பல்லிக்குப் பகுத்தறிவு பைத்தியத்தில் ஜாக்

தொடர்: 2

பல்லிக்குப் பகுத்தறிவு பைத்தியத்தில் ஜாக்

பல்லி திட்டமிட்டுத் தான் தீக்குண்டத்தை நோக்கி ஊதியது என்பது ஜாக்கின் அல்ஜன்னத் ஏப்ரல் 2013 இதழின் வாதம். அதை நிலைநிறுத்துவதற்கும் நிரூபிப்பதற்கும் ஒரு நீண்ட விளக்கவுரையை, அடுக்கடுக்கான அசத்தல் ஆதாரங்களை (?) மே மாத இதழில் அள்ளி வைத்திருந்தது. அதை அப்படியே உங்கள் பார்வைக்குத் தருகிறோம்.

நெருப்புக் குண்டத்தைப் பல்லி ஊதுமா? என்ற தலைப்பில் சென்ற இதழில் வெளியான எமது கட்டுரையைப் படித்த சில சகோதரர்கள், இப்ராஹீம் (அலை) அவர்களின் அந்த நெருப்புக் குண்டத்தை ஊதிய பல்லி செய்த தவறுக்கு மற்ற பல்லிகள் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்? ஒருவர் செய்த பாவத்தை இன்னொருவர் சுமக்க முடியாது என்ற போது அந்தப் பல்லியை விட்டு விட்டு மற்ற பல்லிகளை அடிப்பது, அடிக்கச் சொல்வது சரியானதாகத் தெரியவில்லையே! என்று கேட்டார்கள். அவர்கள் எழுதியுள்ள நூலிலும் இதைத் தான் கூறியிருந்தார்கள். (பார்க்க: ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?)

ஒருவர் செய்ததற்கு இன்னொருவர் சுமக்க மாட்டார் என்பது இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றாகும். இதனை யாரும் மறுக்கவில்லை. மறுக்கவும் முடியாது. எனினும் ஒரு விஷயத்தைப் பற்றி அறியும் போது முழுமையாக அறிய வேண்டும். எல்லா விஷயங்களிலும் அதனை ஒட்டியுள்ள பல அம்சங்கள் இருக்கின்றன. அவை எல்லாவற்றையும் இணைத்துத் தான் விளங்க வேண்டும். ஒருவர் செய்த நன்மையோ, பாவமோ மற்றவர்கள் மீது விழாது என்பது தான் நிதர்சமான உண்மையாகும். இந்த அடிப்படையால் தான் உலகின் மிகப் பெரும் மதமான கிருஸ்துவத்தின் அஸ்திவாரமே ஆடிப் போகின்றது. மற்றவர்கள் செய்த பாவங்களையெல்லாம் இயேசு சுமந்து கொண்டார் என்பது அடிப்படையில் பொருத்தமற்ற வாதமாகும். இதனாலேயே கிருஸ்தவம் சீரிய சிந்தனையால் குத்திக் கிழிக்கப்பட்டு சிதறிச் சின்னாபின்னப்பட்டுப் போனது. தவறு செய்தவர்களை விட்டு விட்டு அடுத்தவர்களைத் தண்டிப்பதாலேயே அல்லது அடுத்தவர்களின் பாவங்களைத் தான் சுமந்து கொள்வதாகக் கூறுவதாலேயே பல தத்துவங்கள் உலகில் செயலிழந்து மூலையில் போய் முடங்கிக் கொண்டன. இதிலிருந்து இஸ்லாம் தனித்தன்மை கொண்டதாலேயே ஓங்கி வளர்ந்து வருகின்றது. இதனை விளங்குவதுடன் இன்னொன்றையும் சேர்த்துக் கொண்டால் விஷயம் முழுமையடைந்து விடும். சில சமயங்களில், சொற்ப நேரங்களில் ஒருவருடைய செயல்களால் மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பது தான் இன்னொரு விஷயமாகும். விதிவிலக்காக ஒருசில சமயங்களில் இவ்வாறு நிகழலாம் என்பதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். அதற்கான ஒருசில சான்றுகளை இங்கே நான் தருகிறேன்.

2:40 இஸ்ராயீலின் சந்ததியினரே! நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட்கொடையை நினைவுகூருங்கள். நீங்கள் என் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் நான் உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவேன். மேலும் நீங்கள் எனக்கே அஞ்சுவீர்களாக!

