பெண்கள் தங்கம் ஆணியத் தடையா? – 3

தொடர்: 3

பெண்கள் தங்கம் ஆணியத் தடையா?

பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்று கூறுவோர் பொதுவாக பலவீனமான ஹதீஸ்களையும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் கலந்து ஆதாரமாக எடுத்து வைப்பது வழக்கம். ஆனால் இலங்கையில் இப்பிரச்சனையைக் கிளப்பியவர்கள் இரண்டு ஹதீஸ்களை மட்டுமே எடுத்து வைத்துள்ளனர். அந்த இரண்டு ஹதீஸ்களில் ஒரு ஹதீஸைப் பற்றி சென்ற தொடரில் விளக்கியுள்ளோம். அந்த ஹதீஸ் தங்கத்தை அணிவது பற்றி நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேசவில்லை என்பதால் அது இவர்களின் வாதத்துக்கு ஆதாரமாகாது என்பதைத் தெளிவுபடுத்தினோம். அடுத்ததாக அவர்கள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

தான் நேசிக்கின்றவளுக்கு (மனைவி, சகோதரி, தாய், உறவு முறைப்பெண் ஆகியோருக்கு) நரக நெருப்பினால் ஒரு வளையத்தை யார் அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்கத்தினால் ஒரு வளையலை அவளுக்கு அணிவிக்கட்டும். தான் நேசிக்கின்றவளுக்கு நரக நெருப்பினால் ஒரு கழுத்தணியை யார் அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்க மாலையை அவளுக்கு அணிவிக்கட்டும். தான் நேசிக்கின்றவளுக்கு நரக நெருப்பினால் காப்பு அணிவிக்க யார் விரும்புகின்றாரோ அவர் தங்கக் காப்பை அணிவித்துக் கொள்ளட்டும். என்றாலும் வெள்ளியை உங்களுக்கு நான் ஏவுகின்றேன். அவற்றை தாராளமாகப் பயன்படுத்துங்கள்!என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூற்கள்: முஸ்னத் அஹ்மத், ஸுனன் அபீதாவூத் 4236

இது தான் அவர்கள் எடுத்துக் காட்டும் இரண்டாவது ஹதீஸாகும்.

மேற்கண்ட ஹதீஸுக்கு அவர்கள் செய்துள்ள அர்த்தத்தைத் தான் நாம் அப்படியே மேலே வெளியிட்டுள்ளோம்.

முதல் ஹதீஸில் தங்கள் கைச் சரக்கைச் சேர்த்து எப்படி வாதிட்டார்களோ அது போல் இந்த ஹதீஸிலும் தாங்கள் என்ன வாதிடுகிறார்களோ அதற்கு ஏற்றவாறு ஹதீஸை வளைத்திருக்கிறார்கள்.

அதாவது அடிக்கோடிட்ட இடங்களில் பெண்பாலாகக் குறிப்பிட்டுள்ளனர். அதை உறுதிப்படுத்தும் விதமாக அடைப்புக் குறிக்குள் (மனைவி, சகோதரி, தாய், உறவு முறைப்பெண்) என்று கூறி தங்களின் கருத்தைத் திணித்துள்ளனர்.

“நேசிக்கின்றவளுக்கு’ என்று மொழி பெயர்த்த இடத்தில் அரபு முலத்தில் ஹபீப் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹபீப், ரஹீம், ரஷீத், அலீம் என்ற வடிவமைப்பைக் கொண்டுள்ள சொற்கள் ஆண்பாலாகவும் பயன்படுத்தப்படும்; பெண்பாலாகவும் பயன்படுத்தப்படும் என்று காரணம் கூறி இதன் காரணமாகத் தாங்கள் பெண்பாலாக அர்த்தம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்கள் கூறியதை அப்படியே தருகிறோம்.

மேற்படி நபிமொழியில் ஹபீப் எனும் அறபு வார்த்தை நேசிக்கப்படும் ஆண் அல்லது சிறுவர்களைத் தான் குறிக்கும் என வாதிடுவது தவறானதாகும். காரணம் ஃபயீல் எனும் அமைப்பில் அமைந்திருக்கும் பெயர்ச்சொல் மாதிரிகள் ஆண், பெண் இரு பாலருக்கும் பொதுவாகவே அறபு இலக்கணத்தில் பயன்படுத்தப்படும்.

