பைத்தியம் பலவிதம் தொடர்: 3
பின்புறம் நடப்பதை பெருமானார் அறிவார்களா?
நபி (ஸல்) அவர்கள் மனிதப் படைப்பல்ல. ஒளிப் படைப்பு என்று பரேலவிகள் நீண்ட காலமாக உளறி வருகின்றனர். அதற்கு அவர்கள் வைக்கின்ற உருப்படாத ஆதாரங்களில் ஒன்று, நபி (ஸல்) அவர்களின் தொடர் நோன்பு குறித்த ஹதீஸாகும்.
நாம் நோன்பு வைக்கின்ற போது ஸஹரில் உணவு சாப்பிடுவோம்; மாலையில் நோன்பு துறப்போம். ஆனால் நபி (ஸல்) அவர்கள் ஸஹர் சாப்பிடாமலும் நோன்பு துறக்காமலும் சில நாட்கள் நோன்பைத் தொடர்வார்கள். இதே போன்று நபித்தோழர்களும் தொடர் நோன்பு பிடிக்க ஆரம்பித்த போது, நபி (ஸல்) அவர்கள் அதைத் தடை செய்து விட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தொடர் நோன்பைத் தடுத்தார்கள். மக்கள், “நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே?’ என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உங்களைப் போன்றவன் அல்லன்; நிச்சயமாக நான் உண்ணவும் பருகவும் வழங்கப்படுகிறேன்” என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1962, 1922, 1961
இந்த ஹதீஸில், “நான் உங்களைப் போன்றவன் அல்லன்’ என்று வருகின்ற வார்த்தைகளை வைத்துக் கொண்டு, “பாருங்கள்! நபி (ஸல்) அவர்கள் நம்மைப் போன்றவர்களா?’ என்று கேள்வி எழுப்புகின்றனர்.
நபி (ஸல்) அவர்கள் ஓர் ஒளிப் படைப்பு என்பதற்கு இதைச் சான்றாகக் காட்டுகின்றனர். நபி (ஸல்) அவர்கள் ஒளிமயம் என்று வாதிடுகின்ற இவர்களின் அறிவு சூன்யமயம் இங்கு தெளிவாகப் பளிச்சிடுகின்றது.
நான் உங்களைப் போன்றவன் அல்லன் என்ற இந்த ஹதீஸின் முதல் பகுதியை மட்டும் தங்களுக்குச் சாதகமாக்கி எடுத்துக் கொள்கின்றார்கள். அதன் பிற்பகுதியை வேண்டுமென்றே கண்டுகொள்ள மறுக்கின்றார்கள்.
இந்த ஹதீஸின் பிற்பகுதியில், அல்லாஹ்விடமிருந்து எனக்கு உணவும் பானமும் அளிக்கப்படுகின்றது; அதாவது, “நான் சாப்பிடுகின்றேன், தண்ணீர் குடிக்கின்றேன்; அது உங்களுக்குத் தெரியாது’ எனற கருத்தில் இடம் பெறும் பிற்பகுதியை இவர்கள் பார்ப்பது கிடையாது.
எதையும் சாப்பிடாமல் பருகாமல் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்கவில்லை. மாறாக, தமக்கு அல்லாஹ்விடமிருந்து யாரும் அறியாத விதத்தில் உணவும் நீரும் கிடைக்கின்றது, அதை உண்டும் பருகியும் தான் இந்தத் தொடர் நோன்பைத் தம்மால் நோற்க முடிகின்றது.
இதுபோன்ற மறைமுகமான உணவும் நீரும் உங்களில் யாருக்கும் கிடைக்காது. அந்த அடிப்படையில் என்னைப் போன்று உங்களில் யாரும் கிடையாது என்று தான் நபி (ஸல்) அவர்கள் தெரிவிக்கின்றார்களே தவிர, பசியே இல்லாத, தாகமே இல்லாத ஒளியினால் படைக்கப்பட்ட மலக்கு வகையினர் என்று தெரிவிக்கவில்லை.