(மேலும் 2:47, 2:63, 2:64 ஆகிய வசனங்கள்)

இங்கே பாருங்கள். உங்களுக்கு நான் செய்த அருட்கொடைகள் என்று அல்லாஹ் கூறுகின்றான். அதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்த யூதர்களைப் பார்த்து மேலுள்ள வசனங்கள் பேசுகின்றன. ஆனால் அருட்கொடைகளை அனுபவித்ததோ, குரங்காக மாற்றப்பட்டதோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த யூதர்களாவர். அவர்களை விட்டு விட்டு அவர்களுக்குப் பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு வந்தவர்களைப் பார்த்து ஏன் பேச வேண்டும்? செய்தது யாரோ! யாரையோ பார்த்து சொல்லப்படுகிறதே! இது குர்ஆனில் இருக்கும் அம்சம் தான். முன்னோர்கள் செய்த செயலுக்காக பின்னோர்கள் பழிக்கப்படுவதும் உண்டு. அவர்கள் செய்ததற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? என்று இவர்கள் ஆதங்கப்பட்டாலும் நடைமுறை இது தான். அதேபோல முன்னோர்கள் செய்த சாதனைகளால் பின்னோர்கள் அதன் பலனை அனுபவிப்பதும் உண்டு. ஆக, இதனைக் குர்ஆன் கோடிட்டுக் காட்டுகிறது என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகவே இதனை இங்கு நான் குறிப்பிட்டேன். இன்னும் வாருங்கள் ஆதாரங்களைப் பார்ப்போம்.

  1. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பனூ இஸ்ராயீல் குலத்தார் (யூதர்கள்) இருந்திராவிட்டால் இறைச்சி துர்நாற்றமடித்திருக்காது. ஹவ்வா (ஆதி மனிதர் ஆதம் நபியவர்களின் மனைவி) இருந்திராவிட்டால் எந்தப் பெண்ணும் தன் கணவனை ஏமாற்றியிருக்க மாட்டாள்.

நூல்: புகாரி 3330

இங்கே பார்த்தீர்களா? இன்றைக்கு நாம் இறைச்சியைப் பாதுகாப்பாக வைக்க என்ன பாடுபடுகிறோம்? இந்த இறைச்சி கெட்டுப் போகக் காரணமே நமக்கு முன் வாழ்ந்த அந்த பனூஇஸ்ரவேலர்கள் தான். அவர்கள் செய்ததற்காக நமக்குத் தண்டனை? அவர்களுடைய செயலுக்காக நம்முடைய இறைச்சி ஏன் கெட்டுப் போக வேண்டும்? இதிலிருந்து தெரிவது என்ன? சில சமயங்களில் ஒருவருடைய தவறுகள் அடுத்தவரையும் பாதிக்கலாம்.

  1. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(உலகில்) ஒரு மனிதன் அநியாயமாகக் கொல்லப்படும் போது அந்தக் கொலையின் பாவத்தில் ஆதம் (அலை) அவர்களின் முதல் மகனுக்கும் ஒரு பங்கு இருக்கவே செய்யும். ஏனெனில் அவர் தான் முதன்முதலாகக் கொலை செய்து (ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தி) அதை வழக்கில் கொண்டு வந்தவர்.

இங்கே பார்த்தீர்களா? உலகில் யார் அநியாயமாகக் கொலை செய்தாலும் அதிலிருந்து ஒரு பங்கு ஆதம் (அலை) அவர்களுடைய முதல் மகனுக்கு போய்ச் சேருகிறது என்கிறது நபிமொழி. இவர் செய்யும் கொலைக்கு அவர் ஏன் பாவம் சம்பாதிக்க வேண்டும்? இவருடைய பாவம் அவரது தலையில் ஏன் விழ வேண்டும்? இது பொது விதியல்ல. எப்போதாவது இப்படி நிகழ்ந்து விடும் என்பதைத் தான் இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. பல்லி விஷயமும் அப்படிப்பட்டது தான்.

  1. இது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாகிய முஹம்மதிடமிருந்து ரோமாபுரியின் அதிபர் ஹெராக்ளியஸுக்கு (எழுதப்படும் கடிதம்:) நேர்வழியைப் பின் பற்றியவர் மீது சாந்தி நிலவட்டும்.

