பால்குடிச் சட்டம் ஜாக்கின் பித்தலாட்டம்

பால்குடிச் சட்டம் ஜாக்கின் பித்தலாட்டம்

சஹ்லா என்ற நபித்தோழியர் சாலிம் என்பவரை சிறு குழந்தையிலிருந்து வளர்த்துக் கொண்டிருந்தார். சாலிம் தாடி முளைத்த பெரிய இளைஞராக வளர்ந்துவிட்டார். இந்நிலையில் வளர்ப்புக் குழந்தைகள், பெற்றெடுத்த குழந்தைகளின் அந்தஸ்தை அடைய முடியாது. வளர்ப்புக் குழந்தைகளானாலும் அவர்கள் பெரியவராகி விட்டால் அவர்களும் அந்நிய ஆண்களாவார்கள் என்ற சட்டத்தை அல்லாஹ் விதித்தான். இதற்குப் பின் சாலிம் தனது வீட்டுக்கு அடிக்கடி வந்து போவதால் தனது கணவர் அபூஹுதைஃபா கோபம் கொள்வதாக சஹ்லா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தெரிவித்தார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ அவருக்குப் பால் கொடுத்துவிடு. அவர் உனக்கு மகனாகி விடுவார். உனது கணவர் அபூஹுதைபாவும் கோபம் கொள்ள மாட்டார்’ என்று நபி (ஸல்) கூறியதாக ஒரு செய்தி சில ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் செய்தியைப் படிக்கும் போதே சாதாரண அறிவுள்ளவர்கள் இப்படி ஒரு சம்பவம் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்திருக்க முடியாது. இது தவறான தகவல் என்பதை அறிந்து கொள்வார்கள்.

ஆனால் அறிவுக்குச் சற்றும் சம்பந்தமில்லாத ஜாக் இயக்கம் சமீபத்தில் அல்ஜன்னத் இதழில் மேற்கண்ட சம்பவம் குர்ஆனுக்கு முரண்படவில்லை. இது ஆதாரப்பூர்வமான செய்தி என்று ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதில் நம்மைக் கடுமையான முறையில் விமர்சனம் செய்து இருந்தனர்.

இந்தச் சம்பவம் சரியானது என்பதற்கு அந்த இதழில் இவர்கள் தற்போது வைத்துள்ள வாதங்கள் புதியவை இல்லை. சில வருடங்களுக்கு முன்னபாகவே இவற்றுக்கு புத்தக வடிவில் நாம் பதில் சொல்லிவிட்டோம்.

நம்முடைய மாத இதழான ஏகத்துவத்திலும் இதற்கான விளக்கம் தரப்பட்டுவிட்டது. இவர்கள் இப்போது வைத்துள்ள வாதங்கள் அனைத்திற்கும் இணையதளத்திலும் ஏற்கனவே பதில் சொல்லப்பட்டுள்ளது.

அடித்து, சாகடிக்கப்பட்டு, புதைக்கப்பட்ட பாம்பை மறுபடியும் தோண்டி எடுத்து மக்களைப் பயமுறுத்தும் முட்டாள்தனமான வேலையை தற்போது ஜாக் செய்து கொண்டிருக்கின்றது.

இந்தச் செய்தி குர்ஆனுக்கும் பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் இஸ்லாமிய ஒழுக்க முறைகளுக்கும் முரணாக அமைந்துள்ளது என்பதை விளக்கி, “ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை நாம் வெளியிட்டுப் பல வருடங்கள் ஆகிவிட்டது.

இதில்…

குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளை ஏற்கக்கூடாது என்று குர்ஆன் கூறுகின்றது.

குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளை ஏற்ககக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி சில ஹதீஸ்களை நபித்தோழர்களும் மறுத்துள்ளனர்.

குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி சில ஹதீஸ்களை இமாம்களும் மறுத்துள்ளனர்.

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்டாது. குர்ஆனுக்கு முரண்படும் செய்திகள் ஆதாரப்பூர்வமானவை அல்ல. இதுவே ஹதீஸ் கலை விதி

குர்ஆனுடன் முரண்படும் ஹதீஸ்கள் எவை? அவை எப்படி குர்ஆனுடன் முரண்படுகின்றது? இதைச் சரிகாணுபவர்கள் கூறும் உளறல்களுக்கு பதில்.

இதுபோன்ற விஷயங்களை ஆதாரத்துடன் தெளிவுபடுத்தி இருக்கின்றோம்.

இவர்கள் சரிகாணும் சாலிமுடைய சம்பவத்தைக் குறித்தும் விரிவான விளக்கங்களைத் தந்துள்ளோம். இதில் ஒன்றுக்குக் கூட ஜாக் இது வரை பதிலளிக்கவில்லை.

ஜாக் செல்லும் தனிப்பாதை

தான் கேட்ட கேள்விகளுக்கும் வைத்த வாதங்களுக்கும் எதிர்த் தரப்பில் உள்ளவர் பதில் கூறினால் அவருடைய விளக்கங்களுக்குப் பதில் கூறுவது கேள்வி கேட்டவரின் கடமை. இந்த அடிப்படையான அறிவு கூட ஜாக்கிற்கு இல்லை.

இன்றைக்கு ஜாக் வைக்கும் வாதங்களுக்கு ஏற்கனவே நாம் பதில் சொல்லி விட்டோம். நம்முடைய விளக்கத்திற்குத் தான் இன்று வரை ஜாக் பதில் சொல்லாமல் இருக்கின்றது. பதில் சொல்லப்பட்டுவிட்ட கேள்விகளை மறுபடியும் மறுபடியும் கேட்டுக் கொண்டிருப்பவனை பைத்தியம் என்று தான் சொல்ல முடியும்.

ஒருவன் விளங்காமல் கேள்வி கேட்டால் அவனை ஒரு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். விளங்கிய பிறகும் கேட்ட கேள்வியை மறுபடியும் கேட்டுக் கொண்டிருந்தால் இவன் வடிகட்டிய அயோக்கியன். இந்த அயோக்கியத்தனத்தை ஜாக் செய்து கொண்டு நம்மைப் பார்த்து வழிகேடர்கள் என்று கூறுகின்றது.

பொதுவாக ஜாக் இயக்கத்திற்கு என தனிப் பாதை உள்ளது. அது சூடு, சொரணை, மானம், வெட்கம், ரோஷம் இல்லாதவர்கள் செல்லும் பாதையாகும்.

தவ்ஹீத் ஜமாத்தை விமர்சித்து மக்களிடம் ஒரு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டியது. அந்தக் குழப்பத்திற்கு நாம் பதில் சொல்லிவிட்டால் அந்தப் பதிலை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டியது. இந்தக் கேவலமான செயலை ஜாக் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றது.

சாலிமுடைய சம்பவத்தைக் கூறி குழப்பம் செய்வதற்கு முன்னால் சூனியம் தொடர்பாக ஜாக் உளறிக் கொட்டியது. அவர்களின் உளறல்கள் ஒவ்வொன்றுக்கும் வரிக்கு வரி ஏகத்துவத்தில் நாம் பதில் அளித்திருந்தோம்.

மார்க்கம் சொல்லும் தகுதி கடுகளவாவது இவர்களுக்கு இருந்திருந்தால் நமது மறுப்புக் கட்டுரைக்குரிய பதிலை இவர்கள் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் எந்தப் பதிலையும் இது வரை இவர்கள் கூறவில்லை.

