தொடர்: 3
பல்லிக்குப் பகுத்தறிவு பைத்தியத்தில் ஜாக்
எம். ஷம்சுல்லுஹா
புகாரியில் இடம்பெறும் பல்லி ஹதீஸ் தொடர்பாக அல்ஜன்னத் மாத இதழ் தனக்குத் தானே எப்படி முரண்பட்டது என்பதை விரிவாகப் பார்த்தோம். இந்த இதழில் அல்ஜன்னத் கட்டுரையாளர் வைத்த வாதங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
நாம் எழுப்பிய ஆட்சேபணையை இங்கே நினைவில் புதுப்பித்துக் கொள்வோம்.
இப்ராஹீம் நபி அவர்களைத் தீக்குண்டத்தில் போட்ட போது அந்த நெருப்பை பல்லி ஊதிய காரணத்திற்காகப் பல்லியைக் கொல்ல வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட பல்லியை மட்டும் தானே கொல்ல வேண்டும். அநியாயமாக அதன் சந்ததிகளை, பல்லி இனத்தையே ஏன் பழிவாங்க வேண்டும்? ஒரு பல்லி மட்டும் பாவம் செய்திருந்தால், மற்ற பல்லிகள் அந்தப் பாவத்தை எப்படிச் சுமக்க முடியும்?
ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார். கனத்த சுமையுடையவன் அதைச் சுமக்குமாறு யாரையேனும் அழைத்தால் (அழைக்கப்படுபவன்) உறவினராக இருந்தாலும் அதிலிருந்து எதுவும் அவன் மீது சுமத்தப்பட மாட்டாது. (அல்குர்ஆன் 35:18)
ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க மாட்டார் என்று அல்லாஹ் தனது திருமறையில் கூறுவதை அடிப்படையாக வைத்து இந்த ஆட்சேபணையை நாம் எழுப்பியிருந்தோம்.
அதற்குத் தான் இந்தக் கட்டுரையாளர் பின்வரும் பதிலைத் தருகின்றார்.
ஒருவர் செய்ததற்கு இன்னொருவர் சுமக்க மாட்டார் என்பது இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றாகும். இதனை யாரும் மறுக்கவில்லை. மறுக்கவும் முடியாது. சில சமயங்களில், சொற்ப நேரங்களில் ஒருவருடைய செயல்களால் மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பது தான் இன்னொரு விஷயமாகும். விதிவிலக்காக ஒருசில சமயங்களில் இவ்வாறு நிகழலாம் என்பதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். அதற்கான ஒருசில சான்றுகளை இங்கே நான் தருகிறேன்.
2:40 இஸ்ராயீலின் சந்ததியினரே! நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட்கொடையை நினைவுகூருங்கள். நீங்கள் என் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் நான் உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவேன். மேலும் நீங்கள் எனக்கே அஞ்சுவீர்களாக!
(மேலும் 2:47, 2:63, 2:64 ஆகிய வசனங்கள்)
இங்கே பாருங்கள். உங்களுக்கு நான் செய்த அருட்கொடைகள் என்று அல்லாஹ் கூறுகின்றான். அதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்த யூதர்களைப் பார்த்து மேலுள்ள வசனங்கள் பேசுகின்றன. ஆனால் அருட்கொடைகளை அனுபவித்ததோ, குரங்காக மாற்றப்பட்டதோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த யூதர்களாவர். அவர்களை விட்டு விட்டு அவர்களுக்குப் பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு வந்தவர்களைப் பார்த்து ஏன் பேச வேண்டும்? செய்தது யாரோ! யாரையோ பார்த்து சொல்லப்படுகிறதே! இது குர்ஆனில் இருக்கும் அம்சம் தான். முன்னோர்கள் செய்த செயலுக்காக பின்னோர்கள் பழிக்கப்படுவதும் உண்டு.
இது கட்டுரையாளர் வைக்கின்ற வாதத்தின் சுருக்கமும் அதற்கு ஆதாரமாகச் சமர்ப்பிக்கின்ற குர்ஆன் வசனமுமாகும்.
இவர் தனது விளக்கத்தைத் துவக்கும் போதே, “ஒருவர் செய்ததற்கு இன்னொருவர் சுமக்க மாட்டார் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்’ என்று அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிடுகின்றார்.
ஒருவர் பாவத்தை அடுத்தவர் சுமக்க மாட்டார் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை என்பதை இவரும் ஒப்புக் கொள்கின்றார். இதைச் சொல்லி விட்டுத் தான் இதில் விதிவிலக்கு இருக்கின்றது என்று வாதிடுகின்றார்.