இறை வாழ்த்துக்குப் பின் (விஷயம் என்னவென்றால்); இஸ்லாமை எற்குமாறு உங்களை நான் அழைக்கின்றேன். இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள். (ஏற்றுக்கொண்டால் ஈருலகிலும்) நீங்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள். (நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால்,) அல்லாஹ் உங்களுக்குச் சேரவேண்டிய நன்மையை இருமடங்காகத் தருவான். நீங்கள் புறக்கணித்தால், (உங்கள் நாட்டுக் குடிமக்களான) குடியானவர்களின் பாவமும் (அவர்கள் இஸ்லாமை ஏற்காமல் போவதன் குற்றமும்) உங்களையே சாரும்.

வேதக்காரர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள பொதுவான ஒரு விஷயத்திற்கு வாருங்கள். “அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் நாம் வணங்கலாகாது; அவனுக்கு எதனையும்/ எவரையும் நாம் இணைவைக்கலாகாது; அல்லாஹ்வையன்றி நம்மில் யாரும் யாரையும் இரட்சகர்களாக்கிக் கொள்ளலாகாது. இதன் பிறகும் அவர்கள் ஏற்க மறுத்தால் “நாங்கள் முஸ்லிம்கள் தான் என்பதற்கு நீங்கள் சாட்சிகளாக இருங்கள்என்று கூறிவிடுங்கள். (புகாரி 6)

இங்கே சற்று சிந்தித்துப் பாருங்கள். உம்முடைய குடிமக்களுடைய பாவமும் உம்மைச் சாரும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரோமாபுரி மன்னருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகின்றார்கள். குடிமக்களுடைய பாவத்திற்கு மன்னர் எப்படிப் பொறுப்பாக முடியும்? அவர்களுடைய சுமையை இவர் எப்படிச் சுமக்க முடியும்? இதெல்லாம் விதிவிலக்கான சட்டங்கள் என்பதைப் புரிந்து கொண்டால் எந்த ஹதீஸையும் நிராகரிக்கின்ற நிலை ஏற்படாது. ஹதீஸை மறுக்கும் கூட்டத்திலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக! அவர்கள் பேசினால் நாமும் பேசுவோம் இன்ஷா அல்லாஹ்.

அல்ஜன்னத், மே 2013

“கிருஸ்தவம் சீரிய சிந்தனையால் குத்திக் கிழிக்கப்பட்டு சிதறிச் சின்னாபின்னப்பட்டுப் போனது. தவறு செய்தவர்களை விட்டு விட்டு அடுத்தவர்களைத் தண்டிப்பதாலேயே அல்லது அடுத்தவர்களின் பாவங்களைத் தான் சுமந்து கொள்வதாகக் கூறுவதாலேயே பல தத்துவங்கள் உலகில் செயலிழந்து மூலையில் போய் முடங்கிக் கொண்டன”

என்றெல்லாம் எழுதி விட்டு, அடுத்த வரியிலேயே இஸ்லாத்திலும் அதுபோன்ற நிலை உண்டு என்று எழுதினால் இவர்கள் என்ன சொல்ல வருகின்றார்கள்? இஸ்லாமிய மார்க்கமும் அதுபோன்று சிதறி, சின்னாபின்னமாக்கப்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் போன்று தெரிகின்றது.

கட்டுரையை முடிக்கின்ற இந்தத் தோரணையைப் பார்த்தால், “தவ்ஹீத் ஜமாஅத் வைத்த வாதம் ஒரு சொத்தை வாதம், அதை ஒரு சுண்டு சுண்டி விட்டேன்; அது சுருண்டு விட்டது. இனி ஒருபோதும் அது எழுந்திருக்க முடியாது. இனி என்ன வாதம் வைத்தாலும் அதன் பட்டையைக் கழற்றி விடுவேன்’ என்று சட்டையைக் கழற்றிக் கொண்டு களத்தில் நிற்கும் பயில்வானைப் போன்று இந்தக் கட்டுரையை முடிக்கின்றார். அவர்கள் பேசினால் நாமும் பேசுவோம் என்ற ஆணவ வார்த்தைகளை இந்த ஆசாமி தன் எழுத்தில் காட்டுகின்றார்.