பதில் சொல்லும் திராணி இவர்களுக்கு இல்லை எனும் போது இவர்கள் நமக்கு மறுப்பு எழுதினால் இவர்களை அரைவேக்காடுகள் என்று தான் சொல்ல முடியும். இந்த லட்சணத்தில் சாலிம் தொடர்பான பழைய பித்னாவை மறுபடியும் பரப்ப ஆரம்பித்து விட்டது அல்ஜன்னத் மாத இதழ்.

நம்முடைய இந்தக் கட்டுரைக்கும் பதில் சொல்லாமல் ஜாக் ஊமையாக இருந்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பித்தலாட்டமா? பொம்மலாட்டமா?

சாலிம் தொடர்பான சம்பவத்தில் பித்தலாட்டம் செய்ததாக ஜாக், தனது அல்ஜன்னத்தில் ஒரு நாடகம் ஆடியுள்ளது. அல்ஜன்னத் பின்வருமாறு இந்த நாடகத்தை அரங்கேற்றுகின்றது.

இந்த ஹதீஸ் நிராகரிப்பாளர் எழுதி வைத்திருப்பதைப் படித்தால் தவ்ஹீத் பிரச்சாரகர் என்று சொல்வதற்கு மட்டுமல்ல, ஒரு சரியான முஸ்லிம் என்று சொல்லிக் கொள்வதற்கு கூட தகுதியற்றவர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இதோ தனது தவறான கொள்கையை நிலை நிறுத்துவதற்காக ஹதீஸிலேயே எப்படி பித்தலாட்டம் செய்கிறார் என்பதைப் பாருங்கள். பெரியவர் பால் குடிப்பது தொடர்பான ஹதீஸை மறுக்க வேண்டும் என்பதற்காக அந்த ஹதீஸிலேயே தனது கீழ்த்தரமான சிந்தனையை புகுத்தி எழுதுவது.

ஸாலிம் எனும் இளைஞர் அபுஹூதைபா (ரலி) வீட்டுக்குள் வந்து போய்க் கொண்டிருந்தார். தனது மனைவியுடன் ஸாலிம் வந்து பேசிக் கொண்டிருப்பது அபுஹூதைபாவிற்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.

இது இந்த ஹதீஸ் நிராகாரிப்பாளர் தனது திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பின் விளக்கப்பகுதியில் நபிகள் நாயகத்துக்கு சூனியம் எனும் தலைப்பில் 1309 வது பக்கத்தில் எழுதியிருப்பதாகும். 7-வது பதிப்பு.

இதே ஹதீஸை அடுத்த பதிப்பில் எழுதியிருப்பதை பாருங்கள்..

அபுஹூதைபா(ரலி)அவர்களின் மனைவியால் வளர்க்கப்பட்ட ஸாலிம் எனும் இளைஞர்; அபுஹூதைபாவின் வீட்டுக்குள் வந்து போய்க் கொண்டிருந்தார். தனது மனைவியுடன் ஸாலிம் வந்து பேசிக் கொண்டிருப்பது அபுஹூதைபாவிற்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.

பக்கம்: 1446, 8-வது பதிப்பு

இரண்டு பதிப்பிலும் உள்ள வித்தியாசத்தைக் கவனியுங்கள். தான் மறுக்கிற ஹதீஸை கொச்சைப்படுத்தி அருவருப்பாகக் காட்ட வேண்டும் என்பதற்காக ஒரு இளைஞர் அபுஹூதைபா(ரலி) அவர்களின் மனைவியிடம் பழக்கம் வைத்து வந்து பேசிக் கொண்டிருந்ததாக முந்தைய பதிப்புகளில் சித்தரித்துள்ளார். இந்த பித்தலாட்டம் சிலரால் வெளிப்படுத்தப்பட்ட பின் எட்டாவது பதிப்பில் அபுஹூதைபா (ரலி)அவர்களின் மனைவியால் வளர்க்கப்பட்ட இளைஞர் தான் அவர் என்பதை குறிப்பிட்டுள்ளார். உண்மையில் அவர் அபுஹூதைபா (ரலி) அவர்களின் வளர்ப்பு மகன் தான். அபுஹூதைபாவின் மனைவியும் ஸாலிம்(ரலி) அவர்களை மகனாகக் கருதினார்கள். இவ்வாறு தான் ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது.

இங்கே நாம் கவனிக்க வேண்டியது, தான் மறுக்கிற ஹதீஸைக் கொச்சைப்டுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காக ஹதீஸில் உள்ளதை உள்ளபடிச் சொல்லாமல் படிக்கும் போதே அந்த ஹதீஸை மறுக்கத் தோன்றும் விதத்தில் வார்த்தைகளை அமைத்திருப்பது.

ஹதீஸிலேயே இப்படி தில்லுமுல்லு செய்பவர் மார்க்க விஷயத்தைப் பேசுவதில் நம்பகமானவர் அல்ல. ஹதீஸை மறுக்கத் துணிந்து விட்டால் ஹதீஸைத் திரிக்க ஆரம்பித்து விடுவார் என்பது தெளிவாகத் தெரிகின்றது.

நமது விளக்கம்

பழைய பதிப்பில் சாலிம் எனும் இளைஞர் வந்து போய்க் கொண்டிருந்தார் என்று கூறியுள்ளனர். புதிய பதிப்பில் அபூஹுதைபாவின் மனைவியால் வளர்க்கப்பட்டவரான சாலிம் எனும் இளைஞர் என்று கூறியுள்ளனர்.

அபூஹுதைபாவின் மனைவியால் வளர்க்கப்பட்டவரான சாலிம் எனும் தகவலை ஆரம்பத்தில் கூறாமல் விட்டதால் பித்தலாட்டம் செய்துள்ளார் என்று இவர்கள் நாடகம் ஆடுகின்றனர்.

மேற்கண்ட செய்தியின்படி என்னமோ சாலிம் (ரலி), சஹ்லா (ரலி) அவர்களால் பெற்றெடுக்கப்பட்ட மகனாக இருந்தது போலவும் அந்தத் தகவலை இவர்கள் சொல்லாமல் சாலிம் எனும் இளைஞன் என மொட்டையாகக் கூறியது போலவும் கூச்சலிடுகின்றனர்.

சஹ்லா (ரலி) அவர்களால் சாலிம் வளர்க்கப்பட்டிருந்தார் என்ற தகவலைச் சொன்னால் மட்டும் சஹ்லா (ரலி) அவர்களுக்கு சாலிம் மகனாகி விடுவாரா? அவர் சஹ்லா (ரலி) அவர்களின் வீட்டுக்குச் சென்று வருவது சரியானதாகி விடுமா?

சஹ்லா (ரலி) அவர்களால் வளர்க்கப்பட்டாலும் அவர் சஹ்லாவிற்கு அன்னியராகவே இருந்தார் என இந்தச் சம்பவம் கூறுகின்றது என்ற அறிவு கூட இவர்களுக்கு இல்லை.

வளர்க்கப்பட்டவர் பெற்ற மகனாக முடியாது என்ற சட்டம் வந்த பிறகும் சாலிம் (ரலி) சஹ்லா (ரலி) அவர்களின் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார் என இந்தச் சம்பவம் கூறுகின்றது. இதனால் தான் அலாஹ்வின் சட்டப்படி அன்னியராக உள்ள சாலிம் தமது மனைவியிடத்தில் வருவதை அபூஹுதைபாவும் விரும்பவில்லை என இச்சம்பவம் கூறுகின்றது.

