நம்பகமானவர்கள் தவறு செய்ய மாட்டார்களா?

ஹதீஸ் கலை ஆய்வு                                   தொடர்: 3

நம்பகமானவர்கள் தவறு செய்ய மாட்டார்களா?

“குர்ஆனுக்கு மாற்றமாக ஹதீஸ் வந்தால் அதில் நம்பகமான அறிவிப்பாளர்கள் இருந்தாலும் அவர்களில் யாராவது தவறு செய்திருப்பார்களே தவிர, நபி (ஸல்) அவர்கள் குர்ஆனுக்கு மாற்றமாகச் சொல்லியிருக்க மாட்டார்கள்” என்று நாம் கூறுகிறோம். “அது எப்படி? நல்லவர்களாகவும் உறுதிமிக்கவர்களாகவும் உள்ள அறிவிப்பாளர்களிடமிருந்து எவ்வாறு தவறு ஏற்படும்?” என்று சிலர் கேட்கின்றனர்.

மனிதர்களாகப் பிறந்த எவரும் எந்தத் தவறும் செய்யாமல் இருக்க முடியாது. இது அல்லாஹ் ஏற்படுத்திய நியதி! சாதாரண மனிதன் கூட விளங்கிக் கொண்ட உண்மை இது! இதனால் தான் சில நபித்தோழர்கள் குர்ஆனுக்கு மாற்றமாக சில ஹதீஸ்களைச் சொல்லும் போது ஆயிஷா (ரலி) அவர்கள், அந்த நபித்தோழர்கள் நல்லவர்கள் என்று சான்று தந்ததோடு, தவறாக விளங்கியிருப்பார்கள் என்றும் கூறினார்கள்.

இதையெல்லாம் சொன்னாலும் இவர்கள் எதற்கெடுத்தாலும், “ஹதீஸ் கலையில் இப்படி உள்ளதா? யாராவது உங்களுக்கு முன்னால் இது போன்று சொல்லியுள்ளார்களா?’ என்று கேட்பார்கள். எனவே இதற்கான சான்றுகளை ஹதீஸ் கலையிலிருந்து வழங்குவது நல்லதாகும்.

இமாம் அஹ்மத் பின் ஹம்பல்

அஹ்மத் பின் ஹம்பல் கூறுகிறார்: ஹதீஸ் கலை அறிஞர்கள் (அறிவிப்பாளர்களின்) வரலாறுகளைத் தொகுத்ததோடு முடித்துக் கொள்ளவில்லை. மாறாக அறிவிப்பாளர்களில் அறியப்பட்ட நம்பகமானவர்களின் அறிவிப்புகள் உட்பட (அனைத்து) அறிவிப்பாளர்களின் அறிவிப்புகளிலும் நுட்பமாக ஆராய்ந்தார்கள். அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருக்கிறார்களே என்பதை மட்டும் அறிஞர்கள் சார்ந்திருக்கவில்லை. நல்ல அறிவிப்பாளர்களையும் கூட ஆய்வுக்கும் விமர்சனத்திற்கும் எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிடவில்லை.

ஏனென்றால் நம்பகமானவர் சிலவேளை தவறிழைப்பார். அல்லாஹ் மக்களை இந்த இயற்கையான அடிப்படையில் தான் படைத்திருக்கிறான். எனவே ஹதீஸ் கலை அறிஞர்கள், அறிவிப்பாளர்கள் எந்த அறிவிப்புகளில் தவறு செய்தார்களோ அந்த அறிவிப்புகளை ஆராய்ந்தார்கள். இல்மு இலலில் ஹதீஸ் (ஹதீஸில் உள்ள குறைகளைப் பற்றிய கல்வி) என்று இதற்குச் சொல்லப்படும்.

