நடைமுறைக்கு வந்த நபிவழிச் சட்டம்

நடைமுறைக்கு வந்த நபிவழிச் சட்டம்

தலாக்

மனைவி மீது ஆத்திரப்பட்டு, அவசரப்பட்டு ஒருவர் ஒரே மூச்சில் முத்தலாக் சொல்லி விட்டால், அவள் ஒரேயடியாக விவாகரத்தாகி விடுவாள். இனி அவளை இன்னொருவர் மணமுடித்து, விவாகரத்துச் செய்த பின்னர் தான் முதல் கணவர் திருமணம் முடிக்க வேண்டும்.

இது மத்ஹபுகள் கூறும் முத்தலாக் முறையாகும்.

காலங்காலமாக பல நூற்றாண்டு காலமாக மக்களிடமிருந்த இந்த மத்ஹப் தலாக் முறையை மயானத்திற்கு அனுப்பி விட்டு, குர்ஆன் கூறும் தலாக்கை மக்களிடம் நிலை நாட்டினோம்.

இதனால் கசங்கிப் போகவிருந்த மங்கையர் மறுவாழ்வு பெற்றனர். கருகிப் போகவிருந்த அவர்களது வாழ்வு மறுமலர்ச்சி பெற்றது. இங்கே மார்க்க அடிப்படையிலான தலாக்கை சுருக்கமாக உங்கள் பார்வைக்குத் தருகிறோம்.

தலாக் கூறிட ஆண்களுக்கு மூன்று வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. முதல் இரண்டு வாய்ப்புக்களைப் பயன்படுத்திய பின் அவர்கள் திரும்பவும் சேர்ந்து வாழலாம். மூன்றாவது வாய்ப்பையும் பயன்படுத்தி விட்டால் அவர்கள் சேர்ந்து வாழ முடியாது. இது தான் தலாக் கூறுவதற்கு இஸ்லாம் காட்டும் நெறியாகும்.

விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டு விடலாம்.

அல்குர்ஆன் 2:229

இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு தடவை என்பது திரும்பப் பெறுவதற்குரிய இரண்டு தலாக்குகள் ஆகும். அதாவது இவ்விரு தலாக்குகளுக்குப் பிறகு மூன்றாவது முறை தலாக் விட்டால் அவர் தனது மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்ள முடியாது. எனவே இத்தலாக் ஒன்றன் பின் ஒன்றாக நிகழ வேண்டும் என்பதை இந்த வசனம் விளக்குகிறது.

தடவை என்பதன் பொருளைத் தவறாக விளங்கிக் கொண்டதால் ஒருவன் ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் என்றோ, முத்தலாக் என்றோ, தலாக் தலாக் தலாக் என்றோ கூறினால் அவன் மூன்று வாய்ப்புக்களையும் பயன்படுத்தி விட்டான்; அவன் மனைவியை நிரந்தரமாகப் பிரிந்து விட்டான் என்று மத்ஹபுகளில் சட்டம் இயற்றி வைத்துள்ளார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் இரண்டு தலாக்குகள் என்று கூறவில்லை. மாறாக தலாக் என்பது இரண்டு தடவைகள் என்று கூறுகின்றான். குறிப்பிட்ட காலக் கெடு முடிவடையாத வரை ஒரு தடவை என்பது பூர்த்தியாகாது.

ஒருவர் தன் மனைவியை நோக்கி ஒரே சமயத்தில், உன்னை மூன்று முறை தலாக் சொல்லி விட்டேன் என்று கூறினாலும் முன்னூறு முறை தலாக் சொல்லி விட்டேன் என்று கூறினாலும் அவர் ஒரு தடவை தலாக் கூறியதாகத் தான் பொருள்.

தடவை என்பதன் பொருளை விளங்கிக் கொள்ள சில உதாரணங்களைக் கூறலாம்.

ஒருவர் ஒரு மணி நேரம் குளித்துக் கொண்டேயிருக்கின்றார். அதன் பிறகு அவர் தலையைத் துவட்டிக் கொள்கிறார். இவர் எத்தனை தடவை குளித்தார் என்று கேட்டால் நாம் ஒரு தடவை என்று தான் கூறுவோம்.

இன்னொருவர் பத்து நிமிடம் குளிக்கின்றார். பிறகு வெளியே வந்து தலையைத் துவட்டிக் கொள்கிறார். மீண்டும் போய்க் குளிக்கின்றார். இப்படியே ஒரு மணி நேரத்தில் 5 தடவை இது போன்று செய்கின்றார். இவர் எத்தனை தடவை குளித்தார் என்று கேட்டால் 5 தடவை என்று கூறுவோம்.

ஒருவர் சாப்பிடுவதற்கு அமர்ந்து 10 இட்லி சாப்பிட்டு விட்டு கை கழுவுகின்றார். இவர் ஒரு தடவை சாப்பிட்டுள்ளார்.

மற்றொருவர் இரண்டு இட்லி சாப்பிட்டு விட்டு கை கழுவுகின்றார். பிறகு சிறிது நேரத்தில் மீண்டும் அமர்ந்து இரண்டு இட்லி சாப்பிடுகின்றார். இவர் முன்னவரை விடக் குறைவாகச் சாப்பிட்டிருந்தாலும் இரண்டு தடவை சாப்பிட்டார் என்று தான் கூறுவோம்.

இதை இங்கு குறிப்பிடக் காரணம் ஒரு தடவை என்றால் அதற்கு ஒரு ஆரம்பமும் முடிவும் இருக்க வேண்டும்.

இது போலத் தான் தலாக்கின் தடவை என்பதையும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு தலாக் விட்டால் மூன்று மாத விடாய்க்குள்ளாக மீட்டி விட்டால் ஒரு தடவை தலாக் நிறைவேறி விட்டதாகப் பொருள்.

ஒரு தலாக் கூறி விட்டு, உரிய காலக் கெடுவுக்குள் மீட்டாமல் ஒருவர் ஆயிரம் முறை தலாக் என்று கூறினாலும் அது ஒரு தலாக் தான். ஏனென்றால் ஒரு தடவை என்பது இன்னும் முடிவுக்கு வராத நிலையில் அதை எத்தனை முறை கூறினாலும் ஒரு தடவை தான்.