இஸ்லாம் தனக்கென்று கொள்கை, கோட்பாடுகளை வைத்திருக்கின்றது. அதுபோன்று சட்டங்களையும் வைத்திருக்கின்றது. தான் போட்ட சட்டங்களில் சில விதிவிலக்கை அளிக்கின்றது. உதாரணத்திற்கு, தொழுகை என்பது வயது வந்த ஆண், பெண் இரு பாலருக்கும் கடமையாகும். ஆனால் மாதவிலக்கு ஏற்பட்ட பெண்கள் அந்தக் கால கட்டத்தில் தொழ வேண்டியதில்லை என்ற விதிவிலக்கை அளிக்கின்றது. சட்டங்களில் இந்த விதிவிலக்கு உண்டு. ஆனால் கொள்கை, கோட்பாடுகளில், நிலைபாடுகளில் விதிவிலக்கு கிடையாது.
ஏகத்துவம் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இந்தக் கொள்கையில் இஸ்லாம் ஒருபோதும் விதிவிலக்கு அளிக்காது. எப்போதும் ஓரிறைவனைத் தான் வணங்க வேண்டும். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இணை வைத்துக் கொள்ளலாம் என்று ஒருபோதும் விதிவிலக்கு அளிக்காது. உயிர் போகும் நிர்ப்பந்தத்தில் கூட உள்ளத்தில் உறுதியான ஈமானுடன் உதட்டளவில் தவறான வார்த்தைகளைப் பிரயோகித்தால் குற்றமில்லை என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு!
ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க மாட்டார் என்பது இதுபோன்ற அடிப்படைக் கொள்கையில் உள்ளதாகும். அதிலும் குறிப்பாக, இது கிறித்தவத்திற்கு எதிரான ஒரு கொள்கை நிலைபாடாகும். இந்தக் கொள்கை நிலைபாட்டில் ஒருபோதும் இஸ்லாம் விதிவிலக்கு அளிக்கவில்லை, அளிக்காது என்ற அடிப்படை அறிவு கூட இந்தக் கட்டுரையாளருக்கு இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
இப்போது அவர் 2:40, 2:63, 64 வசனங்களுக்கு இவர் அளிக்கின்ற அற்புத விளக்கத்தைப் பார்ப்போம்.
இஸ்ரவேலர்களின் முன்னோர்களுக்குச் செய்த அருட்கொடைகளை அவர்களது சந்ததிகளுக்கு இறைவன் சொல்லிக் காட்டுகின்றான். இதுபோல் அவர்களது முன்னோர்களுக்கு அளித்த தண்டனையையும் அவர்களது சந்ததிகளுக்குச் சொல்லிக் காட்டுகிறான். இதை வைத்துக் கொண்டு இப்ராஹீம் நபி காலத்துப் பல்லிக்காக அதன் வாரிசுப் பல்லிகளைக் கொல்லலாம் என்று வினோதமாகவும் விசித்திரமாகவும் வாதிடுகின்றார். இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் இவருக்குத் தெரியவில்லை.
இஸ்ரவேலர் சமுதாயத்தின் முன்னோôர்கள் நபிமார்களைக் கொலை செய்தார்கள். அந்தக் கொடுஞ்செயலை நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்களை நோக்கி அல்லாஹ் சுட்டிக் காட்டுகின்றான். இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம், நாமும் இப்படிச் சுட்டிக் காட்டலாம் என்பது தான்.
முந்தைய இஸ்ரவேலர்கள் நபிமார்களைக் கொலை செய்ததால் அதற்குப் பழிவாங்கும் விதமாக இப்போதைய இஸ்ரவேலர்களைக் கொல்லலாம். இவர்களுக்கு மரண தண்டனை வழங்கலாம் என்று அல்லாஹ் சொல்லவில்லை.
அன்றைய இஸ்ரவேலர்கள் சனிக்கிழமையன்று வரம்பு மீறி கடலில் மீன் பிடிக்கச் சென்றதால் குரங்குகளாக மாற்றப்பட்டனர். அதுபோல் இன்றைய காலத்து இஸ்ரவேலர்களும் குரங்குகளாக மாற்றப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று அல்லாஹ் சொல்லவில்லை. இவ்வாறு யாரும் விளங்க மாட்டார்கள்.
முன்னோர்கள் செய்த தவறுகளை, அவர்கள் பெற்ற தண்டனைகளை படிப்பினைக்காக அவர்களுடைய சந்ததிகளிடம் சொல்லலாம் என்று தான் இதிலிருந்து விளங்க முடியும். இது இஸ்ரவேலர்களுக்கு மட்டுமல்ல! பொதுவாக மனித சமுதாயத்தினர் செய்த எத்தனையோ தவறுகளை அல்லாஹ் திருக்குர்ஆனில் சுட்டிக் காட்டுகின்றான். அவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனைகளை திருக்குர்ஆனில் விவரிக்கின்றான். இதற்கும் ஒருவர் பாவத்தை மற்றவர் சுமப்பதற்கும் என்ன சம்பந்தம் உள்ளது?
