பைத்தியம் முத்திப்போன ஜாக்

பல்லிக்குப் பகுத்தறிவு?

பைத்தியம் முத்திப்போன ஜாக்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். மேலும் அவர்கள், “அது இப்ராஹீம் (அலை) (அவர்கள் தீக்குண்டத்தில் எறியப்பட்ட போது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதி விட்டுக் கொண்டிருந்ததுஎன்றும் சொன்னார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஷுரைக் (ரலி),

நூல்: புகாரி 3359

புகாரியில் இடம் பெறும் பல்லி தொடர்பான இந்த ஹதீஸ் குர்ஆனுடன் முரண்படுகிறது என்பது தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு.

அதை விரிவாகப் பல்வேறு வாதங்களை முன்வைத்து தக்க ஆதாரங்களுடன் முன்னரே, ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா? எனும் நூலில் எழுதியிருந்தோம்.

பல வருடங்களாக இது தொடர்பான வாதங்களுக்கு யாராலும் பதிலளிக்கப்படாத நிலையில் கோமா நிலையில் இருந்த, தற்போதும் அவ்வாறே இருக்கின்ற ஜாக் அண்மையில் இதற்குப் பதில் சொல்கிறேன் என வெகுண்டெழுந்து புறப்பட்டு வந்தது. ஏப்ரல் 2013 அல்ஜன்னத் இதழில் பல்லி ஹதீஸ் தொடர்பான நம்முடைய வாதங்களை முன்வைத்து பதில் என்ற பெயரில் உளறிக் கொட்டியிருந்தது.

அந்தோ பரிதாபம்! நாம் எழுப்பியிருந்த வலுவான வாதங்களுக்கு ஜாக் அளித்திருந்த பதில் தனக்கு கோமா நிலை உண்டென்பதை சந்தேகமறப் பறைசாற்றும் வகையில் பல உளறல்களையும், முரண்பாடுகளையும், கிறுக்குத்தனமான வாதங்களையும் உள்ளடக்கியிருந்தது.

குறிப்பாக ஒருவர் பாவத்தை இன்னொருவர் சுமக்க மாட்டார் என்ற இஸ்லாத்தின் அடிப்படையை முன்வைத்து இந்த அடிப்படையுடன் பல்லி ஹதீஸ் முரண்படுகிறது என்ற நம்முடைய விளக்கத்திற்கும் வாதங்களுக்கும் ஜாக் அளித்திருந்த பதில் அக்மார்க் உளறல்களாகும். மேலும் பல்லியைப் பகுத்தறிவுள்ள ஜீவியாக ஆக்கி அவர்கள் அளித்திருந்த பதிலோ பைத்தியக்காரத்தனத்தின் உச்சகட்டம். இவை அனைத்தையும் அக்டோபர் 2013 ஏகத்துவத்தில் நாம் தெளிவாக்கியிருந்தோம்.

அதன் தொடர்ச்சியாக கடந்த டிசம்பர் 2013 அல்ஜன்னத் இதழில் பல்லி ஹதீஸ் தொடர்பாக நாம் முன்னர் வைத்த சில வாதங்களுக்கு (அனைத்து வாதங்களுக்கும் அல்ஜன்னத் பதிலளிக்கவில்லை) பதிலாக வழக்கம் போல் உளறிக் கொட்டியுள்ளது.

அவர்களின் உளறல்களை படிக்கும் போது ஜாக்கிற்குப் பிடித்திருக்கின்ற (பல்லிக்கு பகுத்தறிவு உண்டு என்ற) பைத்தியம் விலகாதோ என்ற அச்சமும் கவலையுமே நம்மை தொற்றிக் கொண்டது. இப்போது அவர்களது உளறல்களை காண்போம்.

நமது வாதம்

வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே பணிகின்றன. அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் பணிகின்றன. 

(அல்குர்ஆன் 13:15)

வானங்களில் உள்ளோரும், பூமியில் உள்ளோரும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், உயிரினங்களும், மனிதர்களில் அதிகமானோரும் அல்லாஹ்வுக்குப் பணிகின்றனர்என்பதை நீர் அறியவில்லையா? இன்னும் அதிகமானோர் மீது வேதனை உறுதியாகி விட்டது. அல்லாஹ் இழிவுபடுத்தி விட்டவனுக்கு மதிப்பை ஏற்படுத்துபவன் இல்லை. அல்லாஹ் நாடியதைச் செய்வான்.

