ஹதீஸ் கலை ஆய்வு – தொடர்: 5
பருவ வயதை அடைந்தவருக்கு பால் புகட்டுதல்
குர்ஆனுடன் மோதுகின்ற வகையில் மோசமான கருத்தைத் தரக் கூடிய செய்திகளுக்கும், நபி (ஸல்) அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்று நாம் கூறுகிறோம். இது தொடர்பாக சஹாபாக்கள் மற்றும் அறிஞர்களின் கூற்றுக்கள் மற்றும் ஹதீஸ் கலை விதிகள் கடந்த இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்தபடியாக, குர்ஆனுடன் மோதும் ஹதீஸ்கள் யாவை? எந்த அடிப்படையில் அவை குர்ஆனுடன் மோதுகின்றன? அவற்றைச் சரி காண்பதற்காக எதிர் தரப்பினர் கூறும் விளக்கமென்ன? அந்த விளக்கம் சரியா? தவறா? என்பதைப் பற்றி ஒவ்வொன்றாகத் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம்.
இந்த ஆய்வுக்குள் நுழைவதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்கள் கூறிய முக்கியமான ஒரு செய்தியை நாம் மனதில் நிறுத்திக் கொண்டால் சரியான முடிவை எடுப்பது எளிதாகி விடும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியுமானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதை(க் கூறுவதில்) நானே உங்களில் மிகத் தகுதி வாய்ந்தவன்.
என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்கள் உள்ளம் வெறுக்குமானால், இன்னும் உங்களது தோல்களும் முடிகளும் (அதற்குக் கட்டுப்படாமல் அதை விட்டு) விரண்டு ஓடுமானால் இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு (சாத்தியப்படுவதை விட்டும்) தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களில் நானே அதை விட்டும் மிக தூரமானவன்.
அறிவிப்பவர்: அபூ உஸைத் (ரலி)
நூல்: அஹ்மத் 15478
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு செய்தியைக் கூறியிருந்தால் அது எப்படிப் பட்டதாக இருக்கும்? என்பதற்கு ஓர் அற்புதமான அளவுகோலை அவர்களே கற்றுத் தருகிறார்கள்.
இந்த அடிப்படையை மனதில் நிறுத்திக் கொண்டு, இனி நாம் எடுத்துக் காட்டப் போகும் ஹதீஸ்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொடர்பு உடையவையாக இருக்குமா? என்று சிந்தியுங்கள்.
நபி (ஸல்) அவர்களுடன் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான அபூ ஹுதைஃபா பின் உத்பா (ரலி) அவர்கள், சாலிம் அவர்களைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டார். மேலும் அவருக்குத் தம் சகோதரர் வலீத் பின் உத்பாவின் மகள் ஹிந்த் என்பாரைத் திருமணமும் செய்து வைத்தார். சாலிம் ஓர் அன்சாரிப் பெண்ணின் அடிமையாக இருந்தவர். நபி (ஸல்) அவர்கள் ஸைதைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டது போல் (சாலிமை அபூஹுதைஃபா வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டார்) மேலும் அறியாமைக் காலத்தில் ஒருவரை அவருடைய வளர்ப்புத் தந்தை (பெயர்) உடன் இணைத்து மக்கள் அழைக்கும் வழக்கமும், அவரது சொத்துக்கு வாரிசாக (வளர்ப்பு மகனை) நியமிக்கும் வழக்கமும் இருந்தது.
“அவர்களை அவர்களின் தந்தையருடனே சேர்த்து அழையுங்கள்! அதுவே அல்லாஹ்விடம் நீதியானது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியா விட்டால் அவர்கள் உங்களின் கொள்கைச் சகோதரர்களும், உங்கள் நண்பர்களுமாவர்” எனும் (33:5) வசனத்தை அல்லாஹ் அருளும் வரையில் (இந்த வழக்கம் நீடித்தது).