இது தான் மேலே நாம் சுட்டிக் காட்டிய வசனத்தில் இடம் பெறும் தடவை என்பதன் பொருள்.

இதை வெறும் அறிவுப்பூர்வமாக நாம் சொல்லவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தின் நடைமுறையை ஆராய்ந்து தான் கூறுகின்றோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்தது என்னவெனில், ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் என்றோ, முத்தலாக் என்றோ, தலாக் தலாக் தலாக் என்றோ கூறினால் ஒருவன் தலாக் கூறத் தனக்கு வழங்கப்பட்டுள்ள மூன்று வாய்ப்புக்களில் ஒரு வாய்ப்பைத் தான் பயன்படுத்தியிருக்கிறான் என்பது தான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது

அறிவிப்பவர்:  இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: முஸ்லிம் 2689

“நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் அபூபக்ர் (ரலி) காலத்திலும் உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் மூன்று ஆண்டு காலத்திலும் மூன்று (தலாக் என்பது) ஒரு தலாக்காகவே கருதப்பட்டு வந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று அபுஸ்ஸஹ்பா என்பவர் இப்னு அப்பாஸிடம் கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “ஆம்’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: தாவூஸ், நூல்: முஸ்லிம் 2690, 2691

அல்லாஹ்வுடைய வேதத்திலும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறையிலும் முத்தலாக் என்பது ஒரு தலாக்காகவே கருதப்பட்டு வந்துள்ளது.

இதற்கு மாற்றமாக மத்ஹபுகள் கொண்டு வந்த முத்தலாக் முறையை மாற்றி, அல்குர்ஆனின் வழியில், அல்லாஹ்வின் தூதர் காட்டிய முறையில் நடைமுறைப்படுத்தியது தவ்ஹீத் ஜமாஅத்தின் மாபெரும் சாதனையாகும்.

மஸ்ஜிதுக்கு வரும் மகளிர்

“தொழுகையை நீட்டித் தொழ வேண்டும் என்று எண்ணி தொழுகையில் நான் நிற்கின்றேன். அப்பொழுது குழந்தையின் அழுகுரலைச் செவிமடுக்கின்றேன். அக்குழந்தையின் தாயை நான் சங்கடப்படுத்துவதை வெறுத்து, உடனே எனது தொழுகையை சுருக்கி விடுகின்றேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)

நூல்: புகாரி 868, 707

வல் முர்ஸலாத்தி உர்பன் என்ற 77வது அத்தியாயத்தை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஓதும் போது செவிமடுத்த உம்முல் பழ்லு (ரலி) அவர்கள், “என்னருமை மகனே! இந்த சூராவை ஓதி எனக்கு (பழைய) நினைவை ஏற்படுத்தி விட்டாய். இதுதான் அல்லாஹ்வின் திருத்தூதர் மக்ரிபில் ஓதும் போது நான் செவிமடுத்த கடைசி அத்தியாயமாகும்” என்று கூறினார்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 763, திர்மிதி 283

“(தொழுகையில் இமாம் தவறிழைத்தால்) சுப்ஹானல்லாஹ் என்று கூறுவது ஆண்களுக்கு உரியதாகும். கைதட்டுதல் பெண்களுக்குரியதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1203, திர்மிதி 337

நபி (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்தவுடன்  பெண்கள் எழுந்து விடுவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுவதற்கு முன் சற்று நேரம் அமர்ந்திருப்பார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)

நூல்: புகாரி 837, 866, 875

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுது முடிந்தவுடன் பெண்கள் போர்வையால் போர்த்திக் கொண்டு வீடுகளுக்கு புறப்படுவார்கள். இருட்டின் காரணத்தினால் அவர்கள் யாரென அறியப்பட மாட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 867, 372, 578, 872

நபி (ஸல்) அவர்கள் (ஒருநாள்) இஷாவைத் தாமதப் படுத்தினார்கள். பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர் என உமர் (ரலி) அவர்கள் கூறியதும் நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தார்கள். “இப்பூமியில் வசிப்பவர்களில் உங்களைத் தவிர வேறெவரும் இத்தொழுகையை எதிர்பார்த்திருக்கவில்லை” என்றார்கள். அந்த நாட்களில் மதீனாவைத் தவிர வேறெங்கும் தொழுகை நடத்தப்படவில்லை. இஷாவை அடிவானத்தின் செம்மை மறைந்ததிலிருந்து இரவின் மூன்றில் ஒரு பகுதி கழிவது வரை மக்கள் தொழுது வந்தனர்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 864, 866, 569, 862

“உங்களில் ஒருத்தி பள்ளிக்கு வரும் போது நறுமணம் பூசக் கூடாது” என்று எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜைனப் (ரலி)

நூல்: முஸ்லிம் 674

“உங்களுடைய மனைவிமார்கள் (தொழுவதற்காக) பள்ளிவாசலுக்குச் செல்ல  உங்களிடம் அனுமதி கோரினால் அவர்களைத் தடுக்காதீர்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றேன் என் இப்னு உமர் (ரலி) அவர்கள் (தமது மகனுக்கு) கூறினார்கள். (அதற்கு அவருடைய மகன்) பிலால் பின் அப்தில்லாஹ், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் அவர்களைத் தடுப்பேன்” என்று கூறினார். உடனே இப்னு உமர் (ரலி) அவர்கள் அவரை முன்னோக்கி மிக மோசமாகத் திட்டினார்கள். அது போன்று திட்டியதை நான் ஒருபோதும் கேட்டதில்லை. பிறகு “நான் நபியவர்களிடமிருந்து உனக்கு அறிவிக்கின்றேன். நீயோ அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் தடுப்பேன் என்று கூறுகின்றாய்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸாலிம் பின் அப்தில்லாஹ்