(அல்குர்ஆன் 22:18)

உலகில் உள்ள அனைத்துப் படைப்புகளும் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்படுகின்றன என்று இந்த வசனங்கள் ஆணித்தரமாகத் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தப் பல்லி மட்டும் அல்லாஹ்வின் கட்டளைக்கு எதிராகச் செயல்பட்டதாக மேற்படி ஹதீஸ் தெரிவிக்கின்றது. அல்லாஹ்வுக்கு எதிராகப் பல்லி போர்க்கொடி தூக்கியது, புரட்சி செய்கின்றது என்று குர்ஆன் வசனத்திற்கு எதிராகப் பேசும் இந்த ஹதீஸின் கருத்து ஏற்கத்தக்கதா?

என்று நாம் கேட்டிருந்தோம். (இந்த வாதங்கள் அனைத்தும் பல வருடங்களுக்கு முன்னரே கேட்கப்பட்டவை என்பதை மீண்டும் வாசகர்களுக்கு நினைவூட்டிக் கொள்கிறோம்)

அவர்களது உளறல்

மேற்கண்ட வசனங்கள், வானங்கள் மற்றும் பூமியிலுள்ளவை அனைத்தும் அல்லாஹ்வுக்கு பணிகின்றன என்ற கருத்தை தருகின்றன. இதனடிப்படையில் பல்லி இப்றாஹீம் நபியின் நெருப்புக் குண்டத்தை ஊதுவது சாத்தியமில்லை என்றால் நபிமார்களுக்கு எதிராக நிராகரிப்பாளர்கள் போர் செய்வதற்கு பயன்படுத்திய குதிரைகள் எல்லாம் திரும்பி ஓடியிருக்க வேண்டுமே? குறிப்பாக நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக எதிரிகள் பயன்படுத்திய ஒட்டகங்கள், குதிரைகள் எல்லாம் திரும்பி ஓடியிருக்க வேண்டும். நிராகரிப்பாளர்களோடு முரண்டுபிடித்திருக்க வேண்டும்? ஏன் அவ்வாறு செய்யவில்லை?

எனவே இவர்கள் குர்ஆன் வசனத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்று ஜாக்கினர் பதிலளித்துள்ளார்கள்.

நமது பதில்:

கட்டுரையாளர் கொஞ்சமேனும் சுய நினைவுடன் இதை எழுதினாரா? என்று கேட்க தோன்றுகின்றது. அந்த அளவுக்கு அப்பட்டமான உளறல் இது.

எல்லா உயிரினங்களும் அல்லாஹ்வுக்கு பணிகின்றன என்றால் எதிரிகளின் ஒட்டகங்கள், குதிரைகள் எல்லாம் அல்லாஹ்வுக்கு எதிராக நபிமார்களை எதிர்த்துப் போரிட்டது ஏன்? என்று கேட்கிறார்.

என்னமோ ஒட்டகங்களும் குதிரைகளும் ஒன்று சேர்ந்து, திட்டம் தீட்டி, படை திரட்டி, தானே வலிய முன்வந்து நபிமார்களை எதிர்த்து நின்றதைப் போன்று கட்டுரையாளர் கற்பனை செய்து கொண்டு எழுதியுள்ளார்.

நாம் என்ன வாதத்தை முன் வைக்கிறோம் என்பதைக் கவனிக்காமல் தனக்குத் தோன்றியதை எல்லாம் பதில் என்று எழுதியினால் அது இப்படி உளறலாகத் தான் அமையும்.

வானம் மற்றும் பூமியில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் அல்லாஹ்வுக்குப் பணிகின்றன என்றால் அனைத்து ஜீவராசிகளும் இயல்பாக அல்லாஹ்வுக்கு அடிபணிந்து தான் செயல்படும். அவைகளாக அல்லாஹ்வை எதிர்த்து நிற்காது. புரட்சி செய்யாது என்று அர்த்தம். அதே வேளை மனிதன் தனது ஆளுமையைச் செலுத்தி ஒரு உயிரினத்தைப் பயன்படுத்தினால் அது மனிதன் எவ்வாறு பயன்படுத்துகிறானோ அதற்கு தகுந்தாற் போல செயல்படும். அவ்வாறு செயல்படும் போது அந்த பிராணி அல்லாஹ்வுக்கு எதிராகச் செயல்பட்டது, கட்டுப்படவில்லை என்றாகாது.

போர்க்களத்தில் ஒட்டகங்களும் குதிரைகளும் நபிமார்களை எதிர்த்து நின்றது என்றால் இந்தப் போரில் எப்படியும் நபிகளாரை வீழ்த்த வேண்டும், அபூஜஹல் ஜெயிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அவைகளாக ஒன்று திரண்டு வந்தா நின்றன?