சில ஹதீஸ்களில் முன்னர் எழுதியவாறு, அதாவது திருக்குர்ஆன் தமிழாக்கம் 7வது பதிப்பில் உள்ளது போன்ற செய்தி மட்டும் உள்ளது. அந்த ஹதீஸை எடுத்து எழுதியது அவதூறு என்றால் அதைப் பதிவு செய்த முஸ்லிம் இமாம் அவதூறு கூறி விட்டாரா?

ஒரு நபித்தோழர் தவறு செய்யாமல் இருக்கும் போது தவறு செய்தார் என்று சொல்வது தான் பித்தலாட்டம். செய்த தவறைச் சுட்டிக் காட்டுவது பித்தலாட்டமல்ல. பித்தலாட்டத்தின் சரியான பொருளைக் கூட இவர்கள் விளங்கவில்லை.

வளர்ப்பு மகன் பெற்றெடுக்கப்பட்ட மகனைப் போன்று ஆக முடியாது என்ற அல்லாஹ்வின் சட்டம் வந்த பிறகு சாலிம், சஹ்லா (ரலி) அவர்களின் வீட்டுக்குச் சென்றுள்ளார். இவ்வாறு செல்லும் போது சாலிம் (ரலி), சஹ்லா (ரலி) அவர்களுக்கு அந்நிய ஆணாகவே இருந்துள்ளார். இது மார்க்க அடிப்படையில் தவறான செயலும் கூட.

சாலிம் அந்நியராக இருக்கும் நிலையில் தான் சஹ்லா (ரலி) அவர்களின் வீட்டிற்கு சென்றார் என்பதை “சாலிம் எனும் இளைஞன்’ என்ற சொல்லின் மூலம் உணர்த்தியுள்ளோம். இது பித்தலாட்டம் இல்லை. இவர்கள் ஆதாரமாகக் காட்டும் ஹதீஸ்களில் தெளிவாகக் கூறப்பட்ட விசயமாகும்.

பிறகு ஏன் “சஹ்லா (ரலி) அவர்களால் வளர்க்கப்பட்ட சாலிம்’ என புதிய பதிப்பில் மாற்றம் செய்ய வேண்டும் என்று ஒரு சந்தேகம் வரலாம்.

சாலிம் (ரலி), சஹ்லா (ரலி) அவர்களால் வளர்க்கப்பட்டவர் என்பது கூடுதல் தகவலாகும். இதைச் சொல்வதாலோ சொல்லாமல் விட்டாலோ ஹதீஸின் கருத்தில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.

நம்மை விமர்சிப்பவர்கள் இதை ஒரு பெரிய ஃபித்னாவாகப் பேசிக் கொண்டிருப்பதால் அந்த வாசலையும் அடைக்கும் விதமாகவே புதிய பதிப்பில் “சஹ்லா (ரலி) அவர்களால் வளர்க்கப்பட்ட சாலிம் எனும் இளைஞர்’ என்பதையும் சேர்த்துக் கூறியுள்ளார்.

தற்போது நாம் இதைச் சொன்ன பிறகும் நீங்கள் அன்று அப்படிச் சொன்னீர்கள்; இன்று இப்படிச் சொல்கிறீர்கள் என ஜாக் பித்னாவைப் பரப்புகின்றது என்றால் பித்னா செய்வது இவர்களின் இரத்தத்தோடு கலந்துவிட்ட விஷயம், அதைச் செய்யாமல் இவர்களால் இருக்க முடியாது என்பதைத் தெளிவாக நிரூபித்து பித்தலாட்டம் என்ற பெயரில் பொம்மலாட்டத்தை நடத்தியுள்ளது ஜாக்.

பால் எடுத்துக் கொடுக்கப்பட்டதா?

சஹ்லா (ரலி) அவர்கள் ஒரு பாத்திரத்தில் பாலை எடுத்து அதை சாலிமுக்கு பருகக் கொடுத்தார்கள் என்று இவர்கள் பின்வருமாறு வாதிடுகின்றனர்.

முதல் வாதத்தில் சொல்லப்பட்டுள்ளது போல் நேரடியாகப் பால் கொடுக்கப்படவில்லை. பாத்திரத்தில் எடுத்துத் தான் கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படித் தான் நடந்தது என்பதற்கு நம்மிடம் வலுவான ஆதாரம் உள்ளது. அதாவது மார்க்கத்தில் ஒரு விஷயம் சொல்லப்படும்போது அதை ஏற்கனவே மார்க்கம் தடை செய்துள்ள விதத்தில் செய்வதாகவும் புரிய முடிகிறது. இப்படி இரு விதத்திலும் புரிந்து கொள்கிற விதத்தில் அமைந்திருந்தால் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும். அதை மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விதத்தில் செய்வதாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு குர்ஆனிலிருந்து ஆதாரம் காட்ட முடியும். லூத்(அலை)அவர்களிடம் வானவர்கள் மனித வடிவத்தில் வந்த போது அசிங்கமான நோக்கத்துடன் அவர்களின் சமூகத்தவர் அவர்களை நோக்கி வந்தார்கள். அப்போது லூத்(அலை)அவர்கள் அக்கூட்டத்தைப் பார்த்துக் கூறியதை அல்லாஹூதஆலா இவ்வாறு சொல்லிக் காட்டுகிறான்.

என் சமுதாயமே!இதோ என் புதல்விகள் உள்ளனர் .அவர்கள் உங்களுக்கு தூய்மையானவர்கள்.

(அல்குர்ஆன் 11:78 மற்றும் இதன் கருத்து 15: 71)

இங்கு தவறான செயல் செய்யும் நோக்கத்துடன் வந்தவர்களிடம் வெறுமனே என் புதல்விகள் உங்களுக்குத் தூய்மையானவர்கள் என்று லூத் (அலை) அவர்கள் கூறியுள்ளார்கள். இங்கு திருமணம் செய்து என்று கூறப்படாவிட்டாலும் திருமணம் செய்து முறைப்படி அணுகுவதைத் தான் சொன்னார்கள் என்று தான் எல்லோரும் புரிந்து கொள்கிறோம். ஏனென்றால் திருமணம் செய்யாது அணுகுவது தடை செய்யப்பட்டதாகும். அதனால் தான் சில திருக்குர்ஆன் மொழி பெயர்ப்புக்களில் திருமணத்திற்கு எனும் வார்த்தையை அடைப்புக் குறியில் எழுதியிருக்கிறார்கள்.

நமது பதில்

ஒரு நிகழ்வு மார்க்கத்திற்கு முரணாக நடந்ததாகப் புரியவும் வாய்ப்புள்ளது; மார்க்கம் அனுமதிக்கப்பட்ட வழியில் நடந்திருப்பதாக புரியவும் வாய்ப்புள்ளது என்றால் மார்க்கத்திற்கு உட்பட்டு நடந்திருப்பதாகவே புரிய வேண்டும் என்ற அடிப்படை சரியானதாகும். இதை நாம் மறுக்கவில்லை.

இதனடிப்படையில் லூத் (அலை) அவர்கள் தன்னுடைய மகள்களைத் திருமணம் செய்து அனுபவித்துக் கொள்ளுங்கள் என்ற கருத்தில் தான் கூறியிருப்பார்கள் என்பது சரிதான்.

ஆனால் இந்த அடிப்படை சாலிம் (ரலி) சம்பந்தப்பட்ட சம்பவத்திற்குப் பொருந்தாது. ஏனென்றால் ஒரு நிகழ்வை இரண்டு விதமாகப் புரிவதற்கு சாத்தியமுள்ள விஷயங்களுக்குத் தான் இந்த அடிப்படை பொருந்தும்.