நூல்: முஸ்லிம் 666

இப்னு உமர் (ரலி) அவர்கள், “இரவில் பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடுக்காதீர்கள்” என்று சொன்னதும் இப்னு உமர் (ரலி) அவர்களின் மகனார், “பெண்களை வர விட மாட்டோம் இதை (அப்பெண்கள்) குழப்பம் ஏற்படுத்துவதற்குரிய வாய்ப்பாக ஆக்கிக் கொள்வார்கள்” என்று பதில் சொன்னார். உடனே அவரைக் கடுமையாக வெறுத்தார்கள். “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகச் சொல்கிறேன்.  நீ வர விட மாட்டேன் என்கிறாயா?” என்றும் தன் மகனை நோக்கிக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஜாஹித்

நூல்: முஸ்லிம் 670

அடுக்கடுக்காகத் தொடுக்கப்பட்டிருக்கும் இந்த ஹதீஸ்களெல்லாம் மகளிருக்கும் மஸ்ஜிதுக்கும் உள்ள தொடர்பைக் காட்டுகின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டிய இந்த வழிமுறை,  நடைமுறையில் இல்லாமல் இருந்தது. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பெண்கள் அறவே அனுமதிக்கப்படுவதில்லை. விதிவிலக்காக எங்காவது ஒரு சில பள்ளிகளில் ரமளானில், அதுவும் தனியாக ஜமாஅத் நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கலாம். இது தவிர ஏனைய அனைத்துப் பள்ளிகளிலும் பெண்களுக்குக் கதவுகள் சாத்தப்பட்டுத் தான் உள்ளன.

“பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடை செய்யாதீர்கள். அவர்களது வீடுகளில் தொழுவது அவர்களுக்குச் சிறந்தது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: அபூதாவூத் 480

இந்த ஹதீஸைத் தங்கள் நிலைபாட்டிற்கு ஆதாரமாகக் காட்டி பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடுக்கின்றனர். சிறந்தது என்று கூறிய நபி (ஸல்) அவர்கள், பெண்கள் வந்தால் தடை செய்யக் கூடாது என்று கூறியிருப்பதை வசதியாக மறந்து விடுகின்றனர்.

பெண்களுக்கான இந்த வாசல் அடைக்கப்பட்டதால் தான் அவர்கள் தர்ஹாக்களின் பக்கம் சென்றனர். இந்த நிலையை மாற்றி அல்லாஹ்வின் அருளால் இன்று பெண்கள் பள்ளிவாசலுக்கு வரும் நிலையை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்படுத்தியுள்ளது.

திடலுக்கு வந்த பெருநாள் தொழுகை

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) முஸல்லா எனும் மைதானத்திற்குச் செல்பவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீது அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 956

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையைத் தொழுததாக எந்த ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸும் இல்லை.

“மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட எனது இந்தப் பள்ளியில் (மஸ்ஜிதுத் நபவீ) தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1190

இந்த ஹதீஸின் அடிப்படையில் மஸ்ஜிதுந் நபவீயில் தொழுவது மற்ற சாதாரண பள்ளிகளில் தொழுவதை விட ஆயிரம் மடங்கு சிறந்ததாகும். பெருநாள் தொழுகைகளைப் பள்ளியில் தொழுவது சரியான நடைமுறையாக இருந்திருந்தால் ஆயிரம் மடங்கு நன்மைகளைப் பெற்றுத் தரக்கூடிய மஸ்ஜிதுந் நபவீயில் நபி (ஸல்) அவர்கள் தொழுதிருப்பார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த விஷயத்தில் நன்மைகள் அதிகமோ அதைத் தான் நடைமுறைப்படுத்துவார்கள். அந்த அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைகளைத் திடலில் தொழுதிருக்கும் போது, அதைப் புறக்கணித்து விட்டு பள்ளியிலேயே தொழுவது நபிவழிக்கு மாற்றமானது ஆகும்.

தமிழகத்தில் ஒரு சில இடங்களைத் தவிர பெரும்பாலான பகுதிகளில் திடலில் தொழும் நடைமுறை இல்லை. பள்ளிவாச-லேயே பெருநாள் தொழுகையைத் தொழுது வருகிறார்கள். இவ்வாறு பள்ளிவாசலில் தொழும்போது மாதவிடாய்ப் பெண்களுக்கு பெருநாள் சந்தோஷங்களில் பங்கெடுக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகின்றது. இதன் மூலம் அவர்களுடைய உரிமையை நாம் மறுப்பதோடு பரக்கத்தும் புனிதமும் மிக்க அந்த நாளில் அவர்கள் (குத்பா) உரையைக் கேட்பது, தக்பீர் கூறுவது, துஆச் செய்வது போன்ற நற்செயல்களில் ஈடுபடுவதை விட்டும் தடுத்தவர்களாகி விடுகிறோம். அதிலும் குறிப்பாக ஹனபி மத்ஹப் பகுதிகளில் பெண்களுக்கு சுத்தமாக பெருநாள் தொழுகையே கிடையாது.

ஷாபி மத்ஹப் பகுதிகளில் பெண்கள் தனி ஜமாஅத்தாகத் தொழும் வழக்கம் உள்ளது. ஹனபி மத்ஹப் பகுதிகளில் இந்த வாய்ப்பு பெண்களுக்கு முற்றிலும் மறுக்கப்படுகிறது.

இந்தக் கலாச்சாரத்தைத் தகர்த்தெறிந்து ஹனபி, ஷாபி மத்ஹப் பகுதிகளில் ஆண்களும், பெண்களும் பெருநாள் தொழுகையில் பங்கேற்கும் வகையில் பெருநாள் தொழுகையைத் திடலில் தொழுவது நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இது தமிழகம் இதுவரை காணாத மற்றொரு வரலாற்றுப் புரட்சியாகும்.