மாறாக, எதிரிகள் (மனிதர்கள்) குதிரைகளையும் ஒட்டகங்களையும் அல்லாஹ்வுக்கு எதிராகப் போரிட பயன்படுத்தினார்கள். வெறுமனே குதிரைகளும் ஒட்டகங்களும் மாத்திரம் நபிமார்களை எதிர்த்து ஆயுதமேந்தி போர்க்களத்தில் நின்றிருந்தால் இந்த மூளை குழம்பிய கட்டுரையாளரின் கேள்வி நியாயம் எனலாம். ஆனால் மனிதர்கள் அவற்றில் தங்களது ஆளுமையைச் செலுத்தி தவறான வழியில் பயன்படுத்தியுள்ளார்கள் என்பதே நிகழ்வு.

ஒரு மரத்தைக் கூட உருட்டுக்கட்டையாகப் பயன்படுத்தி, ஒரு மனிதன் மற்றொரு மனிதனைக் கொலை செய்கிறான். அதனால் மரம் கொலை செய்துவிட்டது என்று கூறுவோமா? மனிதன் கொலை செய்துவிட்டான் என்று கூறுவோமா? மரக்கட்டையால் அடித்ததால் மரம் இறைவனுக்கு மாறு செய்துவிட்டது என்று கூற முடியுமா?

மனிதன் பயன்படுத்தும் போது அதற்கு தகுந்தாற்போலத் தான் உயிரினங்கள் செயல்படும். அப்போது அவை அல்லாஹ்வுக்குக் கட்டுப்படவில்லை என்றாகாது.

ஆனால் மேற்படி பல்லி தொடர்புடைய ஹதீஸ் அவ்வாறல்ல.

இப்றாஹீம் நபி நெருப்புக்குண்டத்தில் போடப்பட்ட போது பல்லி தானே முன்வந்து இப்றாஹீம் நபிக்கு எதிராக நெருப்பை ஊதியது என்று தான் ஹதீஸில் உள்ளது. நெருப்பை ஊதுமாறு பல்லியை யாரும் வலியுறுத்தவில்லை. போர்க்களத்தில் எதிரிகள் நபிமார்களுக்கு எதிராக குதிரைகளையும் ஒட்டகங்களையும் பயன்படுத்தியதைப் போன்று பல்லியின் மீதமர்ந்து இப்றாஹீம் நபிக்கு எதிராக யாரும் அதைப் பயன்படுத்தவில்லை. அது தானாகவே இப்றாஹீம் நபிக்கு எதிராகச் செயல்பட்டதாகத் தான் ஹதீஸ் கூறுகிறது.

இந்த அடிப்படையில் பல்லி அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட மறுத்து, புரட்சி செய்வதாக இந்த ஹதீஸ் கூறுகிறது; எனவே இந்த ஹதீஸ் மேற்கண்ட குர்ஆன் வசனங்களுக்கு முரண்படுகிறது என்று நாம் எழுதியிருந்தோம். இதற்குப் பதிலளிக்கப் புகுந்த சுயநினைவு இழந்த கட்டுரையாளர் இந்த வித்தியாசத்தைப் புரியாமல் சகட்டு மேனிக்கு உளறியிருக்கிறார்.

முதலில் பல்லிக்கு பகுத்தறிவை வழங்கிய ஜாக்கினர் தற்போது குதிரை ஒட்டகம் ஆகியவற்றுக்கும் பகுத்தறிவு உண்டு; அவைகளும் அல்லாஹ்வுக்கு எதிராக ஆயுதமேந்தி போரிடும் என வாதிடுகிறார்கள் போலும். வாதிட்டாலும் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

நமது வாதம்: 2

சாதாரணமாக அண்டாவுக்குக் கீழ் எரிகின்ற நெருப்புக்கு அருகில் மனிதனே அண்ட முடியவில்லை எனும் போது இத்தனை சிறிய அற்பப் பிராணி, ஆர்ப்பரித்து எரியும் அத்தனை பெரிய நெருப்புக் குண்டத்திற்கு அருகே வந்தால் அது அனல் சுவாலைகளில் பஸ்பமாகப் பொசுங்கியிருக்காதா?

இவ்வாறு அவர்களுக்கு நாம் எழுதிய ஏகத்துவம் மறுப்புக் கட்டுரையில் கேள்வி எழுப்பியிருந்தோம். இதற்கு அவர்கள் உளறிய உளறலை படிக்க வேண்டுமே!