ஆனால் இந்தக் கோணல் புத்திக்காரர்கள் இதன் மூலம் நபி (ஸல்) அவர்கள் சாதாரண மனிதரல்ல. மலக்கு என்று நிலைநாட்ட முயல்கின்றார்கள். ஒளிக்கு ஏது பசி? அதற்கு எதற்கு உணவு? ஒளிக்கு ஏது தாகம்? அதைத் தீர்ப்பதற்கு எதற்காகத் தண்ணீர் என்பதை உணர மறுக்கின்றனர்.
நபி (ஸல்) அவர்கள் மனிதர் என்ற வட்டத்தை விட்டுத் தாண்டவில்லை என்பதைத் தான் இந்த ஹதீஸ் தெளிவாக, ஆணித்தரமாகத் தெரிவிக்கின்றது.
நபி (ஸல்) அவர்கள் மனிதப் படைப்பு அல்ல என்பது இவர்களாக ஏற்கனவே எடுத்துக் கொண்ட முடிவு. இது இவர்களது மனோ இச்சை. இதற்குத் தக்க இந்த ஹதீஸை வளைக்கின்றார்கள்.
பரேலவிகள் எடுத்து வைக்கும் அடுத்த ஆதாரம் புகாரியில் வரும் செய்தியாகும்.
(ஒரு நாள்) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை நோக்கித் தம் முகத்தைத் திருப்பி, “வரிசைகளை நேராக்குங்கள்! நெருக்கமாக நில்லுங்கள்! ஏனெனில் என் முதுகுக்குப் பின்புறமாகவும் உங்களை நான் காண்கின்றேன்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 719
நபி (ஸல்) அவர்கள் முன்னால் உள்ளதைப் போன்றே பின்னால் உள்ளதையும் பார்க்கின்றார்கள் என்றால் அவர்களது கண்கள் மனிதக் கண்களல்ல! மலக்குகளின் கண்கள் என்பது இவர்களின் அபத்தமிக்க வாதம்.
இவர்கள் வாதிடுவது போன்று நபி (ஸல்) அவர்கள் தமக்கு முன்னால் இருப்பதைப் பார்ப்பது போன்று பின்னால் இருப்பதையும் பார்த்திருக்கின்றார்களா? என்பதைச் சற்று ஆய்வு செய்வோம்.
நபி (ஸல்) அவர்கள் பின்னால் உள்ளதைப் பார்ப்பது ஒருபுறமிருக்கட்டும். முன்னால் உள்ளதை உள்ளபடி பார்ப்பார்களா? இதோ இந்த ஹதீஸ் தரும் பதிலைப் பார்ப்போம்.
அப்துல்கைஸ் தூதுக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தபோது “இம்மக்கள் யார்?’ அல்லது “இத்தூதுக் குழுவினர் யார்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மக்கள், “(இவர்கள்) ரபீஆ குடும்பத்தினர்” என்றார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் “இழிநிலை காணாத, வருத்தத்திற்குள்ளாகாத சமுதாயமே வருக! உங்கள் வரவு நலவரவாகுக!” என்று (வாழ்த்துக்) கூறினார்கள்.
