நகைப்பிற்குரிய வாக்குமூலம்

நகைப்பிற்குரிய வாக்குமூலம்

“இன்றைக்கு நாம் படிக்கும் இந்த பைபிள் பற்பல பிரதி எடுப்பவர்களின் கைவண்ணமாகும். அவர்கள் பல்வேறு எடுத்துக் காட்டுகளில் தங்கள் மொழி பெயர்ப்புப் பணியை மிகத் துல்லியமாகச் செய்திருக்கிறார்கள். ஆனால் பிரதி எடுப்பவர்கள் தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்!”

அருளப்பட்ட இறைச் செய்தியின் மூலத்திலிருந்து நகல் எடுக்கும் போது மனிதத் தன்மை உள்ளே நுழைந்து விடுகின்றது. இன்று வரை மூல மொழியில் உள்ள ஆயிரக்கணக்கான நகல்கள் சரியான பிரதிகள் அல்ல!

இதன் விளைவு இரண்டு பிரதிகளில் ஒன்றுடன் ஒன்று ஒத்ததாக இல்லை.

கிறித்தவர்களுடைய கிரேக்க வேத நூல்களின் மூலம் அழிக்கப்பட்டது என்பது ஆதாரப்பூர்வமான தெளிவான விஷயமாகும்.

இந்த வாக்குமூலங்கள் அனைத்தும் Seventh Day Adventist Church என்ற கிறித்தவ அமைப்பின் அறிஞர்கள் தங்கள் பைபிளின் முன்னுரையில் தெரிவித்த கருத்துக்களாகும். இப்போது அந்த முன்னுரை நீக்கப்பட்டு விட்டது என்பது தனி விஷயம்.

மூல வேதம் அழிந்து விட்டது என்று அவர்களே நகைப்பிற்குரிய வாக்குமூலத்தைத் தருகின்றனர். மூலமே அழிந்து போய் விட்டது. இந்த ஆக்கத்தில் இதற்கு மொழியாக்கம் வேறு! இதுவெல்லாம் இறை வேதமா?

“நீதிமன்றங்களில் ஒரு சாட்சி உண்மை சொல்கிறார் என்று நினைத்துத் தான் அவரது சாட்சியத்தை ஏற்கிறோம். அவர் மீது சந்தேகப்படாத வரை அல்லது அவர் பொய்யர் என்று நிரூபணம் ஆகாத வரை அவருடைய சாட்சியத்தை மறுக்க மாட்டோம். பைபிளுக்கு இது போன்ற ஒரு வாய்ப்பை வழங்கி அது கூறுகின்ற செய்தியை சற்று நிதானத்துடன் கேட்போம்”

இவ்வாறு சொல்வது யார்?

டாக்டர் கிரஹாம் ஸ்க்ராஜ்ஜி, பைபிள் இறை வேதமா? என்ற தனது நூலில் இவ்வாறு கூறுகின்றார்.

அஹ்மத் தீதாத் குறிப்பிடுகின்றார்: டாக்டர் கிரஹாம் ஸ்க்ராஜ்ஜியின் கோரிக்கை நியாயமானது தான்! அவர் சொல்வதைத் தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம்.

பைபிள் தன்னைப் பற்றி என்ன சொல்கின்றது என்று பார்ப்போம்.

ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் ஆகிய ஐந்து நூற்களில் 700 வாக்குமூலங்கள் உள்ளன.

அவை தெளிவாகவே “இந்தப் புத்தகங்களின் ஆசிரியர்கள் கடவுள் இல்லை. ஏன்? இந்த நூற்களை எழுதியதாகக் கருதப்படும் தூதர் மூஸாவுக்கும் இதற்குமே எந்தச் சம்பந்தமும் இல்லை” என்று தெரிவிக்கின்றன.

கீழே வரும் இந்த வசனங்களைப் பாருங்கள்.

மோசே ஆண்டவரிடம், “சீனாய் மலை மேல் மக்கள் ஏறி வர மாட்டார்கள். ஏனெனில், “மலைக்கு எல்லை அமைத்து அதைப் புனிதப்படுத்து” என்று கூறி நீர் எங்களை எச்சரித்துள்ளீர்” என்றார்.