அவர்களது உளறல்: 2

எரியும் நெருப்புக் குண்டத்தின் பாதிப்புக்கு உள்ளாகாமல் அதன் உஷ்ணத்தை மட்டும் உணரும் தூரத்திலிருந்து பல்லி ஊதியதாகப் புரிவது தான் எதார்த்தமான புரிதல். இப்படித்தான் நபிகள் நாயகம் கூறியதாக முஸ்லிம்கள் நம்பிவருகிறார்கள்.

நமது பதில்:

அடேங்கப்பா! என்னே விளக்கம்! என்னே தத்துவம்! இப்படித்தான் நபிகளார் கூறியதாக முஸ்லிம்கள் நம்புவதாக குறிப்பிட்டீர்களே! யார் அவர்கள்? அந்த முஸ்லிம்களைப் பார்க்க வேண்டுமே! அப்படியே இந்த தத்துவத்தை உதிர்த்த தங்களையும் காண வேண்டும்.

என்ன சொல்ல வருகிறார் என்று புரிகிறதா? அவ்வளவு பெரிய நெருப்புக் குண்டத்தை அற்பமான பல்லி எப்படி ஊத முடியும்? அதன் அருகில் கூட செல்ல முடியாதே என்று கேள்வி எழுப்பினால் நெருப்பை ஊதிய பல்லி அதன் ஜுவாலைக்கு இரையாகாத வகையில் நெருப்பை விட்டும் தூரமாக தள்ளி நின்று பக்கா பாதுகாப்புடன் ஊதியதாம். ஊதும் போது தலைக்கவசம் ஏதும் அணிந்திருந்ததா என்பதையும் கட்டுரையாளர் விளக்கினால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

இது தான் பதிலா? இந்த நிலையில் இவ்வாறு புரிவது தான் யதார்த்தமான புரிதல் என்று எகத்தாளம் வேறு.

இப்ராஹீம் நபியை எரிப்பதற்காக மூட்டப்பட்ட நெருப்புக் குண்டம் என்றால் அது எவ்வளவு பிரம்மாண்டமானதாய் இருந்திருக்கும். அதை ஒரு பல்லியால் ஊதி நெருப்பைப் பெருக்க முடியாது என்பது தான் யதார்த்தம். அதன் அருகில் கூட நெருங்க முடியாது என்பது தான் யதார்த்தம்.

ஜாக்கினர் கூறுவதைப் போன்று தூரமாக, பக்கா பாதுகாப்புடன் நின்று ஊதினால் கூட அதன் ஊதுதல் ஒரு சில அங்குலங்கள் கூட தாண்டாது என்பது தான் யதார்த்தம். அதனால் எந்தப் பயனும் இல்லை என்பது யதார்த்தம். இதற்காக பல்லியை இறைவன் தண்டிக்க தேவையில்லை என்பது யதார்த்தம். அப்படியே தண்டித்தாலும் ஒட்டு மொத்த பல்லியையும் தண்டிப்பது நியாயமில்லை என்பது யதார்த்தம். இப்படி குர்ஆன் ஹதீசுடன் ஒப்பிட்டு யதார்த்தமாகப் புரிந்தால் அந்தச் செய்தி குர்ஆனுடன் முரண்படுகிறது என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

ஆனால் இப்படி யதார்த்தத்திற்கு மாற்றமாக, பல்லி பாதுகாப்புடன் நெருப்பை விட்டும் தள்ளி நின்று, ஃபயர் சேப்டி – நெருப்புப் பாதுகாப்புக் கவசம் அணிந்து ஊதியது என்று விளக்கமளித்து, அதையே யதார்த்தம் என்று கூறுவதை என்னவென்பது?

மறுபடியும் தங்கள் பகுத்தறிவை இழந்து, பல்லிக்குப் பகுத்தறிவை வழங்கும் பகுத்தறிவற்ற செயலைத் தவிர்த்து, கொஞ்சம் பகுத்தறிவுடன் சிந்திக்குமாறு ஜாக்கினரை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நமது வாதம்: 3

இப்ராஹீம் நபி தீக்குண்டத்தில் போடப்பட்டதும் உடனே, மறுகணமே, “நீ குளிர்ந்து, இப்ராஹீமுக்குப் பாதுகாப்பாக ஆகிவிடு” என்று நெருப்புக்கு இறைவன் கட்டளையிடுகின்றான். இதை 21:69,70 வசனங்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். அப்படியானால் பல்லி எப்போது போய் ஊதியது? என்று நாம் கேட்ட கேள்விக்கு அவர்கள் அளிக்கும் பதிலைப் பாருங்கள்.