இரண்டு விதங்களுக்கு வாய்ப்பில்லாமல் ஒரு கருத்தை மட்டும் தெளிவாகக் கூறினால் அங்கே இந்த அடிப்படையைப் பொருத்த இயலாது.

சாலிம் (ரலி) சம்பந்தப்பட்ட சம்பவத்தில் நபி (ஸல்) அவர்கள் சஹ்லா (ரலி) அவர்களிடம் நீ சாலிமுக்குப் பால் புகட்டிவிடு (அர்ளியீஹி) என்று கூறியதாக வந்துள்ளது.

ஹதீஸில், “அர்ளியீஹி’ (அவருக்குப் பால் புகட்டு) என்ற அரபி வாசகம் இடம் பெற்றுள்ளது. மார்பகத்தில் வாய் வைத்துக் குடிப்பதற்குத் தான் இந்த வார்த்தை ஏராளமான ஹதீஸ்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எந்தத் தாயும் தன் குழந்தைக்கு நேரடியாகப் பால் கொடுப்பாலே தவிர கறந்து கொடுக்க மாட்டாள். கறந்து கொடுப்பதற்கான அவசியமும் வராது. கறந்து கொடுப்பதற்கும் இந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம் என்று வாதிடுபவர்கள் தங்கள் வாதத்திற்கு ஒரு ஹதீஸையாவது அல்லது குறைந்தபட்சம் அகராதியிலாவது ஆதாரம் காட்ட வேண்டும்.

நேரடியாகக் குடிப்பதற்குத் தான் இந்த வார்த்தை பயன்படுத்தப்படும் என்பதை அறிந்து கொண்டே இல்லாத அர்த்தத்தைக் கூறி, இந்தச் செய்தியில் உள்ள குறைகளை மறைக்கப் பார்க்கிறார்கள். நேரடியாகக் கொடுப்பதையே இந்த வார்த்தை குறிக்கும் என்பதற்கு உதாரணமாகப் பின்வரும் ஹதீஸை எடுத்துக் கொள்ளலாம்.

ஹாமிதிய்யா குலத்தைச் சார்ந்த பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் விபச்சாரம் செய்து விட்டேன். (தண்டனை கொடுத்து) என்னைத் தூய்மைப்படுத்துங்கள்என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அப்பெண்னை (தண்டனை கொடுக்காமல்) அனுப்பி விட்டார்கள். மறு நாள் அப்பெண் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என்னை ஏன் அனுப்புகிறீர்கள்? மாயிஸை (தண்டனை கொடுக்காமல்) அனுப்பியதைப் போல் என்னை அனுப்ப நினைக்கிறீர்கள் போலும். அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் (விபச்சாரத்தினால்) கர்ப்பமாக இருக்கிறேன்என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “(இப்போது) தண்டனையை நிறைவேற்ற முடியாது. குழந்தையைப் பெற்ற பின் வா!என்று கூறினார்கள். குழந்தையைப் பெற்றவுடன் அப்பெண் குழந்தையுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “இதை நான் பெற்றெடுத்து விட்டேன்என்று கூறினார். “இக்குழந்தைக்குப் பால்குடியை மறக்கடிக்கும் வரை பால் புகட்டிவிட்டு (பின்பு) வாஎன்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)

நூல்: முஸ்லிம் 3500

ஸாலிமுடைய ஹதீஸில் இடம் பெற்ற “அர்ளியீஹி’ என்ற அதே வாசகம் இங்கேயும் வந்துள்ளது. இந்த இடத்தில், “குழந்தைக்கு இரண்டு வருடம் கறந்து பால் கொடுத்து விட்டு வா’ என்று இவர்கள் அர்த்தம் செய்வார்களா?

பால்குடி உறவு ஏற்படுவதற்கு எப்படி இரண்டு வருட காலம் நிபந்தனையாக இருக்கிறதோ, அது போல் தாயின் மார்பகத்தில் குழந்தை வாய் வைத்துக் குடிப்பதும் ஒரு முக்கியமான நிபந்தனை.

கறந்து கொடுத்தார்கள் என்ற வாதத்தை எழுப்புபவர்கள் கூட, கறந்து கொடுத்தால் பால்குடி உறவு ஏற்படாது என்ற கருத்தையே கொண்டிருக்கிறார்கள். ஸாலிமுடைய சம்பவத்தில் மட்டும் பல்டி அடித்து விடுகிறார்கள்.

இந்த ஒரு சம்பவத்தைச் சரி காண்பதற்காக, குர்ஆன் வசனத்திற்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் எதிரான பல கருத்தைக் கூற வேண்டிய மோசமான நிலையை இவர்கள் அடைந்திருக்கிறார்கள். மார்பகத்திலே உறிஞ்சிக் குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மார்பகத்தின் வழியாக (குழந்தையின்) வயிறை நிரப்பும் அளவிற்குப் பால் புகட்டுவதினாலேயே பால்குடி உறவு ஏற்படும். இன்னும் (இவ்வாறு) பால் புகட்டுவது, பால்குடிக் காலம் 2 வருடம் (முடிவடைவதற்கு) முன்னால் இருக்க வேண்டும்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)

நூல்: திர்மிதி 1072

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (ஒரு குழந்தை செவிலித் தாயிடம்) ஒரு தடவையோ இரு தடவைகளோ மட்டும் பால் உறிஞ்சிக் குடிப்பதால் (அவ்விருவருக்குமிடையே) பால்குடி உறவு ஏற்பட்டு விடாது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் 2869

ஸஹ்லா (ரலி) அவர்களிடத்தில் பால் புகட்டுமாறு நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது ஸஹ்லா (ரலி) அவர்கள், “அவர் பெரிய மனிதராக இருக்க நான் எப்படி அவருக்குப் பால் புகட்டுவேன்?’ என்று ஆட்சேபணை செய்ததாகவும், இதைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் சிரித்ததாகவும் முஸ்லிம் 2878வது செய்தியில் பதிவாகியுள்ளது. “தாடி உள்ளவராக சாலிம் உள்ளாரே!’ என்று கேட்டதாக முஸ்லிம் 2882வது செய்தியில் இடம் பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கறந்து கொடுக்கச் சொல்லியிருந்தால் சஹ்லா (ரலி) அவர்கள், “பெரிய மனிதராக உள்ளாரே? தாடியுள்ளவராக இருக்கிறாரே? நான் எப்படிப் பால் புகட்டுவேன்?’ என்று ஏன் கேள்வி கேட்க வேண்டும்? கறந்து கொடுக்கச் சொல்லியிருந்தால் ஸஹ்லா (ரலி) அவர்கள் இப்படிக் கேள்வி கேட்க மாட்டார்கள். அப்படியே கேட்டிருந்தாலும் அதற்கு நபி (ஸல்) அவர்கள், “கறந்து கொடுப்பதைத் தான் சொன்னேன்’ என்று விளக்கமளித்திருப்பார்கள்.