தனி மனித ஒழுக்க வாழ்க்கையில் நீர்த்துப் போன, ஆசாடபூதியான, ஒரு பால் உத்தமபுத்திரன் தான் இந்தச் சவடால் வசனம் பேசுகின்றார். இந்த ஆசாடபூதி எழுப்பிய மாளிகை அசையாமல், ஆட்டம் காணாமல் நின்றதா? அதுதான் இல்லை. அடுத்த மாத அல்ஜன்னத் (ஜூன் 2013) இதழ் வெளியாவதற்குள் அவர்களது வாதங்களின் அஸ்திவாரம் அரித்து ஆட்டம் கண்டு அதளபாதாளத்தில் வீழந்து விட்டது.

அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தின் மீதும், அவனது திருப்தியின் மீதும் தனது கட்டடத்தை நிர்மாணித்தவன் சிறந்தவனா? அல்லது அரிக்கப்பட்டு விழுந்து விடும் கட்டடத்தை கரை ஓரத்தில் கட்டி அதனுடன் நரகத்தில் சரிந்து விழுந்து விட்டவன் சிறந்தவனா? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

அல்குர்ஆன் 9:109

பல்லிக்குப் பகுத்தறிவு கொடுத்து, அதற்கு ஆதாரமாக இந்த ஆசாமி எழுப்பிய வாதங்கள் அனைத்தும் மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் சொல்கின்ற கதையாகிவிட்டது.

இவரது ஆணவத்திற்கும் அகந்தைக்கும் அடி கொடுத்தது தவ்ஹீத் ஜமாஅத்தினர் அல்ல. அவரது ஜாக் ஆட்களே எலும்பு கூடத் தேறாத அளவுக்கு அடி கொடுத்திருக்கின்றார்கள்.

தங்களுக்குத் தாங்களே முரண்பட்டு எழுதியிருக்கும் அல்ஜன்னத்தில் ஒரு கேள்விக்கு அவர்கள் அளித்திருக்கும் பதிலைப் பாருங்கள்.

கேள்வி: இப்ராஹீம் (அலை) அவர்கள் போடப்பட்ட நெருப்புக் குண்டத்தைப் பல்லி ஊதியது தொடர்பான ஹதீசுக்கு கடந்த இதழில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. அதில் இப்ராஹீம் (அலை) அவர்கள் காலத்தில் ஒரு பல்லி ஊதியதற்காக இப்போதுள்ள பல்லியை ஏன் அடிக்க வேண்டும் என்ற நியாயமான கேள்விக்குக் கொடுக்கப்பட்டிருந்த பதில் சரியாகத் தோன்றவில்லை. சரியான விளக்கம் தரவும்.

பதில்: அந்த ஹதீஸை சரியாகப் புரிந்து கொள்வதற்கு புகாரியில் இடம்பெற்றுள்ள அந்த ஹதீஸைப் பார்ப்போம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். மேலும் அவர்கள் அது இப்ராஹீம் (அலை) தீக்குண்டத்தில் எறியப்பட்ட போது அவர்களுக்கெதிராக (நெருப்பை) ஊதி விட்டுக் கொண்டிருந்தது என்றும் சொன்னார்கள்.

நூல்: புகாரி 3359

இங்கு நபி (ஸல்) அவர்கள் பொதுவாகப் பல்லியைக் கொல்லும்படி கூறுகிறார்கள். ஏனென்றால் அது மனிதர்களுக்குத் தீங்கு தரக்கூடிய ஜந்து. அதற்குக் கூடுதல் விளக்கம் தான் இப்ராஹீம் (அலை) அவர்களின் நெருப்புக்குண்டத்தை ஊதியதைச் சுட்டிக் காட்டுகிறார்கள். ஏனென்றால் இதைக் கூறிய நபி (ஸல்) அவர்களுக்கும், கேட்டுக் கொண்டிருந்த ஸஹாபாக்களுக்கும் இப்ராஹீம் (அலை) அவர்கள் காலத்தில் ஊதிய பல்லி வேறு, பிற்காலத்தில் இருக்கும் பல்லிகள் வேறு என்பது தெரியும்.