அவர்களது உளறல்: 3

இப்றாஹீம் நபி நெருப்புக் குண்டத்தில் இருக்கும் போது தான் ஊத வேண்டும் என்பதில்லை. மாறாக அவர்கள் அதில் போடப்படுவதற்கு முன்பே ஊதியிருக்கலாம் என்று வியாக்கியானம் அளித்துள்ளனர்.

நமது பதில்:

போடப்படுவதற்கு முன்பே ஊதியது என்றால் இந்த நெருப்பில் தான் இப்றாஹீம் நபியைப் போடுவார்கள். எனவே இதை ஊதி நெருப்பை பெருதாக்குவோம் என்று முன்யோசனையுடன் ஒரு பல்லி செயல்பட்டது என்று சொல்ல வருகிறீர்களா?

அல்லது இதில் தான் இப்றாஹீம் நபி போடப்படுவார்கள் என்றெல்லாம் அதற்கு தெரியாது; அது தற்செயலாக நெருப்பை ஊதியது என்றால் தற்செயலாக செய்த ஒன்றுக்காக இறைவன் காலம் காலமாக, பரம்பரை பரம்பரையாகத் தண்டிப்பது தான் இறைநியதியா? அவ்வாறு தற்செயலாக செய்த ஒன்றுக்காக ஒட்டு மொத்த (பல்லி) பரம்பரையையும் தண்டிப்பது குர்ஆன், சுன்னா அடிப்படையில் இறைவனுக்குரிய சரியான செயலா?  இதற்கும் கட்டுரையாளர் பதிலளிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

நமது வாதம்: 4

இப்றாஹீம் நபி போடப்பட்ட நெருப்புக் குண்டத்தைப் பல்லி ஊத வேண்டுமெனில் அதற்கு முன்கூட்டியே மனிதர்களின் சதித்திட்டம் பற்றி ரகசிய ஞானம் இருந்திருக்க வேண்டும். அப்படியானால் மறைவான ஞானம் அந்தப் பல்லிக்கு இருந்ததா? என்றும் நாம் கேள்வி எழுப்பியிருந்தோம்.

இதற்கும் மேற்கண்டவாறு அர்த்தமற்ற உளறலையே பதிலாக்கியுள்ளார்கள்.

அவர்களது உளறல்: 4

உஷ்ணம் வந்த திசையில் பல்லி ஊதியது அவ்வளவு தான். அதற்கு மனிதர்களின் சதித்திட்டம் பற்றியெல்லாம் தெரியாது என்று கூறியுள்ளார்கள்.

நமது பதில்:

மறுபடியும் பல்லி எதேச்சையாகத்தான் ஊதியது என்ற முன்னரே பதிலளிக்கப்பட்ட சொத்தை வாதத்தை முன்வைத்து தங்கள் கருத்தை நிலைநிறுத்த முயல்கிறார்கள்.

மேற்கண்ட கேள்வியை நாம் எதற்காக எழுப்பியிருந்தோம் என்ற அடிப்படையை சரியாக அவர்கள் விளங்கவில்லை என்பதையே இந்த பதில் தெரிவிக்கின்றது.

மீண்டும் ஒருமுறை சர்ச்சைக்குரிய அந்த ஹதீஸை நன்றாக படியுங்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். மேலும் அவர்கள், “அது இப்ராஹீம் (அலை) (அவர்கள் தீக்குண்டத்தில் எறியப்பட்ட போது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதி விட்டுக் கொண்டிருந்ததுஎன்றும் சொன்னார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஷுரைக் (ரலி), நூல்: புகாரி 3359

இந்த ஹதீஸில் இரண்டு விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளது.

பல்லியைக் கொல்ல வேண்டும்

அது இப்றாஹீம் நபிக்கு எதிராக நெருப்பை ஊதியது.

பல்லியைக் கொல்ல வேண்டும் என்பதற்கான காரணமாக அது இப்றாஹீம் நபி போடப்பட்ட நெருப்புக் குண்டத்தை ஊதியது என்று தெளிவாக இதில் சொல்லப்பட்டுள்ளது.