இந்த ஹதீஸின் முன் பின் வார்த்தைகளைக் கவனிக்காமல் ஒன்றுக்கும் உதவாத விளக்கங்களைக் கூறி இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இப்னு அபீமுலைக்கா என்பவர் இந்த ஹதீஸை அறிவிக்கும் நபர்களில் ஒருவர். இவருக்கு இந்த ஹதீஸை காசிம் என்பவர் அறிவித்துள்ளார். இப்னு அபீமுலைக்கா இந்த ஹதீஸை அறிவிக்கப் பயந்து ஒரு வருடம் வரை இந்த ஹதீஸை யாருக்கும் சொல்லாமலேயே இருந்துள்ளார். பிறகு இந்தச் செய்தியை தனக்கு அறிவித்த காசிமைச் சந்தித்து விஷயத்தைக் கூறிய போது காசிம் அவர்கள் இப்னு அபீமுலைக்காவிடம், “பயப்படாதே! நான் உனக்கு இந்தச் செய்தியைச் சொன்னதாக மக்களிடம் அறிவிப்புச் செய்!’ என்று கூறினார்கள். இந்தத் தகவல் முஸ்லிமில் 2880வது எண்ணில் இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளருக்கே இந்தச் செய்தியைச் சொல்வதில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஹதீஸ் கறந்து கொடுப்பதைப் பற்றி பேசினால் இப்னு அபீமுலைக்கா ஏன் இதை அறிவிப்பதற்குப் பயப்பட வேண்டும்? ஸாலிமுக்கு நேரடியாகப் பால் புகட்டும் படி நபி (ஸல்) அவர்கள் கூறியதாக மக்களுக்கு சொன்னால் மக்கள் தன்னை ஏதாவது செய்து விடுவார்களோ என்ற பயம் தான் இதைச் சொல்ல விடாமல் அவரைத் தடுத்துள்ளது.

சஹ்லா (ரலி) அவர்கள் சாலிம் (ரலி) அவர்களுக்கு பாலைக் கறந்து கொடுத்திருக்கலாம் என்ற வாதம் எப்போது சரியாகும் என்றால் ரிளாஃ என்ற சொல் கறந்து கொடுப்பதையும் எடுத்துக்கொள்ளும் என்பதற்கு ஆதாரம் காட்டினால் தான். ஆனால் அவ்வாறு ஒரு ஆதாரத்தையும் இவர்களால் காட்ட முடியாது.

மேலும் ஒரு வாசகத்தை யார் கூறுகிறார் என்பதைப் பொறுத்து அதன் பொருள் வேறுபடும்.

விபச்சாரத்தைத் தொழிலாகச் செய்யும் ஒருவன் இன்னொருவனிடம் என் மகளை உனக்குத் தருகிறேன் என்று கூறினால் என் மகளை விபச்சாரத்திற்குப் பயன்படுத்திக் கொள் என்பது இதன் பொருள்.

லூத் (அலை) அவர்களைப் போன்ற ஒழுக்கமுள்ளவர்கள், “என் புதல்வியர்களை உங்களுக்குத் தருகிறேன்’ என்றால் ஆணுடன் புணராமல் என் மகளை திருமணம் செய்து உங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள் என்பது இதன் பொருளாகும்.

குழந்தை தாயின் மார்பில் வாய் வைத்து பால் குடித்தால் தான் பால்குடி சட்டம் ஏற்படும் என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். அப்படியிருக்க நபியவர்கள் சஹ்லா (ரலி) அவர்களிடம், “தாய் மகன் உறவை ஏற்படுத்த சாலிமுக்குப் பால் கொடு’ என்று சொன்னார்கள் என்று நம்புவதாக இருந்தால் இங்கு கறந்து கொடுப்பதைச் சொன்னார்கள் என்று புரிய முடியாது.

எனவே சஹ்லா (ரலி) அவர்கள் சாலிமுக்குப் பாலை எடுத்துக் கொடுத்தார்கள் என்று இவர்கள் உறுதியாகக் கூறுவது ஹதீஸில் இல்லாத இவர்களின் சொந்தக் கற்பனையாகும்.

பொய் சொன்னால் கூட பொருந்தச் சொல்ல வேண்டும் என்பார்கள். இந்தக் கற்பனையை அவிழ்த்துவிட்ட ஜாக் இது அந்த ஹதீஸிற்குப் பொருந்தாது என்பதை கூட அறியவில்லை.

இமாம் அபூதாவூதின் மீது அவதூறு

ஆகவே இந்த ஹதீஸில் பால் கொடுக்குமாறு சொல்லப்படுவது எடுத்துக் கொடுப்பதைத் தான் சொல்லப்படுகிறது. அப்படித்தான் நடந்துள்ளது. இந்த ஹதீஸை இப்படித்தான் புரிய வேண்டும் என்று நாம் சொல்வது இந்த வழிகேடருக்கு நாம் மறுப்பளிக்க வேண்டும் என்பதற்காக நாமே சொல்வதல்ல. இதைப் பதிவு செய்துள்ள இமாம் அபுதாவுத் அவர்களே கூறியிருப்பதுதான்.

ஸாலிம் (ரலி) அவர்கள் தொடர்பான இந்த ஹதீஸை பதிவு செய்து விட்டு இமாம் அவர்கள் எழுதுவது…

மார்க்கத்தைக் கற்றவர்களின் கருத்து இங்கு பால் குடித்தல் என்பதின் மூலம் நாடப்படுவது என்னவெனில் சஹ்லா (ரலி) அவர்கள் ஒரு பாத்திரத்தில் தனது பாலை எடுத்து ஸாலிமுக்கு அவர் குடிப்பதற்காக அனுப்ப வேண்டும். இவ்வாறு ஐந்து தடவை தொடர்ந்து செய்வதால் அவர்கள் ஸாலிம் (ரலி) அவர்களுக்கு மஹ்ரமாக ஆவார்கள். (பார்க்க: அபுதாவுத் 2063)

நமது பதில்

சாலிம் (ரலி) தொடர்பான சம்பவத்திற்கு இமாம் அபூதாவுத் அவர்கள், சஹ்லா (ரலி) பாத்திரத்தில் பாலை எடுத்து சாலிமுக்கு குடிக்கக் கொடுத்தார் என்று கூறியதாக ஜாக் கூறுகின்றது.

நாம் அபூதாவுதில் தேடிப் பார்த்தோம். இவர்கள் கூறியது போன்று இமாம் அபூதாவுத் அவர்கள் எந்த இடத்திலும் சொல்லவில்லை. தங்களுடைய வழிகேட்டை நிலைநாட்ட இமாம் அபூதாவுத் மீது அவதூறு சொல்லும் அளவுக்குத் தரம் தாழ்ந்து விட்டனர்.

ஒரு பேச்சிற்கு இமாம் அபூதாவுத் அவர்கள் அவ்வாறு விளக்கம் கொடுத்தாலும் அந்த விளக்கம் இந்த ஹதீசுடன் எந்த வகையிலும் ஒத்துப் போகவில்லை என்பதால் அதை ஏற்க முடியாது.

இந்த விளக்கம் இந்த ஹதீஸிற்குப் பொருந்தும் வகையில் இல்லை என்பதை முன்னர் விளக்கியுள்ளோம். இதற்குப் பதில் சொல்லாமல் அபூதாவுதின் விளக்கம் மட்டுமல்ல. ஒட்டுமொத்த அறிஞர்களின் கூற்றைக் கொண்டு வந்தாலும் அது ஆதாரமாக முடியாது.

விதிவிலக்கு என்று கூறித் தப்பிக்கலாமா?

சஹ்லா (ரலி), சாலிம் (ரலி) அவர்களுக்குப் பால் கொடுத்ததாக இந்தச் சம்பவம் கூறுகின்றது. இதை அடிப்படையாகக் கொண்டு ஒரு பெண், வயது வந்த அந்நிய ஆணுக்குப் பால் புகட்டலாமா என்ற நியாயமான கேள்வியை நாம் கேட்கிறோம்.

இந்தச் சம்பவம் பொய்யானது என்பதை நிரூபிக்கும் விதமாக நாம் பல கேள்விகளை கேட்டுள்ளோம். ஆனால் ஜாக் இந்த கேள்விகளில் ஒன்றுக்கு மட்டும் பதில் என்ற பெயரில் அல்ஜன்னத் மாத இதழில் பின்வருமாறு உளறிக் கொட்டியுள்ளது.

