பஜனை மவ்லிதுகள் பகிரப்படும் நேர்ச்சைகள்

பஜனை மவ்லிதுகள் பகிரப்படும் நேர்ச்சைகள்

மார்கழிப் பனி மச்சைத் துளைக்கும்; தைப் பனி தரையைத் துளைக்கும் என்பார்கள். மார்கழி, தை மாதங்களின் பனி மச்சைத் துளைக்கிறதோ இல்லையோ காதைத் துளைத்து விடுகின்றது. காரணம் இம்மாதங்களில் சந்திக்குச் சந்தி, சன்னதிக்குச் சன்னதிகளில் கட்டப்பட்டிருக்கும் கூம்பு வடிவக் குழாய்கள் பல்வேறு கடவுள்களின் பெயரால் கொட்டுகின்ற பஜனைப் பாடல்கள் நம்முடைய செவிப்பறைகளைக் கிழித்து விடுகின்றன. இதய நோயாளிகளை இம்சைப்படுத்தி விடுகின்றன.

இவ்வாறு செய்வதற்குக் காரணம், படுத்துக் கிடக்கும் கடவுள்களை இந்தப் பாடல்கள் தட்டி எழுப்பி விடும் என்று நம்புவதால் தான். அதனால் குளிர் காலத்தில் மட்டுமல்லாது எல்லாக் காலங்களிலும் இது போன்ற பாடல்களைப் பாடுகின்றனர்.

இதற்கு இணையாக முஸ்லிம்களும் சில பாடல்களின் மூலம் தாங்கள் நம்பியிருக்கும் நாயகர்களை வழிபாடு செய்கின்றனர்.

முஹர்ரம் மாதத்தில் ஹஸன்-ஹுஸைன், ரபீயுல் அவ்வல் மாதத்தில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள், ரபீயுல் ஆகிர் மாதத்தில் முஹ்யித்தீன், ஜமாஅத்துல் ஆகிர் மாதத்தில் ஷாஹுல் ஹமீது, ரஜப் மாதத்தில் காஜா முயீனுத்தீன், ஷஅபான் மாதத்தில் ஷாஃபி இமாம் ஆகிய நாயகர்கள் மீது புகழ் பாக்கள் பாடி ஒரு சாரார் வழிபாடு செய்கின்றனர். இந்த சாரார் வேறு யாருமல்லர்! தங்களை சுன்னத் வல்ஜமாஅத் என்று கூறிக் கொள்பவர்கள் தான்.

இதோ இப்போது ரபீயுல் அவ்வல் மாதம் துவங்கி விட்டது. இம்மாதம் துவங்கியதும் மவ்லிது பஜனைப் பாடல்களும் துவங்கி விடும்.

பிற மதத்தவர்கள் தங்கள் வழிபாடு முடிந்ததும் இனிப்புப் பாயாசம், இன்னபிற பதார்த்தங்கள், பண்டங்கள் போன்ற படையல்களை பிரசாதம் என்ற பெயரில் வழங்குவார்கள். நமது ஆட்கள் நெய்ச் சோறு, புலவுச் சோறு ஆக்கி, தபர்ருக் (அருளாசி பெற்றது?) நேர்ச்சை என்ற பெயரில் வழங்குவார்கள். இந்தச் சாப்பாட்டில் ஒரு பருக்கை கூட தரையில் விழாமல் பார்த்துக் கொள்வார்கள்.

இந்த மவ்லிது ஓதும் வீடுகளில் மீன் வாசனைக்குக் கூட இடம் கிடையாது. ஆட்டிறைச்சிக்கு மட்டுமே அனுமதி! இவர்களது இந்த நடவடிக்கையே இது கறிச் சோறுக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பாட்டுக் கச்சேரி; இறைச்சிச் சோறுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இன்னிசை கானம் என்று விளங்கிக் கொள்ளலாம்.