இப்றாஹீம் நபிக்கு எதிராக நெருப்பை ஊதியதன் காரணத்தால் இறைவன் அவற்றைத் தண்டிக்கிறான் என்றால் (மேற்படி ஹதீஸில் அவ்வாறு தான் உள்ளது) அவை வேண்டுமென்றே திட்டமிட்டு இச்செயலை செய்திருக்க வேண்டும். எதிரிகள் இப்றாஹீம் நபிக்கு எதிராக நெருப்பை மூட்டியுள்ளார்கள். இப்றாஹீம் நபியை ஒழிப்பதில் நம்முடைய பங்காக அவர்களுடன் சேர்ந்து கொண்டு நெருப்பை நன்றாக ஊதிப் பெரிதாக்குவோம் என்ற யோசனையுடன் பல்லி செயல்பட்டிருக்க வேண்டும். அப்போது தான் இந்தக் காரணத்தை முன்னிட்டு பல்லிக்கு இறைவன் தண்டனை வழங்க முடியும். அது எதேச்சையாக இச்செயலைச் செய்திருந்தால் அது பெரும் தண்டனை வழங்குவதற்குரிய செயல் அல்ல.

எனவே பல்லிக்கு இறைவன் தண்டனை வழங்கியதாக ஹதீஸில் வருகிறதே அப்படியென்றால் பல்லி எதிரிகள் தீட்டிய திட்டத்தை அறிந்து கொண்டு யோசனையுடன் செயல்பட்டதா? அவ்வாறெல்லாம் யோசிப்பதற்கு பல்லிக்கு பகுத்தறிவு உண்டா? இந்த கருத்து சரியா? என்ற வாதங்களின் அடிப்படையில் இந்த ஹதீஸ் சரியானது அல்ல என்று எழுதியிருந்தோம்.

இந்தக் கருத்தை சரியாக உள்வாங்காமல் திரும்பத் திரும்ப அது எதேச்சையாக உஷ்ணம் வந்த திசையை நோக்கி ஊதியது அவ்வளவு தான்; அதற்கு மேல் பேசக் கூடாது என்பது போல பதிலளித்துள்ளார்கள்.

எதேச்சையாகச் செய்திருந்தால் அதை ஏன் தண்டிக்க வேண்டும்? அதுவும் எதேச்சையாகச் செய்த செயலுக்காக ஒட்டு மொத்த பல்லிகளையும் தண்டிப்பது எப்படி நியாயமாகும்? எனவே ஹதீஸின் போங்கு அது எதேச்சையாகச் செய்ததாக குறிப்பிடவில்லை. வேண்டும் என்றே திட்டத்துடன் செய்ததாகத் தான் ஹதீஸ் கூறுகிறது. இதற்கு அவர்களிடத்தில் சரியான, தெளிவான பதில் இல்லை என்பதே உண்மை.

அடுத்து பல்லி நெருப்பை ஊதியது எதேச்சையாக நடந்த செயல் தான் என்பதை நிறுவ பின்வருமாறு உளறுகிறார்கள்.

அவர்களது உளறல் 5

மேற்கண்ட புகாரியின் செய்தியில் பல்லியைக் கொல்லுங்கள் என்பது தனித்தகவலாகவும், நெருப்புக் குண்டத்தைப் பல்லி ஊதியது தனித்தகவலாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே நெருப்பை ஊதிய செயல், தண்டனைக்குக் காரணமாக இடம் பெறவில்லை; தகவலாகத் தான் இடம் பெற்றுள்ளது என்று கூறுகிறார்கள்.

நமது பதில்:

என்ன பிதற்றல் இது! தண்டனைக்கான காரணமாகத் தான் நெருப்பை ஊதிய செயல் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதைத் தெளிவாக முன்னர் விளக்கியுள்ளோம். இதை விட வேறு எப்படி விளக்குவது?

ரஃபீக் அஹ்மதை மென்டல் ஆஸ்பத்திரியில் சேருங்கள்;

அவர் கண்ட மேனிக்கு உளறுகிறார்.

என்று கூறினால் அறிவுள்ள யாரும் ரஃபீக் அஹ்மதை மென்டல் ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்கு, அவர் உளறுகிறார் என்ற செயல் காரணமாகச் சொல்லப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்வார். அதைவிடுத்து அது தனித்தகவல், இது தனித்தகவல் என்று மூளையுள்ள யாரும் பிதற்றிக் கொண்டிருக்க மாட்டார்கள்.

மேலும் நெருப்பை ஊதி விட்டதன் காரணமாகத்தான் பல்லியைக் கொல்லுமாறு நபிகளார் உத்தரவிட்ட நஸயீயில் பதிவு செய்யப்பட்ட செய்தியைக் குறிப்பிட்டிருந்தோம்.

