நலம் நாடுவோம்

நலம் நாடுவோம்

எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்

பிறர் நலம் நாடுவது என்பது இஸ்லாத்தின் அடிப்படை; இறை நம்பிக்கையின் அடையாளம்; இறையச்சத்தின் வெளிப்பாடு என்பதை அறிந்து இருக்கிறோம். இந்த அடிப்படையில் சமுதாயத்தின் அனைத்து மட்டத்தில் இருப்பவர்களும் பிறர் நலம் நாடும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும், குறிப்பிட்ட விஷயங்களில் பிறர் நலம் நாடுவதற்காக இஸ்லாம் கூறும் நன்மைகள் பற்றியும் கடந்த இதழில் கண்டோம். அதன் தொடர்ச்சியை இப்போது பார்ப்போம்.

வியாபாரத்தில் நலம் நாடுதல்

பெரும்பாலும் வியாபாரத்தின் போது பிறர் நலம் பேணும் நற்செயல் புறக்கணிக்கப்படுவதைப் பார்க்கிறோம். கலப்படம் செய்வது, தரமற்ற பொருளை விற்பது, பதுக்குவது என்று பணம் சம்பாதிப்பதற்காக அநியாயமான செயல்களைச் செய்கிறார்கள். பிறரை எப்படியும் ஏமாற்றலாம் எனுமளவிற்குத் தீமையான நடவடிக்கைகள் சர்வ சாதரணமாக நடக்கின்றன. பொருட்களை விற்பவர்களாக இருந்தாலும் வாங்குபவர்களாக இருந்தாலும் எப்போதும் ஒருவருக்கொருவர் நன்மை செய்யும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மைபேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களுடைய வியாபாரத்தில் அருள்வளம் (பரக்கத்)  அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள அருள்வளம் நீக்கப்படும்! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹகீம் பின் ஹிஸாம் (ரலி)

நூல்: புஹாரி (2079)

ஒருவர் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது, தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிடக் கூடாது! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புஹாரி (2139)

கிராமத்திலிருந்து (விற்பனைக்காகச் சரக்கு கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்! வாங்கும் எண்ணமின்றி விலை ஏற்றிவிடுவதற்காக அதிக விலைக்குக் கேட்க வேண்டாம்! (விலை உயர்த்தி விற்பதற்காக, ஆளை ஏற்பாடு செய்து, அதிக விலைக்குக் கேட்கச் செய்வதும் கூடாது!) ஒருவர் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது, தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிட வேண்டாம்! என்று நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள்!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புஹாரி 2140

பள்ளிவாசலில் பிறர் நலம் நாடுதல்

எல்லா விதமான இடங்களிலும் பிறருக்கு நலம் நாடும் வகையில் இருக்க வேண்டும். அல்லாஹ்வை நினைத்து வணங்குவதற்கு அனைவரும் வரும் அவனது ஆலயத்திலும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும். பள்ளிவாசலைப் பராமரிப்பதற்கு ஆள் இருப்பார்கள் என்று சொல்லிக் கொண்டு அங்கு அலட்சியமாக நடந்து கொள்ளக் கூடாது. அடுத்தவர்களுக்குத் துன்பம் தரும் காரியங்களைச் செய்துவிடக்கூடாது. வணக்க வழிபாடுகள் புரியும் மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் நடக்கும் குணம் கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும்.

வெங்காயம், சீமைப் பூண்டு ஆகியவற்றைச் சாப்பிட வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். எங்களுக்குத் தேவை மிகைத்துவிடவே அவற்றிலிலிருந்து நாங்கள் சாப்பிட்டுவிட்டோம். அப்போது அவர்கள், “துர்வாடையுள்ள இந்தச் செடியிலிருந்து விளைகின்றதைச் சாப்பிட்டவர் நமது பள்ளிவாசலை நெருங்க வேண்டாம். ஏனெனில், மனிதர்களுக்குத் தொல்லை தருகின்றவை வானவர்களுக்கும் தொல்லை தருகின்றனஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),