முந்தியவர்கள் செய்த தவறுக்காகப் பிந்தியவர்கள் விமர்சிக்கப்படுவதற்கும் தண்டிக்கப்படுவதற்கும் உள்ள வித்தியாசம் கூட இந்தப் பல்லியாளருக்கு விளங்கவில்லை. இப்ராஹீம் நபி காலத்துப் பல்லி செய்த பாவத்திற்கு இப்போதுள்ள பல்லிகளைக் கொல்வதற்கு இது எப்படி ஆதாரமாகும்?
இதை இன்னொரு கண்ணோட்டத்திலும் பார்க்க வேண்டும்.
இஸ்ரவேலர்களின் முன்னோர் செய்த பாவத்தை, அவர்களுடைய சந்ததியினரிடம் மட்டும் தான் விமர்சனம் செய்கின்றான். இஸ்ரவேலர் அல்லாத மனித சமுதாயத்தை நோக்கி இந்த விமர்சனத்தைச் செய்யவில்லை.
இதை ஆதாரமாகக் கொண்டு பல்லியைத் தண்டிக்கலாம் என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும், எந்தப் பல்லி நெருப்புக் குண்டத்தை ஊதியதோ அந்தப் பல்லியின் வாரிசுகளைத் தேடிப் பிடித்துக் கொல்லுங்கள் என்று அந்த ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளதா?
ஒரு குறிப்பிட்ட பல்லி ஊதும் போது, அன்று வாழ்ந்த கோடிக்கணக்கான பல்லிகள் இந்தப் பாவத்தில் சம்பந்தப்படவில்லை. அந்தப் பல்லிகளின் வாரிசுகளையும் இந்தப் பாவத்தில் பங்காளிகளாக்கி அவற்றையும் கொல்வதற்கு என்ன ஆதாரம்? இதற்கெல்லாம் பல்லியாளர்களிடம் எந்தப் பதிலும் இல்லை.
ஒரு ஹதீசுக்கு முட்டுக் கொடுக்கக் கிளம்பிய இவர்கள், ஒருவர் சுமையை அடுத்தவர் சுமக்க மாட்டார் என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை முட்டித் தள்ளி, தகர்க்க ஆரம்பித்து விட்டார்கள். கிறித்தவர்களின் கடவுள் கொள்கைகளில் ஒன்றான முதல் பாவத்தை ஆதரிக்கத் துவங்கி விட்டார்கள் என்பதையே இவர்களது இந்த விளக்கம் காட்டுகின்றது.
முதல் பாவத்தின் ஆதரவாளர்கள் வைக்கின்ற இரண்டாவது ஆதாரத்தைப் பார்ப்போம்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பனூ இஸ்ராயீல் குலத்தார் (யூதர்கள்) இருந்திராவிட்டால் இறைச்சி துர்நாற்றமடித்திருக்காது. ஹவ்வா (ஆதி மனிதர் ஆதம் நபியவர்களின் மனைவி) இருந்திராவிட்டால் எந்தப் பெண்ணும் தன் கணவனை ஏமாற்றியிருக்க மாட்டாள். (நூல்: புகாரி 3330)
இங்கே பார்த்தீர்களா? இன்றைக்கு நாம் இறைச்சியைப் பாதுகாப்பாக வைக்க என்ன பாடுபடுகிறோம்? இந்த இறைச்சி கெட்டுப் போகக் காரணமே நமக்கு முன் வாழ்ந்த அந்த பனூஇஸ்ரவேலர்கள் தான். அவர்கள் செய்ததற்காக நமக்குத் தண்டனை? அவர்களுடைய செயலுக்காக நம்முடைய இறைச்சி ஏன் கெட்டுப் போக வேண்டும்? இதிலிருந்து தெரிவது என்ன? சில சமயங்களில் ஒருவருடைய தவறுகள் அடுத்தவரையும் பாதிக்கலாம்.
படைத்த இறைவன், ஒருவர் செய்த தவறுக்காக அவரை மட்டும் தண்டிப்பான். அவன் நாடினால் ஒருவருக்கு அளிக்கும் தண்டனையின் விளைவுகள் காலாகாலம் தொடரும் வகையிலும் செய்வான். அதற்கான அதிகாரமும் ஆற்றலும் அல்லாஹ்வுக்கு மட்டும் உண்டு.
ஆதம் நபி செய்த தவறின் காரணமாக அவர் வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேற்றப்பட்டதால் அவர் மூலம் உருவான மனிதர்களும் அதைச் சுமந்தாக வேண்டும். நாமும் இதன் காரணமாகவே இந்த மண்ணில் வாழ்கிறோம்.