பின்னர் வளர்ப்புப் பிள்ளைகள் அவர்களுடைய சொந்தத் தந்தையருடன் இணைக்கப்பட்டனர். எவருக்குத் தந்தை (இருப்பதாக) அறியப்படவில்லையோ அவர் நண்பராகவும், மார்க்கச் சகோதரராகவும் ஆனார். பிறகு அபூஹுதைஃபா பின் உத்பா அவர்களின் துணைவியார் சஹ்லா பின்த் சுஹைல் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் சாலிமை பிள்ளையாகவே கருதிக் கொண்டிருந்தோம். அவர் விஷயத்தில் அல்லாஹ் தாங்கள் அறிந்துள்ள (33:5) வசனத்தை அருளி விட்டான்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 5088
(ஒரு முறை) சஹ்லா பின்த் சுஹைல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! சாலிம் பின் மஅகில் என்னுடைய வீட்டிற்கு வரும் போது அபூஹுதைஃபாவின் முகத்தில் அதிருப்தியை நான் பார்க்கிறேன்” என்று கூறினார்கள். சாலிம் (ரலி) அவர்கள் அபூ ஹுதைஃபாவின் அடிமை ஆவார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நீ அவருக்குப் பால் கொடுத்து விடு” என்று கூறினார்கள். சஹ்லா (ரலி) அவர்கள் “அவர் பருவ வயதை அடைந்த மனிதராயிற்றே! அவருக்கு நான் எவ்வாறு பாலூட்டுவேன்?” என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தவாறு “அவர் பருவ வயதை அடைந்தவர் என்று எனக்கும் தெரியும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 2878
சஹ்லா (ரலி), அவரது கணவர் அபூ ஹுதைஃபா மற்றும் வளர்ப்பு மகன் சாலிம் ஆகிய மூவரும் நெருக்கடியான ஒரே வீட்டில் இருப்பதாகவும் சஹ்லா அவர்கள் முறையாக ஆடை அணியாமல் இருக்கும் போது சாலிம் வரக்கூடிய சூழ்நிலை இருப்பதாகவும் சஹ்லா (ரலி) அவர்கள் முறையிட்டதாக வேறு அறிவிப்புக்களில் வந்துள்ளது.
குர்ஆனுடன் முரண்படுகிறது
“பால்குடி உறவு ஏற்படுவதற்கு வயது வரம்பு எதுவும் இல்லை; பருவ வயதை அடைந்த ஆணிற்கு ஒரு பெண் பால் புகட்டினாலும் அந்தப் பெண் அந்த ஆணிற்குத் தாயாக மாறி விடுவாள்’ என்ற கருத்தை இந்த ஹதீஸ் தருகிறது. இந்த ஹதீஸ் குர்ஆனிற்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் முரண்படுவதால் இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று கூறுகிறோம்.
பால்குடி சட்டத்திற்கு, குழந்தை பிறந்த முதல் இரண்டு வருடத்தை எல்லையாக அல்லாஹ் நிர்ணயிக்கிறான். இந்த எல்லையைத் தாண்டிய ஒருவர் பால் குடிப்பதினால் பால்குடி உறவு ஏற்படாது என்று பின்வரும் வசனங்கள் கூறுகின்றன.
- பாலூட்டுவதை முழுமைப்படுத்த வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும்.
அல்குர்ஆன் 2:233
- மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.
அல்குர்ஆன் 31:14
- அவனை (மனிதனை) அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால் குடியை மறந்ததும் முப்பது மாதங்கள்.
அல்குர்ஆன் 46:15
மனிதனை மனித வடிவில் தாய் 6 மாதங்கள் சுமக்கிறாள். அவனுக்குப் பால் புகட்டியது 24 மாதங்கள். அதாவது இரு வருடம். இந்த 6 மாதத்தையும் 24 மாதத்தையும் சேர்த்து 30 மாதங்கள் என்று இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
பால்குடியின் காலம் இரண்டு வருடங்கள் தான் என்று மேலுள்ள வசனங்கள் தெளிவாக எடுத்துரைக்கும் போது, பருவ வயதை அடைந்த சாலிமிற்குப் பால் புகட்டுமாறு நபி (ஸல்) அவர்கள் எப்படிச் சொல்லியிருப்பார்கள்?
- தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.
அல்குர்ஆன் 24:30
ஒரு ஆண் அன்னியப் பெண்ணைப் பார்ப்பதை இஸ்லாம் தடை செய்கிறது. ஆனால் இந்தச் சம்பவத்தில் சஹ்லா (ரலி) அவர்களிடத்தில் சாலிம் பால் குடித்ததாக வந்துள்ளது. பார்ப்பதைக் காட்டிலும் பெண்ணுடைய மறைவிடத்தில் ஆணுடைய வாய் உரசுவது என்பது பன்மடங்கு ஆபாசமானது; அபத்தமானது.
மொத்தத்தில் இஸ்லாமிய ஒழுக்க விதிகளைத் தகர்த்தெறியும் நிகழ்வாக இது அமைந்துள்ளது. இதற்குப் பிறகும் சாலிமுடைய சம்பவத்தை உண்மை என்று நம்பினால் மேற்கண்ட வசனம் கூறும் ஒழுங்கு முறையைக் குழி தோண்டிப் புதைப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் வழிவகை செய்தார்கள் என்று நம்ப வேண்டிய நிலை வரும்.
இன்று உலகத்தில் எந்த மதத்தினர்களும் கடைப்பிடிக்காத ஓர் அற்புதமான வழிமுறையான பர்தாவை இஸ்லாமியர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். பெண்கள் மார்பகத்தை மறைக்க வேண்டும் என்பது இறைக் கட்டளை.
வீட்டுக்கு அதிகமாக வருபவர்களுக்குப் பால் புகட்டி விட்டால் பர்தாவைப் பேண வேண்டிய அவசியம் இல்லை என்று இந்தச் சம்பவம் கூறுகிறது. பர்தா என்ற அழகிய நெறியை ஒழிப்பதற்கு இஸ்லாமிய எதிரிகளால் உருவாக்கப்பட்டதாகத் தான் இச்செய்தி இருக்க முடியும்.
தாயின் பிரிவைத் தாங்காமல் இருப்பதற்கு சாலிம் (ரலி) அவர்கள் ஒன்றும் பச்சிளங்குழந்தை இல்லை. ஆண்கள் விளங்கிக் கொள்ளும் விஷயங்களை விளங்கி, பருவ வயதை அடைந்து, திருமணம் முடித்தவர். இவரால் சஹ்லா (ரலி) அவர்களின் வீட்டிற்குச் செல்லாமல் இருக்க முடியாதா?
குர்ஆன் கூறும் அனைத்து விதிகளையும் தளர்த்துவதற்கு அப்படியென்ன நிர்ப்பந்தம் சாலிம் (ரலி) அவர்களுக்கு ஏற்பட்டு விட்டது? சஹ்லா (ரலி) அவர்களின் வீட்டிற்கு அருகிலேயே ஒரு தனி வீட்டை உருவாக்கி முறையான அடிப்படையிலே வாழ்ந்திருக்கலாம் அல்லவா?
ஒரு பெண் நம்மிடத்தில் இது போன்ற பிரச்சனையைக் கொண்டு வந்தால் அப்பெண்ணிற்கு, பார்தாவைக் கடைப்பிடிக்கும் படி கூறுவோமே தவிர ஒரு போதும் அந்த ஆணுக்குப் பால் புகட்டும் படி கூற மாட்டோம். நாம் கூட செய்யாத ஒரு மோசச் செயலை நபியவர்கள் செய்தார்கள் என்று கூறுவது நபி (ஸல்) அவர்களுக்கு இழிவை ஏற்படுத்துவதாக உள்ளது.