நூல்: முஸ்லிம் (974)

உங்களில் ஒருவர் ஜமாஅத்துடன் தொழுவது, அவரது வீட்டிலோ கடைவீதியிலோ தனியாகத் தொழுவதைவிட இருபதுக்கும் அதிகமான மடங்கு சிறந்ததாகும்! ஏனெனில், அவர் உளூச் செய்து, அதை அழகுறச் செய்து, பிறகு பள்ளிவாசலுக்கு வருகிறார்.  தொழுகையைத் தவிர வேறு எதையும் அவர் நாடவில்லை.  தொழுகையைத் தவிர வேறு எதுவும் அவரை (பள்ளி வாசலுக்கு) எழுந்து செல்ல வைக்கவில்லை! அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஒரு படித்தரம் (அந்தஸ்து) அவருக்கு உயர்த்தப்படுகிறது; அல்லது ஒரு தவறு அவரை விட்டு நீக்கப்படுகிறது!

உங்களில் ஒருவர் தொழக் கூடிய இடத்தில் அமர்ந்திருக்கும் வரை வானவர்கள் அவருக்காக பிரார்த்திக்கின்றனர்! அங்கே, அவருக்கு காற்றுப் பிரிந்து, உளூ நீங்கிவிடாமலிருக்கும் வரை, (பிறருக்குத்) தொல்லை தரும் எதையும் அவர் செய்யாமலிருக்கும்வரை, “இறைவா! இவர் மீது கருணை செய்வாயாக! இவருக்கு இரக்கம் காட்டுவாயாக!என்று வானவர்கள் பிரார்த்திக்கிறார்கள்! உங்களில் ஒருவர் தொழுகைக்காகக் காத்திருக்கும் வரை அவர் தொழுகையிலேயே இருக்கின்றார்! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புஹாரி (2119)

பிற உயிரினங்களுக்கு நலம் நாடுதல்

சக மனிதர்களுக்கு மட்டுமல்ல சுற்றி வாழும் மற்ற உயிரினங்களுக்கும் நல்லதைச் செய்ய வேண்டும் என்று சொல்லும் தலைச்சிறந்த மார்க்கம் இஸ்லாம். இறைவன் அனுமதித்த அடிப்படையில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறேதும் இல்லை.

அதேசமயம், பகுத்தறிவு இல்லாத ஜீவன்கள் தானே என்று சொல்லிக் கொண்டு அவற்றை எப்படியும் துன்புறுத்தலாம்; வதைக்கலாம் என்று நினைத்துவிடக் கூடாது.

மற்ற உயிரினங்களிடம் கருணை காட்டுவதற்கும் நன்மைகள் இருக்கிறது. கொடுமைப்படுத்தும் காரியங்களை செய்பவர்களுக்கு அதற்குரிய தண்டனை இருக்கிறது என்பதை என்றும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

நீங்கள் செழிப்பான காலத்தில் பயணம் செய்தால், (பசுமையான) பூமியில் ஒட்டகங்களுக்குரிய பங்கை (மேய்ச்சலை)க் கொடுத்து விடுங்கள். வறட்சியான காலத்தில் பயணம் செய்தால், ஒட்டகங்களைத் துரிதமாகச் செலுத்துங்கள். நீங்கள் இரவில் இறங்கி ஓய்வெடுத்தால், (போக்குவரத்துச்) சாலையைத் தவிர்த்துவிடுங்கள். ஏனெனில், அது இரவில் விஷ ஜந்துகள் உலவும் இடமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (3891)

முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு வைத்து, அதிலிருந்து (அதன் இலைகள், கனிகள்) உண்ணப்பட்டால், அதுவும் அவருக்கு ஒரு தர்மமாக அமையாமல் இருப்பதில்லை. அதிலிருந்து களவாடப்பட்டதும் அவருக்கு ஒரு தர்மமாக அமையும்; அதிலிருந்து வன விலங்குகள் உண்பதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும். அதிலிருந்து பறவைகள் கொத்தித் தின்றதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்; அதில் எவரேனும் சேதம் விளைவித்தால் அதுவும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் (3159)