இஸ்ரவேல் சமுதாயம் செய்த ஒரு தவறுக்காக இறைச்சியின் கெட்டுப் போகாத தன்மையை அல்லாஹ் நீக்கி விட்டான். இதனால் காலாகாலத்துக்கும் இறைச்சி கெட்டுப் போகிறது. இது இறைவனின் தனிப்பட்ட அதிகாரத்தில் உள்ளதாகும். இப்படி நாம் செய்ய அதிகாரம் இல்லை.
விபச்சாரம் செய்த பெண்ணைக் கொன்றால் அவள் வயிற்றில் உள்ள குழந்தையும் கொல்லப்பட்டு விடும். இப்படி செய்யக் கூடாது என்பதற்காக பிரசவித்த பின் அந்தப் பெண்ணுக்குத் தண்டனையை நபி (ஸல்) அவர்கள் நிறைவேற்றச் செய்தார்கள்.
தலைமுறை தலைமுறையாக அல்லாஹ் தண்டிப்பது போல் நாமும் செய்ய நமக்கு அனுமதி இல்லை.
ஒரு ஊரை அந்த ஊரின் அநியாயம் காரணமாகத் தண்டிக்கும் போது அநியாயம் செய்யாதவர்களையும் அல்லாஹ் தண்டிப்பான். மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பி நியாயம் வழங்கும் அதிகாரம் அவனுக்கு உள்ளதால் அவன் இப்படிச் செய்வதை மற்றவர்கள் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒருவேளை பல்லியாளர்கள் கொன்ற பல்லியை உயிர்ப்பிக்கும் அதிகாரம் தம்மிடம் உள்ளதாகக் கருதுகிறார்களோ என்னவோ?
ஒருவர் செய்த பாவத்தை இன்னொருவர் சுமப்பதற்கு இதை ஆதாரமாகக் காட்டுவது இவர்களது அறியாமையை வெளிப்படுத்துகின்றது.
நமது இந்த வாதத்திற்கு புகாரியில் இடம்பெறும் கீழ்க்கண்ட ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது.
ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள்; வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும்போது அவர்களில் முதலாமவர் முதல், கடைசி நபர் வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள்!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் முதலாமவர் முதல், கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள்? அங்கே அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள்; கடைவீதிகளும் இருக்குமே!” என நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர்களில் முதலாமவர் முதல், கடைசி நபர் வரை புதையுண்டு போகத்தான் செய்வார்கள்; எனினும் (அதற்குப்) பின்னர் அவரவரது எண்ணத்திற்கேற்ப எழுப்பப்படுவார்கள்!” என்றார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 2118
சண்டையிட வந்தவர்களை பூமி உள்வாங்கலாம்; ஆனால் நல்லவர்கள் எப்படி தண்டிக்கப்படலாம் என்ற நியாயமான கேள்விக்கு நபி (ஸல்) அவர்கள் விளக்கமளிக்கும் போது, அவர்களின் எண்ணங்களுக்குத் தக்க எழுப்பப்படுவதாகக் கூறுகின்றார்கள். அதாவது கஅபாவைத் தாக்க வந்தவர்கள் மறுமையில் எழுப்பப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்; நல்லவர்கள் தண்டனையிலிருந்து காப்பாற்றப்படுவார்கள்.
விபரமுள்ள, மார்க்க விளக்கமுள்ள எவரும் இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு, நல்லவர்கள் பாவத்தைத் தீயவர்களும் சுமக்கிறார்கள் என்று விளங்க மாட்டார்கள். ஒரு சோதனை என்று வரும் போது அதில் நல்லவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்று தான் இதைப் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர, ஜாக்கினர் சொல்வது போன்று முதல் பாவத்திற்கு இதை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது.
அடுத்து, முதல் பாவ ஆதரவாளர் கூறும் மூன்றாவது ஆதாரத்தைப் பார்ப்போம்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (உலகில்) ஒரு மனிதன் அநியாயமாகக் கொல்லப்படும் போது அந்தக் கொலையின் பாவத்தில் ஆதம் (அலை) அவர்களின் முதல் மகனுக்கும் ஒரு பங்கு இருக்கவே செய்யும். ஏனெனில் அவர் தான் முதன்முதலாகக் கொலை செய்து (ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தி) அதை வழக்கில் கொண்டு வந்தவர்.