ஏழு தக்பீர்கள் அறிமுகமும், அமலாக்கமும்

நபி (ஸல்) அவர்கள் ஒன்றைச் செய்தார்கள் என்றால், அதற்கு நேர் மாற்றமாக நின்று செயல்படும் மத்ஹப் ஹனபி மத்ஹபாகும். அந்த மத்ஹபுக்காரர்கள் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் மூன்று தக்பீர்களும், அடுத்த ரக்அத்தில் மூன்று தக்பீர்களும் ஆக 3+3 ஆறு தக்பீர்கள் மட்டுமே அதிகமாகச் சொல்லும் முறையை இதுவரை காலம் காலமாகக் கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்த நடைமுறையை மாற்றி நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த 7+5 தக்பீர்கள் கூடுதலாகச் சொல்லும் வழிமுறையை தவ்ஹீத் ஜமாஅத் அமலாக்கம் செய்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களும் கிராஅத்திற்கு முன்பு கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி)

நூல்கள்: திர்மிதி 492, அபூதாவூத்

ஜனாஸா தொழுகையில் சூரத்துல் ஃபாத்திஹா

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குப் பின்னால் நின்று ஜனாஸா தொழுகையை நிறைவேற்றினேன். அப்போது அவர் ஃபாத்திஹா அத்தியாயத்தை (சப்தமாக) ஓதினார். பிறகு, “நீங்கள் இதை நபிவழி என அறிந்து கொள்வதற்காகவே (சப்தமிட்டு ஓதினேன்)” என்றார்.

அறிவிப்பவர்: தல்ஹா

நூல்: புகாரீ 1335

இது தான் மார்க்கம் காட்டிய வழிமுறையாகும். நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறைக்கு நேர்முரணாக ஹனபி மத்ஹபில் ஜனாஸா தொழுகையில் “ஸனா’வை மட்டும் ஓதும் வழக்கம் உள்ளது.

இதை மாற்றி நபிவழியின் அடிப்படையில் ஜனாஸா தொழுகையில் சூரத்துல் ஃபாத்திஹா ஓதும் நபிவழியை தவ்ஹீத் ஜமாஅத் நடைமுறைப்படுத்தியது.

ஒரு பாங்கு தான்! இரண்டு பாங்கில்லை!

நபி (ஸல்) அவர்களின் காலத்திலும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), காலங்களிலும் ஜுமுஆ நாளில் இமாம் மிம்பரில் அமர்ந்த பின் பாங்கு சொல்லப்பட்டு வந்தது. உஸ்மான் (ரலி) காலத்தில் மக்கள் பெருகிய போது கடை வீதியில் (பாங்கு இகாமத் தவிர) மூன்றாவது அழைப்பு அதிகமானது. இதுவே நிலை பெற்று விட்டது.

அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஸீத் (ரலி)

நூல்: புகாரீ 916

ஜுமுஆ அன்று ஒரு பாங்கு சொல்வது தான் நபிவழியில் உள்ளது. இதற்கு மாற்றமாக தமிழகத்தில் இரண்டு பாங்கு சொல்லும் நடைமுறை உள்ளது. நபிவழியில் ஒரு பாங்கு தான் என்பதைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியது தவ்ஹீது ஜமாஅத்.

சப்தமின்றி திக்ரு செய்தல்

உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்!

அல்குர்ஆன் 7:205

திக்ரு செய்வதில் திருக்குர்ஆன் கூறும் வழிமுறை இது தான். அது போன்று நபிவழியில் காணும் நடைமுறையும் இது தான்.

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் (உள்ள மேடான பகுதியில்) ஏறும் போது, “லா இலாஹ இல்லல்லாஹ் -வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை” என்றும், “அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன்” என்றும் கூறி வந்தோம். (ஒரு கட்டத்தில்) எங்கள் குரல்கள் உயர்ந்து விட்டன. அப்போது நபி (ஸல்) அவர்கள், “மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில்,  நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கு இல்லாதவனையோ அழைக்கவில்லை. அவன் உங்களுடனேயே இருக்கின்றான். அவன் செவியேற்பவன்; அருகில் இருப்பவன். (இறைவனான) அவனது திருப்பெயர் நிறைவானது. அவனது மதிப்பு உயர்ந்தது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூசா அஷ்அரீ (ரலி)

நூல்: புகாரி 2992

குர்ஆன், ஹதீஸின் இந்த வழிகாட்டுதலுக்கு மாற்றமாக, பள்ளிவாசல்களிலும் வீடுகளிலும் சப்தமிட்டு திக்ரு செய்வது இதுவரை நடந்தேறும் வரம்பு மீறல்களாகும்.

இந்த வரம்பு மீறலை மாற்றி, அல்குர்ஆனின் ஆணைப்படி மனதிற்குள் திக்ர் செய்யும் வழிமுறையை தவ்ஹீத் ஜமாஅத் அறிமுகம் செய்தது.

ஸஹர் பாங்கு அறிமுகம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் சஹர் உணவு உண்பதி-ருந்து பிலா-ன் பாங்கு உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில் அவர் இரவிலேயே பாங்கு சொல்வது உங்களில் (இரவுத்) தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருப்போர் திரும்பி வருவதற்காகவும், உங்களில் தூங்கிக் கொண்டிருப்போரை உணர்த்துவதற்காகவும் தான். ஃபஜ்ர் அல்லது சுப்ஹு நேரம் வந்து விட்டது என்பதை அறிவிப்பதற்காக அல்ல.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி 621

இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த வணக்க வழிபாடாகும். ஆனால் இந்த வழிபாடு சமுதாயத்தில் இல்லை. தவ்ஹீத் ஜமாஅத் தான் தமிழக வரலாற்றிலேயே பள்ளிவாசல்களில் ஸஹர் பாங்கை அறிமுகப்படுத்தி, ரமளான் மாதத்தை நபி (ஸல்) அவர்கள் காலத்தில் உள்ளது போன்று உயிர்ப்பித்துக் கொண்டு இருக்கிறது.