அதற்கு அவர்கள் பதிலளிக்கையில், ஹதீஸ் சரியானது தான். எனினும் இது புகாரியின் அறிவிப்புக்கு மாற்றமாக உள்ளது. இதில் இடம் பெறும் முஆத் பின் ஹிஷாம் என்பவர் சில வேளை தனது எண்ணத்தில் தோன்றியதை அறிவித்து விடுவார். எனவே அந்தக் கூடுதல் தகவல் நஸயீ அறிவிப்பில் உள்ள குறையாகும் என்று கூறியுள்ளார்.

இதுதான் ஹதீஸை இவர்கள் ஆய்வு செய்யும் இலட்சணம்!

புகாரியின் அறிவிப்புக்கு மாற்றமாக இந்தச் செய்தியில் மேற்படி ஹதீஸ் கலை அறிஞர் (?) என்ன கண்டு விட்டார்?

புகாரியின் அறிவிப்பில் நபிகள் நாயகம் பல்லியைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். “அது இப்ராஹீம் (அலை) (அவர்கள் தீக்குண்டத்தில் எறியப்பட்ட போது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதி விட்டுக் கொண்டிருந்தது” என்றும் சொன்னார்கள் என்று இடம் பெற்றுள்ளது.

“(பல்லி என்ற) இந்தப் பிராணியைத் தவிர அனைத்துமே இப்ராஹீம் நபியின் நெருப்பை அணைத்தன. அதனால் அதைக் கொல்லுமாறு நபிகள் நாயகம் கட்டளையிட்டார்கள் என்று நஸயீயில் உள்ளது.

இதில் என்ன முரண்பாடு? புகாரியின் அறிவிப்புக்கு மாற்றமாக நஸயீயில் என்ன உள்ளது? ஒன்றுக்கொன்று மேலதிக விளக்கமாக உள்ள ஒரு செய்தியை, ஒன்றுக்கொன்று மோதவிட்டு, அதற்கு இது மாற்றமாக உள்ளது என்கிறார் எனில் இவரின் இலட்சணம் என்ன என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளுங்கள்.

சாதாரண அறிவுள்ள யாரும் புகாரியின் அறிவிப்புக்கு மாற்றமாக நஸயீயில் எதுவும் இல்லை. ஒன்றுக்கொன்று விளக்கமாகத் தான் உள்ளது என்பதை விளங்க முடியும். ஆனால் இவரின் மாலைக்கண்ணுக்கு அல்லது மழுங்கிப் போன மூளைக்கு முரண்படுவதாகத் தெரிகிறது எனில் எண்ணத்தில் தோன்றியதை அறிவிப்பவர் கட்டுரையாளரே என்பதையும், அவரது அறியாமையையும் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.

அவர்களது உளறல்: 6

அரபி மூலத்தில் உள்ளபடி அவர்களின் (நெருப்புக் குண்டம்) மீது ஊதி விட்டுக் கொண்டிருந்தது என்று இருக்க வேண்டிய தமிழாக்கம், அவர்களுக்கு எதிராக (நெருப்பை) ஊதி விட்டுக் கொண்டிருந்தது என்று தமிழ் வெளியீட்டில் உள்ளது. ஆகையால் பல்லி வேண்டுமென்று தான் ஊதியது என்று சொல்ல முடியாது.

என்று இரண்டுக்குமிடையில் ஏதோ மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருப்பதைப் போன்று தத்து பித்து என தத்துவமாய் உளறிக் கொட்டியுள்ளார்.

நமது பதில்:

அவர்களின் மீது ஊதியது என்பதற்கும் அவர்களுக்கு எதிராக ஊதியது என்பதற்கும் என்ன பெரிய வித்தியாசம்?

அவர்களின் மீது ஊதியது என்றால் அவர்களுக்கு எதிராக ஊதவில்லை என்றாகிவிடுமா? எதிராக இல்லாமல் பிறகு எதற்காக அவர்களின் மீது ஊதியது. நெருப்பை அணைக்கவா? ஜில்லென்ற காற்றுக்காகவா? வழக்கம் போல் மூளை குழம்பி, ஆம் என்று கூறி விடாதீர்கள். அப்படி இருந்திருந்தால் அதைக் கொல்லும் படி நபியவர்கள் உத்தரவிட்டிருக்க மாட்டார்கள்.

மேலும் எதேச்சையாக ஊதியது என்ற பழைய பல்லவியையும் பாடி விடாதீர்கள் அதற்கும் நாம் தெளிவாகப் பதிலளித்துள்ளோம்.

அவர்களது உளறல்: 7

ஒரு வேளை வேண்டுமென்றுதான் பல்லி ஊதியது என்று அர்த்தம் வைப்போம் என பிடிவாதம் பிடித்தாலும் பாதகமில்லை.