நூல்: அல்இலல், பாகம்: 1, பக்கம்: 20

இமாம் தஹபீ

நம்பகமானவர் சில வேளை சில விஷயங்களில் தவறு செய்வார்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 7, பக்கம்: 208

இமாம் சுயூத்தி

இது சஹீஹான செய்தி என்று சொல்லப்பட்டால் இதன் பொருள் என்னவென்றால் (முன்பு) கூறப்பட்ட தன்மைகளுடன் இதன் தொடர் முழுமை பெற்றுள்ளது என்று தான் அர்த்தம். எனவே அறிவிப்பாளர் தொடரின் வெளிப்படையை வைத்து அந்த ஹதீஸை ஏற்றுக் கொள்வோம். நல்லவர் கூட மறந்து தவறு செய்ய வாய்ப்புள்ளதால் உண்மையில் இது உறுதி செய்யப்பட்ட விஷயம் தான் என்ற அடிப்படையில் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

நூல்: தத்ரீபுர்ராவீ, பாகம்: 1, பக்கம்: 75

மஹ்மூத் தஹ்ஹான்

இது சரியான செய்தி என்று அறிஞர்கள் சொன்னால் முன்னால் சென்ற ஐந்து நிபந்தனைகள் இந்தச் செய்தியில் பெறப்பட்டுள்ளது என்பது தான் அதன் பொருள். உண்மையில் அந்தச் செய்தி உறுதி செய்யப்பட்டது என்ற அர்த்தம் அல்ல! ஏனென்றால் உறுதி மிக்கவரிடத்தில் கூட தவறும் மறதியும் வர வாய்ப்புண்டு!

நூல்: தய்சீரு முஸ்தலஹில் ஹதீஸ், பக்கம்: 36

நம்பகமானவர்கள் குர்ஆனுக்கு மாற்றமாக அறிவிக்கும் போது இவர்களில் யாரோ தவறு செய்துள்ளார்கள் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெரிந்து விடுகிறது. குர்ஆனுக்கு முரண்பாடாக அறிவிப்பதை வைத்து இவர்கள் தவறு செய்துள்ளார்கள் என்று கூறுகிறோமே தவிர நாமாக யூகமாகக் கூறவில்லை. இந்த அடிப்படையில் தான் குர்ஆனுக்கு மாற்றமாக நம்பகமானவர்கள் அறிவித்தாலும் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்கிறோம்.

நாம் எந்த ஹதீஸ்களைக் குர்ஆனுக்கு மாற்றமாக உள்ளது என்று கூறி மறுக்கிறோமோ அதில் உள்ள நம்பகமான அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் ஏனைய ஹதீஸ்களையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று தவறாக விளங்கி விடக் கூடாது.

குர்ஆனுக்கு முரண்படாதவாறு நம்பகமானவர்கள் அறிவித்தால் அதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். ஏனென்றால் இந்த ஹதீஸ்களில் அவர்கள் தவறு செய்தார்கள் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. நல்லவர்கள் முறையாக அறிவிப்பார்கள் என்ற பொதுவான நிலையைக் கவனித்து அவர்கள் அறிவிக்கும் செய்திகளை ஏற்றுக் கொள்வோம். தவறு செய்திருக்க வாய்ப்புள்ளது என்ற யூகத்தை இங்கு புகுத்தினால் உலகத்தில் யாரும் யாருடைய அறிவிப்பையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

புகாரி முஸ்லிமில் பதிவு செய்யப்பட்ட அனைத்து ஹதீஸ்களும் ஆதாரப்பூர்வமானதா?

புகாரி, முஸ்லிமில் பதிவு செய்யப்பட்ட ஹதீஸ்கள் அனைத்தும் சரியானவை என்று இன்றைக்குப் பெரும்பாலான மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மத்ரஸாக்களில் படித்த மார்க்க அறிஞர்களும் இவர்களைப் போன்றே நினைக்கிறார்கள்.

இதனால் தான் புகாரி, முஸ்லிமில் இடம் பெற்ற ஹதீஸ்களை நாம் விமர்சிக்கும் போது, சொல்லப்படுகின்ற விமர்சனம் சரியா? தவறா? என்று பார்க்காமல், புகாரியில் பதிவு செய்யப்பட்டு விட்டாலே அதை விமர்சிக்கக் கூடாது என்கிறார்கள்.

புகாரி, முஸ்லிமில் உள்ள ஹதீஸ்களைப் பற்றிய முழுமையான அறிவுள்ளவர்கள் யாரும் இவ்வாறு கூற மாட்டார்கள். மாபெரும் அறிஞரான இமாம் தாரகுத்னீ அவர்கள், புகாரி இமாம் பதிவு செய்த பல ஹதீஸ்களை விமர்சனம் செய்துள்ளார்கள்.

புகாரிக்கு விரிவுரை எழுதிய இமாம் இப்னு ஹஜர் அவர்கள் இந்த விமர்சனங்களுக்குச் சரியான பதிலைக் கூறினாலும், சில இடங்களில் சொல்லப்பட்ட குறையை ஏற்றுக் கொள்கிறார். அந்தக் குறைகளுக்குப் பதில் இல்லை என்றும் ஒத்துக் கொள்கிறார்.