ஒரு மனிதர் (ஒரு பாதையில்) நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது.  உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு, (கிணற்றிலிருந்து) அவர் வெளியே வந்த போது, நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்க விட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனத்திற்குள்) “எனக்கு ஏற்பட்டதைப் போன்ற (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கின்றது போலும்என்று எண்ணிக் கொண்டார். உடனே, (மீண்டும் கிணற்றில் இறங்கித் தண்ணீரைத்) தனது காலுறையில் நிரப்பிக் கொண்டு, அதை வாயால் கவ்விக் கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் அவருடைய இந்த நற்செயலை ஏற்று அவரை (அவரது பாவங்களை) மன்னித்தான்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! கால்நடைகள் (மற்ற பிராணிகளுக்கு உதவும்) விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “(ஆம்😉 உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவிசெய்யும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புஹாரி (2363) முஸ்லிம் (2244)

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் இருந்தேன். அப்போது நாங்கள் “இளைஞர்கள் சிலரைஅல்லது “மக்கள் சிலரைக்கடந்து சென்றோம். அவர்கள் கோழியொன்றைக் கட்டிவைத்து அதன் மீது அம்பெய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் இப்னு உமர் (ரலி) அவர்களைக் கண்டவுடன் அதை அப்படியே விட்டுவிட்டு கலைந்து சென்று விட்டனர். இப்னு உமர் (ரலி) அவர்கள், “இதைச்  செய்தது யார்? இவ்வாறு செய்பவர்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்என்று சொன்னார்கள். இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: பிராணிகளின் அங்கங்களைச் சிதைப்பவனை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். இதையே நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் அறிவித்துள்ளார்கள்.

நூல்: புஹாரி (5515)

அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பிறர் பொருளை அபகரிப்பதையும் (பிராணிகள் மற்றும் மனிதர்களின்) அங்கங்களைச் சிதைப்பதையும் தடை செய்தார்கள்.

நூல்: புஹாரி (5516)

ஒரு பூனையை, அது சாகும் வரை (பட்டினி போட்டு) கட்டி வைத்த காரணத்தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள். அதை அடைத்து வைத்த போது அவள் அதற்குத் தீனியும் போடவில்லை; அதற்கு (குடிக்கத்) தண்ணீரும் கொடுக்கவில்லை; அவள் அதை பூமியின் புழு பூச்சிகளைத் தின்பதற்காக (அவிழ்த்து) விடவுமில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),

நூல்: புஹாரி (3482) முஸ்லிம் (2242)

பிறர் நலம் நாடுவது குறித்து இஸ்லாம் போன்று வேறு எந்தக் கொள்கையாலும் இந்தளவிற்குத் தெளிவாக விளக்கிவிட முடியாது. உண்மையைச் சொல்வதாக இருப்பின், இதுபோன்று எடுத்துரைக்கும் எந்தவொரு கொள்கையும் எங்கும் இல்லவே இல்லை.

காராணம், பிற மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்; தீமை செய்யக் கூடாது என்பது குறித்து அனைத்து கோணங்களிலும், கண்ணோட்டத்திலும் இஸ்லாம் கவனத்தைச் செலுத்துகிறது. இதுவரை நாம் பார்த்த செய்திகள் கூட அவற்றுள் ஒரு பகுதிதான்.

இன்னும் பற்பல செய்திகள், கருத்துக்கள் இருக்கின்றன. இத்தகைய இஸ்லாமிய மார்க்கம் உலகில் தலைவிரித்தாடும் தீவிரவாதத்தை ஆதரிக்குமா? என்பதை நாம் கவனிக்க வேண்டும். அதுபற்றி சிந்தித்தால் நமக்கு கிடைக்கும் ஒரே பதில், இஸ்லாம் ஒருபோதும் தீவிரவாதத்தைப் போதிக்கவில்லை, அதை ஆதரிக்கவில்லை என்பது தான். இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரானது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெளிவான ஒன்று என்பதை எவராலும் மறுக்க இயலாது.