இந்த ஹதீஸில் அபுஹூதைஃபாவின் மனதிலுள்ள அதிருப்தி மாறும் என்று நபி சொல்கிறார்கள். அதுபோலவே ஸாலிமுக்கு பால் கொடுத்தபின் அபுஹூதைஃபாவின் அந்த அதிருப்தி மறைந்து விட்டது என்று அவர்களின் மனைவி திரும்ப வந்து சொல்கிறார்கள்.

இப்படி மனதில் அதிருப்தி நிலவும் கணவர் எவருக்கும் இம்முறையில் பால் கொடுப்பதால் மட்டும் அதிருப்தி மாறிவிடாது. ஆனால் அபுஹூதைஃபா (ரலி) அவர்களுக்கு மாறியுள்ளது. எனவே இது இவர்களுக்கென குறிப்பாக சொல்லப்பட்டது தான் என்பது தெளிவாகிறது.

சாலிம் (ரலி), சஹ்லா (ரலி) அவர்களிடம் வந்து செல்வது அபூஹுதைஃபா (ரலி) அவர்களுக்குப் பிடிக்கவில்லை. சஹ்லா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறிய அடிப்படையில் சாலிமுக்கு பால் கொடுத்தவுடன் அபூஹுதைஃபா (ரலி) அவர்களின் கோபம் தணிந்தது என்று சம்பவம் கூறுகின்றது.

இம்முறையில் பாலருந்தும் அனைவருக்கும் அதிருப்தி நீங்காது; ஆனால் அபூஹுதைஃபா (ரலி) அவர்களுக்கு மட்டும் நீங்குகின்றது என்பதால் இது அவர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக உரியது. இது நபி (ஸல்) அவர்களின் அற்புதங்களில் ஒன்று என ஜாக் வாதிடுகின்றது.

அற்புதமா? அபத்தமா?

இது ஒன்றும் அற்புதம் இல்லை. அபத்தமான செய்தியை அற்புதமாக மாற்ற நினைக்கின்றார்கள்.

அபூஹுதைஃபா ஏன் அதிருப்தி கொண்டார் என்பதைச் சம்பவம் தெளிவாக அறிவிக்கின்றது. அவர் சாலிமை சிறு குழந்தையிலிருந்து மகனாகக் கருதி வளர்த்து வருகின்றார். இந்நிலையில் சாலிம், சஹ்லா (ரலி) அவர்களை சந்திப்பதை அபூஹுதைஃபா (ரலி) வெறுக்கவில்லை.

வளர்ப்பு மகன் அந்நிய ஆண் தான் என்று அல்லாஹ்வின் சட்டம் வந்த பிறகு சாலிம் வருவதையே அபூஹுதைஃபா வெறுத்தார் என்று சம்பவம் கூறுகின்றது.

ஆக அபூஹுதைஃபாவின் வெறுப்பிற்கு காரணம் சாலிம் அல்லாஹ்வுடைய சட்டத்தை மீறுகிறார் என்பதாகும். சஹ்லாவிடம் பால்குடித்த பின் சாலிம் மகனாகி விட்டார் என்று அபூஹுதைஃபா கருதுவதால் இதற்குப் பின் அவர் வெறுக்கவில்லை என்று சம்பவம் கூறுகின்றது.

இதில் அற்புதம் என்ன இருக்கின்றது? இந்தச் சம்பவம் உண்மை என்று நம்பினால் கூட இதை அற்புதம் என்று கூற முடியாது. ஏனென்றால் வளர்ப்பு மகன் அல்லாஹ்வின் சட்டத்தை மீறும் போது வளர்த்தவர் அதை வெறுக்கின்றார். அவர் மீறாத போது வெறுக்கவில்லை என்றால் இது பயங்கரமான அற்புதம் என்று அறிவுள்ளவர்கள் கூற மாட்டார்கள்.

ஜாக்கிற்கும் அறிவிற்கும் சம்பந்தம் இல்லை என்பதால் இந்த அறிவீனமான வாதத்தை ஜாக் வைத்துக் கொண்டிருக்கின்றது.

வளர்ப்பு மகன் பெற்ற மகனாக மாற முடியாது என்று அல்லாஹ் சட்டம் இயற்றிய பின்பு அந்தச் சட்டத்தை உடைக்கும் விதமாக நபி (ஸல்) அவர்கள் சஹ்லாவிற்கு குறுக்கு வழியைக் கற்றுக் கொடுத்தார்கள் என்று நம்புவது அற்புதமா? அபத்தமா?

யூகம் வேண்டுமா? உறுதி வேண்டுமா?

நபியின் மனைவிமார்கள் இந்தச் சட்டம் சாலிமுக்கு மட்டும் உரியது என்று கூறியுள்ளார்கள் என்ற வாதத்தை ஜாக் வைக்கின்றது. இந்த வாதத்திற்கு நாம் ஏற்கனவே பதில் சொல்லியிருக்கின்றோம். அதை ஜாக் கண்டுகொள்ளாமல் மக்களை ஏமாற்றுவதற்காக பதிலளிக்கப்பட்ட கேள்வியை மறுபடியும் கேட்டுக் கொண்டிருக்கின்றது.

நாம் முன்பு கூறிய பதிலையே இப்போது மறுபடியும் இவர்களின் இந்த வாதத்திற்குப் பதிலாகக் கூறிக் கொள்கிறோம்.

ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர்த்து, நபி (ஸல்) அவர்களின் அனைத்து மனைவிமார்களும் “இச்சட்டம் ஸாலிமுக்கு மட்டும் உரியது’ என்று கூறியுள்ளதால் இந்த விளக்கம் தான் சரி என்று நினைக்கிறார்கள்.

ஆனால் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் கூறியதாக வரும் வாசகங்களை முறையாகக் கவனித்தால் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய விளக்கத்தையே ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு இவர்கள் தள்ளப்படுவார்கள்.

(ஸாலிமுக்குப் பால் புகட்டும் படி நபி (ஸல்) அவர்கள் கூறியதால்) இதை வைத்துக் கொண்டு ஆயிஷா (ரலி) அவர்கள் தன்னை யார் பார்க்க வேண்டும் என்றும் தன்னிடத்தில் யார் வர வேண்டும் என்று விரும்பினார்களோ அவர்களுக்குப் பால் புகட்டும் படி தனது சகோதர, சகோதரிகளின் மகள்களுக்குக் கட்டளையிட்டார்கள். அவர் பெரியவராக இருந்தால் ஐந்து முறை (பால் குடித்துவிட்டு) தன்னிடத்தில் வரும் படி (கூறினார்கள்). மக்களில் யாருக்கும் தொட்டிலில் பால் புகட்டாமல் இவ்வாறு பால் புகட்டி தங்களிடத்தில் வர வைப்பதை உம்மு சலமாவும் நபி (ஸல்) அவர்களின் ஏனைய மனைவிமார்களும் நாடவில்லை. அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக (இதன் விளக்கம்) எங்களுக்குத் தெரியாது. மக்களுக்கன்றி ஸாலிமுக்கு (மட்டும்) நபி (ஸல்) அவர்கள் அளித்த சலுகையாக இச்சட்டம் இருக்கக் கூடும்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உர்வா பின் சுபைர்

நூல்: அபூதாவூத் 1764

நபி (ஸல்) அவர்கள் ஸாலிமுக்கு மட்டும் இச்சலுகையை வழங்கினார்கள் என நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் உறுதிப்படக் கூறியதாக எந்த வாசகமும் மேலுள்ள ஹதீஸில் இடம் பெறவில்லை. மாறாக, “எங்களுக்குத் தெரியவில்லை; இது ஸாலிமுக்கு மட்டும் உரிய சட்டமாக இருக்கக் கூடும்’ என்று யூகமாகக் கூறியதாகத் தான் வந்துள்ளது.

