என்பதும் இவர்களின் கண்களுக்குத் தெரியவில்லை. முதலில் கழற்றியதாகத் தான் மூலத்தில் உள்ளது. இரண்டாம் தடவை கழற்றியதாக இல்லை. ஆனாலும் பெண்கள் தஙக நகை அணியக் கூடாது என்பதை எப்படியாவது நிறுவ வேண்டும் என்பதற்காக இந்த வார்த்தையை நுழைத்து தங்க நகை அணிவது தான் தவறு என்று காட்ட முயற்சித்துள்ளனர்.

தங்க நகையை அணிவது தவறு என்றால் ஃபாத்திமா (ரலி) அதை விற்கத் தேவை இல்லை. அனியாமல் ஒரு சொத்தாக அதை வைத்துக் கொள்ளலாம். தங்கத்தை வைத்துக் கொள்வதே கூடாது என்பதால் தான் அவர்கள் விற்பனை செய்துள்ளார்கள்.

இந்த ஹதீஸ் தங்கத்தை வைத்துக் கொள்ளவே கூடாது என்று தான் கூறுகிறதே தவிர அணிவதைப் பற்றிப் பேசவே இல்லை.

எனவே இவர்கள் எடுத்து வைக்கும் இந்த ஹதீஸுக்கும் பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

எனவே தங்கத்தை வைத்திருந்தால் நரகம். அதை விற்று நற்காரியங்களுக்கு செலவு செய்து விட்டால் நரகத்திலிருந்து தப்பிக்கலாம் என்ற கருத்தையே இந்தச் செய்தி அழுத்தமாகக் கூறிக் கொண்டிருக்கிறது.

தங்கத்தை வைத்திருக்கவே கூடாதா என்றால் இந்த ஹதீஸின் கருத்து இது தான். ஆனால் ஆரம்ப காலத்தில் இவ்வாறு சட்டம் இருந்து பின்னர் மாற்றப்பட்டு விட்டது.

மாற்றப்பட்ட சட்டம்

அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டுஎன்று எச்சரிப்பீராக! அவை அந்நாளில் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, அதனால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். இதுவே உங்களுக்காக நீங்கள் சேகரித்தது. எனவே நீங்கள் சேகரித்தவற்றை அனுபவியுங்கள்!” (என்று கூறப்படும்)

அல்குர்ஆன் 9:34

இந்த வசனம் தங்கத்தையும், வெள்ளியையும் சேமித்து வைக்கக் கூடாது என்ற கருத்தைத் தருகின்றது. இதை மட்டும் வைத்து ஒருவர் முடிவெடுப்பாராயின் பொருளாதாரத்தைச் சேமிப்பது கூடாது என்ற முடிவுக்கே வருவார். மேற்கண்ட ஹதீஸும் இதே கருத்தையே தருகின்றது.

ஆனால் இவ்வசனம் கூறும் இந்தச் சட்டம் ஸகாத் கடமையாக்கப் படுவதற்கு முன்னால் இருந்தது. ஸகாத் கடமையாக்கப்பட்ட பிறகு இச்சட்டம் மாற்றப்பட்டு பொருளுக்குரிய ஸகாத்தைக் கொடுத்துவிட்டால் அதைச் சேமிப்பது தவறில்லை என்று அனுமதி தரப்பட்டது. இதைப் பின்வரும் ஆதாரங்கள் தெளிவுபடுத்துகின்றன.

காலித் பின் அஸ்லம் கூறுகிறார்:

நாங்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் வெளியில் புறப்பட்டோம். அப்போது ஒரு கிராமவாசி, யார் பொன்னையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ…என்ற வசனத்தைப் பற்றி எனக்கு அறிவியுங்கள் எனக் கூறினார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “யார் அவற்றைப் பதுக்கி வைத்து அதற்கான ஸகாத்தைக் கொடுக்காமலிருக்கின்றாரோ அவருக்குக் கேடு தான். இவ்வசனம் ஸகாத் கடமையாக்கப்படுவதற்கு முன்புள்ளதாகும். ஸகாத் பற்றிய வசனம் அருளப்பட்டதும் செல்வங்களைப் சுத்தீகரிக்கக் கூடியதாக ஸகாத்தை அல்லாஹ் ஆக்கி விட்டான்என்றார்கள்.

நூல்: புகாரி 1404

நபித்தோழர்களின் கருத்து மார்க்க ஆதாரமாகாது என்ற அடிப்படைக்கு இது முரணானது என்று நினைக்கக் கூடாது. ஒரு வசனம் எப்போது அருளப்பட்டது என்பதை நபித்தோழர்கள் தான் கூற முடியும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு என்று எச்சரிப்பீராக! (9:34) இந்த வசனம் இறங்கிய உடன் இது முஸ்லிம்களுக்குப் பெரும் பிரச்சனையாகி விட்டது.

உங்கள் பிரச்சனையை நான் அகற்றுகிறேன்என்று கூறி உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “இறைத் தூதர் அவர்களே! இவ்வசனம் உங்கள் தோழர்களுக்குப் பெரும் பிரச்சனையாகி விட்டதுஎன்று கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் “உங்கள் செல்வங்களில் எஞ்சி இருப்பதைத் தூய்மைப்படுத்துவதற்காகவே தவிர அல்லாஹ் ஸகாத்தைக் கடமையாக்கவில்லை. உங்களுக்குப் பின் வருபவர்களுக்கு செல்வம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான் வாரிசுரிமை சட்டத்தையே அல்லாஹ் கடமையாக்கி இருக்கிறான். (எனவே ஸகாத் கொடுத்துவிட்டால் தங்கம் வெள்ளியைச் சேர்ப்பது குற்றமில்லை)என்று கூறினார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள், “இறைவன் மிகப் பெரியவன்என்று கூறினார்கள்.

நூல்: அபூதாவூத் 1417

எனவே மேற்கண்ட ஃபாத்திமா (ரலி) அவர்கள் சம்பந்தப்பட்ட செய்தியில் கூறப்பட்ட சட்டம் மாற்றப்பட்டு விட்டது என்பதை உணரலாம்.

வளரும் இன்ஷா அல்லாஹ்