அத்தூதுக் குழுவினர் “நாங்கள் வெகு தொலைவிலிருந்து உங்களிடம் வந்துள்ளோம். எங்களுக்கும் உங்களுக்குமிடையே (எதிரிகளான) முளர் குலத்து இறை மறுப்பாளர்களின் இந்தக் குடும்பத்தினர் (நாம் சந்திக்க முடியாதபடி தடையாக) உள்ளனர். எனவே, (போர்நிறுத்தம் செய்யப்படும்) புனித மாதங்கள் தவிர மற்ற மாதங் களில் எங்களால் தங்களிடம் வர முடிய வில்லை. எனவே, தெளிவான ஆணையொன் றைப் பிறப்பியுங்கள்! அதை நாங்கள் எங்களுக்குப் பின்னணியில் (இங்கே வராமல்) இருப்பவர்களுக்குத் தெரிவிப்போம். அ(தைச் செயல்படுத்துவ)தன் மூலம் நாங்களும் சொர்க்கம் செல்வோம்” என்று கேட்டுக் கொண்டார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் நான்கை செயல்படுத்துமாறு கட்டளையிட்டார்கள்; நான்கை (கைவிடுமாறு) அவர்களுக்குத் தடைவிதித்தார்கள். வல்லோன் அல்லாஹ் ஒருவனையே நம்புமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டு, “அல்லாஹ் ஒருவனையே நம்புதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் “அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று கூறினர்.
நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதி கூறுவது; தொழுகையை (உரியமுறையில்) நிலை நிறுத்துவது; ஸகாத் கொடுப்பது; ரமளான் மாதம் நோன்பு நோற்பது. மேலும் போரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து ஐந்தில் ஒரு பங்கை (அல்லாஹ்விற்காக) நீங்கள் வழங்கிட வேண்டும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 53, 87, 4368
தம் முன்னால் நேரில் வந்து நிற்கின்ற சமுதாயத்தை எந்தச் சமுதாயம் என்று நபி (ஸல்) அவர்களால் அறிய முடியவில்லை. முன்னால் நிற்பதையே அறிய முடியவில்லை எனும் போது பின்னால் உள்ளதை எப்படி அறிய முடியும்?
நபி (ஸல்) அவர்கள் “அர்ரவ்ஹா‘ எனும் இடத்தில் ஒரு பயணக் குழுவினரைச் சந்தித்தார்கள். அப்போது “இக்கூட்டத்தினர் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் “முஸ்லிம்கள்‘ என்றார்கள். அப்போது அக் குழுவினர், “நீங்கள் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதர்” என்றார்கள். அப்போது (அக்குழுவிலிருந்த) ஒரு பெண், தன் குழந்தையைத் தூக்கி, “இவனுக்கும் ஹஜ் உண்டா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர் கள், “ஆம்; (அதற்காக) உனக்கும் நற்பலன் உண்டு” என விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 2377
இந்த ஹதீஸ் தெரிவிப்பது என்ன? தமக்கு முன்னால் இருந்த ஒரு கூட்டத்தைப் பற்றி, மற்றவர்களிடம் விளக்கம் கேட்டுத் தான் நபி (ஸல்) அவர்கள் அறிந்து கொள்கின்றார்கள்.
பின்னால் உள்ளதை அறிவார்களா?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை, அவர்களது மனைவி ஆயிஷா (ரலி) பின்தொடர்கிறார்கள். ஆனால் அது அவர்களுக்கு அறவே தெரியவில்லை. இதைப் பின்வரும் முஸ்லிம் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.
நபி (ஸல்) அவர்கள் என்னுடன் தங்க வேண்டிய இரவில் (என்னிடம்) வந்தார்கள். தமது மேலாடையை (எடுத்துக் கீழே) வைத்தார்கள்; தம் காலணிகளைக் கழற்றித் தமது கால்மாட்டில் வைத்துவிட்டுத் தமது கீழாடையின் ஓரத்தைப் படுக்கையில் விரித்து அதில் ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். நான் உறங்கிவிட்டேன் என்று அவர்கள் எண்ணும் அளவு பொறுத்திருந்தார்கள். (நான் உறங்கிவிட்டதாக எண்ணியதும்) மெதுவாகத் தமது மேலாடையை எடுத்து (அணிந்து)கொண்டார்கள்; மெதுவாகக் காலணிகளை அணிந்தார்கள்; கதவைத் திறந்து வெளியே சென்று மெதுவாகக் கதவை மூடினார்கள்.