எட்டுத் திக்கும் நபிவழியில் இரவுத் தொழுகை

நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியர் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “ரமளான் மாதத்தி(ன் இரவுகளி)ல் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ரமளானிலும் ரமலான் அல்லாத மற்ற காலங்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழ மாட்டார்கள். (முதலில்) நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பிறகு நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூசலமா பின் அப்திர் ரஹ்மான்

நூல்: புகாரி 1147

இது தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுத இரவுத் தொழுகை. ரமளானிலும், ரமளான் அல்லாத காலங்களிலும் நபி (ஸல்) அவர்கள் 8+3 ரக்அத் இரவுத் தொழுகை தொழுதுள்ளார்கள். சில ஹதீஸ்களில் வித்ருடன் சேர்த்து 13 ரக்அத் தொழுததாகவும் இடம் பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்களின் இந்த நடைமுறை மாற்றப்பட்டு 20+3 ரக்அத்துகள் தொழும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகின்றது.

தராவீஹ் என்ற பெயரில் நடைபெற்று வரும் இந்த பித்அத்தை மாற்றி நபிவழியை நடைமுறைப்படுத்த தவ்ஹீது ஜமாஅத் முயன்ற போது சந்தித்த எதிர்ப்பைப் போன்று வேறு எதற்கும் எதிர்ப்பைச் சந்தித்திருக்காது. அந்த அளவுக்கு, எட்டு ரக்அத் இரவுத் தொழுகை என்று அறிவித்ததும் தமிழகமே அமர்க்களப்பட்டது; ஆர்ப்பாட்டம் அடைந்தது. இந்த அமர்க்களம், ஆர்ப்பாட்டம் எப்போது அடங்கியது? 8+3 ரக்அத்களை தவ்ஹீத் ஜமாஅத் செயல்படுத்திக் காட்டிய பிறகு தான் அடங்கியது.

இருபது ரக்அத் தொழுவோரிடம் காணப்படுகின்ற அவசரம், எட்டு ரக்அத் தொழுவோரிடம் இல்லை. இருபது  ரக்அத்களும் அரை மணி நேரத்தில் முடிகின்றது என்றால் எட்டு ரக்அத் தொழுவதற்கு ஒரு மணி நேரத்தைத் தாண்டுகிறது. அவ்வளவு அமைதி! அந்த அளவுக்கு நிதானம்!

அவசர கதியில் குர்ஆனை ஓதி முடிக்காமல் நிறுத்தி, நிதானமாக கிராஅத் ஓதப்படுகின்றது. நிலையில், ருகூவில், ஸஜ்தாவில் நிறுத்தி நிதானமாகத் தொழும் இந்த இரவுத் தொழுகையில் கலந்து கொள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். அப்படியொரு மாற்றத்தை, திருக்குர்ஆன் புரட்சியை தவ்ஹீத் ஜமாஅத் தமிழகத்தில் ஏற்படுத்தியது.

பத்து இரவுகளும் பட்டப்பகலான அதிசயம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2017

அல்லாஹ்வின் தூதரின் இந்த உத்தரவுக்கு மாற்றமாக 27ம் இரவில் மட்டும் அதுவும் முன்னேரத்தில் மக்கள் கூடி விட்டு, புரோட்டா கறி, பிரியாணிப் பொட்டலம், சேமியா பாயாசம் சகிதத்துடன் கலைந்து விடும் வழக்கம் இருந்து வந்தது. ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த லைலத்துல் கத்ரை அடையும் விஷயத்தில் மக்களிடம் இருந்த அலட்சியப் போக்கை மாற்றி, ஒரு சரித்திர மாற்றத்தைக் கொண்டு வந்தது தவ்ஹீது ஜமாஅத்!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உத்தரவுக்கு உரிய மதிப்பையும் மரியாதையையும் கொடுக்கும் விதமாக, ரமளானின் பிந்திய பத்து இரவுகளும் பட்டப் பகலானது. தவ்ஹீத் ஜமாஅத்தின் பள்ளிவாசல்களில் இந்த நாட்களில் பின்னிரவு நேரத்தில் இரவுத் தொழுகை நிறைவேற்றப்படுகின்றது. நள்ளிரவில் நடைபெறும் இரவுத் தொழுகையில் கலந்து கொள்வதற்கு இரவு 12 மணிக்கே பெண்கள் பள்ளிக்கு வந்து காத்துக் கிடக்கின்றனர். பிந்திய பத்தில் நடைபெறும் இந்த இரவுத் தொழுகையில் ஏராளமான பெண்கள் கலந்து கொள்கின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்கள் திரண்டு வருகின்றனர். ஏன்? லைலத்துல் கத்ரை, அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமான நேரத்தில் தேடுகின்ற புரட்சியை தமிழகத்தில் தவ்ஹீத் ஜமாஅத் கொண்டு வந்தது.

தவ்ஹீது பள்ளிகளில் உள்ள ரம்மியமிகு ரமளானின் பிந்திய இரவுகளின் சிறப்புகளைப் பார்த்து விட்டு, சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிகளிலும் அந்த நேரத்தில் தஹஜ்ஜத் என்று கூறி மேலதிகமாக 8 ரக்அத்கள் தொழ ஆரம்பித்துள்ளனர். அந்த அளவுக்கு மாற்றத்தை, தவ்ஹீத் ஜமாஅத் ஏற்படுத்தியது.

மக்ரிபுக்கு முன் சுன்னத்

நபி (ஸல்) அவர்கள் “மஃக்ரிப் தொழுகைக்கு முன் தொழுங்கள்‘ (மூன்று முறை) கூறினார்கள். மூன்றாம் முறை கூறும் போது அதை (எங்கே) மக்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய ஒரு சுன்னத்தாக எடுத்துக் கொள்வார்களோ என்று அஞ்சி, “இது விரும்பியவர்களுக்கு மட்டும் தான்” என்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் அல்முஸ்னீ (ரலி)

நூல்: புகாரி 1183

இந்த வணக்க வழிபாடு இன்று நடைமுறையில் இல்லை. ஷாஃபி மத்ஹபிலாவது ஒரு சில இடங்களில் மக்ரிபுக்கு முன் சுன்னத் தொழுவதைப் பார்க்க முடியும். ஆனால் ஹனபி மத்ஹபில் மருந்துக்குக் கூட இதைப் பார்க்க முடியாது. மக்ரிப் பாங்கு முடிந்தவுடன் இகாமத் சொல்லி தொழுகையை ஆரம்பித்து விடுவர். தொழுகை நேர அட்டவணையில் கூட “மக்ரிப் இகாமத்’ என்ற இடத்தில், “உடன்” என்று தான் போட்டிருப்பார்கள்.

