பரிகசிக்கப்படும் பால்குடிச் சட்டம்
சவூதிப் பெண்கள் நீண்ட நாட்களாக இதர வளைகுடா நாடுகளைப் போன்று கார் ஓட்டுவதற்கு அனுமதி தர வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். அதற்கு அங்குள்ள ஆலிம்களில் ஒரு சாரார் கூடாது என்று மறுத்து வருகின்றனர். அது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
- ஹிஜாபைக் களைந்து விடும். கார் ஓட்டும் போது முகத்தைக் காட்ட வேண்டும். இது தான் அனைத்துக் குழப்பங்களுக்கும் பிறப்பிடம் ஆகும்.
- பெண்களிடம் வெட்கம் எடுபட்டு விடும்.
- அடிக்கடி பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவர்.
- பெண்களிடம் பிடிவாதம் தலைதூக்கும். வீட்டை விட்டு அற்பக் காரணங்களுக்காகக் கூட வெளியேறி விடுவார்கள்.
- சிக்னல், பெட்ரோல் பங்க், சோதனைச் சாவடி போன்றவற்றில் நிற்பது, விபத்து, போக்குவரத்து விதி மீறலுக்காக காவல்துறையினரிடம் மாட்டுதல் போன்ற நிலை ஏற்படும்.
- சாலைகளில் நெருக்கடி மேலும் அதிகமாகும்.
- விலைவாசி உயர்வு, கடன் போன்ற சுமைகள் அதிகரிக்கும்.
- ஆண்களிடம் உள்ள நிதானம், தூர நோக்கு பெண்களிடம் இருக்காது. இதனால் விபத்துக்கள் அதிகரிக்கும்.
- பெண்களின் குற்றங்கள் அதிகரிப்பதால் அவர்களைக் கண்காணிக்க பெண் காவல் துறை உருவாக்க வேண்டும். பெண் காவலர்களும் முகத்தைக் காட்டியாக வேண்டும்.
- பெண்களுக்கென்று கார் ஒர்க் ஷாப், வாடகைக் கார் மையம் போன்றவை அமைக்க வேண்டும். இதற்கென பணிப் பெண்களை நியமிக்க வேண்டும். பெண்கள் வீட்டை விட்டு வெளியேற ஆரம்பித்தால் குழப்பங்கள் தோன்ற ஆரம்பித்து விடும். மேற்கத்திய நாடுகளைப் போன்று வீட்டு நலம், குழந்தைகள் நலம் அனைத்தும் பாழாகி விடும்.
- கணவன் அல்லது பெற்றோர் இருக்கும் போதே தவறுகள் நடக்கின்றன. அதுவும் ஒழுக்கமிக்க பெண்களுக்கே இவ்வாறு நடக்கின்றது. ஒழுக்கக்கேடான பெண்ணாக இருந்து அவள் வெளியே புறப்பட்டால் அதைப் பற்றி சொல்லவே தேவையில்லை.
- தூரமான இடங்களில் கார் பழுதாகி விட்டால் பெண்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
- ஒரு பெண், திருமணம் முடிக்கத் தடையான ஆண் துணையின்றி பயணம் மேற்கொள்வது நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு எதிரானது.
இவை அனைத்தும் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி வழங்கினால் ஏற்படும் குழப்பங்கள் என்று சவூதி மார்க்க அறிஞர்கள் தெரிவிக்கும் கருத்துக்களாகும்.
இதற்கு இவர்கள் தரும் தீர்வு, வெளிநாடுகளிலிருந்து ஓட்டுனர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள வேண்டும் என்பது தான்.
அவ்வாறு அமர்த்துகின்ற போது இதை விட அதிகமான பெரும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
அந்த டிரைவர்கள், பெண்களைத் தனியாகவே அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது. சதாவும் நெருங்கிப் பழக வேண்டியுள்ளது. குடும்பத்தினர் அனைவருடனும் டிரைவர் சர்வ சாதாரணமாகக் கலக்க வேண்டியுள்ளது.
இதற்குத் தீர்வு என்ன?