உடனே நான் எனது தலைத் துணியை எடுத்து, தலையில் வைத்து மறைத்துக்கொண்டேன்; கீழாடையை அணிந்துகொண்டு அவர்களைப் பின்தொடர்ந்து நடந்தேன். அவர்கள் “அல்பகீஉ‘ பொது மையவாடிக்குச் சென்று நின்றார்கள்; அங்கு நீண்ட நேரம் நின்றிருந்தார்கள். பிறகு மூன்று முறை கைகளை உயர்த்தினார்கள். பிறகு (வீடு நோக்கித்) திரும்பினார்கள்; நானும் திரும்பினேன். அவர்கள் விரைவாக நடந்தபோது நானும் விரைவாக நடந்தேன். அவர்கள் ஓடிவந்தார்கள்; நானும் (அவ்வாறே) ஓடிவந்தேன்; அவர்களுக்கு முன்னால் (வீட்டுக்கு) வந்து படுத்துக்கொண்டேன். நான் படுத்த சிறிது நேரத்தில் அவர்கள் (வீட்டுக்குள்) வந்து “ஆயிஷ்! உனக்கு என்ன நேர்ந்தது? உனக்கு ஏன் மூச்சு வாங்குகிறது?” என்று கேட்டார்கள். நான் “ஒன்றுமில்லை‘ என்றேன். அதற்கு அவர்கள் “ஒன்று, நீயாகச் சொல்லிவிடு! இல்லாவிட்டால் நுண்ணறிவாளனும் மென்மையானவனுமான அல்லாஹ் எனக்கு அறிவித்துவிடுவான்” என்று கூறினார்கள். நான் “அல்லாஹ்வின் தூதரே, என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்!” என்று கூறிவிட்டு, நடந்ததை அவர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் “ஓ நீதான் எனக்கு முன்னால் நான் கண்ட அந்த உருவமா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்‘ என்றேன். உடனே அவர்கள் என் நெஞ்சில் கையை வைத்துத் தள்ளினார்கள். எனக்கு வலித்தது. பிறகு “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் (உனக்கு) அநீதியிழைத்துவிடுவார்கள் என நீ எண்ணிக் கொண்டாயோ?” என்று கேட்டார்கள். நான் “ஆம்! மனிதர்கள் என்னதான் மறைத்தாலும் அல்லாஹ் அதை அறிந்துவிடுவானே!” என்று கூறினேன். (ஹதீஸின் ஒரு பகுதி)
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம்
நபி (ஸல்) அவர்கள் வீட்டிற்கு வந்த பின்னர், ஆயிஷா (ரலி) அவர்களின் மூச்சிறைப்பை வைத்துத் தான் அவர்கள் தொடர்ந்ததைக் கண்டுபிடிக்க முடிந்ததே தவிர வேறு வழியில் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதைத் தெளிவாக விளங்க முடிகின்றது.
நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நடப்பது எதுவும் தெரியாது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.
நபி (ஸல்) தமக்குப் பின்னால் நடப்பதையும் பார்க்கிறார்கள் என்பதற்குத் தொழுகை தொடர்பான ஹதீஸை இவர்கள் ஆதாரமாகக் காட்டுகின்றார்கள். இதற்கு நேர் எதிரான ஆதாரம் கொண்ட தொழுகை தொடர்பான ஹதீஸை இவர்கள் பார்க்கத் தவறி விட்டனர்.