இங்கே பார்த்தீர்களா? உலகில் யார் அநியாயமாகக் கொலை செய்தாலும் அதிலிருந்து ஒரு பங்கு ஆதம் (அலை) அவர்களுடைய முதல் மகனுக்கு போய்ச் சேருகிறது என்கிறது நபிமொழி. இவர் செய்யும் கொலைக்கு அவர் ஏன் பாவம் சம்பாதிக்க வேண்டும்? இவருடைய பாவம் அவரது தலையில் ஏன் விழ வேண்டும்? இது பொது விதியல்ல. எப்போதாவது இப்படி நிகழ்ந்து விடும் என்பதைத் தான் இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. பல்லி விஷயமும் அப்படிப்பட்டது தான்.
என்ன அற்புதமான விளக்கம்! எப்படிப்பட்ட அசத்தல் வாதம்! பைத்தியக்காரத்தனமான விளக்கம் அளிப்பதில் இவர்கள் பரேலவிகளை மிஞ்சிவிடுவார்கள் போல் தெரிகிறது.
ஒருவர் ஒரு நன்மையைச் செய்து, அதை மற்றவருக்கு அறிமுகப்படுத்தினால் அதைப் பார்த்து யார் யாரெல்லாம் செய்கின்றார்களோ அவர்கள் அத்தனை பேருடைய கூலியும் அவருக்கு வந்து கிடைக்கின்றது. இவ்வாறே தீமையை அறிமுகப்படுத்தியவருக்கு, தீமை செய்வோரின் கூலி போய்ச் சேர்ந்து கொண்டேயிருக்கின்றது. இதைப் பின்வரும் ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் விளக்குகின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் இஸ்லாத்தில் (அதன் அடிப்படைக்கு முரண்படாத வகையில்) ஓர் அழகிய நடைமுறையை உருவாக்கி, அவருக்குப்பின் அந்த நடைமுறை செயல் படுத்தப்படுகிறதோ அதன்படி செயல்படுபவர்களின் நன்மை போன்றது அ(ந்த நடை முறையை உருவாக்கிய)வருக்கு உண்டு. அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது.
யார் இஸ்லாத்தில் (அதன் அடிப்படைக்கு எதிரான) ஒரு தீய நடைமுறையை உருவாக்கி விட, அவருக்குப் பிறகும் அந்த நடைமுறை செயல்படுத்தப்படுகிறதோ அவருக்குப்பின் அதன்படி செயல்படுகிறவர்களின் பாவம் போன்றது அவருக்கு உண்டு. அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாது.
அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம் 4831
விண்டோஸ் எனப்படும் சாப்ட்வேரைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்திய மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளர் பில்கேட்ஸுக்கு, உலகில் யாரெல்லாம் விண்டோஸ் மென்பொருளை வாங்குகின்றார்களோ அதிலிருந்து ஒரு பங்கு ராயல்டியாகச் சென்று கொண்டேயிருக்கின்றது.
இது போன்று தான் கொலையை முதன்முதலில் அறிமுகப்படுத்தியதற்காக அதன் ராயல்டி ஆதமின் மகனுக்குப் போய்ச் சேருகின்றது. உலகில் நடக்கும் ஒவ்வொரு கொலைக்கும் ஆதமுடைய மகன் முன்மாதிரியாக இருப்பதால் அதற்கும் இதற்கும் நேரடித் தொடர்பு இருக்கின்றது.
இன்று நடக்கும் கொலையில் ஆதமின் மகனுக்குப் பங்கு என்றால் இந்தக் கொலையாளியின் பாவத்தை அவர் சுமக்கிறார் என்பதல்ல. இந்தக் கொலைக் குற்றத்திற்கான தண்டனை ஆதமின் மகனுக்கு வழங்கப்படவில்லை. கொலையை முதன்முதலில் அறிமுகப்படுத்தியதற்கான தண்டனை தான் அவருக்கு வழங்கப்படுகின்றது.
கொலை என்பதை உலகிற்கு அறிமுகப்படுத்தியதன் மூலம் ஆதமின் மகன் செய்த பாவத்திற்குத் தான் இங்கு தண்டனை தரப்படுகின்றதே தவிர இன்று நடக்கும் கொலைக்கான பாவத்தை ஆதமின் மகன் சுமக்கவில்லை.
இது எப்படி ஒருவர் சுமையை மற்றவர் சுமப்பதாக ஆகும்?
இப்ராஹீம் நபியின் தீக்குண்டத்தை ஊதிய பல்லிக்கும் அதன் சந்ததிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அப்படியிருந்தும் இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டி சம்பந்தப்படுத்தியிருக்கின்றார் என்றால் இவர் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகின்ற ஆசாமி என்பது இதில் புலனாகின்றது. அதனால் தான் ஜாக் இவரைத் தந்திரமாகக் காலை வாரிவிட்டது.