பொதுவாக ஹபீப் என்ற வார்த்தைக்கு நேசத்திற்குரிய ஆண் என்று மாத்திரம் அர்த்தம் இருந்தால் உங்கள் வாதப்படி அது நியாயமானதாகும். ஆனால் அறபு மொழி விதியின் பிரகாரம் இவ்வாறான வார்த்தைகளுக்கு நேசத்திற்குரிய ஆண் என்றும் மொழி பெயர்க்கலாம்; நேசத்திற்குரிய பெண் என்றும் மொழி பெயர்க்கலாம். இரண்டு அர்த்தங்களைக் கொண்டிருக்கும் போது அது நேசத்திற்குரிய பெண் என்பதைத் தான் குறிக்கின்றது என்று நாம் கூறுவதற்கு பிரதானமாக இரண்டு காரணிகளைக் கூற முடியும்.

இவ்வாறு கூறி தாங்கள் செய்த அர்த்தத்தை நியாயப்படுத்துகிறார்கள்.

இவர்களின் இந்த வாதம் அரபு இலக்கணத்தை அரைகுறையாக விளங்கியதால் ஏற்பட்டதாகும்.

இது பற்றி அரபு இலக்கணம் கூறுவது என்ன?

பொதுவாக, அரபு மொழியில் உள்ள சொற்களை ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனியாகக் கூற வேண்டும். உதாரணமாக ஆலிம் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். தமிழில் அறிஞன் என்று பொருள் கொண்டாலும் அரபியில் அவ்வாறு கூற முடியாது. ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி சொல்லமைப்பைப் பயன்படுத்த வேண்டும் ஆண் ஆலிம் என்றும், பெண் ஆலிமா என்றும் கூற வேண்டும்.

ஹபீப் என்ற சொல்லமைப்பு மட்டும் இதிலிருந்து வேறுபட்டதாகும். இது போன்ற வடிவமைப்பில் உள்ள சொற்களுடன் பெண்ணைக் குறிக்கும் சொல்லைச் சேர்த்துக் கூறினால் அதற்கேற்ப ஹபீபா என்று பெண்பாலாக இச்சொல்லை மாற்ற வேண்டியதில்லை. ஆணுக்குப் பயன்படுத்தும் ஹபீப் என்ற சொல்லையே பெண்ணுக்கும் கூறலாம்.

அதாவது ஆண் ஹபீப், பெண் ஹபீப் என்று கூறலாம்.

ஆனால் பெண்ணைக் குறிக்கும் வார்த்தையைச் சேர்க்காமல் வெறும் ஹபீப் என்று மட்டும் கூறினால் ஆணைக் குறிப்பிடுகிறோமா பெண்ணைக் குறிக்கிறோமா என்ற குழப்பம் ஏற்படும். இது போன்ற இடங்களில் நாம் பெண்ணைத் தான் குறிக்கிறோம் என்றால் ஹபீபா என்று பெண்பாலாக மாற்றித் தான் பயன்படுத்த் வேண்டும்.

நான் எனது ஹபீபை (நேசரை) பார்த்தேன் என்று கூறினால் இதில் பெண்ணைக் குறிக்கும் எந்த வார்த்தையும் சேர்க்கப்படவில்லை. இதற்கு ஆண் என்று மட்டுமே அர்த்தம்.

பெண் ஹபீபைப் பார்த்தேன் என்று கூறினால் ஹபீப் எனும் சொல் ஆண்பால் வடிவில் இருந்தாலும் அதைப் பெண்பாலாகக் கருத வேண்டும். இது தான் அரபு இலக்கணத்தில் கூறப்பட்டுள்ளது.

இதற்கான ஆதாரங்கள் வருமாறு:

“ஒரு கதீல் (கொல்லப்பட்டவன்; கொல்லப்பட்டவள்)ஐ நான் கடந்து சென்றேன்’ என்று கூறினால் ஆணைக் குறிப்பிடுகிறோமா பெண்ணைக் குறிப்பிடுகிறோமா என்று கூறப்படாததால் கேட்பவருக்குக் குழப்பம் ஏற்படும். பெண்ணைக் குறிப்பது தான் நமது நோக்கம் என்றால் கதீல் என்று கூறாமல் கதீலா என்று பெண்பாலாக மாற்றிக் கூற வேண்டும்.

இந்த இலக்கண விதியின் படி மேற்கண்ட ஹதீஸை அணுகினால் இவர்கள் செய்த அர்த்தம் தவறு என்பது நிரூபணமாகும்.