சில நேரத்தில் புகாரியில் பதிவு செய்யப்பட்ட ஒரு அறிவிப்பாளரை அறிஞர்கள் விமர்சனம் செய்யும் போது அந்த விமர்சனத்திற்கு முறையான பதில் ஏதும் இப்னு ஹஜர் அவர்களால் சொல்ல முடிவதில்லை. இந்த இடத்தில் “இவரிடம் இமாம் புகாரி அவர்கள் குறைவாகத் தான் ஹதீஸ்களைப் பதிவு செய்துள்ளார்கள்’ என்பதை மட்டும் தான் இப்னு ஹஜர் பதிலாகக் கூறுகிறார்.

புகாரிக்கு மாபெரும் தொண்டாற்றிய மாபெரும் மேதை இப்னு ஹஜர் அவர்களே புகாரியில் உள்ள அனைத்தும் ஆதாரப்பூர்வமானது என்று ஒத்துக் கொள்ளாத போது, புகாரியில் உள்ள அனைத்தும் சரி என்று இவர்கள் வாதிடுவது தான் நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

இப்னு ஹஜரின் விளக்கம்

இப்னு ஹஜர் அவர்கள் புகாரிக்கு எழுதிய விரிவுரையின் முன்னுரையை முறையாகப் படித்தவர்கள் “புகாரியில் உள்ள அனைத்துச் செய்தியும் சரியானது’ என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

இமாம் இப்னு ஹஜர் கூறுகிறார்: “புகாரியில் சொல்லப்பட்ட விமர்சனங்களில் அதிகமானவைகளுக்குப் பதில் தரப்பட்டு விட்டது” என்று முஸ்லிமுடைய விரிவுரையில் முஹ்யித்தீன் என்பவர் கூறியது தான் சரியானதாகும். ஏனென்றால் இந்த விமர்சனங்களில் சிலவற்றிற்குப் பதில் (இன்னும்) கிடைக்கவில்லை.

நூல்: ஃபத்ஹுல் பாரீ, பாகம்: 1, பக்கம்: 346

இப்னு ஹஜர் கூறுகிறார்: சில வேளை அறிவிப்பாளர்கள் மிகவும் மோசமாக முரண்பட்டு அறிவிப்பார்கள். அல்லது (அவர்களின்) மனனத்தன்மை பலவீனமாகி விடும். இந்நேரத்தில் (தன்னை விட வலிமையானவர்களுக்கு) மாற்றமாக அறிவிக்கப்படும் செய்திக்கு முன்கர் (மறுக்கப்பட வேண்டியது) என்று முடிவு கட்டப்படும். இது போன்ற செய்தி புகாரியில் குறைவாகவே தவிர (அதிகமாக) இல்லை.

நூல்: ஃபத்ஹுல் பாரீ, பாகம்: 1, பக்கம்: 385

“தாரகுத்னீ (புகாரியில்) விமர்சனம் செய்த சில இடங்களைத் தவிர (மற்ற செய்திகள் அனைத்திற்கும் அங்கீகாரம் உண்டு)” என்ற கருத்தையே இப்னுஸ்ஸலாஹ் ஏற்றுள்ளார். அவர் முஸ்லிமுடைய விரிவுரையின் முன்னுரையில் இவ்வாறு கூறுகிறார்: புகாரி மற்றும் முஸ்லிமில் நம்பத் தகுந்த அறிஞர் ஒருவர் குறை கூறினால், (அனைத்து சமூகத்தின் அங்கீகாரமும் புகாரிக்கு உண்டு என்று நாம் முன்பு) கூறியதிலிருந்து (குறை கூறப்பட்ட) இந்தச் செய்தி விதிவிலக்கானதாகும். ஏனென்றால் இந்த விமர்சிக்கப்பட்ட ஹதீஸில் அங்கீகாரம் இல்லாமல் போய்விட்டது.

இப்னு ஹஜர் கூறுகிறார்: இவ்வாறு விதிவிலக்கு கொடுப்பது அழகானதாகும்.