இப்படிப் பல்வேறு கடவுள்களின் பெயரால் பாடப்படும் பாடல்கள், அவை பாடி முடிந்த பின் பகிரப்படும் படையல்கள் ஆகியவற்றைப் பார்க்கும் போது, இந்த மவ்லிதுகள் பிற மதக் கலாச்சாரப் பின்னணியைக் கொண்டவை என்பதை நமக்கு எடுத்த எடுப்பிலேயே நன்கு தெளிவுபடுத்தி விடுகின்றன. இருப்பினும் போலி சுன்னத் வல்ஜமாஅத்தினர் இதை ஓர் இபாதத், அதாவது அல்லாஹ்விடம் நன்மையைப் பெற்றுத் தரும் வணக்கம் என்று நம்புகின்றனர். இது ஒரு வணக்கமல்ல! மாறாக அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுத் தரும் பெரும் பாவம் என்பதை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

  1. பிற மதக் கலாச்சாரம்

பிற சமுதாயக் கலாச்சாரத்திற்கு ஒப்ப நடப்பவன் அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவனே! என்பது நபிமொழி. (நூற்கள்: தப்ரானி, பஸ்ஸார்)

  1. பித்அத்

வணக்கம் என்றால் அது குர்ஆனில் இடம் பெற்றிருக்க வேண்டும். அல்லது ஹதீஸில் இடம் பெற்றிருக்க வேண்டும். ஹதீஸ் என்றால் நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவையாகும். இம்மூன்றிலும் இந்த மவ்லிது என்ற வணக்கம் இடம்பெறவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப் பட்டதாகும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 3697

இந்த ஹதீஸின்படி மவ்லிது என்பது நிராகரிக்கப்பட வேண்டிய காரியமாகும்.

  1. நபி (ஸல்) அவர்களைக் கடவுளாக்குதல்

அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும்; அவனைத் தவிர வேறு யாரையும் எதையும் வணங்கக் கூடாது என்ற கொள்கையை நிலைநாட்ட வந்த அகில உலகத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் இந்த மவ்லிதுப் பாடல்களில் கடவுளாகச் சித்தரிக்கப்படுகின்றார்கள்.

பாவங்களை மன்னிப்பவர்; குறைகளை மறைப்பவர்

நோய்களை நீக்குபவர்; வறுமையைப் போக்குபவர்

வாட்டத்தைக் களைபவர்; வளத்தைத் தருபவர்

என்றெல்லாம் இறந்து விட்ட நபி (ஸல்) அவர்களை உயிருடன் இருப்பதாக நம்பி, அவர்களை இந்தப் பாடல் வரிகளில் அழைத்துப் பிரார்த்திக்கின்றனர்.

மனிதன் மரணிப்பவனே!

இவ்வாறு முஹம்மது (ஸல்) அவர்களை அழைத்துப் பிரார்த்திப்பவர்கள், நபியவர்கள் ஒரு மனிதர் என்பதை மறந்து விட்டனர்.

நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 18:110

முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு மனிதர் என்பதால் அவர்கள் மரணத்தைத் தழுவியே ஆக வேண்டும். இதையும் திருக்குர்ஆன் விளக்குகிறது.

(முஹம்மதே!) நீர் இறப்பவரே. அவர்களும் இறப்போரே.

அல்குர்ஆன் 39:30

இத்தனைக்குப் பிறகும் முஹம்மது (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்று யாராவது நம்ப முடியுமா? ஒரு போதும் முடியாது.

ஆனால் தங்களை சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்று அழைத்துக் கொள்ளும் இந்த சாரார், நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று பாவித்து இந்தப் பாடல்கள் வழியாக அவர்களை அழைத்து வழிபடுகிறார்கள். இதற்குத் தான் இவர்கள் மவ்லிது என்று குறிப்பிடுகிறார்கள்.

பிற மதத்தவரின் பஜனைப் பாடல்களுக்கும், இவர்களது மவ்லிதுப் பாடல்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை என்பதை நாம் நன்கு தெரிந்து கொள்ளலாம்.