- அவர்களை அவர்களின் தந்தையருடனே சேர்த்து அழையுங்கள்! அதுவே அல்லாஹ்விடம் நீதியானது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால் அவர்கள் உங்களின் கொள்கைச் சகோதரர்களும் உங்கள் நண்பர்களுமாவர். தவறுதலாக நீங்கள் கூறி விடுவதில் உங்கள் மீது குற்றம் இல்லை. மாறாக உங்கள் உள்ளங்களால் தீர்மானித்துக் கூறுவதே (குற்றமாகும்). அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் 33:5
தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள் சொந்தக் குழந்தையாக ஆக முடியாது. மாறாக அவர்களைக் கொள்கைச் சகோதரர்களாகவும் நண்பர்களாகவும் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு அந்நிய ஆணிடத்தில் பேண வேண்டிய வழிமுறைகளை வளர்ப்புப் பிள்ளைகளிடத்திலும் பேண வேண்டும். இக்கருத்தையே இந்த வசனம் கூறுகிறது.
ஆனால் சாலிமுடைய சம்பவம் குர்ஆனுடைய இந்த வசனத்திற்கு எதிராக வளர்ப்புப் பிள்ளையை சொந்தப் பிள்ளையாக மாற்றுவதற்கான தந்திரத்தைக் கற்றுக் கொடுக்கிறது. அல்லாஹ்வுடைய சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு மாற்று வழியைச் சொல்லித் தருகிறது. இதனால் தான் சாலிமுடைய சம்பவத்தைச் சிலர் சுட்டிக் காட்டி, “ஹராமான ஒன்றை ஹலால் ஆக்குவதற்கான தந்திரங்களைச் செய்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியம் தான்’ என்று கூறுகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை குர்ஆனாகவே இருந்ததே தவிர குர்ஆனில் உள்ள சட்டங்களைத் தளர்த்துவதற்காக அவர்கள் ஒரு போதும் முயற்சித்ததே இல்லை. மேலுள்ள வசனத்தில் இறைவன் கற்றுத் தருகின்ற ஒழுங்கு முறையைச் சீர்குலைத்து அதற்கு மாற்றமான வேறொரு வழியை இச்சம்பவம் கற்றுத் தருவதால் இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது.
மகன் தாயிடத்தில் சாதாரணமாக வந்து செல்வதைப் போல் ஒரு அன்னிய ஆண், அன்னியப் பெண்ணிடம் வந்து போவதற்கான வழியை இந்த ஹதீஸ் கற்றுத் தருகிறது. குர்ஆனிற்கு எதிரான இந்த வழியை நாம் திறந்து விட்டால் இதுவே விபச்சாரம் பெருகுவதற்குக் காரணமாக அமைந்து விடும்.
பருவ வயதை அடைந்த ஆண், பெண்ணிடத்தில் பால் குடித்து விடுவதால் அப்பெண் மீது அவனுக்கோ அல்லது அவன் மீது அப்பெண்ணிற்கோ ஆசை ஏற்படாது என்று அறிவுள்ளவர்கள் கூற மாட்டார்கள். இந்த வழி ஒழுக்கமுள்ள இளைஞர்களை விபச்சாரத்தின் பால் தள்ளுகின்ற மோசமான வழி.
ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுடன் மோதுகிறது
மேலே நாம் எடுத்துக் காட்டிய பல்வேறு குர்ஆன் வசனங்களுடன் இந்த ஹதீஸ் மோதுவதுடன் மட்டுமல்ல! ஆதாரப்பூர்வமான பல ஹதீஸ்களுக்கும் முரணாக அமைந்துள்ளது.
பின்வரும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் பால்குடி உறவு 2 வருடத்திற்குள் தான் ஏற்படும். அதற்குப் பிறகு குடித்தால் பால்குடி உறவு ஏற்படாது என்ற கருத்தைக் கூறுகின்றன.
- ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது என் அருகில் ஒரு ஆண் இருந்தார். (அவரைக் கண்டதும்) நபி (ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) மாறி விட்டது போல் தோன்றியது. அ(ந்த மனிதர் அங்கு இருந்த)தை நபியவர்கள் விரும்பவில்லை என்று தெரிந்தது. அப்போது நான், “இவர் என் (பால்குடி) சகோதரர்” என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்கள் சகோதரர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்து முடிவு செய்யுங்கள். ஏனெனில் பால்குடி உறவு என்பதே பசியினால் (பிள்ளை பால் அருந்தியிருந்தால்) தான்” என்று சொன்னார்கள்.