இந்த ஹதீஸில் ஹபீப் என்ற சொல் பெண்ணைக் குறிக்கும் எந்த வார்த்தையும் சேர்க்கப்படாமல் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு பயன்படுத்தப்பட்டால் பெண் என்று அர்த்தம் செய்ய இலக்கணத்தில் இடமில்லை. ஆண் என்ற ஒரு பொருள் மட்டுமே இந்த இடத்தில் கொடுக்க முடியும்.

இதன் படி இந்த ஹதீஸின் பொருள் இது தான்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: தனது பிரியமானவனுக்கு நெருப்பால் ஆன வளையத்தை ஒருவர் அணிவிக்க விரும்பினால் அவர் தங்கத்தால் ஆன வளையத்தை அவனுக்கு அணிவிக்கட்டும். தனது பிரியமானவனுக்கு நெருப்பால் ஆன மாலையை அணிவிக்க விரும்பினால் அவர் தங்கத்தால் ஆன மாலையை அவனுக்கு அணிவிக்கட்டும். தனது பிரியமானவனுக்கு நெருப்பால் ஆன காப்பை அணிவிக்க விரும்பினால் அவர் தங்கத்தால் ஆன காப்பை அவனுக்கு அணிவிக்கட்டும். எனவே வெள்ளியை உபயோகித்து அதன் மூலம் (ஆபரணங்களை செய்து) விளையாடுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: அபூதாவூத் 3698

மேலும் இந்த ஹதீஸில் கூறப்பட்ட வாசகங்கள் அனைத்தும் ஆண்பாலாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.

அவனுக்கு என்று மொழியாக்கம் செய்த இடங்கள் அனைத்திலும் ஹா என்ற பெண்பால் பயன்படுத்தப்படாமல் ஹு என்ற (அவனுக்கு) ஆண்பால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அது போல் உங்களுக்கு என்று மொழிபெயர்க்கப்பட்ட இடத்தில் ஆணைக் குறிக்கும் “கும்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெண்ணைக் குறிக்கும் “குன்ன’ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.

“பயன்படுத்துங்கள்’ என்ற சொல் அமைப்பும் ஆண்பால் முன்னிலை பன்மையாகத் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனவே இந்த ஹதீஸ் பெண்கள் பற்றியே பேசவில்லை.

ஆண்கள் தங்க நகை அணியக் கூடாது; வெள்ளி நகை அணியலாம் என்பதைத் தவிர இதற்கு வேறு அர்த்தம் இல்லை.

ஆண்கள் தங்க நகை அணிவதற்குத் தடை விதிக்கும் பல ஹதீஸ்கள் உள்ளன. அதைத் தான் இந்த ஹதீஸும் சொல்கிறது.

(ஆண்கள் தங்க நகை அணியக் கூடாது என்ற ஹதீஸ் சரியானது என்று இவர்களே குறிப்பிட்டிருப்பதால் அதை இங்கே எடுத்துக் காட்ட அவசியம் இல்லை.)

அரபு இலக்கனத்துக்கு மாற்றமாகப் பொருள் செய்து விட்டு, அதை இன்னொரு வகையிலும் இவர்கள் நியாயப்படுத்துகின்றனர்.

அது ஆணைத் தான் குறிக்கின்றது என்றால் ஆண்களுக்குத் தங்கம் ஏற்கனவே தடைசெய்யப்பட்டு விட்டது. தடை செய்யப்பட்டு விட்டதன் பின்னால் அல்லாஹ்வின் தூதர் மீண்டும் அதனைக் கூறினால் அவ்வார்த்தைக்கு அர்த்தம் இல்லாமல் போய் விடுகின்றது.

இதுவும் அறியாமையின் காரணமாக எடுத்து வைக்கப்படும் வாதமாகும்.

தொழுகையை நிலை நாட்டுங்கள் என்று ஒரு தடவை கூறி விட்டதால் இன்னொரு தடவை அதைக் கூறுவது அர்த்தமற்றது என்று சொல்வார்களா? ஒரு விஷயம் ஐம்பதுக்கு மேற்பட்ட வார்த்தைகளில் ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளன. 49 தடவை கூறியது அர்த்தமற்றது என்பார்களா? ஒரு வாக்கியத்தில் ஒரு நேரத்தில் இவ்வாறு பயன்படுத்தப்படும் போது இரண்டு அர்த்தத்துக்கு இடம் இருந்தால் அவ்வாறு கூறுவதில் அர்த்தம் இருக்கும்.