ஆனால் அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீத் ஜமாஅத் இன்று மக்ரிபுக்கு முன் சுன்னத் தொழுவதை மகிழ்ச்சியுடன் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

பள்ளிவாசலில் நுழைந்தால் காணிக்கைத் தொழுகை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரும் பள்ளிவாசலுக்குள் நுழைந்தால் உட்காருவதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழட்டும்.

அறிவிப்பவர்: அபூகத்தாதா (ரலி), நூல்: புகாரி 444

இந்த வணக்கம் சமுதாயத்தின் செயல்பாட்டில் இல்லை. இந்த வணக்கத்தை, தவ்ஹீத் ஜமாஅத் மக்களிடம் அறிமுகப்படுத்தி, செயல்பாட்டுக்கும் கொண்டு வந்தது.

ஃபித்ரு ஸதகாவில் ஒரு புரட்சி

பெருநாள் தர்மம் என்ற ஒன்று தமிழகத்தில் அறவே இல்லை என்று சொல்லி விட முடியாது. ஆனால் அந்தந்த ஊர்களில் பள்ளிவாசலில் பணி புரியும் ஆலிம்கள், பணி புரியாத ஆலிம்கள், முஅத்தின்கள், குழி தோண்டும் பக்கீர்கள் ஆகியோருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. கொடுப்போரும் சிலர் தான் இருந்தனர். பெறுவோரும் சிலர் தான். ஃபித்ரு ஸதகா கொடுக்கக் கடமைப்பட்ட ஆலிம்களே அதைப் பெறுபவர்களாக இருந்தது தான் வேதனைக்குரிய விஷயம்.

இப்படி அல்லறை, சில்லறையாக சிதறிச் சிதறி வழங்கப்பட்ட ஃபித்ரு ஸதகா என்ற வணக்கத்தை தமிழக முஸ்லிம்களிடம் முறையாக அறிமுகப்படுத்தி, முழுமையாகச் செயல்படுத்தியது தவ்ஹீத் ஜமாஅத்!

தமிழக முஸ்லிம்களிடம் கோடிக்கு மேல் ஃபித்ரு ஸதகாவைத் திரட்டி, சமுதாயத்தின் கோடியில் கிடக்கும் ஏழை எளியவர்களுக்கு வழங்கும் புரட்சி நடைமுறைக்கு வந்தது தவ்ஹீத் ஜமாஅத்தினால் தான்.

முஸ்லிம்களிடையேயுள்ள ஆண், பெண், சிறியவர், பெரியவர், அடிமை, சுதந்திரமானவர் அனைவருக்காகவும் ஒரு ஸாஉ அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாஉ அளவு தீட்டாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று) நபி (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். அதை(ப் பெருநாள்) தொழுகைக்காக மக்கள் வெளியே செல்வதற்கு முன்னால் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 1503

பெருநாள் இரவுகளில் கேலிக் கூத்துகளில் ஈடுபட்டுக் கொண்டு கும்மாளம் அடித்துக் கொண்டிருந்த இளைஞர் பட்டாளம், இன்று இந்த ஹதீஸைச் செயல்படுத்தும் விதமாக அரிசி மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு, ஏழைகளின் வீடு தேடிச் சென்று வழங்கும் தூய பணியில் ஈடுபட்டுள்ள காட்சி, இது வரை தமிழகம் காணாத காட்சியும் மாட்சியுமாகும். புனித மிக்க ஒரு புரட்சியாகும்.

தற்கொலை செய்தவருக்கு தொழுவதற்குத் தடை

ஒரு மனிதர் நோயுற்ற போது அவர் திடுக்கத்துக்குள்ளானார். அவருடைய அண்டை வீட்டுக்காரர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அவர் இறந்து விட்டார்” என்று சொன்னார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “அவர் இறந்தது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். “நான் அவரைப் பார்த்தேன் (அவர் இறந்து விட்டார்)” என்று அம்மனிதர் கூறினார். நபி (ஸல்) அவர்கள், “அவர் இறக்கவில்லை” என்று கூறினார்கள். பிறகு அம்மனிதர் (நோயாளியிடம்) வந்த போது, அவர் கூரிய ஈட்டியால் தன்னை அறுத்துக் கொண்டதைக் கண்டார். உடனே நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அவர் இறந்து விட்டார்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர் இறந்தது உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், “அவர் தன்னிடமிருந்த கூரிய ஈட்டியால் தன்னை அறுத்துக் கொண்டதை நான் பார்த்தேன்” என்று கூறினார். “நீ பார்த்தாயா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அம்மனிதர், ஆம் என்றார். நபி (ஸல்) அவர்கள், “அப்படியானால் அவருக்கு நான் தொழுவிக்க மாட்டேன்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி)

நூல்: அபூதாவூத் 2770

இது தான் சட்டம். இந்தச் சட்டத்தில் தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை இல்லை. ஆனால் மத்ஹபுகளில் இதற்கு மாற்றமாக, தொழுகை நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஜனாஸா தொழுகை என்பது முஸ்லிம்களுக்குத் தானே தவிர, நரகம் என்று தெளிவாகி விட்டவருக்கு இல்லை. தற்கொலை செய்தவர் காஃபிராகி விடுகின்றார் என்பதைப் புகாரியில் இடம்பெறும் இந்த ஹதீஸ் விளக்குகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கு முன் இருந்தவர்களிடையே ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார். (ஒரு முறை) அவர் காயமடைந்தார். அவரால் வ- பொறுக்க முடியாமல் ஒரு கத்தியை எடுத்துத் தன் கையைத் துண்டித்துக் கொண்டார். அவர் இறக்கும் வரை இரத்தம் நிற்காமல் கொட்டிக் கொண்டேயிருந்தது. அல்லாஹ், “என் அடியான், தன் விஷயத்தில் (அவசரப்பட்டு) என்னை முந்திக் கொண்டான். அவன் மீது நான் சொர்க்கத்தை ஹராமாக்கி விட்டேன்” என்று கூறினான்.