ஆனால் அவற்றுக்கு மத்தியில் ஓர் ஒற்றுமை உள்ளது. அது என்னவெனில் அறிந்தோ, அறியாமலோ மனிதர்களுக்குப் பல்லிகள் தீங்கு செய்து கொண்டிருக்கும். நடைமுறையில், நாம் தண்ணீர் வைக்கின்ற இடத்திலும் அதிகம் பயன்படுத்துகின்ற இடத்திலும் வந்து பல்லி எச்சமிடுவதைப் பார்க்கிறோம். உணவு சமைத்துக் கொண்டிருக்கும் போதோ, உணவுப் பொருள் இருக்கும் இடத்திற்கோ நேராக மேலே வந்து நிற்பதையும், அவற்றில் வந்து விழுவதையும் அதனால் மனிதர்களுக்குப் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதையும் காண்கிறோம்.

இப்ராஹீம் (அலை) அவர்களின் நெருப்புக் குண்டத்தின் திசையை நோக்கி ஊதிய பல்லி, ஒரு நபிக்கு இடையூறு செய்ய வேண்டும் என்று திட்டமிடாமல் யதார்த்தமாகச் செய்திருக்கலாம். ஆனால் அறிந்தோ, அறியாமலோ மனிதர்களுக்குத் தீங்கு ஏற்படுத்தி விடுவது தான் பல்லிகளின் இயல்பு என்பதை விளக்குவது தான் இந்த ஹதீஸில் நபியின் நோக்கம்.

இப்படிப் புரிந்து கொண்டால் இந்த ஹதீஸில் ஆட்சேபிக்க எதுவும் இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அதனால் தான் இந்தச் செய்தியை அறிவித்த ஸஹாபாக்கள் மற்றும் ஹதீஸ் அறிஞர்கள் உள்ளிட்ட முஸ்லிம்கள் அனைவரும் இதை மறுக்காமல் ஏற்றிருக்கிறார்கள். அல்லாஹ் அவனது மார்க்த்தைச் சரியாகப் புரிந்து செயல்பட அனைவருக்கும் நல்லுதவி செய்யட்டும்.

(அல்ஜன்னத், ஜூன் 2013)

ஏப்ரல் அல்ஜன்னத் இதழில், பல்லி திட்டமிட்டுத்தான் தீக்குண்டத்தை ஊதியது; பல்லியின் நிய்யத் (?) இப்ராஹீம் நபியவர்களுக்குத் தீங்கிழைக்க வேண்டும் என்பது தான் என்று எழுதினார் இந்த ஆசாமி. (இதற்கு ஆகஸ்ட் மாத ஏகத்துவ இதழில் சம்மட்டி அடி கொடுக்கப்பட்டது வேறு விஷயம்)

மே மாத அல்ஜன்னத் இதழில், பல்லி திட்டமிட்டு ஊதியது என்ற வாதத்தைப் பல்வேறு ஆதாரங்களைப் போட்டு தூக்கி நிறுத்தினார்.

ஜூன் மாத அல்ஜன்னத் இதழில் ஜாக்கினர் இதற்குச் சரியான பதிலடி கொடுத்துள்ளனர். தான் வெளியிட்ட வாதத்திற்கு நேர்முரணான வாதத்தை மறு மாதமே வெளியிடுகின்ற ஒரே அமைப்பு ஜாக் தான்.

“இப்ராஹீம் (அலை) அவர்களின் நெருப்புக் குண்டத்தின் திசையை நோக்கி ஊதிய பல்லி, ஒரு நபிக்கு இடையூறு செய்ய வேண்டும் என்று திட்டமிடாமல் யதார்த்தமாகக் செய்திருக்கலாம்” என்று எழுதியுள்ளனர்.

பல்லி சிந்தித்து ஊதவில்லை; அது பொதுவாக மனிதனுக்குத் தீங்கிழைக்கும் வகையில் படைக்கப்பட்டுள்ளது என்று கூறி, அல்ஜன்னத் தன்னுடைய முந்தைய இதழுடன் மோதிக் கொள்கின்றது. “பைத்தியத்தில் ஜாக்’ என்று நாம் தலைப்பிட்டதை உறுதிப்படுத்தியுள்ளது.

இவர்களின் முரண்பாட்டை மட்டும் இந்த இதழில் நாம் சுட்டிக் காட்டியிருக்கிறோம். இவர்களின் வாதங்களுக்கான பதில் இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் வெளிவரும்.