நூல்: ஃபத்ஹுல் பாரீ, பாகம்: 1, பக்கம்: 346

இப்னு ஹஜர் கூறுகிறார்: புகாரியில் சொல்லப்பட்ட அனைத்து விமர்சனங் களும் (புகாரியில்) குறை ஏற்படுத்தக் கூடியதாக இல்லை. மாறாக இந்த விமர்சனங்களில் அதிகமானவைகளுக்குத் தெளிவான பதில் உள்ளது. அந்த விமர்சனத்தில் குறை சொல்ல முடியாது. சில விமர்சனங்களுக்குத் தெளிவற்ற விதத்தில் பதில் உள்ளது. சில விமர்சனங்களுக்கு பதில் சொல்வது கடினம்.

நூல்: ஃபத்ஹுல் பாரீ, பாகம்: 1, பக்கம்: 383

மேற்கண்ட வாசகங்களையெல்லாம் நன்கு கவனிக்க வேண்டும். புகாரியில் விமர்சிக்கப்பட்ட ஹதீஸ்களுக்கு பதிலைத் தரும் முயற்சியில் இறங்கிய கல்வி மேதை இப்னு ஹஜர் அவர்களே சில விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல முடியவில்லை என்று ஒத்துக் கொண்டு, அதைத் தமது நூலிலும் எழுதியிருக்கும் போது புகாரியில் உள்ள அனைத்துச் செய்தியும் சரியானது தான் என்று அறிவுள்ளவர்கள் எப்படிக் கூறுவார்கள்?

புகாரியில் நபி (ஸல்) அவர்களுடைய கூற்றுக்கள் மட்டும் பதிவு செய்யப்படவில்லை. நபித்தோழர்களின் கூற்று, நபித்தோழர்களுக்குப் பின்னால் வந்தவர்களின் கூற்றுக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு உதாரணமாகப் பின்வரும் சம்பவத்தை எடுத்துக் கொள்ளலாம்.

அம்ர் பின் மைமூன் என்பார் கூறியதாவது: அறியாமைக் காலத்தில் விபச்சாரம் புரிந்த பெண் குரங்கொன்றை, பல குரங்குகள் சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை நான் கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன்.

நூல்: புகாரி 3849

இது போன்ற சம்பவம் நடந்தது என்று அறிவுள்ளவர்கள் யாரும் கூற மாட்டார்கள்.

குரங்குகளுக்குத் திருமணம் உட்பட எந்தப் பந்தமும் கிடையாது. மனிதர்களுக்குச் சொல்லப்பட்ட வாழ்க்கை ஒழுங்கு நெறிகளைக் கடைப்பிடிக்குமாறு மிருகங்களுக்கு அல்லாஹ் கட்டளையிடவும் இல்லை. மனிதனுக்குச் சொல்லப்பட்ட சட்டத்தை, குரங்குகள் நடைமுறைப்படுத்தின என்பதை நியாயவான்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

தெளிவாகப் பொய் என்று தெரியும் இந்தச் சம்பவத்தை, இமாம் புகாரி அவர்கள் பதிவு செய்தார்கள் என்பதற்காக நாம் ஏற்றுக் கொள்ள முடியுமா?

ஹதீஸ் தொகுப்பு நூற்களில் சிறந்த நூற்கள் என்று முதலாவதாக புகாரியையும், இரண்டாவதாக முஸ்லிமையும் கூறலாமே தவிர குர்ஆனைப் போன்று ஒரு தவறும் இல்லாத நூல் என்ற சிறப்பை இவற்றுக்குத் தர முடியாது. இச்சிறப்பை இறைவன் தன் வேதத்திற்கு மட்டும உரியதாக்கியுள்ளான்.

புகாரி மற்றும் முஸ்லிமில் பலவீனமான அறிவிப்பாளர்களும் அறியப்படாதவர்களும் மிகக் குறைவாக இருக்கிறார்கள். மற்ற புத்தகங்களில் இருப்பதைப் போல் மோசமான கருத்தைக் கொண்ட செய்தியும் இவற்றில் குறைவாக இடம்பெற்றுள்ளது.

எனவே மற்ற நூற்களில் இடம்பெற்ற செய்திகளை ஹதீஸ் கலைக்கு உட்பட்டு அணுகுவதைப் போல் புகாரி, முஸ்லிமில் உள்ள செய்திகளையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

புகாரி இமாம் பதிவு செய்த ஹதீஸ்களைப் பல அறிஞர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு அது சரியானதா? தவறானதா? என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். இதற்குப் பல சான்றுகள் உள்ளன.