அறிவிப்பவர்: ஜுன்தப் (ரலி)

நூல்: புகாரி 3463

இந்த அடிப்படை விபரம் கூடத் தெரியாமல் மத்ஹபுவாதிகள், தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மேற்கண்ட ஹதீஸ்களின் அடிப்படையில், தற்கொலை செய்து கொண்டவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தத் தடை என்பதை தவ்ஹீத் ஜமாஅத் நடைமுறைக்குக் கொண்டு வந்தது.

பயனுள்ள பயணத் தொழுகை

நீங்கள் பூமியில் பயணம் மேற்கொள்ளும் போது (ஏக இறைவனை) மறுப்போர் உங்களைத் தாக்கக் கூடும் என்று அஞ்சினால் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது. (ஏக இறைவனை) மறுப்போர் உங்களுக்குப் பகிரங்க எதிரிகளாக உள்ளனர்.

அல்குர்ஆன் 4:101

கஸ்ர் தொழுகையைப் பற்றி அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, “நபி (ஸல்) அவர்கள் மூன்று மைலோ, அல்லது மூன்று பர்ஸக் அளவோ பயணம் செய்தால் (நான்கு ரக்அத்களை) இரண்டு ரக்அத்களாக (சுருக்கித்) தொழுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: யஹ்யா பின் யஸீத்

நூல்: முஸ்லிம் 1230

பயணத்தின் போது தொழுகையைச் சுருக்கிக் கொள்ளும் வழிமுறையை அல்குர்ஆனும், ஹதீசும் நமக்குக் கற்றுத் தந்துள்ளது. ஆனால் மத்ஹபு ஆலிம்களோ, பொருத்தமில்லாத காரணங்களைக் கூறி இந்த உரிமையைத் தட்டிப் பறித்து விட்டனர். தவ்ஹீத் ஜமாஅத் தலையெடுத்த பின்னர் தான் இந்தச் சலுகை மக்களிடம் சென்றடைந்தது.

சூரியன் சாய்வதற்கு முன் நபி (ஸல்) அவர்கள் பிரயாணம் மேற்கொண்டால் லுஹரை அஸர் நேரம் வரும் வரை தாமதப்படுத்தி பின்னர் இரண்டு நேரத் தொழுகைகளையும் சேர்த்துத் தொழுவார்கள். (பிரயாணத்தைத் துவங்கும் முன்) சூரியன் சாய்ந்து விட்டால் லுஹரைத் தொழுது விட்டுப் புறப்படுவார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரீ 1111

பயணத்தின் போது தொழுகையின் ரக்அத்களைக் குறைத்துக் கொள்வதற்குச் சலுகை வழங்கிய மார்க்கம் தான் சேர்த்துத் தொழுவதற்கும் அனுமதி அளித்திருக்கின்றது. ஆனால் இந்த ஆலிம் வர்க்கம் இந்த உரிமையை அநியாயமாகப் பறித்து விட்டது. பறிக்கப்பட்ட இந்த உரிமையை மீட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறையை அமுல்படுத்தி சாதனை படைத்துள்ளது தவ்ஹீத் ஜமாஅத்!

களாத் தொழுகை

ஒருவர் பருவ வயதை அடைந்ததும் அவருக்குத் தொழுகை கடமையாகின்றது. அவர் ஐம்பது வயது வரை தொழாமல் இருந்து விட்டு, பிறகு திருந்தி தொழத் துவங்குகின்றார். இப்போது இந்த மத்ஹபுவாதிகள், இவ்வளவு காலம் தொழாமல் இருந்ததையும் சேர்த்து களாவாகத் தொழ வேண்டும் என்று கூறுகின்றனர்.

இதற்குப் பயந்து அவர் தொழுவதையே விட்டு விடுகின்றார். இப்படி மார்க்கத்தில் இல்லாத களா தொழுகையை மக்களிடம் திணித்துக் கொண்டிருந்தார்கள்.

“யார் தொழுகையை மறந்து விடுவாரோ அல்லது தொழாமல் தூங்கி விடுவாரோ அவர் நினைவு வந்ததும் அதைத் தொழுவதே அதற்குரிய பரிகாரமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 1217

தூக்கம், மறதி ஆகிய இரண்டிற்கு மட்டும் தான் களா உண்டு. மற்றபடி, தொழுகை என்பது நேரம் குறிக்கப்பட்ட கடமை என்று திருக்குர்ஆன் (4:103) கூறுவதை மக்களிடம் விளக்கி, களாத் தொழுகை என்ற சுமையை சமுதாயத்திலிருந்து தவ்ஹீது ஜமாஅத் அகற்றியது. வாழ் நாள் களாவுக்குப் பயந்து தொழாமலே இருந்த பலரைத் தொழுகையாளிகள் ஆக்கியது.,

மாற்றப்பட்ட ஸஹர் நேரம்

வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்!

அல்குர்ஆன்2:187

சுப்ஹ் நேரம் வரும் வரை சாப்பிடலாம் என்பதை இந்த வசனம் கூறுகின்றது. இதற்கு விளக்கமாக வரும் ஹதீஸ்களும் சுப்ஹ் நேரம் வரை ஸஹர் உணவு உண்ணலாம் என்பதை வலியுறுத்துகின்றன.

பிலால் (ரலி) அவர்கள் (ஃபஜ்ருக்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இப்னு உம்மி மக்தூம் (ரலி) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள். பருகுங்கள். ஏனெனில் அவர் தாம் ஃபஜ்ரு நேரம் வந்ததும் பாங்கு சொல்கின்றார்” என்று கூறினார்கள்.