இவர்கள் கூறுவது போல் பொருள் கொள்ள இலக்கணத்தில் இடமில்லை. மேலும் தங்கத்தை அனுமதிக்கும் மற்ற ஹதீஸ்கள் இந்த ஹதீஸின் ஒரு பகுதி அல்ல. எனவே இவர்கள் கூறும் இந்தக் காரணமும் அர்த்தமற்றதாகும்.

அடுத்து இன்னொரு காரணத்தையும் முன் வைக்கிறார்கள்.

அது பெண்களைத் தான் குறிக்கின்றது என்பதற்கு ஆதாரமாக இன்னுமொரு அறிவிப்பு முஸ்னத் அஹ்மத் என்ற கிரந்தத்தில் வருகின்றது. அந்த அறிவிப்பில், தான் நேசிக்கின்றவளுக்கு என்று இடம் பெற்றுள்ளது. அந்த அறிவிப்பையும் சிலர் பலவீனப்படுத்த முயற்சிக்கலாம். அதனால் அது பற்றிய விவரங்களையும் நாம் தருகின்றோம்.

இந்த அறிவிப்பில் இடம்பெறும் அறிவிப்பாளரான அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹிப்னு தீனார் என்பவர் இடம் பெறுகிறார். இவரைப் பற்றிக் கூறப்படும் கருத்துக்களைப் பார்ப்போம்.

இமாம் யஹ்யா பின் மயீன்: என்னிடத்தில் இவரது ஹதீதில் சற்று பலவீனம் உண்டு.

இமாம் இப்னு ஹஜர்: தவறிழைக்கும் சாதாரண நம்பகத்தன்மை கொண்டவர்.

இமாம் அபுஹாதம்: இவரது ஹதீத் எழுதப்படும். அவரை ஆதாரம் பிடிக்கப்பட மாட்டாது.

இப்னு அதீ: இவர் அறிவிப்பவற்றில் மறுக்கப்பட வேண்டிய சிலதும் உண்டு. மேலும், இவர் அறிவிப்பவற்றை வழி மொழியும் துணை ஆதாரமும் கிடையாது. ஆக மொத்தத்தில் இவரது ஹதீத் எழுதப்படும்.

இவை அனைத்தும் இவர் பற்றி கூறப்பட்ட சில குற்றச்சாட்டுக்கள்

இவர் பற்றி கூறப்பட்ட நல்ல கருத்துக்கள்:

இமாம் பகவீ: இவர் ஹதீதில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்குத் தகுதியானவர்.

இமாம் அலீ பின் மத்யனீ: இவர் சாதாரண நம்பகத்தன்மை கொண்டவர்.

இமாம் ஹர்பீ: ஏனையோர் இவரை விட அதிக நம்பகத்தன்மை வாய்ந்தவர்கள்.

மேலே நாம் சுட்டிக் காட்டியுள்ள விமர்சனங்களையும் நியாயங்களையும் நோக்கும் போது இந்த அறிவிப்பாளருடைய குறை ஹதீதினை பலவீனப்படுத்துமளவிற்குக் கிடையாது. இவரை விட ஏனையோர் அதிக நம்பகத்தன்மை வாய்ந்தவர் என்று இமாம் ஹர்பீ கூறிய கூற்றிலிருந்தே இவர் சாதாரண நம்பகத்தன்மை கொண்டவர் என்பது தெளிவாக விளங்குகின்றது.

இது போன்ற தரத்தில் உள்ள அறிவிப்பாளர்கள் பலவீனமானவர்கள் என்பது இந்த ஹதீஸை மேற்கோளாகக் காட்டும் இவர்களுக்கே தெரிகிறது. இதனால் தான் இதை முதன்மை ஆதாரமாகக் காட்டாமல் வலுப்படுத்தும் துணை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

இவர்கள் கூறுகின்ற படி இந்த அறிவிப்பாளர் ஓரளவு நம்பிக்கையாளர் என்று வைத்துக் கொண்டாலும் இந்த அறிவிப்பு பலவீனமானது என்பது உறுதியாகிவிடும்.

ஏனெனில் இவரை விட நம்பகமானவர் அறிவிக்கும் அறிவிப்பில் ஹபீப் என்று ஆணைக் குறிக்கும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவர் மட்டும் பெண்ணைக் குறிக்கும் ஹபீபா என்ற சொல்லைக் கூறுகிறார். எனவே நம்பகமான அறிவிப்பாளருக்கு மாற்றமாக இவர் அறிவித்திருக்கும் போது இவரது அறிவிப்பு நிற்காது.