நாங்கள் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றித்)தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தியபோது “சமி அல்லாஹு லிமன் ஹமிதஹ்‘ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) எனக் கூறினார்கள். அவர்களுக்குப் பின்னாலிருந்த ஒரு மனிதர் “ரப்பனா வல(க்)கல் ஹம்து. ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹீ” “எங்கள் இறைவா! புகழ் அனைத்தும் உனக்கே உரியது. (பகட்டோ பெருமையோ கலவாமல்) தூய்மையும் சுபிட்சம் மிக்க உனது திருப்புகழை நிறைவாகப் போற்றுகிறேன்‘ என்று கூறினார். தொழுது முடித்ததும் நபி (ஸல்) அவர்கள், “(தொழுகையில் இந்த வார்த்தைகளை) மொழிந்தவர் யார்?” என்று கேட்டார்கள். அந்த மனிதர், “நான்தான்” என்றார். “முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள் “இதை நம்மில் முதலில் பதிவு செய்வது யார்‘ என (தமக்கிடையே) போட்டியிட்டுக் கொள்வதை நான் கண்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ரிஃபாஆ பின் ராஃபிஉ அஸ்ஸுரக்கீ (ரலி)
நூல்: புகாரி 799, 5458
இந்த வார்த்தைகளைச் சொன்னவர் யார் என்பது நபி (ஸல்) அவர்களுக்கு அறவே தெரியவில்லை. இதை இந்த ஹதீஸ் நமக்குக் கடுகளவு சந்தேகமின்றி தெரிவிக்கின்றது.
அப்படியானால் பின்னால் உள்ளதையும் பார்க்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறும் ஹதீஸின் விளக்கம் என்ன?
புகாரியில் இடம்பெறும் மற்றொரு ஹதீஸிலும் இதே கருத்து இடம் பெறுகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ருகூஉவையும் சஜ்தாவையும் நிறைவாகச் செய்யுங்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் “எனக்கு பின்புறமாக‘ அல்லது “என் முதுகுக்குப் பின்புறமாக‘ நீங்கள் குனி(ந்து ருகூஉ செய்)யும் போதும் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும் போதும் உங்களைப் பார்க்கிறேன்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி 742, 6644
இந்த ஹதீஸில், தொழுகையில் பின்னால் உள்ளதை நான் பார்க்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னது மேலதிக வாசகத்துடன் இடம்பெற்றுள்ளது. அதில், நீங்கள் ருகூவு செய்யும் போதும், ஸஜ்தா செய்யும் போதும் நான் பின்புறமிருந்து உங்களைப் பார்க்கிறேன் என்று கூறுகின்றார்கள்.
நான் நிற்கும் போது பார்க்கிறேன் எனக் கூறாமல், அல்லது இருப்பில் உங்களைப் பார்க்கிறேன் எனக் கூறாமல் ருகூவு செய்யும் போதும் ஸஜ்தா செய்யும் போதும் உங்களைப் பார்க்கிறேன் என்று கூறுகிறார்கள். பொதுவாகத் தொழுகையில் ருகூவு அல்லது ஸஜ்தா செய்யும் போது முன்னால் இருப்பவருக்குப் பின்னால் உள்ள வரிசை தெரியத் தான் செய்யும். எனவே தான், நீங்கள் வரிசையைச் சரி செய்யாவிட்டால் ருகூவின் போது பின்புறம் நான் பார்த்து விடுவேன் என்று சாதாரண அர்த்தத்தில் நபி (ஸல்) அவர்கள் சொன்னதை இப்படி அனர்த்தம் செய்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது.
ஒரு வாதத்திற்கு, பின்னால் உள்ளதைப் பார்க்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வைத்துக் கொண்டாலும் தொழுகையின் போது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் காண்பித்துக் கொடுக்கிறான் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் மேலே நாம் காட்டிய பல்வேறு ஹதீஸ்கள், நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நடப்பது தெரியாது என்பதை அறிவிக்கின்றன. நபி (ஸல்) அவர்கள் பின்னால் நடப்பதை அறிவார்கள் என்ற பரேலவிகளின் வாதப்படி மேற்கண்ட ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் தெரிந்து கொண்டே பொய் சொன்னார்கள் என்ற கருத்து வந்து விடும். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
எனவே இந்த ஹதீஸை வைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் ஒளியால் படைக்கப்பட்டவர்கள் என்று நிலைநாட்ட முற்படுவது அபத்தமும் பைத்தியக்காரத்தனமும் ஆகும்.
வளரும் இன்ஷா அல்லாஹ்