இது அவர்களின் அடுத்த உளறல்.

நமது பதில்:

பாதகமில்லை என்றால் பிறகு எதற்காக இவ்வளவு வரிந்து கட்டிக் கொண்டு, தாறுமாறாக உளற வேண்டும்.

கால இடைவெளியில் முரண்பாடுகள் ஏற்படுவது ஒரு ரகம். ஒரு வரி எழுதி விட்டு அடுத்த வரியில் அதற்கு முரண்பட்டு எழுதுவது என்பது தனிரகம்.

இந்த முரண்பாட்டிலிருந்து பல்லியால் பைத்தியம் பிடித்தவர், முரண்பாட்டுப் பிரியர், பல்லிப்பித்தர் ஆகிய அடைமொழிகளுக்கு உரிமையாளர்கள் யார் என்பதும் தெளிவாகப் புலனாகிறது.

அவர்களது உளறல்: 8

மேற்கொண்டு தேள் மற்றும் எலி பற்றிய ஹதீஸ்களை எடுத்தெழுதி இவைகள் எப்படி இயல்பில் தீங்கிழைக்கக் கூடியதோ அது போன்று பல்லியும் இயல்பில் தீங்கிழைக்க கூடிய பிராணியாகும். எனவே அது இயல்பாகத் தீங்கிழைக்கும் செயலைத் திட்டமிட்டு செய்ததாகக் கூறுகிறது என்று வளவளத்துக் கொண்டிருப்பது கூடாது என்று சொல்லி கட்டுரையாளர் வளவளத்துக் கொண்டிருக்கிறார்.

நமது பதில்:

ஒரு பிராணி இயல்பில் எதைச் செய்யுமோ அதைச் செய்தால் அந்தச் செயலை அது திட்டமிட்டு செய்தது என்றாகாது; அவ்வாறு கூறமாட்டோம்; கூறவும் கூடாது.

தேள், பாம்பு போன்றவை இயல்பில் கொட்டும். சிங்கம் இயல்பில் வேட்டையாடும். இவைகள் தமக்குரிய இயல்பில் செயல்பட்டால் அப்போது அது திட்டம் தீட்டி செயல்பட்டது என்ற தோற்றம் வராது.

ஒருவன் சிங்கம் எனது பணத்தைத் திருடியது என்றாலோ, பாம்பு என்னை வாயால் ஊதி கிணற்றில் தள்ளிவிட்டு மேல்கதவையும் தாழிட்டது என்று சொன்னாலோ அவனிடம் என்ன கேட்போம்.

இவற்றைச் செய்ய சிங்கம், பாம்பு போன்றவற்றிற்குத் தகுதி, பகுத்தறிவு உண்டா? ஏனெனில் இவைகள் இதனுடைய இயல்பான குணமல்லவே என்று தானே கேட்போம்.

அதுபோன்று தான் பல்லி அதனுடைய இயல்பான செயலைச் செய்து அதனுடைய தண்டனையாக அதைக் கொல்லுமாறு நபிகள் நாயகம் உத்தரவிட்டிருந்ததாக ஹதீஸ் குறிப்பிட்டால் அதை ஏற்பதில் பிரச்சனை இல்லை.

ஆனால் ஹதீஸில் கூறப்பட்டது என்ன? இப்றாஹீம் நபி போடப்பட்ட நெருப்புக் குண்டத்தைப் பல்லி ஊதியது. இப்றாஹீம் நபிக்கு எதிராகச் செயல்பட்டது. எனவே அதைக் கொல்லுங்கள் என்று ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது.

நெருப்புக் குண்டத்தை ஊதுவது பல்லியின் இயல்பான குணமா? ஒரு பிராணி நபிக்கு எதிராகச் செயல்படுவது அதனுடைய இயல்பா?

என்னவோ இப்றாஹீம் நபியைத் தன் எதிரியாகவும், தன்னை ஹீரோவாகவும் பாவித்துக் கொண்டு நெருப்பை பல்லி ஊதியது என்றால் அது  எப்படி பல்லியின் இயல்பான குணமாக ஆகும்?

எனவே பல்லியின் இயல்பான குணம் பற்றி அந்த ஹதீஸ் கூறவில்லை. தேள், எலி பற்றிய ஹதீஸ்களுக்கும் பல்லி தொடர்புடைய ஹதீஸுக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது என்பதை கட்டுரையாளருக்கு சொல்லிக் கொள்கிறோம்.