அந்த டிரைவர்களுக்குத் தாய்மார்கள் தாய்ப்பால் கொடுத்து விட வேண்டும் என்று அண்மையில் ஒரு சவூதி மார்க்க அறிஞர் தீர்ப்பளித்திருக்கின்றார்.
சவூதியின் மூத்த அறிஞர்கள் குழு உறுப்பினரும் மன்னரின் ஆலோசகருமான ஷேக் அப்துல் முஹ்சின் பின் நாசர் அல் உபைக் கான் என்பவர் தான் இத்தகைய தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.
இதற்கு ஆதாரமாக முஸ்லிம் நூலில் இடம் பெறும் ஸாலிமுடைய ஹதீஸை உபைக் கான் கொண்டு வந்திருக்கிறார். (இந்த ஹதீஸ் குறித்த விளக்கத்தைத் தனிக் கட்டுரையில் காண்க!)
இப்படி ஒரு மார்க்கத் தீர்ப்பு வெளியான மாத்திரத்தில், சவூதியிலும் இதர இஸ்லாமிய நாடுகளிலும் இதற்குப் பெரும் எதிர்ப்பலைகள் கிளம்பி விட்டன.
இந்தப் பால்குடிச் சட்டம் பரிகாசத்திற்கும், பழிப்பிற்கும் உள்ளாகியிருக்கின்றது. இந்தச் சட்டம் கேள்விக்குரியதாகவும், கேலிக்குரியதாகவும் மாறியிருக்கின்றது.
பச்சை மழலைகளின் பசி உணர்வைத் தீர்க்கின்ற பால்குடிச் சட்டம், பருவ வயதை அடைந்தவரின் பாலுணர்வுக்குப் பாதை மாற்றப்படுகின்றது என்ற அபாயத்தைப் பாமர மக்கள் இன்று புரியத் துவங்கியிருக்கிறார்கள்.
தாடி வைத்த டிரைவர்கள், தாய்மார்களிடம் பால் கொடுக்குமாறு கேட்கும் கேலிச் சித்திரங்கள் இணைய தளங்களில் வெளியாகின்றன.
சவூதி மற்றும் அரபகத்திலுள்ள பெண்கள் கொதித்துப் போயுள்ளனர். இது தொடர்பாக கல்ஃப் நியூஸ் மற்றும் சில அரபு மொழிப் பத்திரிகைகளில் அப்பெண்கள் அளித்துள்ள பேட்டிகள் இதோ:
“இந்த மார்க்கத் தீர்ப்பு கிண்டலும் கேலிக்கூத்துமாகும். எங்கள் மார்பகங்களை வெளிநாட்டு ஓட்டுனர்களுக்கு அளிக்க வேண்டுமாம்; இது தான் எங்களுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பா?” என்று ஃபாத்திமா அஷ்ஷம்மாரி என்ற பெண் குமுறுகின்றார்.
தனது பெயரை வெளியிட விரும்பாத ஒரு சவூதிப் பெண்மணி, “கார் ஓட்டுவதை இஸ்லாம் எனக்குத் தடை செய்து விட்டு, எனது மார்பகத்தை அந்நியரிடம் பகிர்ந்து கொள்வதற்கு மட்டும் அனுமதிக்கிறதோ?” என்று கேள்வி எழுப்புகின்றார்.
“எனக்குப் பிறந்த, வயதுக்கு வந்த என் சொந்தப் பிள்ளைகளுக்கு நான் பால் கொடுக்காத போது பிற நாட்டு ஆடவர்களுக்கு நான் பால் கொடுக்க வேண்டுமோ? இது என்ன பைத்தியக்காரத்தனம்?” என்று அவர் மேலும் கேட்கின்றார்.
“வீட்டில் பணி புரியும் பணிப் பெண்கள், எங்கள் கணவர்களுக்குப் பால் கொடுப்பதற்கு இந்த ஃபத்வா பொருந்துமா? இவ்வாறு பால் கொடுப்பதன் மூலம் அனைவருமே சகோதர, சகோதரிகளாக ஆகிவிடலாம் அல்லவா?” இது இன்னொரு பெண் எழுப்புகின்ற வித்தியாசமான கேள்வி!