இது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாகிய முஹம்மதிடமிருந்து ரோமாபுரியின் அதிபர் ஹெராக்ளியஸுக்கு (எழுதப்படும் கடிதம்:) நேர்வழியைப் பின்பற்றியவர் மீது சாந்தி நிலவட்டும்.
இறை வாழ்த்துக்குப் பின் (விஷயம் என்னவென்றால்); இஸ்லாமை எற்குமாறு உங்களை நான் அழைக்கின்றேன். இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள். (ஏற்றுக்கொண்டால் ஈருலகிலும்) நீங்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள். (நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால்,) அல்லாஹ் உங்களுக்குச் சேரவேண்டிய நன்மையை இருமடங்காகத் தருவான். நீங்கள் புறக்கணித்தால், (உங்கள் நாட்டுக் குடிமக்களான) குடியானவர்களின் பாவமும் உங்களையே சாரும். (புகாரி 6)
இங்கே சற்று சிந்தித்துப் பாருங்கள். உம்முடைய குடிமக்களுடைய பாவமும் உம்மைச் சாரும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரோமாபுரி மன்னருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகின்றார்கள். குடிமக்களுடைய பாவத்திற்கு மன்னர் எப்படிப் பொறுப்பாக முடியும்? அவர்களுடைய சுமையை இவர் எப்படிச் சுமக்க முடியும்? இதெல்லாம் விதிவிலக்கான சட்டங்கள் என்பதைப் புரிந்து கொண்டால் எந்த ஹதீஸையும் நிராகரிக்கின்ற நிலை ஏற்படாது.
மன்னர் இஸ்லாத்தை ஏற்காததற்கான பாவமும், அவருக்கு இஸ்லாத்தைப் பற்றிச் சொல்லப்பட்டும் அதை மக்களிடம் சொல்லாமல் சத்தியத்தை மறைத்த பாவமும் சேரும் என்பதைத் தான் இங்கு நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மன்னருக்கு நேர்வழியை எடுத்துரைக் கின்றார்கள். அதை மன்னர் ஏற்றுக் கொண்டால் அவர் மூலம் குடிமக்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வார்கள். எனவே இரு மடங்கு கூலி கிடைக்கும் என்று கூறுகின்றார்கள்.
நபி (ஸல்) அவர்களின் அழைப்பைப் புறக்கணித்து, அதை மக்கள் மத்தியில் சொல்லாமல் விட்டு விடும்போது மக்கள் நேர்வழிக்கு வருவதைத் தடுத்த பாவத்தை மன்னர் செய்கின்றார். இது மன்னர் செய்த பாவம் தானே ஒழிய மக்கள் செய்த பாவம் அல்ல. இதைத் தான் குடிமக்களின் பாவம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
குடிமக்கள் செய்யும் பாவத்தை மன்னர் சுமக்கின்றார் என்று சொல்லி விட்டாலே, ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க மாட்டார் என்ற கோட்பாடு அடிபட்டுப் போய்விடுகின்றது. இதில் விதிவிலக்கு எங்கே இருக்கின்றது?
அப்படியானால் ஈஸா நபி குறித்து கிறித்தவர்கள் சொல்வதையும் விதிவிலக்கு என்று சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா?
கியாமத் நாளில் முழுமையாகத் தமது சுமைகளையும், அறிவின்றி யாரை இவர்கள் வழிகெடுத்தார்களோ அவர்களின் சுமைகளையும் சுமப்பதற்காக (இவ்வாறு கூறுகின்றனர்) கவனத்தில் கொள்க! அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 16:25)
இந்த வசனத்தின்படி தன் குடிமக்களை வழிகெடுத்ததற்குரிய பாவத்திற்கு மன்னர் நேரடிக் காரணமாகின்றார். இதனால் குடிமக்களின் பாவம் மன்னரைப் போய்ச் சேருகின்றது.
இப்படி நேரடியாகச் சம்பந்தப்பட்ட பாவத்தை, சம்பந்தமில்லாமல் அடுத்தவர் பாவம் என்று எழுதினால் என்ன அர்த்தம்? இந்த ஆசாமிக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை என்பது தான்.
அவர்கள் பேசினால் நாமும் பேசுவோம் என்று வீர வசனமெல்லாம் சத்தான வாதத்தை வைத்து விட்டுத் தான் சொல்ல வேண்டும். சொத்தை, சொதப்பல் வாதங்களை வைத்து விட்டு எகத்தாளமான வசனங்கள் வேறு!
பல்லி தொடர்பாகத் துள்ளிக் குதிக்கும் இந்த மேதாவி, நாம் எழுப்பிய கேள்விகளில் “ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியாது’ என்ற கேள்விக்கு மட்டும் சொத்தை வாதங்களைக் கொண்டு பதில் சொல்லியிருக்கின்றார்.
