பரேலவிஷ பயங்கரவாதம்
இறைத்தூதர் இறக்கவில்லையாம்
நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்பதற்குக் கூறுகெட்ட குருட்டு பரேலவிஷ சிந்தனைவாதிகள் எடுத்து வைக்கும் அடுத்த ஆதாரத்தைப் பார்ப்போம்.
உங்களுக்குப் பிடித்தமான பெண்ணை மணந்து கொள்ளுங்கள். இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ, ஆனால் நீங்கள் இவர்களிடையே நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்) அல்குர்ஆன் 4:3
நம்மில் ஒருவருக்கு வசதியும் நீதமும் எவ்வளவு தான் அளவு கடந்து இருந்தாலும் நான்கு பெண்களுக்கு மேல் திருமணம் செய்யக்கூடாது.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரே கட்டத்தில் 9 மனைவியருக்குக் கணவராக இருந்தார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வுலகை விட்டும் மறைந்த போது அவர்களுக்கு ஒன்பது மனைவியர் இருந்தனர். நூல்: புகாரி, முஸ்லிம்
இதுதான் பரேலவிகளின் ஆதாரம்.
நாம் ஒரு சமயத்தில் நான்கு மனைவிகளுக்கு மேல் திருமணம் செய்ய முடியாது. ஆனால் நபி (ஸல்) அவர்களோ இந்த வரம்பைத் தாண்டி திருமணம் முடிக்கலாம். இந்தச் சிறப்பை, இறை நம்பிக்கை கொண்ட எவரும் மறுக்க முடியாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குரிய தனிச் சலுகை, தனிச் சிறப்பு!
இதை நாம் ஒத்துக் கொள்கிறோம். ஆனால் இதை வைத்து நபி (ஸல்) அவர்களை மனித நிலையிலிருந்து வேறு நிலைக்கு மாற்றம் செய்வதைத் தான் நாம் மறுக்கிறோம். அதாவது நபி (ஸல்) அவர்களை இதன் மூலம் கடவுள் நிலைக்கு உயர்த்துவதைத் தான் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இங்கு தான் இவர்கள் புத்தி சுவாதீனத்துடன் பேசுகிறார்களா? அல்லது புத்தி பேதலித்துப் பேசுகிறார்களா? என்று கேட்கிறோம்.
நபி (ஸல்) அவர்கள் 9 மனைவியரைத் திருமணம் முடித்தது அவர்களின் மனிதத் தன்மையை மேலும் உறுதிப்படுத்துகின்றது. நபி (ஸல்) அவர்கள் ஒன்பது பேரையல்ல! ஒன்பதாயிரம் பேரை மணம் முடித்தாலும் அது அவர்களுக்குரிய சிறப்பு என்றாலும், சலுகை என்றாலும் அது அவர்களின் மனிதத் தன்மையை பக்காவாகவும் பலமாகவும் நிரூபிக்கின்றது. இப்படித் தான் கொஞ்ச நஞ்ச புத்தியுள்ளவர் புரிந்து கொள்வார். ஆனால் இந்த பரேலவிகளோ அல்லாஹ் சொல்கின்ற கால்நடைகள் என்ற நிலையில் உள்ளவர்கள். இன்னும் அதைவிடக் கீழானவர்கள்; கேவலமானவர்கள்.
நியாயமின்றி பூமியில் கர்வம் கொண்டிருப்பவர்களை எனது சான்றுகளை விட்டும் திருப்புவேன். அவர்கள் எந்தச் சான்றைக் கண்டாலும் அவற்றை நம்ப மாட்டார்கள். நேரான வழியை அவர்கள் கண்டால் அதை (தங்களது) வழியாகக் கொள்ள மாட்டார்கள். வழிகேடான பாதையை அவர்கள் கண்டால் அதை (தமது) வழியாக்கிக் கொள்வார்கள். அவர்கள் நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியதும், அவற்றை அலட்சியப்படுத்தியதும் இதற்குக் காரணம். (அல்குர்ஆன் 7:146)
ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விட வழிகெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள். (அல்குர்ஆன் 7:179)
எதை மனிதத் தன்மைக்கு இலக்கணமாக எடுத்துக் கொள்ள வேண்டுமோ அதை இவர்கள் கடவுள் தன்மைக்கு இலக்கணமாக ஆக்கிக் கொண்டு தங்களை அறிவிலிகள் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார்கள்.
அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு இப்படி ஒரு சலுகையைக் கொடுத்ததே அந்த மாமனிதரை, மக்கள் கடவுள் நிலைக்கு உயர்த்திவிடக் கூடாது என்பதற்காகத் தான். இஸ்லாத்தின் எதிரிகளால் கடுமையாக விமர்சிக்கப்படும் இந்த ஒரு சலுகையை அல்லாஹ் வழங்கியதே நபியவர்களின் மனிதத் தன்மையை நிரூபிப்பதற்காகத் தான் என்ற அளவுக்குள்ள ஒரு இலக்கணத்தை இவர்கள் தலைகீழாகப் புரிந்து கொள்கின்றார்கள்.
திருமணத்தில் சாட்சி
நம்மில் திருமண நிகழ்ச்சி நடைபெறுமிடத்தில் இரண்டு சாட்சிகள் கட்டாயம் இருக்க வேண்டும். அப்போது தான் திருமணம் நிறைவேறும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: சாட்சிகள் இல்லாத திருமணம் செல்லாது. (நூல்: தாரகுத்னீ) ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய திருமணம் சாட்சிகள் இல்லாமலேயே நிறைவேறிவிடும்.
அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, யா ரசூலுல்லாஹ், உங்களை நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். திருமணத்தின் மூலம் தங்களுக்கு என்னை அர்ப்பணம் செய்து விட்டேன் என்று சொல்லி, இதற்குச் சம்மதம் தெரிவித்து விட்டால் திருமணம் நிறைவேறிவிடும். சாட்சிகள் தேவையில்லை.
முஃமினான ஒரு பெண் நபி (ஸல்) அவர்களுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள விரும்பினால் (திருமணம் நிறைவேறிவிடும். நபியே! இது) உமக்கு மட்டும் (வழங்கப்பட்ட) உரிமை. மற்ற முஃமின்களுக்கு அல்ல.
(அல்குர்ஆன் 33:50
உங்களுக்கு மட்டும் தான் மற்ற முஃமின்களுக்கல்ல என்று சொன்னதின் மூலம் அல்லாஹ் ஒரு கருத்தைத் தெளிவாக்கிக் காட்டுகிறான். அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மற்றவர்களைப் போல் அல்ல.
நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்பதற்கு பரேலவிகள் எடுத்து வைக்கும் அடுத்த ஆதாரம், “நபி (ஸல்) அவர்கள் திருமணம் முடிப்பதற்கு சாட்சி தேவையில்லை’ என்பதாகும்.
திருமணத்தில் கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்படுவதால் கீழ்க்கண்ட வசனங்களின் அடிப்படையில் சாட்சி அவசியம் என்று சொல்கிறோம்.
உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 2:282)
நம்பிக்கை கொண்டோரே! உங்களில் ஒருவருக்கு மரணம் நெருங்கி அவர் மரண சாசனம் செய்தால் உங்களைச் சேர்ந்த நேர்மையான இருவர் அதற்குச் சாட்சிகளாக இருக்க வேண்டும். (அல்குர்ஆன் 5:106)
33:50 வசனத்தின்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் திருமணத்திற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான். இந்தச் சிறப்பை நாமும் ஒப்புக் கொள்கிறோம். ஸைனப் (ரலி) அவர்களை நபியவர்களுக்கு அல்லாஹ்வே திருமணம் முடித்து வைத்ததாகக் கூறுகின்றான்.
ஸைத் என்பார் அவரிடம் தன் தேவையை முடித்துக் கொண்ட போது (விவாகரத்துச் செய்த போது) உமக்கு அவரை மணமுடித்துத் தந்தோம். (அல்குர்ஆன் 33:37)
இப்படி சாட்சி இல்லாமல் நபி (ஸல்) அவர்கள் திருமணம் முடித்ததால் அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள் என்றாகிவிடுமா? ஆதம் நபிக்கும் ஹவ்வா அவர்களுக்கும் அல்லாஹ் தான் திருமணம் முடித்து வைத்தான்.
அதனால் ஆதம் நபி உயிருடன் இருக்கின்றார்கள் என்று இவர்கள் வாதிடுவார்களா?
நபிமார்கள் அனைவரும் உயிருடன் இருக்கிறார்கள் என்பதும் இந்தப் பரேலவிகளின் நம்பிக்கையாகும். ஆதம் நபியும் உயிருடன் இருக்கிறார்கள் என்று இந்தக் கூட்டம் வாதிடுமானால் நபி (ஸல்) அவர்களுக்கு உரிய தனிச்சிறப்பு இங்கு அடிபட்டுப் போய்விடுகின்றது என்பதை இந்த நேரத்தில் பதிய வைத்துக் கொள்கிறோம்.