ஒரு பெண் ஆசிரியையிடம் அவரது டிரைவர், “எனக்குப் பால் புகட்டுங்கள்’ என்று கேட்கின்றார். ஆசிரியை தனது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தியதும், “நான் உங்கள் மகனாக விரும்புகிறேன்’ என்று அந்த ஓட்டுனர் பதிலளித்து சாமாளிக்கிறார்.
இவ்வாறு தன் மனைவி சந்தித்த ஒரு மோசமான அனுபவத்தை அவரது கணவர் ஹமீத் அலீ தெரிவிக்கின்றார்.
“தாய்மார்கள் ஓட்டுனர்களுக்குத் தங்கள் கணவன் முன்னிலையில் பாலூட்ட வேண்டுமா? அல்லது தனியாகப் பாலூட்ட வேண்டுமா? ஓட்டுனருக்குப் பாலூட்டும் போது எதிர்பாராத விதமாக வீட்டிற்குள் கணவன் நுழைந்து விட்டால் கணவனின் கோரத் தாக்குதலிலிருந்து மனைவியை யார் காப்பாற்றுவார்?” என்று சவூதிப் பெண் எழுத்தாளர் ஒருவர் குத்தலாகக் கேள்விகளைத் தொடுக்கின்றார்.
06.06.2010 மற்றும் 20.06.2010 ஆகிய தேதிகளில் வெளியான அரபுப் பத்திரிகைகளில் மேற்கண்ட பேட்டிகள் வெளியாகியுள்ளன.
அந்த அளவுக்கு இந்த மார்க்கத் தீர்ப்பு படு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்தச் சமயத்தில் தான் ஸாலிமின் ஹதீஸ் பற்றிய பார்வைகள் கண்ணோட்டங்கள், கருத்தோட்டங்கள் வெளியாகத் துவங்கியுள்ளன. இந்தச் சட்டத்தை மனதளவில் ஏற்றுக் கொள்ள முடியாத சவூதி மார்க்க அறிஞர்கள், இந்த ஹதீஸ் அபூஹுதைபாவின் மனைவி ஸஹ்லாவுக்கு மட்டும் உரிய தனிச் சட்டம் என்று குறிப்பிடுகின்றனர்.
ஷைக் அப்துல்லாஹ் பின் பாஸ், ஷைக் ஸாலிஹ் பின் பவ்ஸான் போன்ற அறிஞர்கள் இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
இது தொடர்பாக மற்றொரு கருத்தும் வெளியாகியுள்ளது.
“ஸாலிமின் ஹதீஸ் முஸ்லிமில் பதிவாகியிருக்கின்றது. எனினும், அறிவிப்பாளர் வரிசை சரியாக அமைந்த ஒவ்வொரு ஹதீசும் அதன் கருத்து சரியாக அமைந்தது என்று எடுத்துக் கொள்ள முடியாது”
இவ்வாறு சவூத் பின் அப்துல்லாஹ் அல் குனைஸான் என்ற அறிஞர் இந்த ஹதீஸ் பற்றித் தெரிவிக்கின்றார்.
இந்த நிலைப்பாட்டைத் தான் தவ்ஹீத் ஜமாஅத் கொண்டிருக்கின்றது. நம் மீது கொண்ட வெறுப்பு காரணமாக நமது நிலைப்பாட்டைக் குறை கூறும் ஸலபிகள், உமரிகள், மதனிகள் போன்றோர் அரபு நாட்டு மார்க்க அறிஞர்களின் இந்த நிலைப்பாட்டில் குறை காண்பார்களா? இந்த மார்க்க அறிஞர்களுடன் விவாதம் செய்வார்களா? இவர்களுக்கு எதிராக இணைய தளத்திலும், பத்திரிகைகளிலும், பிரச்சாரங்களிலும் போர்க்கொடி தூக்குவார்களா? ஒருபோதும் செய்ய மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் அரபு நாட்டு அறிஞர்கள்.