நெருப்புக் குண்டத்தைப் பல்லி ஊதியது எனும் ஹதீஸ் தொடர்பாக எழுத்து வடிவிலும், உரைகள் வாயிலாகவும் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தோம். அவை அனைத்திற்கும் இவர் பதில் சொல்லவில்லை. அவற்றை இங்கே பட்டியலிடுகின்றோம்.
- வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே பணிகின்றன. அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் பணிகின்றன. (அல்குர்ஆன் 13:15)
“வானங்களில் உள்ளோரும், பூமியில் உள்ளோரும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், உயிரினங்களும், மனிதர்களில் அதிகமானோரும் அல்லாஹ்வுக்குப் பணிகின்றனர்” என்பதை நீர் அறியவில்லையா? இன்னும் அதிகமானோர் மீது வேதனை உறுதியாகி விட்டது. அல்லாஹ் இழிவுபடுத்தி விட்டவனுக்கு மதிப்பை ஏற்படுத்துபவன் இல்லை. அல்லாஹ் நாடியதைச் செய்வான். (அல்குர்ஆன் 22:18)
உலகில் உள்ள அனைத்துப் படைப்புகளும் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்படுகின்றன என்று இந்த வசனங்கள் ஆணித்தரமாகத் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தப் பல்லி மட்டும் அல்லாஹ்வின் கட்டளைக்கு எதிராகச் செயல்பட்டதாக மேற்படி ஹதீஸ் தெரிவிக்கின்றது. அல்லாஹ்வுக்கு எதிராகப் பல்லி போர்க்கொடி தூக்கியது, புரட்சி செய்கின்றது என்று குர்ஆன் வசனத்திற்கு முரணாகப் பேசும் இந்த ஹதீஸின் கருத்து ஏற்கத்தக்கதா?
- சாதாரணமாக அண்டாவுக்குக் கீழ் எரிகின்ற நெருப்புக்கு அருகில் மனிதனே அண்ட முடியவில்லை எனும் போது இத்தனை சிறிய அற்பப் பிராணி, ஆர்ப்பரித்து எரியும் அத்தனை பெரிய நெருப்புக் குண்டத்திற்கு அருகே வந்தால் அது அனல் சுவாலைகளில் பஸ்பமாகப் பொசுங்கியிருக்காதா? ஒரு பெரிய மரக்கடை அளவில் எரிபொருள் போடப்பட்டு, எரிகின்ற தீக்குண்டத்தில் இவ்வளவு சிறிய விரக்கடை அளவுக்கு உள்ள பல்லி என்ன சாதித்து விடப் போகின்றது?
- இப்ராஹீம் நபி தீக்குண்டத்தில் போடப்பட்டதும் உடனே, மறுகணமே, “நீ குளிர்ந்து, இப்ராஹீமுக்குப் பாதுகாப்பாக ஆகிவிடு’ என்று நெருப்புக்கு இறைவன் கட்டளையிடுகின்றான். இதை 21:69, 70 வசனங்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். அப்படியானால் பல்லி எப்போது போய் ஊதியது?
- நெருப்புக் குண்டத்தைப் பல்லி ஊத வேண்டுமெனில் அதற்கு முன்கூட்டியே அந்த சதித்திட்டம் பற்றி ரகசிய ஞானம் இருந்திருக்க வேண்டும். அப்படியானால் மறைவான ஞானம் அந்தப் பல்லிக்கு இருந்ததா?
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “பல்லி தீங்கிழைக்கக் கூடியது!” என்று சொன்னார்கள். அதைக் கொல்லும்படி அவர்கள் உத்தரவிட்டு நான் செவியுற்றதில்லை.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 1831
“நெருப்புக் குண்டத்தைப் பல்லி ஊதியது, அதனால் அதைக் கொல்லுங்கள்’ என்ற செய்தி மேற்கண்ட ஆதாரப்பூர்வமான ஹதீசுக்கு முரண்படுகின்றதே! இதற்கு விளக்கம் என்ன?
ஆயிஷா (ரலி) அவர்களின் இந்த ஹதீஸை நாம் ஆதாரமாகக் காட்டும் போது, இந்தப் பல்லியாளர்கள் நஸயீயில் இடம்பெறும் ஒரு ஹதீஸைக் காட்டி இதன் நிலை என்ன? என்று கேட்கலாம்.
ஒரு பெண்மணி ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றார். அப்போது அவர்களிடம் ஒரு குச்சி இருந்தது. இந்தக் குச்சி எதற்கு? என்று அப்பெண்மணி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டபோது, “இது பல்லியைக் கொல்வதற்காக!‘ என்று பதிலளித்தார்கள். “(பல்லி என்ற) இந்தப் பிராணியைத் தவிர அனைத்துமே இப்ராஹீம் நபியின் நெருப்பை அணைத்தன‘ என்ற நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதனால் அதைக் கொல்லுமாறு கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஸயீத் பின் முஸய்யப், நூல்: நஸயீ 2789
இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் தொடர் சரியாக உள்ள ஹதீஸ் தான்.