ஆனால் ஆயிஷா (ரலி) அவர்களோ, இச்சட்டம் பொதுவானது என்பதை யூகமாகக் கூறாமல் சந்தேகத்திற்கு இடமின்றி செயல்படுத்தியும் காட்டியுள்ளதாக இச்செய்தி கூறுகிறது. இந்தச் செய்திகளையெல்லாம் சரி காணும் இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் நபியவர்களின் ஏனைய மனைவிமார்கள் கூறியுள்ள யூகத்தை விட்டு விட்டு, பொதுவான சட்டம் என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி செயல்படுத்திக் காட்டிய ஆயிஷா (ரலி) அவர்களின் வழிமுறையை ஏற்பதே சரியானதாகும்.

ஏனென்றால் உறுதியான கூற்றை ஏற்க வேண்டுமா? அல்லது யூகத்தை ஏற்க வேண்டுமா? என்று வரும் போது உறுதியாகக் கூறும் நபரின் தகவலை ஏற்பது தான் அறிவுடமை.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸை இங்கு குறிப்பிட்டிருப்பதால் இதை நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. இந்தச் சட்டம் ஸாலிமுக்கு மட்டும் உரியது என்ற வாதிப்பவர்கள், இதைச் சான்றாகக் காட்டுவதால் இந்த ஹதீஸில் அவர்களது வாதத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை, மாறாக அவர்களுக்கு எதிரான கருத்தே உள்ளது என்று சுட்டிக் காட்டுவதற்காக இந்த ஹதீஸைக் கூறியுள்ளோம்.

இச்சட்டம் சம்பந்தமாக உம்மு ஸலமா மற்றும் ஆயிஷா (ரலி) ஆகிய இருவருக்கிடையில் விவாதம் நடந்ததாக ஒரு ஹதீஸ் கூறுகிறது. அதைக் கவனித்தால் பருவ வயதை அடைந்தவருக்குப் பால் புகட்டி பால்குடி உறவை ஏற்படுத்தலாம் என்ற சட்டம் அனைவருக்கும் உரியது என்ற முடிவையே இவர்கள் ஏற்க வேண்டிய நிலை ஏற்படும்.

உம்மு ஸலமா (ரலி) அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்களிடம், “விரைவில் பருவ வயதை அடையவிருக்கும் அந்தச் சிறுவன் உங்கள் வீட்டிற்குள் வருகிறானே! ஆனால் அவன் என் வீட்டிற்குள் வருவதை நான் விரும்ப மாட்டேன்என்று கூறினார். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இதற்கான) முன்மாதிரி உங்களுக்குக் கிடைக்கவில்லையா?” என்று கேட்டுவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:

அபூ ஹுதைஃபாவின் மனைவி நபி (ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! ஸாலிம் என் வீட்டிற்குள் வருகிறார். அவர் பருவ வயதையடைந்த மனிதர். இதனால் அபூ ஹுதைஃபாவின் மனதில் அதிருப்தி நிலவுகிறதுஎன்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ ஸாலிமுக்குப் பால் கொடுத்து விடு. (இதனால் பால்குடி உறவு ஏற்பட்டு) அவர் உன் வீட்டிற்கு வரலாம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸைனப் பின்த் உம்மி ஸலமா (ரலி)

நூல்: முஸ்லிம் 2881

பெரியவருக்குப் பால் புகட்டுவதை உம்மு ஸலமா (ரலி) அவர்கள் மறுக்கிறார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் இந்த ஹதீஸைக் காட்டி, “அல்லாஹ்வின் தூதரிடத்தில் முன்மாதிரி இல்லையா?’ என்று கேட்டு இச்சட்டத்தை எல்லோரும் கடைப்பிடிக்கலாம் என்று உறுதிப்படுத்துகிறார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் தொடுத்த கேள்விக்கு உம்மு ஸலமா (ரலி) அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. இவ்வாறு இந்தச் செய்தி கூறுகிறது.

ஸாலிமுக்கு மட்டும் உரியது என்று உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறுவது தான் நபிவழி என்றால் உம்மு ஸலமா அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் வாதத்திற்கு எந்தவிதமான மறுப்பும் தராமல் ஏன் அமைதியாக இருந்தார்கள்?

ஆயிஷா (ரலி) அவர்கள் உம்மு ஸலமாவை நோக்கி, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உங்களுக்கு முன்மாதிரி இல்லையா?” என்று கேட்ட கேள்விக்கு, ஸாலிமுக்கு மட்டும் உரியது என இன்றைக்கு வாதிக்கும் இவர்களும் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்கள்.

அதிக எண்ணிக்கை ஆதாரமாகாது

ஆயிஷாவைத் தவிர்த்து நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் அனைவரும் ஸாலிமுக்கு மட்டும் உரியது என்று கூறுவதால் அதிகமானவர்கள் சொல்கின்ற கருத்தையே ஏற்க வேண்டும் என்றும் வாதிடுகின்றனர். இவர்கள் முக்கியமான இரண்டு விஷயங்களை இங்கு கவனிக்கத் தவறி விட்டார்கள்.

  1. ஆயிஷா (ரலி) அவர்கள் இச்சட்டத்தை தன்னுடைய யூகமாகச் சொல்லாமல் இது தான் நபிவழி என்று உறுதி செய்கிறார்கள். எனவே இங்கு அதிகமானவர்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை.
  2. ஆயிஷா (ரலி) அவர்களும் மற்ற மனைவிமார்கள் அனைவரும் ஹதீஸைப் பற்றிய ஞானத்தில் சமமான அந்தஸ்து உடையவர்கள் என்றால் இந்த வாதத்தை முன் வைக்கலாம். ஆனால் விஷயம் அப்படியல்ல! நபி (ஸல்) அவர்களின் ஏனைய மனைவிமார்களை விட ஆயிஷா (ரலி) அவர்கள் மார்க்க விஷயத்தில் மிகச் சிறந்த தனித்துவத்தைப் பெற்றிருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களில் அதிக ஹதீஸை அறிவித்தவர்கள் ஆயிஷா (ரலி) அவர்கள் தான். ஸஹாபாக்கள் யாருக்கும் தெரியாத சட்டங்களைக் கூட ஆயிஷா (ரலி) அவர்கள் ஹதீஸைக் கூறி விளக்கியுள்ளார்கள். அபூஹுரைரா, உமர், இப்னு உமர் போன்ற பெரும் நபித்தோழர்கள் அறிவித்த ஹதீஸ்களில் குறையைக் கண்டு பிடித்து சரி செய்தவர்கள்.

நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு ஹதீஸைச் சொல்லும் போது அதில் குறுக்கு விசாரணை செய்து துல்லியமாக விளங்கிக் கொண்டவர்கள். இவ்வளவு பெரிய மேதையாகத் திகழ்ந்த ஆயிஷா (ரலி) அவர்கள், ஸாலிமுடைய சம்பவம் பொதுவானது என்று கூறியதாக வரும் போது அதைப் புறக்கணித்து விட்டு அதிகமான ஆட்கள் சொல்கிறார்கள் என்ற வாதத்தை எழுப்புவது எவ்வளவு பெரிய அறிவீனம்!