நாம் சொன்னால் தான் தப்பு. அரபு நாட்டுக்காரன் சொன்னால் தப்பில்லை என்பது தான் இவர்களது கொள்கை. இவர்கள் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதிகள் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.
அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் ஹதீஸின் கருத்து குர்ஆனுடன் மோதாமல் இருக்க வேண்டும் என்ற நமது நிலைப்பாட்டை அறிவித்ததால் தான் இந்த ஜமாஅத் பெரும் எதிர்ப்புகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. ஹதீஸை மறுப்பவர்கள் என்ற முத்திரையும் இதன் மீது குத்தப்படுகின்றது. இதற்கெல்லாம் தவ்ஹீத் ஜமாஅத் ஒரு போதும் அஞ்சப் போவதில்லை.
அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே.
அல்குர்ஆன் 35:28
அல்லாஹ்வுக்கு மட்டுமே அஞ்சும் இந்த ஜமாஅத் மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஒரு போதும் அஞ்சாது என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
பால்குடிச் சட்டம் குறித்த ஸாலிம் ஹதீஸ் தொடர்பாக தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு குறித்து ஏற்கனவே ஏகத்துவம் இதழில் வெளியான ஆய்வின் சுருக்கத்தை இந்தச் சமயத்தில் வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என்பதால் தனித் தலைப்பில் வாசகர்களின் பார்வைக்குத் தருகிறோம்.
பருவ வயதினருக்குப் பால் புகட்டுதல்
(ஒரு முறை) சஹ்லா பின்த் சுஹைல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! சாலிம் பின் மஅகில் என்னுடைய வீட்டிற்கு வரும் போது அபூ ஹுதைஃபாவின் முகத்தில் அதிருப்தியை நான் பார்க்கிறேன்” என்று கூறினார்கள். சாலிம் (ரலி) அவர்கள் அபூ ஹுதைஃபாவின் அடிமை ஆவார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நீ அவருக்குப் பால் கொடுத்து விடு” என்று கூறினார்கள். சஹ்லா (ரலி) அவர்கள் “அவர் பருவ வயதை அடைந்த மனிதராயிற்றே! அவருக்கு நான் எவ்வாறு பாலூட்டுவேன்?” என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தவாறு “அவர் பருவ வயதை அடைந்தவர் என்று எனக்கும் தெரியும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 2878
சஹ்லா (ரலி), அவரது கணவர் அபூ ஹுதைஃபா மற்றும் வளர்ப்பு மகன் சாலிம் ஆகிய மூவரும் நெருக்கடியான ஒரே வீட்டில் இருப்பதாகவும் சஹ்லா அவர்கள் முறையாக ஆடை அணியாமல் இருக்கும் போது சாலிம் வரக்கூடிய சூழ்நிலை இருப்பதாகவும் சஹ்லா (ரலி) அவர்கள் முறையிட்டதாக வேறு அறிவிப்புக்களில் வந்துள்ளது.
“பால்குடி உறவு ஏற்படுவதற்கு வயது வரம்பு எதுவும் இல்லை; பருவ வயதை அடைந்த ஆணுக்கு ஒரு பெண் பால் புகட்டினாலும் அந்தப் பெண் அந்த ஆணுக்குத் தாயாக மாறி விடுவாள்’ என்ற கருத்தை இந்த ஹதீஸ் தருகிறது.
இந்த ஹதீஸ் குர்ஆனுக்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் முரண்படுவதால் இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று கூறுகிறோம்.
குர்ஆனுடன் முரண்படுகிறது
பால்குடிச் சட்டத்திற்கு, குழந்தை பிறந்த முதல் இரண்டு வருடத்தை எல்லையாக அல்லாஹ் நிர்ணயிக்கிறான். இந்த எல்லையைத் தாண்டிய ஒருவர் பால் குடிப்பதால் பால்குடி உறவு ஏற்படாது என்று பின்வரும் வசனங்கள் கூறுகின்றன.