எனவே பெண்கள் தங்க நகை அணியலாம் என்பதற்குத் தெளிவான அனுமதி அளிக்கும் ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அதைத் தடை செய்யும் வகையில் ஏற்கத்தக்க எந்த ஆதாரமும் இல்லை.

அடுத்து இன்னொரு தத்துவத்தையும் இவர்கள் கூறுகிறார்கள்.

எமது இஸ்லாமிய சமுதாய மக்களில் பலர் அறியாத, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்த ஒரு விடயம்தான் பெண்கள் வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் அணிவது ஹராம் என்பதாகும்.

இஸ்லாத்தின் பார்வையில் காப்பு, மாலை உள்ளடங்கலாக வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் அணிவது ஹராமாகும். மாறாக, வளையல் அல்லாத தங்க நகைகளை தாராளமாக அணிந்து கொள்ளலாம்.

என்பது இவர்களின் அந்தத் தத்துவமாகும்.

எனது சமுதாயத்தில் தங்கம் பெண்களுக்கு ஹலால் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். தங்கம் என்பது ஒரு உலோகத்தின் பெயரே தவிர ஒரு வடிவத்தின் பெயர் அல்ல; அது எந்த வடிவமாக இருந்தாலும் பிரச்சனையில்லை என்பதே இதிலிருந்து நமக்கு விளங்குகிறது.

யமன் நாட்டைச் சார்ந்த பெண்மணி தனது மகளுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்த போது அவரது மகளின் கையில் தடிமனான இரண்டு தங்கக் காப்புகள் இருந்தன. இக்காப்புகள் வட்ட வடிவமானவை. வட்ட வடிவத்தில் தங்கம் அணிவது கூடாதென்றால் அதை நபி (ஸல்) அவர்கள் தடுத்திருப்பார்கள். வட்டமாக இருப்பதைக் கண்ணால் நபி (ஸல்) அவர்கள் கண்ட பிறகும் அதை அணியக் கூடாது என்று அவர்கள் தடுக்காமல் இருந்திருக்கும் போது அதை நாம் தடுப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை.

பெண்கள் வட்ட வடிவத்தில் தங்கம் அணியக் கூடாதென்றால் வட்ட வடிவத்தில் இருந்த தங்க மோதிரத்தை தனது பேத்திக்கு நபி (ஸல்) அவர்கள் கொடுத்திருக்க மாட்டார்கள். அவர்கள் அதை எடுத்துக் கொடுத்திருப்பது தங்கம் முழுவதும் பெண்களுக்கு ஹலால் தான்; இதில் வடிவம் ஒரு பிரச்சனையில்லை என்பதையே காட்டுகிறது.

ஏன்? இவர்கள் வைக்கும் ஹதீஸிலும் தங்கத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்லப்பட்ட பிறகு அதற்கு மாற்று வழியாக வெள்ளியை உபயோகித்துக் கொள்ளுங்கள் என்றே கூறப்படுகிறது.

இவர்கள் கூறுவது போல் வட்டமில்லாத தங்கத்தைப் பெண்கள் அணியலாம் என்றால் அது கூறப்பட வேண்டிய இடம் இது தான். வட்டமில்லாத தங்க நகையை அணிந்து விளையாடுங்கள் என்று சொல்லாமல் வெள்ளியில் விளையாடுங்கள் என்று கூறி இருப்பார்கள்.

மேலும் வடிவம் தான் பிரச்சனை என்றால் கடந்த இதழில் நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸில் தங்க மாலையை வேறு வடிவமாக மாற்றுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மகளுக்குக் கூறி இருப்பார்கள்.

இவர்கள் கூறுகின்ற இவ்விளக்கத்தைக் கவனிக்கும் போது இது அறிவற்ற வாதம் என்பதை உணரலாம். வட்ட வடிவத்தில் உள்ள தங்கம் கூடாது. மற்ற வடிவத்தில் உள்ள தங்கம் கூடும் என்று கூறினால் தங்கம் ஆகுமானது தான். வடிவம் ஆகுமானதல்ல என்ற கருத்து வருகிறது. எனவே வடிவம் தான் இவர்களுக்குப் பிரச்சனையாக இருக்கிறது.

தங்கத்தில் இவர்கள் தடை செய்கின்ற வடிவம் வெள்ளியில் இருந்தால் அதை இவர்கள் அனுமதிக்கிறார்கள். தடை செய்வதில்லை. இந்தத் தடுமாற்றம் ஹலால், ஹராம் சம்பந்தமான விஷயத்தில் வந்திருப்பது நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.