பல்லி நெருப்புக் குண்டத்தை ஊதியது தொடர்பான புகாரி ஹதீஸை நாமாவது குர்ஆனுடன் மோதுகின்றது என்பதால் ஒதுக்கி வைக்கின்றோம். இதற்காக ஹதீஸ் மறுப்பாளர்கள் என்று நம்மை நோக்கி விமர்சனம் செய்யும் இவர்கள், ஒரு ஹதீஸை ஏற்று, மற்றொரு ஹதீஸை ஏற்க மறுக்கின்றனர்.
பல்லியைக் கொல்ல வேண்டும் வருகின்ற ஹதீஸ்களை மட்டும் ஏற்றுக் கொண்டு, மேலே நாம் சுட்டிக்காட்டிய புகாரி 1831வது ஹதீஸை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்.
பல்லி சம்பந்தமாக நஸயீயில் வருவது போன்று தன்னையும் சம்பந்தப்படுத்தி செய்திகள் வருவதை அறிந்து கூட ஆயிஷா (ரலி) அவர்கள் அதற்கு மறுப்பாக, புகாரி 1831ல் இடம் பெறும் செய்தியைக் குறிப்பிட்டிருக்கலாம். இந்த இரண்டு செய்திகளையும் இணைத்துப் பார்க்கும் போது இப்படித் தான் முடிவுக்கு வரமுடியும்.
ஆனால் நம்மை ஹதீஸ் மறுப்பாளர்கள் என்று சொல்லிக் கொண்டு, புகாரி 1831 ஹதீஸை இவர்கள் தான் முற்றிலுமாக நிராகரிக்கின்றனர்.
இந்தக் கேள்விகள் அனைத்தும் நாம் பலமுறை கட்டுரைகள், உரைகள் வாயிலாக எழுப்பிய கேள்விகள். இந்தக் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லாமல், ஒருவர் பாவத்தை மற்றவர் சுமக்க மாட்டார் என்ற வாதத்திற்கு மட்டும் பதில் என்ற பெயரில் கிறித்தவர்களின் முதல் பாவக் கொள்கையை ஆதரித்து எழுதிய இந்த மேதாவியின் கருத்தை அல்ஜன்னத்தே ஏற்றுக் கொள்ளவில்லை. இவரின் இந்த விளக்கங்களை முட்டித் தள்ளிவிட்டு, இந்த ஹதீசுக்கு முட்டுக் கொடுக்க வந்த ஜாக்கின் பேரறிஞர்கள், “திட்டமிடாமல் யதார்த்தமாக அந்தப் பல்லி செய்திருக்கலாம்’ என்று சப்பைக்கட்டு கட்டுகின்றனர்.
திட்டமிடாமல் என்றால் அது ஒரு விவகாரமே கிடையாது. ஆனால் பல்லி திட்டமிட்டுச் செய்ததாகத் தான் இந்த ஹதீஸ் கூறுகின்றது. அதனால் பல்லிகளைக் கொல்ல வேண்டும் என்ற காரணமும் சொல்லப்படுகின்றது.
இந்த ஹதீஸை நிலைநிறுத்த இவர்கள் எடுத்து வைத்த வாதங்கள் எதுவுமே செல்லுபடியாகவில்லை என்பதை அவர்களே உணர்ந்து கொண்டார்கள். அதன் பின்னரும் இந்த ஹதீசுக்கு முட்டுக் கொடுத்து, இதனுடன் மோதும் மற்ற ஹதீஸ்களையும் திருக்குர்ஆன் வசனங்களையும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையையும் மறுக்கின்றார்கள் என்றால் இவர்கள் அல்லாஹ்வுடனும் அவனது தூதருடனும் மோதுகின்றார்கள் என்று தான் பொருள்.
மொத்தத்தில் நெருப்புக் குண்டத்தைப் பல்லி ஊதியது என்று சொல்லும் இந்த ஹதீஸ் புகாரியில் இடம்பெற்றிருந்தாலும் மேற்கண்ட காரணங்களால் அது பலவீனமானது, நாம் அறியாத விதத்தில் அறிவிப்பாளர் வரிசையில் ஏதோ குறையிருக்கலாம் என்று கருதி அதை நிறுத்தி வைப்பது தான் குர்ஆனுக்கும் ஹதீசுக்கும் இணக்கமான முடிவாகும். இதை இவர்கள் புரிந்து கொள்வார்களா?