- பாலூட்டுவதை முழுமைப்படுத்த வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். (அல்குர்ஆன் 2:233)
மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு. (அல்குர்ஆன் 31:14)
அவனை (மனிதனை) அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால் குடியை மறந்ததும் முப்பது மாதங்கள். (அல்குர்ஆன் 46:15)
மனிதனை மனித வடிவில் தாய் 6 மாதங்கள் சுமக்கிறாள். அவனுக்குப் பால் புகட்டியது 24 மாதங்கள். அதாவது இரு வருடம். இந்த 6 மாதத்தையும் 24 மாதத்தையும் சேர்த்து 30 மாதங்கள் என்று இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
பால்குடியின் காலம் இரண்டு வருடங்கள் தான் என்று மேலுள்ள வசனங்கள் தெளிவாக எடுத்துரைக்கும் போது, பருவ வயதை அடைந்த சாலிமிற்குப் பால் புகட்டுமாறு நபி (ஸல்) அவர்கள் எப்படிச் சொல்லியிருப்பார்கள்?
- தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 24:30)
ஒரு ஆண் அன்னியப் பெண்ணைப் பார்ப்பதை இஸ்லாம் தடை செய்கிறது. ஆனால் இந்தச் சம்பவத்தில் சஹ்லா (ரலி) அவர்களிடத்தில் சாலிம் பால் குடித்ததாக வந்துள்ளது. பார்ப்பதைக் காட்டிலும் பெண்ணுடைய மறைவிடத்தில் ஆணுடைய வாய் உரசுவது என்பது பன்மடங்கு ஆபாசமானது; அபத்தமானது.
மொத்தத்தில் இஸ்லாமிய ஒழுக்க விதிகளைத் தகர்த்தெறியும் நிகழ்வாக இது அமைந்துள்ளது. இதற்குப் பிறகும் சாலிமுடைய சம்பவத்தை உண்மை என்று நம்பினால் மேற்கண்ட வசனம் கூறும் ஒழுங்கு முறையைக் குழி தோண்டிப் புதைப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் வழிவகை செய்தார்கள் என்று நம்ப வேண்டிய நிலை வரும்.
இன்று உலகத்தில் எந்த மதத்தினரும் கடைப் பிடிக்காத ஓர் அற்புதமான வழிமுறையான பர்தாவை இஸ்லாமியர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். பெண்கள் மார்பகத்தை மறைக்க வேண்டும் என்பது இறைக் கட்டளை.
வீட்டுக்கு அதிகமாக வருபவர்களுக்குப் பால் புகட்டி விட்டால் பர்தாவைப் பேண வேண்டிய அவசியம் இல்லை என்று இந்தச் சம்பவம் கூறுகிறது. பர்தா என்ற அழகிய நெறியை ஒழிப்பதற்கு இஸ்லாமிய எதிரிகளால் உருவாக்கப்பட்டதாகத் தான் இச்செய்தி இருக்க முடியும்.
தாயின் பிரிவைத் தாங்காமல் இருப்பதற்கு சாலிம் (ரலி) அவர்கள் ஒன்றும் பச்சிளங்குழந்தை இல்லை. ஆண்கள் விளங்கிக் கொள்ளும் விஷயங்களை விளங்கி, பருவ வயதை அடைந்து, திருமணம் முடித்தவர். இவரால் சஹ்லா (ரலி) அவர்களின் வீட்டிற்குச் செல்லாமல் இருக்க முடியாதா?
குர்ஆன் கூறும் அனைத்து விதிகளையும் தளர்த்துவதற்கு அப்படியென்ன நிர்ப்பந்தம் சாலிம் (ரலி) அவர்களுக்கு ஏற்பட்டு விட்டது? சஹ்லா (ரலி) அவர்களின் வீட்டிற்கு அருகிலேயே ஒரு தனி வீட்டை உருவாக்கி முறையான அடிப்படையிலே வாழ்ந்திருக்கலாம் அல்லவா?
ஒரு பெண் நம்மிடத்தில் இது போன்ற பிரச்சனையைக் கொண்டு வந்தால் அப்பெண்ணிற்கு, பார்தாவைக் கடைப்பிடிக்கும் படி கூறுவோமே தவிர, ஒரு போதும் அந்த ஆணுக்குப் பால் புகட்டும் படி கூற மாட்டோம். நாம் கூட செய்யாத ஒரு மோசச் செயலை நபியவர்கள் செய்தார்கள் என்று கூறுவது நபி (ஸல்) அவர்களுக்கு இழிவை ஏற்படுத்துவதாக உள்ளது.