யாத்திராகமம் 19:23

ஆண்டவர் அவரை நோக்கி, “நீ கீழே இறங்கிச் சென்று ஆரோனுடன் மேலேறி வா. குருக்களும் மக்களும் ஆண்டவரிடம் வருவதற்காக எல்லை மீற வேண்டாம்; இல்லையெனில் ஆண்டவர் அவர்களை அழித்தொழிப்பார்” என்றார்.

யாத்திராகமம் 19:24

ஆண்டவர் மோசேயை நோக்கி, “இறங்கிச் செல். மக்கள் ஆண்டவரைப் பார்க்க விரும்பி எல்லை மீறி வராதபடியும், அவ்வாறு வந்து பலர் சாகாதபடியும் அவர்களை எச்சரிக்கை செய்.

யாத்திராகமம் 19:21

ஆண்டவர் மோசேயிடம், “இஸ்ரயேல் தலைவர்கள் சிலரை உன்னோடு அழைத்துக்கொண்டு மக்கள் முன் செல்; நைல் நதியை அடித்த உன் கோலையும் கையில் எடுத்துக் கொண்டு போ.”

யாத்திராகமம் 17:5

ஆண்டவர் மோசேயிடம் கூறியது;

லேவியராகமம் 27:1

இவையெல்லாம் கடவுளுடைய வார்த்தையுமில்லை! கடவுளின் தூதர் மோசேயின் வார்த்தையுமில்லை என்று நன்கு தெளிவாகத் தெரிவிக்கின்றன. யாரோ சொல்லக் கேட்டு ஒரு மூன்றாம் நபர் எழுதியதைத் தான் இவை சுட்டிக் காட்டுகின்றன.

மூஸாவின் இறப்புச் செய்தி

பைபிள் பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து ஆகமங்களை மூஸா தான் எழுதினார் என்பது கிறித்தவர்களின் நம்பிக்கை. ஆனால் பின்வரும் செய்தியைப் பார்த்தால் நிச்சயமாக இது மூஸா (மோசே) எழுதியதல்ல என்பதை யாரும் விளங்கிக் கொள்ளலாம்.

எனவே, ஆண்டவர் கூறியபடியே, அவர் தம் ஊழியர் மோசே மோவாபு நாட்டில் இறந்தார்.

மோவாபு நாட்டில் பெத்பகோருக்கு எதிரே உள்ள பள்ளத்தாக்கில் அவர் அவரை அடக்கம் செய்தார். ஆனால் இன்றுவரை எந்த மனிதருக்கும் அவரது கல்லறை இருக்குமிடம் தெரியாது.

மோசே இறக்கும் போது அவருக்கு வயது நூற்றிருபது. அவரது கண்கள் மங்கினதுமில்லை; அவரது வலிமை குறைந்ததுமில்லை.

மோவாபுச் சமவெளியில் இஸ்ரயேல் மக்கள் மோசேக்காக முப்பது நாள்கள் துக்கம் கொண்டாடினர். மோசேக்காக இஸ்ரயேல் மக்கள் அழுது துக்கம் கொண்டாடின நாள்கள் நிறைவுற்றன.

நூனின் மகனாகிய யோசுவாவின் மேல் மோசே தம் கைகளை வைத்ததால், அவர் ஞானத்தின் ஆவியால் நிரப்பப் பெற்றிருந்தார். இஸ்ரயேல் மக்கள் யோசுவாவுக்குச் செவிகொடுத்து, மோசேக்கு ஆண்டவர் கட்டளையிட்டபடி நடந்தார்கள்.

ஆண்டவர் நேருக்குநேர் சந்திக்க மோசேயைப்போல், இறைவாக்கினர் வேறெவரும் இஸ்ரயேலில் இதுகாறும் எழுந்ததில்லை.

உபாகமம் 34:5-10

மோஸே இந்த ஆகமங்களை எழுதியிருந்தால், தான் மரணிக்கும் முன்பே மோஸே தனக்குத் தானே இறப்பு செய்தி எழுதுவாரா? எனவே நிச்சயமாக இது இறை வேதமோ அல்லது இறைத் தூதர் மூஸா எழுதியதோ இல்லை என்பது நிரூபணமாகின்றது.

யாரோ ஒரு அனாமதேயம் எழுதியதைத் தான் மோஸே எழுதியது என்று கிறித்தவர்கள் நம்புகின்றனர் என்பதில் சந்தேகமில்லை.