பிற மதத்தவர்கள் பல கடவுள்களை அழைத்துப் பாடுவது போல் இவர்களும், இந்த மாதம் நபி (ஸல்) அவர்கள் பெயரால் மவ்லிது, அடுத்த மாதம் முஹ்யித்தீன் மவ்லிது என்று பல கற்பனைக் கடவுள்களை அழைக்கின்றனர்.

ஷஃபாஅத்தா? சாபமா?

இவ்வாறு முஹம்மது நபி (ஸல்) அவர்களைக் கடவுளாக்கிப் பாடுகின்ற மவ்லிதுக் கூப்பாடுகளை முடித்து சாப்பாட்டுக் கூத்துகள் நடக்கின்றன. இவற்றின் மூலம் நபி (ஸல்) அவர்களின் ஷஃபாஅத் (பரிந்துரை) மறுமையில் கிடைக்கும் என்று மனப்பால் குடிக்கின்றனர். ஆனால் நபி (ஸல்) அவர்களைக் கடவுளாக்கிய பாவத்திற்காக இவர்களுக்கு மறுமையில் கிடைக்கப் போவது ஷஃபாஅத் அல்ல, சாபம் தான். இதைக் கீழ்க்காணும் புகாரி ஹதீஸ் விவரிக்கின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் (மறுமை நாளில் காலில்) செருப்பணியாதவர்களாகவும் நிர்வாணமானவர் களாகவும், ஆண் குறிகளின் நுனித் தோல் நீக்கப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள்.

பிறகு, “முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்” (21:104) என்னும் இறை வசனத்தை ஓதினார்கள்.

மறுமை நாளில் (நபிமார்களில்) முதன் முதலாக (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக்கப்படுபவர்கள் இப்ராஹீம் அவர்கள் ஆவர். என் தோழர்களில் சிலர் இடப்பக்கம் (நரகத்தை நோக்கி) கொண்டு செல்லப்படுவார்கள். நான், “இவர்கள் என் தோழர்கள். இவர்கள் என் தோழர்கள்என்று (அவர்களை விட்டுவிடும்படி) கூறுவேன். அப்போது, “தாங்கள் இவர்களைப் பிரிந்(து மரணித்)ததிலிருந்து இவர்கள் தம் மார்க்கத்தை விட்டு விலகி, தாம் வந்த சுவடுகளின் வழியே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்என்று கூறுவார்கள். அப்போது, (அல்லாஹ்வின்) நல்லடியார் (ஈஸா-அலை- அவர்கள்) கூறியதைப் போல், “நான் அவர்களோடு இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்ட போது நீயே அவர்களையும் கண்காணிப்பவனாக இருந்தாய். மேலும், நீ (இப்போது) அவர்களுக்கு தண்டனை அளித்தால் அவர்கள் நிச்சயமாக உன் அடிமைகளே. நீ அவர்களை மன்னித்தாலும் (அப்போதும்) நீயே யாவற்றையும் மிகைத்தவனும் நுண்ணறிவுடையவனுமாய் இருக்கின்றாய்என்னும் (5:117-118) இறை வசனத்தை (பதிலாகக்) கூறுவேன்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 3349

ஈஸா நபியைக் கடவுளாக்கிய கிறித்தவ சமுதாயத்திற்குக் கிடைக்கின்ற அதே நிரந்தர தண்டனை தான் இந்தப் பஜனைப் பாடல் பட்டாளத்திற்கும் கிடைக்கின்றது. இவர்களைத் தங்களது வீடுகளுக்கு அழைத்துப் பாட வைத்து, பண முடிப்பு கொடுத்து, நேர்ச்சைகளையும் பகிர்ந்தளிக்கும் பக்தர்களுக்கும் அதே தண்டனை தான் கிடைக்கின்றது. அல்லாஹ் காப்பானாக!

எனவே இந்தப் பஜனை மவ்லிதுகளைப் படித்து நிரந்தர நரகத்திற்குச் சென்று விட வேண்டாம் என்று மக்களை எச்சரிக்கிறோம்.