- அவர்களை அவர்களின் தந்தையருடனே சேர்த்து அழையுங்கள்! அதுவே அல்லாஹ்விடம் நீதியானது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால் அவர்கள் உங்களின் கொள்கைச் சகோதரர்களும் உங்கள் நண்பர்களுமாவர். தவறுதலாக நீங்கள் கூறி விடுவதில் உங்கள் மீது குற்றம் இல்லை. மாறாக உங்கள் உள்ளங்களால் தீர்மானித்துக் கூறுவதே (குற்றமாகும்). அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 33:5)
தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள் சொந்தக் குழந்தையாக ஆக முடியாது. மாறாக அவர்களைக் கொள்கைச் சகோதரர்களாகவும் நண்பர்களாகவும் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு அந்நிய ஆணிடத்தில் பேண வேண்டிய வழிமுறைகளை வளர்ப்புப் பிள்ளைகளிடத்திலும் பேண வேண்டும். இக்கருத்தையே இந்த வசனம் கூறுகிறது.
ஆனால் சாலிமுடைய சம்பவம் குர்ஆனுடைய இந்த வசனத்திற்கு எதிராக வளர்ப்புப் பிள்ளையை சொந்தப் பிள்ளையாக மாற்றுவதற்கான தந்திரத்தைக் கற்றுக் கொடுக்கிறது. அல்லாஹ்வுடைய சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு மாற்று வழியைச் சொல்லித் தருகிறது. இதனால் தான் சாலிமுடைய சம்பவத்தைச் சிலர் சுட்டிக் காட்டி, “ஹராமான ஒன்றை ஹலால் ஆக்குவதற்கான தந்திரங்களைச் செய்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியம் தான்’ என்று கூறுகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை குர்ஆனாகவே இருந்ததே தவிர குர்ஆனில் உள்ள சட்டங்களைத் தளர்த்துவதற்காக அவர்கள் ஒரு போதும் முயற்சித்ததே இல்லை. மேலுள்ள வசனத்தில் இறைவன் கற்றுத் தருகின்ற ஒழுங்கு முறையைச் சீர்குலைத்து அதற்கு மாற்றமான வேறொரு வழியை இச்சம்பவம் கற்றுத் தருவதால் இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது.
மகன் தாயிடத்தில் சாதாரணமாக வந்து செல்வதைப் போல் ஒரு அன்னிய ஆண், அன்னியப் பெண்ணிடம் வந்து போவதற்கான வழியை இந்த ஹதீஸ் கற்றுத் தருகிறது. குர்ஆனுக்கு எதிரான இந்த வழியை நாம் திறந்து விட்டால் இதுவே விபச்சாரம் பெருகுவதற்குக் காரணமாக அமைந்து விடும்.
பருவ வயதை அடைந்த ஆண், பெண்ணிடத்தில் பால் குடித்து விடுவதால் அப்பெண் மீது அவனுக்கோ, அல்லது அவன் மீது அப்பெண்ணுக்கோ ஆசை ஏற்படாது என்று அறிவுள்ளவர்கள் கூற மாட்டார்கள். இந்த வழி ஒழுக்கமுள்ள இளைஞர்களை விபச்சாரத்தின் பால் தள்ளுகின்ற மோசமான வழி.
ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுடன் மோதுகிறது
மேலே நாம் எடுத்துக் காட்டிய பல்வேறு குர்ஆன் வசனங்களுடன் இந்த ஹதீஸ் மோதுவதுடன் மட்டுமல்ல! ஆதாரப்பூர்வமான பல ஹதீஸ்களுக்கும் முரணாக அமைந்துள்ளது.
பின்வரும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் பால்குடி உறவு 2 வருடத்திற்குள் தான் ஏற்படும். அதற்குப் பிறகு குடித்தால் பால்குடி உறவு ஏற்படாது என்ற கருத்தைக் கூறுகின்றன.
- ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது என் அருகில் ஒரு ஆண் இருந்தார். (அவரைக் கண்டதும்) நபி (ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) மாறி விட்டது போல் தோன்றியது. அ(ந்த மனிதர் அங்கு இருந்த)தை நபியவர்கள் விரும்பவில்லை என்று தெரிந்தது. அப்போது நான், “இவர் என் (பால்குடி) சகோதரர்” என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்கள் சகோதரர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்து முடிவு செய்யுங்கள். ஏனெனில் பால்குடி உறவு என்பதே பசியினால் (பிள்ளை பால் அருந்தியிருந்தால்) தான்” என்று சொன்னார்கள். (நூல்: புகாரி 5102)
இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பசியைப் போக்குவதற்குத் தாயின் பாலே உதவும். இவ்வயதைக் கடந்து விட்ட குழந்தைகள் பால் அல்லாத வேறு உணவுகளை உட்கொள்ளும் நிலையை அடைந்து விடுகின்றன. எனவே பசிக்காகப் பாலருந்தும் பருவம் இரண்டு வருடங்கள் தான்.
தன்னுடைய மனைவியின் அருகில் ஓர் ஆண் அமர்ந்திருப்பதைக் கண்டு நபி (ஸல்) அவர்கள் கோபமடைகிறார்கள். அவர் ஆயிஷா (ரலி) அவர்களின் பால்குடிச் சகோதரர் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்ன போதும், “உங்கள் பால்குடிச் சகோதரர் யார் என்பதை ஆராய்ந்து பாருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய வார்த்தையைக் கவனிக்க வேண்டும்.
நாம் பால் குடித்த தாயிடம் ஒருவர் பால் குடித்து விடுவதால் அவர் நமது சகோதரனாக ஆகி விட முடியாது. அவர் எப்போது பால் குடித்தார்? இரண்டு வருடத்திற்குள் அவர் குடித்தாரா? அல்லது அதற்குப் பிறகு குடித்தாரா? என்று உற்று நோக்க வேண்டும். இரண்டு வருடத்திற்குள் அவர் குடித்திருந்தால் அவர் நம் சகோதரர். இதற்குப் பிறகு அருந்தியிருந்தால், அல்லது ஒரு சில மிடறுகளைக் குடித்திருப்பதால் அவர் நமது பால்குடிச் சகோதரராக ஆக மாட்டார்.
இந்த வித்தியாசத்தைப் பார்க்காமல் பால் குடித்து விட்டார் என்பதற்காக அவரை நம் சகோதரர் என்று எண்ணி சகோதரனிடத்தில் நடந்து கொள்வதைப் போல் அவரிடத்தில் நடந்து கொள்ளக் கூடாது. இதையே நபி (ஸல்) அவர்கள் தனது மனைவிக்குக் கூறி எச்சரிக்கையாக நடந்து கொள்ளும் படி கூறுகிறார்கள்.
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பால் புகட்டுவது இரண்டு வருடத்திற்குள்ளாகத் தான் இருக்க வேண்டும்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: தாரகுத்னீ, பாகம்: 10, பக்: 152
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மார்பகத்தின் வழியாக (குழந்தையின்) வயிறை நிரப்பும் அளவிற்குப் பால் புகட்டுவதினாலேயே பால்குடி உறவு ஏற்படும். இன்னும் (இவ்வாறு) பால் புகட்டுவது பால்குடிக் காலம் 2 வருடம் (முடிவடைவதற்கு) முன்னால் இருக்க வேண்டும்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி), நூல்: திர்மிதி 1072
இரண்டு வருடத்திற்குள் குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்பதை இந்த ஹதீஸ் வெளிப்படையாகத் தெரிவிக்கிறது.
மேற்குறிப்பிட்ட குர்ஆன் வசனங்களுக்கும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் சாலிமுடைய சம்பவம் முரண்படுவதால் இந்தச் சம்பவம் உண்மையல்ல என்றே ஒவ்வொரு முஸ்லிமும் நம்ப வேண்டும்.