நூல்: புகாரி 5102
இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பசியைப் போக்குவதற்குத் தாயின் பாலே உதவும். இவ்வயதைக் கடந்து விட்ட குழந்தைகள் பால் அல்லாத வேறு உணவுகளை உட்கொள்ளும் நிலையை அடைந்து விடுகின்றன. எனவே பசிக்காகப் பாலருந்தும் பருவம் இந்த இரண்டு வருடங்கள் தான்.
தன்னுடைய மனைவியின் அருகில் ஓர் ஆண் அமர்ந்திருப்பதைக் கண்டு நபி (ஸல்) அவர்கள் கோபமடைகிறார்கள். அவர் ஆயிஷா (ரலி) அவர்களின் பால்குடிச் சகோதரர் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்ன போதும், “உங்கள் பால்குடிச் சகோதரர் யார் என்பதை ஆராய்ந்து பாருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய வார்த்தையைக் கவனிக்க வேண்டும்.
நாம் பால் குடித்த தாயிடம் ஒருவர் பால் குடித்து விடுவதால் அவர் நமது சகோதரனாக ஆகி விட முடியாது. அவர் எப்போது பால் குடித்தார்? 2 வருடத்திற்குள் அவர் குடித்தாரா? அல்லது அதற்குப் பிறகு குடித்தாரா? என்று உற்று நோக்க வேண்டும். இரண்டு வருடத்திற்குள் அவர் குடித்திருந்தால் அவர் நம் சகோதரர். இதற்குப் பிறகு அருந்தியிருந்தால், அல்லது ஒரு சில மிடறுகளைக் குடித்திருப்பதால் அவர் நமது பால்குடிச் சகோதரராக ஆக மாட்டார்.
இந்த வித்தியாசத்தைப் பார்க்காமல் பால் குடித்து விட்டார் என்பதற்காக அவரை நம் சகோதரர் என்று எண்ணி சகோதரனிடத்தில் நடந்து கொள்வதைப் போல் அவரிடத்தில் நடந்து கொள்ளக் கூடாது. இதையே நபி (ஸல்) அவர்கள் தனது மனைவிக்குக் கூறி எச்சரிக்கையாக நடந்து கொள்ளும் படி கூறுகிறார்கள்.
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பால் புகட்டுவது இரண்டு வருடத்திற்குள்ளாகத் தான் இருக்க வேண்டும்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)
நூல்: தாரகுத்னீ, பாகம்: 10, பக்: 152
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மார்பகத்தின் வழியாக (குழந்தையின்) வயிறை நிரப்பும் அளவிற்குப் பால் புகட்டுவதினாலேயே பால்குடி உறவு ஏற்படும். இன்னும் (இவ்வாறு) பால் புகட்டுவது பால்குடிக் காலம் 2 வருடம் (முடிவடைவதற்கு) முன்னால் இருக்க வேண்டும்.
அறிவிப்பவர்: உம்மு சலமா (ரலி)
நூல்: திர்மிதி 1072
இந்த ஹதீஸை இமாம் திர்மிதி அவர்கள் பதிவு செய்து விட்டு இது ஹஸன் ஸஹீஹ் (ஆதாரப் பூர்வமானது) என்ற தரத்தில் அமைந்தது என்று கூறியுள்ளார்கள். இரண்டு வருடத்திற்குள் குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்பதை இந்த ஹதீஸ் வெளிப்படையாகத் தெரிவிக்கிறது.
மேற்குறிப்பிட்ட குர்ஆன் வசனங்களுக்கும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் சாலிமுடைய சம்பவம் முரண்படுவதால் இந்தச் சம்பவம் உண்மையல்ல என்றே ஒவ்வொரு முஸ்லிமும் நம்ப வேண்டும்.
வளரும் இன்ஷா அல்லாஹ்