இந்த அறிவீனத்தால் தான் ஜாக் இந்த சம்பவத்தை சரி என்று கூறுகின்றது. இதை மறுக்கும் நம்மை வழிகேடர்கள் என்று பரப்பி வருகின்றது. மக்களுக்கு சத்தியத்தை உணர்த்துவது இவர்களின் நோக்கம் என்றால் இவர்களின் வாதங்களுக்கு யார் பதில் சொன்னாலும் அதற்கு இவர்கள் பதிலளிப்பார்கள்.

ஆனால் இவர்களுக்கு அந்த நோக்கமில்லை. தர்ஜுமாவை விமர்சித்து மக்களிடம் கெட்ட எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே இவர்களின் ஒரே குறிக்கோள். இதற்காகத் தான் இவர்கள் படாத பாடு படுகிறார்கள்.

ஆனால் அல்லாஹ்வின் கிருபையால் தங்களுடைய விருப்பம் நிறைவேறாமல் கேவலத்திற்கு மேல் கேவலத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் தெளிவான நிலைப்பாடு

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்பது நமது ஜமாஅத்தின் நிலைப்பாடில்லை. குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் ஆகிய இரண்டும் இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரம் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை.

குர்ஆன் மட்டும் போதுமானது. ஹதீஸ்களைக் கடைப்பிடிக்கத் தேவையில்லை என்று கூறிய வழிகேடர்களுடன் விவாதம் செய்து நபிமொழிகளின் அவசியத்தை விவாதத்தின் மூலம் உலகிற்கு உணர்த்திய ஒரே ஜமாஅத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே.

ஆனால் மிகச் சில ஹதீஸ்களின் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் அதன் கருத்து குர்ஆனுடன் நேரடியாக முரண்படுவதால் அவை ஆதாரப்பூர்வமான செய்தி இல்லை. அவற்றை ஏற்கக்கூடாது என்று கூறுகிறோம்.

பொதுவாக ஒரு செய்தி குர்ஆனுடன் முரண்படுவதைப் போன்று தெரிந்தால் முரண்பாடில்லாமல் இணைத்து விளங்க வாய்ப்பிருந்தால் அதைத் தான் நாம் முதலில் செய்வோம். இவ்வாறு பல செய்திகளுக்கு நாம் விளக்கம் கூறி அவற்றை ஏற்றிருக்கிறோம்.

சில செய்திகள் எந்த விளக்கமும் கொடுக்க முடியாத வகையில் குர்ஆனுடன் நேரடியாக முரண்படுகின்றன. இது போன்ற செய்திகளுக்கு எந்த விளக்கம் தந்தாலும் அது உளறலாகவும் அந்த செய்திகளுக்கு சற்றும் பொருந்தாததாகவும் அந்த செய்திகளில் கூறப்பட்ட கருத்தை மறுத்து சரிபடுத்தக்கூடியதாகவும் இருக்கின்றது.

இவ்விசயத்தில் நம்மை விமர்சிக்கும் ஜாக் போன்ற மற்ற இயக்கத்தினர் கூறும் அனைத்து விளக்கங்களும் இந்த அடிப்படையில் தான் உள்ளது. தெளிவான இஸ்லாமிய மார்க்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் இது போன்ற செய்திகளுக்கு கொஞ்சம் கூட இடம் கிடையாது. இதை குர்ஆனும் நபிமொழிகளும் தெளிவாக விவரிக்கின்றது.

இந்த தரத்தில் உள்ள மிகச் சில செய்திகளை ஏற்றால் குர்ஆனை புறக்கணிக்கும் நிலை ஏற்படும். நபி (ஸல்) அவர்களையும் நபித்தோழர்களையும் இழிவுபடுத்தும் நிலை ஏற்படும். இஸ்லாத்தை அழிக்க நினைக்கும் எதிரிகளுக்கு இவையே மிகப்பெரிய ஆயுதமாக அமையும்.

எனவே தான் நாம் இந்த ஹதீஸ்களை ஏற்கக்கூடாது என்று கூறுகிறோம். அறிவிப்பாளர் தொடரைப் பார்த்து அதில் குறை ஏதும் இருந்தால் அது பலவீனமான செய்தி என்று எவ்வாறு முடிவு செய்கின்றோமோ அது போன்று குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களையும் பலவீனமானவை என்று முடிவு செய்ய வேண்டும் என்கிறோம். இஸ்லாமிய மார்க்கத்தைப் பாதுகாப்பதைத் தவிர இதில் வேறு நோக்கமில்லை.

பால்குடி சம்பந்தமாக ஜாக் இயக்கத்தில் இருந்த முஜீபுர்ரஹ்மான் என்பவர் இது குறித்து விவாதித்த போது, அந்த விவாதத்தில் நாம் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் வாய்மூடிக் கொண்ட வரலாறைத் தெரிந்து கொண்டே இப்போது அல்ஜன்னத்தில் உண்மைக்கு மாறாக உளறிக் கொட்டிக் கொண்டு உள்ளனர். அந்த விவாதத்தை இணையதளத்தில் காணலாம்.

அந்த விவாதத்தில் கலந்து கொண்ட முஜீபுர்ரஹ்மான், அடுத்தவர் மனைவியான அன்னியப் பெண்ணிடம் பால் குடித்து, அந்தப் பெண்ணையே தட்டிப் பறித்துக் கொண்டார் என்பது தனி விஷயம்.

பலமுறை பதில் சொன்ன பிறகும், இதற்கென ஒரு விவாதத்தை நடத்தி அதில் இவர்களது அணியினர் மண்ணைக் கவ்விய பின்னரும் அதில் நாம் எடுத்து வைத்த வாதங்களுக்குப் பதில் சொல்லாமல், இப்போது புதிதாக ஏதோ கேள்வி எழுப்புவது போன்ற பித்தலாட்டத்தை ஜாக் செய்துள்ளது.

இதே போன்று “நெருப்புக் குண்டத்தைப் பல்லி ஊதுமா?” என்ற தலைப்பில் இன்னொரு கட்டுரையும் மேற்படி அல்ஜன்னத் ஏப்ரல் 2013 இதழில் வெளியாகியுள்ளது. இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு எதிராக நெருப்புக் குண்டத்தை ஊதி விட்டதால் பல்லியைக் கொல்லுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகப் பதிவாகியுள்ள செய்தியை வெளியிட்டு, அதுகுறித்து நமது நிலைப்பாட்டை விமர்சித்துள்ளனர்.

இந்த ஹதீஸ் தொடர்பாக நாம் கேள்வி எழுப்பி சில நாட்கள் அல்ல, சில மாதங்கள் அல்ல. ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இதுவரை மவுனத்தில் இருந்தவர்கள் இப்போது பதிலளிக்க வந்து “பல்லி’ளித்திருக்கிறார்கள்.

இத்தனை ஆண்டு காலம் இதற்குப் பதிலளிப்பதற்காக ரூம் போட்டு யோசித்திருப்பார்கள் போலும். இப்படி யோசித்து, ஒரு நல்ல பதிலை, குர்ஆனுக்கு முரண்படாத ஒரு பதிலை அளித்திருந்தால் நாமும் வரவேற்போம். ஆனால் பதில் சொல்கிறேன் என்ற பெயரில் பல்லியைப் பகுத்தறிவாளியாக்கி, இவர்கள் பைத்தியமாகியிருக்கிறார்கள். அதை இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் காண்போம்.