அறிவிப்போர்: ஆயிஷா (ரலி), இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1918, 1919

திருமறைக் குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளும் இவ்வளவு தெளிவாக இருந்தும், ஃபஜ்ரு நேரத்திலிருந்து அரை மணி நேரத்திற்கு முன்பே ஸஹர் நேரம் முடிந்து விடுவதாக பரவலான நம்பிக்கை மக்களிடம் உள்ளது.  நோன்புக் கால அட்டவணைகளை அச்சிட்டு மக்களிடம் விநியோகிப்பவர்களும் ஸஹர் முடிவு நேரம் என்று காலை 4 மணியிலிருந்து 4.30க்குள் குறிப்பிடுகின்றார்கள்.

இந்த நிலையை மாற்றி, ஃபஜ்ருடைய பாங்கு சொல்லப்படும் வரை ஸஹர் செய்யலாம் என்ற நிலையை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்படுத்தியது. அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித் தந்த ஸஹர் நேரத்தை மக்களிடம் அறிமுகப்படுத்தி, அமல்படுத்தவும் செய்தது.

நோன்பு துறப்பதை விரைவுபடுத்தல்

“சூரியன் மறைந்து இந்தத் திசையிலிருந்து இரவு முன்னோக்கி வந்து, அந்தத் திசையிலிருந்து பகல் பின்னோக்கிப் போனால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்: புகாரி 1954

“நோன்பை நிறைவு செய்வதை விரைவுபடுத்தும் வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாக இருப்பார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது(ரலி)

நூல்: புகாரி 1957

சூரியன் மறைந்தவுடன் நோன்பை நிறைவு செய்ய வேண்டும் என்பதைக் கூறும் ஹதீஸ்கள் ஏராளமாக இடம் பெற்றுள்ளன. ஆனால் இன்று நடைமுறையில் பேணுதல் என்ற பெயரில் சூரிய மறைவு நேரத்திலிருந்து ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் வரை தாமதமாக நோன்பு துறக்கின்றனர்.

ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் இதை மாற்றியமைத்து, சூரியன் மறைந்தவுடன் நோன்பு துறக்கும் நடைமுறையை ஏற்படுத்தியது.

உச்சி வெயிலில் பெருநாள் தொழுகை

பெருநாளன்று திடலில் தொழும் போது மக்களை வெயில் தாக்கும். இதனால் அதிகாலையிலேயே பெருநாள் தொழுகையை முடித்து விட வேண்டும் என்று மார்க்கம் வழிகாட்டியுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) முஸல்லா என்ற திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்களது காரியங்களில் முதல் காரியமாக தொழுகையைத் துவக்குவார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி)

நூல்கள்: புகாரீ 956, முஸ்லிம் 1612

இந்த ஹதீஸிலும், இது போன்ற பல்வேறு ஹதீஸ்களிலும் பெருநாள் தொழுகையை காலையில் முதல் காரியமாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறிக் கொள்வோர், பெருநாள் தொழுகையை காலை பத்து மணி வரை தாமதமாகத் தொழுது கொண்டிருந்தனர்.

இறைவனின் அருளால் தவ்ஹீத் ஜமாஅத், பெருநாள் தொழுகையை அதிகாலை நேரத்தில், சூரியன் உதயமான சிறிது நேரத்திலேயே தொழுது வழிகாட்டியது. குறிப்பாக ஹஜ்ஜுப் பெருநாளன்று தொழுகை முடித்து விட்டு அறுத்துப் பலியிட வேண்டும் என்பதால் அனைத்து தரப்பு மக்களும் இந்த நபிவழியைப் பின்பற்றுவதில் ஆர்வம் காட்டத் தொடங்கினர்.

இதனால் தவ்ஹீத் ஜமாஅத்தினர் திடலில் நடத்தும் பெருநாள் தொழுகைகளில் கூட்டம் அலை மோதத் தொடங்கியது. இதைக் கண்டு சுன்னத் வல் ஜமாஅத்தினரும் கூட்டத்தைத் தக்க வைப்பதற்காக அதிகாலையில் தொழ ஆரம்பித்துள்ளனர்.

மார்க்கம் காட்டிய மணக்கொடை

பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுட னும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்!

அல்குர்ஆன் 4:4

அல்குர்ஆன் காட்டித் தந்த இந்தச் சட்டம் முற்றிலுமாக மக்களிடம் மறைக்கப்பட்டு, 136 ரூபாய் மஹர் என்று திருமணப் பதிவேட்டில் பதிந்து விட்டு, லட்சக்கணக்கில் தொகையாகவும் நகையாகவும் பெண்ணிடமிருந்து வரதட்சணை வாங்கும் நிலை தமிழகத்தில் இருந்தது.

இந்த நிலையை மாற்றி, பெண்களுக்கு அவர்கள் கேட்கும் மஹர் தொகையைக் கொடுத்து மண முடிக்கும் இளைஞர்களை உருவாக்கியது தவ்ஹீத் ஜமாஅத். அது மட்டுமின்றி தங்களது அறியாமைக் காலத்தில் வாங்கி விட்ட வரதட்சணையைக் கூட பெண்ணின் தந்தையிடம் திரும்பக் கொடுக்கும் புரட்சியையும் ஏற்படுத்தியது.

இவை மட்டுமின்றி பெண்கள் தங்கள் முகம், கைகள் தவிர உடல் முழுவதையும் மறைக்கும் புர்காவை நடைமுறைக்குக் கொண்டு வந்தது, கணவனைப் பிடிக்காத பெண்கள் மண விலக்கு பெற்றுக் கொள்ளும் உரிமையை அமல்படுத்தியது, கணவனை இழந்த பெண்கள் இத்தா என்ற பெயரில் அனுபவித்து வந்த கொடுமைகளை அகற்றியது உள்ளிட்ட ஏராளாமான விஷயங்களில் திருக்குர்ஆன் சட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளோம்.

இப்படி அல்குர்ஆனின் சட்டங்களையும் அதன் விளக்கமாக அமைந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறைகளையும் மக்களிடம் அறிமுகப்படுத்தி அதை அமல்படுத்துவதில் மாபெரும் சாதனை படைத்துள்ளது தவ்ஹீத் ஜமாஅத்! எல்லாப் புகழும் இறைவனுக்கே!